உணர்வாய் உயிராய் நீயே எந்நாளும் அத்தியாயம் -4
மறுநாள் காலையில் எழுந்தவள் அமிர்தாவிற்கு அனுப்பிய குறுஞ்செய்திக்கு எதாவது பதில் அனுப்பி இருக்கிறாளோ? என்று பார்த்தால் அது அவள் இன்னும் பார்க்கவில்லை என்பதை காட்டியது.
‘அடுத்து என்ன செய்யலாம்’ என்று யோசித்தவள் உடனே மருத்துவமனையின் கைப்பேசி எண்ணிற்கு அழைத்தவள் குரலைச் செருமியபடி “ஹலோ டாக்டர் எனக்கு ரொம்ப முடியலை நாளைக்கு வரேன் இன்னைக்கு சுத்தமாக எழுந்திருக்க கூட கஷ்டமாக இருக்கு ” என்றாள்.
வாயில் சாப்பாட்டை வைத்தப்படியே கொண்டே பேசினாள் அப்பொழுது தானே குரலில் சிறிதளவு மாற்றம் வரும் என்று நினைத்து செய்தாள்.
அவள் பேசுவதைக் கேட்டு நிலைமையை புரிந்தவர் “சரிம்மா மாத்திரைப் போட்டு நல்லா ரெஸ்ட் எடு நாளைக்கு பேசுகிறேன்” என்று அழைப்பை துண்டித்தார்.
அடுத்து என்னச் செய்யலாம் என்று ஆழமாய் யோசித்தவளுக்கு பதில் ஏதும் கிடைக்கவில்லை.எதுவாக இருந்தாலும் அமிர்தா பேசினால் தான் அடுத்த முடிவை எடுக்க முடியும் என்று நினைத்தவள் சும்மா இருப்பதற்கு வீட்டை முழுவதுமாக சுத்தம் செய்து குளிக்கச் சென்றாள்.
இதற்கிடையில் விதுன் அமிர்தாவின் அம்மாவை கைப்பேசியில் தொடர்புக் கொண்டவன் அவளின் வீட்டின் முகவரியை வாங்கிக் கொண்டான்.அமிர்தாவைப் பற்றி விசாரிக்க அவள் இவர்களின் தொழில் விஷயமாக டெல்லி சென்றிருப்பதாகச் சொன்னார்.இவனும் அமிர்தாவும் சந்தித்துக் கொண்டதாகவேச் சொன்னான்.அங்கே நடந்த விஷயங்களைப் பற்றி எதுவும் சொல்லவில்லை.
விதுன் மனதினுள் அமிர்தா இவர்களின் குடும்பத்திற்கு தெரியாமல் ஏதோ ஒன்று செய்கிறாள்? அது என்னவென்று அறிவதற்கு அவளின் வீட்டுக்கு செல்ல முடிவெடுத்து இருந்தான்.
அமிர்தாவின் தாய் அவளுடன் ஆரதி வசிப்பதைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை.அதைப் பற்றி பேச அவரும் விரும்பவில்லை.இது எல்லாம் அமிர்தாவின் கட்டாய விரும்பத்தின் பேரில் நடப்பதால் அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
விதுனின் எண்ணமோ ‘'அமிர்தா தனியாக இருப்பதால் அவளுக்கு பிடித்த ஆணுடன் தனியாக வாழ்கிறாளோ? அதனால் தான் தன்னைப் பார்க்க வராமல் இருந்ததோடு அவளின் அம்மாவிடம் இவன் கூறியது போல் சந்தித்து பேசி விட்டோம் என்ற ஒரு பதில் மட்டும் சொல்லியிருக்கிறாள் என்பதால் எல்லாம் இவனுக்கு குழப்பமாக இருந்தது.ஏதோ ஒரு திட்டம் அவளுக்குள் இருக்கிறது என்பது தான் அவன் எண்ணமாக இருந்தது.
