• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அத்தியாயம் 11

நித்திலம்NMR

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
231
20
28
Netherlands
மலரை கனிவாக தலைகோதி உறங்க வைத்துவிட்டு, வெளியே வந்த செண்பகம் மலர் தன்னிடம் கேட்ட கேள்விகளையும், அவள் மயங்கியதையும் கூறினார்.

"மலருக்கு எதுவும் நியாபகம் இல்லேனு நெனைக்கிறேன் தம்பி. நீங்க டாக்டர்கிட்ட இன்னைக்கு கூட்டிட்டுப் போவிங்க தானே... அதான் எதுக்கும் உங்ககிட்ட சொல்லி வைப்போம்னு தான் சொன்னேன்..." என்று கூறிவிட்டு மீண்டும் மலரின் அறைக்குச் சென்றார்.

இப்போது விக்ரம் மனதில் 'நியாபகம் இல்லாமல் மயங்கினாளா! அல்லது உண்மை அறிந்து மயங்கினாளா!' என்ற எண்ணத்தில் மனதில் தோன்றிய பீதி முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது. வினோவும், உதியும் கூட உண்மை தெரிந்து தான் மயங்கியிருப்பாள் என்று நினைத்தனர். ஆனால் மலரின் அச்சத்திற்கான காரணம் அன்றும் அவர்களுக்குத் தெரியவில்லை, இன்றும் அவர்களுக்குப் புரியவில்லை.

வினோ மற்றும் உதியின் பார்வை 'இப்போ என்ன டா சொல்றே!!! அன்றைக்கு நாங்கள் எடுத்து சொல்லியும் கேட்காமல் அசட்டையாக நினைத்து நீ வீம்பாக செய்த காரியம் பெண்ணவளைத் தான் இன்னமும் பாதிக்கிறது....' என்று குற்றம் சாட்டும் பார்வையாகக் கூட இருந்தது. கூடவே 'உண்மையை வெகுநாட்கள் ஒழித்து வைக்க முடியாது என்று இப்போது புரிந்துகொள்' என்ற எச்சரிக்கையும் இருந்தது.

சற்று நேரத்திற்கு தன் உணர்வுகள் அனைத்தையும் ஒத்தி வைத்துவிட்டு, "டாக்டர் செக்-அப் முடியவும் செம்பியன்கிட்ட பேசி அவங்க வீட்ல இருந்து வர சொல்றேன். இப்போ ரெண்டு பேரும் என் ரூம்ல கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க" என்று தலை கவிழ்ந்தபடி கூறிட,

வினோவோ "இப்போவாச்சும் தோனுச்சே... மலருக்கும் அது தான் நல்லது... எனக்கு காலேஜ்-ல கொஞ்சம் வேலை இருக்கு... சீக்கிரம் காலேஜ் போகனும்... சோ நான் வீட்டுக்குக் கெளம்புறேன்..." என்றான்.

உதி "இரு நானும் வரேன்...உன்னை ட்ராப் பண்ணிட்டு நான் என் வீட்டுக்குப் போறேன்... விபா நீ ஹாஸ்பிட்டல் கிளம்பவும் கால் பண்ணு நானும் வரேன்..." என்று கோபமாக இருந்தபோதும் நண்பனுக்கு பக்க பலமாக இருக்க விரும்பினான்.

இருவருக்கும் சம்மதம் என்று தலையசைத்து வழியனுப்பியவன், தன் குருவிகளுக்கு இறை வைக்கச் சென்றான். எப்போதும் போல் யோகா செய்ய அமர, இன்று அவனால் ஒரு மனதாகச் செய்து முடிக்க முடியாமல் போனது. உடலின் ஒவ்வொரு அணுவிலும் பரவிக் கிடப்பவள் மூளையை மட்டும் விட்டு வைப்பாளா என்ன!!! எத்தனை முறை மனதிற்குக் கடிவாளம் இட்டு இழுத்து வந்தாலும் மீண்டும் மலரிடமே சென்று நின்றது அவனது மனம். அதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாமல் குளித்து முடித்து மலரின் அறைக்குச் சென்றான். எப்போதும் போல் அவள் அருகில் அமர்ந்து சும்மா வேணும் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

சற்று நேரத்தில் எழுந்து சென்று மருத்துவமனை அழைத்துச் செல்ல தேவையானவற்றை எடுத்து வைத்ததோடு, அவளது மருத்துவ அறிக்கையையும் மலரின் கண்ணில் படும்படியாக மேசையில் வைத்தவன், உறங்கிக் கொண்டிருப்பவளின் அருகே சென்று தோள் தொட்டு எழுப்ப நினைத்தான். ஒருநொடி தயங்கி பின் அந்த தயக்கத்தையும் பின்னுக்குத் தள்ளி, "பனி..." என்று அவள் தோள் குலுக்கி எழுப்பிவிட்டான்.

