• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அத்தியாயம் 18

நித்திலம்NMR

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
231
20
28
Netherlands
தன் புலனத்திற்கு வந்த குறுந்தகவலை எடுத்துப் பார்த்த மலருக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. மாலை தன்னை அவமதித்துச் சென்ற மாடலிங் பெண் அக்ஸராவுடன், தன் கணவன் மருத்துவமனை வந்திருந்ததாக வைரல் வீடியோ வெளியாகி இருந்தது. அந்த செய்தியை மலருக்கு அனுப்பி வைத்தது அவள் அன்பனே!

மீடியாவில் இருப்பவற்களுக்கு இது சகஜமே!!! அதுவும் இப்போது ட்ரெண்டில் இல்லாமல் போனாலும், முன்னால் மாடல் என்ற முறையில் பேரும் புகழும் பெற்றிருந்த விக்ரம் பார்த்திபன் இன்டர்நேஷனல் மாடலுடன் சுற்றுவது என்றால் விட்டுவைப்பார்களா என்ன?

கண், காது, மூக்கு என அனைத்தும் வைத்து ஜோடித்து இருவரையும் பற்றிய கிசுகிசு தகவல்கள் பல வெளியாகி இருந்தது. அதிலும் வீடியோவிற்கு கீழே 'மீண்டும் இணைகிறதா இந்த ஜோடி?' என்று கொட்டை எழுத்தில் போட்டுவிட்டு, உள்ளே மீண்டும் மாடலிங்கில் கால் பதிக்க வருகிறாரா விக்ரம்? என தலைப்பிற்கும் கண்டென்டிற்கும் சம்பந்தமே இல்லா பேச்சுகள் வேறு...

மலருக்கு அனைத்தையும் பார்க்க பார்க்கக் கோபம் அதிகமாகிட, தன் கைபேசியை சாய்விருக்கையில் வீசி எறிந்துவிட்டு குளியலறை புகுந்தாள். கண்கள் கலங்கிட எதற்கிந்த அழுகை? அவ்வளவு கோழையாகிவிட்டேனா நான்? என தனக்குத் தானே வினா எழுப்பிப் பார்த்தாள். எதற்கும் பதில் கிடைக்கவில்லை.

கண்களைத் துடைத்துக் கொண்டு, வெளியே வர விக்ரம் படுக்கையின் பின்பக்கம் வசதியாக சாய்ந்து அமர்ந்து தனக்கும் இந்த செய்திக்கும் துளியும் சம்மந்தம் இல்லை என்பது போல் கைகளை கட்டிக்கொண்டு கண்களை மூடிப் படுத்திருந்தான். அதில் இன்னும் கொஞ்சம் கோபம் கூடிட, மீண்டும் குளிலறை நுழைந்தவள், மக்கில் தண்ணீர் எடுத்து வந்து அவன் முகத்தில் வாரியிறைத்தாள்.

இதனை சற்றும் எதிர்பார்க்காதவன் ஒருநொடி அதிர்ந்து, பின் தன்னை அமைதிப்டுத்திக் கொண்டு, முகத்தில் வடிந்த தண்ணீரை கைகளால் வலித்து அவள் மேல் உதறினான். அப்போது அந்த நொடி அவன் இதழ்கடை ஓரத்தில் சிறு புன்னகை வந்து சென்றது போல் கூடத் தோன்றியது மலருக்கு.

அதனைக் கண்டு வெறுப்புற்றவள், மக்கை தூக்கி எறிந்துவிட்டு எதுவும் பேசாமல் சாய்விருக்கைக்குச் சென்று படுத்துக்கொண்டாள். 'இவர் ஏன் அக்ஸராவை ஹாஸ்பிட்டல் அழைத்துச் செல்ல வேண்டும்!!! என்ன நடந்தது என்று ஏன் என்னிடம் கேட்கவில்லை!!! என்னை காதலிப்பதாகக் காட்டிக் கொண்டு ஏன் அவளோடு சுற்ற வேண்டும்!!! நான் ஏன் இன்னும் இங்கே இருக்க வேண்டும்!!! என்று பல கேள்விகள் அவள் மனதில் அவனிடம் கேட்க விருப்பமின்றி உள்ளுக்குள்ளேயே உலன்று கொண்டிருந்தது.

திடீரென அவளை போர்வை ஒன்று தழுவிக்கொள்ள, அது அவனது வேலை என்று உணர்ந்தவள், அந்த கரிசனத்தை ஏற்கப் பிடிக்காமல் போர்வையை உதறிவிட்டாள். மீண்டும் ஒரு முறை அந்த வீம்புக்காரனும் போர்த்திவிட்டான். பெண்ணவளோ மீண்டும் உதறினாள்.

