உணர்வாய் உயிராய் நீயே எந்நாளும் அத்தியாயம்-8
அமிர்தா அதிர்ச்சியில் எழுந்தவள் “என்ன பண்ணுறே ஆரதி?” என்றதும் விதுன் தோளில் தொங்கியவளை கைப்பிடித்து இறக்கி விட்டான்.
ஆரதிக்கு தான் செய்தது தவறு என்று புரிந்திட தன் இருக்கையில் இருந்து எழுந்தவள் ஆரதியின் கைகளைப் பிடித்தபடி விதுனிடம் “சாரி விதுன் அவ ஏதோ தெரியாமல் செய்துட்டா” என்றாள்.ஆரதி திருதிருவென்று விழித்துக் கொண்டிருந்தாள்.
விதுன் எதுவும் சொல்லாமல் அமைதியாக நின்றான்.
ஆரதியின் மனநிலைமையோ ‘இப்போ நான் என்ன பண்ணிட்டேன்னு இப்படி சீன் போடுறாங்க’ என்ற சுற்றிப் பார்க்க இவர்களுக்கு அடுத்த மேசையில் இவள் வேலை செய்யும் மருத்துவமனையின் தலைமை மருத்துவரும் அவருடன் சிலரும் உட்கார்ந்து இருந்தனர்.
அவர்களில் ஒருவன் இங்கு நடந்ததைப் பார்த்து வாய் மேல் கைவைத்து சிரிப்பதை மறைத்தப்படி சிரித்துக் கொண்டிருந்தான்.
தன் கண்களால் நம்ப முடியாமல் உற்றுப் பார்த்தவள் தலைமை மருத்துவரைக் கண்டு பயத்தில் எச்சிலை விழுங்கியவளுக்கு கைகள் நடுங்கியது.அவளின் நிலைமையைப் புரிந்த அமிர்தா ஆறுதலாய் கைப்பிடித்துக் கொண்டிருக்க…
எதுவும் தெரியாதது போல் அங்கிருந்து வேகமாகச் சென்றாள் ஆரதி.அமிர்தாவும் உடன் சென்றாள்.ஆரதிக்கு வேகமாக மூச்சு வாங்கியது.
அமிர்தா “ஏய் சாரிடி இப்படி எல்லாம் நடக்கும்னு நான் எதிர்பார்க்கலை.எத்தனை தடவை உனக்கு கால் பண்ணேன் ஏன் எடுக்கலை?”
இவளோ அவசரமாய் கைப்பேசியை எடுத்துப் பார்க்க அது சத்தம் குறைத்து வைத்திருந்ததால் இவளுக்கு கேட்கவில்லை.
அமிர்தா “விதுனோடு மற்ற டாக்டர்ஸ் வந்திருந்தாங்க அவங்களும் இங்கே வரனும்னு சொல்லியிருக்காங்க ஏற்கனவே நீயும் நானும் பேசியிருந்ததால் எதுவும் நடந்திடக் கூடாது தான் போன் பண்ணேன், நீ எடுக்கலை.எல்லாம் சரி தான் ஆனால் விதுன்கிட்ட சின்ன வயசுல இருந்தது போல நீ செய்தது தப்பு ஆரதி.என்ன இருந்தாலும் நாம வளர்ந்துட்டோம் இல்லையா? அதுக்கு ஏற்ற மாதிரி நடந்துக்கனும் விதுனுக்கும் இது தர்மசங்கடமாக இருக்கும் எப்படி ரியாக்ட் பண்ணப் போறானே தெரியலை” என்றாள் கவலையோடு…
அங்கே விதுன் கன்னம் சிவக்க உட்கார்ந்து இருந்தான்.ஆரதி அவன் தோளில் ஏறியது மட்டுமல்லாமல் முகத்தோடு முகத்தை சேர்த்து வைத்ததில் ஏற்பட்ட குறுகுறுப்பை வெளிக்காட்டாமல் முகத்தை கடினமாக வைத்துக் கொண்டிருந்தான்.
