உணர்வாய் உயிராய் நீயே எந்நாளும்
அத்தியாயம் - 3
அமிர்தாவின் கைப்பேசி அழைப்பை ஆரதி எடுத்ததும் “ஹலோ ஆரதி நீ போன விஷயம் வெற்றி தானே ஏன் வீட்டில இல்லை”
ஆரதி “அமிர்தா நீ எப்போ வீட்டுக்கு வந்தே? உன் ப்ராஜெக்ட் விஷயம் என்னாச்சு?”
“நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் நீ என்ன கேட்கிறே ஆரதி”
“அமிர்தா இப்போ என்னால பேசமுடியாது டியூட்டி இருக்குது நான் போறேன் நேர்ல வந்து எல்லாம் பேசிக்கலாம் உன் வீட்ல இருந்து பேசினாங்களா?”
“இல்லை அம்மா நாளைக்கு பேசுவாங்கன்னு நினைக்கிறேன்.நீ போன விஷயம் சரியா முடிச்சதுனாலத் தானே அம்மா பேசலை அதனால்தான் கேட்டேன்” என்றாள்.
“நீ போன விஷயம் என்னாச்சு? அதுக்கு பதிலே வரலையே”
அவளோ மகிழ்ச்சியாய் “நான் ஒரு விஷயத்தை செய்யனும் நினைச்சா அதை எப்பவும் சரியா செய்வேன்னு உனக்கு தெரியாதா என்ன? எல்லாம் நல்ல படியா முடிந்தது என்னோட ப்ராஜெக்ட் நிறைய பேருக்கு பிடிச்சு இருந்தது.இரண்டு மூணு கம்பெனி டீல் பேசியிருக்காங்க நான் இன்னும் முடிவு பண்ணலை எப்படியோ இன்னைக்கு நான் ரொம்ப நிம்மதியா இருக்கேன்” என்றாள் பெருமூச்சோடு…
“சரி நைட் ரொம்ப லேட்டாயிடுச்சு நீ போய் தூங்கு நான் இப்போ ரவுண்ட்ஸ் போகனும்” என்று அழைப்பினை துண்டித்தாள் ஆரதி.
அமிர்தா இந்த நாளைக்காக நிறைய உழைப்பு போட்டது அருகில் இருந்து பார்த்த ஆரதிக்கு நன்றாகவே தெரியும்.தற்போதைய பிரச்சினையை நாளைக்கு பார்க்கலாம் என்று முடிவெடுத்தவள் அவள் இப்பொழுது நிம்மதியாக தூங்க வேண்டும் என்பதே எண்ணமாக இருந்தது.
நாளைக்கு விதுனின் கண்ணில் படாமல் இருக்க காலை பத்து மணி வரை வேலைப் பார்த்து விட்டுச் செல்ல முடிவெடுத்திருந்தாள் ஆரதி.அதனால் இரவு அங்கேயே தங்கி இருந்து காலை நான்கு மணியளவில் அடுத்த வேலைக்கான நேரம் ஆரம்பிக்க இருந்தாள்.
இதை ஏற்கனவே அவள் சொல்லியிருந்தால் பகல் நேரத்திற்கான மாற்றத்தில் வேறு ஒரு செவிலியர் வரலாம் என்று சொல்லி விட்டு வந்திருந்தாள்.
இரண்டு மணிநேர ஓய்வுக்குப் பின் தனது பணியைத் தொடர்வதற்காக எழுந்துக் கொண்டு சீருடையை சரி செய்து வெளியே வரும் பொழுது அங்கே வந்த செவிலியர் “சிஸ்டர் ஹெட் டாக்டர் உங்களுக்கு வேற டைம் ஷிப்ட் போடச் சொல்லி இருக்காங்க” என்றாள்.
இவளோ புரியாமல் நிற்க “சிஸ்டர் காலையில் பத்து மணிக்கு சர்ஜன் டாக்டர் விதுன் அவங்களோடு ஒரு ஆப்ரேஷனுக்கு நீங்க போகனுமாம் அடுத்து என்ன வொர்க்குன்னு அவரே சொல்வராம்”என்றவள் “நீங்க ஹெட் டாக்டர்கிட்ட கால் பண்ணி பேசுங்க” என்று அடுத்த ஒரு இடியை தலையில் இறக்கி விட்டுச் சென்றாள் அந்த செவிலியர்.
