• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அத்தியாயம் 12

நித்திலம்NMR

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
231
20
28
Netherlands
விக்ரமின் அமைதி உதி சொல்வது உண்மை என்று அவனக்குத் தெரிவித்திட, விக்ரமை பிரம்மை பிடித்தது போல் பார்த்தான் செம்பியன்.

இருவரின் பார்வையையும் கண்ட விக்ரம், அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டு, "மார்னிங் பூஜையறையில வெச்சே தாலி கட்டிட்டேன். கடவுளைத் தவிர வேற எந்த சாட்சியும் இல்லே... இத்தனை நாள் பனி என் மனைவினு வார்த்தையா மட்டும் சொல்லிட்டு இருந்தேன். இன்னைக்கு அதை உண்மையாக்கிட்டேன் அவ்ளோ தான்." என்று குரல் உயர்த்தவில்லை என்றாலும் இதில் என்ன இருக்கிறது என்பது போல் உதியைப் பார்த்துக் கூறினான்.

அடுத்ததாக செம்பியனின் புறம் திரும்பி, "சாரி செம்பியா... எனக்கு யார்கிட்டேயும் சொல்லவோ, அனுமதி கேட்கவோ பிடிக்கலே..." என்றிட

"என் அப்பா தெரியாம செய்த தப்புக்கு எங்க குடும்பத்தையே மொத்தமா ஒதுக்கிட்டிங்கல்ல? என்றைக்கா இருந்தாலும் என் அக்காவுக்கும் உங்களுக்கும் தான் கல்யாணம் நடக்கும், நடக்கனும்னு நெனச்சு தான் உங்களை இப்போ வரைக்கும் மச்சானு கூப்பிடுறேன்... ஆனா நீங்க... ஒரு வார்த்தை எங்க குடும்பத்துல யார்கிட்டேயும் சொல்லனும்னு நெனைக்கலேல! என்கிட்டேயும்....... அது சரி அவ கோமால இருந்து சரியானதையே என்கிட்ட சொல்லலே... நான் தான் மச்சான், மச்சானு இத்தனை நாள் என் அக்காவுக்கு ஈக்குவலா உங்களையும் என் மனசுல தூக்கி வெச்சிருந்திருக்கேன்." என்று வலியோடும் இயலாமையோடும் கூறினான் செம்பியன்.

"செம்பியா...." என்று அவனின் வலியை உணர்ந்து அவனுக்காக வருந்தியபடி, "நான் யாரையும் ஒதுக்க நினைக்கல செம்பியா... எனக்கு என் பனி வேணும்... அவ்ளோ தான்..." என்று அழுத்தமாக வந்தது விக்ரமின் பதில்.

உதியோ கொஞ்சமும் கோபம் குறையாமல், செம்பியனிடம் "டேய் ஃபூல்... நான் அவன் செய்ததே தப்புனு சொல்லிட்டு இருக்கேன். நீ என்னடானா உன்கிட்டேயும், உன் அப்பாகிட்டேயும் சொல்லாம செய்தது தப்புனு வருத்தப்படுறே! உன் அக்காவுக்கு எதுவும் நினைவு வராதபோது இவன் செய்த காரியம் ரெம்பவே தப்பு..." என்று செம்பியனைத் திட்டிவிட்டு விக்ரமைப் பாரத்து

"காலைல எங்ககிட்ட என்ன டா சொன்னே!!! மலரோட அப்பாவை வர சொல்லி அவர் கூட அனுப்பி வைக்கப் போறேன்னு சொன்னியா இல்லேயா?" என்றான்.

"அவங்களை வர சொல்றேனு தான் சொன்னேன். பனிய அனுப்பி வைக்கிறேனு சொல்லலே... அப்படியே அனுப்பி வைக்கிறதா இருந்தாலும், பனி விரும்பினா அவர் பொண்ணா இல்லாம,
என் வொய்ஃப்-ஆ போயிட்டு வரட்டும்..." என்ற விக்ரமின் குரலில் இனி இப்படித் தான் எல்லாம் நடக்க வேண்டும் என்ற கட்டளை அதிகமாகவே இருந்தது.

விக்ரமின் பிடிவாதம் பற்றி அறிந்திருந்த உதியால் மட்டும் இதற்கு என்ன சொல்ல முடியும். நண்பனின் முன்னால் சென்று மண்டியிட்டு அமர்ந்தவன், "விபா... உனக்கே தெரியும், மலர் கோமால இருக்கும் போது உன்னோட நெருக்கம் அவளை பின்னடையச் செய்ததா டாக்டர்ஸ் உன் முன்னாடி தான் சொன்னாங்க... அப்படி இருக்கும் போது, இன்னைக்கு அவ குணமானதே பெரிய விஷயமாத் தான் எங்களுக்குத் தெரியுது...

