• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அத்தியாயம் -7

MK1

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 22, 2023
85
67
18
Thanavur
உணர்வாய் உயிராய் நீயே எந்நாளும் அத்தியாயம் -7


சேர வேண்டிய இடம் அவனுக்கு விரைவிலேயே வந்து விட்ட உணர்வை தர தூக்கம் கலைக்கும் நினைப்பைக் கைவிட்டவன் அப்படியே அமைதியாக இருக்க ஆரதியின் கைப்பேசி அழைப்பில் கண்களை திறந்தவள் பதறியபடி விழிக்க


அவனோ அவள் கை மீது தன் கையை வைத்தவன் “பதறாதே ஆரதி” என்று ஆதரவாய் பற்றிக் கொள்ள நிதர்சனம் புரிந்தவள் “சாரி நான் இப்படி தூங்குவேன்னு எதிர்பார்க்கலை” என்று கைப்பேசியை எடுத்துப் பார்த்தாள்.


அவள் அம்மா தான் அழைத்திருந்தார்.நேரத்தைப் பார்க்க இவள் இங்கு வந்து சேர வேண்டிய நேரத்தை விட அரைமணி நேரம் கூடுதலாக ஆகியிருந்தது.


அவனைப் பார்த்து திருதிருவென்று விழித்தவள் “டாக்டர் இவ்வளவு நேரமா எனக்காகவா வெயிட் பண்ணிட்டு இருந்தீங்க எழுப்பி விட்டு இருக்கலாமே! உங்களை நானே டைம் வேஸ்ட் பண்ண வைச்சுட்டேன்” என்றாள் ஒருவித தயக்கத்தோடு….


அவனோ “அப்படி எல்லாம் ஒன்னுமில்லை ஆரதி நான் பார்க்க வேண்டிய பேஷண்ட்டை பார்த்துட்டு வந்துட்டேன் நீங்க தான் ரொம்ப அசந்து தூங்கிட்டீங்க நான் எழுப்பினேன் நீங்க தான்” என்ற பொழுது



“சாரி சாரி இது என் தப்பத் தான் இன்னைக்கு வேலை அதிகம் அதோடு சாப்பிடவும் தூங்கிட்டேன் போல” என்று எழுந்து காரை விட்டு இறங்கியவள் “ரொம்ப நன்றி டாக்டர் உங்க சாப்பாட்டிற்கும் அப்புறம் இந்த குட்டித் தூக்கம் போட நேரம் கொடுத்ததிற்கும்”என்றவள்



“இதுக்கு பதிலாக நான் உங்களுக்கு சாப்பாடு செய்து கொண்டு வரேன்” என்றவள் அவனிடம் சொல்லி விட்டுச் சென்றாள்.


அவள் சொன்னதை எல்லாம் இரசித்தவன் புன்னகையை மட்டும் பதிலாகத் தந்தான்.


வீட்டில் போய் அப்படியே சாய்ந்தவள் விதுனைப் பற்றி நினைக்க ஏற்கனவே அவனுடன் பழகிய உணர்வைத் தந்தது.ஆனால் அவன் யாரென்று யோசித்தால் பதில் தான் அவளுக்கு கிடைக்கவில்லை.


மறுநாள் காலை…


தூங்கி விழித்து கண்களைத் திறக்க அவள் முன்னே யாரோ அமர்ந்திருப்பதைப் பார்த்தவள் பயந்தபடி எழுந்துக் கொள்ள எத்தனிக்கும் போது அமிர்தா “ஹேய் நான் தான் ஏன் இப்படி பதறுறே” என்றதும் நெஞ்சில் மேல் கைவைத்தவள்


“வீட்டுக்கு வந்தால் சொல்ல மாட்டியா? இப்படியா அமைதியா உட்கார்ந்திருப்பே தனியா இருக்கேன்ல பயந்துட்டேன்” என்றாள்.


அவளைக் கட்டிக் கொண்டவள் “சாரிடி உன்னை தேவையில்லாமல் பிரச்சினைல மாட்டி விட்டுட்டேன்” என்றாள்.

அவளோ அமிர்தாவின் முதுகின் மீது தடவி விட்டவள் “ஹேய் நீ என்ன வேணும்னே என்னை மாட்டி விட்டே இல்லைல்ல அப்புறம் என்ன?”


