• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அத்தியாயம் 8

நித்திலம்NMR

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
231
20
28
Netherlands
தன்னை நெருங்கும் விக்ரமின் நோக்கம் அறிந்து சட்டென அவன் கையை விலக்கிவிட்டு முன்பக்கம் திரும்பி அமர்ந்து கொண்டாள் மலர்.

அதனையும் ரசித்தவன், அவளைப் பார்த்து சிரித்து மேலும் அவளை சிவக்கச் செய்தான். பற்றாகுறைக்கு "ஏன்? நான் உன்னை கிஸ் பண்ணக் கூடாதா?" என்றிட,

"அதற்கான பூரண உரிமம் உங்களுக்கு இன்னும் கிடைக்கலயே..." என்று பேசினாளா! இல்லையா! என்பது போல் சத்தமே இல்லாமல் வந்தது அவளது குரல். சுற்றியிருந்த இருளும், அமைதியும், இதமான தென்றலும் அவனது செவிகளுக்கு சேதியை சிறப்பாகக் கொண்டு சேர்த்தது.

மெதுவாக அவள் கரத்தோடு தன் கரத்தை கலக்கவிட்டு விரலோடு விரல் கோர்த்திட, பெண்ணவள் கொஞ்சம் கொஞ்சமாக கூச்சத்தை விடுத்து அவன் விரல்களைப் பற்றிக் கொண்டாள்.

"இதுக்கு உரிமம் தேவையில்லே தானே!!!" என்று அவள் காதருகே சென்று வினவிட, காது மடலில் உரசிய அவன் இதழ்களினால் மயிற்கூச்சமேறிப் போனவள் பதில் கூறாமல் கண்களை மூடிக்கொண்டு இடவலமாக தலையசைத்தாள்.

சற்று நேரத்தில் அவன் விரல்கள் விடுபட, அப்போதும் தன் மோனநிலை கலையாமல் அமர்ந்திருந்தவள் தன் கழுத்தில் ஏதோ ஊர்ந்திடுவது போல் தோன்றிட மெதுவாக கண்களைத் திறந்து பார்த்தாள்.

இவ்வளவு நேரம் அவனது கழுத்தோடு ஒட்டி உறவாடிய தங்க சங்கிலி இப்போது அவளது கழுத்தை உரசிக் கொண்டிருந்தது. இதய வடிவத்தோடு இணைந்த VP (விக்ரம் பார்த்திபன்) என்ற காலிகிராஃபி ஆங்கில எழுத்து அவளது நெஞ்சாங்கூட்டில் புதைந்து தொலைந்தது அவனைப் போல...

'நாளைக்கு உன் கழுத்துல நான் அணியப் போற தங்கத் தாலி அந்த உரிமத்தை எனக்குத் தரும்னா, இதோ இந்த ச்செயினும் எனக்கு அந்த உரிமத்தைத் தரும்...' என்ற அவனின் விழி வழி மொழியை உணர்ந்தவள், அதிலிருந்து வெளியே வர முடியாமல் தத்தளித்துக் கிடந்தாள்.

"கடவுள் உருவம் பதித்த மந்திரம் ஓதப்பட்ட ச்செயின் உன் நம்பிக்கைனா, நம்மலோட முதல் எழுத்து VP விக்ரம் பனிமலர் பொறிக்கப்பட்ட இந்த ச்செயின் என் நம்பிக்கை..." என்ற அவனது வாய்மொழி வார்த்தையிலும் கண்ணில் மின்னிடும் காதலிலும் மேலும் நெகிழ்ந்தாள்.

அவளது இரு கன்னங்களையும் பற்றி நெற்றியில் முத்தமிட்டவன், அடுத்ததாக கண்கள், கூரிய நாசி, செந்தாமரையாய் சிவந்த கன்னங்கள், ரோஜா இதழைப் போல் மென்மையான இதழ்கள் என மேலும் மேலும் முன்னேறி முத்தத்தின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டிருந்தான்.

