• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அரக்கி 11

sankareswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 31, 2024
35
40
18
Chennai
அத்தியாயம் 11

நாட்கள் கடக்க இப்பொழுது எல்லாம் அகலிக்கு சுத்தமாக முடியவில்லை. காலையில் எழுந்தாலே தலை சுற்றல், வாந்தி என்று வரவே அவளால் சரியாக உணவினை கூட எடுக்க முடியவில்லை.

அன்று அலுவலகம் செல்ல வேண்டும் என்ற தோன்றினாலும் ஏனோ அவளால் முடியவில்லை. குளியலறைச் சென்று வாந்தி எடுத்து வந்தவள் அப்படியே படுக்கையில் சரிந்து விட்டாள்.

அவள் வாந்தி எடுக்கும் சத்தம் அறைக் கதவினை திறந்து வைத்திருந்த மகிழனுக்கு நன்றாகவே கேட்டது. இருந்தும் அவன் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தான் அவ்வளவு கூறியும் கேட்காதவளுக்கு என்ன ஆனால் எனக்கென்ன என நினைத்து விட்டான். ஆனால் அவனின் உள் மனமும் அவளுக்காக மட்டுமே ஒவ்வொரு நொடியும் ஏங்கியது.

அலுவலகம் செல்லக் கிளம்ப அவனின் அன்னையிடமிருந்து அழைப்பு வந்தது.

அதனை எடுத்தவனோ, "ஹலோ அம்மா சொல்லுங்க, எப்படி இருக்கீங்க ? வீட்டுல எல்லாரும் நல்லா இருக்காங்களா ?" என்று சிறிது நேரம் பொதுவான நலம் விசாரித்தவாறு கிளம்பிக் கொண்டு இருக்க,

"நாங்க எல்லாருமே நல்லா இருக்கோம்டா. நீ எப்ப தான் ஊர் பக்கம் வர போற இன்னும் கொஞ்ச நாள்ல தீபாவளி வரப்போகுது இதுக்காவது ஊருக்கு வாடா அப்புறம் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும். உனக்கு தான் தெரியும்ல உன் அண்ணனுக்கு கல்யாணம் பண்ணி நான் நினைச்சது எதுவுமே நடக்கல அப்படின்னு. உனக்காக அம்மா ஒரு பொண்ணு பார்த்து இருக்கேன். கல்யாண வயசு வந்துருச்சுல, அதனால இந்த தடவை நீ ஊருக்கு வரும் போது அந்த பொண்ணு பார்த்துட்டு தான் போறே. உங்க ரெண்டு பேருக்குமே புடிச்சிருந்தா சீக்கிரம் நான் கல்யாணம் பண்ணி வைக்க போறேன். வீட்டுக்கு வந்தவ தான் நம்ம மானத்தை எல்லாம் வாங்கிக்கிட்டு இருக்கா. ஆனா உனக்காக வரப் போறவளாவது வீட்டுக்கு ஒரு பொக்கிஷத்தை கொடுக்கட்டும் " என்று அவர் புலம்ப, அந்த வார்த்தை இவனின் உள்ளத்தை தாக்கியதுப் போல் அங்கு அந்த வீட்டின் மூத்த மருமகளின் உள்ளத்தையும் தாக்கி வாட வைத்தது.

"எதுக்கும்மா தேவையில்லாம அண்ணிய பத்தி எல்லாம் பேசிக்கிட்டு இருக்கீங்க. உனக்கு ஒரு பொண்ணு பார்த்திருக்கேன் வந்து பார்த்துட்டு போடான்னு சொன்னா சரி, அதுக்கு நீங்க ஏன் எங்கெங்கையோ சுத்தி வரீங்க ?அப்ப அதுக்காக தான் நீங்க எனக்கு கல்யாணம் பண்ண நினைக்கிறீங்களா? உங்களுக்கு தேவை நம்ம வீட்டுக்கு ஒரு வாரிசு வேணும் அவ்வளவு தானே ?அதுக்காக தான் கல்யாணமா, எதுக்கு எப்படி எல்லாம் பேசிக்கிட்டே இருக்கீங்க ?"

