• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அத்தியாயம் 10

நித்திலம்NMR

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
231
20
28
Netherlands
மறுநாள் காலை மலரிடம் தங்கள் பயணம் பற்றி கேட்க நினைத்து தன் அன்றாடம் பணிகளைக் கூட மறந்து, கண் விழித்ததும் நேரே மலரின் அறைக்குச் சென்றான். கதவைத் திறந்த மறுநிமிடம் அவள் அமர்ந்திருக்கும் நிலைகண்டு முகம் வெளிர வாசலிலேயே உறைந்து நின்றான் விக்ரம்.

கதவு திறக்கும் அரவம் கேட்டு திரும்பிப் பார்த்த மலர், விக்ரமைக் கண்டு ஒருவிதமான அச்சம் நிறைந்த பார்வையைச் செலுத்தினாள். அதனை கவனிக்க மறந்த விக்ரம் விரைந்து அவளின் அருகே வந்து படுக்கையில் அமர்ந்து, ஒரு கையை அவளை அணைத்தார் போல் மலரின் மறுபக்க மெத்தையில் ஊன்றி மற்றொரு கையால் அவள் கன்னம் வருடி, கண்கள் கலங்கியபடி, உடைந்த குரலில்

"பனி..." என்று அழைத்திட, பெண்ணவளின் கண்களும் ஏன் எதற்கு என்று கூடத் தெரியாமல் கலங்கியது. அதனைக் கண்ட நொடி அவளைத் தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டான். இருள் கொடுத்த அமைதியில் ஆடவனின் இதயத்துடிப்பு தெள்ளத்தெளிவாக கேட்டது பெண்ணவளுக்கு....

விக்ரமின் அழுகையும் 'பனி' என்ற அழைப்பும் மலரின் மனதிற்குள் ஏதோ ஒரு உணர்வைத் தோற்றுவிக்க, அவனை அணைக்கவும் செய்யாமல் தடுக்கவும் செய்யாமல் அப்படியே அமர்ந்திருந்தாள்.

நேரங்கள் கடந்திட, என்ன செய்ய வேண்டும்? ஏன் இப்படியே அமர்ந்திருக்கிறோம்? என்று எதுவும் யோசியாதவனாய், யோசிக்க முடியாதவனாய் அமர்ந்திருந்த விக்ரமின் நினைவுகளை இரண்டு வருடமாக கோமாவில் இருந்துவிட்டு இப்போது தான் எழுந்து அமர்ந்திருக்கும் பனிமலர் ஆக்ரமித்துக் கொண்டாள். இப்போது அவள் கைகளை பிடித்தபடி அமர்ந்திருந்தவன், அவள் அசௌகரியமாய் நெளிவதைக் கண்டு, "என்னாச்சு பனி? எதுவும் வேணுமா? தயங்காம கேளுமா?" என்றிட, எப்படிக் கூறுவது என்று தெரியாமல், தலைகுனிந்தவள், தன் ஆடைக்குள் காலுக்குக் கீழே நீண்டு செல்லும் சிறுநீர் குழாயைக் கண்டு மேலும் தயங்கினாள்.

அவளின் பார்வை சென்ற திசையைக் கண்டவன், இனி அது அவளுக்குத் தேவையில்லை, அதனால் தான் அசௌகரியமாக உணர்கிறாள் என்று சரியாக ஊகித்தவன், தன் திறன்பேசியோடு வெளியே சென்றான். அறையைவிட்டு வெளியேறி திறன்பேசியில் உதிக்கு அழைக்க

என்றும் இல்லாமல் இன்று அதிகாலையிலேயே அழைக்கும் நண்பனை அலட்சியமாக ஒதுக்கி வைக்க முடியாமல் அழைப்பை ஏற்றான் உதி...

