உணர்வாய் உயிராய் நீயே எந்நாளும் அத்தியாயம் -5
சங்கரி வேகமாக திரைச்சீலைகளை கொஞ்சம் நீக்கவும் கையைப் பிடித்துக் கொண்ட ஆரதி “இரு நானே திறக்கிறேன்” என்றதும்
சங்கரி “ஏன் நான் திறந்தால் துணி நகராதோ?” என்று கேள்வியாகக் கேட்டாள்.
உடனே ஆரதி “இப்போத் தான் எல்லாத்தையும் க்ளீன் செய்து புதுசா மாட்டிக்கிறேன்.நீ இழுக்கிறேன்னு கீழே தள்ளி விட்டால் எனக்குத் தான் ரெண்டு வேலை” என்று விதுன் நின்றிருப்பது தெரியாதது போல் மெதுவாக தள்ள அவனும் மெதுவாக நகர்ந்தான். அவனை மடக்கிய திரைச்சீலையில் ஒளிந்து நின்றாலும் எதுவும் தெரியாதது போல் அவனருகே நெருக்கமாக நின்றாள்.
ஆரதி விதுனின் நெஞ்சோடு சாய்ந்த மாதிரி நின்றுக் கொண்டிருக்க அவனின் கைகளோ நடுங்கிக் கொண்டிருக்கும் அவளின் கைகளோடு உரசியது.அவனுக்கு இது ஒருவிதமான புது அனுபவத்தை தந்தது.இதுவரை யாரையும் இவ்வளவு நெருக்கமாக அவன் அனுமதித்ததும் இல்லை.
சங்கரி “எதுக்கு இங்கேயே நிற்கிற? உன் வேலையைப் போய் பாரு”
அவளோ சளைக்காமல் “என் வேலைத் தான் பார்க்கிறேன்”
“என்ன?”
“உன்னை கவனிக்கிறது தான் என் வேலை போன தடவை நான் இல்லாத நேரத்தில் வந்து என்னோட டிரஸ்ஸை எடுத்துட்டு போறேல்ல” என்றதும் அவளை பார்த்து முறைத்தவள் அங்கிருந்து வெளியே சென்றாள்.
நிம்மதியாக பெருமூச்சு விட்டவள் கொஞ்சம் சத்தமாக “காலையில என்னா விளையாட்டுக்கு காட்டுறாங்க எப்படி எல்லாம் சோதிக்கிறாய்ங்க பொழுது விடிய விடமாட்டேங்கிறாய்ங்க எவ்வளவோ பார்த்துட்டோம் இதை பார்த்திட மாட்டோமா? போவாம்” என்று புலம்பியபடி தலையில் அடித்துக் கொண்டே சங்கரியின் பின்னால் போனாள் ஆரதி.
அவள் சொன்னதைக் கேட்டு சத்தமாக சிரிக்க வந்ததை அடக்கி சிரித்தவன்
அதுவரை மூச்சு சத்தம் வெளியே தெரியாத மாதிரி நின்றவன் சீராக மூச்சுவிட்டப்படி கதவின் பின்னால் போய் நின்றுக் கொண்டவன் ஒரு பதுகாப்பிற்காக அலமாரியின் கதவை லேசாக திறந்து வைத்தான்.
சங்கரி அமிர்தாவின் அறையில் போய் நின்றுக் கொண்டாள்.ஆரதி அம்மாவிடம் “அம்மா நான் இன்னும் கொஞ்ச நேரத்தில் டியூட்டிக்கு கிளம்பிடுவேன்” என்றாள்.
அவரோ “நான் கொண்டு வந்ததை சாப்பிட்டு போ நாங்களும் கிளம்புறோம் மற்றதை எல்லாம் பிரிஜ்ஜில் வைச்சுட்டேன் அமிர்தா வந்தால் அவளுக்கும் கொடு” என்றவர் ஆரதியை மேலும் கீழுமாக பார்த்தவர் “என்கிட்ட எதாவது மறைக்கிறியா? ஏன் நாங்க வந்ததுல இருந்து ஏதோ யோசனையில் இருக்கே”
என்று மகளின் முகத்தைப் பார்த்துக் கேட்டார்.
உடனே ஆரதி மனதினுள் ‘ஆத்தீ நம்மளை விட மாட்டாங்க போல’ என்று நினைத்தவாறு…
“நீங்க நினைக்கிற மாதிரி ஒன்னுமில்லை கொஞ்சம் வொர்க் அதிகம்” என்றாள்.
