• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அந்தமான் காதலி - 11

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,086
530
113
Tirupur

அந்தமான் காதலி - 11

“ம்ச்! மாமா போதும்... நீங்கதான் எனக்கு ஆறுதல் சொல்லணும்.” என தன் வேதனையை மறைத்து, கொஞ்சம் கிண்டல் குரலில் கூற, அதுவும் அவனுக்கு குற்ற உணர்ச்சியைக் கூட்டியதே தவிர, குறைக்கவில்லை. சித்தார்த்தின் அணைப்பின் இறுக்கமும் குறையவில்லை.

வேறு வழியில்லாமல் அவனது உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து சிறிது நேரம் அப்படியே நிற்க, அவனே தன்னை சரி செய்துகொண்டு அவளைப் பார்த்தான். அந்தப் பார்வையில் தோன்றிய உணர்வுகள் ஏராளம். ஏன் இப்படி நடந்தது? ஏன் இப்படி? இதுவே அவனது ஆதியும் அந்தமுமான கேள்வி. விடை கொடுக்க வேண்டியவள் எதிரில். பதில் சொல்வாளா? சொல்லி விடேன் எனக் கெஞ்சியது அவன் விழிகள்.

அதையெல்லாம் உணராமல் இருப்பாளா அவன் கண்மணி? அவனிடம் கொட்ட வேண்டும் என்று தானே பெண்ணவளும் காத்திருந்தாள். ஆனால் அதை உடனே செய்ய மனம் வரவில்லை. இனி அவனுடன்தான் இருக்கப் போகிறோம். நாட்களும் நேரமும் இருக்கும் போது, பொறுமையாக சொல்லலாம். இப்போது எத்தனை சீக்கிரம் முடியுமோ, அத்தனை சீக்கிரத்தில் திருமணத்தை முடித்து விட வேண்டும் என மனதுக்குள் சொல்லிக் கொண்டாள். தன்னையே பார்த்துக் கொண்டிருந்தவனின் முகத்தை, தன் இரு கைகளாலும் தாங்கி,

“எனக்கும் உங்களத் தவிர யாருமே இல்ல மாமா. அப்போ உங்கக்கிட்ட தானே எல்லாமே சொல்லணும்னு இருப்பேன். எல்லாம் சொல்லணும்... ஆனா இப்போ வேண்டாம். நீங்க என் கூட இருக்கீங்க, அதுதான் எனக்கு வேண்டும். என்னால் இந்த நிமிச சந்தோசத்தை இழக்க முடியாது மாமா. ப்ளீஸ் புரிஞ்சிக்கோங்க...” எனக் கொஞ்சம் கெஞ்சலும் கொஞ்சம் கொஞ்சலுமாக சொல்ல, நிரதியின் இந்த செய்கையில் சொக்கித்தான் போனான் அந்த ஆண்மகன்.

அவள் கைகளில் தாங்கியிருந்த தன் முகத்தை சற்றே சாய்த்து, அந்தக் கைகளில் முத்தமிட்டு, அப்படியே இடையோடுக் கட்டிக் கொண்டவன், “இதெல்லாம் நிஜாமான்னு இன்னும் எனக்கு சந்தேகமா இருக்கு...” என்றவன் இதழ்கள் சிரிப்பில் குளிக்க,

“எதுக்கு இப்போ சிரிக்கீங்க?” என அவன் மார்பில் நாடியைப் பதித்து கண்களை மட்டும் சுழட்டி சுழட்டிக் கேட்க,

“அது இன்னொரு நாள் சொல்றேன். இப்போ சொன்னா நீ அடிச்சாலும் அடிக்கலாம்.” என்றவாறே இடையை வருட, அதில் நெளிந்தவள்,

“ப்ச்! நான் ஏன் அடிக்கப் போறேன்? அப்போ ஏதோ ஏடாகூடமா நினைச்சிருக்கீங்க. அப்படின்னாத்தான் கண்டிப்பா சொல்லணும். சொல்லுங்க மாமா...” என சற்று எம்பி அவன் சட்டையைப் பிடித்தாள்.