இப்படி எல்லோரின் முன்னிலையில் நடந்ததால் அவனால் எதுவும் சொல்ல முடியவில்லை.யாரும் இல்லாமல் இருந்திருந்தாலவது தட்டாமாலையாவது சுற்றி இருப்பான். இப்போது எதுவும் செய்ய முடியாமல் அமர்ந்திருந்தான்.
தலைமை மருத்துவரும் தனியாக விவரங்களை பேசிக் கொள்ளலாம் என்று அமைதியாக இருந்தார்.
இங்கே ஆரதி “இப்போ நான் என்னச் செய்றது?
“எனக்கும் தெரியலை இப்போ திரும்பி வந்தால் எல்லோருக்கும் தர்மசங்கடமாக இருக்கலாம் அதனால” என்று நிறுத்த…
“ம்ம்… புரியுது கிளம்ப சொல்றே அதானே நானே போறேன்” என்று ஒன்றும் செய்ய முடியாத நிலையில் மெதுவாக நடக்க ஆரம்பித்தாள் ஆரதி.
இதற்கிடையில் அங்கே அமர்ந்திருந்த மருத்துவர்களில் ஒருவன் எழுந்து “இப்போ நான் அவசரமா கிளம்ப வேண்டியது இருக்கு” என்று சொல்லி விட்டுச் சென்றான்.
ஆரதி போவதைப் பார்த்தவன் சிரித்துக் கொண்டே அவள் பின்னாலேயே சென்றான்.அவளுடன் நடக்கத் தொடங்கியவன் “ஹலோ ஆரதி எப்படி இருக்கீங்க?” என்றதும் இவள் யாரென்று யோசிக்க ஆரம்பித்தாள்.
அவனோ “நான் யார்னு தெரியலை? நீங்க ப்ராக்டீஸ்காக வந்திருந்த ஹாஸ்பிட்டல்ல” என்று சொல்லி முடிக்கும் முன்னரே அவள் தெரிந்துக் கொண்டு “டாக்டர் வாசன் தானே” என்றதும் சிரித்துக் கொண்டே “பரவாயில்லை என்னை இன்னும் ஞாபகம் வைச்சு இருக்கீங்க?”
“அதெப்படி மறக்க முடியும் உங்ககிட்ட எடுத்த டிரெயினிங் தானே இப்போ என்னை இந்தளவுக்கு பெஸ்ட்டா மாத்தி இருக்கு டாக்டர் அதோட நான் செஞ்ச சேட்டை எல்லாம் பொறுத்துட்டு இருந்தீங்களே? இப்போ நல்லா இருக்கீங்களா? ஹாஸ்பிடல்ல இருந்து போய்ட்டீங்கன்னு சொன்னாங்க”
“ம்ம்… படிக்க போயிட்டேன்”
“இப்போ”
“நீங்க வொர்க் பண்ணுற ஹாஸ்பிடல்ல தான் நாளையிலிருந்து வரப் போறேன்” என்றான்.
அவளோ அதிர்ச்சியாகி “அப்போ நீங்களும் என்னை பார்த்துட்டீங்க அப்படித் தானே” என்று தலையை குனிந்துக் கொண்டு சொன்னாள்.
அவனோ சிரித்துக் கொண்டு “விதுன் டாக்டர் மேல என்ன அப்படி கோபம்?”
அவளோ சமாளிப்பதற்காக “நான் வேற யாரோன்னு நினைச்சு தான் அப்படி நடந்துக்கிட்டேன்”
“ம்ம்… புரியுது ஆரதி நீங்க எப்பவும் போல ஒரே மாதிரி இருக்கீங்க நான் அதெல்லாம் பெருசா நினைக்கல விடுங்க உங்களை திரும்ப சந்திச்சதே எனக்கு சந்தோஷம் வாங்க எதாவது பேசிட்டே சாப்பிடலாம்” என்றான்.
