• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அத்தியாயம் 16

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
685
512
93
Chennai
அத்தியாயம் 16

"நான் ரொம்ப மோசம்.. என்கூட பேசி பழகி தெரிஞ்சி இருந்தா இந்த நாலு வருஷத்தை வேஸ்ட் பண்ணிருக்க மாட்டிங்க இல்ல?" என்றாள் மலர் கண்களில் வலியுடன்.

"ப்ச்! என்ன பேசற?" என்றவன் எழுந்து கொண்டான்.

"நிஜமா தான்.. கோபம் வந்தா யோசிக்காம பேசிடுவேன்.. அப்படி தான் இப்பவும் உங்களை தப்பா நினச்சு.. ஆனா நிஜமா முதல்ல உங்ககிட்ட பேசணும் இதைனு தான் நினச்சேன்.. அந்த செயின் தான்.. அதை பார்த்ததும் தான் எல்லாம்.." என்று கூற,

"நடக்கும்னு இருக்குறது தானே நடக்கும்?" என்றான் செழியன்.

"நீங்க என்ன நினைக்குறிங்க? ஏன் இப்படி யாரோ மாதிரி பேசறீங்க? எனக்கு ஒன்னும் புரியல.. முதல்ல என்னை மன்னிச்சுட்டீங்களான்னு சொல்லுங்க ப்ளீஸ்"

செழியனது பட்டுக் கொள்ளா தன்மையில் அவன் தன்னைவிட்டு தூரமாய் சென்று விட்டானோ என்ற பயத்தில் அவன் முன் வந்து கோவில் என்பதை மறந்து சத்தமாய் மலர் கேட்க,

"ஷ்ஷ்! இது கோவில்" சுற்றி யாராவது பார்க்கிறார்களா என பார்த்து அவன் கூற,

"பார்த்திங்களா! இப்ப கூட என் பேர் உங்க வார்த்தைல வர்ல.. அப்ப இன்னும் கோபம் தான் இல்ல? நான் என்ன தான் பண்றது?" என்று கண்ணீர் வடித்தவளுக்கு மூன்று நாள் முன் அவள் இருந்த நிலை மறந்து போனது.

இப்பொழுது தன்னுள் முழுவதும் செழியன் இருப்பதும் தெரியாமல் இருந்தது.

"எதுவா இருந்தாலும் வீட்டுக்கு வா பேசிக்கலாம்.." என்றவன் செல்ல, அவன் மேலா தன் மேலா என தெரியாத கோபத்துடன் பின் சென்றாள்.

செழியன் தெளிவாகி இருந்தான். மனமும் லேசானதாய் இருந்தது. அவனுக்கு எதிராய் கோபமும் குழப்பமுமாய் வீடு வந்து சேர்ந்தாள் மலர்.

வந்ததும் செழியன் மகேந்திரனிடம் "நாளைக்கு ஈவ்னிங் நாங்க சென்னை கிளம்புறோம் மச்சான்" என்று கூற, அனைவருமே அவனை அதிர்ந்து பார்த்தனர்.

"ப்ளீஸ்! தப்பா நினைச்சுக்க வேணாம்.. ஃபன்க்ஸன் மார்னிங் தானே? அதை முடிச்சுட்டு தான் கிளம்புவோம்.. புரிஞ்சிக்கோங்க" என்றவன் வேகமாய் அறைக்கு சென்றுவிட,

"என்ன மலர்! என்ன நடந்துச்சு? ஏன் உடனே கிளம்பனும் சொல்றாங்க?" சித்ரா கேட்க,

"எனக்கும் இப்ப தான் மா தெரியும்" என்றவளுக்கு தன்னால் தானே என்ற கழிவிறக்கத்தில் கண்ணீர் முட்ட,

"சும்மா சும்மா அழாத மலர்.. என்னனு போய் கேளு.. போகும் போது நல்லா தானே இருந்த? இப்ப என்ன? கிளம்பணும்னு சொன்னா சரினு சொல்லு.. அம்மா அப்பா அண்ணன்னு இங்கேயே உட்கார்ந்துராத" அஜிதா கண்டிப்பாய் சொல்ல, மகேந்திரனும் அமைதியாய் இருந்தான்.

