• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அத்தியாயம் 15

நித்திலம்NMR

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
231
20
28
Netherlands
விக்ரமின் சிடுசிடுப்போடு இரண்டு நாட்களை கடத்துவதே மலருக்கு பெரும் போராட்டமாக, கவலை நிறைந்ததாக இருந்தது. தள்ளி நின்று பார்க்கும்போது அவன் சாதுவாகத் தோன்றினாலும், அருகில் சென்ற சற்று நேரத்தில் அவளிடம் கோபத்தை காட்டிவிடுவான். அது அவளுக்கு ஒருவிதமான ஏமாற்றமாக கூட தோன்றியது என்று சொல்லலாம்...

ஆரம்பத்தில் அவனது 'பனி' என்ற அழைப்பில் அவள் மனம் உருகியது என்னவோ உண்மை தான். ஆனால் அதன் பின் அவன் ஒருபோதும் அப்படி அழைக்கவில்லை என்பதில் உண்டான ஏமாற்றமா! அல்லது முதல் நாள் அவன் கண்ணில் கண்ட காதலில் அதனையே தினமும் எதிர்பார்த்த ஏமாற்றமா! இல்லை இரண்டும் சேர்ந்துதானா! என்று அவளாலேயே அறிய முடியவில்லை.

ஆனால் ஒன்றை மட்டும் கண்டு கொண்டாள். மற்றவர் முன்னிலையில் விக்ரம் அவளை வசைபாடியதும் இல்லை, அவளிடம் உருகியதும் இல்லை. ஏன் சாதாரணமாக பேசுவதே அறிதாக இருந்தது... அதனால் பெரும்பாலும் அவளும் யாரேனும் தன் அருகிலேயே இருக்கும்படியாகப் பார்த்துக் கொண்டாள்.

அதுமட்டும் இல்லாமல் தனிமையில் இருந்தால் 'திருமணம் ஆகி எத்தனை வருடங்கள் ஆகியிருக்கும்? அதில் எத்தனை பொழுதுகளை விக்ரமுடன் சந்தோஷமாக செலவிட்டிருப்போம்? இப்போது இருப்பது போல் பயந்து கொண்டே தான் அப்போதும் இருந்தோமா? என தேவையற்ற சிந்தனைகள் அவள் மனதில் விஸ்வரூபம் எடுத்து மனதை சஞ்சலப்படுத்தியது.... அதனாலேயே யாருடனேனும் ஏதேனும் பேசிக்கொண்டே திரிந்தாள். அதில் பெரும்பாலும் அவளிடம் சிக்குவது அவளது உடன்பிறப்பே!!!

பல அனுபவங்கள் கண்ட அபிராமி ஆச்சிக்கு மலரின் செயல்கள் கண்ணில் படத் தான் செய்தது. சராசரி அன்னைமார்களைப் போல் என்ன ஏது என்று கேட்காமல், அவளின் மனநிலையையும் அறிந்திட நினைக்காமல் தன் பேத்திக்கு அன்னை ஸ்தானத்தில் நின்று அறிவுரை வழங்கினார்...

"மலர்ம்மா... இன்னமும் உன் தம்பி கூடவே உக்காந்து அரட்டியடிச்சா எப்படி டா!!! உன் தம்பி எப்படி உன்னை ரெண்டு வர்ஷம் பிரிஞ்சிருந்து தவிச்சானோ அதே மாதிரி தான் விக்ரம் தம்பியும் உன் குரலை கேட்காம, உன் கடைகண் பார்வையில்லாம ரெண்டு வர்ஷம் தவிச்சிருப்பார்... எங்கள மாதிரி வெளிப்படையா அந்த தம்பி சொல்லிக்க முடியாதுல டா...

ஆயிரம் பேர் முன்னாடி கட்டினாலும், ஆண்டன் முன்னிலைல கட்டினாலும் தாலி தாலி தான்... உன் பதியின் மனம் நோகமா பாத்தக்க வேண்டியது இனி உன் பொறுப்பு... இத்தனை நாள் உன்னை முகம் சுழிக்காம பாத்துக்கிட்ட உன் புருஷன்கிட்ட நீ முகம் திருப்பிக்கிட்டு போனா நல்லாயிருக்குமா சொல்லு...

