• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
ஆதவனின் வருகைக்கு முன்னரே ஆர்பறிக்கும் குருவிகளின் சத்தத்தில் புத்துணர்வோடு எழுந்தவள், என்றும் இல்லா வேகத்தோடு தலைகுளித்து அடுக்களை நுழைந்தாள்.

அலார்ம் அடிப்பதற்கு முன்பாகவே தேநீரோடு மீண்டும் அறைக்குள் நுழைய, அசந்து உறங்கிக் கொண்டிருப்பவை எப்படி எழுப்புவது? என்ன சொல்லி அழைப்பது? என்று யோசித்தபடி மஞ்சம் அருகே தாடையைத் தடவி யோசித்தபடி நின்றிருந்தாள்.

அதற்குள் அலார்ம் ஒலிக்கத் தொடங்க, ஓங்கி அதன் தலையில் கொட்டினாள். "நான் தான் வந்துட்டேன்ல... அதுக்குள்ள உன்னை யார் கத்த சொன்னது" என்று மெல்லிய குரலில் அதனுடன் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தவளை கண் விழித்துப் பார்த்த விக்ரம், அசந்து தான் போனான்.

ஈரத்தலையை கொண்டையிட்டு கட்டியும், அதனுள் அடங்காமல் காதோரம் கற்றை முடி சுருண்டு நிற்க, மஞ்சள் பூசிய வட்ட முகத்தில் ஒற்றை கல் கோபுரப் பொட்டும், சேலைத்தலைப்பு சொருகியிருந்த இடையில் கை வைத்தபடி மேசைக் கடிகாரத்துடன் சண்டையிடுபவளைக் கண்டவனுக்கு நா வரண்டு தொண்டைக்குழி ஒருமுறை ஏறி இறங்கியது.

'காலங்காற்தாலேயே சுண்டி இழுக்கிற மாதிரி வந்து நிக்கிறாளே! விபா ஸ்டெடி டா ஸ்டெடி!!!' என்று நினைத்துக் கொண்டாலும் கண்கள் இரண்டும் அவளை இஞ்ச் இஞ்ச்சாக அளப்பதை நிறுத்திடவில்லை.

இறுதியாக அவனது பார்வை அலார்ம் க்ளாக்-ஐ கையில் எடுத்து கண்டிப்பது போல் ஒற்றை விரலை நீட்டி, கீழுதடை பற்களால் கடித்தபடி ஏதோ பேசிக் கொண்டிருந்தவளைக் கண்டிட, 'இதுக்கு மேல தாங்காது டா சாமி!' என்று நினைத்து அவசரமாக எழுந்து அமர்ந்தான்.

அதற்குள் மலரோ கடிகாரத்தின் மீதிருந்த பார்வையை எழுந்து அமர்ந்திருப்பவனின் மேல் செலுத்தி திருதிருவென முழித்தபடி, 'அச்சாச்சோ என்ன இப்படி எழுந்து உக்காந்திருக்காரு!!!...' என்று நினைத்துக் கொண்டு,

"டீ... எடுத்துட்டு வந்திருக்கேன்..." என்று கூறிவிட்டு க்ளாக்கையும் கையில் எடுத்துக்கொண்டு நகர்ந்தவள், பின் ட்ரேவை கையில் எடுக்க முடியாமல் கையிலிருக்கும் கடிகாரம் இடையூறாக இருக்க, தலையில் தட்டிக்கொண்டு மீண்டும் தலை நிமிராமல் அவனருகே சென்று வைத்துவிட்டு ஓரக்கண்ணால் அவனைப் பார்த்தபடி திரும்பி வந்தாள்.

விக்ரமோ சிரித்தானா இல்லேயா என்று யோசிக்கும் அளவிற்கு மெல்லிய இதழோரப் புன்னகையை சிந்தியபடி எழுந்து குளியலறை புகுந்தான்.

வெளிமாடம் வந்து அமர்ந்தவள் தன் செய்கையை நினைத்து தனக்குள்ளாகவே பேசிக்கொண்டிருந்தாள். 'அலார்ம் க்ளாக்கோட பேசிட்டு இருந்ததை பார்த்திருப்பாரா!!! கண்டிப்பா பார்த்திருப்பாரு... அதான் அப்படி ஒரு சிரிப்பு... ஆனா சிரிச்ச மாதிரியும் தெரியலேயே!!! ஒருவேளை பார்த்திருக்கமாட்டாரோ!!! மலரு.... இப்படி மக்கு மாதிரி அதையே யோசிக்காதே!!! கேட்டா சமாளிப்போம்... விட்டுத்தள்ளு' என்று புலம்பலை விடுத்து சகஜமாகினாள்.