“சரி உடம்பை பார்த்துக் கோ வா சங்கரி போகலாம்” என்ற பொழுது சங்கரி “அம்மா ஒரு நிமிஷம்” என்று நேராக ஆரதியின் அறைக்குள் ஓடினாள்.
இதைப் பார்த்து பதறியடித்துக் கொண்டு பின்னாலேயே போன ஆரதி அங்கே சங்கரி போன முறை விட்டுச் சென்ற தன்னுடைய தலைக்கச்சுவை எடுத்தாள்.ஆரதி பின்னாலேயே வந்ததைப் பார்த்த சங்கரி “இந்த ரூம்ல என்னத் தான் ஒளிச்சு வைச்சு இருக்கேன்னு தெரியலை ஏன் இப்படி இங்கேயே கதின்னு இருக்கியோ தெரியலை கண்டுபிடிக்கிறேன் கூடிய சீக்கிரம் கண்டுபிடிக்கிறேன்” என்று ஆரதியைப் பார்த்து முறைத்துக் கொண்டுச் சென்றாள்.
ஆரதியோ “நல்லா குற்றாலத்துல இருக்க வேண்டியது இங்கே எனக்கு தங்கச்சியா பிறந்து என் உசுற வாங்க வேண்டியது இதுல டையலாக்கு ஒரு கேடு” என்றதும் சங்கரி “பரவாயில்லை நீ யாருன்னு ஒத்துக்கிட்டே பாரு அங்கே இருக்கே நீ” என்று சொல்லி விட்டு திரும்பிப் பார்க்காமல் ஓடிப் போனாள் சங்கரி.
இவர்கள் இருவரும் பேசுவதைக் கேட்டு சிரித்துக் கொண்டிருந்தான் விதுன்.ஆரதியும் அவள் தங்கையும் சேர்ந்து செய்யும் சேட்டைகள் இவனுக்கு பிடித்திருந்தது.
உடன்பிறப்புகள் யாரும் இல்லாமல் தனியாக வளர்ந்தவனுக்கு இதுவெல்லாம் புதிதாக இருந்தது.
அம்மாவும் சங்கரியும் சென்ற பிறகு கதவின் மீது சாய்ந்தவள் சீராக மூச்சு விட்டாள்.’'ஷ்ப்பா… கொஞ்ச நேரத்துல என்னை அள்ளு விட வைச்சுட்டா இந்த சங்கரி அடுத்த தடவை உன்னை நல்லா கவனிச்சு அனுப்புறேன்’ என்று நினைத்தவள் சட்டென்று நினைவு வந்தவளாய் விதுனைத் தேடி திரைச்சிலைக்கு பின்னால் போய் அவனைத் தேடினாள்.
அங்கே அவன் இல்லாததைக் கண்டு பதறியவள் “விதுன் எங்கே இருக்கீங்க?” என்று கட்டிலில் கீழே தேடி வந்து கதவின் அருகே வரவும் அவனும் சட்டென்று முன்னால் வரவும் பயந்தவள் கண்களை மூடியபடி அவன் மேலேயே சாய்ந்து விழுந்தாள்.
தன் மேலே விழுந்தவளை அப்படியே இரு கரங்களால் அவன் பிடித்துக் கொள்ள ஆரதியின் வதனம் முழுதாய் அவன் கண்களை ஆட்கொண்டிருந்தது.
மெதுவாக கண்களை திறந்தவள் அவனோடு நிற்பதை அறிந்து சட்டென்று நகர்ந்து போனவள் “சாரி மன்னிச்சிடுங்க உங்களை காணோம்ங்கிற பதற்றத்தில் தான் விழுந்துட்டேன்” என்றாள்.
அவனோ சட்டென்று தோன்றிய புன்னகையை மறைத்தப்படி அமைதியாக நின்றான்.அவள் கையில் இருந்த காயத்தைப் பார்த்தவன் “உங்க கையில என்னாலத் தான் இப்படி ஆயிடுச்சோ மன்னிச்சிடுங்க,நான் வேணும்னே செய்யலை என்னையும் அறியாமல் நடந்ததுச்சு” என்றான் வருத்தத்தோடு…
ஆரதியோ “பரவாயில்லை தாங்ஸ் எனக்கு நீங்க தான் பெரிய உதவி செஞ்சு இருக்கீங்க என்னைக்குமே அதை மறக்க மாட்டேன்” என்றாள்.