நாளை திருமணம் நடந்தேறிடும் என்ற நம்பிக்கையா!!! அல்லது அவன் அணிவித்த சங்கிலிக்கு அதற்கான உரிமையுண்டு என்று நினைத்தாளா!!! அதுவுமின்றி அவன் கண்ணில் கண்ட காதலால் அவனுக்கு இடமளித்தாளா!!! என்பது அவள் மட்டுமே அறிந்த ஒன்று.... ஆனால் சற்று நேரத்திலேயே இதற்காக பெருமளவில் வருத்தம் கொள்ளப் போகிறோம் என்று நினைத்திருந்தால் நிச்சயம் இந்தத் தவறை செய்திருக்கமாட்டாள் பெண்ணவள்.

நேரங்கள் கடந்திட மலரை வீட்டில் சென்றுவிடும் எண்ணம் அவனுக்குத் தோன்றவே இல்லை... அவளைப் பார்ப்பதும், தனக்குத் தானே சிரித்துக் கொள்வதும், அவ்வபோது ஏக்கப் பெருமூச்சு விடுவதுமாக இருந்தான்.

ஆனால் பெண்மையின் மனதிற்குள் எப்போதும் ஒலிக்கும் அலார்ம் அடிக்கடி ஒலிக்கத் தொடங்கியது. இரவு நேரம் வீட்டைவிடுத்து நட்டநடு ரோட்டில் மகிழுந்தினுள் தன்னவனே ஆனாலும் ஒரு ஆண்மகனுடம் இருக்கிறோம் என்று அறிவுறுத்திக் கொண்டே இருந்தது.

அதில் சிறிது அச்சம் பரவ "போலாமா?" என்றாள்.

"என்ன அவசரம் 2மணி தான் ஆகுது... இன்னும் கொஞ்ச நேரம் இருக்காலாம்..."

"நாம வந்து ஒன் ஹவர் ஆகிடுச்சு... வீட்ல தேட போறாங்க.... செம்பியன் வேற கவலைப்படுவான்..."

"அப்போ கண்டிப்பா இன்னும் 2ஹவர்ஸ் கழிச்சு போகலாம்..." என்று உர்ரென முகத்தை வைத்துக்கொண்டு கூறிட, அவனை முறைத்தாள்...

"அவனை சின்னப் பையன்னு சொல்லிட்டு நீங்க தான் சின்னப்பிள்ளை மாதிரி நடந்துக்கிறிங்க..." என்றாள்.

"அப்படியா!!!" என்றவன் ஒற்றைக் கையால் அவள் காதோடு சேர்த்து கன்னத்தைப் பிடித்துக் கொண்டு, பெருவிரலால் அவள் இதழ்களை வறுடியபடி "இவ்ளோ நேரம் நடந்ததெல்லாம் பார்த்தா அப்படியா தெரியுது? நான் சின்னப்பையன் இல்லேனு இன்னொருக்க ப்ரூஸ் பண்ணட்டுமா!!!" என்று ஒற்றைப் புருவம் உயர்த்திக் கேட்டான்.

அதில் வெட்கம் கொண்டு மெதுவாக முகத்தை வெளிப்பக்கமாகத் திருப்பியபடி அவன் தீண்டலிலிருந்து தன்னை மீட்டுக் கொண்டாள்.

மலரின் வெட்கத்தை ரசித்தாலும் தனக்குள் அவளைப் பற்றிய திட்டத்தை தன் மனதில் வழுப்படுத்திக் கொண்டவன், அதனை வார்த்தையாகக் கூறினான்.

"உன்னை நிறையா மாத்த வேண்டி இருக்குடி என் செல்லப் பொண்டாட்டி..." என்று அவள் கன்னம் கிள்ளி கொஞ்சினான்.

அவனின் அழைப்பில் உச்சி முதல் உள்ளங்கால் வரை குளிர்பரவுவது போல் உணர்ந்தவள், அந்த இனிமையோடே தன் கன்னத்தைத் தடவியபடி "அப்படி என்ன மாத்தப் போறிங்க?" என்றாள்.

"அதுக்கு முன்னாடி என்னை பத்தி சொல்றேன்... கேக்குறேயா?"

