• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அத்தியாயம் - 7

அதியா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 20, 2021
284
446
63
Madurai
யாரோ நீ! யாரோ நான்!

அத்தியாயம் - 7

- சிறையெடுத்த ரவணன்!

ரவணன் அவளுக்காக தயாரித்த காபியின் சுவை, அவளது நாவின் சுவை அரும்புகளை மலரச் செய்ததில், " இதுவரை நான் சுவைத்ததிலேயே, உங்களது காபி அலாதியான சுவை. என் நாவில் இப்பொழுதும் நர்த்தனம் ஆடுகிறது" என்றாள் அவனைப் பாராட்டி.

"காபியில் இனிப்பை சேர்த்தது உனக்காக மட்டுமே" ரவணன் அவள் பார்வையை தன் கண்களில் நிறைத்துக் கொண்டு சொன்னான்.

"இது எனக்கான சலுகை அல்ல. ஒரு வகையான சோதனைதானே?" என்றாள் அவள் புன்னகையோடு.

"நீ என் வீட்டில் தங்க இருப்பதற்கான ஒப்பந்தம் இன்னும் தொடங்கவில்லை. சோதனையா இல்லை வேதனையா என்பது பிறகு தெரியும்"

"சரி. அதனை பிறகு தெரிந்து கொள்ளலாம். முதலில் என் அறை எங்கே?"

ரவணன் முன்னால் நடக்கத் தொடங்கினான். அவனின் அந்த சீரான நடையினை பின் தொடர்ந்தாள் தாரா.

சுவர் முழுவதும், வண்ணமற்ற கருப்பு வெள்ளை புகைப்படங்கள். பல உலகத் தலைவர்கள், படைப்பாளிகள், திகைப்பூட்டும் கண்களை மட்டும் காட்டும் சில படங்கள்.

"இவை எல்லாம் உங்களுடைய குரூப் ஹீரோக்களா?" தாரா தன் நடையை நிறுத்தி, வியப்புடன் கேட்டாள்.

"இவர்கள் எல்லாம் என் உலகத்தை புரிந்தவர்கள். நான் யாரென்று தெரியாமலே" என்றான் ரவணன் மெதுவாக.

"நீங்கள் நிஜ வாழ்க்கையில் யாரையும் நம்ப மாட்டீர்களா?. குறைந்தபட்சம் ஒருவரையாவது..."

"நான் நம்புவதற்கு முன்பே என் நம்பிக்கை மரணம் அடைந்துவிட்டது. சமையலறையில் தண்ணீரில் கொதித்துக் கொண்டிருக்கும் மீன்கள், தண்ணீர் மீது வைத்திருக்கும் நம்பிக்கை போல" என்றான்.

வலிகளை பிரதிபலித்த அவன் வார்த்தைகளை உள்வாங்கிக் கொண்டாள்.

சென்று கொண்டிருக்கும் பாதையில், நின்று போன பெரிய சுவர் கடிகாரம் ஒன்றைக் கண்டதும்,

"நேரம் ஓடுவதற்குப் பதிலாக நின்றிருக்கிறது. பழமையாக இல்லை. உங்களால் நிறுத்தப்பட்டிருப்பது போல இருக்கிறது" தாரா நிமிர்ந்து கேட்டாள்.

ரவணன் சற்றே நிதானமாக மூச்சுவிட்டான்.
"நான் வாழ்க்கையை ஓட்ட விரும்பவில்லை. சில நேரம் அது நின்று போனால் தான் நிம்மதி."

"அந்த நேரத்தில் என்ன நடந்தது?"

"நீ ஆராய்ச்சியை தொடங்கிவிட்டாயா?"

"அது தானே ஒப்பந்தம்?" – அவள் கண்ணில் மந்தகாசமாய் ஒரு சிரிப்பு.

