• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அத்தியாயம் 2

Karthika Chakkaravarthi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 17, 2025
4
5
3
Tenkasi

அத்தியாயம் 2​

“மித்ரா என்னப்பா திடீர்னு வந்து நிக்கிற?” தன்னிடம் ஒருவார்த்தை கூட சொல்லாமல் மகன் திடீரென வந்து நிற்பதைக் கண்டு ஆச்சர்யமாகக் கேட்டார் பராசரர்.​

“வேலை செய்யும் இடத்தில் பிரச்சனையாகி, வேலை போயிடுச்சு. கொஞ்ச நாள் ரிலாக்ஸ்ஸா இருக்கலாம் னு நினைச்சு வந்தேன். ஏன் இங்க நான் வரக்கூடாதா?” கபடமாகக் கேட்டான்.​

“என் தம்பி மித்ரனா இது? எனக்கு சுத்தமா அடையாளம் தெரியலையே. தோள்பட்டை அகண்டு, உசரம் இன்னும் ஒரு அடி அதிகமாகி, மீசை தாடியெல்லாம் வைச்சு ராஜாவாட்டம் இருக்கானே. கலர் கூட கொஞ்சம் அதிகமான மாதிரி தெரியுது. பார்க்க கண்ணு இரண்டு போதலையே. மேனகா பார்த்தா ரொம்ப சந்தோஷப்படுவா.” சந்தோஷமாய் சொன்னார் ரேணுகா.​

“தம்பி, என்னப்பா உடம்பெல்லாம் சிராய்ப்பு காயமா இருக்கு. என்னாச்சு?” என்று கேட்டபடி அருந்ததி வந்து அவன் கரம் பிடிக்க, மனதின் வேகம் அனைத்தையும் தாங்கி தன் கரத்தை உதறினான் மித்ரன். அதில் இரண்டடி பின்னால் வந்து நின்றார் அருந்ததி. ரேணுகாவிற்கு உள்ளுக்குள் சந்தோஷம் என்றாலும் வெளியே தமக்கையை தாங்கிப் பிடிப்பது போல் பாவனை செய்தார்.​

“தம்பி என்னய்யா, என்னாச்சு சாமி. என்ன காயம்?” என கேட்டுக்கொண்டே பராசரர் அருகே வர, “இத்தனை வருஷம் கழிச்சு ஊர்ப்பக்கம் வந்தவனை வான்னு சொல்லாம ஆளாளுக்கு கேள்வியா கேட்டு சாவடிக்கிறீங்க. கொஞ்ச நாள் நிம்மதியா இருக்கலாம் னு வந்தேன். அதில் யாருக்கும் உடன்பாடு இல்லை போல இருக்கே.” வேண்டுமென்றே கேட்டான்.​

“என்ன சாமி பேச்சு இதெல்லாம். இது உன் வீடு. உன் வீட்டுக்கு உன்னை யார் வரவேற்கணும் னு நினைக்கிற. இத்தனை வருஷமா உன் கால் இந்த ஊர் மண்ணில் விழாதான்னு அக்கா இரண்டு பேரும் தவமா தவம் இருக்கோம். வந்ததும் வராததுமா இப்படி பேசுற.” அருந்ததி குறைபட, “எதுக்காக என்னை ஆவலா எதிர்பார்த்து இருப்பீங்கன்னு எனக்குத் தெரியாதா? நீங்க பெத்து வைச்சிருக்கிற இரத்தினத்தில் ஒருத்தரை என் தலையில் கட்ட தானே இந்தக் காத்திருப்பு.” படுநக்கலாகக் கேட்டான்.​

தன் தம்பிக்கு என்னவாயிற்று, வேலை செய்யும் இடத்தில் பெரிய பிரச்சனையாக இருக்குமோ என்கிற யோசனையுடன், “அதெல்லாம் இரண்டாம் பட்சம் தான் தம்பி. நீ நாங்க தூக்கி வளர்த்த பிள்ளை. எங்க பொண்ணுங்களை விடவும் நீ தான் எங்களுக்கு முதல். உன்னை இத்தனை வருஷமா நேரில் பார்க்காமல் கண்ணு இரண்டும் பூத்துப் போச்சு.” உருக்கமாகச் சொன்னார் அருந்ததி.​

