உணர்வாய் உயிராய் நீயே எந்நாளும் அத்தியாயம் -6
விதுன் நேராக தன் அறையில் உள்ள மேசையின் மீது சாய்ந்து நின்றபடி கைகள் இரண்டையும் மார்பின் குறுக்கே கட்டியபடி நின்றிருந்தான்.
ஆரதி “டாக்டர் சொல்லுங்க என்ன விஷயம்?” என்றாள் ஒன்றும் நடவாதது போல்…
அவனோ அவளைப் பார்த்து முறைத்தப்படி “நான் எதுக்கு உங்களை அழைச்சேன்னு தெரியாது அப்படித் தானே” என்றான்.
அவளோ ஆமாம் என்பது போல் அப்பாவியாய் தலையாட்டினாள்.அவனோ அவளைப் பார்த்து முறைக்கவும் இவளோ அவனைப் பார்த்து சிரிக்கவும் “இப்போ பதில் வரலைன்னா என் சந்தேகத்தை வெளியே போய் தீர்த்துக்கலாம்னு நினைக்கிறேன்” என்று எழுந்துக் கொள்ளும் போது…
ஆரதியோ “டாக்டர் சாரி ப்ளீஸ் டாக்டர் நானே சொல்றேன் நீங்க அந்தளவுக்கு ரிஸ்க் எடுக்க வேண்டாம்” என்றதும் அவனோ வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு “ரிஸ்க் எடுக்கிறது எல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி புரியுதா?” என்று அவன் கைநீட்டி எச்சரிக்கை செய்தான்.
இதைப் பார்த்து ஆரதிக்கு சிரிப்பு வந்தது.அவளோ அதை தெரியாத மாதிரி காட்டிக் கொள்ள அவனோ “இது சரிப்பட்டு வராது” என்று சொல்லி அவன் எழுந்துக் கொள்ளவும் “டாக்டர் இப்படி பொசுக்கு பொசுக்கு கோபம் வந்தால் சரிப்பட்டு வராது. என்ன நடந்துச்சுன்னா” என்று நடந்ததைச் சொன்னாள்.
“அமிர்தாவிற்கு திருமணம் செய்துக் கொள்ள விருப்பமில்லை.அவள் அம்மாவிடம் சொன்னால் அவர்களோ அதை கேட்க தயாராக இல்லை.அன்றைக்கு முக்கியமான மீட்டிங் இருந்ததால் என்னை போகச் சொல்லி கேட்டாள் என்னால எதுவும் மறுப்பு சொல்ல முடியலை அதனால் தான் வந்தேன் ஆனால் வந்த உடனேயே என்னை நீங்க கண்டுபிடிச்சுட்டீங்க அதோட ஹாஸ்பிடல் வந்தால் நீங்க தான் இருந்தீங்க நான் யாருன்னு அடையாளம் காட்டினால் தேவையில்லாத பிரச்சினை வரும்னு நான் அமைதியா இருந்துட்டேன்” என்று தன் பக்க நியாயங்களை சுருக்கமாகச் சொன்னாள் ஆரதி.
ஆரதி சொன்னதை எல்லாம் கேட்டு அவன் ஆழ்ந்த யோசனையில் இருக்க… ஆரதியோ “உங்ககிட்ட உண்மையை சொல்லிடலாம்னு தான் நினைத்தேன் ஆனால் எதிர்பாராத விதமாக அவள் வெளியூர் போனதுனால சரியான விளக்கம் கொடுக்க முடியலை டாக்டர் மற்றபடி உங்களை ஏமாற்றனும் எண்ணம் எனக்கு கிடையாது” என்றாள்.
விதுன் “நேற்றைக்காவது சொல்லி இருக்கலாமே!”
“நான் சொல்லலாம்னு நினைத்தேன் ஆனால் உங்களுக்கு முக்கியமான போன் வரவும் அவசரமாக கிளம்பிட்டீங்க அதனால் தான் சொல்ல முடியலை” என்றாள்.
