• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அந்தமான் காதலி - 13

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
920
481
93
Tirupur

அந்தமான் காதலி – 13

திருமண நாள் இனிதாக விடிந்தது. அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் திருமணம் என்றும், மாலையில் ரிசப்ஷன் என்றும் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்தது. அனைவரும் கோவிலில் இருந்தனர். ஆழ்வார்சாமி சக்கர நாற்காலி உதவி இல்லாமால் வரமுடியாது என்பதால் அவரும் போகவில்லை, மனைவியையும் அங்கு அனுப்பவில்லை.

அவருக்கு துணைக்கு எப்போதும் உடனிருக்க, கந்தன் என்ற ஒரு வேலையாள் இருந்து கொண்டே தான் இருப்பார். அதனால் அவரை விட்டுவிட்டு ஆன்டாளம்மாவை கோவிலுக்கு வரச் சொல்லலாம் என எல்லோரும் நினைத்திருக்க, அதற்கு பெரிய தடை ஆழ்வார்சாமியிடமிருந்து வந்தது.

இதுவரை இப்படியெல்லாம் செய்திடாத பெரியவரின் செயலில் என்ன புரிந்ததோ, வீட்டு ஆட்களும் அவர் சொன்னதற்கு சரியென்று விட, ஆண்டாளம்மாவால் அதை தாங்கவே முடியவில்லை.

தன்னை ஒதுக்குவதா என்ற ஆத்திரம்... என் பேரனின் திருமணத்தை கூட பார்க்கவிடாமல் செய்துவிட்டாளே என்று, அந்த கோபமும் நிரதியின் மேல்தான் திரும்பியது. இந்த திருமணம் முடியும் வரை அவர் பேச்சை யாரும் கேட்கும் நிலையில் இல்லை. நிரதி எந்த நேரம் என்ன செய்வாள் என்ற பயத்திலேயே இருந்தனர். அது, மேலும் அவர் கோபத்திற்கு எண்ணெய் ஊற்றியது.

கோவில் மண்டபத்தில் இருக்கும் மணமகள் அறையில் இருந்தாள் நிதி. அன்றைய நாளுக்கான மணப்பெண்ணிற்கே உரிய மகிழ்ச்சி துளி கூட அவள் முகத்தில் இருக்கவில்லை. தன்வீருக்கும் அவர் மனைவி சுனிதாவிற்கும், அவளைப் பார்த்து மிக கவலையானது. விஷாலிடம் இதுபற்றி பேசினால் அவளுக்கு பிடிக்கவில்லை, திருமணத்தை நிறுத்தலாம் என ஏதேனும் அபசகுணமாகப் பேசுவான் என நினைத்து மகனிடம் சொல்லவில்லை. வேறு வழியில்லாமல் இருவரும் நிரதியிடம் பேசும் முடிவிற்கு வந்தனர்.

அதன் பொருட்டு அவளிடம் வந்த தன்வீர், “நிதி, உனக்கு இந்த வெட்டிங்ல முழு சம்மதம் தானே? யாரையும் பழிவாங்கணும்னு எல்லாம், கல்யாணத்துக்கு நீ ஓகே சொல்லல தானே?” என கொஞ்சம் படபடப்பாகக் கேட்க,

அவர் பேச்சை முழுதாக உள்வாங்கியவள் சில நொடிகள் அமைதியாக இருந்தாள். பின், “இல்லன்னு பொய் சொல்லமாட்டேன் டேடி. நான் இப்படி இருக்க இவங்கதான் காரணம்னு, அவங்களை பார்க்கும் போதெல்லாம் என் மனசு சொல்லிட்டே இருக்கு. இவங்க எல்லாரையும் கொன்னுடணும் போல ஒரு வெறி வருதுதான்.

உனக்கு கொஞ்சம் கூட வெட்கமே இல்லையா? உன்னை அனாதையாக்கின ஒரு குடும்பத்துல வாழ வந்துருக்கியேனு என் மனசாட்சி என்னைக் காறி துப்புதுதான். நானா இப்படி கொஞ்சம் கூட ரோசமே இல்லாம இருக்கேன்னு, எனக்கே என்னை பிடிக்கலதான்...