“என்ன தான் ஊட்டி ஊட்டி வளர்த்தாலும் அக்கா அம்மாவாகிட முடியாது. அக்கா அக்கா தான், அம்மா அம்மா தான். அதனால் இந்த செல்லம் கொஞ்சி பேசுற வேலை எல்லாம் என்கிட்ட வேண்டாம்.” கடுமையாகவே சொன்னான்.​

“நாங்க ஏதாவது தப்பு பண்ணிட்டோமா ஐயா, எங்க மேல கோவமா இருக்கியா சாமி.” பராசரர் கேட்க, “கோபமா கொலைவெறியில் இருக்கேன்.” என்று கத்தத் தோன்றிய மனதை சிரமப்பட்டு அடக்கியவன்,​

“அவ்வளவு தூரத்தில் இருந்து டிராவல் பண்ணி வந்தது டயர்டா இருக்கு. என் ரூம் சுத்தம் பண்ணீங்கன்னா நான் போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுப்பேன்.” என்றான் எங்கோ பார்த்தபடி.​

“என்ன தம்பி, எங்களை இப்படித்தான் நினைச்சுக்கிட்டு இருக்கியா? உன்னோட ரூம் நீ இங்கிருந்து போகும் போது எப்படி இருந்ததோ, இப்ப வரை அப்படித்தான் இருக்கு.” என்றார் அருந்ததி.​

“இதை என்னை நம்பச் சொல்றீங்களா?” விருட்டென்று கேட்டு வைத்தான். அவன் முகத்தில் இருந்த கோபமும் வேகமும் கட்டுவிரியின் பாம்பை நினைவுபடுத்த பயத்தில் நெஞ்சில் கரம் வைத்தார் அருந்ததி.​

சில நாள்கள் முன்பு வரை காணொளி அழைப்பில் நன்றாகப் பேசியவனுக்கு திடீரென என்ன ஆனது என்கிற யோசனையுடன் அவன் அறையைத் திறந்து காட்டினார் ரேணுகா. தன் பைகளுடன் அறைக்குள் சென்றவன் தன்னைப் பின்தொடரப் பார்த்த தமக்கையின் முகத்தில் அடிப்பது போல் கதவை அறைந்து சாத்தினான்.​

பேயறைந்தது போல் நின்றார் ரேணுகா. “தம்பி தான் கோபத்தில் இருக்கான்னு தெரியுதே. அப்புறம் எதுக்காக வம்படியா போய் முகத்தை காட்டுற. வா என்கூட.” என்று மகளை அழைத்துக்கொண்டு கூடத்திற்கு வந்த பராசரர் தன் இரு மகள்களுக்குமாக சேர்த்து,​

“அவன் ஏதோ கஷ்டத்தில் இருக்கான்னு தெரியுது. அதெல்லாம் சரியாகி அவன் சாதாரணமா பேசும் வரை கொஞ்சம் பொறுமையா இருங்க. அவன் எதுக்காக இந்த வீட்டை விட்டு போனான்னு தெரியும் தானே. அதனால் நானோ இல்லை அவனோ கல்யாணத்தைப் பத்தி பேசும் வரை நீங்க அமைதியாக இருக்கணும். உங்க பொண்ணுங்களையும் அவன்கிட்ட பார்த்து பேச சொல்லுங்க.​

நம்ம குலசாமி புண்ணியம் அவன் இப்ப இங்க வந்து சேர்ந்தது. நீங்க ஏதாவது ஏடாகூடமா பண்ணி அவன் மறுபடியும் கோச்சுக்கிட்டு போனான் அப்புறம் நான் மனுஷனாவே இருக்க மாட்டேன். பார்த்து நடந்துக்கோங்க.” என்றுவிட்டு நகர்ந்தார் பராசரர்.​

