உணர்வாய் உயிராய் நீயே எந்நாளும் அத்தியாயம் -9
ஆரதி பேருந்து நிலையத்திலிருந்து நடந்து வந்துக் கொண்டிருந்தாள்.அப்பொழுது அவளுக்கு அருகே ஒரு இரு சக்கர வாகனம் வந்து நின்றது.இவளோ யாரென்று யோசனையில் பார்க்க தனது தலைகவசத்தை கழற்றியவனைப் பார்க்க வாசன் தான் வந்திருந்தான்.
அவனைப் பார்த்ததும் ஆச்சரியமானவள் “டாக்டர் நீங்களா?”
“ஹாய் ஆரதி வாங்க நானும் ஆஸ்பிட்டல் தான் போறேன் நீங்க நடந்து போயிட்டு இருந்ததைப் பார்த்தேன் அதான் அங்கே உங்களை நான் டிராப் பண்றேன்”
ஆரதி அவசரமாய் மறுப்பாக “வேண்டாம் டாக்டர் நானே போய்க்கிறேன்”
“ப்ச் வாங்க நம்ம தொழில் ரீதியான அறிமுகத்தை விட நாம ரெண்டுபேரும் நல்ல நண்பர்கள் தானே” என்றான்.
அவளால் மறுக்க முடியவில்லை.எத்தனை முறை அவளுக்காக தொழில் முறையானதை விட நண்பனாகத் தான் நிறைய சொல்லி இருக்கிறான்.
சரியென்று தலையசைத்தவள் அவனின் பின்புறம் ஏறி அமர்ந்தாள்.அவனின் தோளின் மேல் கைவைக்க யோசித்து பிடியைப் பிடித்துக் கொண்டாள்.
அதைப் பார்த்து சிரித்தவன் “ஆரதி என் தோள் மேல கை வைச்சுக்கோங்க நான் எதுவும் நினைக்க மாட்டேன்” என்றான்.
அவளோ எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.அடுத்த பத்து நிமிடத்தில் இருவருமாக மருத்துவமனையின் வாயிலில் வந்து நின்றனர்.
வாசன் தன் வண்டியில் இருந்த பையைக் கொடுத்து “இதை வைச்சுக்கிறீங்களா? நான் வண்டியை பார்க் பண்ணிட்டு வந்திடுறேன்” என்றான்.
அவளும் சரியென்று ஒத்துக் கொள்ள அவன் சென்று விட்டு திரும்பி வரவும் அவள் கையில் இருந்த பையை வாங்கிக் கொண்டான்.தன் வெள்ளைநிற மேலாடையை அணிந்தபடி வந்தான்.
“ஆரதி நீங்க தான் எனக்கு இந்த ஹாஸ்பிட்டல் பத்திய விவரங்களை எல்லாம் சொல்லனும்” என்று புன்னகைத்துக் கொண்டே பேசிக் கொண்டு வருவதை அப்பொழுது உள்ளே வந்த விதுனும் பார்த்தான்.அவன் கடந்து செல்வதை ஆரதி பார்க்கவில்லை.
மேலும் அங்கே அவளுடன் பணிபுரியும் மற்றவர்களும் கண்டார்கள்.அப்பொழுது செவிலியர்களில் ஒருத்தி “ஹேய் என்னடி இது புதுசா வர்றவங்களை வரும் போதே இவ கவுத்திடுறா?” என்று முணங்கிக் கொள்ள…
இன்னொருத்தியோ “எல்லாம் இந்த ஹெட் டாக்டரை சொல்லனும் அவர் முதலிலேயே சொல்வதில் தானே அவளுக்கு தெரியுது” என்றனர்.
ஆரதி வாசனிடம் விடைபெற்று விட்டு தன் அறை நோக்கி சென்றாள்.அங்கு இவளுடன் பணிபுரியும் வயதில் மூத்த செவிலியர் ஒருவர் “என்னம்மா அவரை உனக்கு தெரியுமா? என்ன?”