அவர்கள் இருவரும் ஒரு அறையை கடந்து செல்லும்போது, அங்கே பியானோ, வீணை, பழைய ரேடியோ என பல இசைப் பொருட்கள் கதவின் வாசல் வழியே கண்ட தாரா அந்த அறைக்குள் தன்னை மறந்து நுழைந்தாள்.

தாரா விரலால் வீணையைத் தொட்டாள்.

"இங்கே யாராவது இசை வாசிக்கிறார்களா?"

ரவணன் புன்னகைத்தான்.
"நான் வாசிக்கக் கற்றேன். ஆனால் வாசிக்க மறந்து போனேன்"

"ஏன்?"

"ஒரு வேளை... இசை என்னை உருக்கும். அது என்னை மாற்றி விடக்கூடும் "

" மாறினால் அதில் தவறென்ன?"

" மனிதனாக இருந்தால் வலிமை பெற முடியாது தாரா. மனிதனுக்குள் மிருகம் இருக்கும்போது தான் அதிகாரம் வெல்லும்"

"அந்த மிருகம் சலனமில்லாமல் உறங்க முடியுமா?"

"அதற்குத் தூங்க வைக்கும் அதி அற்புதமான இசை தேவை… நீ வாசிக்கிறாயா?" என்றான் கிண்டலுடன்.


அடுத்து அவன் திறந்த கதவுக்குள் ஒரு அமைதி. வெளிர் பழுப்பு மற்றும் சாம்பல் நிறத்தில் வடிவமைக்கப்பட்டு இருந்த அந்த அறை, கண்காணிக்கப்படுவது போலவே அமைந்திருந்தது.

ஒரு பக்கம், மாடர்ன் டெஸ்க். ஒரு பக்கம் வெறும் சுவர். ஒரு கண்ணாடி வாசல். ஆனால் அந்த அறையின் வலது பக்கம் மட்டும் இருளில் மூழ்கியிருந்தது.

"இந்த அறை. வாடகைக்கு எடுக்கும் ஹோட்டல் அறையை நினைவூட்டுகிறது"

"தவறில்லை. உனக்கான அறை இதுதான். உனக்கு இது ஒரு ஆய்வுப் பயண அறை மட்டுமே"

தாரா மெதுவாக படுக்கையின் ஓரம் அமர்ந்தாள். தனது விரலால் மெத்தையை வருடினாள்.

"உங்கள் வீட்டின் ஒவ்வொரு அறைக்கும் ஒரு விதி இருக்குமா?"

" நிச்சயமாக"
ரவணன் ஒரு மேசை மேலிருந்த சில கவர்களை எடுத்தான்.
அதில் ஒரு பக்கம் “ விதிமுறைகள் - டாக்டர் தாராமேனனுக்காக” என்று எழுதி இருந்தது.

1. அறையில் 24 மணி நேர கண்காணிப்பு கேமரா உள்ளது. ஆய்வுக்காக இருக்கும்போது மட்டுமே இயக்கப்படும்.

2. என் தனி அறைக்கு அனுமதி இல்லை.

3. வீடு முழுவதும் நான் அமைத்த விதிமுறைகளுக்குள் மட்டுமே உன்னால் இயங்க முடியும்.

4. ஒவ்வொரு வாரமும், உன் ஆய்வு பதிவு எனக்கு அனுப்பப்பட வேண்டும்.

5. வீட்டில் உள்ள பணியாளர்கள் உன்னை “விருந்தினர்” என்று தான் பார்ப்பார்கள். அவர்கள் உன்னுடன் நட்பு வைக்க மாட்டார்கள்.

6. உணவு, தூக்கம், மற்றும் செயல்பாடுகள் குறித்த நேரம் பின்பற்றப்பட வேண்டும்.

7. என்னை பற்றி பதிவு செய்யும் ஒவ்வொரு வார்த்தைக்கும், நீ உளவியல் காரணம் விளக்க வேண்டும்.

8. இந்த வீடு ஒரு ஆய்வகமாக இருக்க வேண்டியதல்ல. ஆனால் உன் உணர்வுகள் இந்த வீட்டின் எல்லை மீறக்கூடாது.

