• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அத்தியாயம் 17

நித்திலம்NMR

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
231
20
28
Netherlands
மலர் வீட்டில் இல்லை என்றவுடன் விக்ரமின் மனம் தடதடக்க, அவளது எண்ணிற்கு அழைத்தான். மறுமுனையில் அழைப்பு ஏற்கப்பட்டவுடன் யார்? எவர்? என்று கேட்கும் பொறுமை கூட இல்லாமல் "ஹலோ... எங்கே இருக்கே? எத்தனவாட்டி சொல்றது... சாய்ந்தரம் நான் வரும்போது வீட்ல இருனு... உனக்கே உடம்பு சரியாகி ஒரு வாரம் தான் ஆகுது, அதுக்குள்ள தனியா எங்கே போன? என்கிட்ட சொன்னா நான் கூட்டிட்டு போவேன்ல..." என்று ஃபோனிலேயே காட்டுகத்தல் கத்தத் தொடங்கினான்.

"தம்பி... நான் செண்பகம் பேசுறேன்..." என்று மறுமுனையில் இருந்து பதில் வர,

"அக்கா!!! நீங்க எப்படி?... பனி எங்கே? என்னாச்சு? அவளுக்கு ஒன்னும் இல்லே தானே?" என்று இன்னும் பதற்றமேறியபடி படபடவென வினவினான்.

"மலர் பக்கத்துல இருக்குற ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு வந்தேன்..." என்று அவர் கூறி முடிப்பதற்குள் "ஏன்? என்னச்சு? பனிக்கு என்ன?" என்று கூடுதலாகக் கொஞ்சம் பதறினான்.

"நீங்க நேர்ல வாங்களேன் சொல்றேன்..." என்று கூறி மருத்துவமனையின் பெயரைக் கூறினார்.

அடுத்த ஐந்தாவது நிமிடம் அங்கே நின்றிருந்தான் விக்ரம். அது ஒரு சிறிய க்ளீனிக் தான். ஒற்றை காத்திருப்போர் அறையும், அதில் ஒரு ஓரத்தில் தடுத்து வரவேற்பு பகுதி அமைத்திருந்தனர். அதனை அடுத்து மருத்துவர் அறை.

அனுமதி பெற்று மருத்துவர் அறைக்குள் சென்றான். அங்கே இருந்த படுக்கையில் பாதத்தை அசைக்க முடியாதபடி சுளுக்கிற்கு அணிவிக்கப்படும் பேண்ட்-எய்டு கட்டப்பட்டு காலை நீட்டி அமர்ந்திருந்தாள் மலர். அவளை முறைத்தபடி மருத்துவரிடம் சென்று பேசினான்.

"சின்ன சுளுக்கு தான் Mr. பயப்பட ஒன்னும் இல்லே, காலை அசைக்காம இருக்கிறதுக்கு தான் கட்டுபோட்டிருக்கு... டேப்லட்ஸ் மறக்காம எடுத்துக்க சொல்லுங்க... ஃபைவ் டூ செவன் டேஸ்ல சரியாகிடும்..." என்றார் மருத்துவர்.

"டாக்டர் அவங்க அல்ரெடி வேற ப்ராப்ளம்க்கு டேப்லட்ஸ் எடுத்துட்டு இருக்காங்க..."

"அதனால ஒன்னும் இல்லே... இது சாதாரண சுளுக்கு மாத்திரை தான்... உங்களுக்கு எதுவும் அப்ஜக்ஷன் இருந்தா நாளைக்கு நீங்க ரெகுலரா போற ஹாஸ்ப்பிட்டல்ல ஒரு செக்-அப் பண்ணிட்டு என்ன மாதிரி டேப்லட்ஸ் எடுத்துக்கனும்னு கேட்டுக்கோங்க... நைட் பெய்ன் அதிகமா இருக்கும். சோ வலிக்கான மாத்திரை மட்டும் போட்டா கூட போதும்." என்று கூறி வலிநிவாரணியை எழுதிக் கொண்டுத்தார்.