அறைக்குள் மெத்தையில் அமர்ந்திருந்த மித்ரன் செல்போன் திரையை ஒளிர்விக்க அதில் ஐந்து பேர் அடங்கிய குடும்பப் புகைப்படம் இருந்தது. அவர்களைப் பார்க்க பார்க்க இவன் கோபம் பன்மடங்காகியது.​

“உங்களோட அநியாயமான சாவுக்கு இங்க இருக்கும் ஒவ்வொருத்தரும் பதில் சொல்லணும். என்ன தான் இவங்க எனக்கு நெருக்கமானவங்களா இருந்தாலும் செஞ்ச பாவம் இல்லன்னு ஆகிடாது. நான் நினைச்சு வந்த காரியம் நல்லபடியா நடந்து முடியும் வரை நீங்க தான் எனக்குத் துணையா இருக்கணும்.” என்று மனதோடு நினைத்துக்கொண்டான்.​

குத்துவிளக்கு பூஜை முடிந்து ஒரு கையில் எண்ணைய் இருந்த விளக்கு, மற்றொரு கையில் பூஜைப் பொருள்கள் இருந்த தாம்பூலம் என வந்து சேர்ந்தனர் அகல்யா, மேனகா இருவரும். மேனகா தன் தாய்க்கும், தாத்தாவுக்கும் விபூதியைக் கொடுக்க, அகல்யா தன் தாய்க்கு திருவிளக்கிற்கு அர்ச்சனை செய்த குங்குமத்தைக் கொடுத்தாள்.​

அருந்ததி பயபக்தியுடன் அதை எடுத்து தன்னுடைய நெற்றி, வகிடு, தாலிக்கொடி அனைத்திலும் வைத்துக்கொள்ள, “வயித்துப்பிள்ளையோட உன்னை விரட்டி விட்ட புருஷனுக்கே இத்தனை பக்தின்னா, உனக்கு மட்டும் கொஞ்சம் நல்ல புருஷன் கிடைச்சிருந்தாலும்.” வழக்கமான நக்கல் பேச்சு பேசினார் ரேணுகா.​

“சித்தி நான் பலமுறைசொல்லிட்டேன். உங்க அக்காவை நீங்க பேசணும் னா நான் இல்லாதப்ப பேசுங்க. நான் இருக்கும் போது என்அம்மா மனசு நோகுற மாதிரி பேசினா நான் திரும்ப பேசுவேன். அப்புறம் சின்னப்பொண்ணு பேசிட்டாளேன்னு மனசு வருத்தப்படக்கூடாது.” வேகம் மற்றும் கோபத்துடன் சொன்னாள் அகல்யா.​

“சத்தத்தை குறை அகல்யா. மித்ரன் வந்திருக்கான். நல்லாத் தூங்கிட்டு இருக்கான். அவன் முன்னாடி இந்த வீட்டில் சண்டை வரவே கூடாதுன்னு தாத்தா சொல்லி இருக்கார்.” அருந்ததி சொல்ல, “என்னது மாமா வந்திருக்காரா?” அதீத சந்தோஷத்தில் அவன் அறையை நோக்கி நடந்தாள் அகல்யா.​

“ஏய் அவன் ஏதோ கோபமா இருக்கான் டி. நீயே போய் வம்பை விலைக்கு வாங்கிடாத.” அவர் சொல்லி முடிப்பதற்குள் கதவைத் திறந்திருந்தாள். பழங்காலத்து கதவு திறக்கும் போது சற்றே அதிக சப்தம் எழுப்பியது.​

அந்த சத்தத்தில் அரை உறக்கம் உறங்கிக்கொண்டிருந்தவன் வேகமாக எழுந்து அமர்ந்தான். கதவைத் திறந்ததும் கண்ணாளன் தரிசனம் காணக்கிடைக்கும் என்று நினைத்த அகல்யா, அறைக்குள் நிலவும் மையிருட்டு தடையாக இருக்கவும் சலித்துக்கொண்டு, மின்விளக்கு இணைப்பு இருக்கும் இடத்தை நோக்கி நடக்க, அதே சமயம் மித்ரனும் முன்னால் நடந்து வர இருவரும் ஒருவர் மீது ஒருவர் மோதி நின்றனர்.​

