• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அத்தியாயம் 7

நித்திலம்NMR

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
231
20
28
Netherlands
தன்னருகே இன்னொரு உருவம் நிற்பதைக் கண்டு பதறியடித்துக் கொண்டு நகர முற்பட.... தன் காலில் அழுந்திய கணத்தில் நகர முடியாமல் பின்னால் சரிந்தாள் மலர்.

"அம்மா" என்ற கத்தலுடன் கீழே கிடந்தவள், எதிரில் நிற்கும் தடியனையும் தன் பாதத்தை அழுத்திக் கொண்டிருக்கும் அவன் கால்களையும் மாற்றி மாற்றி பார்த்து முறைத்துவிட்டு "கீழே தள்ளிவிட்டுட்டு திமிரா நிக்கிறதைப் பார்" என்று முணுமுணுத்தாள்.

"இங்கே என்ன பண்ற?" என்ற அவனின் குரலுக்கு

சட்டென "அது எதுக்கு உனக்கு? நீ யாரு?" என்று துடுக்காக எதிர்கேள்வி கேட்கும் போதே அவள் மனதில் அபாய மணி அடித்தது.

அதற்கு ஏற்றார் போல் கீழே அமர்ந்திருக்கும் தமக்கையைக் கண்டு சுவர் தாவி குதித்து விரைந்து வந்த செம்பியன் "அக்கா ஏன் கீழே உக்காந்திருக்க? விழுந்துட்டியா? எப்படி?" என்று மலரிடம் வரிசையாக கேள்வியை அடுக்கியபடி அருகில் வந்தான். அவள் பதில் சொல்லும் வரைகூட காத்திக்க முடியாமல் "மச்சா.... அக்காவுக்கு என்னாச்சு?" என்று தமக்கையின் அருகே தன் ஒரு காலை மடக்கி மற்றொரு காலின் மேல் அமர்ந்து அவளுக்கு அடிபட்டிருக்கிறதா! என்று இருட்டில் சரியாகத் தெரியாமல் போக கண்களை சுருக்கி ஆராய்ந்தான்.

அந்த இருட்டில் சற்று உன்னிப்பாக கவனித்தப் பின் தான் தன் தமக்கையின் பாதத்தை மிதித்திருக்கும் விக்ரமின் கால்கள் தெரிந்தது. கோபத்தில் விறுட்டென அதனை தட்டிவிட்டு மலரின் பாதத்தைப் பிடித்து மென்மையாக வருடி "வலிக்குதா க்கா?" என்று மறுகினான்.

மலரோ செம்பியனின் மச்சான் என்ற அழைப்பில் அவன் யார் என்று உறுதி செய்து கொண்டவள், அதன்பின் விக்ரமை நிமிர்ந்து பார்க்கத் தயங்கியபடி, தம்பிக்கு இடவலமாக தலையசைத்து 'இல்லை' என்றாள்.

"சரி வா போலாம்..." என்று அவள் எழுந்து நிற்க உதவினான் செம்பியன்.

விக்ரமிற்கோ சற்று குழப்பாமாக இருந்தது... 'நீ யாருனு தானே கேட்டாள்!!! நான் யார் என்று தெரியவில்லையா!! ஒருவேளை இருட்டில் அடையாளம் தெரியாமல் கேட்டிருப்பாளோ!!!' என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே இருவரும் திரும்பி நடந்தனர்.

அருகில் நிற்கும் விக்ரமை கண்டு கொள்ளாது இருவரும் திரும்பிச் செல்ல எத்தனிக்க "டேய் நில்லு..." என்று அதிகாரமாகக் கூறினான் விக்ரம்... இருவரும் அவனைப் பார்த்து திரும்பி நின்றனர்.

"ரெண்டு பேரும் இன்னேரம் இங்க என்ன பண்றிங்க?" என்றான்.

மலர் கூறுவாள் என்று செம்பியனும், தம்பி கூறுவான் என்று மலரும் அமைதியாக நிற்க, "உங்களத் தான் கேக்குறேன்!!! அன்னைக்கும் வந்து ஏதோ திருடிட்டுப் போனிங்க!!!... இன்னைக்கும் வந்து நிக்கிறிங்க? எதைத் திருட வந்திருக்கிங்க?" என்று சற்றும் அதிகாரம் குறையாமல் வினவினான்.