அவளோ இருக்கும் சூழ்நிலை இதற்கு சரிப்பட்டு வராது என்பதால் “இன்னொரு நாள் கண்டிப்பா வரேன் டாக்டர் இப்போ நான் போகனும்” என்றாள்.அவனும் ஒத்துக் கொள்ள சரியென்று அவனிடம் சொல்லி விட்டு பேருந்தில் ஏறி வீட்டிற்குச் சென்றாள்.
மனதும் உடலும் சோர்வாக இருக்க பேருந்து நிலையத்திலிருந்து வீடு வரைக்கும் ரொம்ப பொறுமையாக நடந்து வந்தாள்.இதற்கிடையில் அமிர்தா “வீட்டுக்கு போய்ட்டியா? நான் வர கொஞ்சம் லேட் ஆகும்” என்று குறுஞ்செய்தி அனுப்பியதற்கு “வந்துட்டேன் சரி” என்று மட்டும் அனுப்பி விட்டாள்.
எப்போதும் நாம் சொல்வதை எல்லாம் எதிர் கேள்வி கேட்காமல் செய்யும் ஒரு ஜீவன் அதோடு செய்யும் தவறுகளை உரிமையாய் எடுத்துச் சொல்லும் உறவு இருந்து விட்டால் அவ்வளவுதான் அந்த மனிதனின் அதிக பட்ச பேராசை.
அப்படித் தான் ஆரதிக்கு விதுனைப் பற்றி தெரிய வந்தததிற்கான மனநிலை.இத்தனை நாட்கள் தூங்கிக் கொண்டிருந்த தன் சிறுவயது கனவுகள் எல்லாம் விழித்துக் கொள்ள அதனால் ஏற்பட்ட விளைவு தான் அவனை சந்தித்தவுடன் நடந்துக் கொண்ட முறை.
ஆரதிக்கு ஓரளவு நிதர்சனத்தோடு வாழ்வதற்காகவே அவளை செவிலியராக மாற்றினர் அவளின் பெற்றோர்.எப்போதும் யார் பேசினாலும் அதை தனக்கு ஏற்ற மாதிரி மாற்றிக் கொள்ளும் மனநிலை.குழந்தை பருவத்திலிருந்து வளரும் போது மற்றவர்களுக்கு அது இடையூறாக இருக்க வேண்டாம் என்பதால் வாழ்க்கை புரிதலை ஏற்படுத்த அவளை படிக்க வைத்தனர்.
இப்பொழுது எங்கே எப்படி நடந்துக் கொள்வது? என்றதை விட மற்றவர்களுக்கு அவள் உதவியாக இருக்கவும் மாற்றிக் கொண்டாள்.
நடந்ததை நினைத்தவள் விதுனிடம் தேவையில்லாமல் உரிமை எடுத்துக் கொண்டது தவறு என்று புரிபட இன்னும் சோர்வாய் தலையை குனிந்தபடி யோசனையாக குடியிருப்பின் அருகில் வந்தாள்.
அப்பொழுது “ஹேய் வாயாடி என்ன பார்க்காமல் போறே?” என்றதும் ஏற்கனவே கேட்டுப் பழகிய அந்தக் குரலின் சத்தம் வந்த திசையைப் பார்க்க அங்கே புன்னகை முகமாய் நின்றுக் கொண்டிருந்தான் விதுன்.
ஆரதி சட்டென்று தோன்றிய அதிர்ச்சியையும் மகிழ்ச்சியையும் ஒரே நேரத்தில் வெளிப்படுத்த தெரியாமல் அப்படியே நின்றாள்.
அவளருகே வந்தவன் “என்ன எதுவும் பேசாமல் அப்படியே இருக்கே? நான் உனக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு பார்த்தால் எப்பவும் போல நீயே தந்துட்டே ஆரதி.எப்படி வளர்ந்துட்டே? உன்கிட்ட நிறைய பேசனும் சொல்லனும்” என்றதும் அவள் கேள்வியாய் பார்க்க…
“இப்போ இல்லை இன்னொரு நாள் கண்டிப்பா சொல்றேன்” என்றவன் அவளின் கையைப் பிடித்து ஒரு பொருளைக் கொடுத்தவன் “போய் சாப்பிடு உனக்காகத் தான் வாங்கினேன் நாம தான் இனிமேல் தினமும் சந்திப்போம் இல்லையா?”
