• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அத்தியாயம் 13

நித்திலம்NMR

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
231
20
28
Netherlands
திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு செம்பியனுடன் சண்டையிட்டு மலரை வம்படியாக காரில் அழைத்துச் செல்ல திரும்பி வரும் வழியில் விபத்து ஏற்பட்டிருந்தது. சாலை விபத்து என்பதால் அருகில் இருக்கும் ஜி.எச்.ல் இருவரும் அட்மிட் செய்யப்பட, விக்ரமிற்கு பெரிதாக ஒன்றும் அடிபடவில்லை, ரத்தம் அதிகமாக வெளியேறியதால் மயக்கத்தில் இருக்கிறார் என்றும், மலர் கண் திறந்தால் மட்டுமே என்ன நிலை என்று சொல்ல முடியும் என்று கூறியிருந்தனர்.

அதற்குள் "என் பையனை என்னனு நெனச்சிங்க? அவனை இப்படி ஜி.எச்ல வெச்சு ட்ரீட்மன்ட் பாக்குறிங்க... எங்க ஸ்டேடஸ் என்னனு தெரியுமா? இப்போவே டிஸ்சார்ஜ் பண்ணுங்க? நான் பெரிய ஹாஸ்பிட்டல் பாத்து போறோம்..." என்று மருத்துவமனை என்றுகூட பாராமல் கத்தத் தொடங்கியிருந்தார் விசாலி.

முதலுதவியை முடித்துக் கொண்டு ஆபத்து நிலையை கடந்தப்பின், வேறு ஹாஸ்பிட்டல் மாற்ற வேண்டும் என்று நினைத்திருந்த தாமோதரனும், ரத்தினமும் கூட விசாலியின் காட்டுகத்தலில் உடனடியாக மதுரையில் உயர்தர மருத்துவமனை ஒன்றிற்கு மாற்றி அழைத்துச் சென்றனர்.

விக்ரம் மறுநாளே கண்விழித்திட, அவன் கேட்ட முதல் கேள்வி "மலர் எங்கே?" என்று தான்.

"மலர் இன்னும் கண் திறக்கலே பார்த்தி... மலருக்கு தலையில அடிபட்டிருக்கு..." என்று ரத்தினம் கூறிட, அவனது இதயம் ஒரு நொடி நின்று துடித்தது. பார்த்துப் பழகிய நான்கு மணி நேரத்திலேயே அவள் தன் உயிரில் முழுமையாக கலந்துவிட்டாள் என்று விக்ரம் புரிந்து கொண்ட நாளும் அது தான். அதற்கான காரணம் தான் அவன் அறிந்திடவில்லை.

விக்ரம் எழுந்து நடக்கத் தொடங்கிய பின் மலரை தினமும் அவளது அறைக்குச் சென்று பார்த்து வந்தான். அவளிடம் எந்தவித முன்னேற்றமும் இல்லை.

இங்கே விசாலியோ, மகளை நினைத்து கவலையில் இருக்கும் தாமோதரனைப் பற்றி சிறிதும் யோசிக்காமல், சம்பந்தகாரர்களை சரியாக உபசரிக்கவில்லை என்று பண்ணைவீட்டில் இருந்துகொண்டு அவரைக் குடைந்தெடுக்கத் தொடங்கினார். பற்றாகுறைக்கு

"உங்க பொண்ணுக்கு என்ன தோஷமோ தெரியலே! அந்த தோஷம் என் பையன் உயிரையும் சேர்த்துல பலிகொடுக்கப் பாத்துச்சு!!!" என்று வார்த்தைகளால் வதைத்து எடுத்தார்.

ரத்தினம் நண்பன் படும் அவஸ்த்தையைக் கண்டு "மீதி சிகிச்சையை சென்னை சென்று பார்த்துக் கொள்ளலாம்" என்று தன் மகனிடம் கூறினார்.

முதலில் மறுத்தவன், பின் விசாலியின் பேச்சுகள் பற்றி தந்தை கூறிட, அவனது அடுத்த பாய்ச்சல் அவன் அன்னையின் மேல் தான்.

"ப்பா... நான் அம்மாகிட்ட தனியா பேசனும்... அது மாதிரி இப்போ நான் அம்மாகிட்ட பேசுற விஷயம் எக்காரணம் கொண்டும் யாருக்கும் தெரிய வரக் கூடாது..." என்று உறுதியாகக் கூறிவிட்டான்.

அடுத்த அரைமணி நேரத்தில் விசாலி விக்ரமின் முன் நிற்க, "என்ன மாம்? நீங்க விரும்பின மாதிரி மலர் வீட்ல எல்லாரும் உங்களுக்கு அடங்கி போறாங்களா! இல்லேயா?" என்று தன் கோபம் அனைத்தையும் மறைத்து அம்மாவிற்கு ஏற்ற பிள்ளை என்பது போல் வினவினான்.