போர்வையை காதுவரை போர்த்திவிட்டு, காதருகே குனிந்து "நைட் AC குளிர்ல நடுங்கினா இந்த போர்வைக்கு பதிலா நான் தான் உன்னை தழுவியிருப்பேன்... அடுத்தமுறை போர்வைய உதறிவிடும்போது இதையும் மனசுல வெச்சுட்டு உதறிவிடு..." என்று மெல்லிய சிரிப்போடு கூறிச்சென்றான்.

'என்ன மாதிரி மனிதன் இவன்!!!' என்று அறுவறுப்புத் தோன்றிட, வேண்டாவெறுப்பாக முகத்தைத் திருப்பிக் கொண்டாள். எவ்வளவு முயன்றும் தூக்கம் துளிகூட இல்லை பெண்ணவளின் கண்களில்...

அதிகாலை விரைவாகவே எழுந்துகொண்டவள் அறையில் உறங்கிக்கொண்டிருக்கும் பனி(மலர்)யின் பகைவனை காணப்பிடிக்காமல், வெளிமாடத்தில் இடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து பனிப்பகைவனுக்காக காத்திருந்தாள். (பனிப்பகை- கதிரவன்)

வெகுநாட்களுக்குப் பின் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்த விக்ரமைப் பார்த்து அவனது அலார்ம் இன்று அவனை வென்றுவிட்ட களிப்பில் இன்பக் கூச்சலிட்டு எழுப்பியது. அதன் தலையில் தட்டி அடக்கிவிட்டு 'என் பனி அங்கே ஃஷோபால படுக்குற வரைக்கும் தான் உன்னோட இந்த கொண்டாட்டம் எல்லாம்... எப்போ என் பனி என் பக்கத்துல இந்த பெட்ல படுக்கிறாளோ அன்னைக்கே உன்னை.. ட்ஸ்யூம்...' என்று துப்பாக்கி போல் கையை வைத்து சுட்டுக் காண்பித்துவிட்டு, உற்சாகமாக எழுந்து பால்கனி சென்றான்.

பெண்ணவளின் அருகே சென்று நின்று சோர்வு முறித்தபடி, "குட் மார்னிங்..." என்றான். அதற்கு நறுமுகையவள் எந்த பதிலும் சொல்லாமல் எழுந்து உள்ளே சென்றுவிட்டாள். அதனைக் கண்டு மெல்லிய புன்னகையோடு தன் காலைப் பணிகளைத் தொடங்கினான்.

மலரோ அவனது அறையில் இருக்கப்பிடிக்காமல் தனதறையில் சென்று படுத்துக்கொண்டாள். எப்போதும் போல் தேநீரோடு உள்ளே நுழைந்தவன் அவள் உறங்குவதைக் கண்டு நிச்சயம் இரவு உறங்கியிருக்கமாட்டாள் என்று ஊகித்து, எழுப்பிவிட மனம் இல்லாமல் சைட் டேபிலில் இரண்டு கப்பையும் வைத்துவிட்டு அவள் அறையைவிட்டு வெளியேறினான்.

செண்பகத்தை அழைத்து "அக்கா... அவ தூங்கட்டும் எழுப்ப வேண்டாம்... இன்னைக்கு எங்கேயும் போக வேண்டாம்..." என்று கூறிவிட்டுச் செல்ல,

"தம்பி நீங்க இன்னு சாப்பிடலே" என்று அவர் நினைவுபடுத்த, சிரித்த முகமாக "பரவாயில்லே க்கா... அவ எழுந்ததும் அவளை மறக்காம சாப்பிட்டு டேப்லட் போட சொல்லுங்க..." என்று கூறிச்சென்றான்.

முன்பகலில் தூக்கம் கலைந்தவள் அருகில் இருக்கும் தேநீர் கோப்பைகளைக் கண்டு கோபம் கொண்டு, தூக்கி எறிந்து உடைக்கத் தோன்றிய போதும், அவர் மேலிருக்கும் கோபத்தை இதன் மேல் காண்பித்து என்னவாகப் போகிறது என்று நினைத்து தேநீரை சிங்க்-ல் ஊற்றிவிட்டு கப்பை வெறுமனே கழுவி வைத்தாள்.