என்றதற்கு ஆமாம் என்று தலையசைத்தாள்.
“நிறைய பேசலாம் லேட்டாயிடுச்சு நாளைக்கு ஹாஸ்பிடலுக்கு சீக்கிரமா போகனும் இல்லையா?உள்ளே போ” என்றான்.
ஆரதி வாயைத் திறந்து ஒரு வார்த்தை பேசவில்லை.ஆனால் அவளின் விழிகள் பேசிய அத்தனை கேள்விகளுக்கான பதிலைத் தான் அவன் சொல்லிக் கொண்டிருந்தான்.
அவளை அழுந்த பிடித்திருந்த கையை அவன் விடவில்லை.
ஏன் இந்த விரல்கள் கூட
உனது விரல் இடுக்குகளின்
அரவணைப்பிற்கு ஏங்குகிறது.
அவள் அமைதி இவனை சிறிதாய் தொல்லை செய்ய “என்ன ஒன்னுமே சொல்ல மாட்டேங்கிற?”
“என் மேல கோபம் இல்லையே”
“இந்தக் கேள்விய நான் கேட்கனும் உன்னைப் பார்த்து நான் தெரியாத மாதிரி இருந்திருக்கிறேன்”
“அதை விட அத்தனை பேருக்கு முன்னாலே உங்க மேல ரொம்ப உரிமை எடுத்துகிட்டேனோ?” அவள் தயக்கமாய் கேட்டாள்.
அவனோ “இல்லை நான் அப்படி நினைச்சிருந்த இப்பபோ இங்கே வந்திருப்பேனா?” என்று கேள்வியாய் கேட்டான்.
அவளோ “தெரியும் இருந்தாலும் கேட்கிறது தானே நல்லது” என்றாள்.
“நீ எப்பவும் இப்படித் தானே இருப்பே அதனால நான் நினைக்க எதுவும் இல்லை” என்றான்.அவன் சொன்னதைக் கேட்டு மெலிதாக புன்னகை ஒன்றை பதிலாகத் தந்தாள்.
சிலரிடம் பேச நிறைய இருக்கும்.
சிலரிடம் கேட்க நிறைய இருக்கும்.
ஒரு சிலரிடம் தான் பரிமாற நிறைய இருக்கும்.
அப்படித் தான் அவர்களுக்குள்ளான அன்பும்.
“சரி நான் வீட்டுக்குள் போகிறேன்” என்று சொல்லி விட்டு கிளம்பினாள்.
கதவை திறந்து உள்ளே வரவும் பின்னால் யாரோ வருகிற சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள்.அவன் தான் நின்றுக் கொண்டிருந்தான்.
இவளோ புரியாமல் நிற்க அவனோ அவளருகில் வந்து குனிந்து காலை மடக்கி முதுகை கொஞ்சம் சாய்த்த மாதிரி வைத்தவன் “ஏறு ஆரதி”
அவளோ “விதுன் ப்ளீஸ் எழுந்திருங்க”
“ஏன் நீ தானே என் தோள் மேல ஏறனும்னு ஆசைப்பட்டே இப்போ ஏறு” என்றான்.
உள்ளுக்குள் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.அவன் மாறவில்லை.எப்படி அவனைப் பார்த்தாலோ அப்படித் தான் இருக்கிறான்.முதலில் ஏற்பட்ட ஒரு ஆவல் இப்பொழுது கொஞ்சம் வெட்கத்தில் கொண்டு வந்திருக்கிறது.
“ப்ளீஸ் இன்னைக்கு வேண்டாமே விதுன்” என்று அவள் கெஞ்ச அவன் எழுந்துக் கொண்டான்.
அவனோ சிரித்துக் கொண்டே “ஆரதி இன்னொரு நாள் கண்டிப்பா தூக்குவேன்” என்றான்.