“ம்ம்... இதுதான் சட்டையைப் பிடிச்சுக் கேட்குறதா?” எனச் சிரித்தவன், “சட்டையைப் பிடிச்ச இந்தக் கையை, கழுத்தை சுத்தி போட்டுருந்தா இன்னும் வசதியா இருக்கும்.” என அவளைச் சீண்ட,

“ஆளப்பாரு ஆளை... எங்கம்மா சொல்லுவாங்க, இதுதான் இடத்தைக் கொடுத்தா மடத்தைப் பிடிக்கிறதுன்னு...” என அவனிடம் இருந்து ஒரேடியாகப் பிரிந்தவள், இடுப்பில் கை வைத்து முறைத்தபடியே,

“இப்போ சொல்லப் போறீங்களா, இல்லையா?” என கண்ணை உருட்டினாள்.

“சொல்றேன்... சொல்றேன்... ஆனா இப்படி தள்ளி நின்னு கேட்கக்கூடாது. பக்கத்துல வந்து இப்படி கட்டிக்கிட்டு, ஒட்டிக்கிட்டு கேட்டா சொல்றேன்.” எனக் குறும்பு கொப்பளிக்கச் சொல்ல,

“அப்போ நீங்க இப்போ சொல்லவே வேண்டாம். நாம எப்போ ஒட்டிக்குறோமோ, கட்டிக்குறோமோ அப்போ சொல்லுங்க. இப்ப போய் ஃப்ரஷ் ஆகிட்டு வாங்க.” என ஒரு அறையைக் காட்டி அவனைத் தள்ள, என்ன நினைத்தானோ அதற்குப் பிறகு அவளைச் சீண்டாமல் அந்த அறைக்குள் புகுந்து விட்டான்.

சித்தார்த்தின் செய்கைகளை நினைத்து சிறு புன்னகை தோன்ற, அதே புன்னகையுடன் அங்கிருந்த பூஜை அறைக்குள் நுழைந்தாள். உள்ளே நுழைந்ததுமே தன் தாயின் வாசம் வந்து அவளைக் கட்டிக் கொண்டது. அந்த வீட்டில் வாணி அதிகமாக புழங்கிய இடம் இந்தப் பூஜையறைதான். வாரத்தில் நான்கு நாட்கள் விரதம் என்று சொல்லி, கணவரையும் மகளையும் ஒருவழி செய்து கொண்டிருப்பார். அதையெல்லாம் யோசிக்கும் போது மனம் அதற்காக ஏங்கத் தொடங்கியது. தாயின் மடி, தந்தையின் தலை கோதல் வேண்டுமென்று மனம் அடம் பிடிக்கத் தொடங்கியது.

இதற்காகத் தான் விஷால் வேண்டாமென்று தடை செய்தது. இப்போது தெரிந்தால் சாமியாடி விடுவான். வேகமாக விளக்கை ஏற்றியவள், சில நிமிடங்கள் கைக்கூப்பி வணங்கி வெளியில் வந்தாள். இவள் பூஜையறையில் இருந்து வெளியில் வரவும், சித்தார்த் அவன் அறையில் இருந்து வெளியில் வரவும் சரியாக இருந்தது.

“வீடு படு நீட்ஃபுல் க்ளீனா இருக்கு, மெய்ட் வருவாங்களா என்ன?” என்றபடியே சோபாவில் அமர,

“ம்ம்... வீக்லி த்ரி டைம்ஸ் வருவாங்க. விஷால்கிட்ட கீ இருக்குல்ல, மெயிட் வரும்போது மம்மி வந்து கூட இருப்பாங்க. அம்மாவுக்கு எப்பவும் வீடு க்ளீனா இருக்கணும். அதுலயும் பூஜை ரூம்ல விளக்கு எரிஞ்சிட்டே இருக்கணும். இல்லன்னா ரொம்ப அப்செட் ஆவாங்க. நான் இருக்கும் போது செய்வேன். இப்போ மம்மி மார்னிங், ஈவ்னிங் ரெண்டு நேரமும் வந்து விளக்கு ஏத்திட்டு போவாங்க.”