கல்யாணத்துக்கு முதல் நாள் நீ தான் மலரை கட்டாயப்படுத்தி நைட் டைம்னு கூட பார்க்காம கூட்டிட்டு போனே... உங்களுக்குள்ள என்ன நடந்ததோ அது இப்போ வரைக்கும் எங்க யாருக்கும் தெரியாது... ஆனா மலருக்கு எல்லாம் தெரியும்... அவளுக்கு நியாபகம் வந்துட்டா உன்னை வெறுக்க தான் செய்வா... அது உனக்கும் நல்லாவே தெரியும்... அதனாலத் தான் சொல்றேன், மலரை விட்டுடு டா... அது தான் உங்க ரெண்டு பேருக்கும் நல்லது." என்று தன் கோபத்தை விடுத்து குரலைத் தாழ்த்திக் கூறினான்..

விக்ரமின் இதழ்கள் விரக்தியாக ஒரு புன்னகையைச் சிந்தியது. "ஒரு விஷயம் யோசிச்சேயா உதி?... ரெண்டு வர்ஷத்துக்கு முன்னாடி, மலரைவிட்டு பிரியக் கூடாதுனு சத்தியம் பண்ண சொல்லி என்கிட்ட கேட்டதும் நீ தான். இப்போ பிரிஞ்சு போனு சொல்றதும் நீ தான்..... ஆனால் நான் அப்போ சொன்னதைத் தான் இப்பவும் சொல்றன், இனி எப்பவும் சொல்லுவேன்... என் வொய்ஃப் என்னைவிட்டு பிரிஞ்சு போக அனுமதிக்கவும் மாட்டேன், நானும் அவளைவிட்டு பிரியவும் மாட்டேன்." என்ற நொடி அவனது குரலிலும், முகத்திலும் ஒரு நிமிடம் பழைய விக்ரம் வந்து சென்றான்.

அதற்குள் செவிலியர் மலரை அழைத்துவர, அவளின் அருகே சென்றவன், "ஆர் யூ ஆல்ரைட்?" என்று துடைத்து எடுத்த முகமாக எந்த உணர்வையும் வெளிக்காட்டாமல் வினவினான் விக்ரம்.

"ம்ம்ம்" என்று மட்டும் கூறியவளை கூர் பார்வை பார்த்துவிட்டு, காத்திருப்பு அறைக்கு அழைத்துச் சென்றான்.

ஆளுக்கு ஒரு புறம் அமைதியாக அமர்ந்திருக்க, மலருக்கு சற்று சந்தேகம் ஏற்பட்டது. வரும் வழியிலேயே உதி ஏதோ சொல்ல, அதனை செம்பியன் என்னவென்று கேட்க, அப்போது விக்ரம் செம்பியனை அதட்டியதோடு, இப்போது இருக்கும் அமைதி என அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து யோசித்தவள் ஏதோ ஒன்றை அனைவரும் தன்னிடம் மறைக்கின்றனர் என்று தெரிந்து கொண்டாள். இப்போது அது பற்றி கேட்டாலும் இவர் சொல்ல அனுமதிக்கப் போவது இல்லை. என்ன மறைக்கிறார்கள் என்று தெரியும் போது தெரியட்டும்... என்று நினைத்துக் கொண்டு, செம்பியனைப் பார்த்தாள்.

அடுத்த சிந்தனை ஓடத் தொடங்கியது. மலருக்கு தன் குடும்பம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமும், திருமணம் எப்படி நடந்தது என்று அறிந்துகொள்ளும் ஆசையும் தோன்றிட,

"செம்பியா..." என்று அவனை அழைக்க, அருகில் அமர்ந்திருந்த விக்ரம் என்ன என்பது போல் அவளை நிமிர்ந்து பார்த்தான். ஆனால் மலர் விக்ரமின் பார்வையைத் தவிர்த்து செம்பியனைக் காண,

தமக்கையின் அருகே மற்றொரு இருக்கையில் அமர்ந்தவன், "என்ன க்கா?" என்றான்.

நேரடியாக கேட்காமல், "ஃபேமிலி ஃபோட்டோ உன் ஃபோன்ல இருந்தா காட்டேன்..." என்றாள்.

அவனும் தன் திறன்பேசியில் இருந்த பள்ளிப்பருவத்தில் எடுத்த படங்களில் ஆரம்பித்து மலரின் நிச்சயதார்த்தம் வரை எடுத்த அனைத்துப்படங்களையும் காண்பித்தான்.