மருந்துச்சீட்டை பெற்றுக் கொண்டு, மலரை தூக்கிச் செல்ல அவளை நெருங்கினான். அவளது கண்களில் இதுவரை இல்லாத பயம் இன்று அளவிற்கதிகமாக தெரிந்தது.

"வே... வேண்டாம்.... நா... நானே வரேன்" என்று அவசரமாக மறுத்தாள்.

அதற்குள் மருத்துவர் "இதோ பாரும்மா நீ இன்னு டூ டேஸ்க்கு உன் காலுக்கு அசைவோ, அதிக பழுவோ கொடுக்கக் கூடாது... ஸ்டிக் சப்போர்ட்ல நடக்கலாம்... அதுவும் இரண்டு நாளைக்கு அப்பறம் தான்." என்று கூறிவிட அவளுக்கு வேறுவழி இல்லாமல் போனது.

அவளை முறைத்தபடியே தூக்கிச் சென்று மகிழுந்தின் பின்பக்கம் வசதியாக கால் நீட்டியபடி அமர வைத்தான் விக்ரம். செண்பகத்திடம் முன்னால் அமரும்படி சொல்லிவிட்டு மகிழுந்தை எடுக்க நிமிடத்திற்கு நிமிடம் தானாக அவனது பார்வை ரிவர்-வியூ மிர்ரரைத் தொட்டு வந்தது. அவளைப் பார்த்ததில் இருந்து அவனது முகம் மேலும் மேலும் கோபத்தில் சிவந்ததே ஒழிய கொஞ்சம் கோபம் குறைந்ததது போலவேத் தெரியவில்லை.

அவனைப் பொறுத்தவரை, இன்று மலரை தனதறையில் உறங்கச் சொல்லியதால் எங்கே இரவில் அவளிடம் அத்துமீறி அவள் பெண்மையை அபகரித்து விடுவானோ என்ற பயத்தில் வேண்டுமென்றே ஏதோ செய்து அவளை இந்த நிலைக்கு ஆளாக்கிக் கொண்டாள் என்றே நினைத்தான்.

அப்படி என்ன நம்பிக்கையின்மை, அவளது பெண்மையை பறிக்க எதற்கு இரண்டு வருடம் காத்திருக்க வேண்டும்!!! என்னைக் கண்டால் பெண்களை சூரையாடும் பொறுக்கியைப் போன்றா தெரிகிறது!!! என்று சிந்தித்து சிந்தித்தே கோபத்தை அவனையும் அறியாமல் வளர்த்துக் கொண்டான்.

இல்லம் வந்துவிட, இப்போது அவளைத் தூக்கிச் சென்று அவளது அறையில் படுக்க வைத்துவிட்டு, அறை வாயிலில் நின்றிருந்த செண்பகத்திடம் சென்று, "அக்கா... அவளுக்கு சரியாகுற வரைக்கும் இப்பவும் நீங்க தான் அவளை பாத்துக்கனும், முன்னைப் போலவே... இதை ரெக்வெஸ்ட்டா கேக்குறேன்..." என்று தலைகுனிந்து வினவி நின்றான்.

"மலரை பாத்துக்க தானே தம்பி நான் வந்தேன்... நீங்க ரெக்வெஸ்ட்டா கேட்குறதுக்கு அதுல என்ன இருக்கு!!!" சற்று குழப்பமாகவே வினவினார்.

சற்று தயங்கியபடி, செண்பகத்தை அறையைவிட்டு வெளியே வருமாறு கண்ணசைத்தான். அவரும் அறை கதவை முக்கால் பாகம் அடைத்துவிட்டு வெளியே வந்தார். மலருக்கோ ஏதோ ஒரு உறுத்தல், 'இவர் நினைத்ததை சாதிக்க என்ன வேண்டுமானலும் செய்யக் கூடியவரயிற்றே!!!' என்று நினைத்தபடி தன் கழுத்தில் கிடந்த VP சங்கிலியை அவளது கைகள் தானாக வருடியது... கண்களோ அறை வாசலையே வெறித்துக் கொண்டிருந்தது.