இவளோ அடுத்து என்னசெய்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தாள்.‘இப்படியா! இந்த விதி என் தலையில் பரதநாட்டியம் ஆடும்’ என்று நொந்துக் கொண்டவள் ‘'என் வேலைக்கு வேற யாரும் வெடிகுண்டு வைக்க வேண்டாம் நானே மனித வெடிகுண்டாக மாறிட்டேன் இனிமேல் வேற ஆஸ்பிட்டல் போய் தான் வேலை தேடனும் இங்கிருந்து என்னை வெளியே அனுப்ப எல்லாரும் முயற்சி பண்ணாங்க இப்போ நானே எனக்கு குழியைத் தோண்டிட்டேன் மல்லாக்க படுக்க வேண்டியது தான்’ என்று எண்ணியபடியே தலைமை மருத்துவரின் கைப்பேசி எண்ணிற்கு அழைத்தாள்.
“ஹலோ”
“ஹலோ ஆரதி”
“சொல்லுங்க டாக்டர்”
“ஆரதி புதுசா வந்திருக்கிற டாக்டர் விதுனோட சேர்ந்து வொர்க் பண்ணுங்க அவரு உன்னைத் தான் அசிஸ்டென்டா போடனும்னு நினைக்கிறார்.அதனால அவரோட சேர்ந்து நீ வேலையைப் பாரு அவரு கொஞ்ச நாளைக்குத் தான் இங்கே இருப்பாரு டாக்டர் விதுனுக்கு இங்கே பிடிச்சு இருந்தால் தொடர்ந்து இருக்கிறதை பற்றி நான் யோசிக்கிறேன்னு சொல்லி இருக்காங்க அதனாலத் தான் உன்கிட்ட கேட்கமாலே நானே ஓகே சொல்லிட்டேன் ஆரதி.நீ எப்பவும் நம்ம ஹாஸ்பிட்டல்லோட நலனைத் தானே பார்ப்பே இப்போ நமக்கு ஜெனரல் சர்ஜன்ஸ் தேவைப்படுறாங்க” என்று இதை கட்டாயமாகச் செய்ய வேண்டும் என்று அவர் தன் முடிவைச் சொன்னார்.
தலைமை மருத்துவர் சொன்ன எல்லா விஷயங்களுக்கும் “ஓகே டாக்டர்” என்று ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொண்டாள்.வேறு எதுவும் பேசக் காரணம் சொல்லாத மாதிரி அவரே அனைத்தையும் சொல்லி முடித்திருந்தார்.
சிறிது நேரம் யோசித்தவள் ‘இன்னைக்கு தப்பிக்க ஒரே வழி இந்த முகக்கவசம் தான் அப்புறம் வீட்டுக்கு போய் அமிர்தாகிட்ட டாக்டர் விதுனிடம் பேசச் சொல்ல வேண்டியது தான் நடந்த பிரச்சினைகள் அப்பொழுது தான் முடிவுக்கு வரும் என்னாலயும் நிம்மதியா வேலைப் பார்க்க முடியும் ’ என்று எண்ணியவள் ஓய்வு அறையில் படுத்துக் கொள்ள தூக்கம் கண்களை வந்து தழுவ மாட்டேன் என்று அடம் பிடித்தது.
நடந்ததை எல்லாம் நினைத்து யோசனையிலேயே இருந்தவள் எப்பொழுது தூங்கினாள் என்று அவளுக்கே தெரியவில்லை.திடீரென்று சத்தம் கேட்டு கண்விழித்தவள் சுற்றிப் பார்க்க காலை மாற்றத்திற்கான செவிலியர்கள் வந்திருந்தனர்.
கடிகாரத்தைப் பார்க்க அது எட்டு மணியை காட்டியது.இன்னும் இரண்டு மணி நேரத்தில் அவளும் தயாராகி அறுவை சிகிச்சைக்கான எல்லாவற்றையும் தயார் செய்ய வேண்டும்.
அவள் அங்கிருந்துச் செல்லவும் சுற்றியிருந்த செவிலியர்களில் ஒருத்தி “இவ இங்கே இந்த பொஸிஷன்ல இருக்கனும்னு ஹாஸ்பிட்டலே கதின்னு இருக்கா” என்றுச் சொன்னாள்.