“இவ்வளவு தூரம் வந்துட்டீங்கல்ல வாங்க உள்ளே போகலாம்” என்றாள்.
அவன் யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது “வாங்க” என்று கதவை திறந்து அவனை அழைத்தாள்.
அவனும் சரியென்று உள்ளே வந்தான்.அவனை உட்காரச் சொன்னவள் “குடிக்க எதாவது கொண்டு வரட்டுமா?”
“வேண்டாம் சாப்பிட்டுட்டு தான் வந்தேன் இங்கே உட்காரு பேசலாம்” என்றான்.
அவளும் உட்கார்ந்தாள்.
“என்னை மன்னிச்சிடு ஆரதி அன்னைக்கு உன்கிட்ட சொல்லாமல் போய்ட்டேன் சூழ்நிலை அப்படியாகிடுச்சு திடீர்னு கிளம்பனும்னு சொல்லிட்டாங்க அதோடு படிக்கனும்னு வெளிநாட்டுக்கு போய்ட்டேன் திரும்ப வர முடியலை ஆனால் உன்னை நிச்சயம் சந்திப்பேன்னு நினைச்சேன் அது நடந்திடுச்சு” என்றான் புன்னகைத்துக் கொண்டே…
அவளோ யோசனையாய் “அப்போ காபி ஷாப்ல பார்க்கும் போதே நான் தான் தெரியுமா?”
அவனோ சிரித்துக் கொண்டே “தெரியாது ஆரதி நான் அமிர்தாவைத் தான் பார்க்க வந்தேன்.ஆனால் அங்கே நடந்ததே வேற” என்றான்.
ஆரதி ஆர்வமாய் “அப்போ என்னை எப்படி கண்டுபிடிச்சீங்க?”
அவனோ சிரித்துக் கொண்டே “ஆப்ரேஷன் முடிஞ்சு ஹெட் டாக்டர் உன்னைப் பற்றி சொல்லி உன்னோட டீடெய்ல்ஸ் அனுப்பி இருந்தாங்க அப்பொழுதே நீ தான் வந்து இருந்தேன்னு தெரியும்” என்றான்.
அவளோ அதிர்ச்சியாகி “அப்போ நான் போட்ட திட்டமெல்லாம் வேஸ்ட் தானா?”
“ம்ம்…” என்று தலையசைத்தான்.அவளால் அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் “அமிர்தாவிற்கு பதிலாக நான் வந்தேன்னு தெரியுமா? ஆரதின்னு எப்பொழுது தெரியும்?”
அவனோ அவளை நேருக்கு நேராக பார்த்தவன் “ஆரதின்னு பெயர் பார்த்ததும் ஓரளவு யூகிச்சேன் ஆனால் நான் முழுசா நீ தான் என்று எப்படி தெரியுமா? கண்டுபிடித்தேன்” என்று சட்டென்று ஆரதியின் உதட்டின் ஓரமாய் இருந்த அந்த மச்சத்தினை தன் விரல்களால் வருடியவன் “இந்த மச்சம் தான் என்னை யோசிக்க வைச்சது” என்றான் பெருமூச்சோடு…
அவனின் தீண்டுதலில் விழிகளை மூடியவள் நிதர்சனத்தில் வந்து சட்டென்று நகர்ந்து கொண்டாள் ஆரதி.
இருவரிடமும் அமைதி நிலவியது.அப்பொழுது விதுனின் கைப்பேசி அழைக்க சத்தம் வந்த திசையில் இருவரும் பார்த்தனர்.விதுன் தன் அழைப்பை எடுத்தவன் “ம்ம்… சரி நான் வரேன் வெயிட் பண்ணுங்க” என்று அழைப்பை துண்டித்தவன் எழுந்து “நான் கிளம்புறேன் ஆரதி நாளைக்கு பார்க்கலாம்” என்றதும் “ம்ம்…” என்று ஒரு வார்த்தை மட்டும் சொன்னாள்.