"உதி.... பனி.... என் பனி...." என்று வார்த்தைகள் வராமல் குரல் உடைந்து பலவீனமாக வெளிவர,

மறுமுனையில் உதியோ அவன் சொல்லி முடிக்கும் வரை கூட காத்திருக்கும் பொறுமை இல்லாதவனாய், "மலருக்கு என்னாச்சு டா!!! இப்போ என்னடா பண்ணி தொலச்சே? அவ உயிரோட ஏன் டா உனக்கு இந்த விளையாட்டு!!!?... உன் வீம்பால அந்த பொண்ணை இன்னும் என்னென்னலாம் செய்ய காத்திருக்கே?" என்று ஆதங்கத்தில் கத்தத் தொடங்கினான்.

நண்பனின் சிடுசிடுப்பு விக்ரம் காதில் சிறிதும் ஏறவில்லை. "உதி... என் பனி எழுந்து உக்காந்திருக்கா மச்சா... " என்றிட, உதிக்கு இப்போது வாயடைத்துப் போனது.

தன் தோழனின் நிலையை நேரில் காணாவிட்டாலும், அவனைப் பற்றி அறிந்திருந்த உதி, தன் உணர்வுக்கு முதலில் உயிர் கொடுத்து கண்ணில் வடிந்த நீரை துடைத்துவிட்டு,

"இப்படியே மலர் முகத்தை பாத்துக்கிட்டே இருக்காம டாக்டருக்கு ஃபோன் பண்ணு... நானும் வினோவும் கொஞ்ச நேரத்துல வந்திடுறோம்..." என்றான் உதி...

அப்போது தான் விக்ரமிற்குமே மருத்துவரை அழைக்க வேண்டும் என்ற நியாபகமே வந்தது. மலர் சிகிச்சை பெறும் மருத்துவமனைக்கு அழைத்து அவளின் நிலையை எடுத்து சொல்லி, மருத்துவர் உதவி கேட்டு பேசிவிட்டு, செண்பகத்தையும் எழுப்பிவிட்டான்.

செம்பியன் இன்று இல்லம் வருவதாகக் கூறியிருந்ததால் அவனுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கட்டும் என்று நினைத்து அவனிடம் கூறிடவில்லை.

மலருக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனையில் இருந்து முதலில் செவிலியர் வந்துவிட, மலரின் கையில் இருந்த ட்ரிப்ஸை எடுக்கச் செல்ல மலரின் கைகள் சற்று நடுங்கியது.

"பயப்படாதிங்க மேடம்... நான் ரிமூவ் பண்ண தான் போறேன்... வலி இருக்காது...." என்று நம்பிக்கை கூறினாலும் மலரின் பயம் குறையவில்லை.

"மேடம் கைய இறுக்கமா வைக்காதிங்க... கொஞ்சம் லூஸ் விடுங்க...." என்றிட, தன் விரல்களைத் திறந்த மலரின் கைகள் மேலும் நடுங்கிட, விக்ரம் செண்பகத்திடம் அவள் கையை பிடித்துக் கொள்ளுமாறு பணிந்தான்.

செண்பகமும் விக்ரம் குரலுக்கு மலரின் அருகே சென்று, அவள் கையைப் பிடித்துக் கொள்ள, செவிலியர் ட்ரிப்ஸை எடுக்க, மலரின் "ஸ்ஸ்ஸ்" என்ற சத்தத்தில் விக்ரம் தன் கண்களை மூடியபடி மறுபுறம் திரும்பிக் கொண்டான்.

யூரின் ட்யூப்பை எடுக்க வேண்டி "சார் நீங்க கொஞ்சம் வெளியே இருங்க..." என்று செவிலியர் உரைக்க, விக்ரம் ஒருவித பரிதவிப்போடு மலரைப் பார்த்தபடி அறையைவிட்டு வெளியேறினான்.

காலை விழித்ததில் இருந்த மலர் இன்னமும் ஒரு வார்த்தை கூட பேசிடவில்லை.... ஆனால் நொடிக்கு ஒரு முறை விக்ரமையும், அவன் முகத்தில் டன் கணக்கில் வடிந்த வேதனையையும், பல நேரங்களில் அதனையும் தாண்டி வெளிவந்த மகிழ்ச்சியையும் கவனித்துக் கொண்டு தான் இருந்தாள்.