"ஆமாடா நான் பேசுறது தான் உனக்கு குத்தம் மாதிரி தெரியும். இங்கையும் அப்படித்தான் உன் அண்ணன் என்னையே எப்ப பார்த்தாலும் திட்டிக்கிட்டு இருக்கான். இப்ப நீயும் உன் அண்ணன் கூட கூட்டு சேர்ந்துட்டியா, உங்க அண்ணிக்காரியையும் ஒரு வார்த்தை சொல்லிடக் கூடாது. சரி விடு இப்ப நான் உன் விஷயத்துக்கு வாரேன். உனக்கும் கல்யாண வயசு வந்துருச்சுல்ல, அப்புறம் என்ன ஒழுங்கா தீபாவளிக்கு வா. பொண்ணு பார்த்து வச்சிருக்கேன் " என அதிகாரமாய் ஒரு கூறவே,

"முடிஞ்சா வரேன்மா இங்கே வேலை ரொம்ப இருக்கு. உனக்கு தான் தெரியும்ல நானே இப்ப தான் என்னோட ஆஃபீசை டெவலப் பண்ணிக்கிட்டு இருக்கேன். இந்த நேரம் நான் அங்க வந்து என்னால இருக்க முடியாது அதனால புரிஞ்சுக்கோம்மா "

"என்னமோடா இங்க உனக்கு இல்லாத வேலையாடா. நீ தலைமுறை தலைமுறைக்கு உட்கார்ந்து திங்குற அளவுக்கு நம்மகிட்ட சொத்து இருக்கு அதெல்லாம் விட்டுப்போட்டு அங்கு போயி ராப்பகலா தூங்காம செய்யாம சாப்பிடாம கஷ்டப்பட்டுக்கிட்டு கிடக்குற, இது தேவையா சொல்லு ? எங்க நான் சொன்னா கேட்கிற, யாரும் கேட்கிறது கிடையாது. நான் வைக்கிறேன் " என தன் மனக்குமறலை அவனிடம் புலம்பி விட்டு தீபாவளிக்கு வர வேண்டும் என்று மீண்டும் ஒரு முறை கூறிய தன் கைபேசியை வைத்தார்.

"கல்யாணமா இவங்க கிட்ட இப்ப எனக்கு கல்யாணம் வேணும்னு கேட்டேனா. பொண்ணு பார்த்து இருக்காங்க பொண்ணு என்னால வேற யாரையும் கல்யாணம் பண்ண முடியாது " என மனம் கூறவே,

அவனின் உள் மனமோ, " ஏன் ?" என்றுக் கேட்டது.

அதற்கு காரணமும் அவனின் விழிகளில் முன் வந்து நின்றது என்னவோ அகலி தான். ஆனால் அவளின் வயிற்றில் வளரும் குழந்தை தான் அவனை தடுத்தது.

நேரம் ஆகிவிட்டது என்பதை உணர்ந்து அறையை விட்டு வெளியே வந்தவனுக்கு பசியோ வயிற்றை கிள்ளியது. வாரத்தில் மூன்று நாட்கள் அவள் உணவு சமைத்தால் மீதி மூன்று நாட்கள் இவன் சமைக்க வேண்டும் . இன்று அவள் சமைக்க வேண்டிய நாள். கிச்சன் சென்று என்ன உணவு இருக்கிறது என்பதைப் பார்க்க அங்கு வெறுமையாக இருந்தது. அவள் தான் வாந்தியும் தலை சுற்றலுமாக இருக்கிறாளே அவளால் எப்படி சமைக்க முடியும் ?