அவன் யோசித்துக் கொண்டிருக்க ஆரதியோ விதுனைப் பார்த்து “அமிர்தாவிற்கு நீங்க நெருங்கிய சொந்தமா?” அவனைப் பற்றி அறியும் ஆவலில் கேட்டாள்.
அவனோ “அமிர்தாவுடைய அம்மாவும் என்னோட அம்மாவும் ப்ரெண்ட்ஸ்.எனக்கு அவளை சின்ன வயசுல இருந்து தெரியும்.அமிர்தாவின் அம்மாக்கு பிடிக்கவும் தான் பார்க்க சொன்னாங்க.அதுவும் அவள் எல்லா வரன்களையும் தட்டிக் கழிப்பதாக ஆண்ட்டி வருத்தப்பட்டு பேசியதால் அதற்கான காரணத்தை என்னனன்னு பார்க்கவும் வந்தேன்” என்றான்.
ஆரதி ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.விதுன் “என்ன காரணமாக இருக்கட்டும் ஆரதி அமிர்தா பொறுமையா அவங்க அம்மாகிட்ட எடுத்து சொல்லலாமே எந்த உறவும் இருக்கும் போது அதனுடைய அருமை நமக்கு தெரியாது.அதுவும் அம்மா என்ற உறவு நமக்கு நல்லதை மட்டும் தான் நினைப்பாங்க” என்றான்.
ஆரதியால் பதில் எதுவும் சொல்ல முடியவில்லை.அவன் சொல்வதும் உண்மை தான்.அமிர்தாவிற்கு சாதாகமாக பேச அவளிடம் காரணமில்லை.
மேலும் விதுன் “ஆரதி நீ சொன்ன விஷயங்கள் மூலமாக நான் புரிந்தது இது தான் அமிர்தாவிற்கு இது மட்டும் காரணமில்லை அவள் யாருக்கும் தெரியாமல் யாரையோ காதலிக்கிறாள் இல்லைன்னா தன் காதலிக்கிறதை விஷயத்தை சொல்லாமல் இருக்கிறான்னு நினைக்கிறேன்” என்றான்.
அவன் சொன்னதை கேட்டும் இன்னும் அதிர்ச்சியானாள் ஆரதி.மனதினுள் 'சொல்றது புரியுது ஆனால் புரியாத மாதிரியும் இருக்கே’ என்று அவனைப் புரியாமல் பார்த்தாள்.
அவளின் நிலைமையைப் புரிந்துக் கொண்டவன் அவளருகில் வந்து “நான் என்ன சொல்ல வர்றேன்னா இனிமேல் அமிர்தாவைப் பற்றி எல்லா விஷயங்களையும் என்கிட்ட சொல்றே அதன் மூலமாக உண்மை என்னன்னு நாம கண்டுபிடிக்கிறோம் சரியா?இதைப் பற்றி அமிர்தாவுக்கே தெரியாமல் ஓகேவா?” என்று அவளுக்கு நேராக இவன் கையை நீட்டினான்.
இவளோ யோசனையோடு அமைதியாய் நிற்க… அவனோ “ம்ம்… கையைக் கொடுங்க நாம இனிமேல் பார்ட்னர்ஸ்” என்றதும் இவளும் வேறு வழியில்லாமல் அவனுடன் கைக்கோர்த்து ஒத்துக் கொண்டாள் ஆரதி.
விதுன் “ஆரதி உங்க போன் கொடுங்க” என்றதும்
இவளோ “எதுக்கு?”
“கொடுங்க சொல்றேன்” என்றான்.
இவள் கொடுத்ததும் “ப்ச்… லாக் ஒப்பன் பண்ணி கொடுங்க” என்றதும் அவனிடம் திரும்பக் கொடுத்தாள்.
முதலில் தன்னுடைய எண்ணிற்கு ஒரு அழைப்பைக் கொடுத்தவன் அவளுடைய கைப்பேசியில் தன் பெயரைப் போட்டு அலைபேசி எண்ணை பாதுகாத்தான்.
இவளோ நடக்கும் விஷயங்கள் புரியாமல் “டாக்டர் இப்போ எதுக்கு உங்க நம்பரை என் போன்ல சேவ் பண்ணியிருக்கீங்க?” என்று கண்களை விரித்து யோசனையில் உதடுகளை கடித்தப்படிக் கேட்டாள்.