விசாலியோ தன் மகனின் சூச்சமம் அறியாமல் உளறத் தொடங்கினார். "உன் டாடி தலையிடாம இருந்தா நாம நெனைக்கிற மாதிரி அவங்களை அடிபணிய வைக்கலாம் பார்த்தி... இவரை வெச்சுகிட்டு ஒன்னும் பண்ண முடியாது போல!! நான் ஏதோ அதட்டி உருட்டுறனாலத் தான் அடங்கிப் போறாங்க.." என்று சலித்துக் கொள்ள,

"ஓஓ... அந்த நெனப்பு வேற இருக்கா உங்களுக்கு... அவங்க அடங்கிப் போறது உங்க மெரட்டலுக்காக இல்லே... அப்பாவோட பழக்கத்துக்காக..." என்று கொஞ்சம் கொஞ்சமாக விக்ரம் தன் குரலை உயர்த்தி இறுதியாக,

"இதுக்கு மேல மலரையும், மலர் அப்பாவையும் ஒரு வார்த்தை பேசுனிங்கன்னா நான் மனுஷனா இருக்கமாட்டேன்" உருமினான்.

"என்ன டா! திடீர்னு அவங்க வீட்டாளுங்களுக்கு சப்போர்ட் பண்ணி பேசுறே! ஒரே நாள்ளேயே உன்னை நல்லாவே மயக்கி வெச்சிருக்காளே!" என்றிட,

"அம்மா பார்த்து பேசுங்க... மலர் என் மனைவி!! உங்க மருமகள்!!" என்று கூறி உதட்டை மடித்து தன் கோபத்தை மட்டுப்படுத்த நினைத்தான்.

"ஓஓஓ... கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடியே பொண்டாட்டினு சொல்ற அளவுக்கு போயாச்சா!!! அன்னைக்கு நான்.... 'மலரை கட்டிக்கிட்டா நீ எப்பவும் போல சந்தோஷமா இருக்கலாம்'னு சொன்னப்பின்னாடி தானே கல்யாணத்துக்கு சம்மதிச்சே!! இல்லேனா உன் கெரியருக்கு இந்த பட்டிக்காட்டு பொண்ணை கட்டிப்பேயா என்ன?" என்று மகனை வாயடைக்க நினைத்து அவனது குறையை சுட்டிக்காட்டினார் விசாலி...

ஏளனமான கோனல் சிரிப்போடு, "அன்னேள இருந்து தான் நான் உங்ககிட்ட பேசுறதே இல்லை... அது உங்களுக்குத் தெரியலேல!" என்றிட இருவரின் பேச்சும் ரத்தினத்திற்கு புதிதாக இருந்தது.

மேலும் விக்ரமே தொடர்ந்தான், "ஒரு பொண்ணா இருந்துட்டு இன்னொரு பொண்ணோட வாழ்க்கைய உங்களால எப்படி ஒரு கேம்-ஆ பாக்க முடியுது... அம்மா ஸ்தானத்துல யோசிக்க வேண்டிய நீங்களே இப்படி அசிங்கமா யோசிப்பிங்கனு நான் நெனைக்கலே...

என்னைக்கும் இல்லாம நான் அளவுக்கு அதிகமா தண்ணியடிச்சதும் உங்காளலத் தான்..... அன்னைக்கு இருந்த கோபம் எல்லாம் உங்க மேல தான்.... மலரை கல்யாணம் செய்துக்க சம்மதிச்சது நீங்க சொன்ன காரணத்துகாக இல்லே... எல்லா பசங்களும், தன்னோட கெரியரை புரிஞ்சிகிட்டு அதுக்கு பக்கபலமா தனக்கு உதவியா இருக்கக் கூடிய பொண்ணு தான் தன் மனைவியா வரணும்னு நெனப்பாங்க... இல்லே வரப்போற பொண்ணு அப்படி தன்னை மாத்திக்கிட்ட நல்லா இருக்கும்னு எதிபார்ப்பாங்க....

நானும் மலர்கிட்ட அதேதான் எதிர்பார்த்தேன். அதுக்கு பதிலா ஒருநாளும் மலரை ஏமாத்தனும்னு நெனைக்கலே... என்னை பத்தின எல்லாம் இப்போ மலருக்குத் தெரியும்... இன்க்லூடிங் எனக்கும் அக்ஸராவுக்குமான ரிலேஷன்ஷிப்... இதுவரைக்கும் நான் யாருக்கிட்டேயும், சொல்ல விரும்பாத என்னை பத்தின உண்மை..." இவ்வளவு நேரம் தன் அன்னை மீதான ஆதங்கத்தை உரைத்தவன், தன் தந்தையின் புறம் திரும்பி,

"சாரி ப்பா... நான் இனிமே இவங்களை பார்க்க விரும்பலே... நீங்க அவங்களை கூட்டிட்டு சென்னை போங்க, நான் மலர் கண் விழிக்கவும் வரேன்..." என்று தன் அன்னையை யாரோ எவரோ என்பது போல் பேசினான்.