“தெரியும் அக்கா நான் ப்ராக்டிக்கல்ஸ்காக வொர்க் பண்ண ஹாஸ்பிட்டல்ல தான் டாக்டரும் இருந்தாங்க அதனால தெரியும்” என்றாள்.
இவளுடன் பணிபுரியும் மற்றவர்கள் ஆரதியிடம் கேட்க வேண்டிய விவரங்களை இந்த பெண்மணியிடம் சொல்லிக் கேட்டு அதன் மூலமாகத் தெரிந்துக் கொள்வார்கள்.இது ஆரதிக்கு தெரிந்தாலும் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டாள்.தன் பணிக்கே நேரம் சரியாக இருக்க அவளுக்கு இதற்கெல்லாம் நேரமில்லை.
விதுன் வந்ததை கவனிக்காததால் தன் சீருடையில் வெளிவந்தவள் நேராக விதுனின் அறையின் கதவை தட்டாமல் உள்ளே சென்றாள் ஆரதி.
அங்கே விதுன் இருப்பதைப் பார்த்து லேசாக அதிர்ந்தவள் “டாக்டர் எப்போ வந்தீங்க?”
அவனோ முகத்தை சற்று கடுமையாக வைத்துக் கொண்டு “நான் வர்றதுக் கூட தெரியாமல் நீ தான் ரொம்ப பிஸியாக இருந்துட்டே” என்றான் கோபமாக…
விதுனின் பேச்சில் வித்தியாசத்தைக் கண்டவள் யோசனையாய் “என்னச் சொல்ல வர்றீங்க? எனக்கு புரியலை”
அவனோ “உன் வேலையைப் பார்த்துட்டு இருந்தேல்ல அதை சொன்னேன்”
அவளோ மனதினுள் ‘என்ன பொழப்பு இது நம்ம வாழ்க்கை எதை நோக்கி பயணமா போயிட்டு இருக்குன்னே தெரியலையே’ என்று மனதினுள் புலம்பியபடியே அவனைப் பார்த்தாள்.
அவனோ “ஒன்னுமே தெரியாத மாதிரி பார்க்கிறதை விட்டுட்டு நான் சொன்ன விஷயம் என்னாச்சு?”
இவளோ புரியாமல் அவனைப் பார்த்தாள்.இம்முறை 'ஐயோ என்னக் கேட்கிறான்னே தெரியலையே சொன்னா வேற இன்னும் புரியாத மாதிரியே கேள்வி கேட்பானே! நான் என்னச் செய்றது’ என்று விழித்துக் கொண்டிருக்கும் போது அவளருகில் வந்தவன் “நான் எதைப் பத்தி கேட்கிறேன்னு யோசிட்டு இருக்கியா?”
ஆமாம் என்று தலையசைத்தாள்.
“ப்ச் அமிர்தாவைப் பத்தி சொன்னேல்ல அதைத் தான் கேட்கிறேன் ஏன்னா அவங்க அம்மா என்கிட்ட அவ கல்யாணத்தைப் பற்றி பேசியிருக்காங்க”
இவளோ புரியாமல் “அப்போ அமிர்தாவை கல்யாணம் செய்ய ஓகே சொல்லிட்டீங்களா?” கவலையாகக் கேட்டாள்.
அவளைப் பார்த்து முறைத்தவன் ‘இவளை என்னச் செய்றதுன்னே தெரியலயே ஷ்ப்பா… அமிர்தாக்கு ஒரு ரூட் கிளியர் பண்ணி விட்டுட்டா எனக்கு பிரச்சினை இல்லைன்னு யோசிச்சா? முடியலையே’ என்று மனதினுள் நினைத்தவன் அவளிடம் “ஏன் எங்க ரெண்டுபேரையும் நீயே சேர்த்து வைக்கிறியா?”
“என்னச் சொல்லுறீங்க விதுன் உங்களுக்கு அமிர்தாவை பிடிச்சு இருக்கா?” என்றதும் இன்னும் நெருங்கி வந்தவன் அவளுடைய விழிகளுக்கு நேராக பார்த்தவன் “என்னைப் பார்த்தால் உனக்கு எப்படித் தெரியுது? அமிர்தாவை எனக்கு பிடிச்சு இருக்குன்னு நினைக்கிறீயா?” என்று குனிந்து இன்னும் அவளுடைய முகத்திற்கு அருகே வந்தான்.