அவனது முதல் தீண்டலிலேயே எழுந்து கொண்டவள், அவனைக் கண்டு அதிர்ந்து, ஒருசாய்த்துப் படுத்திருந்தவள் சட்டென பின்னால் நகர்ந்தாள். அதனைக் கண்ட நொடி விக்ரமின் முகம் இறுகியது.

எங்கிருந்தோ எழுந்து உடல் முழுதும் பரவிய கோபத்தை அடக்கி தொண்டைக் குழியில் விழுங்கிய மிச்சமே அவனது முகத்தின் இறுக்கம்.

மலரின் மிரண்ட விழிகளை பொருட்படுத்தாது, "ஹாஸ்பிட்டல் போகனும்... எழுந்து ரெடியாகு... " என்று அவன்போக்கில் கூறிவிட்டு அறையைவிட்டு வெளியேறினான்.

அவன் வெளியேறிய சிறிது நேரத்திற்கெல்லாம் செண்பகம் உள்ளே நுழைய அவரது உதவியோடு குளியலறை எழுந்து சென்றாள். கால்கள் வலுவிழந்தது போல் தோன்றிட, செண்பகத்தின் உதவியுடனே குளித்து முடித்து தயாராகி, அறையில் இருந்த ஒற்றை சாய்விருக்கையில் வந்து அமர்ந்தாள்.

அப்போது தான் அருகில் இருந்த மேசையின் மேல் அவளது மருத்துவ அறிக்கை இருப்பதைக் கண்டு ஏதோ ஒன்றை தெரிவு செய்து கொள்ளும் நோக்கோடு, அதனைப் புரட்டிப் பார்த்தாள். முதல் பக்கத்திலேயே நோயாளியின் பெயரில், 'பனிமலர் விக்ரம் பார்த்திபன்' என்று இருக்க அவளது கைகள் தானாக முதலில் அந்த எழுத்துக்களையும் பின் தன் கழுத்தை வருடியது.

'என்ன யோசித்தும் திருமணம் நடந்தது நினைவில் இல்லை. அதே போல் எப்போதிலிருந்து தான் இப்படி இருக்கிறோம் என்பதும் நினைவிற்கு வரவில்லை. எத்தனை முறை யோசித்தும் தன் பெயர் பனிமலர் என்பதே அந்த அறிக்கையைப் பார்த்தப் பின் தான் அவளது நினைவிற்கே வந்தது போல் இருந்தது.

அவள் அறிக்கையைப் பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்தப் பின் தான் அவள் அறைக்கு வந்தான் விக்ரம். உள்ளே வந்ததும் அவள் சுடிதார் அணிந்திருப்பதைக் கண்டு, செண்பகத்தை அழைத்தான்.

"செண்பக க்கா..." அவன் அழைப்பதற்கும், செண்பகம் மலருக்கு ஒரு தட்டில் இட்லி எடுத்துக் கொண்டு அறைக்குள் நுழைவதற்கும் சரியாக இருந்தது.

"அக்கா இவளுக்கு சேலை கட்டிவிடுங்க" என்றவன் அவர் "ம்ம்ம்" என்றதும் அவளது கப்போர்டைத் திறந்து ஒரு சேலையையும் எடுத்து வைத்தான்.

சாப்பாடுத் தட்டை கையில் எடுத்துக் கொண்டு, "இன்னையில இருந்தே அவளும் அங்கே டேபிளில் உக்காந்து சாப்பிடட்டும்..." என்று சிறு இடைவெளிவிட்டு "என் கூட சேர்ந்து..." என்று கூறி அறை வாசல் வரை சென்றவனைத் தடுத்து நிறுத்தியது செண்பகத்தின் குரல்.

"மலர் நடக்குறதுக்கு கொஞ்சம் சிரமப்படுறா தம்பி" என்றார்.