அதனால் யாரிடமும் சொல்லாமல் அமிர்தாவின் அடுக்குமாடி குடியிருப்பிற்கு வந்தான்.அவளின் வீட்டிற்கு வந்தவன் கதவில் கடவுச்சொல் பூட்டு போட்டிருந்தது.ஏற்கனவே அமிர்தாவின் அம்மா எண்ணைச் சொல்லியிருந்ததால் அதைப் போட்டு கதவைத் திறந்தவன் வீட்டிற்குள் சென்றான்.
எப்பொழுதும் கதவை மூடுவது போல் கதவின் மேலேயும் கீழுமாக தாழிட்டு சுத்திப் பார்த்தான்.வீட்டில் யாரும் இருக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில் அவன் ஒவ்வொரு இடமாக சுற்றிப் பார்த்தவன் முதலில் இருந்த அறைக்கதவை திறந்தான்.
அப்பொழுது தான் குளித்து விட்டு நீளமான நீலநிற சல்வாரை அணிந்தபடி திரும்பி நின்று தனது நீளமுடியை விரித்து துடைத்துக் கொண்டிருந்தாள் ஆரதி.அங்கே ஒரு பெண் நின்றிருப்பதைக் கண்ட விதுன் “யாரு நீ? இங்கே என்ன பண்ணுறே?” என்று அவன் சத்தமாகக் கேட்க திடீரென்று வந்த சத்தத்தில் ஆரதி “அம்மாஆஆ… யாரு?” என்று பயத்தில் அலறியவாறு திரும்பிப் பார்க்க அங்கே விதுனைக் கண்டு இன்னும் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றாள் ஆரதி.
ஆரதியின் முகத்தையும் உதட்டின் ஓரமாக இருந்த மச்சத்தையும் வைத்து ஓரளவு யூகித்தவன் “ஹேய் அன்னைக்கு என்னை ஏமாற்ற வந்தியே அந்தப் பொண்ணு தானே நீ” என்று வேகமாக நெருங்கி வந்தான்.
இதையும் சற்று எதிர்பாராத ஆரதி ஒருநொடி அப்படியே நின்றவள் சுதாகரித்துக் கொண்டே “எப்படி கதவைத் திறந்தீங்க?”
“முதல்ல நீ யாரு? யாருமே இல்லாத வீட்டில் எப்படி வந்தே? எதாவது திருட வந்து இருக்கியா என்ன?” என்றதும் இவளுக்கு சட்டென்று கோபம் வந்தது.
“ஹலோ முதல்ல பூட்டி இருந்த கதவை திறந்து வந்ததும் இல்லாமல் தனியா இருக்கிற பொண்ணுகிட்ட வந்து அதுவும் அவ அறைக்குள்ளே வர்றீங்க உங்களை நான் என்னன்னு சொல்லட்டும்?” என்று கோபமாய் கேட்டாள்.
“பார்டா செய்ற வேலை திருட்டு இதுல நியாயம் வேற பேசுற” என்று அவனும் கத்தினான்.
“வார்த்தையை பார்த்து பேசுங்க நான் திருடின்னு சொல்லுறதுக்கு என்னைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?”
அவனோ கேவலமாக “ஆள் மாறாட்டம் பண்ணுற இதுல தெரியலை நீ பெரிய ஆளுன்னு” என்று வார்த்தைகளை விட்டான்.
அவளால் அதுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிக் கொண்டிருந்தாள்.
“உன்னால பதில் சொல்ல முடியலைல்ல ஒழுங்கா வெளியே போ” என்று அவளே எதிர்பாரா நேரத்தில் அவன் ஏற்கனவே பிடித்து காயப்பட்டு இருந்த கையைப் பிடித்து இழுத்தான்.அவனே எதிர்பார்க்காத நேரத்தில்
அவளோ வலியில் துடித்தப்படி “கையை விடுங்க எனக்கு வலிக்குது” என்றாள்.அவனோ அவள் சொல்வதை காதில் வாங்கிக் கொள்ளாமல் பிடித்து வெளியேக் கொண்டு வரவேற்பறைக்கு வரவும் அவனுடைய கைப்பேசி அழைத்தது.