அவளுக்கு அருகில் நின்றவன் தன் தலையைக் குனிந்து அவளின் இமைகளுக்கு நேராக பார்த்தவன் “இப்போத் தானே டீலுக்கு ஒத்துகிட்டீங்க மறந்துட்டீங்களா என்ன? அமிர்தாவைப் பற்றி தெரியனும்னா எப்படி என்கிட்ட பேசுவீங்க? அதனால் தான் எல்லாமே நானே முன்னேற்பாடாக செய்துட்டேன் புரியுதா? அதனால இனிமேல் எங்கிட்ட இருந்து தப்ப முடியாது அமிர்தாவைச் சொன்னேன்” என்று அவளை ஆழ்ந்துப் பார்த்தப்படிக் கேட்டான்.
அவளும் படபடவென்று அடித்த விழிகளால் அவனைப் பார்த்தபடி சரியென்பது போல் தலையாட்ட “சரி போய் உங்க வேலையைப் பாருங்க” என்றான்.
அவளும் விட்டால் போதும் என்பது போல் ஒரே தாவலில் ஓடிப்போனாள்.அவள் அருகில் சென்றதும் வேகமாக துடித்த தன் இதயத்தின் துடிப்பை உணர்ந்தவன் நெஞ்சில் மேல் கைவைத்து “கொஞ்சம் பொறுமையா இரு எனக்கே இது புதுசாக இருக்கு” என்றான் புன்னகைத்தப்படி…
என்ன உறவு இது எதுவும்
புரியவில்லை என்ற போதும்
இது நீளுதே…
எதிரே இருந்த இருக்கையில் சாய்ந்தபடி அமர்ந்தவன் புன்னகைத்தபடியே நடந்ததை நினைத்தான்.
ஒரு அன்பின் ஆரம்பத் தருணங்களை நினைப்பது போல உள்ள மனநிலை வேற எதையும் கண்டு மகிழ்ச்சிக் கொள்ளாது அந்த நேரத்தின் நினைவலைகளை…
முதலாக அவளை வணிக வளாகத்தில் சந்தித்ததை விட மருத்துவமனையில் அவளின் பார்வையில் பறிக்கொடுத்த இதயத்தினை நினைவுக் கூர்ந்தவன் அவளின் விழிகள் பேசிய வார்த்தைகளை என்னவென்று அறிவதற்கு ஆவல் கொண்ட மனதினைக் கட்டிப் போட மனமின்றி பின்னால் அவள் யாரென்ற உண்மை ஏற்கனவே அறிந்த விஷயத்தை அவனைத் தவிர அறிவதற்கு யார் இருக்கிறார்கள்.
மருத்துவமனையில் தலைமை மருத்துவர் எல்லோரிடமும் பொதுவாக அறிமுகப்படுத்தும் போது அவள் கண்கள் கொண்ட அதிர்ச்சியினை அவன் கவனம் கொள்ளாமல் இல்லை.
தன்னைப் பற்றி முன்னரே அறிந்துக் கொண்ட பெண்ணவள் யார் என்று அறிவதற்கு தான் அவளோடு உடன் பணிபுரிய விரும்பி சந்தித்து பேச வாய்ப்பை அவன் ஏற்பத்திக் கொடுக்க அதை அவள் புத்திசாலிதனத்தால் தடுத்தாள்.
இந்த பாவி மனம் தன் முன்னால் நின்று முழுதும் அறிந்தவரை விட தன்னை யாரென்று தெரியாமல் பார்த்துக் கொள்ளும் கள்ளத்தன தப்பித்தலில் அறிவதில் தானே ஆர்வம் கொள்ளும்.