"பரவாயில்லே... ட்ரெஸ் ச்சேஞ்ச் பண்ணிட்டு என்னைக் கூப்பிடுங்க..." என்று கூறி வெளியேறிச் சென்றான்.

மலருக்குப் புரிந்துவிட்டது, அவன் என்ன சொல்லிச் செல்கிறான் என்று... ஆனாலும் வெளியே எதுவும் சொல்ல முடியாத நிலை. தன்னால் எந்த வித எதிர்கேள்வியும் இன்றி, தன் சந்தேகங்கள் தீராமல் விக்ரமோடு இணைந்து வாழ்ந்திட முடியுமா!!! என்ற சந்தேகம் எழ அதனையும் கேட்க வழியின்றி தவித்தாள். தன் யோசனைகளுடனேயே செண்பகம் தனக்கு சேலை கட்டுவதற்கு தன்னால் முடிந்தளவு ஒத்துழைத்தாள்.

செண்பகம் விக்ரமிடம் சென்று "மலர் ரெடியாகிட்டா தம்பி" என்றவுடன், மின்னல் வேகத்தில் அவள் அறைக்குள் நுழைந்தவன் சற்றும் தாமதிக்காமல் பூவிதழவளை தன் கையில் ஏந்தியிருந்தான். அவன் தன்னை தூக்கிச் செல்வான் என்று எதிர்பார்த்திருந்தாள் தான். ஆனால் இந்த வேகத்தை மலர் சற்றும் எதிர்பார்த்திடவில்லை.

காலையிலிருந்து தன்னை தூரமாகவே நின்று காதல் கண் கொண்டு பார்த்து மகிழ்ந்தவன் சட்டென இப்படியொரு வேகத்தோடு தன்னை நெருங்கி பூக்குவியலைப் போல் அவன் கையால் தூக்கிக் கொள்ளவும் சற்றே அதிர்ச்சியடைந்தாள். அதிரடியாய் நெருங்கியவனை தன்னையும் அறியாமல் பிடிமானத்திற்காக அவன் கழுத்தை வளைத்துப் பிடித்து அவன் முகத்தருகே நெருங்கி அவனது மூச்சுக் காற்றை தனது உயிர்காற்றாய் சுவாசித்து, விழிகள் விரிய அவனையேப் பார்த்துக் கொண்டிருந்தாள் பெண்ணவள்.

காரிகையவளின் செயலில் இரண்டாம் முறையாகக் கிரங்கியவனின், இதழோரம் மெல்லிய புன்னகை மலர்ந்திட, சற்று நேரத்திற்கு முன் தான் எழுப்பிவிடும் போது அவள் அஞ்சி விலகியது கூட மறந்து போக தன் கையில் இருந்த உறை குளிர் பனியை சாமி அறை நோக்கி தூக்கிச் சென்றான்.

பாதையைப் பார்த்து நடந்தபடியே "நிக்க முடியுமா?" என்று கேட்டவனுக்கு அவளிடம் இருந்து எந்த பதிலும் வராமல் போக, அவள் முகத்தைத் திரும்பிப் பார்த்தான். பெண்ணவளின் கண்கள் சற்றும் இங்கும் அங்கும் அசைந்திடவில்லை. விழியின் கடையில் சிறிய அச்சம் கூடத் தெரிந்திட, சுவாரசியாமாக அவளைப் பார்த்தபடி தன் தலையால் முட்டி தன்னவளை நிகழ்வுக்குக் கொண்டு வந்தான்.

மீண்டும் ஒரு முறை "கொஞ்ச நேரம் பேலன்ஸ் பண்ணி நிக்க முடியுமா?" என்று கேட்டான்.

"ம்ம்ம்" என்று மட்டும் அவளிடம் இருந்து பதில் வந்தது. இன்னும் அவள் தன்னிடம் ஒரு வார்த்தை கூட வாய் திறந்து பேசவில்லை என்பதே அவனுக்கு என்னமோ போல் இருந்தது.

பூஜையறையில் அவளை இறக்கி நிற்க வைத்தவன் அவளுக்கு அருகில் இருக்கும் இடை உயர குத்துவிளக்கை ஏற்றிடக் கூறி உத்தரவிட்டான். யோசனையோடு அவனைப் பார்த்தவள், மெல்லிய குரலில் "நமக்கு கல்யாணம் ஆகிடுச்சா?" என்று முயன்று வரவழைத்த தைரியத்தில் தன் முதல் கேள்வியைக் கேட்டாள்.