விக்ரமின் கேள்வியில் செம்பியனுக்கு ரோஷம் வந்திட "இது எங்க வீடு... நாங்க ஏன் திருடனும்?" என்று எங்கோ பார்த்து உரைத்தான்.

"பார்ரா... திருட்டுக்கழுதைனு சொன்னா கோபம் வருதோ!!!.... பின்னே நீங்க செய்ற காரியத்துக்கு என்ன பேராம்?" என்று நக்கலாக வினவினான்.

இப்போது நேருக்கு நேராக விக்ரமைப் பார்த்து "அப்படியே நாங்க திருட்டுக்கழுதைகளா இருந்தாலும் உங்களுக்கு என்ன வந்தது!!!.. உங்க காசு பணம் எதையும் நாங்க திருட வரலே..." என்று செம்பியனும் உதாசினமாகக் கூறினான்.

செம்பியனுக்கு ஆரம்பத்திலிருந்தே விக்ரமின் போக்கு சரியில்லை என்று தோன்றியது. அதுவும் தன் தமக்கையிடம் நடந்து கொள்ளும் முறை மிகவும் வித்தியாசமாகப்பட விக்ரமிற்கு திருமணத்திலோ தன் தமக்கை மீதோ எந்த ஈடுபாடும் இல்லை என்பதை நன்கு அறிந்திருந்தான். இன்று இப்பொழுது தன் தமக்கையை சக மனுஷி என்றும் பாராது ஏறி மிதித்து நின்றிருந்தான் என்ற கோபமும் சேர்ந்து கொள்ள விசாலியின் செயல்களுக்கும் சேர்த்து வைத்து விக்ரமை காய்ச்சத் தொடங்கியிருந்தார. ஆனால் அதற்கு முன்னதாகவே மலர் அவனை தடுத்துவிட்டாள்.

"செம்பியா சும்மா இரு...." என்று தம்பியின் காதில் கிசுகிசுத்து அவனை அடக்கிய மலர் விக்ரமைப் பார்த்து, "உங்களுக்காக ஆச்சி இள ஆட்டுக்கறி கொழம்பும், நாட்டுக்கோழி வெடக்கோழி சூப்பும் செய்ய சொல்லிருக்காங்க... விடிஞ்சா சமையல்காரவங்க ஆட்டையும், கோழியையும் அடுச்சிடுவாங்க... ஆடு முன் வாசல்ல கட்டியிருந்ததால வாயக்கட்டி தூக்கிட்டோம்... கோழி எடுக்கும் போது தான்......."என்று தான் வந்த காரணத்தையும், மாட்டிக்கொண்டதையும் கூறினாள்.

சொன்னால் புரிந்து கொள்வான் என்ற நம்பிக்கையில் "நாம கறி சோறு திங்கிறதுக்கு பிஞ்சு ஆட்டையும், கோழிக்குஞ்சையும் ஏன் கொல்லனும்!!!" என்று கனிவாகக் கூறிட,

ஆனால் விக்ரமோ "ஓஹோ... அப்போ கெழட்டு ஆட்டை அடிச்சு கொல்லலாமா? அது தப்பில்லையா?" என்று குதர்க்கமாக வினவினான்.

'இப்படி எடக்கு மடக்கா கேட்டாலாம் பதில் சொல்ல முடியாது' என்பது போல் அவனைப் பார்த்து ஒரு பாவனை செய்து முகத்தைத் திருப்பிக் கொண்டாள் அவள்.

அதில் தன் மனம் கவரப்பட்டதை உணர்ந்தவன் அவளை மேலும் சீண்டிட, "யூ சீ.... நானும் இந்த மாதிரி கேள்விபட்டிருக்கேன்... இள ஆட்டுக்கறி, வெடக்கோழி எல்லாம் செம்ம டேஸ்ட்டா இருக்குமாமே!!!... இதுவரைக்கும் சாப்பிட்டிருக்கேனா இல்லேயானு கூட எனக்குத் தெரியாது... ஏதோ வீட்ல சமைச்சி வெச்சா பேருக்கு கொஞ்சம் சாப்பிடுவேன்... ப்ரெண்ட்ஸோட வெளிய சாப்பிட்டா யாரு என்ன ஆர்டர் பண்ணினோம்னு கூடத் தெரியாது... கதைபேசிக்கிட்டே ஷார் பண்ணி சாப்பிடுவோம்... அவ்ளோ தான்...