ஆரதிக்கு இதயத்துடிப்பு வேகமாக துடிக்க ஆரம்பித்தது.
அவனோ அவளை விடாமல் “பதில் சொல்லு ஆரதி” என்ற பொழுது கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது.
சட்டென்று விலகி நின்றதும் உள்ளே வந்த செவிலியர் ஒருவர் விதுனிடம் “டாக்டர் சிஸ்டர் ஆரதியை வரச் சொன்னாங்க” என்றதும் ஆரதி விதுனிடம் சொல்லி விடைபெற்றுச் சென்றாள்.
வாசனோடு அவளுக்கு பணிகள் இருந்தது.அதனால் அவனோடு அன்றைய நேரம் கழிந்தன.நோயாளிகளை சந்திக்கும் போது மட்டும் வந்து இருந்துக் கொண்டாள் ஆரதி.
விதுனிற்கு ஆரதியை சந்திக்கலாம் என்றால் அது இயலாத காரியமாகவே இருந்தது.அதனால் அவளுடைய கைப்பேசிக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினான்.
“அமிர்தாகிட்ட பேசினியா? அவ எதாவது பதில் சொன்னாளா?”
அதற்கு அவளோ “இல்லை எனக்கு இன்னும் ஒருவாரம் டைம் கொடுங்க நான் கேட்டுட்டு பதில் சொல்றேன்” என்று பதில் அனுப்பி விட்டாள்.
பிறகு அவனிடம் எந்த நலவிசாரிப்புகளும் இல்லை.தனக்கும் அவளுக்கும் சம்பந்தமில்லையாம் என்பது போலவே நடந்துக் கொண்டான் விதுன் இப்படித் தான் ஆரதியின் எண்ணமாக இருந்தது.
வாசனோடு அவள் சிரித்து பேசிக் கொண்டிருப்பது அங்குள்ளவர்கள் கண்காணித்ததை விட விதுனின் கண்களில் தான் அடிக்கடி பட்டார்கள்.ஏனோ அவள் தன்னை கண்டுக்கொள்ளவில்லையோ! என்று விதுனிற்கு தோன்றியது.
இந்த அலப்பறை பத்தாது என்று வாசனும் ஆரதியும் ஒன்றாக அமர்ந்து சிற்றுண்டிச் சாலையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
அப்பொழுது அங்கே வந்த விதுன் இவர்கள் இருவரும் அமர்ந்திருந்த இடத்தில் வந்து இருந்துக் கொண்டான்.இதை சற்றும் எதிர்பாராத வாசன் விதுனைப் பார்த்தான்.அவனோ அதற்கு எந்தவொரு எதிர்வினை ஆற்றாமல் அமைதியாக இருந்தான்.
விதுன் “ஹலோ டாக்டர் வாசன் என்கிட்ட எல்லாம் உங்களை அறிமுகப்படுத்த மாட்டீங்களா?” கேள்வியாக கேட்டான்.
உடனே ஆரதி “டாக்டர் நானும் வாசன் டாக்டர் ஒன்னா வொர்க் செய்து இருக்கோம் அவருக்கு என்னை நல்லாவே தெரியும் அதனால் தான்” என்றாள்.விதுன் அவனைப் பார்வையாலே கணித்துக் கொண்டிருந்தான்.
வாசனுக்கு ஒன்றும் புரியவில்லை.விதுன் இவனிடம் கேள்வி கேட்டால் ஆரதி பதில் சொன்னாள்.
இம்முறை வாசன் ஆரதியிடம் “ஆரதி உனக்கு விதுன் டாக்டரைத் தெரியுமா?” என்றதும
அப்படிக் கேட்டதும் விதுனுக்கு தன்னைப் பற்றி என்னச் சொல்லப் போகிறாள்? என்று ஆர்வம் மேலிட அமைதியாக பார்த்தான்.
