• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அத்தியாயம் 3

Karthika Chakkaravarthi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 17, 2025
4
5
3
Tenkasi

அத்தியாயம் 3​

அடுத்த நாள் காலை விடிந்ததும் வழக்கமான காலை வேலைகளை முடித்து, தன்னிடம் இருப்பதிலே நல்ல உடையை தேர்ந்தெடுத்து அணிந்து சமையலறை வந்தாள் அகல்யா. மகளின் கோலத்தைப் பார்த்து தனக்குள் சிரித்துக்கொண்டார் அருந்ததி.​

தனக்கான தேநீரோடு மித்ரனுக்கான தேநீரையும் எடுத்துக்கொண்டு நகரப் பார்த்தாள். “நேத்து மாதிரி திட்டு வாங்காத. கதவைத் தட்டிட்டு தம்பி வரச்சொன்ன பிறகு உள்ள போ.” என்று சொல்லி அனுப்பினார் அருந்ததி.​

“அவர் தான் ஓவரா பண்றாருன்னா நீ அவருக்கு மேல பண்றம்மா. தம்பியா இருக்கும் போதே இந்த தாங்கு தாங்குற. மாப்பிள்ளையானதும் என்னையெல்லாம் கண்டுக்கவே மாட்ட போல இருக்கு.” தாயைக் கேலிசெய்துவிட்டு, தாய்மாமனைத் தேடி புறப்பட்டாள் அகல்யா.​

இது அனைத்தையும் சற்று தொலைவில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தார் ரேணுகா. முந்தைய தினம் இரவு மகள் மேனகாவுடன் பேசியது நினைவு வந்தது அவருக்கு.​

“உன் மாமன் ரொம்ப வருஷம் கழிச்சு வீட்டுக்கு வந்திருக்கான் டி. இந்த முறை அவனை விட்டுடக் கூடாது. அதுவும் அந்த அகல்யாவுக்கு விட்டுக்கொடுத்திடவே கூடாது. இதுநாள் வரைக்கும் எப்படி இருந்தியோ இனிமேல் கொஞ்சம் சூதானமா நடந்துக்கோ.​

எப்படியாச்சும் உன் மாமனை, ‘கட்டினா மேனகாவைத் தான் கட்டுவேன்னு’ சொல்ற மாதிரி பண்ணு. நீ என் தம்பியைக் கல்யாணம் பண்ணிக்கிறதில் தான் இந்த வீட்டில் என்னோட உரிமை, உன்னோட நல்ல எதிர்காலம் இரண்டும் இருக்கு.” என்று புத்தி சொன்னார்.​

“நீங்க என் அம்மாம்மா. என்ன சொல்லிக் கொடுக்கிறீங்க எனக்கு. மாமான்னா எனக்குப் பிடிக்கும் தான். அதுக்காக அந்த அகல்யா மாதிரி, எப்ப பார் அவர் பின்னால் சுத்தி வந்து என் தன்மானத்தை அடகு வைக்க என்னால் முடியாது.​

எனக்கு, இப்ப நடக்கும் நிகழ்வுகளை விட எப்பவோ எழுதி வைச்ச விதி மேல அதிக நம்பிக்கை இருக்கு. அவர் எனக்கு தான்னு இருந்தா அகல்யான்னு இல்ல யார் தடுத்தாலும் எங்களுக்குத் தான் கல்யாணம் நடக்கும். இல்லாமப் போனா நான், நீங்கன்னு இல்ல அந்தக் கடவுள் நினைச்சாலும் நடக்காது. அதனால் அதிகம் வருத்தப்படாம போய் வேலையைப் பாருங்க.” என்றுவிட்டு உறங்கச் சென்றிருந்தாள் மேனகா.​

ரேணுகாவிற்கு, தானும் தன் தமக்கையும் சிறு வயதில் இருந்து கடுமையாக உழைத்து என்ன சாதித்து விட்டோம். இத்தனை ஆண்டு கால வாழ்வைத் திரும்பிப் பார்த்தால், தங்களுக்காக வாழ்ந்ததை விட, மற்றவர்களுக்காக, குடும்ப கௌரவத்திற்காக வாழ்ந்த நாள்கள் தானே எண்ணிக்கையில் அதிகம். பெண்ணாகப் பிறந்தவள் ஒருகாலகட்டத்திற்குப் பிறகு நாள்தோறும் சங்கடப்படத்தான் போகிறார்கள். அதுவரை தன் மகள் தனக்கு இளவரசியாய் சுகங்களோடு வாழ்ந்து விட்டுப்போகட்டும் என்று நினைத்து, அதற்கேற்ப தான் மேனகாவை வளர்த்திருந்தார்.​