“ம்ம்...” என்றவன், “நீ பாலை குடிச்சிட்டு வா, நான் அங்க பால்கனில இருக்கேன்.”

“உங்களுக்கும் எடுத்துட்டு வரவா? மம்மி அதிகமா தான் கொடுத்து விட்டுருக்காங்க, ஃப்ரூட்ஸ் வேற இருக்கு.”

“ரெண்டு பேருக்குமா எடுத்துட்டு வாயேன், எனக்கும் லைட்டா பசிக்கிற மாதிரி தான் இருக்கு.” என்றான்.

“சரியா சாப்பிடலையா? ஏன் இப்படி இருக்கீங்க?” என புலம்பிக் கொண்டே இருவருக்கும் டம்ளரில் பால் விட்டவள், ஆப்பிள் பழத்தை நறுக்கி தட்டில் அடுக்கி அவன் முன் வைத்தாள்.

எதுவும் பேசாமல் இருவரும் உண்டு முடிக்க, சித்தார்த்தின் முகத்தில் இப்போது குறும்பு புன்னகை. அதை நிரதி கவனித்தாலும், அவனே ஆரம்பிக்கட்டும் என அமைதியாக பாலைக் குடித்தாள்.

பாலைக் குடித்ததும், “அடுத்து?” என கண்ணைச் சிமிட்ட, “வாட்.” என அதிர்ந்தவள், அவன் என்ன சொல்ல வருகிறான் என்பது புரிய, முகம் முழுவதும் செம்பருத்தியாய் மாறியது.

தன் பக்கத்தில் இருந்த குஷனை தூக்கி எறிந்துவிட்டு, “லூசு... லூசு... ஆளைப்பாரு...?” என்று வாய்க்குள்ளே முனகியவாறு, வாசற் கதவைத் திறந்து வெளியே செல்ல, சில்லென்றப் பனிக்காற்று வந்து சட்டென மோதியது. இரு கைகளையும் சேர்த்து கட்டிக் கொண்டவள், அந்தப் பனிக்காற்றை ஆழ்ந்து சுவாசித்தபடியே மெல்ல நடக்கலானாள்.

உள்ளிருந்து பார்த்தவனோ அங்கே இருந்த ஷாலை எடுத்துக் கொண்டு, அவள் முனங்கிச் சென்ற வார்த்தைகளில் உண்டான சிரிப்புடன் அவளை நோக்கி நடந்தான்.

வீட்டை மட்டுமல்ல, வீட்டைச் சுற்றி இருந்த தோட்டத்தையும் அழகாகவே பராமரித்திருந்தார் தன்வீர், அது பார்த்ததுமே தெரிந்தது. காஷ்மீர் ரோஜாக்கள் ஒரு பக்கம் கண்ணைக் கவர்ந்தது. அதை ஒட்டியிருந்த கல் பெஞ்சில் அமர்ந்திருந்தாள் நிரதி. முகம் யோசனையில் குளித்திருந்தது.

இரண்டுப் பக்கமும் காலைப் போட்டு அமர்ந்தவன், அவளைத் தனக்கு அருகில் இழுத்து, இருவருக்குமாக கொண்டு வந்த ஷாலை போர்த்தினான்.

“என்ன மாமா இதெல்லாம்...?” என்று சிணுங்கினாலும், வேறொன்றும் பேசாமல் அவன் கைக்குள் அடங்கித்தான் போனாள் பெண்.