வெளியே விக்ரமோ "இத்தனை நாள் நீங்க பாத்துகிட்டது வேற அக்கா... அவ எந்த உணர்வும் இல்லாம இருந்தாள். நீங்க குளிக்க வெச்சாலும், உடை மாத்தினாலும் அவளுக்கு எதுவும் தெரியாது... ஆனா இப்போ அப்படி இல்லே இல்லையா... அவள் சங்கடமா நினைக்காத அளவுக்கு பார்த்து பண்ணுங்க..." என்று மலரின் மனநிலையே முக்கியம் என்பதை தெளிவுபடுத்தினான்.

செண்பகமும் அதனைப் புரிந்துகொண்டு "சரி தம்பி... அப்பறம் நீங்க மலர் தனியா வெளியே போனதா நெனச்சு ரெம்ப கோபமா இருந்திங்க... ஆனால் நான் தான் தம்பி மலரை கோவிலுக்கு கூட்டிட்டு போனேன்..."

"கோவிலுக்கா!!!" என்று சற்று யோசித்தவன், அதனை சொல்லத்தான் அழைத்திருப்பாளோ என்று சிந்தத்ததுக் கொண்டிருந்தவனை செண்பகத்தின் குரல் நிகழ்வுக்கு கொண்டு வந்தது.

"ஆமா தம்பி... 'வீட்ல யாருமே இல்லாம வெறுமையா இருக்கிறதைப் பாக்கும் போது ஒரு மாதிரி இருக்கு அக்கா'னு மலர் ரெம்ப வருத்தப்பட்டுச்சு...

நான் தான் பக்கத்துல இருக்குற கோவிலுக்கு கூட்டிட்டு போறேனு சொன்னேன்...

உங்களுக்கு ஃபோன் பண்ணாப்ள... ஆனா நீங்க எடுக்கலேங்கவும் 'சீக்கிரம் வந்திடலாமா?'னு ஆயிரம் முறை கேட்டுட்டு தான் கிளம்பினாப்ள..." என்று அவர் கூறிக்கொண்டிருக்கும் போதே விக்ரமின் சிந்தனை கலைந்தது...

'நான் தான் அவளை தப்பா புரிஞ்சிக்கிட்டேன்... என்கிட்ட சொல்ல முயற்சி செய்திருக்கிறாள், அதுமட்டும் இல்லாம நான் வருவதற்கு முன்பே இல்லம் திரும்ப வேண்டும் என்றும் நினைத்திருக்கிறாள்... அதைப் புரிந்துகொள்ளாமல் அவளை கடிந்து கொண்டேனே!!! அதற்குள் மீண்டும் செண்பகத்தின் பேச்சு காதில் விழ அதனை கவனித்தான்.

"கோவில்லேயும் ஒரு நிமிஷம் கூட முழுசா உட்கார விடலே... 'அவரு வந்திருவாரு... வாங்க போலாம்... சீக்கிரம் வாங்கனு' சொல்லி அழச்சிட்டு வந்திடுச்சி... சீக்கிரம் வீடு திரும்பனுங்குற அவசரத்துல கார் வர்றதை கவனிக்காம ரோட் க்ராஸ் பண்ணபோயி..." என்று அவர் கூறிக் கொண்டிருக்கும் போதே,

பதற்றத்தோடு "வாட்?" என்று அதிர்ச்சியாக வினவினான்.