"ம்ம்ம்"

"நான் டிரிங்க் பண்ணுவேன். வீக்லி ஒன்ஸ் ஃப்ரெண்ட்ஸோட..." என்று கூறியபடி முன்பக்கமாகத் திரும்பி அமர்ந்து கொண்டு முகத்தை மட்டும் திருப்பி அவளைப் பார்த்தான். அவன் நினைத்தது போலவே கண்கள் இரண்டையும் பெரிதுபடுத்தி அவனை மிரட்சியாகப் பார்த்தாள்.

"ஏய்... என்னாச்சு?"

"அதுக்காக என்னையும் ட்ரிங்க் பண்ண சொல்றிங்களா?" என்று சற்று பயந்தபடி வினவினாள்.

"ஓஓஓ... உனக்கு அந்த ஆசை வேற இருக்கா!!!" என்று ஏகபோக நக்கலோடு கேட்டுவிட்டு அவனே தொடர்ந்தான், "பாட்டில்-ல கை வெச்சே கொன்னுடுவேன்..." என்று மிரட்டினான்.

அவனது மிரட்டலில் தைரியம் மீண்டும் துளிர்விட, "ஓஹோ... பசங்க மட்டும் தான் ட்ரிங்க் பண்ணனும்னு எதுவும் சட்டம் இருக்கா? பசங்களுக்கு பொண்ணுங்க எந்த விதத்துல கொறஞ்சு போயிட்டோம்..."

"இதான்டி பொண்ணுங்க ப்ரச்சனையே... உங்க ரைட்ஸ்ஸ கேட்டு சண்டை போடுறேன்ற பேர்ல தப்பு தப்பா பேச வேண்டியது.... சரி இப்போ உன் பேச்சை கேட்டு நீயும் எனக்கு ஈக்குவல் தான்னு சொல்லி உன்னையும் டிரிங்க் பண்ண சொன்னா, நீ பண்ணுவேயா?"

"நான் இன்னு முழுசா பேசி முடிக்கலே... அதுக்குள்ள நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டா நான் அதுக்கு பொருப்பாக முடியாது..." என்று சிடுசிடுப்பாக உதட்டை வெட்டிக் கூறிட,

"சரி சொல்லு..."

"எங்க வீட்ல இருக்குற வரைக்கும் எங்க இஷ்டபடி, நாங்க விரும்புறதை மட்டுமே செய்துட்டு செல்லப்புள்ளையா வளந்த நாங்க கல்யாணம் ஆனதும் புருஷனுக்குக்காகவும் அவங்க குடும்பத்து ஆளுங்களுக்காவும் அவங்க விருப்பபடி எங்களை மாத்திக்கிறோம் தானே!!! எங்க சுதந்திரம் போச்சு... இவனை கட்டின பின்னாடி என் வாழ்க்கையே சூன்யம் ஆகிடுச்சுனு எங்க மனக் குமுறலை ஜோக்ஸ்-ஆ சொல்லியோ, மீமீஸ்-ஆவோ போடுறோமா என்ன? ஆனா பசங்க மட்டும் பொண்டாட்டி பத்து நாள் அப்பா வீட்டுக்கு போயிட்டா திரும்பவும் பேச்சுலர்ஸ் மாதிரி மாறிட வேண்டியது...

இதுபத்தி மெதுவா கேட்டா எல்லாம் எனக்குத் தெரியும் நீ உன் வேலையப் பாருனுடி அதட்ட வேண்டியது, இதேது கொஞ்சம் சத்தமா கேட்டா ஒரு பத்து நாள் நான் சந்தேஷமா இருந்தா உனக்கு பொருக்காதே!!! உன்னால என் நிம்மதியே போச்சுனு அதுக்கும் மேல சத்தமா பேசி திட்ட வேண்டியது... மிடில் க்ளாஸ் ஃபேமிலி தான் இப்படினா உங்கள மாதிரி ஃபேஷனுக்காக குடிக்கிற பசங்க உங்க வசதிக்காக பொண்ணுங்களுக்கும் பழக்கிவிட்டுட்டு என்னைவிட மொடா குடிகாரிடி நீ-னு பொண்ணுங்களைப் பார்த்து சொல்ல வேண்டியது..." என்று சலித்துக் கொண்டாள்.