மேல்சட்டை இல்லாத ஆடவனின் இயற்கையான உடல்சூட்டை உணர்ந்ததும் படபடப்பானவள் இரண்டடி பின்னால் நடந்து, “மாமா” என்று அழைத்தாள். அடுத்த கணம் அறைக்குள் வெளிச்சம் வந்தது மித்ரன் கரத்தால்.​

கண் முன் இருப்பவனை கண்கள் குளிர தரிசித்து முடித்தவள் மாமா என்று அவன் கரத்தைப் பிடிக்கப் போக, “அறிவில்ல உனக்கு. படிச்ச பொண்ணு தானே நீ. வயசுப்பையன் இருக்கும் ரூமுக்கு நீ பாட்டுக்கு கதவைக் கூட தட்டாம வர. நான் கதவை உள்பக்கம் தாழ்ப்பாள் போட்டு வைச்சிருந்தேனே. எப்படி திறந்த நீ.” கோபமாகக் கேட்டான்.​

அவன் கோபத்தில் ஒரு நொடி அரண்டவள் அதன்பிறகு தன்னைச் சமாளித்துக்கொண்டு, “இந்தக் கதவு சரியில்ல. தாழ்ப்பாள் வேலை செய்யாது.” வேகமாகச் சொன்னாள்.​

“தெரிஞ்சும் இதை சரிபண்ணாம இருந்தா என்ன அர்த்தம். என்ன இதைப் பயன்படுத்தி என் மேல் வேண்டாத பழி போட்டு என்னைக் கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறியா?” தன்போக்கில் பேசினான்.​

“மாமா என்னாச்சு உங்களுக்கு. எதுக்காக கண்டதையும் பேசுறீங்க. நான் எதுக்காக வேண்டாத பழி போட்டு உங்களைக் கல்யாணம் பண்ணிக்கணும். போன முறை வீடியோ காலில் பேசும் போது, என்னைத் தான் கல்யாணம் பண்ணிக்கப் போறதா சொன்னீங்களே. ஊர் திருவிழாவுக்கு லீவ் கிடைக்காது. முடிஞ்சதும் வந்து மேனகாவை சமாதானம் செஞ்சுட்டு நம்ம நிச்சயத்துக்கு நாள் குறிக்கலாம் னு சொன்னீங்களே.” என்க, கண்களை அழுந்த மூடி தன்னை நிதானித்தவன்,​

“ஒவ்வொரு நாளும் பூமி சுத்துற வேகத்தில் கூட மாற்றம் வருது. அப்படி இருக்க மனுஷன் மனசில் மாற்றம் வராதா? அன்னைக்கு ஏதோ ஒரு குழப்பத்தில் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டேன். இப்ப எனக்கு அந்த நினைப்பு சுத்தமா இல்ல. தேவையில்லாம ஆசையை வளர்த்துக்காத.” என்றான்.​

“ரேணுகா சித்தி ஏதாவது பேசுனாங்களா? மேனகாவுக்காக யோசிக்கிறீங்களா?” கேட்டுக்கொண்டே அவன் அருகே வரப்பார்க்க, “ஏய் இப்படி கிட்ட வந்து பேசுற பழக்கத்தை இன்னையோட விட்டுடு. எனக்கு இது எல்லாம் பிடிக்கல.” முகத்தை சுளித்துக்கொண்டு சொன்னான்.​

அவன் அத்தனை சொன்ன பின்னாலும் சிரித்த முகம் சற்றும் மாறாமல், “மாமா, நீங்க என் தாய்மாமா. உங்க பக்கத்தில் நான் வரக்கூடாதுன்னு சொல்றதுக்கு யாருக்கும் உரிமை இல்லை உங்களுக்கு உட்பட.” அவன் கண்ணைப் பார்த்து அசராமல் சொன்னாள் அகல்யா.​

அவள் உரிமையாய் பேச பேச எதிரே நிற்பவனுக்கு கோபம் கட்டுக்கடங்காமல் வந்து கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளாமல் சிந்தாமணியைப் போல் சிரித்த முகமாய் நின்று பல வருடங்களாக கிடைக்காத அவன் நிஜ தரிசனத்தை அனுபவித்தாள் அகல்யா.​