"ஒன்னும் ஆகலே... கார்காரன் வண்டிய நிறுத்திட்டான், ஆனா மலரும் பயத்துல பின்னாடி நகரும்போது கீழே விழுந்துடுச்சி... ஒரு நிமிஷம் அதிர்ச்சில அசைவில்லாம அப்படி உக்காந்திருக்கவும் எனக்கு கொஞ்சம் பயமாகிடுச்சி... சரி பக்கத்துல இருக்குற ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போலாம்னு பாத்தா நடக்க முடியலேனு சொல்லி திடீர்னு கண்ணெல்லாம் கலங்கிடுச்சு... அப்பறம் அங்க இருந்தவங்க உதவியோட ஹாஸ்பிட்டல் கூட்டிட்டுப் போனேன்... எனக்கு மொதோ புரியலே ஏன் இந்த பொண்ணு இப்படி பதறுது? ஏன் திடீர் அழுகை? எதுவும் புரியலே... ஆனா நீங்க திட்டவும் தான் எல்லாம் புரிஞ்சது..."

விக்ரமிற்கு என்ன பேசுவது என்று புரியவில்லை, அமைதியாக தலை கவிழ்ந்து நின்றிருந்தான். மீண்டும் செண்பகமே தொடர்ந்தார்... "விக்ரம் தம்பி நீங்க கோபமா பேசியோ, கடிந்து பேசியோ நான் இதுவரை பார்த்தது இல்லே... ரெண்டு வர்ஷமா மலரை கண்ணுக்குள்ள வெச்சு பாத்துக்கிட்ட நீங்களா மலரை இப்படி திட்டுறிங்கனு அதிசயமாத் தான் இருந்தது!!! மலர் வேணுனா பழசை மறந்து உங்களை கண்டு பயப்படலாம்... ஆனா உங்களுக்கு எல்லாம் நியாபகம் இருக்கு தானே!!! பின்னே ஏன் இந்த கோபம்!!! உங்க அன்பை எப்படி சொன்னா அவளுக்குப் புரியுமோ அப்படி சொல்லுங்க..." என்று கூறி நகர முற்பட்டவர், மீண்டும் திரும்பி விக்ரமைப் பார்த்து "சொல்லனும்னு தோனுச்சி சொல்லிட்டேன்... தப்பா இருந்தா மன்னிச்சிக்கோங்க தம்பி" என்றிட

"இதுல தப்பா நினைக்க எதுவும் இல்லே செண்பக க்கா... என்னை மாத்திக்க முயற்சி பண்றேன்..." என்று கூறி அவனது அறைக்குச் சென்றான்.

விக்ரமிடம் பேசிவிட்டு உள்ளே நுழைந்த செண்பகம் மெல்லிய புன்னகையோடு மலரின் அருகே வந்தமர்ந்து தலைகோதி "உன் மனம் நோகாம பார்த்துக்கனுமாம்... விக்ரமுக்கு அவ்ளோ காதல் உன் மேல!!" என்றார்.

"உங்கிட்ட சொன்னாரா?" என்று அதிசயித்து வினவினாள்

"நேரடிடா சொல்லலே... ஆனா ரெண்டு வர்ஷமா பாக்குறேனே... அன்பை வெளிக்காட்டுற விதம் தான் வேற மாதிரி இருக்கு..."

"வேற மாதிரினா எப்படி?"

"அது..." என்று கூற ஆரம்பித்தவர், பின் இடவலமாக தலையசைத்து "நீயே கண்டுபிடி... விக்ரம் தம்பிய ஃபாளோ பண்ணுவேயோ!!! இல்லே கூட உக்காந்து பேசி அரட்டையடிப்பேயோ தெரியாது... ஆனா கண்டுபிடிச்சிருக்கனும்... அப்பிடியும் உன்னால அவரோட அன்பை உணர முடியலேனா சொல்லு... பத்து நாள் கழிச்சி நான் சொல்றேன்..." என்று செண்பகம் இருவருக்கும் நடுநிலையாக நின்று இருவரையும் யோசிக்க வைத்தார்.

இரண்டாம் நாளே செண்பகத்தின் உதவியோடு வாக்கிங் ஸ்டிக் வைத்து நடக்கத் தொடங்கியிருந்தாள் மலர். அதுவரை காலைப்பொழுதில் அவள் அறையின் பக்கம் வராமல் இருந்தவன், அடுத்த நாளே தேநீர் கோப்பையோடு அவள் அறைக்குள் நுழைந்தான். எப்போதும் போல் குருவிகளின் கீச்சுக் குரலைக் கேட்டபடி தன் இணையோடு இணைந்து தேநீர் அருந்தும் அந்த சில இனிய நொடிகளை அவன் இழக்க விரும்பவில்லை.