சோ.... இன்னைக்கு உன் ஆச்சி புண்ணியத்துல ரெண்டையும் ஒரு வெட்டு வெட்டலாம்னு இருக்கேன்... ஆட்டை இருந்த இடத்திலேயே கட்டி வெச்சுட்டு கிளம்புங்க ரெண்டு பேரும்..." என்று ஆணையிட்டான்.

மலரோ அவன் பேச்சையும் மீற முடியாமல், கோழிக்கூடையும் பரிதாபமாகப் பார்த்தபடி நின்றிருந்தாள்.

"அக்கா வா போலாம்..." என்று செம்பியன் கோபத்தில் உரைத்திட, மலருக்கு ஏதோ போல் ஆகிவிட்டது. மனமே இல்லாமல் தம்பியுடன் புறப்பட, அவளின் வாடிய முகம் கண்ட விக்ரம், கோழியை எடுத்துட்டுப் போ என்று சொல்வதற்காக செம்பியனை அழைத்தான்.

"செம்பியா..." இருவரும் நின்று திரும்பிப் பார்க்க, மலரை துழைக்கும் பார்வை பார்த்தபடி எதுவும் பேசாமல் நின்றிருந்தான் விக்ரம். அவனது பார்வையில் கனிவோ, காதலோ சுத்தமாக இல்லை... சொல்லப் போனால் பயம் கூட ஏற்படுவத்துவதாக இருந்தது அவனது பார்வை.

மலரும் அவன் பார்வையில் பயந்து தம்பியின் பின்னால் மறைந்து நிற்க, அதில் மீண்டும் வீம்புக்காரன் விக்ரம் வெளியே வர, செம்பியனைப் பார்த்து "நீ வீட்டுக்குப் போ... உன் அக்காவை நான் கொண்டு வந்து விடுறேன்..." என்றிட மலரும், செம்பியனும் ஒருசேர தன் கண்களை விரித்து தங்கள் அதிர்ச்சியைக் காண்பித்தனர்.

இருவரும் அசையாமல் இருப்பதைக் கண்டு, "என்ன? இப்படியே விடிய விடிய என்னை பாத்துக்கிட்டே நிக்கப் போறிங்களா?" என்று அதட்டினான்.

"எ....எ...எதுக்கு மலரை விட்டுட்டுப் போகனும்.... அதெல்லாம் முடியாது" என்று மறுத்து தமக்கையின் கையை இறுகப் பிடித்துக்கொண்டான் செம்பியன்.

அதனையும் குறித்துக் கொண்ட விக்ரமிற்கு செம்பியனைக் கண்டு சிரிக்கத்தான் தோன்றியது. காரணம் ஊதிவிட்டால் பறந்து விடுவது போல் இருக்கும் செம்பியன் தன் புஜபல தேகத்தோடு மோதி தன் தமக்கையைக் காப்பாற்றிவிடுவது போல் நின்றிருந்தத் தோரணையைக் கண்டு தான் சிரித்தான்.

"டேய்.... இது உங்க ஊரு தானே!!!?.... உன் வீட்ல தானே இருக்கேன்!!?.... உள்ள தான் எல்லாரும் இருக்காங்க... உங்க அப்பா எங்களுக்காக வேலைக்கு வெச்சிருக்க ஆளுங்களும் இங்கே தான் இருக்காங்க.... இவங்களை மீறி உன் அக்காவே அப்படி என்ன பண்ணிடுவேன்னு நெனைக்கிறே.... கொன்னுறுவேன்னா!!!?"

இப்போது இன்னுமே அதிர்ந்தான் செம்பியன்... அவன் கண்களே அதனை காட்டிக் கொடுக்க, "ஏன் டா இப்படி ரியாக்ட் பண்ணுறே!??? என்னைப் பார்த்தா கொலைகாரன் மாதிரி இருக்கா!!!" என்று ஒரு அடி முன்னே வந்து செம்பியனிடம் வினவிட, வேறுவழி இல்லாமல் செம்பியன் இல்லை என தலையசைத்தான்.