மருத்துவர் வந்துவிட, அவரோடு இணைந்து விக்ரமும் அறைக்குள் நுழைந்தான். அவனுக்கு அவளை அருகில் இருந்து பார்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் இரண்டு வருடம் படுக்கையில் இருந்தவளின் தேகம் மலரினும் மெல்லியதாக இருக்குமோ!!! எங்கே தான் தொட்டால் கசங்கிவிடுவாளோ!!! வலியில் முகம் சுழித்துவிடுவாளோ!!! என்று அஞ்சி அவளுக்குத் தேவையானவற்றை செண்பகத்தைவிட்டு பார்த்துக் கொள்ளச் சொல்லியிருந்தான்.

மருத்துவர் மலரை பரிசோதித்துவிட்டு, "ஃபிஸிக்கலி ஷீ இஸ் பர்ஃபெக்ட்லி ஆல்ரைட்" என்று விக்ரமிடம் கூறினார். அதற்குள் உதியும், வினோவும் வந்து விட அவர்களைக் கண்டவுடன், தாவிச் சென்று அவர்களை அணைத்து தன் இத்தனை நாள் பயம், துயர், வேதனை அனைத்தையும் அவர்கள் தோளில் சாய்ந்து கண்ணீர் மூலம் கரைக்க முற்பட்டான் விக்ரம்.

சற்றே திறந்திருந்த அறைக் கதவின் வழியே இவை அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த மலரிடம் மருத்துவர் சில கேள்விகள் கேட்க எதற்கும் அவள் பதிலளிக்கவில்லை.

மலரின் அறையிலிருந்து வெளியே வந்த மருத்துவர், "Mr.விக்ரம்... அவங்களுக்கு சின்ன சின்ன டெஸ்ட்லாம் எடுக்க வேண்டி இருக்கு... She is alright, but doesn't want to speak... சோ அவங்களை இரண்டு நாள் அப்சர்வேஷன்ல வெச்சிருந்து கவுன்சிலிங் கொடுக்குறது பெட்டர்னு நெனைக்கிறேன்..." என்றார்.

மலரை ஒருமுறை திரும்பிப் பார்த்தவன், "sure doctor... நான் அவங்களை ஹாஸ்பிட்டல் அழச்சிட்டு வரேன்." என்று கலவரமடைந்த முகத்தோடு கூறிட,

"தேவையில்லாம பயப்படாதிங்க விக்ரம்... இவ்வளவு தூரம் கடந்து வந்தவங்க, இதையும் ஈஸியா கடந்திடுவாங்க... அதுக்கு நாம கொஞ்சம் ஹெல்ப் பண்றோம்... அவ்ளோ தான்... உதவி பண்ணுறதுக்கு பயந்தா இதுக்கு அடுத்த ஸ்டேஜ்க்கு அவங்களை கொண்டு போறது ரெம்ப கஷ்டம்... I mean அவங்க யாருக்கிட்டேயும் பேசாம தனக்குள்ளேயே ஒடுங்கி போயிடுவாங்க... இத்தனை நாள் இருந்த தைரியத்தை விட இன்னும் கொஞ்சம் அதிக தைரியமா இருந்து அவங்களை நீங்க தான் ரெக்கவர் பண்ணனும்..." என்று அறிவுரை வழங்கினார் அந்த மருத்துவர்.

அனைத்தையும் பொறுமையாக நின்று கேட்கும் விக்ரம் நண்பர்களுக்குப் புதியவனே!!! இரண்டு நிமிடம் பேசுவதற்குள் 'சரி செய்றேன்' என்றோ அல்லது 'நான் இப்படித் தான் என்னால மாத்திக்க முடியாது' என்றோ பட்டென்று கூறிவிடுபவன், இன்று முழுவதையும் பொறுமையாகக் கேட்பதே இருவருக்கும் ஆச்சரியமாக இருந்தது.