ஆனா எனக்குப் பிடிக்குது, பிடிக்கல... இதையெல்லாம் தாண்டி அப்பா அவரோட கடைசி ஆசையா, நான் இந்த வீட்டு மருமகளா போகணும்னு கேட்டுக்கிட்டார். அவர் கேட்டு என்னால முடியாதுனு நான் எப்பவும் சொன்னது இல்ல. இதுவும் அப்படித்தான்...” என்றவள்,

பின் ஒரு பெருமூச்சுவிட்டு, “எனக்காக அப்பா பார்த்த, அவருக்கு ரொம்ப பிடிச்ச மாப்பிள்ளை சித்து மாமா. அவரோட மனசுலையும் நான்தான் இருக்கேன். இதுக்கு மேல என்ன வேணும்? நான் இனிமேலாவது என் வாழ்க்கையை வாழணும்னு நினைக்கிறேன். யாரையும் பழிவாங்கி அந்த வாழ்க்கையை கெடுத்துக்க விரும்பல.” என்றதும்,

“அவருக்குப் பிடிச்சிருக்குன்னு சொல்றது எப்படி சரியாகும்? ஒரு கை தட்டினா ஓசை எப்படி வரும்? இதுமட்டும் வாழ்க்கைக்கு சரிவராதே...?” என சுனிதா சொல்ல,

ஒரு கணம் கண்களை இறுக மூடித் திறந்தவள், “எனக்கும் அவரைப் பிடிக்கும். அவரை மட்டும்தான் பிடிக்கும்...” என சொல்ல, பெரியவர்களுக்கு சற்றே நிம்மதி வந்தது. ஆனாலும் முகத்தில் தெளிவில்லை.

இருவரையும் பார்த்தவள் இவர்களுக்காகவேனும் இந்த வாழ்க்கையை, நல்ல முறையில் வாழ வேண்டும் என உறுதி கொண்டவள், அவர்களுக்கு அருகில் வந்து முட்டியிட்டு அமர்ந்தவள், இருவரின் கையையும் சேர்த்துப் பிடித்து,

“ப்ராமிசா எந்த தப்பும் செய்யமாட்டேன், என்னோட வாழ்க்கையை கண்டிப்பா நான் நல்லா வாழ்வேன்.” என சொல்லவும் தான் அவர்களின் முகம் மலர்ந்தது.

சடங்கிற்காக சுனிதாவை அழைக்க வந்த பவித்ராவின் காதில் இவர்கள் பேசியது விழ, அப்படியே நின்றுவிட்டார். தன் குடும்பம் செய்த தவறின் வீரியம் தெரிந்தாலும், தாயை மீறி அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால் இப்போது என்ன செய்து, சொல்லி நிரதியின் மனதில் இருக்கும் ரணத்தை ஆற்ற முடியும் என்று தெரியாமல் தவித்துப் போனார்.

அப்போது பவித்ராவைத் தேடி அவர்களது தங்கைகள் இருவரும் வந்துவிட, “என்னக்கா, சம்மந்தியம்மாவைக் கூப்பிட வந்துட்டு அப்படியே நிக்குறீங்க?” என நித்யா கேட்க,

கண்ணில் வழிந்த நீரைத் துடைத்தவள், “ஒன்னுமில்லடா... அண்ணா ஞாபகம்... இப்படியே உள்ள போனா நிதியும் வருத்தப்படுவாளேனு இங்கயே நின்னுட்டேன்.” என மனதை மறைத்து சொல்ல, மற்ற இருவருக்கும் விதுரனின் நினைவுகள் முட்டி மோதி வந்து நின்றது. அவர்களும் சட்டென அமைதியாக, “அண்ணா இருந்திருந்தா...” என வித்யா ஆரம்பிக்க,

“இப்போ அதெல்லாம் பேசக்கூடாது. நிதி வருத்தப்படுற மாதிரி எதுவும் நடக்கக்கூடாது. அவ நம்மக்கிட்ட முகம் கொடுத்து பேசலன்னாலும் வருத்தப்படக்கூடாது. அவ இந்த வீட்டு மகாராணி. அவளை ராணியாட்டம் பார்த்துக்கணும்.” என தங்கைகளிடம் சொன்னவர், ஒட்ட வைத்த சிரிப்புடன் அறைக்குள் நுழைந்தார்.