"இப்போ என்ன? இனிமே ட்ரிங்க் பண்ணக்கூடாது.... அவ்ளோ தானே!!! பண்ணல போதுமா!???... அதுக்கு ஏன் நீ பக்கம் பக்கமா பேசிட்டு இருக்கே?" என்றவனை சந்தேகமாகப் பார்த்தாள்.

"நம்பலேயா?"

ஆம் என்று சொல்ல முடியாமல் "நம்புறேன்.... ஆனாலும்...." என்று இழுத்தாள்.

"அப்போ நம்பலே அப்படித் தானே!!!"

"பின்னே.... அஞ்சு நிமிஷம் பேசுறதுக்குள்ள திருந்திட்டேன்... இனிமே ட்ரிங்க் பண்ணமாட்டேன்னு சொன்னா எப்படி நம்புறதாம்!!!" என்று அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு உண்மையாக மனதில் எழுந்த சந்தேகத்தை வினவினாள்.

"ஓய்.... என்னைப் பார்த்தா குடிச்சுட்டு ரோட்ல உருண்டு புறல்றவன் மாதிரி இருக்கா!!! பிச்சுடுவேன் பாத்துக்கோ... என் ப்ளஸ்ஸே என்னோட இந்த ஹேபிட் தான். உடம்பை ஃபிட்டா வெச்சுக்கிறதுக்கு எந்த சாப்பாடா இருந்தாலும் முகம் சுழிக்காம பழகிக்கவும் செய்வேன், நிறுத்தனும்னு நெனச்சுட்டா யோசிக்காம நிறுத்திடுவேன்... இது நம்மலால முடியுமா முடியாதான்ற டவுட் எனக்கு வந்தது இல்லே..." என்று அவளுக்கு நம்பிக்கையூட்டும் விதமாகக் கூறினான்.

அப்போது தான் அவனது பாடி ஃபிட்னஸைப் பார்த்தவள் 'உண்மை தான்...' என்று தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டு "ம்ம்ம்" என்றாள்.

"பட் கொலிக்ஸ் கூட பார்ட்டிஸ் போகும் போது ட்ரிங்க் பண்ண வேண்டி வரும்" என்றவனை மீண்டும் முறைத்தாள். "அதான் நீயும் கூட வருவேல!!! பின்னே ஏன் இந்த முறைப்பு? நான் லிமிட் க்ராஸ் பண்ணினா அங்கேயே என் சட்டையப் பிடிச்சு கேள்வி கேட்குற உரிமை உனக்கு இருக்கு..."

"ஐய்யே ச்சீ... அந்த மாதிரி பார்ட்டிக்குலாம் நான் வரமாட்டேன்.... அதுக்கு வேற ஆளைப் பாருங்க." என்று இவ்வளவு நேரம் அவன் உரிமையாகப் பேசியதையும், தனக்காக அவனது பழக்கத்தை மாற்றிக் கொள்கிறேன் என்றதையும் கருத்தில் கொண்டு தன் விருப்பமின்மையை உரைத்திட,

அதில் கோபம் கொண்டவன், சட்டென தன் இடது கையால் அவள் கழுத்தைப் பிடித்து, "பின்னே என்னை தனியா போய் அசிங்கப்பட சொல்றேயா!!!" என்று பல்லைக் கடித்துக் கொண்டு உறுமினான். 'என்ன நினைத்தான்? ஏன் இந்த கோபம்?' என்று எதுவுமே தெரியாமல் அவனது கோபத்தின் உச்சத்தை முதல்முறை கண்ட பெண்ணவளின் உடல்... நடுக்கம் கொள்ள அதனை தன் கை வழியே உணர்ந்து கொண்டான் அவன்.

அவளின் மிரட்சிப் பார்வையைக் கண்டு தன் கையை முன்கழுத்தில் இருந்து விலக்கி, மெதுவாக பின்தலைக்குக் கொண்டு சென்று அவள் முகத்தை தன் நெஞ்சோடு சாய்த்துக் கொண்டான். மாற்றி மாற்றி தன் உணர்வை வெளிக்காட்டும் அவனது செயல்களை ஆராயத் தொடங்கியவள், கொஞ்சமும் அவன் அன்பில் உருகிடவில்லை.