"பின்னே!!! இன்னு டூ டேஸ்ல எனக்கும் உன் அக்காவுக்கும் கல்யாணம்... நியாபகம் இருக்கா!!!" என்றிட

செம்பியன் மனமோ 'இவரு என்னை கேட்குறார் பாரு!!! நிச்சயதார்த்தம் முடிஞ்சதுல இருந்து மலருகிட்ட ஒரு வார்த்தை கூட பேசல... இவருக்கு நியாபகம் இருக்குறது அதிசயம் தான்...' என்று உள்ளுக்குள் கிடந்து குமுறியது...

"ஆஃப்டர் மேரேஜ் உன் அக்காவுக்கு சீதனமா என் வீட்டுக்கு வரப் போறியா என்ன?!!" என்று எகத்தாளமாக வினவிட, செம்பியன் அவனை முறைத்தான்.

செம்பியனின் முறைப்பை சுவாரசியமாகப் பார்த்தபடி, "பின்னே கல்யாணம் ஆனாலும் உன் அக்காவை என்னை நம்பி தனியா அனுப்பமாட்ட போலவே!!" என்று மேலும் சீண்டினான்.

"அதுக்கு இன்னு ரெண்டு நாள் இருக்கு... அப்போ பாக்கலாம்" என்று அப்போதும் அசராமல் பதில் கூறினான் செம்பியன்.

விக்ரமிற்கோ பொறுமை பறந்தோடியது... செம்பியனின் பேச்சு நிச்சயத்தன்று உதியின் செயலால் இப்படி இருக்கிறது என்றுதான் நினைத்தான் விக்ரம்.... அதனால் செம்பியனுக்கு விக்ரமின் மேல் இருக்கும் சந்தேகமும், கோபமும் தெரியாமல் போனது...

தம்பியின் சொல்லுக்கு அடிபணியும் மலரின் மேலும் கோபம் கொண்ட விக்ரம் அவளை முறைத்து விழித்திட, அது அவளால் அந்த இருளில் கண்டறிய முடியாமல் போக, விக்ரமின் முகத்தையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த செம்பியனுக்கு தெளிவாகத் தெரிந்தது.

அதனை நேரடியாகக் கூறிட முடியாமல், "இப்போ என்ன!!! நாளைக்கு நீங்க கறி சோறு சாப்பிடனும் அவ்ளோ தானே?... நான் ஆட்டை முன்னாடி கட்டி வெச்சிடுறேன்... நாங்க ரெண்டு பேரும் கிளம்புறோம்..." என்று மீண்டும் மலரின் கைபிடித்து அழைத்துச் செல்ல,

இருவரும் திரும்பிய நொடி மலரின் மற்றொரு கரம் விக்ரமின் கையில் இருந்தது. செம்பியனும், மலரும் அதனை உணர்ந்த நிமிடம் மலரின் கைகளைப் பிடித்தபடி தன்னருகே இழுத்தான் விக்ரம். அந்த வேகத்தில் செம்பியனின் கை நழுவிட,

"நீ போ... நான் இவளை வெளியே கூட்டிட்டுப் போறேன். விடியிறதுக்கு முன்னாடி உங்க வீட்ல கொண்டு வந்து விடுறேன்." என்றிட

"வெளியே வேண்டாமே ப்ளீஸ்... நான் உங்க கூடவே வரேன்... என்னை வீட்ல விட்டுடுங்க..." என்ற மலர் படபடத்திட, கோபத்தில் அவள் கைகளை அழுத்தி,

"அது நான் கேட்கும் போதே சம்மதிச்சு என் கூட வந்திருந்தா சொன்னதை மட்டும் செய்துட்டு, நான் திரும்பியிருப்பேன்... நீயும் உன் தம்பியும் இவ்வளவு நேரம் என்னை பேசவிட்டிங்கல்ல... அதுக்கு பனிஷ்மெண்ட் தான் இது..." என்று மலருக்கு பதில் கூறிவிட்டு, செம்பியனிடம், "போகும் போது ஆட்டையும், கோழியையும் மறக்காம தூக்கிட்டுப் போ" என்று கட்டளையிட்டான்.