யாரென்று ஆரதியின் கையைப் பிடித்தவாறே பார்த்தான்.அமிர்தா தான் அழைத்திருந்தாள்.அதைப் பார்த்து கோபமாய் அழைப்பை எடுத்தவன் “ஹலோ” என்றதும்
அமிர்தாவோ பதற்றமாய் “ஹலோ விதுன் விதுன் தானே பேசுறீங்க”
“ஆமாம் உங்க வீட்ல” என்று அவன் சொல்லி முடிக்கும் முன்னே அமிர்தா பதற்றமாய்…
“விதுன் என் வீட்டுக்கு போகாதீங்க அங்கே என்னோட ப்ரெண்ட்டும் தங்கி இருக்கா அம்மா அதை உங்ககிட்ட சொல்லலைன்னு எனக்கு இப்போத் தான் தெரிஞ்சுது அவ என்னோட பெஸ்ட் ப்ரெண்ட்” என்று பாதி கேட்கும் போதே பிடித்திருந்த பிடியின் தளர்த்தி கையை விட்டான்.
“என்னச் சொல்ற?”
“அவ தான் அன்னைக்கு உங்களை சந்திக்க வந்தது எல்லாம் எனக்கு தெரியும் மற்ற விஷயங்களை நானே நேர்ல வந்து பேசுறேன்.ப்ளீஸ் வீட்டுக்கு போகாதீங்க என்னால இப்போ பேச முடியாது” என்று இவனிடம் எந்த பதிலும் கேட்காமல் வைத்திருந்தாள்.
அவன் கையை விட்டதும் இவளோ வீங்கி இருந்த அதே இடத்தில் வலியினால் கையைப் பிடித்திருந்தாள்.இவன் திரும்பி ஆரதியைப் பார்த்தான்.அமிர்தா சொன்ன விஷயங்களைக் கேட்டு அதிர்ச்சியில் அப்படியே நின்றான்.
ஓரளவு நிலைமையைப் புரிந்துக் கொண்ட ஆரதி “உங்களுக்கு இப்போ நான் எந்த விளக்கமும் சொல்லனும் அவசியமில்லைன்னு நினைக்கிறேன்” என்றாள்.
அவனுக்கோ அவளிடம் என்ன பேசுவதென்று தெரியாமல் அப்படியே நின்றான்.
“சாரி” என்றுச் சொல்லும் பொழுது சரியாக வீட்டின் அலார மணியை யாரோ அடித்தார்கள்.சத்தத்தைக் கேட்டு பதறிய ஆரதி யாராக இருக்கும்? என்று யோசனையோடு வேகமாக போய் கதவின் இடுக்கின் வழியே பார்த்தாள்.
அங்கே அவளின் அம்மாவும் தங்கையும் நின்றுக் கொண்டிருந்தார்கள்.அதைப் பார்த்தவள் அதிர்ச்சியாகி ‘ஐயோ எனக்குன்னே வருவீங்களா’ என்று எண்ணியபடி தலையில் கைவைத்து நின்றாள்.
விதுன் இதற்கு மேல் இங்கிருந்தால் சரி வராது என்று எண்ணியவன் வேகமாக கதவின் அருகே செல்லவும் ஆரதி மெதுவாக “எங்கே போறீங்க?”
அவனோ சத்தமாய் “நான்” என்று சொல்ல வரவும் ஆறடி உயரத்தில் நிற்பவனை எவ்வி வேகமாக அவனின் வாயை தன் கைகளால் பொத்தியவள் மெதுவாக சத்தமே இல்லாமல் “வெளியே என்னுடைய அம்மா நிற்கிறாங்க ப்ளீஸ்” என்று அவன் காதருகே சொல்லவும் அவளின் சூடான மூச்சுக் காற்று அவன் மீது பட்டது.
சட்டென்று அவளின் கையைத் தட்டி விட்டான்.இதை எதிர்பார்த்தவளோ அவனின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு அறைக்குச் சென்றாள்.இதில் இரண்டாவது முறையாக அலங்கார மணியை அடித்தாள் தங்கை.