'பசியோடு வருவானே ஏதாவது சமைச்சு வச்சிருக்கணும் தெரியுதா ? கிளீனா இருக்கு கிச்சன் ' என புலம்பியவனோ, 'இனிமே இவள நம்ம எந்த விஷயத்துக்கு எதிர்பார்க்க கூடாது. நமக்கு வேணும்னா நம்மளே செஞ்சு சாப்பிட்டுக்க வேண்டியது தான். அவ சாப்பிட்டா சாப்பிடுற இல்லன்னா கெடக்கட்டும் ' என நினைத்து வேகமாய் பிரிட்ஜினை திறந்து அங்கிருந்த பிரட் முட்டையை எடுத்து பிரட் ஆம்லெட் போட்டு வேக வேகமாக உண்டான்.

அந்த வாசனை அறையில் இருந்த அகலிக்கு சென்றடைந்தது. அவளுக்கு பசி வயிற்றை கிள்ளியது.

தான் ஒன்றும் உன்னவில்லை என்றாலும் தன் வயிற்றில் வளரும் குழந்தைக்காக எப்படியாவது உண்ண வேண்டும் ? என்று அவள் மனமோ கூச்சலிட்டு எழ வைத்தது.

ஒரு வழியாக எழுந்தவள் தடுமாறிக் கொண்டு கிச்சன் நோக்கிச் செல்ல, அங்கிருந்து டைனிங் டேபிள்லில் அவனோ உண்டவாறு இருந்தான்.

சத்தம் கேட்டு நிமிர்ந்துப் பார்த்தவன், சோகையாக நடந்து வரும் அகலியைக் கண்டவனுக்கோ உள்ளம் உருகியது. அவளை இப்படி ஒரு நிலையில் அவன் என்றுமே பார்க்கக் கூடாது என்று தான் எதிர்பார்த்தான். ஆனால் இப்பொழுது சில நாட்களாகவே அவளின் அழகின் மீது கவனம் செலுத்தவில்லை என்பது புரிந்தது.

டைனிங் டேபிளில் மீதிருந்த தண்ணீரை முதலில் எடுத்துக் கொடுத்தான். பேச வேண்டாம் என நினைத்தாலும் பேசத்தான் உள்ளம் துடிக்க கவிமகிழன் வாய் திறக்கும் நொடியை அவளே வாய் திறந்தாள்.

"எனக்கு ரொம்ப பசிக்குது இன்னைக்கு நீயே ஏதாவது சமைக்கிறியா ? என்னால முடியல " என்க,

"அதை நீ என்கிட்ட காலையில சொல்லி இருக்க வேண்டியது தானே ! நாளைக்கு நான் சமைச்சுக்குறேன். எனக்கு சமைச்சு கொடு அப்படின்னு சொல்லுற, இப்ப நான் ஆபீசுக்கு கிளம்பி ரெடியா இருக்கிறேன். இந்த நேரம் வந்து சொல்லிக்கிட்டு இருக்க நானே செம டென்ஷன்ல இருக்கேன். பசியோட வந்த எனக்கு ஒன்னுமே இல்லை. வேற வழி இல்லாம பிரட் ஆம்லெட் போட்டு சாப்பிட்டு இருக்கேன். இதுக்கப்புறம் நான் உனக்கு சமைச்சு கொடுத்து நீ சாப்பிட வரை வெயிட் பண்ணிட்டு எல்லாத்தையும் கிளீன் பண்ணி வச்சுட்டு நான் போகவா. கஸ்டமர் அங்க எனக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க. இன்னைக்கு ஒரு கிளையன்ட் பார்க்க நான் போக வேண்டியது இருக்கு " என்று அவனும் மனசாட்சியே இல்லாமல் அவளிடம் கூற, அவளோ அந்த வார்த்தையில் நொந்து தான் போனாள்.

ஏன் இவளிடம் தான் கேட்டோம் என்ற எண்ணம் அவளையே இழிவாகத்தான் நினைக்க வைத்தது.