ஆம்பளைங்க தன்னோட உரிமை என்னனு காட்டுறதுக்கு ஒரு நிமிஷம் கூட ஆகாது... ஆனா அந்த தம்பி நீ இன்னமும் மாத்திரை எடுத்துக்கிறதுனால மத்த விஷயத்துக்கெல்லாம் நீ ரெடியா இல்லேயானு தெரியாம உன்னை எவ்வளவு தூரம் நெருங்குறதுனு தெரியாம உங்கிட்ட சரியாகக் கூட பேசாம இருக்கு... மொதோ உன் தயக்கத்தை விடுத்து அந்த தம்பிக்கிட்ட சகஜமா பேசு... டாக்டர்கிட்ட நீ திடகார்த்தமா இருக்கேயானு கேட்டு வாழ்க்கையோட அடுத்த கட்டத்துக்கு போங்க... புரியிதா டா?" என்று ஏதோ ஒன்றை எதிர்பார்த்தபடி அவள் முகத்தைப் பார்த்தார்.

அபிராமி ஆச்சி என்ன கூற வருகிறார் என்று புரிந்துகொண்ட மலர், அவர் கூறியவற்றை முழுமையாக காதில் வாங்காமல், தன்நிலையை நினைத்து தானே பரிதாபித்துக் கொண்டு சிரித்த முகமாக "ம்ம்ம் ஆச்சி..." என்றாள்.

மேலும் இரண்டு நாட்கள் சொந்தங்களோடு சுகமாக கடந்திட மூன்றாம் நாள் மதியம் போல் தாமோதரனும், அபிராமி ஆச்சியும் ஊருக்குப் புறப்பட்டனர். கிளம்பும் போது அபிராமி ஆச்சி தயங்கியபடி விக்ரமிடம் சென்று,

"தம்பி நீங்களும், மலரும் ஒரு பத்து நாள் அங்கே வந்து தங்கினா நல்லாயிருக்கும்... இத்தனை நாள் பாக்கக் கூட வராம இப்போ மட்டும் எந்த உரிமையில கூப்பிடுறேன்னு நெனைக்க வேண்டாம்... இடையில பாக்க வந்திருந்தாலும், நீங்க சம்மதிக்க மாட்டேங்கனு தெரிஞ்சாலும் இதையே தான் கேட்டிருந்திருப்போம்... அது தேவையில்லாத பிரச்சனையத் தான் உண்டாக்கும்னு அமைதியா இருந்துட்டோம்... இனியும் உங்களுக்கு விருப்பம் இருந்தா.... மலரை கூட்டிட்டு வாங்க தம்பி..." என்று தயங்கியபடியே கூறினார்.

"நான் உங்களை ஆச்சினு கூப்பிடலாமா?" என்று பவ்வியமாக அனுமதி கேட்டான் விக்ரம். அபிராமி ஆச்சியும் தலையசைக்க,

"நன்றி ஆச்சி... பனியை அங்கே அழைச்சிட்டு வரத் தான் நெனச்சிருந்தேன் ஆச்சி... அப்பாகிட்ட கூட, பனியை வெளியூர் அழச்சிட்டு போக விரும்புறதா சொல்லியிருந்தேன்... ஆனா அதுக்கு முன்னமே அவளுக்கு சரியானதுல எனக்கும் ரெம்ப சந்தோஷம்... டாக்டர் செக்கப் முடிச்சிட்டு உங்க எல்லாருக்கும் சொல்ல நெனச்சிருந்தேன். அதுக்குள்ள வேற மாதிரி பிரச்சனை..." என்று கடைசி வரிகளை மட்டும் மலரைப் பார்த்தபடியே கூறினான்.

"மலர்கிட்ட பேசிட்டு நாங்க எப்போ வரோம்னு சொல்றேன் ஆச்சி..." என்று கூறி வழியனுப்பி வைத்தான்.