தாரா அந்தக் காகிதங்களை முழுவதுமாக வாசித்துவிட்டாள். அவளது முன் நெற்றி சுருக்கமுற்றது.

"இந்த கட்டுப்பாடுகள். ஒரு சிறைச்சாலைக்கு சமம். உணர்வுகளைப் பதிவு செய்ய கூட வேண்டாம் என்கிறீர்களே?"

"உணர்வுகள் தவறு செய்யும். அவை பாதிப்பை ஏற்படுத்தும். நான் ஒரு செயற்கை நுண்ணறிவு போல் இருக்க விரும்புகிறேன். பிழையற்றது. கட்டுப்பட்டது."

தாரா நிமிர்ந்து அவனை பார்த்தாள்.

"ஆனால் நீங்கள் ஒரு மனிதன். மனம் கொண்டவர். தவறு செய்யக்கூடியவர். அதுதான் உங்களை ஆய்வு செய்யத் தூண்டுகிறது"

"நீ என்னை மாற்ற நினைக்கிறாய். ஆனால் நான் என்னுடைய சூழலை உன் மனதுக்கு ஏற்ப மாற்ற விரும்பவில்லை."

"இது மாற்றமில்லை. புரிதல். உங்கள் சுவருக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் உங்கள் குரலை கேட்க முயற்சிக்கிறேன்."

"அந்த குரல்… சத்தமற்றது. நீ கேட்பது குரலா. இல்லையெனில்… உன் எதிர்பார்ப்பா?"

"மிஸ்டர் ரவணன், இவ்வளவு முறைகள், ஒப்பந்தங்கள். உங்களுக்கு என்ன பயம்?"

ரவணன் மெதுவாக நெருங்கினான். அவன் பார்வையில் பதட்டம் இல்லை. ஆனால் அதிர்ச்சி இருந்தது.
"நீ என்னை சோதிக்கிறாய். நான் சிதறும் வரை காத்திருக்கிறாய்."

"நான் சிதற வைக்க விரும்பவில்லை. ஆனால் உண்மை வெளிப்பட வேண்டும். உங்களை நீங்கள் உணர வேண்டும்"

ரவணன் மெளனமாயிருந்தான். விதிமுறை காகிதத்தின் சில வெற்றுப் பக்கங்களை சுட்டிக்காட்டி,

"இதுதான் உனக்கான இடம். உன் விதிமுறைகளை இங்கு எழுதி வைக்கலாம்"

தாரா சிரித்தாள்.
"என் விதிமுறை ஒன்றே ஒன்று என் உணர்வுகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் உங்களுக்கு இல்லை."

"வித்தியாசமான ரவணனை பார்க்க விரும்புகிறாய்!"

" இல்லை இல்லை. வரவேற்க காத்துக் கொண்டிருக்கிறேன் மிஸ்டர் ராவணன்!"

" இன்னும் சில மணி நேரங்களில் அலுவலகத்திற்கு கிளம்ப வேண்டும் தயாராக இரு" என்று கூறிவிட்டு வெளியேறினான்

தாரா, காலை உணவுக்கு பிறகு, ரவணனுடன் வெளியேறினாள். அவன் ஒவ்வொரு கணமும் கடிகாரத்தின் ஊசியை போல நேர்த்தியாக நடந்துகொண்டாலும், அவளது முன்னிலையில் மட்டும் சற்றே திசை மாறுவது போல தாரா எண்ணிக் கொண்டாள்.


"இன்று உங்கள் அலுவலகத்தில் உங்கள் உண்மையான முகம் இருக்கும் என்று நம்புகிறேன்"

"நான் முகமூடி அணிவதில்லை. என் முகங்களை கழட்டுகிறேன், அவ்வளவுதான்"

"அதைத் தான் பார்க்க வருகிறேன். உங்கள் முகமில்லாத முகத்தை" என்றாள் அவள்.