அருந்ததி இந்த விஷயத்தில் தங்கையின் எண்ணங்களுக்கு சற்றே மாறுபட்டவர். அவர் அகல்யாவை அவளுக்காக யாரும் இல்லாத சூழ்நிலையில் கூட தைரியமாக வாழும் அளவிற்கு தன்னம்பிக்கையோடு வளர்க்க நினைத்தார்.​

ஒரு தாய் வயிற்றுப்பிள்ளைகள் தான் என்றாலும் ரேணுகா, அருந்ததி வாழ்ந்த இருவேறு சூழ்நிலைகள் பிள்ளை வளர்ப்பில் அவர்களை வேறுபடுத்திக் காட்டியது.​

ரேணுகா செல்லமாக வளர்க்கப்பட்டவர். சில மாதங்களே ஆனாலும் உடன் வாழ்ந்த கணவரும் அவர் மீது அன்பைப் பொழிந்தே இருந்தார். கணவர் இறந்த பிறகு தந்தை வீடு வந்தவருக்கு, விதவை ஆதரவு இல்லாதவர் என்கிற அடைமொழி கிடைத்தாலும் அன்பும், பரிதாபமும் அதிகமாகவே கிடைத்தது. அதனால் பெரிதாக பிரச்சனையில்லாத வாழ்வு அவருடையது.​

ஆனால் அருந்ததிக்கு நடந்தது ரேணுகாவில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. அருந்ததியின் கணவர் வசிஷ்டன் அதே ஊரைச் சேர்ந்தவர் தான். பணத்திற்குப் பஞ்சம் இல்லாமல் போனாலும், அவர் குடும்பத்திற்கு ஊருக்குள் அவ்வளவாக நல்ல பெயர் கிடையாது. காரணம் வசிஷ்டனின் தகப்பன்.​

அவர் தன் இளம் வயதில் கொலை செய்துவிட்டு சிறையில் வாலிபத்தை பறிகொடுத்து நாற்பது வயதில் திரும்பி வந்தவர். தனிமை தாங்க முடியாமல் ஒரு பெண்ணை மணந்து வாழ்ந்து வசிஷ்டரைப் பெற்றுக்கொண்டார். பிரசவத்தில் மனைவி இறந்து போக தந்தையும், மகனுமாக தனித்து நின்றனர்.​

எப்படி பழக்கம் வந்தது என்று குறிப்பாக நினைவில் வைத்துக்கொள்ள முடியாதவண்ணம் வசிஷ்டன், அருந்ததி இருவருக்கும் சின்னச்சின்ன நிகழ்வுகளில் தொடர்ந்து அறிமுகம் ஏற்பட்டு, ஒரு கட்டத்தில் இருவரும் காதலிக்க ஆரம்பித்து விட்டனர்.​

ஊருக்குள் மெல்ல விஷயம் தெரிய வந்த போது, கொலைகாரன் குடும்பத்திற்கு பெண்ணைத் திருமணம் செய்து கொடுக்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தார் பராசரர்.​

காதல் கொடுத்த வேகம் மற்றும் காதலித்தவர் கொடுத்த நம்பிக்கை இரண்டையும் பிடிவாதமாக பிடித்துக்கொண்டு பண்பொழி திருமலைக்கோவிலில் வைத்து இரு வீட்டுப் பெரியவர்களுக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர் வசிஷ்டன், அருந்ததி இருவரும்.​

திருமணம் முடிந்த கையோடு அவர்கள் நேரே வந்தது பராசரரிடம் தான். அவர்கள் எதிர்பார்த்து வந்ததை விட பெரிய பிரச்சனை செய்தார் பராசரர். கை மீறிப் போனது அவர் பெண் என்பதை அவரால் நம்ப முடியவில்லை. அருந்ததியின் கன்னம் சிவக்கும் அளவுக்கு அடி விழுந்தது. தடுக்கப் பார்த்த வசிஷ்டருக்கும் அதில் சில அடிகள் பரிசாகக் கிடைத்தது.​

ஊர் பெரியவர்கள் சிலர் வந்து பராசரரை சமாதானப்படுத்த, அவர்கள் சொல்லுக்கு கட்டுப்பட்டவர் ஊர் அறிய மீண்டும் ஒருமுறை வசிஷ்டன், அருந்ததி இருவருக்கும் திருமணம் முடித்து வைத்துவிட்டு அன்றோடு அருந்ததியை மொத்தமாகக் கைகழுவிவிட்டார்.​