ரத்தினமும் விசாலியும் கூட சற்று நேரத்தில் புறப்பட, விசாலி மலரை ஆரத்தழுவி விடைபெற்றார். அனைவரும் புறப்பட்டுவிட மலருக்கு கொஞ்சம் கொஞ்சமாக பயம் தொற்றிக்கொள்ள தொடங்கியது. இனி விக்ரமுடன் இந்த வீட்டில் தனியாக இருக்க வேண்டும்... சிங்கத்தின் குகையில் சிக்கிய சிறு ஆட்டைப் போல் தான் தன் நிலை என்று நினைத்தபடி, அவளறைக்குள் புகுந்தாள். அங்கே சென்றதும் மேலும் கொஞ்சம் அச்சம் பெறுகியது. நாளையிருந்து அவரது அறை தான் எனக்கும்... இப்போது கிடைக்கும் சிறிது நேர தனிமைகூட நாளையிலிருந்து பறிக்கப்படுகிறது... என்று நினைத்தபடி படுக்கையில் சரிந்தாள்.

கீழே விக்ரமோ "செம்பியா இனியாச்சு இங்கே தங்கி காலேஜ் போலாம்ல?" என்று மலரின் மனமறிந்து அவள் கேட்பதற்கு முன்பாகவே விக்ரம் முந்திக்கொள்ள,

இன்னமும் செம்பியனுக்கு விக்ரமின் மேல் கோபம் குறையாததால், கையிலிருந்த ரூபிக் க்யூப்-ஐ திருகியபடி "இல்லே, இங்கே இருந்து போன மார்னிங் ஹரிபரில கொளம்புற மாதிரி இருக்கும்... நான் ரூம்லயே தங்கிக்கிறேன்..." என்றான்.

அவன் அருகே சென்று அமர்ந்த விக்ரம், "இன்னு கோபமா தான் இருக்கேயா?" என்றிட செம்பியனிடம் எந்த பதிலும் இல்லை. உர்ரென அமர்ந்திருக்கும் செம்பியனுடன் இணைந்து சில சுயமிபடங்களை எடுத்துக்கொண்டு, "நாளைக்கு ப்ராக்டிகல் க்லாஸ் எதுவும் இருக்கா செம்பியா?"

"இல்லே..." என்றிட விக்ரமின் பார்வை செம்பியனின் மேல் சற்று நேரம் நிலைத்து நிற்க, நிமிர்ந்து பார்க்காமலேயே அதனை உணர்ந்தான் செம்பியன். அந்த பார்வைக்கான அர்த்தமும் தான் அவனுக்குத் தெரியுமே, உறவுமுறை இல்லாமல் வெறுமனே பேசியது பிடிக்காமல் தன் மேல் வீசப்படும் கனல் பார்வை தான் அது என்று நன்கு அறிந்தவன்,

"என்னால முடியலே மச்சா... நானும் இதை பத்தி யோசிக்கக் கூடாதுனு தான் நெனைக்கிறேன், ஆனா என்னால முடியலே... எனக்கு என் அக்காவையும் ரெம்ப பிடிக்கும் உங்களையும் ரெம்ப பிடிக்கும்... உங்க ரெண்டு பேருக்குமான கல்யாணம் என் கனவு, ஆசை.... அந்த ஹாப்பி மொமெண்ட்ஸ்... அதை நான் மிஸ் பண்ணிட்டு நிக்கிறேன்... அதுவும் உங்களாலேயே!!! அதை எப்படி என்னால வெளிகாட்டாம இருக்க முடியும்??!" என்று கோபத்திலும் கண்ணீர் எட்டிப்பார்க்கக் கூறினான்.

தன் மச்சினனை தோளோடு சேர்த்து அணைத்து "எல்லாம் ஒருநாள் சரியாகிடும் செம்பியா... அந்த ஒருநாளுக்கு தான் நானும் காத்திருக்கேன்... எங்க கல்யாணம் நீங்க எல்லாரும் எதிர்பார்க்குறது போல கண்டிப்பா நடக்கும்....