அவன் பேசிய அனைத்தும் விசாலியின் மண்டையில் ஏறியதா என்று தெரியாது. ஆனால் அவன் கவனமாகத் தவிர்த்த அம்மா என்ற வார்த்தை அவர் மனதை கசக்கியது. அதற்கும் மலரின் வருகை தான் காரணம் என்றே நினைத்தார் விசாலி. ஆனால் வாய் திறந்து கூறிடவில்லை.

"பார்த்தி நீ தெரிஞ்சுக்க வேண்டிய இன்னொன்னும் இருக்கு..." என்று முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு கூறினார் ரத்தினம். அவன் என்ன என்பது போல் பார்க்க, "உன் அம்மா முன்னேலாம் இப்படி கெடையாது... நீ எப்போ டிவி-ல வர ஆரம்பிச்சேயோ அப்போதுல இருந்து தான் இப்படி மாறிட்டா... உன்னோட சின்ன வயசுலே தெரியாம தப்பு பண்ணிட்டு அதை மறைக்க பொய்யா நடிப்பே அப்பவே அவ அதை பூரிப்பா நெனச்சு என்கிட்ட சொல்லுவா... ஆனால் நீ திரையில தெரிய ஆரம்பிச்சதும் 'என் மகன்' அப்படினு எல்லார்கிட்டேயும் பெருமையா பேச ஆரம்பிச்சிவ தான், இப்போ அதுவே அவளோட கேரக்டரா மாறிடுச்சு... உன்னால மாறினவளை நீ அம்மானு கூட கூப்பிட அசிங்கப்படுறேல..." என்று தன் பேச்சை நிறுத்தி விக்ரமை குற்றம் சாட்டும் பார்வை பார்க்க, அவனோ தலை கவிழ்ந்து நின்றான்.

"ஃபைன்... இனி ஒருநாளும் நீ என் மனைவியை சகிச்சிக்கத் தேவையில்லை. மலருக்கு குணமானதும் நீ தனியா வீடு பாத்து இருக்கலாம்... நான் ஊருக்குப் போனதும் முதல் வேலையா அதை செய்றேன்..." என்று தன் மகனிடம் கூட தன் மனைவியை விட்டுக்கொடுக்காமல் பேசினார் ரத்தினம்.

மனைவியின் புறம் திரும்பியவர், "சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி பேசிப் பழகு, அப்படி பேசத் தெரியலேனா அமைதியாவாது இரு..." என்று கடிந்துவிட்டு மறக்காமல் மனைவியையும் அழைத்துக் கொண்டு வெளியேறினார்.

அன்று மாலையே விக்ரம் டிஸ்சார்ஜ் செய்யப்பட, ரத்தினம் கொடுத்த டோஸில் விக்ரமும், விசாலியும் அமைதியாக அவருடன் சென்னை புறப்பட்டனர்.

ஆனால் விக்ரமால் இரண்டு நாட்கள் கூட மலரைக் காணாமல் இருக்க முடியவில்லை. தாமோதரன் மூலம் மலரின் உடல்நிலையில் எந்த மாற்றமும் இல்லை என்று கேட்டு அறிந்து கொண்டவன், அடுத்த நாளே மலரைக் காண மதுரை வந்து இறங்கினான்.

நேரே மருத்துவமனை சென்றவன், அவளது அறைக்குள் நுழையும் முன்பே அங்கே யாரும் இல்லை என்பதற்கு அடையாளமாய் காலிப்படுக்கை மட்டும் இருக்க, என்னவாயிற்று என்று அவனது மூளை படுவேகமாக யோசிக்கத் தொடங்கியது.

அறையில் இருந்த மருந்துகளை அகற்றி, படுக்க விரிப்பை மாற்ற வந்த செவிலியர் மற்றும் பணியாளரை தடுத்து, "இந்த பெட்ல அட்மிட் ஆனவங்க எங்கே?" என்றான்.

"அவங்களை ஆப்ரேஷன் தியேட்டர் கூட்டிட்டு போயிருக்காங்க..." என்றிட,

"என்ன ப்ராப்ளம்? ஏன் ஆப்ரேஷன்?" என்று பதறியபடி வினவினான்.

"அவங்களுக்கு ப்ரைன் டெத்... அதுனால அவங்க வீட்டு ஆளுங்க சம்மதத்தோட, ஆர்கான் டொனேட் பண்றாங்க... அதுக்கு தான் இப்போ கூட்டிட்டு போயிருக்காங்க.."