அவள் முகம் பார்க்காமல் குனிந்தவாறே சென்று விட்டான்.அவளோ கன்னம் சிவக்க நின்றிருந்தாள்.அவன் சென்றதும் கன்னத்தில் இரு கைகளை வைத்து விழிகளை மூட அவன் தீண்டியது நினைவுக்கு வந்தது.
விதுனோ தன் தலைமுடியை கோதியபடி மனதினுள் ‘என்ன வேலை செய்ய பார்த்துட்டே விதுன் ஆரதி கண்டிப்பா தப்பா நினைச்சுக்க போற’ என்று தன்னை நினைத்து நொந்தபடியே சென்றான்.
இவள் அப்படியே உட்கார்ந்திருக்க அங்கே அமிர்தா வந்தாள்.இவள் அமர்ந்திருப்பதைப் பார்த்து “என்னடி பேயைப் பார்த்த மாதிரி உட்கார்ந்திருக்கே”
அதிர்ச்சியாக கேட்டாள் அமிர்தா.
இவளோ பதில் சொல்லாமல் விழிகளை விரித்தபடி அமைதியாக உட்கார்ந்திருக்க..
அமிர்தா ஆரதியை மேலும் கீழுமாக பார்த்தவள் அவள் பார்த்திருந்த திசையைப் பார்த்தபடி “ஹேய் உன் கண்ணுக்கு அங்கே எதாவது பேய் தெரியுதோ? இல்லை உனக்கு அமானுஷ்யம் பார்க்கிற சக்தி கிடைச்சிடுச்சா?” பயந்தபடி அவளையும் அவள் பார்த்த திசையையும் திரும்பி திரும்பி பார்த்தவள் அவளைப் போட்டு உலுக்கினாள்.
ஆரதியோ அவள் உலுக்கியதும் “ஹய்யோ எனக்கு வெட்க வெட்கமா வருதே” என்று முகத்தை முழுதாக விரல்களால் மூடியவள் அப்படியே இருக்கையில் சாய்ந்தாள்.
அமிர்தாவோ அவளை விசித்திரமாக பார்த்தவள் “வெட்க வெட்கமா வருதா? இது சரியில்லையே! ஒரு வேளை வெட்கையா இருக்குதாடி இரு பேனை ஸ்பீடா வைக்கிறேன்” என்று மின்விசிறியின் வேகத்தை அதிகரித்தாள்.
ஆரதி திரும்ப எழுந்து உட்கார்ந்தாள்.அவளருகில் இருந்த ஒரு சிறு பையை பார்த்தவள் அதை எடுக்கவும் சட்டென்று அதை ஆரதி எடுத்தாள்.அதைப் பார்த்து பயந்த அமிர்தா “ஹேய் பிசாசு ஏன்டி இப்படி பயமுறுத்துறே வரும் போதே சாப்பாடு வாங்கிட்டு வந்துட்டியா?” என்றதும்
ஆரதியோ அமிர்தாவைப் பார்த்து “எப்போ வந்தே?” என்று கேட்டதும் தான் தாமதம் “ஐய்யய்யோ இவளுக்கு உண்மையிலேயே பேய் பிடிச்சிடுச்சு இவ்வளவு நேரமா நான் இவகிட்ட பேசலையா? ஹலோ யாராவது இங்கே இருக்கீங்களா? சொல்லுங்க ப்ளீஸ்” என்று வீட்டைச் சுற்றிப் பார்த்தபடி அமிர்தா கேட்டாள்.
இதைப் பார்த்த ஆரதி “அமிர்தா என்னாச்சு ஏன் இப்படி லூசு மாதிரி பேசுற? நல்லா தானே இருந்தே” என்றதும்
ஆரதியைப் பார்த்து முறைத்தவள் “ஏன் சொல்ல மாட்டே? ஆமாம் நான் தான்டி லூசு இவ்வளவு நேரமா எதுவும் சொல்லாமல் நான் மட்டும் தனியா பேசிகிட்டு இருந்தேன்ல என்னை இன்னும் எதாவது சொல்லுவே” என்றாள்.