அவன் கையை விலக்கவும் விதுனிடம் கையெடுத்து கூம்பிட்டவள் “ப்ளீஸ் தயவுசெய்து வெளியே போகாதீங்க நான் பெரிய பிரச்சினைல மாட்டிடுவேன்” என்றாள்.
அவனோ சாதாரணமாய் “அதனால எனக்கென்ன?”
அவளோ “ப்ளீஸ் கொஞ்சம் நிலைமையை புரிஞ்சுக்கோங்க என்னோட அம்மா வெளியே நிற்கிறீங்க இந்த மாதிரி நான் தனியாக இருக்கும் போது நீங்க வந்து இருக்கீங்க அதனால தேவையில்லாத பிரச்சினை தான் வரும் எனக்காக இந்த ஒரு ஹெல்ப் பண்ணுங்க அதுக்காக நீங்க என்னச் சொன்னாலும் நான் கேட்பேன்” என்றாள்.
இவனும் வேறு வழியில்லாமல் “சரி இப்போ நான் என்னச் செய்யனும்?”
அவளோ என்னச் செய்வதென்று தவித்தவள் “கட்டில் கீழே ஒளிஞ்சுக்கிறீங்களா?”
அவனோ கட்டில் அருகில் நின்றுப் பார்த்தான்.இவன் கீழே ஒளிந்துக் கொண்டான் என்றால் நிச்சயம் தெரியும் என்று உணர்ந்தவன் “இங்கே சரிப்பட்டு வராது நாம மாட்டிக்குவோம்” என்றான்.
அப்பொழுது ஆரதியின் கைப்பேசி அழைக்க அம்மாவின் பெயர் தெரிந்தது.அழைப்பை எடுத்தவள் “அம்மா நான் குளிச்சிட்டு இருக்கேன் நீங்க பிறகு வாங்களேன்”
“ஏன் கதவை திறக்க முடியலை நான் உன்கிட்ட இப்போ வரப் போறேன்னு சொல்லத் தானே செய்தேன்”
“அம்மா ஞாபகம் இல்லாமல் கதவை உள்ளே தாழ் போட்டு இருக்கேன்”
“நான் வெயிட் பண்றேன் நீ வந்து கதவை திற” என்றார்.இதற்கு மேல் சமாளிக்க முடியாது என்று புரிந்தவள் அழைப்பை துண்டித்து விட்டு விதுனைப் பாவமாக பார்த்தாள் ஆரதி.
அவளின் நிலைமையைப் பார்த்த விதுனுக்கு பாவமாக இருந்தது.சுற்றும் முற்றும் பார்த்தவன் ஜன்னலோரமாய் இருந்த நீண்ட திரைச்சீலைகளுக்கு பின் நின்றுக் கொண்டான்.அவன் அங்கே நிற்பது யாருக்கும் தெரியவில்லை என்பதை உறுதி செய்தவள் தலைமுடியை துண்டால் கட்டிவிட்டு முகத்தில் தண்ணீரை தெளித்தபடி அங்கே இருந்த அவனுடைய காலணியை எடுத்து ஒளித்து வைத்தாள்.வேகமாக கதவை திறந்தாள்.
உள்ளே வந்த ஆரதியின் அம்மாவும் தங்கை சங்கரியும் சேர்ந்து “எவ்வளவு நேரமா எங்களை வெளியே வெயிட் பண்ண வைச்சுட்டே கால் வலிக்குது” என்று அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தனர்.கையில் கொண்டு வந்த பைகளை அங்கிருந்த மேசையின் மீது வைத்தனர்.
ஆரதியின் அம்மா “ஆரதி கொஞ்சம்போய் குடிக்க தண்ணீர் எடுத்துட்டு வா தாகமா இருக்கு” என்றதும் வேகமாக போய் தண்ணீரை எடுத்து வந்து கொடுத்தாள்.
சங்கரி “ஏன் முகமே சரியில்லை ஒரு மாதிரி பதற்றமாக இருக்கே”
அவள் அப்படிக் கேட்டதும் திக்கென்று ஆனவள் மனதினுள் ‘அவ்வளவு அப்பட்டமாகவா தெரியுது இருக்காதே!’ என்று வேகமாக எதிரே இருந்த கண்ணாடியில் முகத்தைப் பார்த்தாள்.