செம்பியனும் மலரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி நின்றிருக்க, "இப்படியே ரெண்டு பேரும் நின்றிருந்தா, நான் உன் கூட ஸ்பெண்ட பண்ற டைம் அதிகமாகும்... அப்பறம் எல்லாருக்கும் தெரியிற மாதிரி விடிஞ்ச பின்னாடி தான் வீட்ல விடுவேன்..." என்று மிரட்டினான் விக்ரம்.

"செம்பியா.... நீ போ.... நான் இவர் கூட வந்திடுவேன்." என்று தம்பியை சமாதானம் செய்து அனுப்பி வைத்தாள் மலர்.

விக்ரமும் மலரும் மகிழுந்தில் ஏறிக் கொள்ள, மகிழுந்து புறவழிச்சாலையை நோக்கிச் சென்றது. நெடுஞ்சாலையை அடைந்தவுடன்,

"ஏன் டி நீயும், உன் தம்பியும் என்னை பத்தி என்ன நெனச்சுட்டு இருக்கிங்க? ஹாங்? அவனுக்கு ஏன் என் மேல அப்படி ஒரு கோபம்? வந்ததுல இருந்து ஒரே ஒருமுறை தான் மச்சானு சொன்னான்... அப்பறம் அந்த வார்த்தை எங்கே போச்சுனே தெரியலே!!! சின்னப் பையன்னு பொறுமையா இருந்தா ரெம்பத் தான் துள்ளுறான்... ஏன் அவனுக்கு என்னை பிடிக்கலேயாமா?" என்று எண்ணெயில் போட்ட எள்ளு போல் பொறியத் தொடங்கினான்.

மலர் ஒன்றும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருக்க, "உன்னை தான் கேக்குறேன்? பதில் பேசு டி!" என்று அதட்டினான்.

"ஏன்? அவனுக்கு உங்களை பிடிச்சிருந்தா மட்டும்... அவனைத் தான் கல்யாணம் பண்ணிக்கப் போறிங்களா என்ன?" என்ற மலரின் எதிர்கோள்வியில் க்ரீச் என்ன சத்தத்தோடு மகிழுந்து குலுங்கி நின்றது.

மகிழுந்து நின்ற விதமும் விக்ரமின் முகபாவனையுமே கூறியது விக்ரமின் அதிர்ச்சியை. அவன் கண்களை பார்த்தபடி "ஒண்ணு தெரியாத பொண்ணு இவ...... உருட்டி மெரட்டுனா பயந்து பம்மிடுவானு நெனச்சிங்களோ?" என்று இவ்வளவு நேரம் அவன் பேசிய விதத்தை வைத்தே அவனை சரியாக ஊகித்து வினவினாள்.

இதழோரம் மெல்லிய முறுவலை வரவழைத்துக் கொண்டு, "ஓஹோ.... இது கோவில்பட்டி வீரலட்சுமி போல!!!.... அப்போ இனிமே நான் என் இஷ்டபடி இருக்க முடியாதோ!!!" என்று இவ்வளவு நேரம் இருந்த சிடுசிடுப்பு எங்கே போனது என்று கூடத் தெரியாமல் மலரின் மிரட்டலில் மயங்கிக் கிரங்கினான்.

"அப்போ நான் நெனச்சது சரி தான்... இவ்ளோ நாள் அந்த நெனப்புல தான் இருந்திருக்கிங்க போல!!?" என்க, இப்போது அவனது முறுவல் சிரிப்பாக விரிந்தது.

"ஆமா" என்று அவளின் கோபத்தை தூண்டிவிடுவது போல் உண்மையை உரைத்தான்.

அவனது பதில் உண்மையா பொய்யா என்று கண்டறிய முடியாமல் தினறினாள் பெண்ணவள். வார்த்தைகளில் வந்த அழுத்தம் மட்டுமே உண்மை என்றது..... கண்களும், இதழ்கடை குறும்பு சிரிப்பும் பொய் என்றது. இத்தனை நாள் செம்பியன் வாய்மொழியாய்க் கேட்ட சந்தேகங்கள் விக்ரமின் வார்த்தையை நம்பச் சொல்ல, குழப்பம் கொண்டவள் தன் முகத்தை மறுபுறம் திருப்பிக் கொண்டாள்.