அவனால் அதை நம்ப முடியவில்லை... மூளைசாவு பற்றி அறிந்திருந்தவனால் இனி மலர் இவ்வுலகில் இருக்கப் போவதில்லை என்று நினைத்து கூட பார்க்க முடியவில்லை... தலையைப் பிடித்துக் கொண்டு அப்படியே சரிந்தவன் கண்களில் கண்ணீர் நிற்காமல் வடிந்திட, அவனையும் அறியாமல் இதழ்கள் பனி... பனி... என்று புலம்பியது.

சற்று நேரத்தில் அவனை தோள் தொட்டு ஒரு பெண் எழுப்பிட திரும்பிப் பார்த்தவன் குழப்பமாக அந்த பெண் மருத்துவர் முன் எழுந்து நின்றான்.

"சார்... நீங்க பனிமலருக்கு வேண்டபட்டவங்களா?" என்று படபடத்தபடி வினவினாள் அந்த மருத்துவச்சி.

"ம்ம்ம்"

"அவங்களுக்கு ப்ரைன் டெத் இல்லே. ஜஸ்ட் கோமா தான்... ஆனா பொய்யா ஒரு ரிப்போர்ட் ரெடி பண்ணி அவங்க ஆர்கான்காக இந்த ஆப்ரேஷன் பண்றாங்க..." என்று அந்த பெண் கூறிட, ரௌத்திரத்தில் சிவந்த அவன் கண்கள்,

"இந்த ஹாஸ்பிட்டல் டீன் யாரு? அந்த ஃப்ராடை நான் பாக்கனும்..." என்று கத்திட,

"சார்... நான் உங்ககிட்ட சொன்னேனு தெரிஞ்சா என்னையும் கொல்லத் தயங்கமாட்டாங்க... இப்போதைக்கு நான் சொல்றதை செய்ங்க... அந்த பொண்ணோட அப்பா இன்னு ஃபார்மாலிட்டீஸ்ல சைன் பண்ணலே. அதை மட்டும் தடுத்துட்டிங்கன்னா இப்போதைக்கு அந்த பொண்ணை காப்பாத்திடலாம்..."

"தேங்க்ஸ் டாக்டர்...." என்று தாமோதரனை நோக்கி விரைந்தான்.

அறுவை சிகிச்சை பிரிவின் முன் "இவ அம்மாவுக்கு தான் குடும்பம் குழந்தைகுட்டினு வாழ கொடுத்து வைக்கலேனு நெனச்சா இவளுக்கு கல்யாணமே இல்லேனு ஆகிடுச்சு. இப்படி அர உசுரா பாக்குறதுக்கு தானா அவளை சீராட்டி வளத்தேன்!..." என்று செம்பியனின் தோளில் சாய்ந்து மெல்லிய குரலில் புலம்பியபடி அழுது கொண்டிருந்தார் அபிராமி ஆச்சி.

செம்பியனும் ஆண்மகன் அழக்கூடாது என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டானோ என்னவோ அவ்வபோது பொங்கி வந்த அழுகையை துடைத்துக் கொண்டு தன் ஆச்சியை தோள்ணைத்தது போல் அமர்ந்திருந்தான். தாமோதரனும் மற்றொரு இருக்கையில் பின்னால் தலை சாய்த்து அமர்ந்திருக்க, அவர் அருகே சென்றவன்,

"அங்கிள் இந்த ஆப்ரேஷனுக்கு ஒத்துக்காதிங்க அங்கிள். நான் சொல்றதைக் கேளுங்க..." என்று கூறிட,

விக்ரமைக் கண்டதும் மேலும் கொஞ்சம் அழுதவர், "போதும் தம்பி உங்க சங்காத்தமே வேண்டாம்... என் பொண்ணை என்னைவிட நல்லா பாத்துப்பிங்கனு நம்பினேன்... இப்படி உயிர பரிச்சு கொண்டு வந்து என்கிட்ட கொடுத்துட்டிங்களே..." என்று உணர்ச்சிவயமடைந்து உரைத்திட,

"இல்லே அங்கிள்... நாம வேற ஹாஸ்பிட்டல் போலாம்... ப்ளீஸ் அங்கிள்.."