“ம்ம்… தெரியும் டாக்டர் அவங்க என் ப்ரெண்டோட பேமிலி தான் ஆனால் அந்த விஷயமே இப்போத் தான் தெரியும்” என்றாள்.
வாசனுக்கு இன்னும் தெரிந்துக் கொள்ளும் ஆர்வத்தில் “உங்களுக்கும் நல்லா தெரியுமா ஆரதி”
“ஆமாம்னு சொல்ல முடியாது இல்லைன்னும் சொல்ல முடியாது” என்றவள் எழுந்து “இப்போ எனக்கு ஒரு பேஷண்ட் பார்க்கிற டைம் ஆயிடுச்சு நான் போகனும்” என்று இருவரிடமும் சொல்லி விட்டுச் சென்றாள் ஆரதி.
ஆரதி தன்னைப் பற்றிச் சரியாக பேசவில்லை என்று வருத்தமுற்று பார்த்தான் விதுன்.வாசனோடு நட்பாக பேசிக் கொண்டிருக்கும் போது விதுன் தலையிட்டது ஆரதிக்கு ஒரு மாதிரியாக இருந்தது.
மாலையில் வேலை முடித்து பேருந்து நிலையத்திற்கு செல்வதற்காக ஆரதி வரும் முன்னே காத்திருந்த வாசன் பேசி சமாளித்து அவளை தன்னுடன் அழைத்துச் சென்றான்.
இதை எல்லாம் தூரத்தில் இருந்து பார்த்த விதுனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.ஆரதியைப் பார்க்க அவன் மெனக்கெடல்கள் செய்து பழகி வரும் நேரத்தில் வாசனின் திடீர் வரவால் எல்லாம் மாறிப் போய் விடுமோ? என்று தோன்றினாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.மேலும் தலையிடுவதால் ஆரதிக்கு தன் மேல் கோபம் வரலாம் என்று அமைதியாக இருந்தான்.
வாசன் ஆரதியின் வீட்டில் போய் விட்டான். இரு சக்கர வாகனத்தில் வாசனோடு ஆரதி வந்ததை பால்கனியில் நின்றிருந்த அமிர்தாவும் பார்த்தாள்.ஆனால் ஆரதியைப் பார்த்து எதுவும் சொல்லாமல் அங்கிருந்து சென்று விட்டாள்.
ஆரதி கதவை திறந்து உள்ளே வந்ததும்
அமிர்தா “யார் கூட வந்தே?”
அவளோ சிரித்தபடியே “டாக்டர் வாசன் அவரோடத் தான் வந்தேன் இன்னைக்கு நான் வேலை செய்யுற ஆஸ்பிட்டல்ல வந்து சேர்ந்தாங்க ஏற்கனவே தெரியும் உனக்கு ஞாபகம் இருக்கா”
“ம்ம்…”
“என்ன வேற எதுவும் பேச மாட்டேங்கிற?”
“பேச என்ன இருக்கு?”
அவள் அப்படிச் சொன்னதும் வித்தியாசமாக பார்த்தவள் “என்ன நாதா என்னிடம் இப்படி ஒரு வார்த்தை சொல்லி விட்டீர்கள் தங்களுக்கு எதாவது பிரச்சினையா?” என்று அவர்களுக்குள்ளான உரையாடலை மாற்றினாள்.
தோன்றிய புன்னகையை மறைத்தவள் “ஒரு பிரச்சினையாக இருந்தால் பரவாயில்லை பிரச்சினையின் மறு உருவமே என்னுடன் இப்படி ஒட்டிக் கொண்டு இருந்தால் பிரச்சினைக்கு குறைவேது?அது தான் பெரிய பிரச்சினையே” என்றதும்
கோபமாக முறைத்த ஆரதி “ஒரு வார்த்தை தானே கேட்டேன் என்ன பிரச்சினைன்னு அதுக்கு எத்தனை தடவை சொல்லிட்டே ஆனாலும் இது ரொம்ப ஓவர்”
என்று திருப்பிக் கொள்ள
“ஹலோ ஓவர் மைக் டெஸ்ட்டிங் ஓவர் எனக்கு கேட்குது உங்களுக்கு கேட்குதா? ஓவர் ஓவர்” என்று அவள் காதோரமாய் சொல்லவும் இருவரும் ஒன்றாக சேர்ந்து சிரித்தனர்.