"டேப்லட்ஸ் மாத்தி எழுதி கொடுத்திருக்கேன் விக்ரம்... இன்னைக்கு அதை கன்டினியூ பண்ணுங்க... ஹாஸ்பிட்டல் செக்-அப் முடியவும் திரும்பவும் மாத்தனுமா வேண்டாமானு பாக்கலாம்" என்று கூறியபடி வெளியேறினார் அவர்.

மருத்துவரிடம் சிகிச்சைக்கு அழைத்து வருவதாகக் கூறி மீண்டும் ஒருமுறை நன்றி உரைத்து வழியனுப்பி வைத்தனர்.

விக்ரம் மருத்துவரிடம் பேசிக் கொண்டிருந்த அதே நேரம், இங்கே அறையில் மலர், செண்பகத்தை கை நீட்டி அழைத்தாள்.

"என்ன மலர்?" என்று கனிவாகக் கேட்ட செண்பகத்திடம் சற்று தயங்கியபடி,

"நீங்க?" என்று சத்தமே இல்லாமல் குரல் வலுவிழந்து ஒற்றை வார்த்தையாக மலரிடம் இருந்து கேள்வி வந்தது.

"நான் செண்பகம், உங்களை பாத்துக்கிறதுக்காக இங்கே வேலைக்கு வந்திருக்கிறேன்..." என்றார் செண்பகம்.

விக்ரமை கை நீட்டி "அவர்?" அதே வலுவிழந்த குரலில் வினவினாள்.

"விக்ரம் தம்பியவா கேட்கிறே!!!" என்று சந்தேகமாக வினவிட,

"எனக்கு யார்?" என்று தயங்கியபடி வினவினாள்.

அவள் கேட்ட கேள்வியில் செண்பகத்திற்கும் சற்று அதிர்ச்சி தான். விக்ரம் அவரை மலரைப் பார்த்துக் கொள்ளவென்று வேலைக்கு நியமித்த போது, 'என் மனைவியை பார்த்துக் கொள்ள வேண்டும்' என்று கூறி தான் நியமித்திருந்தான்.

வந்த அன்றே அவள் கழுத்தில் திருமாங்கல்யம் இல்லாததைக் கண்டு குழப்பமுற்றவர், வீட்டிலும் திருமணப் புகைப்படமும் இல்லை என்பதனையும் கவனித்திருந்தார். அது மட்டும் இன்றி செம்பியனைத் தவிர வேறு எவரும் மலரைப் பார்க்க இதுவரை வந்ததில்லை. முக்கியமாக மலரின் பெற்றோரோ அல்லது விக்ரமின் பெற்றோரோ எவருமே வந்ததில்லை.

உதி மற்றும் வினோவையே இன்று தான் பார்க்கிறார் செண்பகம். இருவரும் தான் விக்ரமிடம் பேசியே இரண்டு வருடங்கள் ஆகிறதே!!! பின்னே எப்படி வீட்டிற்கு மட்டும் வந்திருப்பார்கள். மலரின் உடல் நலம் பற்றி அவர்கள் இதுவரை கேட்க நேர்ந்ததும் இல்லை. ஏதேனும் ஒரு விதத்தில் விக்ரமே நண்பர்களைச் சென்றடையச் செய்திருப்பான்.

இப்போது செண்பகத்திற்கோ பலத்த சந்தேகம், விக்ரம் பொய் கூறி இருப்பானோ!!! என்று... ஆனால் இந்த இரண்டு வருடங்களாக அவன் துடித்த துடிப்பைக் கண்டவரால் முழுமனதாக அவனையும் சந்தேகிக்க முடியவில்லை. ஒருவேளை இந்த பெண் மறந்திருப்பாளோ! என்று யோசித்தவாறு நின்றிருந்தவரின் கைகளை உலுக்கி நிகழ்வுக்குக் கொண்டு வந்தாள் மலர்.