ஏன் இந்த கேள்வி! செண்பக க்கா சொன்னது போல் உண்மையாகவே மறந்து தான் போயிவிட்டாளா? இப்போது நான் என்ன பதில் சொல்ல வேண்டும்... அவள் அதனை எப்படி எடுத்துக்கொள்வாள்... அவள் என்ன நினைத்தாலும் பரவாயில்லை என் மனதில் பட்டத்தைத்தான் நான் உரைப்பேன்... என்று தனக்குள்ளாகவே பட்டிமன்றம் நடத்தி முடித்தவன், அவள் தன் பதிலுக்காகக் காத்திருக்கிறாள் என்றவுடன், "ம்ம்ம்" என்று மட்டும் சொல்லி வைத்தான்.

"என் கழுத்துல ஏன் தாலி இல்லே.....?" என்று அடுத்த கேள்வியை முன்வைக்க... எப்போதும் போல் அவளைத் துழைக்கும் பார்வை பார்த்தான். அவனின் பார்வையில் ஏனென்றே தெரியாமல் தன் பார்வையை சட்டென மாற்றிக் கொண்டாள் அவள்.


அவனுக்கு மட்டுமே தெரியும் அவன் பார்வைக்கான அர்த்தம். தான் ஆம் என்றதை நம்பியதால் வந்த அடுத்த கேள்வி என்று ஊகித்தவன், அப்படியென்றால் அனைத்தையும் மறந்துவிட்டாளா! என்ற சந்தேகத்தில் தான் அவளைப் பார்த்தான். ஆனால் அவள் தன் பார்வையை தாழ்த்திக் கொள்ளவே முதலில் ஒரு பெரும் மூச்சை பதிலாகத் தந்துவிட்டு, "வெய்ட் பண்ணு வரேன்..." என்று அந்த அறையில் இருந்த கப்போர்ட்டைத் திறந்து அதற்குள் இருந்த இரும்புப் பெட்டியில் இருந்து, தங்கத் தாலியை எடுத்துக் கொண்டு அவளருகே வந்தான்.

பூஜையறையில் வீற்றிருந்த சொக்கரும், மீனாட்சியும் தங்கள் குழந்தைச் செல்வங்களோடு காட்சியளிக்க, ராஜ ராஜேஸ்வரியின் இன்முக தரிசனத்தில், முதல் கடவுள் விநாயகர், கல்வியின் திருஉருவான கலைமகள், செல்வத்தின் மறுபிம்பமான லட்சுமி என அனைவர் முன்னிலையிலும் அத்திருமாங்கல்யத்தை வைத்து அவனே விளக்கு ஏற்றி வணங்கி, அவளது கழுத்தில் அணிவித்தான்.

அவனது இந்த திடீர் செயலில் அதிர்ந்து நிற்பவளின் நெற்றில் குங்குமம் வைத்து அந்த பனிச்சிலைக்கு உயிர் கொடுத்தான். அடுத்ததாக உச்சி வகிட்டிலும், திருமாங்கல்யத்திலும் குங்குமம் வைக்க, மலருக்கு இப்போது தான் என்ன செய்ய வேண்டும் என்று எதுவும் புரிந்திடவில்லை. மீண்டும் அவளை தூக்கிக் கொண்டவன், உணவு மேசையின் இருக்கையில் அவளை அமர்த்தினான். பரிமாற வந்த பணியாட்களை போக சொல்லிவிட்டு,

"ட்ரீட்மெண்ட்-காக இத்தனை நாள் தாலி போடலே... இனியும் ஏன் போடாம இருக்கனும்! அதான் நானே போட்டுவிட்டேன்..." என்று அவள் பார்வையைத் தவிர்த்து ம்தனக்கும் அவளுக்குமாக பரிமாறி்மயபடி உரைத்தான்.

தட்டில் இருந்த இட்லியை சிறிது சிறிதாக பிட்டு ஏனோ தானோவென கொத்தமல்லி சட்னியில் தொட்டு சாப்பிட்டவளைக் காணும்போதே தெரிந்ததது அவள் ஏதோ யோசனையில் இருக்கிறாள் என்று... வேறு என்ன? 'எப்போது திருமணம் நடந்தது... விக்ரமைக் காணும் போது ஏன் ஒரு அச்சம் தோன்றுகிறதே? அது ஏன்?எப்போதிருந்து கோமாவில் இருந்தோம்?' என்று தான். இன்னும் தன் பெற்றோர் பற்றி அவள் ஒருமுறை கூட யோசிக்கவில்லை. அதற்கான நேரத்தையும் அவன் கொடுக்கவில்லை...