“இல்லை ஆரதி இந்த பிரச்சினை உன் வேலை வரைக்கும் போகும்னு நான் நினைக்கலை அம்மாக்கு தெரிஞ்சிருந்தால் அவ்வளவு தான்” என்ற அமிர்தா ஆரதியிடம் “உன்கிட்ட முக்கியமான விஷயம் ஒன்னு சொல்ல மறந்துட்டேன்”

“என்ன?”


“விதுன் யாருன்னு தெரியுமா?”


“ம்ம்… தெரியுமே உங்க அம்மாவோட ப்ரெண்ட் பையனாமே”


அவளோ சிரித்துக் கொண்டு “அவன் தானே சொன்னது?”


“ஆமாம்” என்றதும் அமிர்தா வாய் விட்டு சிரிக்க ஆரம்பித்தாள்.அவளின் சிரிப்பின் அர்த்தத்தைப் பார்த்து புரியாமல் விழித்தவள் “ஹேய் என்னன்னு சொல்லிட்டு சிரி இப்படி கக்கேபே பேன்னு சிரிக்காதே!” என்றாள் கடுப்பாக…


அவளைப் பார்த்து இன்னும் அமிர்தா சிரிக்க ஆறுதல் படுத்திய கைகளாலே இரண்டு அடி போட்டவள் “சொல்லிட்டு சிரிடி நானும் சேர்ந்து சிரிப்பேன்ல”


“நான் உண்மையைச் சொன்னால் நீ சிரிக்க மாட்டே டென்ஷன் ஆயிடுவே” என்றதும் அவள் முறைக்க “ஓகே கூல் கூல் டாக்டர் சார் யாருனு தெரியுமா? என் கூட ஒருதடவை எங்க வீட்டுக்கு வந்து இருந்தியே”


“ஆமாம்”


“அப்போ உன் கைல மாட்டி கொத்து பரோட்டா ஆனானே” என்று அவள் சொன்னதும்

“உம்முனா மூஞ்சி” என்றதும் அமிர்தா சிரிக்க ஆரம்பித்தாள்.


ஆரதியோ விழிகளை விரித்து “அவனாடி இவன்” என்று வாயில் கைவைக்கவும்

அமிர்தா சிரித்துக் கொண்டே “சார் உன்கிட்ட என்னன்னு சொன்னாரு?” என்றதும்


நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொன்னாள்.இடையினில் காலைக் கடன்களை முடித்து காபி போட்டு இரண்டு பிரெட் துண்டுகளை எடுத்து சாப்பிடவும் உட்கார்ந்தார்கள்.


ஆனால் அவன் அமிர்தாவைப் பற்றி சொன்ன செய்தியை மட்டும் சொல்லாமல் கடைசியில் அவனோடு சாப்பிட்டு முடித்தவரை எல்லாவற்றையும் சொல்லி முடித்தாள் ஆரதி.


எல்லாவற்றையும் கேட்டு முடித்தவள் சிரித்துக் கொண்டே “நீ யாருன்னு தெரிஞ்சே உன்னை வம்பிழுத்து இருக்கான் ஆனால் உனக்கு தான் தெரியலை” என்றாள் அமிர்தா.


அதைக் கேட்டு கோபமானவள் “ஒரு வார்த்தை அவன் யாருன்னு சொல்லி இருக்கலாம்ல எவ்வளவு தைரியம் அவனுக்கு இதுல சாரு எனக்கு பிடிச்சதை ஆர்டர் பண்ணுறேன்னு சீன் வேறயா?” என்று முறைத்துக் கொண்டுச் சொன்னாள்.


அதைப் பார்த்த அமிர்தா “விட்டால் அவனை கடிச்சு சாப்பிட்டுறுவ போல” என்று சிரித்தாள்.


“அவன் என்கிட்ட எதுவும் தெரியாதது போல நடந்துகிட்டது தான் தாங்க முடியலை”


“சரி கவலைப் படாதே! இன்னைக்கு ஒரு சின்ன மீட்டிங் இருக்கு அங்கே வைச்சு இந்த உம்முனா மூஞ்சை கவனிச்சுக்கலாம் ஆஸ்பிட்டல்ல பார்த்தால் தெரிஞ்ச மாதிரி காட்டிக்காதே! சரியா?”