“என்னாச்சு, சடனா உன் ஃபேஸ் டல்லடிக்குது?” எனவும்,

“அப்படியெல்லாம் இல்ல, இதெல்லாம் நிஜமான்னு ஒரு மனசு என்னை கேட்டுக்கிட்டே இருக்கு. அதுக்கு என்ன பதில் சொல்லன்னு தெரியல...” மிகவும் சீரியசாகவே பேச்சை ஆரம்பித்தாள் பெண்.

அவளைக் கட்டிக் கொண்டவன், “எனக்கும் அதே கேள்விதான் மனசுக்குள்ள ஓடிட்டு இருக்கு. நீ இப்படி என் கைக்குள்ள இருக்கன்னு என்னால நம்பக் கூட முடியல. கொஞ்ச நேரம் அந்த உணர்வை அனுபவிக்க விடு.” என அவளின் பின் கழுத்தில் தாடையைப் பதித்து மூச்சிழுக்க,

“ம்ப்ச்... கூசுது மாமா... விடுங்க ப்ளீஸ்...” என நெளிந்தபடியே சொல்ல,

“சரி, சரி... ஆட்டாம இரு, நான் ஒன்னும் பண்ணல. இப்போ சொல்லு, உன்னோட ப்ளான் என்ன? ஏன் இவ்வளவு நாள் இல்லாம இப்போ வந்து மேரேஜ் செய்துக்கலாம்னு சொல்ற?” என இப்போது அவனும் சீரியசாகவே ஆரம்பித்தான்.

“திடீர்னு எதுவும் யோசிக்கல, நான் முன்னமே இப்படி ஒரு ப்ளான்ல தான் இருந்தேன். அப்பாவை உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும், அப்பாவுக்கு உங்களை எவ்வளவு பிடிக்கும்னு எனக்குத் தெரியும். ஆனா அப்பா இல்லைன்னா, நான் தனியாகிட்டா நீங்க என்னைத் தேடுவீங்களானு தெரிஞ்சுக்கணும் நினச்சேன்...” என்றதும், அவன் உடல் இறுகினாலும் வெறொன்றும் சொல்லவில்லை. அவள் பேசுவதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தான்.

“இது தப்பான்னு எனக்குத் தெரியல, ஆனா நடந்த எல்லாத்தையும் வச்சு பார்க்கும் போது தப்பில்லன்னு தோனுச்சு. அம்மா இறந்து, நான் அங்க வந்தப்போ அவங்க யாரையும் தெரியாது. நீங்க இருப்பீங்கன்னு நினைச்சேன். அட்லீஸ்ட் என்னைப் பத்தி உங்க வீட்டுல சொல்லிருப்பீங்கன்னும் நினைச்சேன். ஆனா அங்க அப்படி எதுவும் நடக்கல. உங்க பாட்டி என்னை கழுத்தைப் பிடிச்சு வெளிய தள்ளுனாங்க. நாயை விட கேவலமா பேசி அனுப்பினாங்க. உங்க அம்மா, சித்தி, உங்க சிஸ்டர்ஸ் எல்லாருமே அமைதியா வேடிக்கை தான் பார்த்தாங்க.

ஏன் யாருமே இதை தடுக்கல? எனக்கு புரியல, எங்கப்பான்னா எல்லாருக்கும் உயிரு, அது, இதுன்னு சொல்றாங்க. ஆனா அவர் இறந்ததுக்கு கூட யாரும் வரல, நீங்களும் தான்... அந்த கவலையிலயே எங்க அம்மா என்னை பத்தி யோசிக்காம, அவங்களும் போயிட்டாங்க. அவங்க இறந்ததுக்கும் வரல... அப்போ இவங்க எல்லாம் பொய்யா தான் என் அப்பாக்கிட்ட நடிச்சிருக்காங்கனு தோனுச்சு. இவங்க யாரு, என்னைத் தள்ளி வைக்க? நான் தள்ளி வைக்கிறேன்னு முடிவு செஞ்சு இங்க இருந்து போனேன்.