அவன் ஒரு நிமிடம் நிமிர்ந்து அவளைஉற்றுப் பார்த்தான்.

"இன்று என் அலுவலகத்தில் என் முகங்கள் மாறலாம். எச்சரிக்கையாய் இருங்கள் டாக்டர்" என்றான் கேலியாக.

" பார்த்தவுடன் நான் பயப்படும் அளவுக்கு உங்கள் முகம் இல்லையே?" என்றாள் அவள், கண்களில் கூர்மையான சிரிப்புடன்.

" அப்படி என்றால் நீ நிச்சயம் என்னை ரசிக்கிறாய்!" என்றவனின் உதட்டில் கர்வப் புன்னகை பூத்தது.


அவனது அலுவலக வளாகம், ஒவ்வொரு மூலையும் கண்காணிக்கப்படும் ஒரு கோட்டைப் பகுதி போல இருந்தது.
அங்கே வரவேற்பில் அமர்ந்திருந்த மாயா, தாராவை பார்த்ததும் அவளது முகத்தில் ஒரு பதட்டம் தோன்றியது.

"ஹாய் மாயா" என்றாள் தாரா நிதானமாக.

மாயா சட்டென மலர்ந்த செயற்கை புன்னகையுடன் எழுந்து வந்தாள். "ஹாய் மேம். நீங்கள் இங்கே?" வார்த்தைகளை சற்றே இழுத்து முடித்தாள்.

" விடைகளைத் தெரிந்து கொண்டே வினா கேட்கிறீர்கள் மாயா" என்றாள் தாரா.

மாயா சிரிக்க முயற்சி செய்தாள். "உங்களைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் நேரில் பழகிப் பார்க்கும் சந்தோசம் வேறு தானே? " என்று சூழ்நிலையை இலகுவாக்க முயன்றாள்.

"நேரில் பார்த்தால்தான் உண்மையான ஆய்வைத் தொடங்க முடியும். உங்கள் அலுவலகத்தில் கூட சில உண்மைகள் உறங்கிக் கொண்டிருக்கலாம். உங்களிடம் கூட.." என்று கூறிவிட்டு மாயாவை கூர்மையாய் பார்த்தாள் தாரா.

அவர்கள் பேச்சை ரவணன் தனது அலுவலக அறையில் உள்ள கணிப்பொறி மூலம் கேட்டுக் கொண்டிருந்தான். இதுவரை யாரும் அவனை நேரடியாக எதிர்த்ததில்லை. ஆனால் தாரா கேள்விக்குறியா? ஆச்சரியக்குறியா? என்ற கேள்விகளுக்குள் அவன் எண்ணங்கள் சுழன்றது.

அவன் அலுவலகத்தில் தாராவுக்கு என ஓர் அறையை ஒதுக்கி விட்டு, காலை முதல் மதியம் வரை அவளை சந்திக்காமல் அவளின் நடவடிக்கைகளை கண்காணித்துக் கொண்டிருந்தான்.
நேரம் செல்லச் செல்ல தாரா சலிப்படைந்து, சோர்வடைந்து விடுவாள் என்று ரவணன் எண்ணினான்.

ஆனால் தாராவோ இதையெல்லாம் எதிர்பார்த்தது போல் தன் கைப்பையில் இருந்த டைரியில் சில குறிப்புகளை எழுத ஆரம்பித்து விட்டாள். அவன் உலகத்திற்குள் அவளை அடக்க நினைக்க, அவளோ புது உலகம் படைத்து அதனோடு ஒன்றிப்போனாள்.

மாயா வந்து சில தகவல்களை கூறியவுடன், மென் புன்னகையுடன் தாராவின் அறைக்குள் நுழைந்து, நாம் கிளம்பலாம் என்று அலுவலகத்தில் இருந்து அவளை வெளியே அழைத்து வந்தான்.