அவனோ காற்றே இல்லாதது போல் “இருந்தாலும் என்னால தானே உங்களுக்கு மருந்து வாங்கித் தரேன் என்றவன் ம்ம்… ரொம்ப வியர்க்குது இப்படியா! இவ்வளவு நேரம் காக்க வைப்பீங்க?” என்றான்.
உடனே பதறியவளோ “சாரி நான் வேணும்னு செய்யலை அம்மாவை உடனே அனுப்பிட முடியாதுல்ல அப்புறம் அவங்களுக்கு சந்தேகம் வந்துடும் அதனாலத் தான் நீங்க ஹால்ல வந்து உட்காருங்க உங்களுக்கு குடிக்க என்ன கொண்டு வரட்டும் காபியா? டீயா?” என்றாள்.
அவனோ “நான் ஒன்னும் அதெல்லாம் குடிக்க இங்கே வரலை” என்றான்.
உடனே அவளோ “எனக்காக இவ்வளவு பெரிய ஹெல்ப் பண்ணியிருக்கீங்க இதுல ஒரு காபிக் கூட தர மாட்டேனா? வாங்க உட்காருங்க” என்று அவனை கட்டாயப்படுத்தி வரவேற்பறையில் உட்கார வைத்தவள் அவனுக்கு காபி போட்டுக் கொடுத்தாள்.
அதை வாங்கி ஒரு மிடறு குடித்தவனுக்கு ரொம்பவே பிடித்திருந்தது.வீட்டில் போடப்படும் இந்த டிகிரி காபி எல்லாம் அவன் நினைத்து பார்த்திராத ஒன்று.
படிக்க ஆரம்பித்ததிலிருந்து விடுதியே வாழ்க்கையாகி போனவனுக்கு இப்பொழுது தான் அவன் சமைத்துச் சாப்பிட ஆரம்பித்து இருக்கிறான்.ஆனால் இப்படி மணம் மாறா சுவையோடு இன்னொருவரின் கைப்பக்குவத்தில் குடித்தவனுக்கு மனமெங்கும் மகிழ்ச்சி தான்.
அதை முகத்திலும் அவன் அப்பட்டமாய் காட்ட அதைக் கண்டுக் கொண்ட ஆரதி “காபி உங்களுக்கு பிடிச்சு இருக்கா?”
என்றதற்கு “ஆமாம்” என்று பதிலளித்தவன் எதுவும் பேசாமல் காபியை குடிப்பதிலேயே கவனமாக இருந்தான்.அவனின் செயலைப் பார்த்து சிரித்தவள் “இன்னைக்கு எங்க அம்மா சாப்பாடு கொண்டு வந்து இருக்காங்க நல்லா இருக்கும் சாப்பிட்டுட்டு போங்களேன்” என்றாள்.
அவளை மேலும் கீழுமாக பார்த்து முறைத்தவன் “என்ன நீங்க? என்னைப் பார்த்தால் எப்படி தெரியுது ஏதோ காபி குடிக்கச் சொன்னீங்களேன்னு சரின்னு சொன்னேன் அதுக்காக சாப்பிடுவேன்னு நினைச்சீங்களோ?” என்றான் முகத்தை கோபமாக வைத்தபடி …
ஆனால் அவனின் கண்களோ ஆவலாக தேடியதைக் கண்டுக் கொண்டவளோ “நீங்க என்னுடைய வீடுன்னு நினைக்க வேண்டாம் உங்க அமிர்தா வீடுன்னு நினைச்சா
சரியாக இருக்கும்” என்ற பொழுது அவனுக்கு அதற்கு மேல் இருப்பது சரியாக வராது என்பதால் அவன் செல்வதற்கு முடிவெடுத்தான்.
ஆரதிக்கோ தன்னைப் பற்றிய உண்மையான விவரங்களை சொல்லி விட நினைக்கும் போது அவனுடைய கைப்பேசி அழைத்தது.அதை அழைப்பை எடுத்தவன் “ஹலோ சரி அப்படியா! இதோ வரேன்” என்றவன் “நான் இப்போ அவசரமாக போகனும்” என்றவன் “நாம பிறகு பேசலாம்” என்று அவன் வாசலுக்கு அருகில் சென்றான்.
இவளோ வேகமாக அவளுடைய அம்மா கொண்டு வந்திருந்த பையில் இருந்து இரண்டு டப்பாக்களை எடுத்து உடனே ஒரு பையில் வைத்து வேகமாக வரவும் விதுனோ தன் காலணியைத் தேடிக் கொண்டிருந்தான்.