அன்னைக்கு நான் உன் அக்காவுக்கு தாலி கட்டலேனு வை அவளை இன்னேரம் உன் அப்பா கையோட கூட்டிட்டு போயிருப்பார். என்னால என் பனி இல்லாம இருக்க முடியாது... அதான் கொஞ்சம் சுயநலமா யோசிச்சு அந்த முடிவை எடுத்துட்டேன்...." என்றான்.

"சரி... என் கோபம் போகனும்னா இப்போ எனக்காக நீங்களும் அக்காவும் சேர்ந்து நிக்கிறிங்களா? ஒரே ஒரு ஸ்நாப் எடுத்துக்கிறேன்...." என்று ஆவலாக வினவினான்.

"ஆனா செம்பியா பனி...?" என்று இழுக்க,

"அடேங்கப்பா...!!! இவரு ஆர்டர் போடவே மாட்டாரு... அதிகாரம் பண்ணவே தெரியாதாக்கும்.... மலரை பாத்தாலே தெரியுது... தனியா சிக்கும் போது செமத்தியா வாங்குறானு..."

"நான் என்ன பண்ணட்டும் என்கிட்டேயும் உரிமையா பழகினா நானும் சந்தோஷப்படுவேன்ல... எப்போ பார் என்னை பார்த்தாலே யாரையாவது காக்கா பிடிச்சிட்டு அவங்க கூடவே ஓடிறா..." என்று முகம் நிறைய வேதனைகளைச் சுமந்தபடி அதனை காட்டிக் கொள்ளாமல் இருக்க கோபம் எனும் முகத்திரை அணிந்து கூறினான்.

இதற்கு செம்பியனுக்கு என்ன பதில் சொல்வதெனத் தெரியவில்லை. அமைதியா விக்ரமையே பார்த்திருக்க, "சரி அதை விடு, நாளைக்கு லீவ் போடுறேயா! உன் அக்காவுக்கு ஆன்லைன்ல ஃபோன் ஆர்டர் பண்ணிருக்கேன். நாளைக்கு வந்திடும். அவளோட மெயில் ஐடி போட்டு ஃபோட்டோஸ் எல்லாத்தையும் பேக்-அப் எடுத்துக்கொடு... அவளோட ஃப்ரெண்ட்ஸ், ஃபேமிலி, ஹாப்பி மொமெண்ட்ஸ் எல்லாததையும் பாக்கும்போது ஏதாவது நியாபகம் வருதானு பாப்போம்...." என்றான்.

"அந்த வெட்டி வேலையே நீங்களே செய்ய வேண்டி தானே... நான் காலேஜ் போவேன்ல..."

"சொன்னதை செய் டா... எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு..." என்று கூறியபடி சமையலறை நுழைந்தான் விக்ரம்.

"அப்படி என்ன முக்கியமான வேலை?" என்று மீண்டும் ரூபிக் க்யூபை சுழற்றினான்.

"ஒரு ஃப்ரெண்டை பாக்க போறேன்..." என்று கூறியபடி ஸ்ட்ராபெரியை பாலுடன் சேர்த்து மிக்ஸரில் சுழலவிட்டபடி கூறினான்.

விக்ரமின் கூற்றில் சற்று பிரம்மித்தவன், எழுந்து வந்து சமையலறை உணவு மேடையில் ஏறி அமர்ந்தபடி "வினோ அண்ணா, உதி அண்ணா இல்லாம அவ்ளோ முக்கியமான ஃப்ரெண்ட் யாரு மச்சான்?"

"வினோ, உதிக்கு அப்பறம் நான் உரிமையா பழகுறது உன்கிட்ட தான்... நாளைக்கு பாக்கப் போறதே வேற விஷயம்... பாத்து ரெம்ப நாளாச்சு பாக்கனும் நான் வரட்டுமானு கேட்டாங்க... பனி இருக்கிற ஸ்விட்சுவேஷன்ல அவங்களை வீட்டுக்கு வர சொல்ல பிடிக்கலே... அதான் நானே போய் பார்த்துட்டு வரலாம்னு இருக்கேன்..." என்று ஸ்ட்ராபேரி மில்க் ஷேக்-ஐ வடிகட்டியபடி கூறினான்.