சற்று நேரத்தில் மலரின் எதிரே வந்து அமர்ந்தவன், அவள் எதிர்பார்த்து காத்திருந்த எந்த கேள்விகளும் இன்றி தனது கோப்பையை எடுத்து பருகத் தொடங்கியவன். "தேங்க்ஸ்" என்றான்.

பெண்ணவளோ தன்னிலையில் இருந்து இன்னும் வெளிவராததால் "எ... எதுக்கு தேங்க்ஸ்?" என்று வார்த்தைகள் வராமல் தந்தியடித்தாள்.

"டீ கலந்து கொண்டு வந்ததுக்கு..." என்று பால் எடுத்து வராமல் டீயே கொண்டு வந்ததற்கு என்ற பொருளில் டீ என்ற வார்த்தையை அழுத்திக் கூறினான்...

"உங்ககிட்ட ஒன்னு கேட்கட்டுமா?" என்று மெதுவாக ஆர்மபித்தாள்.

"ம்ம்ம்" என்று தேநீர் பருகியபடி கூறினான்.

"நீங்க ஏன் உதி அண்ணாகிட்டேயும், வினோ அண்ணாகிட்டேயும் பேச மாட்டிறிங்க?"

"அவங்க ரெண்டு பேருக்கும் என் மேல கோபம்....... வினோவும் மொதோ என் கூட தான் இருந்தான். நானும் வினோவும் சேர்ந்து தான் ஆட் ஃபிலிம்-க்கு வாய்ஸ் கொடுத்துட்டு இருந்தோம்... படிப்பு முடியவும் உதி அப்பாவோட கட்டாயத்துல அவர்கிட்ட வேலைக்கு சேந்தான்.

மோஸ்ட் ஆஃப் டைம் மூனு பேரும் ஒன்னா தான் சுத்துவோம்... ரெக்கார்டிங் டைம் போக மீதி நேரம் உதி கூட சேர்ந்து எடிட்டிங் எப்படிலாம் பண்ணுறாங்கனு பார்க்கப் போவோம்... அதுல தான் அவனுக்கு ஃபிலிம் இன்டஸ்ட்ரியே பிடிக்காம போய்டுச்சு... இல்லாத ஒரு விஷயத்தை இருக்குனு காண்பிச்சு அதுல சம்பாதிச்சு உடம்பு வளக்குறோம்னு ஒரு வெறுப்பு...

ஆட் ஃபிலிம்ஸ்-உம், ரியாலிட்டி ப்ரோக்ராம்ஸ்-ம் தான் இப்படி இருக்குனு நியூஸ் ச்சேனல் பக்கம் போனான்... அங்கே டி.ஆர்.பி ப்ராப்ளம்... மொத்தமா வெளியேறி மேல படிச்சான். அவனுக்கு காலேஜ்ல பார்ட் டைம் ஜாப் கெடச்சது...

அப்போ தான் நான் ஸ்க்ரீன்ல வர ஆரம்பிச்சேன். கொஞ்ச நாள்லேயே அதீத வளர்ச்சி... மாடலிங் கேர்ள்ஸ் கூட என்னை சேர்த்து வெச்சு நிறைய நியூசும் வந்துச்சு... அதிலிருந்து தான் அவனுக்கு என் மேல கோபம்... அதெல்லாம் பொய்யினு தெரிஞ்சாலும் நான் அப்படி பேச இடம் கொடுக்குறேன்னு ரெம்பவே கோபம்... சின்னச் சின்ன விஷயம் ஆரம்பிச்சு இப்போ பெரிய அளவுல வந்து நிக்கிது..."

"ஆனா என் தம்பி வேற மாதிரி சொன்னானே!!! ஏதோ நான் ஹாஸ்பிட்டல்ல இருந்தப்போ, என்னை அப்பாகிட்ட அனுப்ப சொல்லி நீங்க மறுத்துட்டதா...ல்...லே...." என்ற அவளது பேச்சு விக்ரமின் முறைப்பில் பாதியிலேயே நின்றது.