' சரி முடியாத நிலையில் இருக்கும் போது தனக்காக செய்வான் ' என்ற நம்பிக்கை அவளின் நெஞ்சின் ஓரத்தில் இருக்க, அதுவோ இப்பொழுது முற்றிலும் கரைந்து தான் போனது அவனின் இந்த வார்த்தையை கேட்டு.

"சாரி

நான் கேட்டது தப்பு தான் நானே ஏதாவது சமைச்சு சாப்பிட்டுக்குறேன். எனக்கு இன்னைக்கு லீவ் வேணும் ?"

"என்னது லீவு வேணுமா ? அதை நீ கடைசி நிமிஷம் தான் சொல்லுவியா. ஏன் காலைல எழுந்ததுமே முடியல அப்படின்னா அப்பவே என்கிட்ட இன்ஃபார்ம் பண்ணி இருக்க வேண்டியது தானே " எரிச்சலோடுக் கத்தவே, அவனிடம் பேசுவதை முற்றிலும் வெறுத்தாள்.

மௌனமாய் எழுந்து ஃப்ரிட்ஜை திறந்து அவளும் தனக்கு உண்பதற்கு தேவையான பொருள்களை எடுத்துக் கொண்டிருக்க, தான் இங்கு பேச அவள் உதறி விட்டுச் செல்வது ஆக்ரோஷமாக கோபத்தின் உச்சிக்குக் கொண்டு சென்றது.

அன்னைக்கு என்னன்னா பெரிய இவன் மாதிரி ஆபீஸ்ல வச்சு நீ லீவ் வேணும்ன்னா எடுத்துக்கோ, நீ வேலையே பார்க்க வேண்டாம். முதல்ல ரெஸ்ட் எடு அது தான் தேவைன்னு பக்கம் பக்கமா வசனம் பேசுனான். ஆனா இப்போ இப்படி வந்து எரிஞ்சு விழுகிறான். எப்போ எந்த குணத்தில தான் இருப்பானோ தெரியல " என புலம்பிக்கொண்டு அவளே சமைக்க ஆரம்பிக்க, தன் பிளேட்டினை கழிவி வைத்து அந்த அறையை விட்டு வெளியேறினான். பின் என்ன நினைத்தானோ வாசலில் நின்றவாறு அவளைக் கண்டான்.

"நீ இனிமே ஆபீஸ்க்கு வர வேண்டாம். உன் வேலை எல்லாம் நான் வேற யாரையாவது பார்த்துக்க சொல்லுறேன் " அதற்கு மேல் ஒரு வார்த்தை கூட அவள் பேசக்கூடாது என்ற நினைப்பில் அங்கிருந்துச் சென்று விட்டான்

அவன் இப்பொழுதைக்கு இதை சொன்னானே அதுவே போதும். எனக்கு அவன் உதவி செய்யவில்லை என்றாலும் உடனிருந்து வார்த்தையால் வதைக்காமல் இருப்பதே மேல். தனிமை தான் அவளுக்கும் அந்த நொடி தேவைப்பட்டது. முடிந்த வரை எளிமையான ஒரு உணவினை சமைத்து உண்டு முடித்த நொடியில் மீண்டும் வாந்தி வர, அதனை வாந்தி எடுத்து மறுபடியும் சென்று படுக்கையில் சரிந்தாள்.

இப்படியே தான் அவளுக்கு அடுத்த சில நாட்கள் சென்றது. வந்தனா வந்து அவளுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுப்பது பழங்கள் ஜூஸ் போட்டுக் கொடுப்பது, அடிக்கடி வந்து கவனித்துக் கொள்வது என்று இருக்க ஒரு வாரம் கடந்திருந்தது.

இப்பொழுது முழுவதுமாக வீட்டுக்குள்ளே முடங்கும் நிலையில் வந்திருந்தாள். அன்று அப்படித்தான் வந்தனா வேலை முடிந்து அவளை கவனிக்க வர படுத்து இருந்தாள்.