"அவங்க, இவங்கனு ரெம்ப மரியாதையெல்லாம் தரிங்களே வயசு ரெம்ப அதிகமோ!!" என்று விக்ரமை 'நீங்கல்லாம் உங்க ப்ரெண்ட்ஸ்க்கு மரியாதை கொடுக்குற ஆளா என்ன!!' என்பது போல் பாவனை செய்து தன் மச்சானை நக்கலடித்தான்.

அதற்குள் விக்ரமோ மில்க் ஷேக்கில் மலருக்கும் செம்பியனுக்கும் தேவையான அளவு சர்க்கரையும், தனக்கு கொஞ்சம் அதிகமாகவும் கலந்து செம்பியன் முன்னே ஒரு டம்ளரை நீட்டியவன், அவனது நக்கலில் அதனைக் கொடுக்காமல், அவனை முறைத்திட, "சும்மா லுலலாய்க்கு..." என்று சிரித்து மழுப்பி தன் பங்கை பரித்துக்கொண்டான் செம்பியன்.

"அவங்க ஒரு பொண்ணு... அதுக்கான மரியாதை... அவ்ளோ தான்... பனிக்கு கொடுத்துட்டு வரேன்" என்று கூறியபடி ஒரு கோப்பையை எடுத்துக்கொண்டு நகர்ந்தான் விக்ரம்.

அதற்குள் செம்பியன் "ஓஓஓ... கேர்ள் ப்ரெண்டா?" என்று மீண்டும் கேலியாக வினவிட, சென்று கொண்டிருந்தவன் நின்று திரும்பிப் பார்த்து அவனை பொய்யாய் முறைத்தான்...

"மச்சா நீங்க மட்டும் இப்போ.... 'நான் வெர்ஜின் என்பது உண்மை என்றால் இந்த பச்சை பனானா ட்ரீ பற்றி எரியட்டும்'னு சொல்லிப் பாருங்களே அப்டியே தகதகனு பத்திக்கிட்டு எரியும்... அப்படி ஒரு ஃபயர் உங்க ஐஸ்-ல" என்று ஆங்கிலத்தையும், டமில்(tamil)ஐயும் சேர்த்து வைத்து கொலை செய்து கொண்டிருந்தான்.

செம்பியனின் மொழிப் புலமையைக் கண்டு விழி பிதுங்கியவன் பதிலேதும் சொல்லாமல் பனியின் அறைக்குச் சென்றான். செம்பியனோ சும்மா விடாவதாக இல்லை பின்னாலேயே துரத்திச் சென்றான்.

"ஒரு டைம் ட்ரை பண்ணுங்களேன் மச்சான்..." என்று செம்பியன் உரைத்திட விக்ரம் பனியின் அறையைத் திறந்து உள்ளே நுழைந்தான்.

"எனக்கு இப்போ டைம் இல்லே... இன்னொரு நாள் சொல்றேன்..." என்று படுக்கையின் அருகே சென்று மலரை எழுப்பி அவள் பக்கத்தில் அமர்ந்தபடி "மில்க் ஷேக் குடிப்ப தானே!" என்று மலரிடம் வினவினான்.

மலரோ 'செம்பியன் கூட இருந்தா மட்டும் வாயெல்லாம் ஈஈஈனு இளிச்சிண்டு இருக்கும் போல' என்று நினைத்தபடி அவன் நீட்டிய கோப்பையை வாங்கிப் பருகினாள்.

அதற்குள் அவளது அவசரகுடுக்கை உடன்பிறப்பு தன் திருவாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்கமாட்டாமல், "அக்கா... மச்சான் நாளைக்கு அவரோட கேர்ள் ப்ரெண்டை பார்க்கப் போறார்..." என்று பற்ற வைக்க,

மலர் வாயில் டம்ளரை கவ்வியபடி விக்ரமின் புறம் திரும்பி தன் முட்டைக் கண்களை உருட்டிப் பார்த்தாள். அதனைக் கண்டு இமைக்கும் நொடிக்குள் ரசித்து தன் கண்களை மூடித் திறந்து தன்னை சமன் செய்து தன் பார்வையை செம்பியன் புறம் திருப்பினான் விக்ரம்.