“ம்ம்…” என்று ஒத்துக் கொண்டவள் “ஆனாலும் விதுன் என்று அவன் பெயரை நாம கேள்விப்படவே இல்லையே பிறகு எப்படி?”


அமிர்தா “நாங்க எல்லோரும் அவனை பப்லுன்னு செல்லமா கூப்பிட்டே பழக்கம் அதனால அவனோட பெயர் தெரியலை.மேலும் அவங்க அம்மா இறந்ததும் பப்லு வெளிநாட்டுக்கு படிக்க போய்ட்டான்.திரும்ப ஆறு மாசம் முன்னாடி தான் வந்து இருக்கான் இது எல்லாமே என்னோட கசின்ஸ் சொல்ல போய் தான் விவரம் தெரிஞ்சது அம்மாக் கூட ஒன்னும் சொல்லலை” என்றாள்.


“ஆனால் ஆரதி ஒரு விஷயம் தான் புரியலை எதுக்காக அவன் திரும்ப இங்கே வந்து அதுவும் உன்னைச் சந்தித்தது நினைத்தால் யோசனையாக இருக்கு” என்றாள்.


அவள் அதெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.எதுவும் நடக்காதது போல் அவன் நடந்துக் கொண்டது தான் அவளுடைய யோசனையாக இருந்தது.


மருத்துவமனைக்குச் செல்ல அங்கே அவன் இன்றைக்கு வரவில்லை.விடுப்பு எடுத்திருப்பதாக தெரிய வந்தது.தன் வேலைகளைப் பார்க்கச் சென்று விட்டாள்.


அன்றைக்கு ஆரதிக்கு இன்னொருவரின் வேலையையும் சேர்ந்து பார்க்க வேண்டியிருந்தது.அதனால் அமிர்தா இன்றைக்கு வரச் சொல்லியிருந்த நேரத்தில் அவளால் சரியாக வர முடியவில்லை.


அதனால் அமிர்தாவிற்கு குறுஞ்செய்தி ஒன்று அனுப்பினாள் ஆரதி.

“நான் வர வேண்டிய இடத்தின் விலாசத்தை அனுப்பி வை” என்றாள்.அமிர்தாவும் அனுப்பி விட்டாள்.அங்கே அமிர்தாவின் பழைய நண்பர்கள் எல்லோருடைய சந்திப்பு நிகழ்ச்சி இருந்தது.


அங்கேத் தான் ஆரதியை வரச் சொல்லி இருந்தாள்.அவன் சொன்ன நேரத்திலிருந்து அரைமணி நேரம் அதிகமாகி இருந்தது.ஆரதி மருத்துவமனையிலிருந்து கிளம்பி அங்கே செல்வதற்கு இன்னும் அரைமணி நேரம் தேவைப்பட்டது.


அதனால் வேகமாக ஆரதி ஆட்டோ ஒன்றை பேசி அதில் சென்றுக் கொண்டிருந்தாள்.போகும் வழியினில் விதுனைப் பற்றி நினைக்க அவளுக்கு கொஞ்சம் உற்சாகம் தொற்றிக் கொண்டது.


விதுனோடு சின்ன வயதில் அவள் இருந்தது எல்லாம் நினைவில் வந்து போயின.


ஆரதி ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் பொழுது அமிர்தா விடுமுறையில் ஊருக்குச் செல்லாமல் ஆரதியோடு இருப்பேன் என்று சொல்லவும் அமிர்தாவின் அம்மாவும் வேறுவழியில்லாமல் ஆரதியை அவருடன் அழைத்துச் சென்றார்.

போகும் வழி முழுவதும் ஆரதியும் அமிர்தாவும் செய்த சேட்டைகளால் அமிர்தாவின் அம்மாவால் சமாளிக்க முடியவில்லை.


வீட்டின் உள்ளே வரும் பொழுது ஆரதியைப் பார்த்து அமிர்தாவின் அம்மா முறைக்க ஆரதியோ “ஆண்ட்டி ஏன் என்னை இப்படி அடிக்கடி உத்து உத்து பார்க்கிறீங்க நான் என்ன அவ்வளவு அழகாகவா இருக்கேன்” என்றதும் அமிர்தாவின் அம்மாவிற்கு எங்கேயாவது போய் முட்டிக் கொள்ளலாம் போலிருந்தது.