அப்படித் தான் அவள் ஆரதி என்றால் எப்படி இருக்கிறாள்? அதுவும் வளர்ந்த பிறகு மாறாத கதை பேசும் விழிகளில் இருக்கும் அதே தேடல் பருவம் மாறா முகனையிலும் இருக்கிறதா? என்ற ஆர்வம் அவளை இன்னுமாய் அறிய ஆர்வம் கொள்ள மறுநாளும் ஆரதி அந்த கண்ணாமூச்சு ஆட்டத்தினைத் தொடர அவளுக்கு தெரியாமல் அவளை பின் தொடர்ந்தவன் தன்னிடம் பொய்யாக நடித்தவளும் இவனுடன் பணிபுரிபவளும் ஒருவள் தான்.
அதோடு யாரைத் தேடிக் கொண்டு இந்த சென்னைக்குத் திரும்பி வந்திருந்தானோ? அவளே தன்னிடம் போக்குக் காட்டி இத்தனை அறியும் ஆர்வம் கொண்டவளை எண்ணி தனக்குள்ளே மகிழ்ந்தான்.
எதுவும் பேசவில்லையே
இன்று ஏனோ எதுவும்
தோன்றவில்லையே இது
எதுவோ?
அவள் இருக்கும் வீட்டினைப் பற்றி அறிந்துக் கொண்டவன் அமிர்தா இருக்கும் இடத்தை அறிவதற்கு அவளின் அன்னையிடம் பேசி விலாசத்தை தெரிந்துக் கொள்ளும் போது இரண்டு பேரும் ஒன்றாக இருப்பதை அறிந்துக் கொண்டான்.
ஆரதி ஆடிய இந்த நாடகத்தில் வேண்டுமென்றே தன்னை இணைத்துக் கொண்டவன் அவள் தனியாக இருப்பதை அறிந்தே தான் ஒன்றும் தெரியாதது போல் சென்றவன் அவனும் வேண்டுமென்றே ஆடிய இந்த நாடகத்தின் முக்கிய பங்காக தனக்கு சாதகமாகிக் கொண்டான் விதுன்.
அவளின் காயம்பட்ட கையைப் பிடித்தது எதிர்பாராமல் நடந்ததை எண்ணி அவன் வருத்தமடைந்தான்.அதை முதலில் கவனிக்கப் போய் தான் மருந்தை கொடுத்திருந்தான்.
ஆரதி வெளியே வந்ததும் பணிபுரிபவர்களில் நெருக்கமான ஒருத்தி “என்னாச்சு ஆரதி டாக்டர் உன்கிட்ட தனியா பேசனும்னு சொல்றாங்க”
“நாளை நடக்கிற ஆபரேஷன் பத்திய விவரங்களைத் தான் பேசினாங்க வேற என்ன இருக்கப் போது?”
“ஆனால் உன் முகத்தைப் பார்த்தால் ரொம்ப பயந்த மாதிரில்ல இருக்கு”
“அப்படியா! நீங்களாகவே எதாவது சொல்லாதீங்க சிஸ்டர்” என்று அங்கிருந்து வேகமாகச் சென்று விட்டாள்.
அங்கிருந்தவர்கள் எல்லாம் “என்ன நடந்தாலும் ஒரு நாள் எல்லாமே வெளியே தெரிய தானே போகுது பார்க்கலாம்” என்றனர்.
தனியாக போய் நின்றவள் மனதினுள் ‘தேவையில்லாத பிரச்சினைல நானே போய் மாட்டிக்கிட்டேன் ஒன்னும் புரியலை’ என்று நினைத்தவாறே சென்று விட்டாள்.
மாலையில் பணி முடிந்து பேருந்து நிலையத்திற்கு செல்வதற்காக நடந்துக் கொண்டிருக்கும் பொழுது பின்னால் ஹாரன் சத்தம் கேட்டது.இவளோ வழி விடுவதற்காக ஒதுங்கிச் செல்ல விதுன் தான் காரிலிருந்தபடியே திரும்ப ஒலியை எழுப்பினான்.
இவளோ திரும்பி பார்க்க கண்ணாடியை கீழே இறக்கி “வாங்க நான் உங்களை டிராப் பண்றேன்”
“வேண்டாம் சார் எதுக்கு உங்களுக்கு தேவையில்லாத சிரமம்?”