அவள் தாடையைத் தொட்டுத் தன்புறம் திருப்பி "என்ன கோபமா?" என்றான்.

"அதுக்கெல்லாம் உரிமை இருக்கானே தெரியலேயே?"

"என்கிட்ட என் பொண்டாட்டிக்கு எல்லா உரிமையும் இருக்கு... சண்டை போடலாம், அடிக்கலாம், கொஞ்சலாம்..." என்று அவளின் கண்களைப் பார்த்தபடி புன்னகையோடு கூறினான்.

ஆடவனின் பேச்சில் வெட்கம் தோன்றிட, கண்களை மட்டும் தாழ்த்தி மென்னகை புரிந்தாள்.

பெண்ணவளின் வதனம் தொட்டிருந்த கையால் அவள் முகத்தை நிமிர்த்தி தன்னைக் காணச் செய்து, "என்னை பிடிச்சிருக்கா?" என்றான்.

"இதை நான்ல கேக்கனும்!!!?" என்று குரலை உயர்த்தாமல் ஆனால் அவனை குற்றம் சாட்டும் குரலில் வினவினாள்.

"கேட்க வேண்டி தானே!!! உன் வாயை யாரும் பேச முடியாதபடி கட்டி வெச்சாங்களா என்ன?" என்று மீண்டும் நெற்றியை சுருக்கி மிரட்டும் தோரணையில் வினவினான்.

மலரோ கேட்க வேண்டும் என்று முடிவெடுத்தப் பின்னும் தன் இதழ்கள் இரண்டும் பிரிய மறுத்து சண்டித்தனம் செய்திட இன்ப அவஸ்தைக்கு ஆளாகினாள். இயலாமையோடு அவனை நிமிர்ந்து பார்த்திட பெண்ணவளின் பார்வை மாற்றத்தின் அர்த்தம் அறிந்து கொண்டவன், அவளின் கரம் பற்றி கேள் என்பது போல் ஊக்கினான்.

"உங்களுக்கு..... நீங்க.... என்னை...." என்று ஒன்றும் இரண்டுமாக வார்த்தைகளை கோர்க்க முயற்சித்தவள் முடியாமல் போக, ஒரு நொடி கண்களை மூடி,

"வாழ்நாள் முழுமைக்கும் என்னை... என்னை மட்டும் உங்க மனைவியா விரும்பி ஏத்துப்பிங்களா?" என்று கேட்டு நெஞ்சு படபடக்க கண்களைத் திறவாமல் அமர்ந்திருந்தாள்.

அவனிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை, அவளைத் தொட்டிருந்த கைகளைக் கூட விலக்கியிருந்தான். மலருக்கோ உள்ளுக்குள் அச்சம் பரவியது... மெதுவாக கண்களைத் திறந்து பார்த்தாள்...

இருக்கைப் பட்டையைத் தளர்த்தி அவள் புறம் திரும்பி அமர்ந்து, அவள் கன்னங்களை தன் கைகளில் ஏந்தி "வெறும் மனைவியா மட்டும் ஏத்துக்க முடியாது... உன் செல்லச் சண்டயை, சின்னத் திமிரை, பொய் கோபத்தை, இந்த அழகு ராட்சசிய, இன்ப இம்சைய தினம் தினம் சகிச்சிச்சுக்க நீ கொடுக்குற தண்டனைய அனுபவிக்க நான் ரெடியா இருக்கேன். இன்னைக்கு உன் பேச்சையெல்லாம் கேட்ட பின்னாடி எவ்ளோ ஹாப்பியா ஃபீல் பண்றேன் தெரியுமா!!! சொல்றதுக்கு வார்த்தையே இல்லே" என்றவன், அவள் முகத்தை மெது மெதுவாக தன்னை நோக்கி இழுத்தான்.

அவனின் நோக்கம் அறிந்து சட்டென அவன் கையைத் தட்டிவிட்டு முன்பக்கம் திரும்பி அமர்ந்து கொண்டாள்.

அதனையும் ரசித்தபடி அவளைப் பார்த்து சிரித்து மேலும் அவளை சிவக்கச் செய்தான்.



-தொடரும்​