அவர் என்னச் சொன்னாலும் அதை காதிலோ மூளையிலோ ஏற்றிக் கொள்ளும் எண்ணம் எல்லாம் இல்லை. நன்றாக சுற்றிப் பார்த்து பொழுதை கழிப்பதிலேயே இருந்தனர்.


அமிர்தாவும் ஆரதியும் ஒன்றாக வருவதைப் பார்த்த அமிர்தாவின் பாட்டி “இப்போ எதுக்கு இந்தப் பொண்ணையும் கூடிட்டு வந்து இருக்கே?வீட்ல பங்ஷன் இருக்கே”


“அமிர்தாவோட அப்பாகிட்ட சொல்லிட்டு தான் அழைச்சுட்டு வந்தேன் இந்த அமிர்தாவிற்கு அவர் கொடுக்கிற செல்லம் தான் அவளை இந்தளவுக்கு செய்ய வைக்குது” என்றார்.


அமிர்தாவிற்கு ஆரதியைப் பிடிக்க காரணமே யார் அவளை என்னச் சொன்னாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டாள்.அவள் விருப்பப்படி இருப்பாள்.அதனால் இந்த முறை தன்னுடன் அவளை அழைத்து வர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து வந்திருக்கிறாள்.


அமிர்தாவை தனித்து வைத்து விளையாடும் தன் சொந்தக்கார அதே வயது பிள்ளைகளிடம் தனக்காக ஒருத்தி இருப்பதை காட்டுவதில் அவளுக்கு ஒரு பேரார்வம்.


அமிர்தாவின் சித்திக்கு திருமணம் என்பதால் குடும்பத்தில் உள்ள முக்கிய சொந்தங்கள் எல்லாம் அமிர்தாவின் வீட்டில் வந்திருந்தனர்.அப்போது தான் விதுனும் அவனுடைய அம்மாவோடு வந்திருந்தான்.


அங்குள்ள சொந்தங்களில் எல்லோரும் எல்லா வயதினருடைய பிள்ளைகளும் இருந்தார்கள்.விதுன் யாருடனும் பேசாமல் அவனும் அவனுடைய புத்தகம் என்றே இருந்து விட்டான்.


அமிர்தாவுடன் யாராவது சண்டையிட்டால் அவளுக்காக பேசுவதற்கு ஆரதியிருந்தாள்.அதனால் எல்லோரும் ஆரதியுடன் போட்டி போடுவதற்கு தயாராக இல்லை.
அவர்களுக்குள்ளேயே சண்டையிட்டால் ஆரதி பாதிக்கப்பட்டவரோடு சேர்ந்து ஒரு கூட்டணி அமைத்தாள்.


இதனால் எல்லோரும் ஒன்றாக கண்ணாமூச்சு விளையாடினார்கள்.ஆரதி ஒளிந்துக் கொள்வதற்காக விதுனின் அறைக்கு வந்தாள்.அவளைக் கண்டவன் “ஏய் வெளியே போ இங்கே வரக்கூடாது”


அவளோ சிரித்துக் கொண்டு “ஏன் வரக் கூடாது”


“என்னைத் தொல்லைச் செய்வது பிடிக்காது” என்றான்.


“ம்ம்…சரி நான் உங்களை தொல்லை பண்ண மாட்டேன் இந்த ஒரு முறை ப்ளீஸ் அமைதியா இங்கே ஒளிஞ்சுக்கிறேன்” என்று அவனிடமே வம்பு பேசி கட்டிலில் கீழே ஒளிந்துக் கொண்டாள்.


அவளை தேடி வந்தவர்கள் விதுனின் அறையைத் தாண்டிச் சென்றார்களே தவிர இவனிடம் வந்துக் கேட்கவில்லை.ஏனென்றால் இவன் யாரையும் உள்ளே விட மாட்டான் என்ற நம்பிக்கையில் இருந்தனர்.


இது ஆரதிக்கு வசதியாகப் போக கடைசியில் இவளேப் போய் தான் நின்றாள்.அடுத்த முறை ஒளிந்துக் கொள்ள விதுனின் அறைக்கு வந்தாள்.