"வேற ஹாஸ்பிட்டல் போனாமட்டும் செத்தவ திரும்ப வந்திடுவாளா என்ன?" என்று விரக்தியாக வினவினார். அதற்குள் அபிராமி ஆச்சி,

"கல்யாணம் பேசிட்டா வீட்டைவிட்டு வெளிய அழச்சிட்டு போறதுக்கு ஆயிரம் சாங்கியம் செய்து தான் அழச்சிட்டு போவோம்... நீ யாருக்கிட்டேயும் ஒரு வார்த்தை கூட சொல்லாம கொள்ளாம அடம்பிடிச்சு கூட்டிட்டு போயிருக்கேயே... இப்படி ஒன்னு இல்லாம படுக்க வைக்கிறதுக்கு தானா!!!" என்று விக்ரமைப் பார்த்து சட்டையை பிடிக்காத குறையாக வினவினார்.

"இல்லே ஆச்சி... எனக்கு என் பனியை ரெம்ப பிடிக்கும் ஆச்சி... நான் அவளை காப்பாத்த தான் நெனச்சேன் ஆச்சி..." என்று பொறுமையாகக் கூறிட,

அடுத்து செம்பியன் ஆரம்பித்தான். "ஏதோ நல்லவனாட்டம் அன்னைக்கு 'உன் அக்காவை அப்படி என்ன பண்ணிடுவேன், கொலையா பண்ணிடப் போறேன்'னு கேட்டேல... ஆனா இன்னைக்கு சொன்னதை செய்துட்டேல..." என்றிட இப்போது விக்ரமிற்கு பொறுமை சற்றும் இல்லாமல் போனது.

"சின்ன பையன்னு பாக்குறேன்... இல்லேனா நடக்குறதே வேற..." என்று அவனை மிரட்டிட,

"என்னடா பண்ணுவே... என்னையும் கொல்லுவேயா? கொல்றா பாக்கலாம்..." என அவனும் ஒருபுறம் கத்தினான்.

அப்போது செவிலியர் ஒருவர் அறுவை சிகிச்சைக்காக ட்ரே-வில் சிறு கத்தி, கத்திரி, மற்றும் கை உறை, முக உறை என அனைத்தும் எடுத்துச் செல்ல, கண்ணிமைக்கும் நேரத்தில் அதிலிருந்த கத்தியை எடுத்திருந்தான் விக்ரம்.

தாமோதரன் பதறியபடி தன் மகனை பின்னால் இழுக்க, அபிராமி ஆச்சி இருவருக்கும் முன்னால் வந்து நின்றார். ஆனால் யாரும் எதிர்பார்க்கா நொடி விக்ரம் தன் மணிகட்டில் நான்தைந்து முறை வெட்டிக்கொள்ள, அருகில் இருந்த செவிலியர்... தன் பணிக்கே உரிய உந்துதலில் அவனை நெருங்கினார்.

அடுத்ததாக தாயுள்ளம் தன்னால் பதறியபடி, அபிராமி ஆச்சி இரண்டடி முன் வந்தார். "என்ன காரியம் செய்றே!" என்று அலறியபடி அவனை நெருங்கினார்.

இருவரையும் கைகளை உயர்த்தி அப்படியே நிற்கச் செய்தவன், தாமோதரனைப் பார்த்து, "இப்போ மட்டும் என் பனிக்கு உள்ளே ஆப்ரேஷன் நடந்தது அவள் உள்ளே செத்துப் போவா... நான் வெளியே செத்துக் கெடப்பேன்..." என்று தீர்க்கமாக உரைத்தவன், இருக்கையில் சென்று அமர்ந்து மீண்டும் தாமோதரனிடம்,

"நீங்க தாமதிக்கிற ஒவ்வொரு நிமிஷமும் என் கைய நானே கீறிக் கொள்வேன்.." என்று கூறி மீண்டும் ஒருமுறை கீறிக் கொண்டான்.

"தம்பி ஏன் இப்படி என் பொண்ணு செத்ததுக்கு அப்பறமும் எங்களை படுத்துறிங்க... இன்னும் அவ என் பொண்ணு தான். அவளோட அப்பாவா தான் எடுத்த முடிவு சரி தான்... உங்களுக்கு அவகிட்ட எந்த உரிமையும் இல்லே... கிளம்புங்க இங்கேயிருந்து..." என்று தாமோதரன் சத்தமிட்டார்.

"உங்க பொண்ணு சாகலே...." என்று கூறியபடியே தன் கையில் மற்றொரு கீறல் போட்டான்.

தாமோதரனுக்கு அதிர்ச்சி ஒருபுறம் என்றால், குழப்பம் மறுபுறம்...

"ஆனால் அவளுக்கு மூளை சாவுக்கான பரிசோதனை செய்து அது உறுதியாகிடுச்சுனு சொன்னாங்களே... இனிமே ஒவ்வொரு ஆர்கானா செயலிழந்து மலர் இன்னும் ஆறு மணி நேரத்துல முழுசா இறந்திடுவானு சொன்னாங்களே!" என்று சந்தேகமாதக் கேட்டார்.