"என் ஃபீல்ட் எப்படிப்பட்டதுனு உனக்கு தெரியும்? உன்னை மீடியாவுக்கு நான் அறிமுகப்படுத்தலேனா மத்தவங்களோட கற்பனைக்கும் கூட கை, கால் மொழச்சிடும்... நாமலே அதுக்கு தீனி போட்டு வளர்த்த மாதிரி ஆகிடும்..." என்று கூறி தன்னைவிட்டு விலக்கி, தன் வலது கையால் அவளது கன்னம் வறுடி,

"நான் சொல்றதை புரிஞ்சுக்க ட்ரை பண்ணு... இது பத்தி நாம இன்னொரு நாள் பேசலாம்... இப்போ உன்கூட இருக்குற இந்த நிமிஷம் எனக்கு ரெம்ப ஸ்பெஷல்... அதை கெடுத்துக்க விரும்பலே நான்." என்று அப்போதைக்கு பேச்சை நிறுத்த முற்பட்டான்.

தன் மனதை கலைப்பதற்கே இந்த ஒத்திவைப்பு என்று எண்ணியவள், அதற்கு இடம் கொடுக்கக் கூடாது என்ற முடிவோடு, "நான் உங்களை மாற சொன்னதனால நீங்களும் என்னை மாற சொல்றிங்களா?" என்று அவள் கமா போட்டு தொடர்ந்தாள்.

அவள் கன்னத்தை வறுடிய கையை விலக்கிக் கொண்டவன், ஸ்டேரிங் வீல்-ஐ குத்தி தன் கோபத்தை வெளிப்படுத்தியவன், "இப்போ அதுல என்ன தப்பு? நீயும் என்கிட்ட எக்ஸ்பெக்ட் பண்ணின... நானும் அதே மாதிரி உங்கிட்ட ஒரு விஷயம் எதிர்பாக்குறேன்... அவ்ளோ தான்..." என்று முடித்துக் கொண்டான்.

அவனின் வார்த்தைகள் தேவைக்கு ஏற்றார் போல் மாறிக் கொள்கின்றதோ என்று சிந்தித்தபடி அவனையே பார்த்திருந்தாள் பெண்ணவள். 'நெருங்காதே, உனக்கு உரிமை இல்லை' என்றவுடனேயே அந்த உரிமையை ஏற்படுத்திக் கொள்ள நினைத்தார். தன்னையும் அதில் திணித்தார்.

இப்போதோ கணவன் மனைவிக்காவும், மனைவி கணவுக்காகவும் தங்களை மாற்றிக் கொள்வது அன்பால், காதலால் தானாக நடக்க வேண்டும்.... ஆனால் இவரது மாற்றத்திற்குப் பின்னால் தன் மேல் ஒரு எதிர்பார்ப்பைத் திணிக்கிறார்.... இப்படி ஒவ்வொரு மாற்றத்திற்குப் பின்னும் இதே போல் ஓர் எதிர்பார்ப்பு இருந்தால்!!!

இனி ஒருவருக்கு ஒருவர் எதுவும் மாற்றிக்கொள்ள வேண்டாம் என்றால், என்னிடம் அவர் எதிர்பார்க்கும் மாற்றத்திற்கான தேவையை நிச்சயம் உருவாக்கிக் கொள்வார்... என்று அவனைப் பற்றிய சிந்தனையில் இறங்கினாள்.

இருவருக்குள்ளும் அமைதி தொடர்ந்திட, அரைமணி நேரம் கடந்ததைக் கூட இருவரும் அறிந்திடவில்லை. பின் விக்ரம் தான் மகிழுந்தின் எண் கடிகாரத்தைப் பார்த்துவிட்டு நேரம் ஆவதை உணர்ந்து, அவளது வலது கையை பிடிக்க நினைத்து தன் கையை நீட்டிட, அவளோ தன் கையை விலக்கிக் கொண்டாள்.