"ஹாய் அகலி சாப்பிட்டியா மதியம் ஏதாவது ? இரு நான் போய் ஜூஸ் போட்டு கொண்டு வரேன் " எனக் கூறி அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு பின் சமையலறைச் சென்று பழச்சாறினை போட்டுக்கொண்டு மீண்டும் வந்தாள்.

"மெல்ல எழுந்து குடி. ஆமா இந்த வாரம் நீ டாக்டர் கிட்ட போகணும் அப்படின்னு சொன்னேல. என்னைக்குன்னு சொல்லு நான் உன் கூட வாரேன் "

"சாரி வந்தனா என்னால உனக்கும் தான் தொந்தரவு. நீயும் வீட்டுக்கும் இங்கேயும் ஆபீஸுக்கும் அலைஞ்சுக்கிட்டு இருக்கே. உனக்கு ரெஸ்ட் இல்லாம இருக்கு இல்ல. அதுவும் இல்லாம ஆபீஸ்ல உனக்கு எப்படியும் வேலை அதிகமாக இருக்கும் இந்த நேரம். ஆமா கேட்கணும்னு நினைச்சேன் கௌஷிக் ப்ராஜெக்ட் என்ன பண்ணான். என்னால இதுல உதவியே பண்ண முடியல "

"அதெல்லாம் அவன் நல்லபடியா முடிச்சு கொடுத்துட்டான். அதுல எந்த பிரச்சினையும் கிடையாது. நீயேன் இப்படி நினைக்கே, நீ என்னோட பெஸ்ட் பிரெண்டு. உனக்கு நான் செய்யாம வேற யாருக்கு செய்யணும்னு நினைக்க போறேன். அதுவும் நீ குறுகிய காலத்தில எனக்கு கிடைச்ச டீப்பஸ்ட் ஃப்ரெண்ட். உன்ன மாதிரி ஒருத்தி கிடைக்க நான் உண்மையிலேயே குடுத்து தான் வச்சிருக்கணும். மெல்லக்குடி " எனக் கூறி அவளை மெல்ல குடிக்க வைத்ததாள்.

பின் அவளின் துணிகள் அனைத்தையும் வாஷிங்மெஷினில் போட்டு சிறிது நேரம் அவளோடுப் பேசியவாறு இருந்து பின் அதனை காயப்போட ஆரம்பித்தாள். அவளின் அறையையும் சுத்தம் செய்தாள்.

"எனக்கு நீ ஒரு உதவி பண்றியா வந்தனா ? தயக்கமா இருக்கு ஏற்கனவே நீ எனக்கு ரொம்ப பண்ணிக்கிட்டு இருக்க இப்போ ?" இழுக்க,

"என்னடி இப்படி சொல்ற, சொல்லு என்ன உதவி பண்ணனும் ?"

"எனக்கு இந்த வீட்ல இருக்க பிடிக்கல மகிழன் முகத்தை பார்த்தாலே எனக்கு என்னமோ மாதிரி இருக்கு. அவன் என்ன வெறுக்கிறான் அவன் வார்த்தையால காயப்படுத்த என்னால தாங்க முடியல. அதுனால நான் இந்த வீட்டை விட்டு போகலாம்ன்னு நினைக்கிறேன். எனக்கு ஒரு வாடகை வீடு மட்டும் உனக்கு தெரிந்த யார்கிட்டையாவது சொல்லி ரெடி பண்ண முடியுமா ?இப்போதைக்கு என்கிட்ட சொந்தமா வாங்குற அளவுக்கு கேஷ் இல்ல. அப்பா கிட்ட கேட்டா எதுக்கு அப்படின்னு சொல்லி ஏதாவது சொல்லுவாரு. அதனால வாடகை வீடு மட்டும் எனக்கு ஏற்பாடு பண்ணி தரியா ?" எனக் கேட்ட நொடி தோழியான வந்தனவோ அதிர்ந்தே விட்டாள்.

தொடரும்...