“சிரமம் எல்லாம் ஒன்னுமில்லை அந்த பக்கம் இருக்கிற ஒரு பேஷண்ட் பார்க்க போறேன் போகும் போது உங்களையும் அழைச்சேன் அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் பேசனும்” என்றதும் சரியென்று வண்டியில் ஏறிக் கொண்டாள்.
தோன்றிய புன்னகையை மறைத்தவன் அவளை பார்வையால் அளந்தவன் அமைதியாக பயணத்தை தொடர்ந்தான்.அவள் தான் மனதினுள் ‘ஆளையும் மூஞ்சியையும் பாரு சும்மா போனவளை கூப்பிட்டு உட்கார வைச்சுட்டு இப்போ நானும் அமைதியா வரனுமா? நீ தூங்கிடுவேன்னு என்னை கூட அழைச்சிட்டு போறே அதானே காரணம் எல்லாம் எனக்கு தெரியும்’ என்று புலம்பிக் கொண்டிருக்க…
வண்டியை ஓட்டினாலும் கண்கள் அவளின் விழிகள் பேசும் வார்த்தைகளைப் புரிந்துக் கொண்டவன் “யாரையோ நல்லா திட்டிட்டு இருக்கீங்க போல” என்றதும்
அவளோ பதற்றமாய் “இல்லை” என்றாள்.அதைப் பார்த்து சிரித்தவன் “பசிக்குது சாப்பிட போகலாமா?” என்றான்.
அவளோ என்னச் சொல்வதென்று தெரியாமல் அவனைப் பார்க்க “எனக்கு பசிக்குது நீங்க வேணும்னா சும்மா கூட வாங்க” என்றான்.
அவளும் சரியென்று ஒத்துக் கொள்ள இவர்கள் போகும் வழியினில் உள்ள சாப்பாட்டுக் கடையில் நிறுத்தினான்.
விதுன் “உங்களுக்கு என்ன வேணும்?”
அவளோ அமைதியாக இருக்க “இன்னொருத்தவங்களை பார்க்க வைச்சு சாப்பிட்டால் எனக்கு வயிற்று வலி வந்துடும்” என்றான்.
அவளோ சிரித்துக் கொண்டே
“இவ்வளவு பெரிய டாக்டரா இருக்கீங்க இதை எல்லாம் நம்புறீங்களா? என்ன?”
அவனோ புன்னகை ஒன்றை சிந்தியபடி “சில விஷயங்கள் ரொம்ப எமோஷனலா இருக்கும் அந்த மாதிரி தான் இதுவும் எனக்கு பிடித்த ஒருத்தவங்க அப்படித் தான் சொன்னாங்க அதனால நான் அதை நம்புறேன்” என்றான்.
அவளோ சிரித்துக் கொண்டே “ம்ம்… ஓகே நீங்க உங்களுக்கு பிடிச்சதை சொல்லுங்க நாம ஷேர் பண்ணிக்கலாம்” என்றாள்.
அவனோ சரியென்று ஒத்துக் கொண்டான்.முதலில் பானிபூரியும் அடுத்து குட்டி இட்லி என்று சொன்னவன் கடைசியாக பாசுந்தி சொல்ல விழிகள் விரிய அவனைப் பார்த்தவள் “டாக்டர் நீங்க இதெல்லாம் சாப்பிடுவீங்களா? உடம்புக்கு நல்லது இல்லைத் தானே சொல்லுவீங்க”
அவனோ “உண்மை தான் என்றைக்காவது ஒருநாள் விரும்பியதை சாப்பிடுறதில் தப்பில்லை அதுவும் அளவோடு என்றால் பிரச்சினை இல்லை” என்றான்.
அவளோ ஆர்வமாய் “ஓகே ஓகே எல்லாம் பிடிக்கும் அதுவும் எனக்கு ரொம்ப பிடிச்சதையே ஆர்டர் கொடுத்து இருக்கீங்க எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு நமக்கு பிடிச்ச மாதிரியே இன்னொருத்தவங்களை பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கும்” என்று தலையாட்டிச் சொன்னவள் “ஷேர் பண்ணலாம்னு சொன்னதை தப்பா நினைச்சுக்காதீங்க நான் எப்பவும் சாப்பாட்டை ஷேர் செய்துடுவேன் சாப்பாட்டை வேஸ்ட் செய்யக் கூடாது தேவைன்னா பிறகு சொல்லலாம் இல்லையா?”.