"அது பொய்... அவளோட ஆர்கானுக்காக உங்கிட்ட பொய் சொல்லிருக்காங்க... என் பனி இன்னும் உயிரோட தான் இருக்கா" என்றவன் மீண்டும் ஒருமுறை கீறிக் கொண்டான்.

"ஆனால்..." என்று தாமோதரன் மீண்டும் ஏதோ ஆரம்பிக்க, மலரை சில சிறிய பரிசோதனை முடித்து கையில் டாக்(tag) ஒன்றை மாட்டிவிட்டு ஸ்ட்ரெச்சரில் கொண்டு வந்தனர். அதற்குள் விக்ரம் மீண்டும் ஒருமுறை கையை கிளித்துக் கொள்ள,

"போதும் தாமேதரா... நம்ம பொண்ணு இன்னொரு உயிருக்கு பயனில்லாமல் இறந்தால் கூட பரவாயில்லே... கண்ணு முன்னாடி இந்த பையனை இப்படி துடிக்கிறதை பாக்கவே கஷ்டமா இருக்கு... உன் சந்தேகத்தை அப்பறம் கேட்டுக்கோ..." என்று தன் தம்பியை அதட்டினார் அபிராமி ஆச்சி.

அறுவை சிகிச்சை அறை வாசலில் அமர்ந்திருக்கும் இவர்களைக் கடந்து மலரை கொண்டு செல்ல, இப்போது விக்ரம் தான் ஏற்கனவே கீறியிருந்த இடத்தில் அழுத்தமாக கத்தியை வைத்தான். ஏற்கனவே வெட்டுப்பட்ட இடம் என்பதால் இம்முறை லேசாகக் கீறினால் கூட உயிர் போவது உறுதி.

தன் கண்களை மூடிக்கொண்டு, சிகிச்சை அறைக் கதவு மூடப்படும் சத்தத்திற்காகக் காத்தாருந்தான். ஆனால் அதற்கு முன்பாகவே தாமோதரன் குரல் கேட்டிருந்தது.

"நான் இந்த ஆப்ரேஷனுக்கு சம்மதிக்கலே..." என்றார்.

அடுத்த நிமிடமே அங்கே நின்றிருந்த ஊழியர்களில் முகம் மாறியது. அந்த மருத்துவமனையின் பெரிய மருத்துவர்கள் முதற்கொண்டு, டீன் வரை அனைவரும் ஐந்து நிமிடத்தில் அங்கே இருந்தனர்.

"என்ன சார் விளையாடுறிங்களா? நீங்க சொன்னதை நம்பி டோனர் ரெடினு பார்ட்டிகிட்ட சொல்லிட்டோம்... அவங்களும் நாளைக்கு ஆப்ரேஷனுக்கு ரெடியா இருக்காங்க... இப்படி லாஸ்ட் மினிட்ல மாத்தி பேசுறிங்க? உங்க இஷ்டத்துக்கு மாத்தி மாத்தி பேச இது என்ன உங்க அப்பன் வீட்டு ஹாஸ்பிட்டலா?" என்று கத்த ஆரம்பித்தார் டீன்.

அதுவரை அமைதியாக அமர்ந்திருந்தவன், சட்டென எழுந்து நின்று, "இல்லே தான். இவர் அப்பாவோட ஹாஸ்பிட்டல் இல்லே தான். உன் அப்பன் வீட்டு ஹாஸ்பிட்டாலா இருந்தா ஆர்கான்ஸ் திருடி விப்பேயா?" என்று திமிராக வினவிட, அனைவரின் முகத்திலும் கலவரம் பரவியது.

கூட்டமாக நின்றிருந்த மருத்துவர்களில் ஒருவரை அழைத்து தன் கையை அவரிடம் நீட்டி முதலுதவி செய்யுமாறு கண்களால் கட்டளையிட்டான் விக்ரம்.

டீனின் அருகில் இருந்த கம்பவுண்டர், அவர் காதில் ஏதோ கூறிட, "ஓஓஓ மீடியால இருக்கிற திமிரா?" என்று டீனும் நக்கலாக கேட்க,

"எவ்ளோ திமிர்னு காட்டுறேன்... பாக்குறேயா?" என்று டீனுக்கு பதில் கூறிவிட்டு, தன் திறன்பேசியில் உதிக்கு அழைத்தான்.

"டேய் மச்சா... ப்ரேக்கிங் நியூஸ்ல, 'மூளை செயலிழப்பை மூளைச்சாவு என்று அறிவித்து நோயாளியின் குடும்பத்தை ஏமாற்றி உடல் உறுப்பைப் பறிக்கின்றனரா தனியார் மருத்துவமனைகள் மருத்துவர்கள்!!!' அப்படினு போடு, மத்த டீடெய்ல்ஸ் எல்லாத்தையும் நம்ம ஆள் நேர்ல கொண்டு வந்து தருவான்." என்று உத்தரவிட, அடுத்த சில நிமிடங்களிலேயே ப்ரேக்கிங் நியூஸ் அந்த மருத்துவமனை பார்வையாளர் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.