"என்ன! உங்க தங்கச்சியை திட்றேன்.. அமைதியா இருக்கீங்க?" அஜிதா கேட்க,

"சொன்னா தான் கேட்கவா போற? அத்தோட செழியன் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகட்டும்.. அப்புறம் வந்து தங்கினா தான் சரியா இருக்கும்" என்று புரிந்து கொண்டான் மகேந்திரன்.

"என்ன டா நீயே இப்படி சொல்ற?" சித்ரா கேட்க,

"ம்மா! போய்ட்டு அப்புறமா வருவாங்க.. விடுங்க.. அவங்க சந்தோசம் தான் இப்ப முக்கியம்" என்று செல்ல,

"டியூப்லைட் எறிஞ்சிடுச்சா?" என்றாள் அஜிதா சத்தமாகவே.

மலர் அறைக்குள் வந்தவள் வேகமாய் தன் துணிகளை எல்லாம் பெட்டியில் எடுத்து வைக்க பார்த்தவன்,

"இப்ப ஏன் இதை பண்ற?" என்று கேட்க,

"நீங்க தானே கிளம்பனும் சொன்னிங்க?"

"நாளைக்கு ஈவ்னிங் தான் கிளம்பனும்.. அண்ட் உனக்கு விருப்பம்னா இங்க தங்கிட்டு அப்புறமா கூட வா" அவன் சொல்லியே விட,

"அப்ப இதுக்காக தான் நாளைக்கு கிளம்புறீங்க? என்னை விட்டுட்டு போறது தான் உங்க பிளான் இல்ல?" என்றாள்.

"ப்ச்! உனக்கு விருப்பம் இருந்தா இருன்னு சொன்னேன்" என்றான். துணியை தொம்மென கட்டிலில் இட்டவள்,

"உங்களுக்கு என்ன தான் பிரச்சனை? நான் தெரியாம பண்ணிட்டேன்னு எவ்வளவு சொல்றேன்.. மன்னிச்சுட்டேன்னு சொன்னா தான் என்ன?" என்று கேட்க,

"நீ பண்ணினது மன்னிக்க கூடியது இல்ல.. நான் மறக்க வேண்டியது.. திரும்ப திரும்ப சொல்லி அதையே நியாபகப்படுத்த வேண்டாம் ப்ளீஸ்!"

"எனக்கு புரியவே இல்ல.. ஒன்னு மட்டும் சொல்லுங்க.. உங்களுக்கு... இப்ப..வும்.. என்.. மேல காதல்... இருக்கா?" கேட்டு முடிப்பதற்குள் நெஞ்சுக்குள் டக்டக்டக் என் இதயம் நின்று விடுவதை போல சத்தம்.

எல்லாம் நொடி நேரம் மட்டும் தான். அந்த நொடியில் அவன் பதிலைக் கூறி விட்டான்.

"இருக்கு.. அது எங்கேயும் போகாது மலர்விழி.. நான் பார்த்து ரசிச்ச மலரை விட்டு எப்படி நான்? காதலிச்சேன்.. காதலிக்குறேன்.. காதலிப்பேன்.. ஆனா என்னவோ சட்டுன்னு இதுல இருந்து மீண்டு வர முடியல.. என் மலரா இப்படி பேசினதுன்ற எண்ணமே இன்னும் என்கிட்ட இருந்து போகல.. சொல்லு நான் என்ன செய்யட்டும்.." என்று அவளிடமே பதிலைக் கேட்டான்.

பதில் இல்லை அவளிடம்.. அந்த நிமிடத்திற்கு முன்பு வரை ஒவ்வொன்றிற்கும் அவளை தானே சார்ந்து நின்றான்.