என்ன செய்வது என்று தெரியாமல் சற்று நேரம் அமர்ந்திருந்தவள் பின் குளித்து முடித்து கீழே வந்தாள். செண்பகத்தின் கட்டாயத்தில் இரண்டு வாய் உண்டுவிட்டு மாத்திரை எடுத்துக்கொண்டாள். செண்பகம் அவளை நோட்டமிடுவது அப்பட்டமாகத் தெரிந்திட, அவரிடம் காண்பித்துக் கொள்ளவும் பிடிக்காமல் மீண்டும் தன் அறைக்குள் தஞ்சம் அடைந்தாள்.

'நேற்று வந்தவள் என்னைப் பற்றி என்ன சொல்லியிருப்பாள்!!! ஆனால் செண்பகம் அக்கா கூறியது போல் இவர் என்னை மிரட்டவும் இல்லை, திட்டவும் இல்லை... மாறாக என்றும் இல்லாமல் வெகு அமைதியாக அல்லாவா இருந்தார்! நான் கோபம் கொண்டு வெடித்திருந்தாலும் நிச்சயம் அதற்கும் அவர் கோபம் கொண்டிருக்க மாட்டார் போலவே!...' என்று சற்று நேரம் தன்னவனைப் பற்றி சிந்தித்தவள்,

பின் அக்ஸரா பற்றி சிந்திக்கத் தொடங்கினாள்... 'அவளுக்கு என்ன நேர்ந்திருக்கும்! எதற்கு மருத்துவமனை சென்றிருப்பாள்! நான் அவளை எதுவும் காயப்படுத்திவிட்டதாக கூறியிருப்பாளா! அப்படி இருந்தால் நிச்சயம் அவர் என்மேல் கேபமாகத் தான் இருந்திருக்க வேண்டும். ஆனால் காலை வணக்கமும் தேநீரும் அப்படிக் கூறவில்லையே! ஏதோ ஒன்றை என்னிடம் கண்டு கொண்டது போல் அல்லவா இருந்தது... அது என்னவாக இருக்கும்!!!'

'இருவருக்குள்ளும் ஏதேனும் தவறு நடந்திருந்தாள் அதனை இவர் மூடி மறைக்கத் தானே நினைக்க வேண்டும்! ஏன் என்னிடம் பகிர்ந்து கொண்டார்! நான் அவர்கள் இருவரையும் பற்றி எதுவும் கேட்பேன் என்று நினைத்தாரா? அதிலும் அவளைப் பற்றி எனக்கு என்ன தெரிந்து கொள்ள வேண்டிக்கிடக்கிறது!!'என்று சலிப்பாக நினைத்தவள், இனி அவளைப் பற்றி மட்டுமல்ல, விக்ரமைப் பற்றியும் சிந்திக்கக் கூடாது என்று முடிவெடுத்துக் கொண்டாள்.

சற்று நேரத்தில் செண்பகம் வந்து கதவைத் தட்ட, எழுந்து சென்று திறந்தவள், அவர் நீட்டிய இன்டர்காமை கையில் வாங்கியபடி "யார்?" என்றாள்.

செண்பகமோ பதில் கூறாமல் "பேசு" என்று கண்ஜாடை செய்திட, காதில் வைத்து "ஹலோ" என்றாள்.

"நான் அக்ஸரா"

அடுத்த நிமிடம் மலரின் உடல் விரைத்தது. பேசப் பிடிக்காவிட்டாலும் வளர்ப்பு முறையின் காரணமாக, கம்பீரக் குரலில் "சொல்லுங்க" என்றாள்.

"நேத்து நான் உங்ககிட்ட நடந்துக்கட்ட முறை ரெம்பவே தவறானது... அதுக்கு மொதோ சாரி கேட்டுக்கிறேன்... ஐ ஆம் சோ சாரி... அப்பறம் நான் உங்ககிட்ட சாரி கேட்டுட்டேன்னு விக்ரம்கிட்ட சொல்லிடுங்க ப்ளீஸ்..."

விக்கி என்ற அழைப்பு விக்ரம் என்று மாறியிருப்பதை காதில் கேட்ட போதும் மனதில் பதியவில்லை.

"முடிந்தால் மறக்க முயற்சிக்கிறேன்... இன்னைக்கு பேசினேன்றதுக்காக இனி எப்போதும் பேச ட்ரை பண்ணாதிங்க... எல்லா நாளும் ஒரே மாதிரி இருக்கமாட்டேன்." என்று கூறி அழைப்பை துண்டித்திருந்தாள்.

செண்பகமோ ஏதோ ஒன்றை எதிர்பார்த்து மலரின் முகத்தை பார்த்திருக்க, அதனை உணர்ந்தவள், "நேத்து அப்படி நடந்துகிட்டதுக்கு சாரி கேட்டாங்க... அவ்ளோ தான்" என்றாள்.