அவள் ஒளித்து வைத்திருந்த இடத்திலிருந்து எடுத்துக் கொடுத்தவள் “சாரி அம்மா வந்தால் கண்டுபிடிச்சுடுவாங்கல்ல அதான் மறைச்சு வைச்சிட்டேன்” என்றாள்.
அவன் வெளியே போகும் போது “ப்ளீஸ் அவசரமாக போறீங்க ப்ரீயா இருக்கும் போது சாப்பிடுங்க எங்க அம்மா சமைத்தது நல்லா இருக்கும்” என்று அவன் கையில் கட்டாயப்படுத்திக் கொடுத்து விட்டாள்.
அவனும் வேறுவழியில்லாமல் அதை வாங்கிக் கொண்டு தன்னுடைய மகிழுந்தில் வைத்து விட்டு நேராக மருத்துவமனைக்குச் சென்றான்.அங்கே அவன் ஏற்ககைவே அறுவை சிகிச்சை செய்திருந்த நோயாளிக்கு முடியாமல் போகவே அவன் நேரில் சந்திக்க வேண்டி இருந்தது.
ஆரதிக்கோ தான் யாரென்ற விவரத்தைச் சொல்லலாம் என்று நினைத்த பொழுது அது நடவாமல் போக வருந்தினாலும் நிச்சயம் நாளை விதுனுக்கு தெரிந்து விடும் என்று நினைத்தாள்.
அமிர்தா ஆரதிக்கு குறுஞ்செய்தி ஒன்று அனுப்பி இருந்தாள்.
“நாளை இரவு வந்து உன்னிடம் வந்து எல்லாவற்றையும் பேசுகிறேன்” என்று முடித்து இருந்தாள்.அதை பார்த்தவளோ “இங்கே எல்லாம் முடிந்த பிறகு என்னச் சொல்லப் போகிறாயோ?” என்று யோசித்தாள் ஆரதி.
மருத்துவமனையில் இருந்த அந்த நோயாளியின் நிலைமையைப் பார்த்து அவருக்கு தேவையான சிகிச்சைகளை விதுன் மேற்கொண்டு அதை முடிக்கும் போது இரவாகிப் போனது.
மிகுந்த சோர்வுடன் வந்தவன் மகிழுந்தில் இருந்த பையைப் பார்த்தான்.பிறகு தான் ஆரதியின் நினைவு வந்தது.அப்பொழுது தான் இவ்வளவு பேசியும் அவளுடைய பெயரையோ அல்லது கைப்பேசி எண்ணையோ வாங்காமல் வந்திருந்தது நினைவுக்கு வந்தது.
அமிர்தாவிடம் பேசி அவளைப் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டும் நினைத்து இருந்தான். தன்னுடைய வீட்டுக்குச் சென்றவன் அவள் கொடுத்திருந்த உணவை திறந்துப் பார்த்தான்.ஒரு டப்பாவில் இடியாப்பமும் இன்னொன்றில் கறிக்குழம்பும் இருந்தது.
அதுவும் இந்த இடியாப்பம் சின்னதாக இட்லி அளவில் இருந்தது.அதைப் பார்த்து அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.நுண்ணலை அடுப்பில் வைத்து சூடேற்றி குளித்து விட்டு வந்து சாப்பிட ஆரம்பித்தான் விதுன்.அவ்வளவு ருசியாக இருக்க கொடுத்த அனைத்தையும் முழுதாக சாப்பிட்டு முடித்தவனுக்கு ஆரதியை நினைத்தால் தோன்றிய புன்னகையை அவனால் மறைக்க முடியவில்லை.
அவள் தங்கை சங்கரியோடு சேர்ந்து செய்யும் சேட்டைகளை எண்ணியபடியே அவன் நெஞ்சோடு அவள் சாய்ந்து நின்றதை நினைத்து படுக்கையில் அப்படியே தூங்கிப் போனான்.
மறுநாள் காலை அலாரம் சத்தம் கேட்டு எழுந்தவனுக்கு அப்பொழுது தான் நினைவுக்கு வந்தது.தூக்கம் வராமல் அவன் எப்பொழுதும் தொலைக்காட்சியை அப்படியே போட்டு விட்டு தூங்கும் பழக்கம் இருந்தவனுக்கு இன்றைக்கு எல்லாம் வித்தியாசமாக இருந்தது.