"உனக்கு எதையுமே என்கிட்ட கேட்கனும் தோனவே தோனாதா? என்னை சுத்தி இருக்கிறவங்ககிட்ட தான் எல்லாத்தையும் கேப்பயா?" என்று கோபமாக கத்திட,

நேற்றிரவு தான் நினைத்ததை இன்று தன்னவன் வாய்மொழி வார்த்தைகளாக கேட்டிட அதற்கு மேல் எதுவும் பேச முடியாமல் தலை குனிந்து அமர்ந்தாள் அவனது இல்லாள்.

தன்னை பார்க்காமல் அமர்ந்திருப்பவளின் மேல் இன்னும் கொஞ்சம் கோபம் கூடிட, அங்கிருந்து எழுந்து விறுவிறுவென்று அறைக்குள் சென்றான். கோபமாக எழுந்து செல்பவனை பின் தொடர்ந்தபடியே,

"நான் வேணுனே பண்ணலே... இனிமே இப்படி மத்தவங்ககிட்ட எதுவும் கேட்கமாட்டேன்... ப்ளீஸ்" என்றாள்.

அவனிடம் எந்த பதிலும் இல்லை. அவன் போக்கில் அவனது வேலையை செய்து கொண்டிருந்தான்.

"நேத்து நீங்க பேசின விதத்துலேயே என் தப்பை புரிஞ்சிக்கிட்டேன்..." என்று இன்னமும் அவனைத் தொடர்த்திட, அதற்கும் அவனிடம் எந்த மாற்றமும் இல்லை... வாட்ரோப்பில் இன்றைக்கு அணிய வேண்டிய ஆடையை தேர்வு செய்தபடி நின்றிருந்தான்.

"இனி எனக்கு எந்த கேள்வி இருந்தாலும் உங்ககிட்டேயே கேட்குறேன். இப்போ வினோ அண்ணா பத்தி சொல்லி முடிங்களேன்..." என்று அவன் முன்னே சென்று நின்று கண்களைச் சுருக்கி பாவம் போல் கேட்டாள்.

அவளை திரும்பிப் பார்த்தவன், அவளது ஒவ்வொரு செயலும் தன்னை கவர்வதைக் கண்டு அவளை தவிர்க்க நினைத்து மீண்டும் பால்கனி வந்து குருவிகளுக்கு தீனி இடத் தொடங்கினான்.

மலரும் விடாமல் அவன் அருகே வந்து "சரி போங்க... நீங்க சொல்லலேனா நான் வினோ அண்ணாகிட்டயே கேக்குறேன்..." என்று அசால்ட்டாகக் கூறியவள் தன் திறன்பேசியை எடுத்து வினோவின் எண்ணிற்கு அழைப்பது போல் பாசாங்கு செய்ய,

விக்ரமோ அவளது கையில் இருக்கும் ஃபோனைப் பரித்து தன் ட்ராக்ஸூட் பேக்கெட்டில் வைத்துக் கொண்டு "கொன்னுடுவேன் உன்னை" என்று பல்லைக் கடித்துக் கொண்டு கூறினான்..

தன்னவள் தன்னை மட்டுமே உரிமையாக நினைக்க வேண்டும் என்ற உணர்வில் உண்டான அவனது கோபத்தைக் கண்டு தோன்றிய சிரிப்பை இதழ்களை மடித்து உள்ளேயே அடக்கிவிட்டு, 'இதை எதிர்பார்த்து தானே இத்தனை நாள் காத்திருந்தேன்' என்று தன்னுடனேயே பேசியபடி, அவனை அப்பாவியாக பார்த்து வைத்தாள்.

"அதுக்கு மேல அவனை பத்தி சொல்றதுக்கு ஒன்னும் இல்லே போதுமா? என்னை பத்தி சோஷியல் மீடியால கிசுகிசு வெளிவர நேரம் எல்லாம் எனக்கும் அவனுக்கும் சண்டை வரும். அப்பேலாம் நானும்...." என்று சற்று தயங்கி தயங்கி ஏதோ சொல்ல வந்தான்.

அவனது செய்கை அனைத்தும் ஏதோ இன்று தான் தவறு செய்து அதற்காக வெட்கி நிற்பவனைப் போல் இருந்தது.

"நானும் அவனை கடுப்பேத்துறதுக்குன்னே அடமெண்ட்டா நடந்துப்பேன்... அக்ஸரா கூட இன்னும் கொஞ்சம் க்லோஸா பழகுவேன். இவனுங்க ரெண்டு பேரையும் கண்டுக்காம அவ கூட எங்கேயாவது ஊர் சுத்திட்டு வருவேன்." என்று அவளை கள்ளப் பார்வை பார்த்தபடி கூறிட, அவளும் அவனை முறைத்தபடி நின்றிருந்தாள்.