அவர் மீண்டும் ஒரு ஆழப்பார்வை பார்க்க, இப்போது அதற்கான அர்த்தம் அவளுக்கு மெய்யாகவே புரிந்திடவில்லை. செண்பகமோ தானாக புலம்புவது போல் "நேத்து அவமதிச்சவ தானா வந்து மன்னிப்புக் கேட்கிறாளாமா!!! நல்ல கதையா இருக்கே!" என்று கூறி மீண்டும் மலருக்கு யோசிக்கும் பணியை கொடுத்துவிட்டுச் சென்றார்.

அவரின் திட்டம் சரியாக வேலை செய்தது. 'அதானே என்ன நடந்திருக்கும்! ஏன் திடீர்னு சாரி கேட்கனும்! அதை விக்ரமிடம் சொல்லிவிடு என்றுவேறு ஏன் கூற வேண்டும்! அப்போ அவர் சொல்லி தான் சாரி கேட்கிறாளா? அவர் என்ன சொல்லியிருப்பார்? எப்படி சொல்லியிருப்பார்!!! வெறும் வாய்மொழி வார்த்தையாகவா? இல்லை......" என்று யோசித்தவளுக்கு ஏதோ ஒன்று பொறிதட்ட,

செண்பகத்தை அழைத்து "அக்கா... அந்த அக்ஸரா வீடு எங்கே இருக்கு?" என்று விசாரித்தாள்.

செண்பகத்திற்கோ கொஞ்சம் அதிர்ச்சி தான். 'விக்ரமை பற்றி யோசிப்பாள் என்று பார்த்தால் அக்ஸராவைப் பற்றியல்லவா சிந்தித்திருக்கிறாள்!!!' என்று நினைத்தபடி,

"அவ வீடு எங்கே இருந்தா நமக்கென்ன? இப்போ எதுக்கு தேவையில்லாம அதை கேட்குற?" என்று படபடத்தார்.

"நான் அவங்கள பாக்கனும்?"

"தொல்லை அதுவா விலகி போகும் போது நீ ஏன் வழிய போயி அதை பிடிச்சி வைக்க நெனைக்கிறே!!!" என்று கண்டித்தார்.

"அக்கா நான் அவங்ககிட்ட பேசனும்... அதுவும் அவருக்குத் தெரியாம...."

"அப்படி என்ன பேசிடப் போற? என் கணவர் வந்தாரா? உன்னை என்ன திட்டினார்? ஏன் திடீர்னு மன்னிப்புக்கேட்டே? அது தானே!" என்றிட மலர் அவருக்கு பதில் கூறாமல் அமைதியாக நின்றாள்.

"நீ மாடிக்கு முகம் கழுவ வந்தப்பவே தம்பி வந்திடுச்சி... நான் ஈரத்தை தொடச்சிட்டு இருக்கிறதைப் பார்த்து என்னனு கேட்கவும், நடந்ததை சொன்னேன். 'எனக்கு இந்த விஷயம் தெரிந்த மாதிரி மலர்கிட்ட காட்டிக்காதிங்க... அவ சொல்லும்போது நானே அவகிட்ட பேசிக்கிறேன்...' அப்படினு சொல்லிட்டு விறுவிறுனு வெளியேறி போயிட்டாப்ள... கண்டிப்பா அந்த அக்ஸராவுக்கு தம்பிக்கிட்ட இருந்து நல்ல டோஸ் கெடச்சிருக்கும். அதான் இப்போ சாரி கேட்டிருக்கா... நீ யாரையும் போய் பாக்க வேண்டாம் டா..." என்று அவருக்குத் தெரிந்த அனைத்தையும் கூறி முடித்து மலரை தடுக்கப் பார்த்தார். ஆனால் அவருக்குத் தான் தெரியாத விஷயமும் நடந்திருக்கிறதே... அக்ஸராவை விக்ரம் ஏன் மருத்துவமனை அழைத்துச் சென்றான் என்று மலருக்குத் தெரிய வேண்டுமே...

"இப்போ நீங்க துணைக்கி வரிங்களா! இல்லே நானா போகட்டுமா!" என்றிட

ஒரு நிமிடம் யோசித்தவர், "சரி வரேன்" என்று நகர நினைத்தார். கையோடு அவரை இழுத்துக் கொண்டு மகிழுந்திற்கு அழைத்துச் சென்றாள்.