"டேய் அடி வாங்க போற பார் நீ... உன்கிட்ட சொன்னது தப்பா போச்சு..." என்று வெகு இயல்பாகக் கூறினான்.

இருந்தாலும் மலர் யார் என்றேனும் கேட்பாள் என்று எதிர்பார்க்க அவளோ 'இந்த சிடுமூஞ்சிக்கு கேர்ள் ப்ரெண்டெல்லாம் இருக்கா!!!' என்று ஆச்சரியமாகப் பார்த்தாள். இறுதி வரை மலர் எந்த கேள்வியும் கேட்காமல் அமர்ந்திருக்க, பொறுமை இழந்த விக்ரம், முகத்தை உர்ரென வைத்துக்கொண்டு,

"நாளைக்கு அக்ஷூவை பார்க்க போறேன்..." என்றான். அதற்கும் அவள் யார்? என்ன? ஏது? எனக்கு ஏற்கனவே தெரியுமா? என்று எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை. ஆனால் மனதிற்குள்ளோ 'ஏதோ எனக்கும் தெரிஞ்ச மாதிரி நிக் நேம் சொல்லி பேசுறார்... இவரையே தெரியலேயாம்! இவர் ஃப்ரெண்டை எப்படி எனக்குத் தெரியும்?' என்று அவனுக்கு அர்ச்சதை தூவிக் கொண்டிருந்தாள்.

விக்ரமோ 'அக்ஷூ யாரென்று தெரியாவிட்டாலும், அவளவன் நான் எவளோ ஒருத்தியை பார்க்கச் செல்கிறேன்... அதற்காகவேயானாலும் யார் அவள்? என்று கேட்டுத் தெரிந்து கொண்டாள் என்ன?' என்ற கோபம் அவனுக்கு...

பின் அவனே கூற ஆரம்பித்தான், "அவளோட கனடா ப்ராஜெக்ட் முடிச்சிட்டு நேரே ஹாலந்து போயிட்டு இப்போ தான் இந்தியா வந்திருக்கா..." என்றான்.

அதற்கும் மலர் பெரிதாக ஒன்றும் அலட்டிக் கொள்ளவில்லை. "ம்ம்ம்" என்று மட்டும் கூறினாள்.

அன்று இரவு அவரவர் அறையில் இருவரும் தூக்கம் இல்லாமல் பொழுதைக் கடத்தினர். விக்ரமிற்கு மலரின் தன்மேலான பயத்தை விரட்டி உரிமை உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பது மட்டுமே அவனது மூளையை குடைந்து கொண்டிருந்தது.

மலருக்கு 'இன்றே கடைசி என்பது போல் இன்று மட்டுமே இந்த அறை நாளையிலிருந்து அவரது அறை என்ற எண்ணம் பயத்தை ஏற்படுத்தியது. அதில் அபிராமி ஆச்சிக்கும் பங்கு உண்டு. பெரியவராக இருந்து அவர் சொல்ல வேண்டியதை சொல்லிச் சென்றுவிட்டார்... இனி அதன்படி நடந்து கொள்ள வேண்டியது அவர்கள் இருவரின் பொறுப்பாயிற்றே!!!

அவளும் பல விதங்களில் யோசித்து பார்த்துவிட்டாள்.... 'அதில் என்ன இருக்கிறது!!! வீடே அவரது தான்... ஆனால் ஒரே அறையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மட்டும் ஏன் பயத்தை ஏற்படுத்துகிறது?' என்று... கணவன், மனைவி இருவரும் ஒரே அறையில் இருப்பது தானே முறை என்று தன் மனதிற்குள் மீண்டும் மீண்டும் உரு போட்டுக்கொண்ட தன்னை ஓரளவு தயார்படுத்தி கொண்டிருந்தாள் பெண்ணவள்.