அவளைப் பார்த்தவன் “உள்ளே யாரும் வரக் கூடாது” என்றதற்கு “இங்கே பாருங்க உங்களுக்காக நான் ஒன்னு கொண்டு வந்து இருக்கேன் வீட்டில் சுட்டுக் கொண்டிருந்த ஜாங்கிரி ஒன்றை எடுத்து இவன் வாயில் வைத்தவள் “இதை சாப்பிட்டு முடிங்க அதுக்குள்ளே இவங்க கண்டுபிடிக்குறாங்களான்னு பார்க்கிறேன்” என்று விதுனிடமே கண்களால் கெஞ்சி பேரம் பேசினாள்.அதைப் பார்த்து லேசாக புன்னகையை பதிலாகத் தந்தான்.



மற்றவர்களைப் போல் இல்லாமல் அவளோ அவனிடம் பேசியே தன் காரியத்தை சாதித்துக் கொண்டாள்.


மறுநாள் சொந்தங்கள் எல்லோருமாக குடும்பத்தில் உள்ள ஒருவரின் பிறந்த நாளிற்காக கொண்டாடிக் கொண்டிருக்க விதுன் அவனுக்கு தேவையில்லாத விஷயமாக தனியே அமர்ந்திருந்தான்.அமிர்தா தூங்கி விட்டதால் அவளோடு சேர்ந்து பார்க்க முடியாமல் முன்னால் எல்லோருக்கும் நிற்பதால் சரியாக நடப்பது தெரியாமல் தனியே நின்றிருந்தவள் விதுனைக் கண்டாள்.


அவனுடைய கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு அங்கே நிற்க வைத்தவள் “என்னை மேலே தூக்கி காட்டுங்களேன் அங்கே என்ன நடக்குதுன்னு தெரியலை” என்று அடம் பிடித்து அவன் முதுகில் ஏறிக் கொண்டவள் நடப்பதை எல்லாம் பார்த்து சொல்லி சிரித்தாள்.


அவனோ அவளிடம் “கேக் தானே வெட்டுறாங்க இதுக்கு போய் நீ எதுக்கு இவ்வளவு சந்தோஷப்படுறே?” என்றதும்



அவளோ “அட அங்கே பாருங்க கேக் வெட்டுற அங்கிள் முகத்துல அவ்வளவு சந்தோஷம் இருக்கு, அதைப் பார்த்து மற்றவங்களுக்கு சிரிக்கிறாங்க கேக் தருவாங்கல்ல அதை சாப்பிடுற எனக்கும் சந்தோஷம்” என்றதும்


அவனோ “அதை கடையில வாங்கி சாப்பிடலாமே” என்றதற்கு


“ம்ம்… கடையில் வாங்கி சாப்பிடலாம் தான் ஆனால் எல்லோருடன் சேர்ந்து பகிர்ந்து சாப்பிடுறது நல்லா இருக்கும் இப்போ பாருங்க இத்தனை பேருக்கு மத்தியில எனக்கு நீங்க தான் கேக் வாங்கித் தரனும்” என்று அவனின் முதுகில் அமர்ந்து அவனை விரட்டி கேக் வாங்க வைத்து அவனுக்கும் பங்கு வைத்துக் கொடுத்தாள் ஆரதி.



இது எல்லாம் அவனுக்கு புது அனுபவமாகவே இருந்தது.வீட்டில் எப்போதும் சண்டைப் போட்டிருக்கும் அப்பாவையும் அம்மாவையும் பார்த்து வளர்ந்தவனுக்கு தனிமையே பெருந்துணையாக இருந்தது.



பள்ளியிலும் இவனுடைய அப்பாவின் பணமே பேசும் பொருளாக இருக்க நாட்டம் அற்று போனவனுக்கு சொந்தத்திலும் அதே நிலைமை தான்.


எல்லோருடைய பேச்சிலும் யாருடைய வீட்டில் மிகவும் செல்வமிக்க பொருட்கள் இருக்கிறது என்று சொல்லி பெருமை பேசும் மக்களிடம் அவன் பேசுவதே குறுகிப் போனது.


ஆனால் வாழும் வாழ்க்கையில் இன்னொரு விதத்தில் யோசிக்க வைத்து பேசியது ஆரதி.அதில் அவள் இருக்கும் மகிழ்ச்சியை மட்டும் எடுத்துக் கொண்டாள்.


எல்லோரையும் திருப்திப்படுத்தும் அளவிற்கு இந்த வாழ்க்கை ஒன்றும் பெரியது அல்ல.