“நிதிக்குட்டி ரெடியாகிட்டியா? உனக்கு என்ன கொண்டு வரச் சொல்ல காஃபியா, டீயா?” என அவள் அருகில் வந்து முகத்தை வருட,

தானாக கை தட்டி விட நகர, ஆனாலும் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு இறுகிய உடலுடன் இழுத்து வைத்த சிரிப்புடன், “காஃபி போதும்... எப்படியும் புகையில உட்கார வைப்பாங்க, அப்போ தலையும் வலிக்கும். காஃபின்னா மேனேஜ் பண்ணிப்பேன்.” என நிரதி சொல்ல,

தங்கையைப் பார்த்து, “வித்தி ஸ்ட்ராங்கா ஒரு காஃபி எடுத்துட்டு வா. அப்படியே சம்மந்திக்கு ஏலக்காய் டீ கொண்டு வா.” என அவரை விரட்டியவர், நிரதியின் நெற்றிச்சுட்டியை நேராக்கி அங்கே அழுத்தமாக முத்தம் வைத்தார்.

என்ன முயன்றும் கண்கள் கலங்குவதைத் தடுக்க முடியவில்லை அவரால். அப்படியே அவளை வாரியெடுத்து வயிற்றோடு கட்டிக் கொண்டவரின் உடல் அழுகையில் குலுங்கியது. “மன்னிப்பு கேட்குற தகுதி கூட எங்களுக்கு இல்லன்னு தெரியும். உனக்கு எப்போ எங்களை எல்லாம் மன்னிச்சு ஏத்துக்க முடியுமோ, அப்போ ஏத்துக்கோ. எங்களைத் திட்டணுமா? அவமானப்படுத்தணுமா? இல்ல, கொல்லணுமா? என்ன வேணும்னாலும் செய். அது எங்களுக்குத் தேவையான தண்டனை தான். ஆனா அதுக்காக உன்னை நீயே ரொம்ப சிரமப்படுத்திக்காத... நீ நூறு வருஷம் சந்தோசமா, என் அண்ணனும் அண்ணியும் வாழாத இந்த வாழ்க்கையையும் சேர்ந்து வாழணும்.” என்றவர் அவளைவிட்டு தன் கண்களைத் துடைத்துக்கொண்டார்.

அவரும் ஒரு முடிவுக்கு வந்திருந்தார். உனக்குப் பிடிக்கவில்லை என்றால் விலகியிரு, ஆனால் நாங்கள் அப்படி இருப்போம் என்று நினைக்காதே. நீ என்னதான் ஒதுக்கி வைத்தாலும், நாங்கள் உன் பின்னேயே தான் ஒட்டிக்கொண்டு அலைவோம், அதை மாற்ற முடியாது. அவள் என்ன வேண்டுமென்றாலும் நினைத்துக் கொள்ளட்டும் என்ற முடிவைத் தீர்க்கமாக எடுத்திருந்தார்.

பின் சுனிதாவிடம் திரும்பி, “அண்ணி உங்களைக் கூப்பிடத்தான் வந்தேன். மனையில வைக்கிற பொருள் எல்லாம் ரெண்டு பேரும் சேர்ந்துதான் கொடுக்கணும். நீங்க ரெடியாகிட்டா வாங்க, போய் அதையெல்லாம் எடுத்துக் கொடுத்துட்டு வந்துடுவோம்.” என கொஞ்சமும் தயக்கம் இல்லாமல் சொல்ல, பவித்ராவின் எண்ணம் அறிந்த சுனிதாவும் கணவரிடம் தலையசைத்துவிட்டு கிளம்பிவிட்டார்.

காஃபியோடு வந்த நித்யா அதை மருமகளிடம் கொடுத்து, அவள் குடிக்கும் வரை ஏதேதோ பேசிவிட்டு சென்றார்.

வந்தவர்கள் கிளம்பியதும் தான் முகத்தையே நிமிர்த்தினாள் நிரதி. அவளையே பார்த்துக் கொண்டிருந்தார் தன்வீர். அவர் மனதில் புதிது புதிதாக கவலைகள் கிளைவிட ஆரம்பித்தது. “நிதிமா...” என ஆரம்பிக்க,

“ப்ளீஸ் டேட்... உடனே என்னால சரியாக முடியாது. ஐ நீட் டைம் ப்ளீஸ்...” என இறைஞ்சுதலாகக் கேட்க, தன்வீரும் ஒரு பெருமூச்சோடு அமைதியாகிவிட்டார்.