மனமனக்கும் தேநீருடன் ஆரம்பிக்கும் இனிய காலைப்பொழுது முதல்.... இரவு சிறிய தலையசைப்புடன் அவன் விடைபெறுவது வரை அவனை கண்களாலேயே பின் தொடர்ந்தாள் மலர்.

இப்போதெல்லாம் அவன் அவளிடம் பேசுவதில்லை. அவளாக ஏதேனும் கேட்டால் கேட்டதற்கு மட்டும் பதில் கூறுவான். பேசவில்லையேத் தவிர அவளுக்கு தனிமையும் கொடுத்ததில்லை. வீட்டில் இருக்கும் நேரம் அவள் எங்கே இருக்கிறாளோ அங்கே தான் அவனும் அடைகலம் புகுவான்.

'இந்த டெரர் ஃபேஸை வெச்சுக்கிட்டு எதுக்கு தான் என் முன்னாடி வந்து நிக்கிறாரோ தெரியலே!... பேசவும் மாட்டார், நானா பேசினாலும் உர்ரென பதில் சொல்ல வேண்டியது...' என்று மலரும் பலமுறை தன் மனதோடு புலம்பியதுண்டு.

ஒருவாரம் கடந்திருக்க, இன்று மலரின் கால்கட்டு பிரிக்க மருத்துவமனை சென்று திரும்பும் வழியில் விக்ரமின் கைபேசி சிணுங்கிட, அழைப்பைத் துண்டித்தான். மீண்டும் அழைப்பு வர, சற்று முகம் சுழித்தபடி துண்டித்தான். மீண்டும் ஒலிற, புளூ டூத் கனெக்ட் செய்து அழைப்பை ஏற்றான்.

இப்படியும் இல்லாமல் அப்படியும் இல்லாமல் "சொல்லு" என்று தான் ஆரம்பித்தான். மறுமுனையில் என்ன பேசினார்களோ, விக்ரம் ஒரு பெருமூச்சு விட்டபடி, "ஆமா... லாஸ்ட் வீக் கொஞ்சம் வேலை அதிகம்.... சரி என்ன விஷயம்னு சொல்லு..." என்று சற்று சலிப்பாகத் தான் கேட்டான்.

மீண்டும் மறுமுனை என்ன கூறியதோ, மலரைத் திரும்பிப் பார்த்தவன், "இல்லே இந்த வீக் வேண்டாம்... இன்னும் ஒரு வாரம் ஆகட்டும்..." என்று கூறிவிட்டு மறுமுனை வேறு எதுவும் பேசுவதற்கு வாய்ப்பு கொடுக்காமல் அவனே தொடர்ந்தான், "நான் டிரைவிங்ல இருக்கேன்... அப்பறம் பேசுறேன்... பைய்" என்று அழைப்பைத் துண்டித்தான்.

ஸ்டியரிங் வீலைப் பிடித்திருந்தவனின் கைகளில் அப்படி ஒரு அழுத்தம், முகத்தில் கூட கோபம் குடியேறியிருந்தது. அதனை கவனித்தவள், 'ஏன் இந்த திடீர் மாற்றம்? அழைத்தது யாராக இருக்கும்?' என்று யோசித்தபடி அமர்ந்திருந்தாள்.

அடுத்த பத்து நிமிடத்தில் இல்லம் நுழைந்திட, போர்ட்டிகோவில் மகிழுந்தை நிறுத்தினான். பெண்ணவள் இறங்குவதற்கு கதவைத் திறக்க முயற்சித்தாள். அதுவோ லாக் நீக்கப்படாமல் இருக்க மலருக்குப் புரிந்துவிட்டது இவர் எதுவோ தன்னிடம் கூற நினைக்கிறார் என்று ஊகித்தவள் அவனைத் திரும்பிப் பார்த்தாள்.