எல்லோரையும் திருப்திப்படுத்தும் அளவிற்கு இந்த வாழ்க்கை ஒன்றும் போதுமானது அல்ல.

அதனால் உனக்காக வாழ் உன் சில்லறை சந்தோஷங்களை யாருக்காகவும் சிதற விடாமல் வாழ கற்றுக் கொடுக்க ஆரம்பித்தது.


ஆரதியும் விதுனும் நண்பர்களாக தொடங்கினர்.
ஆரதி அமிர்தாவிடம் “இனிமேல் இவனையும் விளையாட்டுக்கு சேர்த்துக்கனும்” என்றதற்கு


அமிர்தா ஆரதியின் காதில் மெதுவாக “ஹேய் அவன் சரியான உம்முனாமூஞ்சிடி சிரிக்க மாட்டான் அவனைப் போய் கூட்டு சேர்த்திருக்க?” என்றதும் நேராக விதுனிடமே சென்று


“நீ உம்முனா மூஞ்சியாமே அமிர்தா சிரிக்கத் தெரியாதுன்னு சொல்லுற?
அப்படியா!” என்று பக்கத்தில் இருந்த நாற்காலியில் ஏறிக் கொண்டவள் அவன் உதடு பக்கமாக கைவைத்து இரண்டு விரல்களை கன்னத்தில் வைத்து இழுத்து விட்டாள்.


“இப்போ உம்முனா மூஞ்சி இல்லை சிரிச்சா மூஞ்சி ஓகேவா” என்று அவன் தோள்மீது கைப்போட்டு அவன் முகத்திற்கு அருகே தன் முகத்தை ஒட்டி வைத்து சொல்லி சிரித்தாள்.இதில் அமிர்தா ஆரதியின் விளையாட்டுகளில் விதுனுக்கும் சேர்ந்து இடம் இருந்தது.அவனையும் சேர்த்து சிறுபிள்ளையாக்கி விளையாடினாள்.


அவனின் முதுகில் அமர்ந்துக் கொண்டவள் எல்லா இடத்திற்கும் அவனை சவாரியாகிக் கொண்டாள் ஆரதி.செய்யும் சேட்டைகளில் அவனையும் சேர்த்துக் கொண்டாள்.


அவர்கள் செய்த தப்பிற்கு அவள் ஒளிந்துக் கொண்டதோடு அவனையும் சேர்த்து ஒளித்து வைத்தாள்.எல்லாம் நன்றாகவே நடந்துக் கொண்டிருந்த பொழுது ஒருநாள் திடீரென்று ஆரதியிடம் சொல்லாமலேயே அவன் அங்கிருந்துச் சென்று இருந்தான்.


எல்லாம் நடந்து பதிமூன்று வருடங்களுக்கு மேல் இருக்கும்.நடந்ததை எல்லாம் நினைவு கூர்ந்தவளுக்கோ அவனைப் பற்றி அறிந்த பின் பார்க்கும் மகிழ்ச்சி அலாதியாக இருந்தது.


அமிர்தாவும் அவளுடைய நண்பர்கள் அங்கே வந்திருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது தான் விதுனும் வந்திருந்தான்.அவன் வந்த சிறிது நேரத்தில் ஆரதி அங்கே வந்தாள்.நிறைய
எதிர்பார்ப்பு நிறைந்து நேராக விதுனைக் கண்டவள் ஆர்வமிகுதியில் அவனே எதிர்பார்க்காத நேரத்தில் எவ்வி தோளின் மேல் கைப்போட்டு அவனின் தோளில் ஏறிக் கொண்டவள் “ஹே ஹேய் உம்முனா மூஞ்சி எப்படி இருக்கே?” என்று அவனின் முகத்திற்கு அருகே தன் முகத்தை ஒட்டி வைத்துக் கேட்டாள்.


அவள் நடந்துக் கொண்ட விதத்தில் எல்லோரும் அதிர்ச்சியில் அப்படியே விக்கித்து நின்றனர்.



 

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
ஏறகனவே சேட்டைக்காரி 🤣🤣 இப்ப விதுன் ரியாக்ஷன் என்னவோ 🤣🤣
 
  • Haha
Reactions: MK1

MK1

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 22, 2023
85
67
18
Thanavur
மனமார்ந்த நன்றிகள் 😍😍😍