உடனே அவசரமாக விளக்கம் கொடுத்தான். "ஏதாவது பப்ளிக் ப்ளேஸ் தான் கூட்டிட்டுப் போவேன்... நீ நெனைக்கிற மாதிரி ஒட்டி ஒரசிட்டுலாம் போகமாட்டோம்... அது எனக்கு பிடிக்கவும் செய்யாது... ஓகே வா"

"கதை வேறபக்கமா போகுது... ட்ராக்-குள்ள வாங்க... நான் கேட்டது வினோ அண்ணா பத்தி... நீங்க வேற ஒருத்தரைப் பத்தி சொல்லிட்டு இருக்கிங்க..." என்று நினைவுபடுத்தினாள்.

"உனக்கு உடம்பு சரியில்லாத போது உன்னை உன் அப்பா வீட்டுக்கு அனுப்பி வைக்க சொல்லி சொன்னான். நான் முடியாதுனு சொல்லவும், எப்பவும் போல நான் அடமெண்ட்டா இருக்கிறதா நெனச்சு என் மேல ரெம்பவே கோபமா இருந்தான். அவனோட ஒதுக்கம் என் மனசை மாத்தும்னு எதிர்பார்த்தான்.

என்னோட கேரக்டர்-னால உன்னை...... உன்னை....... உன்னை க்யூர் பண்ண முடியாம போயிடுமோனு ரெம்பவே பயந்தான். அவனோடு உயிருக்கு உயிரான நண்பன் என்னால உனக்கு ஏதாவது ஒன்னு ஆகிடுச்சுனா அந்த பலி என்மேல தான் வரும்னு அவனுக்கு ஒரு ஃபீல்....

இப்போ கொஞ்ச நாளா ஃபோன்ல நீ எப்படி இருக்க?னு கேட்டு பேசிப்பான் தான். அதுக்குள்ள திரும்பவும் அக்ஸரா கூட வந்த வீடியோ பார்த்துட்டு திரும்பவும் கோபம் அவனுக்கு... நேத்து வீட்டுக்கு வந்ததே என்கூட சண்டை போடத்தான். யாருக்கும் தெரியாம செம்ம டோஸ் விட்டான். அதான் அவனை எப்பவும் போல கடுப்பேத்துறதுக்காகவே தான் அவன் முன்னாடியே அக்ஸராவை பாக்கப் போறதா சொன்னேன்..." என்று திமிராகவே சொல்லி முடித்தான்.

மலரோ பதில் ஏதும் பேசாமல் அறைக்குள் நுழைய இப்போது பின் தொடர்வது அவனது முறையாகியது.

"ஏய்.... வம்படியா இப்போவே சொல்லுனு கேட்டேல.... ஏதாவது பதில் சொல்லிட்டு போ..." என்றபடி அவள் பின்னால் வந்து நின்றான்.

தாரகையவளோ மெத்தையில் கிடந்த அவனது திறன்பேசியை எடுத்து, அவன் முன்னே நீட்டி,

"இப்போவே வினோ அண்ணாக்கு ஃபோன் பண்ணி நடந்ததை சொல்லுங்க!!" என்று கட்டளை பிறப்பித்தாள்.

சற்றும் யோசிக்காமல் "என்னால முடியாது... இப்போனு இல்லே... எப்பவுமே சொல்லமாட்டேன்..."

"ஏன்? உங்க ஃப்ரெண்டுகிட்ட ஈகோ பாக்குறிங்களா?"

"இது ஈகோ இல்லே... நீ என்ன அவ கையால அவார்டா வாங்கினே? எல்லார்கிட்டேயும் சொல்லிக்கிறதுக்கு!!! அட்லீஸ்ட் பதிலுக்கு அடிச்சிருந்தேனாக் கூட எனக்கு கொஞ்சம் சந்தோஷமா இருந்திருக்கும்... ஏசுநாதர் மாதிரி அவ கொடுத்ததை வாங்கிட்டு நின்னுட்டு அதை எல்லார்கிட்டேயும் சொல்ல சொல்றேயா?...." என்று மலரைத் திட்டினான்.

மலரோ முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு, "அக்ஸரா திடீர்னு அப்படி பண்ணுவாங்கனு நெனைக்கலே..." என்று கூறினாள்.