"ஜாலியா சுத்திட்டு இருந்த உன்னை என் கைக்குள்ள கொண்டு வந்தது தப்பு தான் மலர்விழி.. உன் விருப்பம் ஆசைனு எல்லாம் தெரிஞ்சும் என்கூடவே இருந்து உன்னை உன் விருப்பத்தை நிறைவேத்தணும் நினச்சேன்.. உனக்குன்னு இருக்குற ஆசையை எப்படி நான் ஆசைப்படலாம்.. ஒருவேளை நேத்து நமக்குள்ள அந்த பேச்சு வரலைனா கூட இதனால ஒரு மிஸ்ஸன்டர்ஸ்டான்டிங் வந்திருக்க வாய்ப்பிருக்கு.. முதல்ல எல்லாத்தையும் சரி பண்ணுவோம்.. அடுத்து கடவுள் பாத்துப்பார்.."

அவனுக்கு தோன்றியது, அவன் நினைத்தது எல்லாம் அவன் பேசி முடித்திருக்க,

"என்னென்னவோ சொல்றிங்க..அதெல்லாம் எனக்கு புரியல.. ஆனா நான் பண்ணினது மன்னிக்க முடியாத தப்பு.. அது மட்டும் புரிஞ்சது.. ஆனா ஏன் நான் கோபப்படணும்? ஏன் நான் உங்களை கேள்வி கேட்கணும்? அதை நினைச்சுப் பார்த்திங்களா?" அவள் கேட்க, புரியாமல் அவள் முகத்தை பார்த்திருந்தான்.

"எனக்கு உங்களைப் புடிச்சிருக்கு" மலர் சொல்லிவிட, ஆச்சர்யம் அதிர்ச்சி என எதுவும் இல்லாமல் செழியன் விழித்தான்.

"பிடித்தம் எப்ப வேணா வரலாம்.. ஆனா..." என்று கூற வந்தவனை கூற விடவில்லை அவள்.

"நீங்க எதுவும் சொல்ல வேண்டாம்.. என்னோடது வெறும் பிடித்தம்னே இருக்கட்டும்.. நானே லேட்டா புரிஞ்சதை உங்களுக்கு மட்டும் எப்படி உடனே புரிய வைக்க முடியும்? வேண்டாம்.. ஆனா என்னோட பிடித்தம் உங்களுக்கே புரியும்.
அப்ப வருவீங்க மலர்னு.. அதுவரை நான் உங்களோட தான் இருப்பேன்.. எங்கேயும் போக மாட்டேன்.. நீங்க வேண்டாம்னு சொன்னாலும்.. கோபமா பேசினாலும்" என்று கூற இதழ்பிரியாத புன்னகை ஒன்று மிக மெலிதாய் உதிர்த்தவன்,

"நான் என்னோட காதலை மட்டும் நம்பி தான் இந்த கல்யாண வேலையை தொடங்கி இவ்வளவு தூரம் வந்ததே! அந்த காதல் எப்பவும் மாறாது.. என்னால எப்பவும் உன்னை வெறுக்கவோ மறக்கவோ முடியாது.. உனக்கு நான் தப்பு பண்ணலன்னு புரிஞ்சது ஓகே தான்.. ஆனா அதை நீ கேட்ட விதமா, பேசின வார்த்தையானு தெரியாம ஹர்ட் ஆகி இருக்கேன்.. நானே நினைச்சாலும் அது மனச விட்டு போக மாட்டுது.. இப்படி உறுத்தலோட சேர்ந்து இருக்கணுமான்னு நினைச்சேனே தவிர நிரந்தரமான தீர்வு எப்பவும் எனக்கு ஒன்னு தான்.. அதை நான் எப்பவும் மாத்திக்க மாட்டேன்" என்றுவிட்டான்.

"நானும் என்னை மாத்திக்க மாட்டேன்.. உங்களோட காதல் பெருசா இருக்கலாம்.. எனக்கும் என்னோட.." என்றவள்,

"நான் நிரூபிச்சு காட்றேன்" என்று கூற,

"நான் தான் சொன்னேனே! எனக்கு ஒரு மாற்றம் வேணும் அவ்வளவு தான்.. அதுக்கு உன்னை நிரூபிக்க எல்லாம் சொல்லல" செழியன் கூற,

"உங்களால என்னை புரிஞ்சிக்க முடியாது.. நான் புரிய வைக்குறேன்.." என்றவளை புரியாமல் பார்த்தவன் பின் தோள்களை குலுக்கிக் கொண்டான்.