உடனே ஆரதி அவளின் கையைப் பிடித்து “சரிடி கோபப்படாதே! நான் ஒரு கேள்வி கேட்பேன் பதில் சொல்லுவியா?”
ஆரதியை மேலும் கீழுமாக பார்த்தவள் “முதல்ல நீ தெளிவா இரு அப்புறம் என்னன்னு சொல்லு?”
“காதல்னா என்ன?லவ் இருக்கா இல்லையா?அப்படி வந்திடுச்சுன்னா அதுக்கு எதாவது அறிகுறி இருக்கா? நீ யாரையாவது காதலிச்சு இருக்கியா?” என்று ஆரதி கேட்டதும்
அமிர்தாவோ தலையில் அடித்துக் கொண்டவள் “காதலையே பேய் இருக்கா? இல்லையா? மாதிரி கேள்வி கேட்கிற பார் அங்கே இருக்கேடி”
“நான் எப்போ அங்கே போனேன் இங்கே தானே இருக்கேன்” என்றாள் அப்பாவியாய்…
“ஹய்யோ மிடிலடா சாமி நான் தூங்கப் போறேன் நீ கவலையா இருப்பேன்னு நான் சீக்கிரம் வந்தால் என்னையே டயர்டு ஆகிட்டே முதல்ல இங்கிருந்து கிளம்பு தாயே நாளைக்கு பேசலாம் போய் சாப்பிட்டு தூங்கு” என்று அங்கிருந்து சென்று தன் அறைக்குள் அடைந்துக் கொண்டாள்.
ஆரதியோ விதுன் வாங்கி கொடுத்த சாம்பார் குட்டி இட்லியை இரசித்து சாப்பிட்டு முடித்தவள் தன் கைப்பேசியை எடுத்துப் பார்க்க அதில் அவளுக்கு “குட் நைட்” என்று குறுஞ்செய்தி அனுப்பி இருந்தான்.பதிலுக்கு இவளும் “குட் நைட்” என்று அனுப்பியவளுக்கு தோன்றிய புன்னகையை இரகசியமாய் இசித்தவள் இந்த புது அனுபவத்தை தன்னுள்ளே அனுபவிக்க ஆரம்பித்திருந்தாள்.
அமிர்தா படுக்கையில் அப்படியே சரிந்தவள் ஆரதி கேட்ட கேள்வி நினைவுக்கு வர அப்படியே மேலே பார்த்தவளுக்கு வாசனின் நினைவு வந்து போனது.அப்பொழுது வேகமாக இதயம் துடித்தது.
வாசனை இரண்டு அல்லது மூன்று முறை பார்த்திருக்கிறாள்.முதல் தடவை ஆரதியோடு அவள் பயிற்சியில் இருக்கும் போது பார்த்தவளுக்கு பிறகு தன் வேலை நிமிர்த்தமாக சந்தித்து இருக்கிறாள்.அவனை பார்க்கும் பொழுதெல்லாம் ஏதோ தன்னை அறியாமலேயே தலையை குனிந்துக் கொள்வாள்.
இன்று எதிர்பாராமல் சில வருடங்களுக்குப் பிறகு அவனை சந்தித்த நிகழ்வில் கொஞ்சம் திணறித் தான் போனாள்.அதையே இன்று தான் அவள் உணர்ந்தாள் அமிர்தா.அதை நினைத்தவள் ஆழ்ந்த யோசனையில் இருந்தாள்.
காதல் இப்படித் தான் தேடலில்
தொடங்கி தொலைவதில்
முடிவடைந்து விடும்.
இருவரும் தேடித்தேடியே தங்களை தொலைத்துக் கொண்டிருந்தார்கள்.
எங்கெங்கோ தேடித் தேடி
உன்னில் என்னை நான்
கண்டேன்.உன் விழி முதல்
மொழி வரை முழுவதும்
கவிதைகள் அகமெது புறமெது
புரிந்தது போலே கனா
கண்டேனடி…