"இன்னையில இருந்து நம்ம ரெண்டு பேருக்கும் ஒரே ரூம் தான் பனிமலர்... நைட் நீ என் ரூம்க்கு வரலேனா நான் உன் ரூம்க்கு நிச்சயமா வருவேன்... எல்லாத்துக்கும் ரெடியா இரு" என்று முன்புற கண்ணாடியைப் பார்த்தபடி கூறி முடித்து லாக்கை நீக்கினான்.

'எல்லாத்துக்கும் ரெடியா இருனா என்ன அர்த்தம்!!!' என்ற கேள்வி எழ, அதனை கேட்க முடியாமல் தொண்டைக்குழி அடைப்பது போல் இருந்தது. அவள் அசையாமல் அமர்ந்திருப்பதை கண்டு, தொண்டையைச் செறுமி, "நான் போகனும்... நீ கொஞ்சம்...." என்று முழுவதுமாக முடிக்காமல் நிறுத்தினான்.

"ஓ... சாரி" என்று கூறி மகிழுந்திலிருந்து இறங்கிக் கொண்டாள். அடுத்த நிமிடம் மின்னலென சீரிப் பாய்ந்தது அவனது மகிழுந்து. அதன் வேகமே கூறியது இவ்வளவு நேரம் அவன் அடக்கி வைத்திருந்த கோபத்தை...

அன்றைய இரவை நினைத்து நினைத்தே சோர்ந்து போனால் பெண்ணவள். மாலைமங்கும் நேரம்..... இறை தேடிச் சென்ற ஆண்பறவை இல்லம் திரும்பும் வேலை.... பின்கட்டில் இருந்த கொய்யா, கொடிக்காய் மற்றும் சப்போட்டா மரங்களில் குருவிகளின் ஆர்ப்பரிப்பு..... கேட்கவே ரம்யமாக இருந்தது.

'குடும்பம் என்பது மானிடனுக்கு மட்டும் தானா என்ன!!! இதோ இங்கே எத்தனை குடும்பங்கள்!!! ஆண்பறவையை தன் கீச்சுக்குரலால் வரவேற்கும் தாய், சேய் பறவைகள்..... கூட்டிற்கு திரும்பிய தந்தை பறவையின் தன் ஒருநாள் பிரிவை கொஞ்சித் தீர்த்திடும் குட்டிப்பறவைகளின் அழகு மனதை எவ்வளவு இதமாக்குகிறது!!!

தந்தைப் பறவையும் குட்டிகளை மட்டுமா கொஞ்சுகிறது!!! அதனை அடைகாத்து காத்திட்ட தன் இணையையும் எவ்வளவு அழகாக தோளணைக்கிறது!!! என்று எண்ணியபடி அதனை ரசித்து நின்றிருந்தாள் மலர்.

சிறிது நேரத்தில் தன் இணையும் இல்லம் திரும்பிவிடுவார் என்று நினைத்த நொடி மன்னவனின் வருகையை எண்ணி துள்ளிக் குதிக்க வேண்டிய புதுமணப் பெண்ணோ அஞ்சி நடுங்கினாள்.

இந்த நிமிடம் கடவுள் எதிரே வந்து "என்ன வரம் வேண்டும்... கேள்?" என்றாள், 'இரவில்லா உலகிற்கு அழைத்துச் செல்' என்று தான் கேட்டிருப்பாள். அவளின் சிந்தனையைக் கலைக்கவே வெளியே மகிழுந்தின் அரவம் கேட்டது.

மகிழுந்தின் சத்தத்தில் பெண்ணவளின் இதயத்தில் தடதடவென ரயில் வண்டி ஓடிக் கொண்டிருந்தது. தாமதமாக கதவு திறந்தாள் அதற்கும் சேர்த்து வாங்கிக்கட்டிக் கொள்ள வேண்டி வருமோ என்று தோன்றிய நொடி ஓடாத குறையாக விரைந்து வந்து கதவைத் திறந்தாள்.