அடுத்து அனைத்தும் துரித கதியில் நடந்தது போல இருந்தது நிதிக்கு. மூச்சு விடக்கூட நேரமில்லாமல் போனது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். முருகனின் ஆறுபடை வீடுகளில், முதல் படை வீடாகத் திகழ்கின்றது. இங்குதான் முருகன், தெய்வானையைத் திருமணம் செய்து கொண்ட நிகழ்வு நடந்ததாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. இக்கோவிலில் முருகன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார்.

விதுரனுக்கு மிகவும் பிடித்தமான கோவில் இது. ஒருமுறை சித்தார்த்திடம் இதுபற்றி சொல்லியிருக்க, அவரின் எண்ணத்தை செயல்படுத்தி இருந்தான் அவரது ஆசை மருமகன்.

“பெண்ணை அழைச்சிட்டு வாங்கோ...” என ஐயர் சொல்லவும், அவள் வரும்வழியில் பார்வையைப் பதித்தவன் தான், பொற்சிலையாய் நடந்து வந்தவள் தன்னருகில் அமரும் வரை அவளையே விழியெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் சித்தார்த்.

சந்தன நிறத்தில் ஆரணிப் பட்டு, குங்குமக் கலரில் ப்ளவுஸ். சிவப்புக் கற்கள் பதித்த நகைகள், ஆங்காங்கே கரும்பச்சைக் கொடிகள் பார்க்கவே அத்தனை அழகு.

தன்னருகில் அமர்ந்தவளின் பக்கம் குனிந்தவன், “யு லுக் கார்ஜியஸ்! இன்னைக்கு என்ன ஆகப்போறேனோ...?” என முனங்கியவன், “ஆர் யூ ஓகே?” என அவளின் நலம் விசாரிக்கவும் தவறவில்லை.

“எனக்கு என்ன? நத்திங்... நீங்க ஃப்ரீயா விடுங்க, இப்பவும் டென்சன் ஏத்திப்பீங்களா?” என அவனுக்கும் மட்டும் கேட்கும்படி சொன்னாலும், வாயைத் திறக்காமல் பேசினாள். முகத்தில் வாடாத ஒரு புன்னகையை ஒட்ட வைத்துக் கொண்டாள். இது அவர்களுக்கான நாள். இந்த நாளின் இனிமையை யாருக்காகவும் கெடுத்துக் கொள்ள அவள் தயாராக இல்லை. அதோடு வந்தவர்கள் அத்தனை பேரும் மிகவும் நெருங்கிய சொந்தங்கள். அவர்களுக்கு அவளைப் பற்றி எதுவும் தெரியாதே. முதல் முறையாகப் பார்க்கும் போது தவறான எண்ணங்களை விதைக்க வேண்டாம் என்று முடிவெடுத்துக் கொண்டாள்.

அதனால் மங்கலநாண் பூட்டி பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கும் வரைக்குமே, நல்ல மனநிலையில் தான் இருந்தாள் நிரதி. மனோகரும் கீர்த்தியும் சேர்ந்து தன் அண்ணனைக் கிண்டல் செய்யும் போது, மனம் விட்டும் சிரிக்க முடிந்தது. இதையெல்லாம் கண்ணில் ஆனந்தம் பொங்க பார்த்துக் கொண்டிருந்தான் விஷால்.

நாத்தனார் முடிச்சைப் போட்டுவிட்டு நிமிர்ந்த கீர்த்தி தற்செயலாக நிமிர்ந்து பார்க்க, முகம் முழுவதும் மகிழ்வும் கண்களில் நீருமாக நின்ற விஷால்தான் பட்டான்.

வேகமாக அவனிடம் சென்றவள், “என்னாச்சு?” என பதட்டமாகக் கேட்க,

அவள் என்ன கேட்கிறாள் என்று புரியாத விஷாலும், “என்ன என்னாச்சு?” என திருப்பிக் கேட்க,

அதற்குள் அவளும் நிதானத்திற்கு வந்து தான் செய்த செயல் புரிய, வேகமாக சுற்றும் முற்றும் பதட்டமாகப் பார்த்தபடி, “இல்ல... ஒன்னுமில்ல... நீங்க ஃபீல் பண்ண மாதிரி தெரிஞ்சது... அதான் சாரி...” என படபடவென சொல்லிவிட்டு, மீண்டும் வேகமாகச் சென்று நிரதியின் பின்னால் நின்று கொண்டாள்.