இதைப் பார்த்த அம்மாவும் தங்கையும் சிரிக்க இவர்கள் பேசுவதை எல்லாம் உள்ளிருந்து திரைச்சிலை வழியே தலையை மட்டும் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த அவனுக்கும் சேர்த்து சிரிப்பு வந்தது.
சங்கரி சிரிப்பதைப் பார்த்த அவள் வேகமாக தங்கையின் அருகில் வந்து முதுகில் இரண்டு அடி போட்டவள் “குரங்கு குரங்கு சேட்டை எல்லாம் பண்ணுற” என்றாள்.
உடனே அவள் அம்மாவோ “தப்பு உன் மேல உன்னை யாரு கண்ணாடியில போய் பார்க்கச் சொன்னா?” என்று அவர் வேறு அவளை கிண்டல் செய்தவர் “அம்மாகிட்ட வா தலையை துவட்டி விடுறேன்” என்று பக்கத்தில் அழைத்து துடைத்து விட்டார்.
“அம்மா நீங்களுமா போங்க” என்று சிணுங்கினாள்.
தங்கையோ முதுகை தடவியபடி “இதுக்கு தான் அமிர்தா அக்கா வீட்ல இல்லைன்னா நான் வர மாட்டேன்னு சொன்னேன் பாருங்க இவ என்னைப் போட்டு அடிக்கிறாள்” என்று தாயிடம் புகார் அளித்துக் கொண்டிருந்தாள்.ஆரதி தான் பயந்து போய் நின்றாள்.
அவளின் நீளமான கூந்தலை விரித்து விட்டவர் “இந்த முறை தான் தலையை ஒழுங்கா துவட்டி துண்டைக் கட்டியிருக்கே” என்றார்.
ஆரதியின் அம்மாவோ சுற்றிப் பார்வையை சுழல விட்டவர் “ம்ம்…
வீட்டை நல்லா சுத்தமா வைச்சு இருக்கியே பரவாயில்லை போன தடவை வரும் பொழுது உள்ளேயே வர முடியலை துணி எல்லாம் அங்கங்கே போட்டு ப்பா” என்று எழுந்து சுற்றிப் பார்க்க ஆரம்பித்தார்.
உடனே அவள் தங்கை சங்கரியோ சிரித்தப்படி “சரியான கப்பு மூட்டைன்னு சொல்லுறீங்களா ஹஹா ஹா” என்று சிரிக்கவும் ஆரதி அவளை அடிக்க வரவும் இம்முறை முன்னரே கவனமாக இருந்த அவள் தங்கையோ நகர்ந்துக் கொள்ள கடுப்பான ஆரதி எட்டிப் போக அவளோ ஓடினாள்.
ஆரதி தங்கையைப் பிடிக்கும் ஆர்வத்தில் பின்னாலேயே ஓடிப் போனாள்.அவளோ நேராக ஆரதியின் அறைக்குச் செல்ல இவளோ இன்னும் பதற்றமானாள்.
நேராக கட்டிலில் ஏறியவள் “முடிஞ்சா என்னைப் பிடிச்சுப் பாரு” என்றாள்.
இவளோ பதறியவாறு “முதல்ல கீழே இறங்கு சங்கரி பின்னாடி நிறைய பொருள் இருக்கு கீழே விழுந்திடப் போகுது” என்றாள்.
அவளோ அதைக் கண்டுக் கொள்ளாமல் “விடிஞ்சு இவ்வளவு நேரமாகுது ஏன் இன்னும் ஜன்னலைத் திறக்கலை?” என்று வேகமாக அந்தப் பக்கமாக குதித்தாள்.
இவளுக்கோ ‘மாட்டினியா பங்கு இவ பண்ற இம்சை தாங்க முடியலைடா தல வலிக்குதுடா வலிக்குது’ என்று புலம்பிக் கொண்டே பயந்தவள் அவள் அருகே வேகமாக ஓடினாள்.