மலரின் யோசனை படிந்த முகத்தைக் கண்டவன், அதனைக் கலைக்க நினைத்து, உணவை அளந்து கொண்டிருந்த அவள் கையைப் பிடித்தான். "என்ன யோசனை? சாப்பிடு மொதோ..." என்றான்.

"எனக்கு எதுவுமே நியாபகம் இல்லே" என்று இயலாமையோடு கூறியவளைக் காண அவனுக்கே அவளை தோளோடு சேர்த்து அணைந்து 'அதுனால ஒன்னும் இல்லே... என்னை நம்பு... உனக்கு நான் இருக்கேன்' என்று சொல்லத் தோன்றினாலும், இன்னமும் அவள் கண்ணில் தெரிந்த பயம் அதனைச் செய்யவிடாமல் தடுத்தது.

"அதான் டாக்டரை பார்க்கப் போறோம்ல... இப்போ சாப்பிடு... டைம் ஆகுது... சீக்கிரம் கெளம்பனும்..." என்று கூறி கை கழுவச் சென்றுவிட்டான்.

மலரும் தன் சிந்தனைங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, கடகடவென உண்டு முடித்து கூடத்து நீள்சாய்விருக்கையில் சென்று அமர்ந்தாள். அவளருகே வந்த விக்ரம், "நான் உன் மெடிக்கல் ரிப்பேர்ட்டை எடுத்துட்டு வரேன்..." என்று கூறி மீண்டும் மாடிக்குச் சென்றான்.

கண் முன்னே தன்னை உரசிக் கொண்டிருக்கும் புதுத் தாலி அவளை மீண்டும் சிந்திக்கத் தூண்டிட, அதனைக் கையில் ஏந்தியபடி கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது முன் வாசலில் நிழலாடிட நிமிர்ந்து பார்த்தவளை "மலர்" என்ற அழைப்போடு விரைந்து வந்து கட்டிக் கொண்டான் செம்பியன்.

அதில் திடுக்கிட்டவள் தன்னை அணைத்திருப்பவனின் முகத்தைக் கூட சரியாக பார்க்க முடியாமல், குழப்பத்தோடு அமர்ந்திருந்தாள். அவனின் அழுகை அவளுக்குள் ஏதோ செய்ய, தானாக அவளது கைகள் அவன் தலையைக் கோதியது...

"ரெண்டு வர்ஷமா என்னை இப்படி தனியா தவிக்கவிட்டுடேல!!! என்னைப் பத்தி கொஞ்சமாவது யோசிச்சேயா? உன் மேல கோவமா இருக்கே போ.... நீ ஒன்னு என்னை தொட வேண்டாம் போ..." என்று சிறுபிள்ளை போல் பினாத்தினாலும் அவளைவிட்டு அவன் நகரவில்லை. அணைத்த கைகள் இம்மியும் விலகவில்லை. அவனது அழுகையும் நின்றபாடில்லை.

செம்பியனின் அழுகையில் மலரின் கண்கள் தானாகக் கலங்கத் தொடங்கியது. படியில் இறங்கி வந்து கொண்டிருந்த விக்ரம் செம்பியனைப் பார்த்து, 'பனியைப் பத்தின யோசனையில இவனை மறந்துட்டனே!!! இப்போ இவன்கிட்ட எப்படி சொல்றது... இவளுக்கு எதுவும் நியாபகம் இல்லைனு சொன்னா இவன் தாங்குவானா!!' என்று யோசித்தபடி மீதிப்படிகளையும் கடந்து அவர்களை நெருங்கினான்.