"இல்லேனா மட்டும் அவளை அடிச்சிருப்பே பார்!??." என்று அப்போதும் கோபமாகத் தான் கத்தினான்.

"ம்ம்ச்ச் இப்போ முடிஞ்சதை பேசி என்ன ஆகப் போகுது... வினோ அண்ணாக்கு ஃபோன் பண்ணி அக்ஸராவை பார்க்கப் போகலேனு மட்டும் சொல்லுங்க போதும்..."

மனமே இல்லாமல் ஃபோனை வாங்கியவன் மலர் கூறியது போல் வினோவிடம் பேசிட, அவன் காரணம் கேட்ட போதும் மலரைப் பார்த்தபடி, "ம்ம்ம்... என் பொண்டாட்டிக்குப் பிடிக்கலே... இனிமே அவளுக்கு பிடிச்சதை மட்டும் தான் செய்யிறதா இருக்கேன்... போதுமா!!!." என்று கூறி கட் செய்துவிட்டான்.

இருவரின் கைபேசியையும் அவளிடம் கொடுத்துவிட்டு, "ஹாப்பியா?" என்றிட, அவளும் "ம்ம்ம்" என்றாள். அவளைக் கடந்து சென்று இரண்டடி வைத்தவன் மீண்டும் அவள் முன்னே வந்து நின்று,

"அப்பறம் ஒன்னு சொல்ல மறந்துட்டேன்... இத்தனை நாள் என்கூட போட்டி போட்டுட்டு இருந்துச்சு... இன்னைக்கு உன் கூட.... கவலைப்படாதே நான் அதுகிட்ட சொல்லி வெச்சுடுறேன்... சரியா?" என்று அவன் கூறிய எதுவும் அவளுக்கு புரியவில்லை.

'எதை சொல்லுறாரு!!!' என்ற குழப்பத்துடனேயே அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

"என்ன பாக்குற? காலைல சண்ட போட்டுட்டு இருந்தியே அதை பத்தி தான் சொல்றேன்... என் அலார்ம் கொஞ்சம் அதிகப் பிரசங்கி தான்... ஆனா இதுக்கு முன்னாடி வரைக்கும் இந்த ரூம்ல என் கூட பேசுறது அது மட்டும் தான்... நான் சொன்னா கேட்கும்... ஆனாலும் எனக்காக நீ சண்டை போட்டது நல்லா தான் இருந்துச்சு..." என்று கூறிவிட்டு தெரிந்தே அவளது தோள் உரசி கடந்து சொன்றான்.

போகும் போதே மலரின் தலையில் இருந்த கொண்டையை அவிழ்த்துவிட்டு,

"ஹார் ட்ரையர் போடு... ஈரத்தோடு இருக்காதே" என்று கூறி பூதுவாலையோடு குளியலறை புகுந்தான்.

மலரோ 'தேரிட்டே மலரு... மச் பெட்டர்... கீப் இட் அப்...' என்று தன்னைத் தானே பாராட்டிக் கொண்டு, நுனி முடியை முடிந்தபடி கீழே சென்றாள்.

அதன்பின் வந்த நாட்கள் இப்படி சின்னச்சின்ன வாக்குவாதங்களும், அதில் மலரை பேசிப் போராடவிட்டே ஜெயிக்க வைப்பதுமே விக்ரமின் வேலையாக இருந்தது...

இடையே ஒருமுறை தாமோதரனும், அபிராமியும் வந்து சென்றனர். அபிராமிக்கு பேத்தியின் தெளிவான பேச்சில் அதிக சந்தோஷமே!!! அதில் விக்ரமின் மீது இருந்த பாசமும் அதிகரித்துக் கொண்டே சென்றது எனலாம்... தாய் இல்லாமல் வளர்ந்தவளுக்கு அனைத்துமாக அவன் இருக்கிறானே!!! அதுவே பெரிய மகிழ்ச்சி தானே!

அதே போல் ரத்தினமும், விசாலியும் கூட நான்கைந்து முறை மலரின் கட்டாயத்தில் வந்து சென்றனர். விக்ரம் தன் அன்னையிடம் பேசிடவில்லை என்றாலும், முன்பு போல் மொத்தமாக ஒதுக்குவதும் இல்லை.

உதியும், வினோவும் கூட வார இறுதியில் என்றேனும் வந்து செல்வதை வழக்கமாக்கிக் கொண்டனர்.

அதிலும் உதியின் பாப்பா என்ற அழைப்பிற்கு பலமுறை சண்டையிட்டிருக்கிறான் விக்ரம்.