மலரின் குழப்பம் படிந்த முகத்தைக் கண்ட செண்பகம், உண்மையை உரைத்தார். "உன் கணவர்"

மலரின் விழிகள் இரண்டும் பெரிதாக விரிந்து, தான் கேட்ட வார்த்தைகள் சரி தானா! என் கணவரே தானா! என்று செண்பகத்திடம் எதிர் கேள்வி கேட்டது. செண்பகமும் வாய் திறவாமல் ஆம் என மேலும் கீழும் தலையாட்ட, சற்று நேரத்தில் பஞ்சணையில் சாய்ந்து அமர்ந்திருந்தவள், அதே நிலையில் அப்படியே பின்னால் தலை சரித்து மயக்கம் அடைந்தாள்.

திடீரென மயக்கம் அடைந்த மலரைக் கண்டு பதறியபடி, "மலர்... மலர்...." என்று அவளது கன்னம் தட்டி எழுப்ப முயற்சித்தார் செண்பகம்.

செண்பகத்தின் சத்தம் கேட்டு அப்போதுதான் வெளியேறிச் சென்ற டாக்டரை வழியனுப்பிவிட்டு வந்த நண்பர்கள் மூவரும் விரைந்து அறைக்குள் நுழைய, விக்ரம் மலரின் அருகே சென்று அமர்ந்து தன் மேல் அவளை சாய்த்துக் கொண்டு, "அக்கா தண்ணி எடுத்துக் கொடுங்க" என்றிட, அதற்குள் வினோ தண்ணீர் புட்டியோடு நின்றிருந்தான்.

மலரின் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பிவிட, காலை அவன் அணைத்த போது தோன்றாத உணர்வுகள் இப்போது அவன் தோளில் சாய்ந்திருக்கும் போது தோன்றியது மலருக்கு. சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் பயம்.... மலரின் கண்ணில் தெரிந்த மிரட்சியைக் கண்டு உதி தன் நண்பனை தனியே அழைத்தான். விக்ரமும் சற்று நேரத்தில் மலரை தலையணையில் கிடத்தி, "பனி டூ மினிட்ஸ்ல வந்திடுறேன்" என்று கூறி எழுந்து சென்றான்.

"விபா.... மலர் உன்னைக் கண்டு பயப்படுற மாதிரி இருக்கு... இந்த ரெண்டு நாள் ட்ரீட்மெண்ட் முடியிற வரைக்கும் அந்த பொண்ணை டிஸ்டர்ப் பண்ணாதே..." என்றிட,

"என் பனி எதுக்கு டா என்னை பார்த்து பயப்பட போறா!!! கொஞ்சம் ஷாக் ஆகிடுப்பா அவ்ளோ தான்... நீ நெனைக்கிற அளவு பெருசாலாம் எதுவும் இருக்காது..." என்று கூறியவனின் குரல் மேலும் மேலும் உடைந்து சத்தம் குறைந்து தான் போனது.

கண்களில் இரு துளி கண்ணீர் நிற்க, மாத்திரையின் வீரியத்தில் கண்கள் சொக்கிக் கொண்டிருந்த மலரை கனிவாக தலைகோதி உறங்க வைத்துவிட்டு, வெளியே வந்த செண்பகமும் மலர் தன்னிடம் கேட்ட கேள்விகளையும், அவள் மயங்கியதையும் கூறிட, இப்போது விக்ரம் மனதில் தோன்றிய பீதி முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.

வினோ மற்றும் உதியின் பார்வை கூட "இப்போ என்ன டா சொல்றே!!! அன்றைக்கு நாங்கள் எடுத்துக் கூறியபோதும் கேட்காமல் அசட்டையாக நினைத்து நீ வீம்பாக செய்த காரியம் பெண்ணவளைத் தான் இன்னமும் பாதிக்கிறது...." என்று குற்றம் சாட்டும் பார்வையாகக் கூட இருந்தது.



-தொடரும்​
 
  • Love
Reactions: Meena.R