செம்பியனின் தோழில் கை வைக்க, எழுந்து நின்ற செம்பியன் விக்ரமை அணைத்துக் கொண்டான். "ஏன் மச்சா என்கிட்ட சொல்லலே?" என்று தழுதழுத்தக் குரலில் கேட்க,

விக்ரமோ செம்பியனுக்கு பதில் கூறாமல் மலரிடம் பேசினான். "இது செம்பியன்... உன் தம்பி" என்றிட, செம்பியன் விலகி நின்று, "நீங்க என்னை அறிமுகப்படுத்தி வைக்கிறிங்களா? இது நல்ல கதையா இருக்கு.... மலரு எனக்கு அக்கா மட்டும் இல்லே... என் அம்மா, என் ஃப்ரெண்டு எல்லாம் அவ தான்... சில நேரம் என் ஆச்சியக் கூட இவ ரூபத்துல பாக்கலாம்." என்று சிரித்துக் கொண்டே கூறியபடி தன் அருகே எழுந்து நின்ற மலரின் தோளில் கை போட்டு நின்றான். வெகு நாட்களுக்குப் பிறகு மச்சான் என்ற அழைப்பு இல்லாமல் பேசியிருந்தான் செம்பியன்.

விக்ரமிற்கோ மூச்சடைப்பது போல் இருந்தது. எதற்கும் அசையாமல் நிற்கும் மலரைப் பார்க்க, பார்க்க கோபம் கூட வந்தது. ஆனால் வேறு வழி இல்லையே, செம்பியனிடம் கூறித் தான் ஆக வேண்டும் என்ற முடிவோடு,

"செம்பியா! அவ எல்லாத்தையும்..." என்று ஆரம்பித்தை சற்று தொண்டயை சரி செய்து கொண்டு "அவ எல்லாரையும் மறந்துட்டா!" என்றான். மீண்டும் செம்பியனின் கண்கள் சத்தமில்லாமல் அழுகையில் வெடிக்க, கலங்கிய விழிகளோடு மலரைத் திரும்பிப் பார்த்தான். செம்பியனின் அழுகையைக் காணக் காண மலருக்கும் கண்கள் கலங்கிட, செம்பியன் சட்டென தன் கண்களைத் துடைத்துக் கொண்டு,

"ஏய்... லூசு... இதுக்கு எதுக்கு அழுகுறே!!! எல்லாம் சரியாகிடும்... இன்னைக்கு இல்லேனா நாளைக்கு நியாபகம் வந்துட்டுப் போகுது... அதுக்காக நீ என் அக்கா இல்லேனு ஆகிடுமா! இல்லே நான் தான் உன் தம்பி இல்லேனு ஆகிடுமா!!!" என்று அவளுக்கு தைரியம் கொடுக்கும் தமயனாக மாறி அவளது கண்களையும் துடைத்துவிட்டான்.

"ம்.. நல்லா சொல்லு... காலைல இருந்து எதையோ யோசிச்சுகிட்டே இருக்கா! அப்படி என்ன தான் அந்த மண்டைக்குள்ள ஓடுதுனு தெரியலே! இதுல என்னைப் பார்த்தா மட்டும் அந்த பயம் எங்கிருந்து தான் வருமோ தெரியலே!" என்று கடைசி வரியை மட்டும் பல்லைக் கடித்துக் கொண்டு ஆதங்கமாகக் கூறினான். பின்னே இருக்காத தம்பியின் சோகம் கண்டதும் வந்த கண்ணீர் தன்னைக் காணும் போது அச்சமாக மாறியதில் உண்டான கோபம், பொஸசிவ்...

செம்பியனால் இன்னும் அந்த சூழ்நிலையில் இருந்து வெளியே வர முடியவில்லை. இருந்தும் முயன்று அமைதி காத்து நின்றான்.

"ஹாஸ்பிட்டல் போகனும் செம்பியா. சீக்கரம் சாப்பிட உட்கார். சாப்பிட்டதும் கிளம்பலாம்..." என்று செம்பியனையும் சேர்த்து துரிதப்படுத்தினான். செம்பியனும் உண்டு முடித்திட, இப்போதும் மலரின் அனுமதி தேவை என்று கூட நினைக்காமல் அவளை தன் கையில் ஏந்தினான் விக்ரம். மலர் சற்று சங்கட்டமாக உணர்ந்திட, "என்னால நடக்க முடியும் நான் நடந்து வரேன்..." என்றாள்.

"பரவா இல்லே... ஹாஸ்பிட்டல்ல நீயா நடந்து வா... இப்போ நான் தூக்கிட்டுப் போறேன்..." என்று நிற்காமல் நடந்து கொண்டே அவளுக்கு பதிலளித்தான்.