"அவளை எதுக்கு டா பாப்பானு கூப்பிடுறே!!! அழைக்கிறதுக்கு தானே பேர்... அதைவிட்டு பாப்பா பீப்பானு கூப்பிட வேண்டியது..."

"நீ ஏன்டா அதை சொல்றே! மலரு சொல்லட்டும்.... டேய் பாப்பா..." என்று அடுக்களையிலீ இருந்தவளை சத்தமாக அழைக்க, அப்போதும் விக்ரம் அவனை முறைத்தான்.

"என்ன உதி ண்ணா?"

"உன்னை இனிமே மலருனு கூப்பிடுறேன். உனக்கு ஓகே வா?"

"உதி ண்ணா.... என்னை பாப்பானு நீ மட்டும் தான் கூப்பிடுறே... அப்பா, ஆச்சிக்கு குட்டிம்மா, செம்பியா எப்பவும் அக்கா தான். எப்பவாச்சும் மலரு.... வினோ அண்ணாவுக்கும் நான் மலர், நீ மட்டும் தானே பாப்பானு சொல்றே... அதனால அப்படியே சொல்லேன்." என்று கூறிவிட்டு மீண்டும் உள்ளே சென்றுவிட்டாள்.

"இப்போ ஓகே வா மிஸ்டர் விபா..." என்றிட விக்ரமோ இருக்கையை விட்டு எழுந்து வந்து அவனது கழுத்தைப் பிடித்து நெரிப்பது போல் இரண்டு முறை முன்னும் பின்னும் ஆட்டிவிட்டு,

"அவளை கவனிச்சுட்டு... வந்து உனக்கு மீதி இருக்கு..." என்று கூறி அடுக்களை நோக்கிச் சென்றான்.

உள்ளே செண்பக அக்காவும் மலருக்கு உதவி செய்து கொண்டிருக்க, "அக்கா ஒரு நிமிஷம் நீங்க குக் பண்ணிட்டு இருங்க... இதோ வர்றோம்..." என்று கூறி மலரின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு, சமையலறையில் இருந்த ஸ்லைடிங் கண்ணாடிக் கதவை நகர்த்தி மறுபக்கம் தோட்டத்திற்கு அழைத்துச் சென்று, மரத்தடியில் நிற்க வைத்து,

"ஓய்... அதென்ன எல்லாரும் உன்னை எப்படி அழைப்பாங்கனு சொன்னே... என்னை மட்டும் விட்டுட்டே... நான் உன்னை அழைச்சதே இல்லேயா? இல்லே என் அழைப்பு உனக்கு ஸ்பெஷல் இல்லேயா?" என்று சண்டையிட,

"ஓஓஓ... நீங்க கூட ஸ்பெஷல்லா தான் அழைப்பிங்க... ஆனா வெளிய சொல்லிக்க முடியாதே... மோஸ்ட் ஆஃப் டைம்ஸ் ஏய், ஓய் தான்... பனினு சொல்றது சார் ரெம்ப பேட் மூட்ல இருந்தாத்தான்." என்று அவளும் பதில் கூறிவிட்டு அவள் கண்களையே பார்த்திருந்தாள்.

"ஓஹோ... என்னை சொல்ற மேடம் மட்டும் என்னை எப்படி கூப்பிடுறாங்கலாம்... இன்னமும் பெட் பக்கத்துல சும்மானாலும் நின்னுட்டு என்ன சொல்லி கூப்பிடுறதுனு ஒரு போராட்டமே நடத்திட்டு தானே எழுப்புறே.! அதுவும் 'டைம் ஆச்சு எழுந்துக்கோங்க...' அப்படினு தான் வருது..." என்று நக்கலடித்தான்.

அவனது கிண்டலில் ரோஷம் வந்திட தலையைத் தூக்கி நின்று "நான் உங்களை எப்படி அழைக்கிறதுனு டிஸைட் பண்ணிட்டேன்... நீங்க எதிர்பார்க்காத டைம்ல உங்களை கூப்பிட்டு அசத்துறேன் பாருங்க..." என்று கூறிவிட்டு உள்ளே சென்றுவிட்டாள். 'அப்படி என்ன சொல்லி அழைப்பாள்!!!' என்று யோசித்தபடி, தனக்குத் தானே சிரித்துக் கொண்டு அவள் பின்னாலேயே உள்ளே நுழைந்தான்.

-தொடரும்.​
 
Top