அந்த கட்டிடத்தின் வெளியே, சமூக ஊடகங்கள், அவர்களைப் பற்றிய அதிரடி தகவலை எதிர்பார்த்து நம்பிக்கையுடன் காத்திருந்தது.

தாரா மற்றும் ரவணன் வெளியே வந்தபோது, கேமராக்கள் கிளிக். கிளிக். என்ற பலவித சத்தத்துடன், ஒளிரும் வெளிச்சத்தால் அந்த இடத்தை பிரகாசமாக்கியது. பலவித மைக்குகள் அவர்கள் முன் நீண்டது.

“மிஸ்டர் ரவணன்! தாரா மேடம் உங்களுடன் இன்று ஒன்றாக உங்கள் அலுவலகத்திற்கு வந்திருக்கிறார்களே, இதைப் பற்றி கூற முடியுமா?”

“ மேடத்தை உங்கள் பிசினஸில் பார்ட்னர் ஆக்கி விட்டீர்களா?”

“மேடம் கேஸை வாபஸ் வாங்குகிறீர்களா?”

“ இருவருக்கும் என்ன உறவு?”

சரமாரியாக கேட்கப்பட்ட கேள்விகளில் தாராவின் முகம் தன்னுடைய விருப்பமின்மையை தத்தெடுத்தது.

ஆனால் ரவணனின் முகமோ கல்லை போன்ற இறுகிய தோற்றத்துடன், அழுத்தமாக மூடிய உதடுகளுடன், அலட்சியம் தாண்டவம் ஆடும் கண்களுடன் சிலையாய் இருந்தது.

" எங்களுக்கு இப்பொழுது பதில் வேண்டும் சார்" என்று ஒரு நிருபர் சத்தமாக கேட்டதும்,

தன் அருகில் நின்றிருந்த தாராவின் தோள்களில் தனது இடது கையினை படர விட்டு, தன்னுடன் நெருக்கமாக நிறுத்திக் கொண்டான்.

அவனது உதடுகள் பதிலளிக்காமல், அவனது கண்கள் அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தது.

'என்னடா உங்களுக்கு? நாங்கள் இருவரும் ஒன்றாக இருந்தால் உங்களுக்கு என்ன பிரச்சனை? உங்கள் கற்பனைகளைப் பற்றி நான் கவலைப்படவில்லை. என் அதிரடிகள் உங்கள் கற்பனையை விட பயங்கரமானவை!' என்றது.

பத்திரிகையாளர்கள் கோபமடைந்தாலும், சுவையான செய்திகள் கிடைத்ததில் அவர்களது கேமராக்கள் வேகமாக ஒளியினை வாரி இறைத்தது.

அந்த மழைக்கால மும்பை சாலையில், மேகம் உருகி கீழே மழையாக கொட்டிக்கொண்டிருந்தது. காரின் உள்ளே அமர்ந்திருந்த தாரா, தனது விரல்களில் பார்வையைப் பதித்திருந்தாள். ரவணன் காரை மெதுவாக ஓட்டினான். வண்டியின் உட்புற நிசப்தத்தில், வினாக்களும் பதில்களும் மௌனமாக பேசிக் கொண்டிருப்பது போல் தோன்றியது.

தாரா தன்னுள் மூச்சு இழுத்து, தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு தனது மவுனத்தை உடைத்து விட்டு பேசத் தொடங்கினாள்.

"முதன்முறையாக உங்களோடு வந்தேன், உங்களை புரிந்துகொள்ளும் எண்ணத்தில். ஆனால் உங்களது செயல். எதற்காக செய்தியாளர்கள் முன்பு நீங்கள் அப்படி நடந்து கொண்டீர்கள்?"
ரவணன் ஒவ்வொரு வார்த்தைக்கும் பதில் சொல்லாமல், பார்வையைப் பாதையில் பதித்திருந்தான்.

தாரா தொடர்ந்தாள்.

"நீங்கள் என்னை என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? என் மீது உங்கள் ஆளுமையை செலுத்த உங்களுக்கு யார் அதிகாரம் தந்தது?"