அமிர்தாவிற்கு ஆரதி தான் அவளுக்கு அக்கா,தங்கை,தோழி,அம்மா என எல்லா உறவுமாய் இருந்தாள்.ஆரதிக்கும் அமிர்தா தான் எல்லாம் ஆக இருந்தாள்.அதனால் இருவருக்குள் எதாவது முரண்பாடான பேச்சு வருவதாக இருந்தால் யாராவது ஒருவர் அதை மாற்றி விடுவர்.
ஆனால் ஆரதி “அமிர்தா இன்னும் எத்தனை நாளுக்கு இந்த கல்யாணத்தை தள்ளி போடலாம்னு இருக்கே”
அமிர்தா அமைதியாக இருந்தாள்.
“வேற யாரையாவது விரும்புறியா? இல்லை திருமணமே செய்ய வேண்டாம்னு இருக்கியா? இதை இன்னும் நம்ம தள்ளி போட முடியாது” என்றாள் முடிவாக…
அமிர்தா சந்தேகமாக பார்த்தவள் “யாரு என்கிட்ட பேச சொன்னாங்க”
அவளோ அதை அலட்சியப்படுத்தி விட்டு “டாக்டர் வாசனோடு நான் வந்ததில் ஏன் முகமே மாறிப் போச்சு”
அதைக் கேட்டதும் அமிர்தாவின் முகம் மாறிப்போனது.
ஆரதி தொடர்ந்து “நீ பால்கனியில இருந்ததை பார்த்தேன் ஏன் எதுவும் சொல்லாமல் போயிட்டே? என்கிட்ட மறைக்க மாட்டேன்னு நினைக்கிற உனக்கு எப்போ சொல்லனும்னு தோணுதோ அப்போச் சொல்லு நான் உன்னை கட்டாயப்படுத்தலை” என்றாள்.
அமிர்தா ஆரதியைப் பார்த்து “ஆரதி இந்த கம்போர்ட் சோன் வாழ்க்கையிலிருந்து வெளில வர எனக்கு பிடிக்கலை, அதுக்காக நான் உன்னையும் இதுல என்னோட சுயநலத்துக்காக இழுக்க முடியலை கொஞ்ச நாள் போகட்டுமே” என்றாள்.
ஆரதி புரியாமல் “அப்போ இப்படியே இருக்கலானு சொல்லுறியா?” என்ற பொழுது விதுனின் முகம் ஏனோ ஆரதிக்கு வந்து போனது.
சட்டென்று தடுமாறியவள் “அமிர்தா வாழ்க்கையோட அடுத்த கட்டத்தை நோக்கி நாம போறது தான் இயற்கை அப்படியே தேங்கி இருக்கக் கூடாது உனக்கு எப்பவும் நான் துணையாக இருப்பேன்” என்று அவளின் கரங்களை ஆதரவாய் பிடித்துக் கொண்டாள்.
வாழ்க்கையில் நமக்கு என்ன இருக்கிறது என்பது அல்ல.ஆனால் நம் வாழ்க்கையில் யார் இருக்கிறார்கள் என்பது தான் முக்கியம்.
அமிர்தா எதுவும் பேசாமல் தன் அமைதியைத் தொடர்ந்தாள்.இருவரும் அவரவர் அறையில் போய் படுத்துக் கொண்டனர்.ஆரதி தன் கைப்பேசியை எடுத்துப் பார்த்தாள்.விதுன் எந்தவொரு குறுஞ்செய்தியும் அனுப்பி இருக்கவில்லை.
என்னவென்று அவனிடம் பேசுவதும் என்று தெரியவில்லை.அவன் பேசியதில் ஆரதி புரிந்துக் கொண்டது அமிர்தாவை அவனுக்கு பிடித்திருக்கிறதோ? என்பது தான்.