அடுத்த நாள் மலரின் உறவினர்களோடு செழியன் குடும்பத்தினரும் வருகை தந்திருந்தனர்.

"இந்தாண்ணா!" என ஹரி ஒரு சங்கிலியை செழியனிடம் நீட்ட, அதில் MV என்ற எழுத்துக்கள் மின்னியது அந்த ஒன்றைப் போலவே.

ஒரு பெரு மூச்சோடு அதைப் பாக்கட்டினுள் வைத்துக் கொண்டான்.

அடுத்த நாள் கிளம்பலாம் என அனைவருக்கும் செழியன் குடும்பத்தினரும் கூட கூற எதையும் காதில் வாங்காமல் கிளம்ப தயாரானான் செழியன்.

அப்பொழுதும் செழியன் மலரைத் தனித்து விட்டு மற்றவர்கள் கிளம்பிவிட இருவர் மட்டுமேயான பயணம் மதுரை தொடங்கி சென்னை வரை.

ஆயிரம் அறிவுரைக் கூறி மலரைப் பெற்றவர்கள் வழியனுப்ப, மலர் முகத்தினில் தெளிவைக் கண்ட அஜிதா புன்னகையுடன் விடைகொடுத்தாள்.

ரணமாய் இல்லாமல் அமைதியாய் அமைந்தது பயணம். அதிகமாய் பேசிக் கொள்ளவில்லை.

செழியன் தேவைக்கு பேச, அவனை மாற்றும் விதத்தை யோசித்து வந்தாள் மலர்.

அவள் உணர்ந்து கொண்டாள் தனக்கு அவன் மீது இருக்கும் காதலை.

ஆனால் அதை வார்த்தையால் கூறினால் புரியாதே! அதுவும் இத்தனை பெரிய தவறிற்கு பின்?

காதலை தியாகம் என்றோ பரிதாபம் என்றோ எண்ணி விட்டால்? அதனாலேயே கூறவில்லை.

உடனிருந்து உணர்த்த முடிவெடுத்துவிட்டாள். அவன் உடன் சேர்ந்து வாழ்வை வாழ முடிவெடுத்து விட்டாள்.

அவள் நினைத்து வந்ததற்கு நேர் மாறாய் அங்கே இருந்தது எல்லாம்.

லட்சுமியிடம் கூறிக் கொண்டு செழியன் மலரையும் கம்பெனிக்கு அழைக்க, அதிர்ந்து அவள் கண்களை விரித்தாள்.

"உனக்குன்னு ஒரு அடையாளம் தேவை.. ஸ்டடிஸ் வேண்டாம்னு சொல்லிட்ட.. சோ ஃபர்ஸ்ட் கம்பெனிக்கு வா.. அங்க ப்ரோசஸ் எல்லாம் தெரிஞ்சிக்கோ.. உனக்கு யூஸ் ஆகும்.. அண்ட் இன்ட்ரெஸ்ட் இருந்தா அடுத்து இதுலயே டெவெலப் பண்ணிக்கலாம்"

"ரெஸ்டாரண்ட் வர்றதும் ஓகே தான்.. எல்லாம் தெரிஞ்சிக்கலாம் தானே? ஆனா கம்பெனியை ஓரளவு நீ தெரிஞ்சுக்கிட்டா ரெஸ்டாரண்ட் ஒர்க் ஈஸியா இருக்கும் உனக்கு"

அவன் பேசியப்படியே இருக்க, அவன் மனதில் இருக்கும் இடத்தை மீண்டும் நிரப்ப வந்தவளோ புது செழியனில் விழி பிதுங்கிப் போனாள்.

தொடரும்..
 

Apsareezbeena loganathan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
466
190
63
Coimbatore
மலரு மனம் திருந்தி வருந்தும் போது மலை இறங்காமல் என்ன பிடிவாதம் மலரின் செழியனே......
 
  • Love
Reactions: Rithi

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
685
512
93
Chennai
மலரு மனம் திருந்தி வருந்தும் போது மலை இறங்காமல் என்ன பிடிவாதம் மலரின் செழியனே......
🥰🥰🙏