கதவிற்கு அந்த பக்கம் நிற்கும் நபரைக் கண்டு சற்று பயம் குறைந்திட, முயன்று வரவைத்த புன்னகையுடன் "யார் நீங்க?" என்றாள்.

"விக்கி இல்லே!!!"

"இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திடுவார்... நீங்க அவர் ஃப்ரெண்டா? உள்ளே வாங்க..." என்று அன்பாக அழைத்தாள்.

"ஃப்ரெண்டு தான்... கேர்ள் ப்ரெண்ட்..." அவளின் குரலிலும், கூறும் விதத்திலும் ஏதோ வித்தியாசம் உணர்ந்தாள் மலர். மேற்கொண்டு அந்த புதியவளின் நடவடிக்கைகள் 'இந்த வீட்டில் எனக்கு தான் முதல் உரிமை... நீ என்ன என்னை வரவேற்று கவனிப்பது!!!' என்பது போல் இருந்தது.

வந்திருப்பவளை பார்வையால் அளந்தபடி பின் தொடர்ந்தாள் மலர். 'மாடலிங் பெண்ணாக இருப்பாள் போல' என்று நினைத்தபடி அடுக்களைக்குள் நுழைந்து தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தாள். மேசையின் மேல் இருந்த மேகஜினைப் புரட்டியபடி எடுத்து ஒருமடக்கு பருகிய புதியவள், மீதியை மலரின் முகத்தில் ஊற்றிவிட்டு,

"வீட்டுக்கு வந்தவங்களுக்கு ஜூஸ் கொடுக்கனும்ற மேனஸ் கூட தெரியாதா!! உன்னை விக்கி கிட்ட சொல்லி கவனிக்கிற விதமா கவனிக்க சொல்றேன்" என்று கூறி படபடவென வீட்டைவிட்டு வெளியேறியிருந்தாள்.

வந்தவள் யார்? ஏன் இப்படி நடந்து கொண்டாள்? தனக்கும் அவளுக்கும் என்ன பகை? என்று எதுவும் தெரியாமல் மலங்க மலங்க முழித்தபடி.... கண்களில் வடிந்தது கண்ணீரா!!" இல்லை அவள் ஊற்றிச் சென்ற எச்சில் தண்ணீரா!!! என்று தெரியாமல் நின்றிருந்தாள்.

இப்படி தண்ணீர் வடியும் முகத்தோடு நின்றிருக்க அவளுக்கே ஒரு மாதிரி தோன்றிட, தன்னை சுத்தம் செய்து கொள்ள மாடியில் இருக்கும் தங்கள் அறைக்குச் சென்றாள்...

ஆம்.... என்ன தான் பயம் விலகவில்லை என்றாலும், எத்தனை நாள் தான் ஓடி ஒழிய முடியும்!!! என்ற எண்ணம் தோன்றிட பிரச்சனையை எதிர்த்து நிற்க வேண்டும் என்ற தைரியத்தையும் தனக்குள் உருவாக்கிக் கொண்டு மதியமே தன் உடைமைகளே அவனது அறைக்கு மாற்றியிருந்தாள்.

அதற்காக அவன் கூறிய எல்லாவற்றிற்கும் தயாராக இருந்தாள் என்று அர்த்தம் அல்ல... அந்த ஒரு எண்ணம் மட்டுமே இரவைக் கண்டு அஞ்சச் செய்திருந்தது. அவசர அவசரமாக முகத்தைக் கழுவிவிட்டு, பூத்துவாலையில் துடைத்துக் கொண்டு, சிறிய அளவிலான கருஞ்சிவப்பு நெற்றிப்பொட்டை ஒட்டிக்கொண்டு கீழே வந்தாள்.