மறுநாளும் இதே நிலைமை தான் தொடர்ந்தது.வாசன் ஆரதியிடம் பேசுவதற்கு நிறைய இருந்தன.அவனுடன் பணிபுரிந்தவர்களை பற்றியும் அவளுடன் படித்தவர்கள் பற்றியும் தெரிந்துக் கொள்ளவதை அவளுடன் பேச வாய்ப்புக்களை ஏற்படுத்தினான்.
ஆனால் ஆரதிக்கு ஒன்றும் புரியவில்லை.விதுனிடம் ஏற்படுத்திக் கொண்டிருந்த நெருக்கம் இப்போது முற்றிலுமாய் மாறிப் போய் இருந்தது.இரண்டு நாட்கள் என்பது ஐந்து நாட்களாக மாறிப் போனது.
எல்லோரும் எப்போதும் போல் தன் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.விதுனை அறுவை சிகிச்சை செய்யும் இடத்திலும் மற்றும் நோயாளிகளை சந்திக்கும் நேரத்திலும் பார்த்தாள்.
அவர்கள் இருவருக்குமான உரையாடல்கள் அவ்வளவாகத் தான் இருந்தது.வீட்டில் வந்தால் அமிர்தாவும் அப்படியே இருந்தாள்.
ஆரதிக்கோ மனதினுள் ‘ஒரு மனுஷன் எதையாவது பண்ணி சந்தோஷமா இருக்கலாம்னு பார்த்தால் இப்படி கால் வைக்கிற இடமெல்லாம் கன்னிவெடி வைக்கிறாங்களே இப்படியே என்னை புலம்ப விட்டு அனாதையாக்கிட்டாங்களே ஹய்யோ’ என்று தன்னையே நொந்துக் கொண்டாள்.
“ஒரு வார்த்தை கேட்டது இவங்களுக்கு பொறுக்கலை விடுடா இருந்தா என் அம்மாக்கு பிள்ளை இல்லைன்னா சாமிக்கு” என்று அமிர்தாவின் காது படவே சொல்லிச் சென்றாள்.
‘நானும் பார்த்தேன் இவங்க வழிக்கு வர மாட்டாங்க நாமளே வழியை உருவாக்கிக்க வேண்டியது தான் வரேன்’ என்று எண்ணி முடிவெடுத்தவள் முதலில் விதுனிடம் நேராக பேசி உண்மையைத் தெரிந்துக் கொள்ள வேண்டியது தான் என்று முடிவெடுத்தவள் பணி நேரம் முடியவும் நேராக அவன் அறைக்கு செல்ல விதுன் அவள் முன்னால் நின்றான்.
விதுன் ஆரதியைப் பார்த்து “ஹலோ எக்ஸ்க்யூஸ் மீ உங்க கிட்ட ஒரு முக்கியமான டீடெய் பேசனும் உள்ளே வாங்க” என்று தன் ஆட்காட்டி விரலைக் காட்டி அழைத்தான்.
இவளோ விழித்தவாறே மனதினுள் ‘'நாம பண்ண வேண்டிய விஷயத்தை அவன் செய்றான் டீடெய் பேசனுமா? ’ என்று யோசித்து பின்னாலேயே செல்லவும் அங்கே வந்த வாசன் “ஆரதி” என்று அழைத்தான்.
திரும்பி பார்த்தவள் அங்கே நின்றுக் கொண்டிருந்த வாசனைப் பார்த்து “சொல்லுங்க டாக்டர்”
“உங்ககிட்ட தனியா பேசனும் வெளியே போகலாமா?” என்ற பொழுது தன் பின்னால் ஆரதி வரவில்லை என்று உறுதி செய்த விதுன் வெளியே வந்துப் பார்த்தான்.