அதற்கு இன்னொருத்தி “அதுக்கூட பரவாயில்லை புதுசா வந்திருக்கிற சர்ஜனிஸ்ட் டாக்டர் விதுன் அவரும் அவளோடத் தான் வொர்க் பண்ணுவேன் ஸ்பெஷல்லா பர்மிஷன் வாங்கி இருக்காரு இதெல்லாம் ஓவரா இல்லை ஏன் நம்மளை எல்லாம் பார்த்தா அவருக்கு தெரியலையா?” என்றாள் கோபமாக….
உடனே இன்னொருத்தி “ஆளு பார்க்க செமயா இருக்காரு நீங்க பார்த்தீங்களா? பார்க்கலாம் வேற யாருக்காவது வாய்ப்பு கிடைக்குதான்னு ஆனால் இவ இங்கே இருக்கிற வரைக்கும் அது நடக்குமான்னு தெரியலை” என்று அவர்கள் பேசிக் கொள்வதை அங்கே திரும்ப வந்த ஆரதி கேட்டுக் கொண்டிருந்தாள்.
மனதினுள் ‘கவலைப்படாதீங்க லேடீஸ் நானே வலையில் சிக்கியாச்சு இனிமேல் இந்த இடத்துல எனக்கு வேலையில்லை’ என்று புலம்பிக் கொண்டே திரும்பச் சென்றாள்.
ஏற்கனவே நோயாளியின் உறவினரிடம் காலையில் அறுவை சிகிக்சை இருப்பதால் ஆறு மணிநேரத்திற்கு முன்பே சாப்பிடச் சொல்லி முன்னேற்பாடு செய்திருந்தாள் ஆரதி.
நோயாளிகளின் உடல்நிலையை கவனித்து விட்டு அறுவை சிகிச்சைக்காக நோயாளியை தயார் படுத்தி விட்டு எல்லாவற்றையும் சரிபார்த்து முடிக்கும் பொழுது இன்னும் இருபது நிமிடங்களே இருந்தது.
அப்பொழுது விதுன் வந்ததை அறிந்தவள் நேராக அவனைப் பார்க்கச் சென்றாள்.அவளுக்குள் சிறிது தயக்கம் இருந்தாலும் இப்பொழுது அதைப் பற்றி எல்லாம் யோசிக்க நேரம் இல்லை.நோயாளியின் உடல்நிலையைப் பற்றி சொல்லி அதற்கான மருந்துகளை ஆயத்தம் செய்வது தான் முக்கியமாக இருந்தது.
நேராக அவனது அறைக்குச் சென்றவள் பதற்றத்தை மறைத்து “குட் மார்னிங் டாக்டர் எல்லாம் சரியான நிலையில் இருக்கு பேஷண்ட்டுக்கு தேவையான வேற மெடிஸின் என்னன்னு சொன்னீங்கன்னா அதையும் வாங்கி வரச் சொல்லிடுவேன்” என்றாள்.
அவனோ கோப்புக்களை சரிபார்த்தப்படி “தேவையில்லைன்னு நினைக்கிறேன் நான் ஏற்கனவே சொன்ன மெடிஸின்ஸ் எல்லாம் தயாராக இருக்கா?”
“எஸ் டாக்டர்”
“அந்த பேஷன்ட்டுக்கு கடைசியா எடுத்த இரத்த பரிசோதனைப் பற்றிய விவரம் இல்லையே”
“இதோ இங்கே இருக்கு” என்று அங்கே மேசையின் மேல் இருந்த இன்னொரு கோப்புகளில் அந்த காகிதத்தை எடுத்துக் கொடுத்தாள்.
அப்பொழுது அவள் கையில் இருந்த காயத்தைப் பார்த்தவன் “என்னாச்சு? ஏன் இப்படி உங்க கை சிவந்து வீங்கி இருக்கு?” என்றான்.
உடனே இவளோ மனதினுள் 'அடேய் பம்பரக் கட்டை மண்டையா இவரே கையைப் பிடிச்சு திருகிட்டு ஏன் இப்படின்னு நல்லவங்க மாதிரி ஒரு நலம் விசாரிப்பாங்களாம் யோவ் நீ மட்டும் இங்கே டாக்டரா வரலைன்னு என்றால் அவ்வளவு தான் நான் டெரர் பீஸ் ஆகியிருப்பேன் உன் நிலைமை அதோ கதி ஆகியிருக்கும் ’ என்று அவனை வறுத்தெடுத்துக் கொண்டிருந்தாள்.