மறுநாள் காலை எப்போதும் போல் விரைவாக எழுந்து கொண்ட விக்ரம் தன் காலை பணிகளையும், யோகாவையும் முடித்துக்கொண்டு குளிக்கச் சென்றான். மலரும் சிட்டுக்குருவியின் சத்தத்தில் பால்கனி வந்து பார்த்தவள் அதன் சத்தத்தை கேட்டபடி அங்கேயே அமர்ந்து கொண்டாள்.

அவளின் முன்னே சூடு பறக்கும், இஞ்சி, ஏலம், பட்டை, லவங்கம் என மனமனக்கும் மசாலா தேநீர் நீட்டப்பட, ஒரு நொடி இன்முகமாக அதனை நுகர்ந்துவிட்டு பின் தலை நிமிர்ந்து பார்த்தாள். எதிரில் நின்றிருந்த தன் பத்தனைக் கண்டவுடன், சட்டென முகம் மாறியது அவளுக்கு...

மலரின் ஒவ்வொரு முக அசைவுகளையும் கண்டபடி நின்றிருந்தவன், அவளின் கடைசி முகமாற்றத்தில் பெருமூச்சு ஒன்றை வெளியிட்டுவிட்டு, அவளுக்கு எதிரே இருக்கும் இருக்கையில் அமர்ந்தான்.

"ஃபைவ் மினிட்ஸ்ல வரேன்" என்று கூறி தேநீர் கோப்பையை வாங்கி மேசையில் வைத்துவிட்டு குடுகுடுவென குளியலறை புகுந்தவள் காலை நேர புத்துணர்வோடு வெளியே வந்தாள். அவனுடன் சென்று அமர்ந்து, அவன் கொண்டு வந்த தேநீரை எடுத்து ஒரு மிடற மிடறினாள்.

தேநீரின் சிட்டிகை துவர்ப்பு சுவையில் மூழ்கியவள், அடுத்த மிடறு மிடறியபடி, "தேங்க்ஸ்" என்றாள்.

அவனோ எதற்கு என்பது போல் புருவம் சுருக்கிப் பார்க்க, தேநீர் கோப்பையை உயர்த்திக் காட்டி "டீ-க்கு"

"கொண்டு வந்து தந்ததுக்கா? இல்லே இதமான டீ கலந்ததுக்கா?" என்றான்.

"நீங்க டீ போடுவிங்களா? அதுவும் இவ்வளவு சூப்பரா?"

"பாத்தா எப்படி தெரியிது?"

அவள் திருதிருவென முழிக்க, "என்னை பாத்தா அழகா தெரியுதானு கேக்கல? என்னை பாத்தா குக் பண்ற மாதிரி தெரியுதானு கேட்டேன்?..."

"சத்தியாமா இல்லயே? நம்ம மியூசிக் டைரக்டர் படத்துல வரமாதிரி இந்த பக்கம் நாலு ஹார்லிக்ஸ் பாட்டிலும், அந்த பக்கம் ரெண்டு பூஸ்ட்-ம்ல தெரியிது..." என்று அவனது கன்னச் சிவப்பைக் கண்டு கூறினாள்.

அவளுக்காக தான் பார்த்து பார்த்து தயாரித்த தேநீரை அவள் ரசித்துக் குடித்தாலும், தன்னை அமுல் பேபி என்று கிண்டல் செய்கிறாளே என்ற கடுப்பில் முகத்தைத் திருப்பிக்கொள்ள, "சாரி... நீங்க தான் டீ போட்டிங்களா?" என்று உறுதிப்படுத்திக்கொள்ள வினவினாள்.

"ம்ம்ம்..." என்றவன் எழுந்து கொண்டு அவள் கையில் இருந்த கோப்பையையும் பரித்துக்கொண்டு அறையைவிட்டு வெளியேறினான்.

ஏனோ அவனின் வார்த்தைகளற்ற மௌனம்(கோபம்) அவளுக்கும் பிடித்தது போல் தோன்றிட, மெல்லிய புன்னகையோடு தன் காலைப்பொழுதை தொடங்கினாள்.



-தொடரும்​