“மாமா உங்களுக்கு முதுகில் ஒரு பெரிய மச்சம் இருக்கும் தானே.” என்றபடி அவள் அவனுக்குப் பின்பக்கம் வரப்பார்க்க, அப்போது தான் அவ்வளவு நேரம் ஒரு வயதுப்பெண்ணின் முன்பு மேல்சட்டை இன்றி நின்றிருக்கிறோம் என்பது புரிய வேகமாக கொடியில் கிடந்த துண்டை எடுத்து சுற்றிக்கொண்டவன், “அறிவில்லை உனக்கு. நான் என்ன பொருட்காட்சியா சுத்திப் பார்க்க. நேரங்கெட்ட நேரத்தில் என் ரூமுக்குள்ள வந்ததே தப்பு. வந்ததும் இல்லாம இப்படி வெறிச்சுப் பார்த்துக்கிட்டு இருக்க. முன்னப் பின்ன ஆம்பிளையைப் பார்த்ததே இல்லையா?” சற்றே கோபமாகக் கேட்டான். வந்த வேலையை ஆரம்பிக்கச் சொல்லி தூண்டி விட்ட மனசாட்சியின் குரலுக்கு கட்டுப்பட்டு அப்படிச் சொன்னான்.​

“ஏன் மாமா. ஒரு ஆறு, ஏழு வருஷம் நீங்க இந்த வீட்டுக்குள்ள வராதது உண்மை தான். அதுக்காக எல்லாத்தையும் மறந்திடுவீங்களா? இதுக்கு முன்னாடி நீங்க இந்த வீட்டு ஆளுங்க முன்னாடி இப்படி நின்னதே இல்லையா? இல்ல நான் தான் உங்களை இப்படிப் பார்த்தது இல்லையா? பட்டணம் போய் ரொம்பத் தான்கெட்டுப்போயிட்டீங்க.” சிரிப்போடு அவள் சொல்ல, “அக்கா” என்று கத்தினான் மித்ரன்.​

மகள் தம்பியின் அறைக்குச் சென்ற நேரத்தில் இருந்து என்ன நடக்குமோ என்கிற பயத்தில் இருந்த அருந்ததி இந்தக் குரல் கேட்டதும் அடித்து பிடித்து அவன்அறைக்குச் சென்றார்.​

“இவளுக்கு கொஞ்சம் புத்தி சொல்லுங்க. அப்படியே நான் இவளைக் கல்யாணம் பண்ணிக்கிறது நடக்காதுங்கிறதையும் இவளுக்குப் புரிய வைங்க.” என்றான்.​

“மேனகாவைக் கல்யாணம் பண்ணிக்கப் போறியா தம்பி?” ஆர்வமாகத் தான் கேட்டார்.​

“சந்நியாசம் போகப் போறேன் போதுமா?” கத்தி சொன்னவன், “அம்மாவுக்கு பொண்ணே பரவாயில்லை போல இருக்கு.” என்று சத்தமில்லாமல் சொன்னான்.​

பராசரர் வர, “நாளைக்கே ஆசாரியை வரச்சொல்லி கதவு, ஜன்னல், எல்லாத்தையும் சரிபண்ணுங்க. நான் இங்க இருக்கிற நாள் வரை எனக்கு பிரைவசி முக்கியம். இப்ப எல்லாரும் வெளியே போங்க.” என்றான்.​

“பிரைவசி தானே நான் கொடுத்துட்டு தான் மறுவேலை பார்ப்பேன்.” என்று தன்னோடு சிரித்துக்கொண்டாள் அகல்யா.​

அவளைத் தன் வட்டத்தை விட்டு விலக்கியே தீர்வேன் என்று அடம்பிடிக்கும் மித்ரன் ஒருபக்கம், அவனைச் சுற்றி தானே வட்டமாக மாறி நிற்கும் அகல்யா ஒருபக்கம் என விதி தன் விளையாட்டை இனிதாய் துவங்கியது.​