அதுவரை விக்ரமை விளம்பர நாயகன் என்று மட்டுமே நினைத்திருந்த டீன், முக்கியச் செய்தி வந்த நேரலையைக் கண்டப் பின் தான் அது விக்ரமின் சேனல் என்று அறிந்து கொண்டார். 'ஆள் தெரியாமல் பேசி உசுப்பேத்தி விட்டுவிட்டோமோ!' என்று அவர் யோசித்துக் கொண்டிருக்கும் நேரம்.

"எவிடன்ஸ் பக்காவா ரெடியா இருக்கு... மரியாதையா என் பனியை விட்டுட்டா, நாளைக்கே உன் ஹாஸ்பிட்டால் ச்சீஃப் டாக்டரை வெச்சு இந்த நியூஸை விழிப்புணர்வு நியூஸ்-ஆ மாத்துவேன்... இல்லேனு வை என் ஆள் கொண்டு போற ஆதாரம் இன்னும் இரண்டு மணி நேரத்துல எல்லா ச்சேனலையும் டெலிகாஸ்ட் ஆகும்..." என்று சும்மாவேணும் மிரட்டினான் விக்ரம்.

விக்ரம் நின்றிருந்த தோரணையும், வதனத்தில் கூடியிருந்த அழுத்தமும், கண்களில் தெரிந்த திமிரும் அனைத்து மருத்துவர்களுக்குள்ளும் கிழி உண்டாக்கியது. அனைவரும் டீனிடம் பனிமலரை விட்டுவிடலாம் என வேண்டுகோள் வைக்க, வேறுவழி இல்லாமல் அவரும் சம்மதித்தார்.

தன் மருத்துவமனை அவசர ஊர்தியை தயார் செய்வதாக அந்த டீன் சமாதானத்திற்கு இறங்க, "எதுக்கு... போற வழியிலேயே குடும்பத்தோட எல்லார் கிட்னியையும் எடுத்து வித்து உன் வயித்தை நிரப்பாவா!!!" என்று மீண்டும் நக்கலாக வினவ, டீனின் மூஞ்சி சிறுத்துப் போனது.

விக்ரமே யாருக்கும் சந்தேகம் வராதபடி தனக்கு தகவல் கூறிய அந்த பெண் மருத்துவரை அனுகி, அவருக்குத் தெரிந்தவர்கள் மூலம் வாகனம் ஏற்பாடு செய்து மலரை சென்னை அழைத்து வந்தான். செம்பியன், அபிராமி ஆச்சி, தாமோதரன் மூவருக்கும் டாக்ஸி ஏற்பாடு செய்திருந்தான்.

தன் தந்தையின் மூலம், நம்பகமான மருத்துவமனையில் மலரை அட்மிட் செய்து அவளுக்கு சிகிச்சை தொடர்ந்தது. மலர் கோமாவில் இருப்பதாக சோதனைகள் மூலம் கூறிவிட, தாமோதரன் குடும்பத்தாருக்கு அப்போது தான் தாங்கள் செய்யவிருந்த பெரிய தவறு தெரிந்தது.

"அந்த ஹாஸ்பிட்டலை அப்படியே விடக் கூடாது ப்பா" என்று தன் தந்தையிடம் கூற, "நம்மகிட்ட ஆதாரம் இல்லே பார்த்தி... அவன் நீ ஏதோ மிரட்டலுக்கு சொன்னதை உண்மைனு நம்பி உங்களை விட்டுட்டான். எவனோ செய்ய சொன்னதை முதல்முறையா ட்ரை பண்ணிருக்கான் போல. அதனால வந்த பயம் தான் உங்களை சும்மா விட்டிருக்கான். இந்த ப்ரச்சனைய இப்படியே விட்டுடு. திரும்பவும் அவனை சீண்டினா கண்டிப்பா திருப்பி அடிப்பான்..." என்று தன் அனுபவம் கொண்டு மகனுக்கு அறிவுரை வழங்கினார்.

விக்ரம் மலரை அருகிலிருந்து கவனித்துக் கொள்வதாகக் கூறி ருத்துவமனையில் மலருக்குத் துணையாக அவளின் அருகேயே அமர்ந்திருக்க, அப்போது அங்கே வந்த மருத்துவர், "Mr.விக்ரம், ஐ ஆம் சாரி டூ சே திஸ். நீங்க பேஷன்ட் பக்கத்துல வரும் போது அவங்க ஹாட்பீட் கொஞ்சம் வேகமா துடிக்கிது... ஐ திங்க் அவங்க உங்கள் அருகாமையை உணர்றாங்க... அதுல கொஞ்சம் பயப்படுறாங்கனு நெனைக்கிறேன்..." என்றிட, அப்போதைக்கு விக்ரம் ஒன்றும் கூறிக்கொள்ளவில்லை.