விதுன் “ஆரதி உங்ககிட்ட தான் கேட்டேன் ஏன் அமைதியா இருக்கீங்க?சொல்ல விருப்பம் இல்லையா?”
“அப்படி எல்லாம் ஒன்னுமில்லை சார் சின்னதா சுளுக்கு பிடிச்சிருச்சு மருந்து போட்டு இருக்கேன் சரியாகிடும்” என்றாள்.
“அப்படியா! பார்த்தால் சுளுக்கு மாதிரி தெரியலை இதோ இந்த மருந்து போடுங்க சரியாகிடும் எவ்வளவு பொறுப்பான வேலையில் இருக்கீங்க உங்களை நீங்க தான் கவனமா பார்த்துக்கனும்” என்றான்.
இவளும் “தாங்ஸ் டாக்டர்” என்று மருந்தை எடுத்தவள் மனதினுள் ‘பார்டா கல் நெஞ்சுக்குள்ளும் அன்னை தெரஸா’ என்று நினைத்தவள் அங்கிருந்துச் சென்றாள்.
அறுவை சிகிச்சை எல்லாம் முடிந்தது.அப்பொழுதே நேரம் நண்பகலைத் தாண்டி இருந்தது.அடுத்து விதுனுடன் சேர்ந்து அவன் கண்காணிப்பில் உள்ள நோயாளிகளை போய் சந்திக்க வேண்டி இருந்தது.
இதுவரை மருத்துவமனைக்கான அடையாள அட்டை போடுவதற்கான வாய்ப்பு இல்லை.ஆனால் இப்பொழுது அதனைப் போட்டால் அதில் இருக்கும் ஆரதியின் புகைப்படத்தைப் பார்த்து ஓரளவிற்கு இவளைக் கண்டுபிடித்து விடலாம்.
அதற்கு என்னச் செய்வதென்று யோசித்தவள் தற்சமயம் அடையாள அட்டையை எடுத்து தன் பாக்கெட்டில் வைத்துக் கொண்டாள்.வெளியே நடக்கும் பொழுது அங்குள்ள செவிலியர்கள் இவளைப் பார்த்து முறைத்தனர்.எத்தனை முறை யாராவது சரியாக உடையை அணியாமலோ அல்லது அடையாள அட்டையை போடாமல் இருந்தால் ஆரதி மனசாட்சியே இல்லாமல் கண்டித்து பேசியிருக்கிறாள்.
இப்பொழுது அதே தவறை இவள் செய்வதைப் பார்த்த செவிலியர்களில் ஒருத்தி இவளிடம் வந்து “சிஸ்டர் உங்க ஐடி கார்டு போடலையா?” என்றதும் இவளும் வேறு வழியில்லாமல் “இதோ இருக்கு” என்று அதை எடுத்து போட்டவள் புகைப்படம் இருக்கும் பக்கத்தை திரும்பிப் போட்டவள் மனதினுள் ‘நாம செய்தது நமக்கே திரும்புதே’ என்று வேதனைப் பட்டுக் கொண்டாள்.
விதுனோடு அவள் உடன் செல்ல ஆரதி அணிந்திருந்த முகக்கவசத்தைக் கவனித்தவன் “என்னாச்சு ஏன் முகக்கவசத்தை இன்னும் கழற்றலை?”
அவன் அக்கறையாய் விசாரிக்க இவளோ மனதினுள் ‘அக்கறையைப் பாரு இன்னைக்கு உன்னாலத் தான் எனக்கு இந்த நிலைமை’ என்று நினைத்தவாறு “தொண்டை வலியா இருக்கு டாக்டர் மற்றவங்களுக்கு இன்பெக்ஷன் ஆயிடும்” என்றாள்.
அவனும் சரி என்பது போல் தலையசைத்தவன் “உங்க முகத்தைப் பார்க்கலாம்னு பார்த்தால் அது முடியலையே” என்றான்.