மனைவியைத் தன் இல்லம் அழைத்து வந்த வசிஷ்டர் கண்ணின் இமையாக அவரைப் பாதுகாத்தார். அன்பை வாரி வழங்கினார். ஆனால் பதிலுக்கு மனைவியிடம் அவர் எதிர்பார்த்தது பிறந்தவீட்டு சொந்தத்தை அவர் முற்றிலுமாக ஒதுக்கி வைத்துவிடவேண்டும் என்பதைத் தான்.​

பராசரர் கையால் அடி வாங்கிய கோபம் வசிஷ்டரை இப்படியொரு முடிவு எடுக்க வைத்தது. கணவன் இந்த விஷயத்தில் எந்தளவு உறுதியாக இருக்கிறார் என்பதைக் கவனிக்காமல் விட்டு தவறு செய்தார் அருந்ததி.​

ஆறு மாத காலம் அன்பான வாழ்க்கை வாழ்ந்தனர் புதுமணத் தம்பதியர். அதற்குப் பரிசாக அகல்யாவும் அருந்ததியின் வயிற்றில் உருவாகிவிட்டாள். ஆனால் ஒருநாள் சைக்கிள் கற்றுக்கொள்கிறேன் என்று வண்டியில் இருந்து கீழே விழுந்து மித்ரன் கையை உடைத்துக்கொண்டான் என்கிற செய்தி வர தாய்க்கு தாயாய் இருந்து அவனை வளர்த்த அருந்ததியின் மனம் துடித்தது. தம்பியைப் பார்க்க சென்றே ஆக வேண்டும் என அவரும், முடியவே முடியாது என்று வசிஷ்டரும் நின்றனர்.​

“என் மேல் சத்தியம், நீ இந்த வீட்டு வாசலைத் தாண்டக் கூடாது. ஒருவேளை தாண்டிப் போயிட்டா மறுபடி என் வீட்டு வாசலை மிதிக்கக் கூடாது.” என்றுவிட்டு வெளியே சென்றார் வசிஷ்டர்.​

கணவனின் வார்த்தைகளைக் கேட்டு பயம் வந்தாலும், மித்ரனுக்கு என்னவானதோ என்னும் கேள்வி பயத்தைக் கிளப்ப, துணிந்து வீட்டு வாசலைத் தாண்டிச் சென்றார்.​

இராமாயண காலத்தில் மைத்துணன் இலக்ஷ்மணன் வரைந்த ரேகையைத் தாண்டிய குற்றத்திற்காக சீதை அனுபவித்த துன்பங்களை விட, கணவன் பேச்சை மீறி வாசல்படி தாண்டியதற்காக அனுபவிக்கப் போகிறோம் என்பது அருந்ததிக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.​

மித்ரனைப் பார்க்க வந்த போது பராசரர் முகத்தை திருப்பாமல் பேசியது சற்றே நிம்மதியைக் கொடுக்க, தம்பி நலம் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு, காதல் கணவன் தானே அவரை எப்படியும் சமாதானம் செய்துவிடலாம் என்கிற நம்பிக்கையோடு இல்லம் வந்தார் அருந்ததி.​

ஆனால் வசாலைத் தாண்டி ஒரு அடி கூட அவரை வைக்கவிடவில்லை வசிஷ்டரின் தகப்பன். அருந்ததி பாவமாக கணவன் முகம் பார்க்க, அவர் தன் தகப்பனுக்கு ஒரு அடி மேலே போய், அருந்ததிக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்லி அவரை பராசரரின் வீட்டில் நடுஇரவில் விட்டுவிட்டு வந்துவிட்டார்.​

ஊர் பெரியவர்கள் பலர் பலமுறை பேசிப்பார்த்தாகிவிட்டது. வசிஷ்டர் மனம் துளியும் இறங்கவில்லை. இதற்கு நடுவில் அருந்ததி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. பிள்ளைக்காக ஆயினும் கணவன் தன்னை ஏற்றுக்கொள்வார் என்று நம்பிக்கையோடு சென்ற அருந்ததிக்கு, தன் பிடிவாதத்தில் உறுதியாக இருந்து மிகப்பெரிய ஏமாற்றத்தைப் பரிசாகக் கொடுத்தார் வசிஷ்டர்.​