அதில் அவனுக்குள் இருக்கும் குறூரன் வெளியே வர, மகிழுந்தைவிட்டு இறங்கி நின்று கொண்டான். அவன் செயலுக்கான அர்த்தம் அப்போது புரியவில்லை அவளுக்கு... சற்று நேரம் கழித்தே தனக்கு தாமதமாவதையும் அதனை அவனிடம் நினைவு படுத்தினால் இது குறித்து பேரம் பேசிடவும் நினைக்கிறான் என்று அறிந்து கொண்டாள்.

அவளும் வெளியே வந்து அவன் அருகே சென்று நின்று, தன் கைகளை கட்டிக்கொண்டு, "இப்போ என்ன!!! உங்ககூட நீங்க கூப்பிடுற பார்ட்டீஸ்க்கு வரனும்... அவ்ளோ தானே... நான் மாட்டேன்னு சொன்னது ரெண்டு ரீஸனுக்காகத் தான். ஃப்ஸ்ட் எனக்கு இதெல்லாம் பழக்கம் இல்லே, அதனால பிடிக்கலே.... செகென்ட் நான் வர்றதுனால உங்களுக்கு அவமானம் ஆகிடக் கூடாதுனு நெனச்சேன்... இனி உங்க விருப்பம்..." என்று அமைதியாகச் செல்வதைத் தவிர வேறுவழி இல்லாமல் போனது அவளுக்கு...

"தேவையான நேரங்களில் மட்டும் அழைச்சிட்டுப் போறேன்... நான் சொல்ற மாதிரி நடந்துகிட்டா யாருக்கும் அவமானம் இல்லே... என்னை நம்பி என்கூட வா... இப்போ டைம் ஆகிடுச்சு... போலாம்..." என்று கூறி அவளது தோளில் கைபோட்டு அழைத்துச் சென்று கதவைத் திறந்து அவளை உள்ளே அமர்த்தினான்.

அவனும் ஏறி அமர்ந்து மகிழுந்தை உயிர்பித்தான். சற்று தூரம் சென்று யூ ட்டர்ன் எடுத்து இல்லம் நோக்கிச் செல்ல, "சீட் பெல்ட் ரிமூவ் பண்ணிட்டு என் பக்கத்துல வந்து உக்காறேன்!!!"

"இன்னும் கொஞ்ச தூரம் தானே... இங்கேயே இருக்கேன்..." என்று எதார்த்தமாகத் தான் உரைத்தாள். அவள் கூறியது போல் அடுத்தத் திருப்பத்தில் ஊருக்குள் நுழைந்தால் ஐந்து நிமிடத்தில் இல்லம் வந்துவிடும்... ஆனால் அந்த வீம்புக்காரனோ மகிழுந்தை வேகம் எடுத்து ஊருக்குள் செல்லும் திருப்பத்தில் திருப்பாமல் நேரே செலுத்த, பெண்ணவள் இயலாமையோடு அவனைப் பார்த்தாள்.

"நீ என்னை நெருங்கி உக்காருர வரைக்கும் கார் வீட்டுக்குப் போகாது..." என்று தீர்க்கமாகக் கூறிவிட, அவனின் குணம் பெண்ணவளுக்குள் அச்சத்தை ஏற்படுத்தியது.

இப்போதும் தான் தோற்றுப் போவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை அவளுக்கு... கண் முன்னே நிழல் பிம்பங்களாகத் தோன்றிய தம்பியும் அவனது பயமும், நேரம் ஆவதை உணர்த்திட, இருக்கைப் பட்டையை தளர்த்தி அவனை நெருங்கி அமர்ந்தாள். மனம் ஒட்டா நிலையில் உடல் மட்டும் ஒட்டிக்கொண்டது.

'இதை நாம் செய்திருக்கக் கூடாது' என்று ஏதேனும் ஒரு தருணத்தில் வருந்தும் சூழ்நிலை எல்லோருக்கும் ஏதேனும் ஒரு பருவத்தில் தோன்றியிருக்கும். அப்படி ஒரு சூழ்நிலை தான் விக்ரமிற்கும் அன்று நடந்தது. மலரை வெளியே அழைத்து வந்திருக்கக் கூடாது என்று அதன்பின் அவன் பல நாட்கள் வருந்தும் நிலையும் வந்தது.



-தொடரும்​