கீழே வந்தவளின் கண்ணில் முதலில் பட்டது, அந்த மாடலிங் பெண்ணால் தன் முகத்தில் சிதறடிக்கப்பட்ட தண்ணீரை துடைத்துக் கொண்டிருந்த செண்பகம் அக்கா தான்.

பூனை நடையிட்டு அவரின் அருகே சென்று மென்மையான குரலில் "அக்கா அவர் வந்துட்டாரா?" என்று அவனது அலுவலக அறையைப் பார்த்தபடி வினவினாள்.

"அவர்னா யாரு மலர்ம்மா?"

"அக்கா விளையாடாதிங்க... வந்துட்டாரா இல்லேயா?"

வாய் வரை வந்த வார்த்தைகளை தொண்டைக்குழியில் விழுங்கிக் கொண்டு "இன்னும் வரலே" என்றபின் தான் மலருக்கு மூச்சே வந்தது.

ஆனால் அதற்குள் அடுத்த பதற்றம்... "அக்கா இன்னைக்கு வந்தாங்களே!!! அவரோட ஃப்ரெண்டு அவங்க பேர் என்னனு தெரியுமா? எனக்கு தெரியாது... அவர் வந்ததும் 'உங்க ஃப்ரெண்டு வந்தாங்க'னு மொட்டையா சொன்னா கோபிச்சுப்பார்... அவங்களும் ரெண்டு வார்த்தை பேசுறதுக்குள்ள கோபமா போயிட்டாங்க..." என்று புலம்பிட,

செண்பகம் அவளை பரிதாபமாகப் பார்த்தார். 'என்ன பெண்ணிவள்!!! அவள் இல்லத்தில் அவளை அவமதித்தவளை முகத்திற்கு நேராக திட்டமுடியாவிட்டாலும், தன் கணவரிடம் கூறி கண்டிக்க வேணும் செய்ய வேண்டாமா!!!' என்று நினைத்துக் கொண்டு,

"மலர்... நீ ஏன் விக்ரம் தம்பிய பாத்து பயப்படுறே... உன் கணவர் தானே பயத்தை விடுத்து உரிமையாகப் பழகு... அந்த பொண்ணு என்ன செய்தாள்னு சொல்லு... அவ சொல்லிட்டு போற மாதிரிலாம் தம்பி உன்னை ஒன்னும் அடிச்சிடமாட்டார்... அவ பேர் கேட்டேல! அவ பெயர் அக்ஸரா" என்று பதில் கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றார்.

வழக்கத்தை விட தாமதமாக வந்திருந்தான் அவளது இல்லாளன். உள்ளே நுழையும் போதே இறுக்கமாக இருந்தது அவன் முகம். அதனைக் கண்டு அச்சம் கொண்டவள் அதன்பின் இரவு உணவு முடித்து அறைக்குள் நுழையும் வரை அவனது முகத்தை நிமிர்ந்தும் பார்த்திடவில்லை. இதோ அவள் அஞ்சிய இரவும், அவனது அறையும்....

அவளாகவே தன் அறையில் வந்து நிற்பதைக் கண்ட விக்ரம், சற்று அதிசயித்தாலும், தானாக வாய் திறந்து ஏதேனும் கூறிகிறாளா? அல்லது கேட்கிறாளா? என்று காத்திருந்து பார்த்தான்...

மலரோ ஒரு கப் பாலை அவனருகே வைத்துவிட்டு, தன்னதை எடுத்துக்கொண்டு சாய்விருக்கையில் சென்று அமர்ந்தாள். அவளது புலனத்திற்கு குறுஞ்செய்தி வர எடுத்துப் பார்த்தவளுக்கு இப்போது பேரதிர்ச்சி.

மாலை தன்னை அவமதித்துச் சென்ற மாடலிங் பெண் அக்ஸராவுடன், தன் கணவன் மருத்துவமனை வந்திருந்ததாக வைரல் வீடியோ வெளியாகி இருந்தது. அந்த செய்தியை மலருக்கு அனுப்பி வைத்தது அவள் அன்பனே!

-தொடரும்.​