மகிழுந்தின் ஓட்டுனர் இருக்கைக்குப் பின் இருக்கையில் அவளை அமர வைத்துவிட்டு இருக்கைப் பட்டையை அணிவித்தான். மகிழுந்திற்குள் அவன் தன்னை அமர வைக்கும் போதும் சரி, இருக்கை பட்டையை தன்னோடு நெருங்கி நின்று அணிவிக்கும் போதும் சரி, பெண்ணவள் அவனின் உரசலிலும் வாசனை திரவியத்தின் மணத்தோடு சேர்த்து வீசும் மன்னவனின் மணத்திலும் இனிமையான ஒரு உணர்வை உணர்ந்தாள். முதன்முறையாக இவர் எனக்கு நெருக்கமானவர் தானோ!!! என்ற யோசனை தோன்றியது அவளுக்கு.

மலரின் அருகே செம்பியன் அமர்ந்து கொள்ள, உதியின் இல்லம் நோக்கி காரைச் செலுத்தானான். புறப்படுவதற்கு முன்னே உதிக்கு அழைத்து தாங்கள் புறப்பட்டுவிட்டதாகவும், மலரின் மறதி பற்றியும் கூறியிருந்தான். அங்கே உதியும் தயாராக இருக்க, முன்னிருக்கையில் ஏறி அமர்ந்து கொண்டான் அவன்.

பின்னால் திரும்பி மலரைப் பார்த்து "இப்போ எப்படி இருக்கு மலர்?" என்றிட, அவளும் இன்முகமாக "இப்போ பரவாயில்லே அண்ணா..." என்று தன் உடல்நிலை குறித்துக் கூறினாள்.

அப்போது தான் அவள் உச்சிவகிட்டில் இருந்த குங்குமத்தைக் கண்டு நண்பனை கோபமாக முறைத்தான் உதி. அதே கோபத்தில் மகிழுந்தில் இருந்து இறங்க நினைக்க, அதற்குள் மகிழுந்தின் கதவுகளை லாக் செய்திருந்தான் விக்ரம். உதி வேறு வழியில்லாமல் அமர்ந்திருக்க வேண்டியதாகியது. ஆனாலும் கோபம் அடங்காமல், "நீ இன்னும் கொஞ்சம் கூட மாறவே இல்லே விபா... அதே வீம்பு கொஞ்சம் கூடக் குறையாம அப்படியே இருக்கு உன்கிட்ட..." என்று சீற்றமாக உரைத்தான்.

"உதி ண்ணா என்னாச்சு? ஏன் கோபமா இருக்கிங்க?" என்ற செம்பியனை, "அப்பறம் பேசலாம் செம்பியா" என்று அடக்கினான் விக்ரம்.

சில மணி நேர அமைதிப் பயணத்திற்குப் பின் மருத்துவமனை வந்து இறங்கிட, மருத்திவரின் உத்தரவில் மலரை சில பரிசோதனைகள் செய்ய வேண்டும் கூறி செவிலியர் ஒருவர் அழைத்துச் சென்றார்.

அவ்வளவு நேரம் தன் கோபத்தை அடக்கி வைத்திருந்த உதி அதற்கு மேல் கோபத்தை அடக்க முடியாமல் விக்ரமின் சட்டையைப் பிடித்து "ஏன் டா இப்படி செஞ்சே?" என்று கத்தினான்.

"என்னாச்சு உதி ண்ணா? ஏன் இப்போ மச்சான் கூட சண்டை போடுறிங்க?" என்று ஒன்றும் புரியாமல் வினவினான் செம்பியன்.

"வா டா... நல்லவனே... உன் மச்சான் என்ன தப்பு செய்தாலும் உனக்கு அது தப்பாவே தெரியாதே!!!..." என்று தன் கோபத்தை அவனிடமும் காட்டினான் உதி.
"உதி ண்ணா... மச்சான் தப்பு செய்யமாட்டார்... நீங்க இவ்ளோ கோபப்படுற அளவுக்கு இப்போ என்ன நடந்திருச்சு?"

"உன் அக்கா கழுத்துல தாலி இருக்கு... அது தப்புனு உனக்குத் தோனலேயா?" என்று உருமிட,

இப்போது வரை செம்பியன் அதனை கவனிக்கவில்லை தான். ஆனால் விக்ரமின் அமைதி உதி சொல்வது உண்மை என்று ஊர்ஜிதம் செய்திட, விக்ரமை பிரம்மை பிடித்தது போல் பார்த்தான் செம்பியன்.



-தொடரும்​