என்ன ஆனாலும் கணவன் தன்னை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று தெரிந்துவிட, திருமண வாழ்க்கையில் தோல்வியுற்ற பெண்ணாக மொத்தமாக தந்தையிடம் வந்தார் அருந்ததி.​

பராசரர் ஒன்றும் சொல்லவில்லை என்றாலும், ரேணுகா, அக்கம்பக்கத்துப் பெண்கள், உறவினர்கள் என அனைவரும் வசிஷ்டரின் கோபத்தைக் குறைக்க ஆளுக்கொரு யோசனை சொல்கிறேன் என்கிற பெயரில் எதையாவது சொல்லிக்கொண்டே இருந்து அருந்ததியின் நிம்மதியைக் குலைத்தனர்.​

அகல்யா பிறந்த பின்னர் அந்தத் தொல்லைகள் இரண்டு மடங்கானது. பிறந்த பிள்ளையைக்கொண்டு போய் கணவன் காலில் போட்டு நீயும் அப்படியே அவர் காலில் விழுந்துவிடு. யாராக இருந்தாலும் அவர்கள் பெற்ற பிள்ளையைப் பார்க்கும் போது மனம் இளகும் என்று அறிவுரை சொல்லி பெற்றபிள்ளையோடு அருந்ததியை மட்டும் வசிஷ்டர் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்கள்.​

காதல் மனைவிக்கே இடம் கொடுக்க முடியாத போது, அவள் பெற்ற மகளுக்கு மட்டும் என் வீட்டில் எப்படி இடம் கொடுப்பேன் என்று பிடிவாதமாக நின்றுபோனார் வசிஷ்டர். அன்றோடு கடைசி. அறிவுரை என்று யார் வந்தாலும் அருந்ததி பொல்லாதவராகிவிடுவார்.​

“உன் வீட்ல் எல்லாம் சரியா இருக்கா? முதலில் அதைப் போய் சரிபண்ணு. அதுக்கு அப்புறம் அடுத்த வீட்டு கதையைப் பேசலாம்.” என முகத்தில் அடித்தது போல் சொல்லி முடித்துவிடுவார். கோபம் எல்லாம் ஊர் உலகத்தினர் மீது தான் பட முடிந்ததே தவிர, தன்னைக் கைவிட்ட கணவர் மேல் சிறிதும் கோபத்தைக் காட்ட முடியவில்லை அருந்ததியால்.​

மறுதிருமணத்திற்கோ, விவாகரத்திற்கோ இருபக்கமும் யாரும் முயற்சிக்கவில்லை என்பதால் காலம் கடந்த பின்னாலும் கிணற்றில் போட்ட கல்லைப் போல் இருவரின் வாழ்க்கையும் அப்படியே இருந்தது.​

பெற்றெடுத்த மகள்கள் இருவரும் வாழாமல் இருந்தது பராசரருக்கு அதீத வருத்தத்தைக் கொடுத்தது. ரேணுகாவை நினைக்கையில் கடவுளை நிந்திக்கும் அவர் மனம் அருந்ததியின் பக்கம் வரும் போது அவரைத் தான் நிந்திக்கும். மகள் மட்டும் தன் பேச்சைக்கேட்டு வீட்டோடு அடங்கி இருந்திருந்தால் இத்தனை தேவையில்லையே என்று நினைத்து அவ்வப்போது ஏதாவது பேசுவார்.​

தான் பேச்சு வாங்கியது போதும், தான் மற்றவர்களுக்குப் பதில் சொல்லி மாய்ந்தது போதும், தான் காதல் கணவனை நினைத்து கண்ணீர் விட்டது போதும். இது எதுவும் தன் மகளுக்கு நடக்கக் கூடாது. தன் மகள் சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதில் அருந்ததி மிக உறுதியாக இருந்தார்.​

அதனாலேயே ஒவ்வொரு விஷயத்திலும் அகல்யாவை யாரும் குறை சொல்ல முடியாதபடி வளர்த்தார். அகல்யாவும் மற்ற எல்லா விஷயங்களிலும் தாய் சொல்லை மீறாதவள் தான் என்றாலும் மித்ரன் என்று வரும் போது யார் பேச்சையும் கேட்கமாட்டாள்.​

மித்ரன் என்றால் அவளுக்கு கொள்ளைப் பிரியம். ஏன், எதற்கு என்றெல்லாம் காரணம் சொல்லத் தெரியாது. குழந்தைகளுக்கு அம்மாவைப் பிடிக்க காரணம் வேண்டுமா? அதைப் போல் அவளுக்கு மித்ரனைப் பிடிக்கவும் காரணம் தேவையில்லை. அவனுக்காக உலக அழகியோடும் சரிக்கு சரி போட்டிக்கு நிற்கும் தைரியம் கொண்டவள் தான். ஆனால் போட்டியாக நிற்பது அக்கா என்பதில் சற்றே மனவருத்தம் அதிகம் அகல்யாவிற்கு.​