அங்கே வாசன் கேட்டதைப் பார்த்து ஆரதி அருகில் வேகமாக வந்தவன் அவளே எதிர்பாரா நேரத்தில் கைகளைக் கோர்த்துக் கொண்டவன் “வாசன் நானும் ஆரதியும் வெளியே போறோம் நீங்க இன்னொரு நாள் பேசுங்க இத்தனை நாளாக அவள் பிஸியாக இருந்ததால் பேச முடியலை இன்றைக்கு நாங்க போறோம்” என்றான்.
அவன் பேசியதைக் கேட்டு வாசன் ஆரதியைப் பார்த்தான்.அவளோ எந்தவித மறுப்பும் சொல்லாமல் அமைதியாக இருப்பதோடு அவளின் கரங்களைப் பிடித்து இருப்பதைப் பார்த்தே ஓரளவு அவர்களுக்கான நெருக்கத்தை புரிந்துக் கொண்டவன் “ம்ம்…. சரி” என்றான்.
உடனே அவளை நேராக தன்னோடு இழுத்தபடி வெளியே அழைத்து வந்தான் விதுன்.அங்கே பிடித்திருந்த கரங்களை ஆரதி விடுவிக்க போராடிக் கொண்டிருந்ததை இருவரைத் தவிர வேறு யாரும் அறிந்திருக்கவில்லை.
“விதுன் ப்ளீஸ் கையை விடுங்க” என்றதும் அவன் பிடித்திருந்த பிடியை தளர்த்தினான்.
ஆரதி கோபமாக “விதுன் ஏன் வாசன் டாக்டர்கிட்டே இப்படி பேசினீங்க அவர் நம்ம ரெண்டுபேரைப் பற்றி என்ன நினைப்பாங்கன்னு யோசிக்கலையா?”
அவனோ அதை பெரிது படுத்தாமல் “எனக்கு அதைப் பற்றி கவலை இல்லை”
“என்ன?” அவள் அதிர்ச்சியாக கேட்டாள்.
“ம்ம்…ஆரதி” என்று பேச்சை அவன் ஆரம்பிக்கும் போது ஆரதியின் கைப்பேசி அழைத்தது.
யாரென்றுப் பார்க்க அதில் அமிர்தா தான் அழைத்தாள்.
ஆரதி மனதினுள் ‘நான் வேலைக்கு வந்திருக்கும் போது போன் பண்ணமாட்டாளே! எதாவது அவசரமாக இருக்குமோ’ என்று நினைத்தவள் அந்த அழைப்பை எடுத்து “ஹலோ” என்றாள்.
மறுமுனையில் அமிர்தா கொஞ்சம் தயங்கியவாறே “ஹலோ ஆரதி நான் தான்”
“ம்ம்… சொல்லு”
“உன்கிட்ட முக்கியமான விஷயம் ஒன்னு சொல்லனும் வேலை முடிஞ்சிடுச்சு தானே”
“ஆமாம்”
“சரி வா நாம பேசலாம் நான் சொல்ற விஷயத்தைப் பற்றி நீ தப்பா நினைக்க மாட்டேன்னு நினைக்கிறேன் சீக்கிரம் வந்துடு” என்று பெருமூச்சு ஒன்றை விட்டு பேசினாள்.
ஆரதியைப் பொறுத்தவரை அமிர்தாவும் விதுனும் தான் நல்ல ஜோடிகளாக இருப்பார்கள் என்று ஒரு எண்ணம்.அதோடு விதுனின் சிறு ஒதுக்கம் அவளுக்கு அப்படி ஒரு எண்ணத்தை தந்து இருந்தது.
அதனால் விதுனிடம் “நான் இப்போ உடனே போகனும் அமிர்தா என்னை வரச் சொன்னா”
அவனோ சற்றும் யோசிக்காமல் “நானும் அமிர்தாவைப் பார்க்கனும் அவங்க குடும்ப விஷயமாகத் தான் நேர்ல பேசினால் தான் சரியாக இருக்கும் ரெண்டு பேரும் ஒன்றாக போகலாம்” என்றான்.
அவளால் மறுப்பு சொல்ல முடியவில்லை.சரியென்று ஒத்துக் கொள்ள இருவரும் ஒன்றாக விதுனின் மகிழுந்தில் பயணித்தனர்.