விஷால் இதுக்கு ஒத்துக்கவே இல்ல. அவங்க யாரும் வேண்டாம், நீ எங்கேயும் போகக் கூடாது, இங்கதான் இருக்கணும்னு முடிவா சொன்னான். ஆனா எனக்கு உங்க மேல கொஞ்சம் நம்பிக்கை இருந்தது, நீங்க என்னைத் தேடுவீங்கன்னு... அப்படி தேடினா உடனே கிடைக்கக் கூடாதுனு நினைச்சேன். நான் இதை விஷால்கிட்ட சொல்லவும், அவனுக்கு என் மேல கோபம்.

அப்போதான் ப்ராப்பர்டிஸ் எல்லாம் அப்பா உங்க பேர்ல மாத்திட்டதா டாடி சொன்னாங்க. ஒருவேளை சொத்துக்காகவும் தேடி வருவீங்களோனு பயம், இப்படி ஏகப்பட்ட குழப்பம். இந்த குழப்பம் எல்லாம் சரியாகணும்னா கொஞ்ச நாள் தனியா இருப்போம்னு முடிவு பண்ணேன். விஷால்கிட்ட பேசி, கெஞ்சி அந்தாமானுக்கு ட்ரான்ஸ்ஃபர் வாங்கினேன். நாங்க ஃபேமிலியா கடைசியா ட்ரிப் போனது அந்தமான். அதனால தான் அங்க போகணும்னு முடிவு பண்ணேன்.” என்றவள் அடுத்து எதுவும் பேசாமல் இருக்க,

“இப்போ உனக்கு என்மேல நம்பிக்கை வந்துடுச்சா? இந்த பணத்துக்காகவோ, சொத்துக்காகவோ... இல்லை, மாமாவுக்காகவோ உன்னைத் தேடலைனு உனக்குப் புரிஞ்சதா?” என அவளிடம் கேட்டவன்,

“தப்புதான்... நடந்த எல்லாமே தப்புதான்... மாமாவுக்கு இப்படி ஆகும், அவர் நம்மளை விட்டுட்டு போவாருனு நான் நினைச்சு கூட பார்க்கலையே... அப்படி எதாவது ஒரு சின்ன நினைப்பு இருந்திருந்தா கூட, உன்னை இப்படி கஷ்டப்பட விட்டுருக்க மாட்டேன்.

உன் மேல உயிரா ஆசை இருந்தாலும், அதை எங்கேயும் வெளிக்காட்டினது இல்ல. அப்படி காட்டாம விட்டது என் தப்புதான். அதை செஞ்சிருந்தா, அந்த நம்பிக்கையை நான் கொடுத்திருந்தா, இன்னைக்கு நீ என்னை சந்தேகப்பட்டிருக்க மாட்ட இல்ல?” என உணர்வுகளற்ற குரலில் சொன்னவன்,

“இதுவரைக்கும் எப்படியோ, ஆனா இனி உனக்கு பிடிக்காதது, விருப்பமில்லாதது எதுவும் நடக்காது. ஐ ப்ராமிஸ் யூ! உன்னோட கேரியர்ல நீ எவ்வளவு ஹையர்ல போகணும்னு நினைக்கிறியோ, அதுவரைக்கும் நான் கூட வருவேன், கண்டிப்பா கூட இருப்பேன். அதை நீ இப்போ உணரலைனாலும், என் கூட வாழப் போற வாழ்க்கையில உணருவனு நினைக்கிறேன். இதுக்கு மேல இதைப்பத்தி பேச வேண்டாம். நீ எப்படி நம்ம மேரேஜ் நடக்கணும்னு ஆசை பட்டியோ, அப்படியே நடக்கும், நான் நடத்திக் காட்டுவேன். இப்போ போய் தூங்கலாம், நாளைக்கு நான் கிளம்பணும். இனி அதிக நாளும் இல்ல.” என எழ முயற்சிக்க அவள் விடவில்லை.