ரவணன் மெதுவாக திரும்பிப் பார்த்தான்.

"உன்னிடம் யாராவது கேள்வி கேட்டால், தக்க பதிலளிக்காமல் இருக்க முடியுமா?"

"அப்படி என்றால் பதில் சொல்ல வேண்டும், பதற்றமூட்டக்கூடாது. உங்கள் கையால் என்னை இழுத்தது. எனக்கு. எனக்கு அவமானமாக இருந்தது"

ரவணன் மெதுவாய் சிரித்தான். "உன்னை இழுத்தேனா? இல்லை நான் உன்னை அவர்களிடமிருந்து பாதுகாத்தேன் என்றல்லவா நினைத்தேன்…"

தாரா கண்கள் ததும்பின. "நான் உங்களை ஆராய்ச்சி செய்து, உங்களை உங்களிடம் இருந்து காப்பாற்ற வந்தேன். ஆனால் நீங்கள் என்னை உங்கள் கதையின் ஒரு கதாபாத்திரமாக்கி விட்டீர்கள். உண்மையிலேயே நீங்கள் திறமைசாலி தான்"

ரவணன் திடீரென வண்டியை ஒரு பக்கமாக நிறுத்தினான். கண்ணாடியில் பனித்துளிகள் தேங்கியிருந்தன. காரினை விட்டு ரவணன் வெளியே இறங்கினான். அவனைத் தொடர்ந்து தாராவும் மௌனமாக இறங்கினாள்.

" என்னைப் பற்றி ஆராய்ச்சி செய்ய உன்னை அனுமதித்ததை நீ விளையாட்டாய் எடுத்துக் கொண்டாயா? நான் உன்னை அனுமதித்து இருக்கிறேன், அந்த அனுமதியை நீ வேறு எந்த வகையிலும் பயன்படுத்திக் கொள்ள முடியாது. என்னைத் தவிர "

தாரா திரும்பி நேராக அவனை நோக்கினாள். "இதைச் சொல்வதற்காகதான் இந்த வட்டத்தைப் படைத்தீர்களா?"

ரவணன் அருகில் சாய்ந்தான்.


அவள் மெதுவாக திரும்பினாள்.
அவள் கண்களில் வெந்து தணிந்த தனல் போல் ஓர் உணர்ச்சி.

" நீங்கள் கேள்விக்கு பதிலளிக்க விரும்பினால், என்னை உங்கள் பதிலாக உருவாக்க வேண்டாமே!"

அவளது கண்களை நேராக பார்த்தான். "நீ தவறாக எடுத்துக் கொள்கிறாய் தாரா"

"தவறா? ஊடகத்தின் முன் உங்களை அடையாளப்படுத்தும்போது, ஒரு பெண்ணின் சுயமரியாதையை பயன்படுத்துவது தவறல்லவா?"

அவள் அருகில் வந்து நின்றான்.
“நீ எனக்காக பேசவில்லை. ஆனால் நான் உனக்காகவும் பேசினேன் ”

"நான் உங்களை ஆய்வு செய்ய வந்தவள். ,உங்களது நாடகத்திற்குத் துணைபுரிய இல்லை! உங்கள் ஆளுமையின் தாக்கம், என் சுதந்திரத்தைப் பாதிக்கும்போது, நான் கவலைப்பட வேண்டாமா?"

ஒரு வட்டமாக, அவளை சுற்றி ரவணன் மெதுவாக நடந்தான்.

"ஓ. உன் சுதந்திரம் என்னை குற்றவாளியாக ஆக்கும் போது நான் சும்மா இருக்க வேண்டுமா? உனது பேனா என்னை சைக்கோபாத் என்று எழுதும் போது நான் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டுமா?" என்றான் அழுத்தமாய்.

அவனது கேள்வியில் தாரா அதிர்ந்து அவனைப் பார்த்தாள்.

தொடரும்...