இவளோ ‘என் முகத்தை பார்த்தால் செத்துடுவேன்டா செத்துடுவேன் என்னைத் தான் சொன்னேன்’ என்று தலையை தொங்கப் போட்டுக் கொண்டுச் சென்றாள்.அவளின் செய்கை ஒவ்வொன்றும் அவனுக்கு வித்தியாசமாக இருந்தது.
விதுன் சொன்ன வேலைகளை முடித்தவள் அங்கே அவள் பார்க்க வேண்டிய மற்ற வேலைகளையும் முடிக்கும் போது மாலையாகிப் போனது.அவளுடைய பணிகள் முடிந்ததும் மருத்துவமனையிலிருந்து வெளியே வந்தவள் சாதாரண உடையை மாற்றிக் கொண்டு பேருந்து நிலையத்திற்கு செல்வதற்காக மருத்துவமனையின் வாயிலில் வந்து நின்றாள்.
அப்பொழுது அவளுடன் பணிபுரியும் பெண்ணொருத்தி “ஆரதி” என்று அழைக்க இவள் திரும்பிப் பார்க்கும் பொழுது எதிரே விதுன் வந்துக் கொண்டிருந்தான்.
அதைப் பார்த்தவள் ‘ஆத்தாடி இன்னைக்கு இவன் கண்ணுல சிக்குனேன் சின்னா பின்னாகி ஆயிடுவேன்’ என்று வேகமாக காதில் விழாதது போல் தலையை கவிழ்த்துக் கொண்டு வேகமாக நடந்தாள். கையில் வைத்திருந்த முகக்கவசத்தை கைப்பையில் தேடினாள்.அது கிடைக்காமல் போக ‘ஐய்யய்யோ என் கவசஉடை காணாமல் போச்சு விடுடா ஜீட்’ என்று ஓடிப் போனாள் ஆரதி.
பேருந்தில் ஏறி அமர்ந்த பிறகு தான் ஆரதிக்கு மூச்சே வந்தது.அமிர்தாவிடம் பேசலாம் என்று எண்ணியவள் கைப்பேசியை எடுத்துப் பார்க்க அதில் அமிர்தா இவளுக்கு ஒரு குறுஞ்செய்தி ஒன்று அனுப்பி இருந்தாள்.
அதைப் பார்த்தவளுக்கு இன்னும் அதிர்ச்சியாகிப் போனது.வேலையின் போது ஆரதியை கைப்பேசியில் அழைத்திருக்கிறாள்.ஆனால் அவள் தான் பணிச்சுமையின் காரணமாக எடுக்காமல் போய் இருக்கிறாள்.
‘பணியின் நிமித்தமாக இரண்டு நாள் பயணமாக அவசரமாக டெல்லி சென்றிருக்கிறேன்’ என்று மட்டும் அனுப்பி இருந்தாள்.
இதைப் பார்த்த ஆரதிக்கு என்னச் செய்வதென்றே தெரியவில்லை.விதுனின் பிரச்சினை இன்றோடு முடித்து விடலாம் என்று எண்ணினாள் எல்லாம் மாறிப் போனதை நினைத்து வருந்தியபடி அமர்ந்திருந்தாள்.இப்பொழுது கைப்பேசியில் அழைத்தாலும் பேச முடியாது விமானத்தில் பறந்துக் கொண்டு இருப்பாள்.
வீட்டிற்கு சென்றவள் களைப்பாகி அப்படியே மெத்தையில் சரிந்தாள்.சிந்தனையோ பலவாறாக யோசித்தது விதுன்கிட்ட நான் யாருங்கிற விஷயத்தை சொல்லவா? அமிர்தாகிட்ட நடந்ததை எல்லாம் ஒரு வாய்ஸ் மெஜேஜ் அனுப்பட்டுமா? அப்போ அவளும் எதாவது ஒரு யோசனை சொல்வாள் என்று பலவாறு சிந்தித்தாள்.
கடைசியில் நடந்த விஷயங்களை எல்லாம் ஒரு குரல்பதிவாக அமிர்தாவிற்கு அனுப்பி விட்டாள் ஆரதி.
அடுத்து வேறு யோசனையில் மூழ்கியவள் ‘'கைப்பிள்ளை இன்னுமா முழிச்சுட்டு இருக்கே கண்ணை மூடி தூங்கு” என்று சொன்னவள் அப்படியே தூங்கிப் போனாள் ஆரதி.