தன்னைத் தானே நினைத்து சிரித்தவன் எழுந்து அன்றைய நாளை உற்சாகமாக ஆரம்பித்தான்.இங்கே ஆரதி தன்னுடைய தனிப்பட்ட வேலைகளை முடித்து விட்டு அம்மா கொடுத்திருந்த இறால் தொக்கை சாதத்தோடு எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்றாள்.
இன்றைக்கு விதுன் தன்னைப் பற்றி என்னச் சொல்லப் போகிறானோ? என்ற யோசனையோடுச் சென்றாள் ஆரதி.
மருத்துவமனையில் தன்னுடைய அன்றாட பணிகளை எப்போதும் போல் பார்த்துக் கொண்டிருந்தாள்.விதுனின் பணிக்கான நேரத்தை அட்டவணையில் பார்க்க மதியத்திற்கு மேல் தான் போட்டிருந்தது.அதனால் கொஞ்சம் ஆசுவாசமாக வேலைகளைத் தொடர்ந்தாள்.
அங்கே ஒரு நோயாளிக்கு இரத்தபரிசோதனைக்காக இரத்தத்தினை எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது அங்கே இவளுடன் பணிபுரியும் செவிலியர் இவளருகே பின்னால் வந்து “சிஸ்டர் ஆரதி டாக்டர் வந்துட்டாங்க” என்றதும் அவளோ அதில் கவனமாக “இதோ ஒரு நிமிஷம்” என்று திரும்பிப் பார்க்காமல் ஊசியை எடுத்து விட்டு பஞ்சால் தேய்த்து விட்டு நிமிர்ந்துப் பார்க்க அங்கே விதுன் நின்றுக் கொண்டிருந்தான்.
இருவரும் ஒரே நேரத்தில் பார்த்துக் கொள்ள விதுன் அதிர்ச்சியில் அப்படியே விக்கித்துப் போய் நின்றவன் “ஆரதி அப்போ அன்னைக்கு” என்றதற்கு இவளோ “நான் தான்” என்பது போல் தலையசைத்தாள்.
‘மாட்டிக்கினாரு ஒருத்தரு இவரை காப்பாத்தனும் கர்த்தரு’ என்ற நிலைமையில் அவனை பார்த்தாள் ஆரதி.
பக்கத்தில் இருந்த செவிலியர் இருவரையும் ஒரு மாதிரி பார்த்ததும் சூழ்நிலை புரிந்து விதுன் நேராக நோயாளியைப் பார்க்கச் சென்றான்.தோன்றிய ஆச்சரியத்தை மறைத்தப்படியே இதயதுடிப்பு மானியை எடுத்து பரிசோதிக்க ஆரதி தன் வேலையைப் பார்க்கச் சென்று விட்டாள்.
அடுத்தடுத்து பணிகளைசச் செய்யச் சென்றாலும் மனம் முழுவதும் ஆரதியைப் பற்றியே நினைத்தது.
விதுனுக்கு எதுவும் நம்ப முடியவில்லை.இந்த ஆரதியிடம் இன்னும் எத்தனை இரகசியங்கள் மறைந்து இருக்கிறதோ? என்று யோசித்தவனுக்கு பொறுக்க முடியாமல் நேராக அவள் இருக்கும் இடம் சென்றவன் அவளைப் பார்த்தவன் அப்படியே நின்றான்.
நேற்று அவளை அவன் பார்த்த நிலைக்கும் இப்போது முழுவதுமாக தனது குணநலன்களுக்கு மாறாக நிற்பவளைப் பார்த்தான் விதுன்.
அங்கே அவன் நிற்பதைப் பார்த்த ஆரதி “டாக்டர் சொல்லுங்க உங்க அவுட் பேஷண்ட் பார்க்கிற நேரம் வந்துடுச்சா?” என்றதும் அவனோ தடுமாறிய படி “கொஞ்சம் உள்ளே வாங்க பேசனும்” என்றான் வெளிப்படையாக…
இதை அங்கே சுற்றியிருந்த ஆண்,பெண் செவிலியர்களும் இரண்டு மருத்துவர்களும் பார்த்தனர்.விதுன் வந்த மூன்றே நாட்களில் இருவருக்கும் அந்தளவிற்கு நெருக்கம் ஆகிவிட்டதோ? என்பது தான் அங்கிருந்தவர்களின் யோசனையாக இருந்தது.
ஆரதிக்கு என்னச் சொல்வதென்று தெரியாமல் அவன் பின்னாலேயே சென்றாள்.