அவன் கையை இறுக பிடித்தபடி அண்ணாந்து அவனையே பார்க்க, அந்த பார்வை தாயைத் தேடும் குஞ்சைப் போல இருக்க, அப்படியே அமர்ந்து அவளைத் தன் தோளோடு சாய்த்து, “என்னடா?” என பரிவாகக் கேட்க,

“ம்ம்... ஹ்ம்ம்ம்... இல்ல, உங்களுக்கு என் மேல கோபம் இல்லையா? நான் உங்களை இப்படி அலைய வச்சு, தேடவிட்டு கஷ்டப்படுத்திட்டேனா?” என மெல்லிய குரலில் கேட்க,

அண்ணாந்து பார்த்த அந்த தலையில் கையை வைத்து அழுத்தியவன், “உன் இடத்துல நான் இருந்திருந்தா எப்படி நடந்துருப்பேன்னு தெரியல. இந்நேரம் அவங்களை எல்லாம் பழி வாங்க என்ன வேணும்னாலும் செய்திருக்கலாம். ஆனா நீ உன்னையவே வருத்திக்கிட்டியே தவிர, அவங்களை எதுவும் செய்யல. இப்படி ஒரு அருமையான பொண்டாட்டி மேல, எனக்கு எப்படி கோபம் வரும்?

கண்டிப்பா உன் மேல வருத்தமோ, கோபமோ ஒன்னுமே இல்லடா. முதல்ல தெரிஞ்சிக்கோ, எல்லா கோபமும் என் மேலதான்... நான் உன்னை விட்டுட்டேன்ல? உன்னை கஷ்டப்படுத்திட்டேன்ல? பாட்டி அப்படி நடந்ததுக்கு நானும் கூட காரணமா இருக்கலாம். அதை சரி செய்ய வேண்டிய கடமையும் இருக்கு.

நாம அங்க இருக்கோமோ, இல்லையோ... ஆனா நீ சொன்னது போல அந்த ஊரே வியக்குற மாதிரி உன்னை உன் வீட்டுக்கு அழைச்சிட்டு போகணும். அதுதான் என்னோட முதல் வேலை. போதும் இன்னைக்கு பேசினது, இனி நான் பார்த்துக்குறேன். உனக்கு என்ன தோனுனாலும் எங்கிட்ட கேளு, பேசு, சண்டை போடு. அதுக்குதான் நான் இருக்கேன் சரியா? டென்சன் ஏத்திக்காத... இப்போ வா, தூங்கலாம்.” என அவன் எழுந்து, அவளையும் எழுப்பிக் கொண்டு வீட்டை நோக்கி நடந்தான்.

இத்தனை வருட போராட்டங்களும் பயமும் பதட்டமும், இந்த ஒரே நாளில் முடிவுக்கு வந்தது போல தோன்றியது நிரதிக்கு. அந்த எண்ணம் தோன்றவும், இன்னும் இறுக்கமாக அவன் கைகளைப் பற்றிக் கொண்டாள் பெண்.

புது விடியலை நோக்கி அவர்களது பயணம் தொடர, இடைஞ்சலாக வந்து நிற்பாரா ஆண்டாளம்மாள்?

நீ கவிதைகளா

கனவுகளா கயல்விழியே

இதழோரமாய் சிறு புன்னகை நீ

காட்டடி என் முல்லையே
 

Sampavi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 21, 2022
258
144
43
Theni
நிரதி ஏதோ மறைக்கிற மாதிரியே இருக்கு
என்னவா இருக்கும்
 

CRVS2797

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 11, 2023
95
6
8
Ullagaram
இனிமே எதுக்கு ஆண்டாளம்மாவுக்கும், அயிரை மீனுக்கும் பயப்படனும்...? அதான் அவளோட சித்து இருக்கான்ல..
இனி எல்லாத்தையும் அவன் பார்த்துப்பான். ஸோ.. டோண்ட் வொர்ரி, பீ ஹேப்பி !
😀😀😀
CRVS (or) CRVS 2797