"இது அப்பா, ஆச்சி... நம்ம அம்மா.." என்று அவன் கூறிக் கொண்டிருக்கும் போதே... "வேண்டாம் செம்பியா. ஃபோட்டோ பாக்கும் போதே தெரியுது. சோ அது தானா நியாபகம் வரட்டும்" என்று தடுத்தாள் மலர்.

"இது வீட்ல இருந்த பாலைத் திருடி, பசில கத்திட்டு இருந்த குட்டி நாய்க்கு கொடுத்த..."

"ம்ம்... குட்டிநாய் செம க்யூட்ல!!!"

"இப்போ வளந்திடுச்சி... நம்ம பண்ண வீட்டுக்கு இது தான் காவல்..." என்றவனுக்கு "ம்ம்" என்று மட்டும் பதில் கூறினாள்.

அடுத்த படத்தை காண்பித்து "இதுல நான் லெவந்த், நீ காலேஜ் பஸ்ட் இயர்.... திருட்டு மாங்கா பரிச்சு சாப்பிட்டபோது நாம தான் மாங்கா பரிச்சோம்னு ஃப்ரெண்ட்ஸை நம்ப வெக்கிறதுக்கு எவிடன்ஸ்காக எடுத்த போட்டோ..." என்று சிரித்துக்கொண்டே கூறினான் செம்பியன்.

"சொந்த காசுல சூனியம் வெச்சிக்கிற அளவுக்கு அவ்ளோ தத்தியா டா நாம!!!" என்று அவளும் மெல்லிய சிரிப்போடு வினவினாள்.

அடுத்தடுத்த படங்களையும் பார்த்துவிட்டு "அது என்ன எல்லாம் என்னை டேமேஜ் பண்ற மாதிரி ஃபோட்டோவா இருக்கு? நீ எந்த சேட்டையும் செய்யமாட்டேயா?"

"இது என் ஃபோன்... சோ அதிகமா உன்னை தான் போட்டோ எடுத்திருப்பேன். உன் ஃபோன்ல என் ஃபோட்டோஸ் இருக்கும்..." என்று தன் துயர் மறைத்து இயல்பாகக் கூறினான்...

ஆனாலும் மலருக்கு கொஞ்சம் உருத்தலாகத் தான் இருந்தது. ஏன் இந்த மறதி வந்து தொலைந்தது. இவை அனைத்தையும் நான் மறந்துவிட்டேன் என்பது இவனுக்கு வருத்தமாகத் தானே இருக்கும்... இருந்தும் எனக்காக எதையும் வெளிகாட்டிக் கொள்ளாமல் இயல்பாக இருக்கிறானே!!! என்று நினைத்து வருந்தினாள்.

இறுதியாக மலரின் நிச்சயதார்த்த ஃபோட்டோ வர, அதிலும் அவர்கள் குடும்பமும், நண்பர்களுமே தான் இருந்தனர். ஏன் இதில் விக்ரம் இல்லை என்ற சந்தேகம் எழுந்தாலும் அதனை இருவரிடமும் கேட்கத் தயங்கினாள் மலர்.

"அவ்ளோ தான் க்கா" என்றிட மலரின் முகத்தில் ஏமாற்றம்.

"கல்யாண ஃபோட்டோ இல்லேயா?" என்று கேட்க, செம்பியன் முகம் இஞ்சி தின்ற ஏதோ போல் மாறியது... 'இன்னைக்கு தானே நடந்தது... கண்ணால கூட பாக்கவிடலே! இதுல ஃபோட்டோ எங்கேயிருந்து எடுக்குறது!!!" என்று மனதிற்குள் பொறுமியபடி விக்ரமைத் திரும்பிப் பார்த்தான். விக்ரம் இதனை எதிர்பார்த்தது போல் மிகவும் இலகுவாக அமர்ந்திருந்தான்.

"அவனுக்கு அன்னைக்கு கல்யாண வேலை அதிகமா இருந்தது, அதனால ஃபோட்டோ எடுக்க முடியலே... அதுவும் இல்லாம தாலி கட்டும் போது மச்சான் முறைக்கு துணை மாப்பிள்ளையா என் கூடவே தான் இருந்தான். அதான் அவன்கிட்ட கல்யாண ஃபோட்டோ எதுவும் இல்லே" என்று கோர்த்து வைத்தார் போல் அடுக்கடுக்காக பொய்களைக் கட்டினான். அதனை முழுமையாக நம்பத் தோன்றாவிட்டாலும் அதற்கு மேல் மலரும் எதுவும் கேட்கவில்லை.