ஒரு வாரம் கடந்திருக்க, தாமோதரனோ "நாங்க இங்கேயே தங்கி ட்ரீட்மெண்ட் கண்டினியூ பண்ண முடியாது... வீட்ல வெச்சு பார்க்கலாமா கேளுங்க, எங்க வீட்டுக்கு அழச்சிட்டு போறேன்..." என்று விக்ரமிடம் கூறிட,

அவனோ எங்கேயோ பார்த்தபடி, "ம்ம்ம்... வீட்ல வெச்சு பாத்துக்கலாம்னு சொல்லிட்டாங்க... பெசன்ட் நகர்ல இன்டியூஜுவல் ஹவுஸ் ரெடி, ஒரு வாரம் நர்ஸ் கூட இருந்து பாத்துப்பாங்க... ஷூட்டிங் செட்ல ஒரு பையனோட அக்கா, கல்யாணம் ஆகாம தனியா தான் இருக்காங்க, அவங்களை பனியை பார்த்துக்க வர சொல்லிருக்கேன்... பேரு செண்பகம். நாளை மறுநாள் பனியை டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்..." என்று எல்லோருக்கும் சேர்த்து பதில் கூறிட, ஒருவரும் அசையவில்லை.

வினோ தான் முதல் வாதத்தை ஆரம்பித்து வைத்தான். "விபா ஒரு முடிவு எடுக்குறதுக்கு முன்னாடி யார்கிட்டேயும் டிஸ்கஸ் பண்ணவே மாட்டேயா!!! என்ன உரிமையில மலர் பத்தின முடிவையும் நீ எடுக்குறே!" என்றிட,

"நாள் குறிச்சபடி கல்யாணம் நடந்திருந்தா இன்னேரம் அவ என் வொய்ஃப்... இப்பவும் அவ கோமால இருக்குறதுனால தான் அமைதியா இருக்கேன். சும்மா கை கால் ஒடஞ்சி படுக்கையில இருந்திருந்தா கண்டிப்பா அவ கழுத்துல தாலி கட்டி என் கூடதான், இருக்க வெச்சிருப்பேன்... காட் இட்?"

"டேய் நீ மலர் பக்கத்துல இருந்தா அவ பயப்படுறானு உன்கிட்ட தானே டாக்டர் சொன்னாங்க... இப்போ முழு நேரமும் உன் கூடவே வெச்சிருந்து கொல்லப் போறேயா?" என்று உதி தன் நண்பனைப் பற்றி மறந்து உரைத்திட,

"கூடவே வெச்சிருந்து கொல்றேனா இல்லே பிழைக்க வைக்கிறேனானு தான் பாரேன்..." என்று திமிராகக் கூறினான் விக்ரம்.

"பெத்தவனா அவன் தன் பொண்ணை நெனச்சு கவலைப்படமாட்டானா பார்த்தி!!! கல்யாணம் ஆகாத பொண்ணை எப்படி தனியா விட்டுட்டு இருப்பான்?"

"அவரை யாரும் வரவேண்டாம்னு சொல்லலே... அவர் எப்பனாலும் வரட்டும், அவர் பொண்ணை நல்லா பாத்துக்கட்டும், எத்தனை நாள் வேணுனாலும் தங்கட்டும்... இங்கேயே இருக்கிறதுனாலும் இருக்கட்டும்... நான் யாரையும் தடுக்கமாட்டேன்... ஆனால் என் பனியை இனி யாரையும் நம்பி அனுப்பி வைக்கிறதா இல்லே" என்று தீர்க்கமாகக் கூறினான்.

அடுத்து யார் என்ன சமாதானம் கூறியும் அவன் இறங்கி வருவதாக இல்லை. இரண்டு நாளில் மலரை டிஸ்சார்ஜ் செய்து விக்ரமின் இல்லம் அழைத்துச் செல்ல, அங்கே அவளுக்கென்று தனியாக தேவையான வசதிகளுடன் ஒரு அறையை தயாராக வைத்திருந்தான்.

இரண்டு நாள் அங்கே அனைவருமாக தங்கியிருந்து, அனைத்தையும் கவனித்துக் கொள்ள, செவிலியரின் வேலைகளை செண்பகம் பக்குவமாக பழகிக் கொண்டார்... அதில் சற்று மனதை தேற்றிக் கொண்டவர்கள், வேறு வழியில்லாமல் அவரவர் பணியைத் தொடரச் சென்றனர்.



-தொடரும்​