மாமன் தனக்கே தனக்காக கிடைக்க வேண்டும், அதே சமயம் தமக்கையின் மனம் வேதனைப்படக் கூடாது என்பதற்காக அவளுடைய இருபது வயதுக்குள் அவள் வேண்டிய வேண்டுதல்களும், செலுத்திய நேர்த்திக்கடனும் மிக அதிகம்.​

மேனகாவிற்கும் மித்ரன் என்றால் பிரியம் அதிகம் தான். ஆனால் அகல்யா அளவுக்குப் பிடித்தமா என்றால் அவளே இல்லை என்று ஒப்புக்கொள்வாள். முக்கோண நேசமாக இல்லாமல் தாய்மாமன் மீதான அக்கா மகள்கள் இருவரின் உரிமைப்போராட்டமாக ஒரு பந்தம் இவர்கள் மூவருக்கும் இடையே முகிழ்த்திருந்தது.​

ரேணுகாவும், அருந்ததியும் அக்கா, தங்கையாக மட்டும் இருந்தவரை அவர்கள் பந்தம் உறுதியாகத் தான் இருந்தது. என்று அவர்கள் இருவரும் அகல்யாவின் அம்மா மற்றும் மேனகாவின் அம்மாவாகப் பதவி ஏற்றார்களோ அன்றே சொந்தத்திற்காக அடித்துக்கொள்ளும் பங்காளிகளைப் போலாயினர்.​

இதையெல்லாம் பார்க்கப் பிடிக்காமல் தான் மித்ரன் படிப்பைக் காரணம் காட்டி வெளியூர் சென்றது. மருத்துவப்படிப்பு, கடைசி வருட பயிற்சி அனைத்தையும் முடித்த பின்னால் கூட கிராமத்திற்கு திரும்ப மனம் வராமல் சென்னையில் ஒரு மருத்துவமனையில் வேலை செய்து கொண்டிருந்தான்.​

எப்போது பார் எந்த அக்கா மகளைத் திருமணம் செய்துகொள்ளப்போகிறாய் என்று கேட்கும் தந்தை மற்றும் தமக்கைகளின் மேல் கோபம் கொண்டு வேலை செய்யும் இடத்தில் ஏதாவது பெண் தனக்கு ஏற்ப கிடைத்து விட மாட்டாளா என்று தேடித் திரிந்தான். அவன் தேடுதலுக்கு பலனாக ஒருத்தி கிடைக்கவும் செய்தாள். அவளைப் பற்றி பராசரரிடம் சொன்ன போது, அடித்துப் பிடித்து அடுத்த நாளே மகனைத் தேடி நேரில் வந்தார் மனிதர்.​

அத்தனை இலகுவில் தன்னைத் தேடி இத்தனை தூரம் வராத தகப்பன் இப்போது வந்திருக்கவும் புரியாமல் பார்த்தான் மித்ரன்.​

தயங்கித் தயங்கி, மகனிடம் அவன் திருமணம் செய்து கொள்ள விரும்பிய பெண்ணை மறந்துவிட்டு அகல்யாவைத் திருமணம் செய்துகொள் என்றுவிட்டு அந்த முடிவுக்கு தான் வந்ததற்குப் பின்னால் இருக்கும் காணரத்தையும் சொல்லி முடிக்க ஒருகணம் அசைவற்றுப் போனான் மித்ரன்.​

உயிருக்கு உயிராக தன்னை நேசிக்கும் தந்தை, சாமி என்று வாய் நிறைய அழைத்து தன்னை குலதெய்வம் கருப்பண்ணசாமியாகவே நினைக்கும் தந்தைக்காக, தான் திருமணம் செய்து கொள்வதற்காக தேர்ந்தெடுத்த பெண்ணை விட்டு விலகி, அகல்யாவைத் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தான்.​

ஆனால் இன்று அந்த அகல்யாவை நோகடிக்க தான் தாமரைக்குளம் வந்திருக்கிறான். அவன் கொண்டிருக்கும் குரோதம் அகல்யாவின் வாழ்வில் எத்தனை பெரிய புயலை வீசச் செய்ய காத்திருக்கிறது என்பதை அவனே அறியான் பாவம்.​