சற்று நேரத்தில் டாக்டர் அழைப்பதாக செவிலியர் கூறிட, மலரும் விக்ரமும் மட்டும் உள்ளே சென்றனர்.

"டெஸ்ட் ரிப்போர்ட் படி பார்த்தா எந்த ப்ராப்ளமும் இல்லே விக்ரம்... ஆக்ஸிடன்ட் ஆன அன்னைக்கு நடந்த இன்சிடென்ட்லயே இந்த மறதி வந்திருக்கலாம்னு நினைக்கிறேன்... ஏதோ ஒரு விஷயத்தை அவங்க மூளை வெறுக்குது. அதை ரீக்கால் பண்ண அவங்க ப்ரைன் விரும்பலே... அதன் விளைவு தான் இந்த மறதி... இத்தனை நாள் அவங்க கோமால இருந்ததால நம்மலால அதை கண்டுபிடிக்க முடியலே... மத்தபடி பயப்படுற மாதிரி ஒன்னும் இல்லே. டாப்லெட்ஸ் கண்ட்டினியூ பண்ணுங்க... அவங்க விரும்பினால் மட்டும் நியாபகப்படுத்த முயற்சி பண்ணுங்க... அவங்களுக்கு பிடித்த இடங்களுக்கு கூட்டிட்டுப் போங்க... நெருக்கமானவங்க கூட பேசவிடுங்க... பட் எல்லாம் அவங்க ஹெல்த்தைப் பொறுத்து தான், ஓவர் ஸ்ட்ரெய்ன் பண்ணினா அது ப்ரெய்ன்னைத் தான் பாதிக்கும்... அப்பறம் இன்னொரு விஷயம்... பனிமலர் தன்னை சுத்தி இருக்கிற மனுஷங்களைத் தான் மறந்திருக்காங்க. மத்தபடி அவங்க படிச்ச படிப்பு, அவங்களுக்குள்ள இருக்குற திறமை, அவங்க ஆட்டிடியூடு எதுவும் மாறலே... சோ அது மூலமா அவங்களை ரெக்கவர் பண்ணலாம்..." என்று கூறினார்..

"தாங்க் யூ டாக்டர்..." என்று கூறி வெளியே வந்தவன், உதி மற்றும் செம்பியனிடம் மருத்துவர் கூறியவற்றை விளக்கினான்.

"இப்போ நீ என்ன செய்யப் போறே?" என்ற உதிக்கு,

"இனி அவ தான் முடிவு பண்ணனும்... அவளுக்கு விருப்பம் இருந்தா, என்னால முடிந்த எல்லா வழியிலும் இவ க்யூராக ட்ரை பண்ணுவேன்." என்று மலரை அதே ஆழ்ந்த பார்வை பார்த்தபடி கூறினான்.

மலர் எதுவும் சொல்லாமல் அமைதியாக நின்றிருக்க, "வீட்டுக்கு போகலாம்" என்றான் விக்ரம். அந்த கார் பயணமும் அமைதியாகவே முடிந்திட, செம்பியன் இரண்டு நாட்கள் அங்கே தங்கப் போவதாகக் கூறினான். இது வழக்கமாக நடப்பது தான். மலரைக் காண வருபவன் இரண்டு நாள் தங்கிச் செல்வது தான் வழக்கம்.

அன்று மாலையே மலர் செம்பியனிடம் "செம்பியா அப்பாவும், ஆச்சியும் எப்போ வருவாங்க?" என்றிட, செம்பியனுக்கு என்ன சொல்வதெனத் தெரியவில்லை. விக்ரம் தன் தந்தைக்குச் சொல்லியிருந்தால் அல்லவா அவர் புறப்பட்டு வருவதற்கு....

"இங்கே வா" என்று மலரை அருகே அழைத்து செல்பி எடுத்து தந்தைக்கு அனுப்பி வைத்தவன்,

"கவலைப்படாதே நாளைக்கு வந்திடுவாங்க..." என்றிட, மலருக்கு சற்று சந்தோஷம்... அதே நேரம் "நான் அவங்களை மறந்துட்டேனு சொல்ல வேண்டாம் செம்பியா" என்று தம்பியிடமும் கேட்டுக் கொண்டாள்.

அன்று இரவு உணவு முடித்துவிட்டு அனைவரும் உறங்கச் செல்ல, செண்பகத்திடம் சென்ற விக்ரம் "அக்கா இன்னேள இருந்தே எனக்கும் அவளுக்கும் சேர்த்து பால் என் ரூமுக்கு அவகிட்ட கொடுத்துவிடுங்க.." என்றிட அவரும் அவ்வாறே செய்தார்.