கீர்த்தியை வித்தியாசமாகப் பார்த்தவன், பிறகு தன் தோளைக் குலுக்கிவிட்டு மாப்பிள்ளை முறை செய்யக் கிளம்பிவிட்டான். சித்தார்த்திற்கு மோதிரமும் செயினும் போட்டவன், தங்கைக்கு அவளுக்குப் பிடித்த நவரத்தினங்கள் கொண்டு செய்த தங்க காப்பை கையில் அணிவித்தான்.

அதில் பெண்ணவளின் கண்கள் விரிய அவனைக் கட்டிக் கொண்டவள், “தேங்க்ஸ்டா அண்ணா!” என்றதும், அவள் தலையை செல்லமாக கலைத்து விளையாடியவன், சித்தார்த்தை அணைத்து வாழ்த்திவிட்டு இறங்கிவிட்டான். அவர்களை ரசனையாகப் பார்த்தது கீர்த்தியின் விழிகள்.

சடங்கு சம்பிரதாயங்கள் அனைத்தும் முடிந்து பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்க இருவரும் கீழே இறங்க, அப்போதே சொல்லிவிட்டான். “நீ வேணும்னா பாரு, இன்னைக்கு நம்மளை ஒருவழி பண்ணாம இந்தக் கூட்டம் விடாது.” என்று.

“ஏன் அப்படி...?” என்ற கேள்வியைக் கேட்டு முடிப்பதற்குள் விழுந்து வணங்க ஆரம்பித்தவர்கள் தான், தொடர்ச்சியாக யார் யார் காலிலோ விழுந்து, எழுந்து கொண்டிருந்தார்கள். சித்தார்த் சொன்னது போல அவர்களை ஒருவழி செய்திருந்தார்கள்.

ஒருக்கட்டத்தில், “மாமா...” என மெல்ல கெஞ்ச, “பட்டுக்குட்டி, இதுல மாமா ஒன்னுமே பண்ண முடியாதுடி. நைட் வேணும்னா நான் தைலம் தேச்சி விடுறேன். இப்போ ஒன்னுமே செய்ய முடியாதுடி, அட்ஜஸ் செய்துக்கோடி...” என பதிலுக்கு அவனும் கெஞ்ச,

“போங்க...” என அவனிடம் முகத்தைத் தூக்கினாலும் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.

அவளின் சிறுபிள்ளைத் தனத்தை ரசித்தவாறே ஒருவாறாக அனைவரிடமும் ஆசிர்வாதம் வாங்கியவர்களை, பிரகாரம் சுற்ற அழைத்துச் சென்றார்கள்.

“ஷப்பா!” என அவளிடமிருந்து வந்த பெருமூச்சில், “என்னடி?” எனச் சிரிக்க,

“எவ்வளவு சொந்தக்காரங்க உங்களுக்கு? எப்படி இவ்வளவு பேரையும் மேனேஜ் செய்றீங்க?” என சீரியசாகக் கேட்க,

“ஏய், இவங்க என்ன எப்பவும் நம்ம வீட்டுலயேவா இருக்கப் போறாங்க? இப்படி ஏதாவது ஒரு விஷேசத்துல பார்க்குறதுதான். அதோட நாமதான் பங்காளிங்ககுள்ள பெரிய வீட்டுக்காரங்க. அதனாலதான் இவ்வளவு கூட்டம். இப்ப வந்தது எல்லாம் பெரிய தலைங்க... ஐ மீன் வீட்டு பெரியாளுங்க, ஈவ்னிங் ரிசப்ஷனுக்குத் தான் எல்லா வீட்டு குட்டீசும் வரும்.” என அலுங்காமல் குண்டைத் தூக்கிப் போட,

மயக்கம் வராத குறையாக அவனைப் பார்க்க, ‘என்னவாம்?’ என்பது போல் புருவத்தை உயர்த்தி கண்ணைச் சிமிட்டிச் சிரித்தான் மங்கையின் மணாளன்.

***
 
  • Love
Reactions: ரமா

CRVS2797

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 11, 2023
39
7
8
Ullagaram
கல்யாணம்ன்னாலே சம்பிரதாயம், சடங்கு, ஆசிர்வாதம், கேலி கலாட்டானஇன்னு நிறைய விஷயங்கள் இருந்தாலும், தான் நேசிக்கிறவங்க நம்ம பக்கத்துல துணையாகி நிற்கும்போது வரும் சந்தோஷமே தனி தான்.
😃😃😃
CRVS (or) CRVS 2797
 

saru

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 24, 2022
168
5
28
Hosur
🥰🥰🥰🥰