"மலர் ஒரு நிமிஷம்... என்னை ஏன் இப்படி இழுத்துட்டு போறே!!!" என்று மேலும் பதறியபடி வினவினார். அவருடைய எண்ணமோ விக்ரமிடம் தெரிவிக்க வேண்டும் என்பது தான். செல்லும் இடத்தில் ஏதேனும் தகராறு ஏற்பட்டால் விக்ரமின் கோபத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும்... அதுவும் இல்லாமல் மலருக்கு ஏதேனும் என்றால் செண்பகத்தாலுமே தான் தாங்கிக் கொள்ள முடியாதே!

பின்னிருக்கையில் இருவரும் ஏறி அமர வாகன ஓட்டி விரைந்து வந்தான். "உங்களுக்கு ஒரு நிமிஷ அவகாசம் கொடுத்தாலும் உங்க உடன்பிறவா தம்பி என்னவருக்கு தகவல் தெரிவிச்சிடுவிங்க... நிச்சயமா அவருக்கு தெரியாம தான் பார்க்க போறோம்... அவர்கிட்ட எப்போ சொல்லனுமோ அப்போ நான் சொல்லிக்கிறேன்..." என்றவள் டிரைவரைப் பார்த்து "சக்தி அண்ணா உங்களுக்கும் புரியுது தானே! எங்களை எங்கே அழச்சிட்டு போனிங்கனு உங்க முதலாளிக்கு தெரிஞ்சது அப்பறம் நான் என்ன பண்ணுவேனு எனக்கே தெரியாது" என்று இருவரையும் அதட்டினாள்.

இருவரும் சம்மதிக்க மகிழுந்து அக்ஸராவின் இல்லம் நோக்கி சென்றது. அடுக்குமாடி குடியிருப்பில் அவள் மட்டும் தனியாகத் தங்கியிருந்தாள். வேலைக்கு ஒரு பெண்மணி மட்டும் இருக்க, அக்ஸரா அவளது அறையில் இருப்பதாகக் கூறினார் அந்த பெண்மணி.

"செண்பக க்கா... நீங்க இங்கேயே இருங்க நான் போயி பார்த்துட்டு வரேன்." என்று கூறி பணிப் பெண்ணின் பின்னால் சென்றாள்.

படுக்கையில் படுத்திருந்த அக்ஸராவோ மலரைக் கண்டவுடன் அவசரமாக போர்வை கொண்டு தன்னை மூடிக்கொள்ள, மலரின் சந்தேகம் வழுத்தது.

"அம்மா உங்க ஃப்ரெண்டு... உங்களை பாக்க வந்ததா சொன்னாங்க.. அதான் அழச்சிட்டு வந்தேன்" என்றிட

"ம்ம்ம்... நீ போ" என்று அவரை அனுப்பி வைத்தாள் அக்ஸரா.

மலரின் நுழைக்கும் பார்வையை எதிர்க்கொள்ள முடியாமல், தலை குனிந்தவள், "அதான் ஃபோன்ல சாரி சொல்லிட்டேனே!!" என்றாள்.

மலர் எந்த பதிலும் சொல்லாமல் சட்டென அக்ஸரா முடியிருந்த போர்வையை விலக்கிவிட அவளது கால்கள் சிவந்திருப்பது கண்டு அதிர்ந்தாள்.

"இதுக்கு காரணம் விக்ரம் தானா?" என்று கோபம் கொண்டு கேட்டாள் அவன் மனையாள்.

அக்ஸராவோ அவளது கேள்வியைக் கேட்டு பதில் சொல்ல வாயெழாமல் அதிர்ச்சியில் உறைந்தாள். அதுவும் ஒரு நொடி தான், அதற்குள் தன்னை சுதாரித்துக் கொண்டு, "விக்ரமை என்னனு நெனச்சே! ஈவு இரக்கம் இல்லா மிருகம்ன்னா?" என்று தன் குற்றவுணர்வு நீங்கி எதிரில் நிற்பவளை புழுவைப் போல் பார்த்தாள்.

"அப்போ இது என்ன? அவர் ஏன் உன்னை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போகனும்? நீ எப்படி என்கிட்ட சாரி கேட்டே!!" என்று குழப்பமாக விடை தெரிந்து கொள்ளும் ஆவலில் வினவினாள்.

"விக்ரம் நேத்து வந்தான் தான். அவன் இருந்த கோபத்துக்கு இந்த காயம் என் முகத்துல ஏற்பட வேண்டியது... தலைக்கு வந்தது தலைபாகையோடு போன கதையா தப்பிச்சிருக்கேன்."

மலருக்கு மேலும் மேலும் குழப்பம் கூடிக்கொண்டே தான் போனது. அது அவளது முகத்தில் தெரிய, அக்ஸரா அனைத்தையும் கூறத் தொடங்கினாள்.



-தொடரும்.​