ட்ரேவில் சூடான பால் டம்ளர்களுடன் அவன் அறை வாசலில் வந்து நின்றவள் உள்ளே செல்ல தயங்கிட, மனதிற்குள்ளோ 'இவர் ஏன் இப்படி டெரர் பீஸா இருக்காரு... உம்முனு இருக்குற முகத்தை நெனச்சு பாத்தாலே உள்ளுக்குள்ள ஒதருது...' என்று நினைத்தபடி அறைக்கதவைத் திறந்தாள்.

பெரிய அறை தான் சுற்றும் முற்றும் கண்களால் துழாவினாள். அவன் அங்கே இருப்பது போல் தெரியவில்லை. சட்டென யோசனை தொன்றிட, ட்ரேவை ஸைட் டேபிளில் வைத்துவிட்டு விட்டால் போதும் என்பது போல் அவன் அறையிலிருந்து வெளியேறி தன் பழைய அறைக்குள் புகுந்து கொண்டாள். அவனே வந்து அழைத்தால் அப்போது பார்த்துக் கொள்ளலாம்... என்று ஏதோ ஒரு தைரியத்தில் வந்து படுத்துக் கொண்டாள். படுத்தபின் தான் தோன்றியது, அழைத்தால் பரவாயில்லை, அதிரடியில் இறங்கிவிட்டால்!!! அவருக்கு என்னை தூக்கிச் செல்வதெல்லாம் ஆசால்ட்டு வேலையாச்சே!!! என்று தோன்றிட "தப்பு பண்ணிட்டமோ!!!" என்னு வாய்விட்டு புலம்பினாள்.

விக்ரமோ பால்கனி விளக்குகளை அணைத்துவிட்டு இருளில் நின்றிருந்ததால் அவளுக்கு அவன் இருந்தது தெரியவில்லை. அவள் உள்ளே வந்ததையும் அவன் இல்லை என்றவுடன் விறுவிறுவென்று வெளியே ஓடியதையும் கண்டவன், தனக்குள்ளாகவே சிரித்துக் கொண்டு, அவள் கொண்டு வந்து வைத்த பாலில் ஒரு கப்பை அவள் அறைக்கு எடுத்துச் சென்றான்.

கதவைத் திறந்ததும், அவனை மிரட்சியாகப் பார்த்தவளை நெருங்கி, அவள் கையில் கப்பைக் கொடுத்து அருந்தச் சொல்ல, அவளும் மறுக்காமல் வாங்கி அருந்தினாள். "இன்னு ஒரு வாரம் தான் உனக்கு டைம்... அதுக்கப்பறம் அது தான் உன் ரூம்... புரியுதா?" என்றிட அந்த கட்டளைக் குரலுக்கு அப்போதைக்கு தலையசைக்க மட்டும் தான் அவளால் முடிந்தது.

செம்பியன் சொன்னது போல் மறுநாள் காலையே தாமோதரனும், அபிராமியும் வந்து நிற்க, விக்ரம் செம்பியனைத் திரும்பி பார்த்தான். "அக்கா பாக்கனும்னு சொல்லுச்சு..." என்று விரைப்பாகக் கூறிட, மலரின் அருகே நின்றிருந்தவன் மற்ற யாருக்கும் கேட்காத குரலில்,

"நான் உன் புருஷன்... நினைவில் இருக்கட்டும்... இனி உனக்கு எது வேணுனாலும் என்கிட்ட கேளு புரியுதா?" என்று உருமிட, 'இது கேட்காமல் செய்ய வேண்டியதாயிற்றே! அப்படிச் செய்திருந்தால் எனக்கும் அவரிடம் உரிமை உணர்வு தோன்றியிருக்கும்' என்று மனதிற்குள் நினைத்தாலும் வெளியே எதுவும் கூறிக்கொள்ளவில்லை.

அடுத்த கொஞ்ச நேரத்தில் ரத்தினகண்ணனும், விசாலியும் வந்து நிற்க அது உதியின் வேலை என்று அறிந்து கொண்டவன் அன்றைய நாள் முழுதும் ஸ்டுடியோவிலேயே இருந்து கொண்டான். அவனுக்கு யாரையும் பார்க்கப் பிடிக்கவில்லை. முக்கியமாக அவன் அன்னையை...

இரண்டு வருடங்களுக்கு முன் நடந்த அனைத்தும் இதோ இப்போது கடந்த சென்ற நொடியில் நடந்தது போல் அவன் நெஞ்சைவிட்டு நீங்காமல் நின்றது.



-தொடரும்.​