“யார் கூட போனாலும் இப்படித் தான் செய்வீங்களா?”
“ம்ம்… முடிந்தவரை பாலோ செய்வேன் இல்லைன்னா போறது கிடையாது அதை தவிர்க்கலாம் இல்லையா?”
அவனோ அதற்கும் சரியென்பது போல் அமைதியாக இருக்க “என்கிட்ட ஏதோ பேசனும்னு சொன்னீங்களே”
“ம்ம்… அமிர்தா அம்மாகிட்ட நான் உங்களை சந்தித்த விஷயத்தை சொல்லலை அமிர்தாவை சந்தித்து பேசுனதாகவே சொன்னேன்” என்றான்.
அவன் சொன்னதைக் கேட்டு ஆரதிக்கு ‘'இது ஒன்றும் அவ்வளவு முக்கியமான விஷயமாகவே படவில்லை.எப்படி இருந்தாலும் இது அமிர்தாவிற்கே தெரிந்து இருக்குமே’ என்பது தான் இவளின் யோசனையாக இருந்தது.
விதுன் சொன்ன உணவுகள் வந்ததும் விதுன் “சாப்பிடு” என்றான்.
“முதல்ல நீங்க சாப்பிடுங்க”
“உனக்கும் பிடிக்கும் இல்லையா? நீயே முதல்ல ஆரம்பி ஆரதி உன்னை நான் மரியாதையா பேசனும்னு நினைக்கிறியா? பொதுவா உணவுகளை ஷேர் செய்றவங்க ப்ரெண்ட்ஸ் தானே இருப்பாங்க நாம ஏன் ப்ரெண்ட்ஸா இருக்கக் கூடாது” என்றான்.
அவன் இப்படிக் கேட்டதும் சட்டென்று முடியாது அவளால் சொல்ல முடியவில்லை. அதனால் “ஓகே” என்று ஒத்துக் கொண்டாள்.ஆனால் எல்லாம் ரொம்ப வேகமாக அதுவும் மூன்றே நாட்களில் இவ்வளவு நெருக்கம் அவளை யோசிக்க வைத்தது.
ஆனால் மனமோ ‘அவர்கள் இருவரும் சந்தித்த முறை இப்படி இருப்பதால் இருக்குமோ’ என்று நினைத்தாள்.
முதலில் பானிபூரியை எடுத்தவள் தனக்கு ஒன்றை எடுத்து வாயில் போட்டுக் கொண்டவள் கண்களை மூடி இரசித்தப்படி சாப்பிட்டாள்.
அவள் சாப்பிட்டதைப் பார்த்து இவன் சிரித்தப்படி “இன்னும் மாறவே இல்லை அப்படியேத் தான் இருக்கிறாள்” என்றான் மெதுவாக
அவளோ கண்களை திறந்து “என்ன” என்பது புருவத்தை உயர்த்திக் கேட்டாள்.அவனோ “ஒன்றுமில்லை” என்பது போல் தலையசைத்தான்.அவனும் இவளுமாக சாப்பிட்டு முடித்து மகிழுந்தில் ஏறிக் கொண்டனர்.
அவனிடம் “உங்களுக்கு பசிக்குது சொல்லி என் வயிறு நிரம்பிடுச்சு” என்று சாய்ந்து அமர்ந்தவள் முக்கால் மணி நேர பயணத்தில் அப்படியே தூங்கிப் போனாள்.
அவளைப் பார்த்தப்படியே வாகனத்தை ஓட்டியவன் மனதிலோ சொல்ல முடியாத நிம்மதி நெஞ்சம் முழுவதும் பரவியது.
எங்கு என்பதை விட யாருடன்
என்பதில் தான் பயணத்தில்
அத்தனை
சுவாரஸ்யமிருக்கிறது.