• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அர்ப்பணம் 7

kkp12

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 3, 2023
89
11
43
Tamilnadu
அந்த ஊரில் தாங்கள் நிலம் வாங்கப் போகிறவரின் பண்ணை வீட்டில் தான் வீரபத்திரனும், தர்மராஜூம் தங்கி இருந்தனர்.

அங்கே அடங்காத கோபத்துடன் அமர்ந்திருந்த மகனிடம்,

“ஏன்டா! இது என்ன நம்ம ஊரா? நாம இறங்கி நியாயம் பேசுறதுக்கு! இங்கே இருக்கிற சட்டம் என்னவோ அது படி தான் இந்த ஊர் மக்கள் நடந்துக்கனும்! இதில் நாம என்னத் தலையிட்டுப் பேச முடியும்னு நினைக்கிற?”என்று கூறிப் புரிய வைக்க முனைந்தார் தர்மராஜ்.

“ப்பா! அதுக்காக கண்ணுக்கு முன்னாடி நடக்கிற அநியாயத்தை தட்டிக் கேட்காமல் கையைக் கட்டிட்டு சும்மா இருக்க சொல்றீங்களா?”என்று அவரிடம் வாக்குவாதம் செய்தான் வீரபத்திரன்.

“அப்படித் தான்டா இருக்கனும்! நீ இப்படி எகிறுறதை மட்டும் இந்த ஊர்க்காரங்க பார்த்தால் அடுத்து எப்பவும் நம்மளை இந்த ஊர் எல்லையில் கூட விட மாட்டாங்க! புரியுதா?”என்றவரிடம்,

“அப்போ இங்கே நடந்துட்டு இருக்கிற அநியாயத்தை எல்லாம் எப்படி தட்டிக் கேட்கிறதுப்பா?”என்று ஆதங்கத்துடன் வினவினான்.

“அதை நாம எல்லாம் கேட்க முடியாதுடா! நம்ம ஊரில் நாம பெரிய தலைக்கட்டு தான்! ஆனால் இங்கே நாம ஒன்னுமே இல்லை! வெறும் வெளியூர்க்காரங்க தான்! அப்படி இருக்கும் போது உன்னோட சத்தம் இங்கே யாருக்கும் கேட்காது! யார்கிட்டேயும் எடுபடாது!”எனப் பதிலளிக்க,

அதில் சிறிது நேரம் அமைதியாக இருந்தவனோ,”அப்போ நான் இவங்களை விடப் பெரிய ஆளாக இருந்தால் என் பேச்சு இங்கேயும் எடுபடும் தானேப்பா?”என்றவனை அதிர்வுடன் ஏறிட்டார் தர்மராஜ்.

“சொல்லுங்கப்பா! அப்போ என் வார்த்தைக்குப் பவிசு இருக்கும்ல?”என்று கேட்கவும்,

“டேய்! என்னடா ஏதேதோ பேசிட்டு இருக்கிற? உன்னைப் பார்க்கவே எனக்குப் பயமாக இருக்கு!”என்ற தந்தையிடம்,

“நான் உண்மையாகத் தான் கேட்கிறேன்ப்பா. ஏன்னா, நம்ம ஊர்ல நாம பெரிய பருப்பா இருக்கலாம்! ஆனால் இங்கே நாம ஒரு ஆளே இல்லன்னு சொன்னீங்க தான? இங்கேயும் என்னைப் பெரிய ஆளாக உயர்ந்து பார்க்கனும்! அப்படின்னா, நான் இந்த ஊரையே விலைக்கு வாங்குற அளவுக்குப் பணம் வச்சிருக்கனும் தான? அதைப் பண்ணிட்டா இந்த ஊரில் இருக்கிற எல்லாருமே என் பேச்சுக்கு மதிப்புக் குடுப்பாங்கள்ல?”என்று கண்கள் சிவக்க, நெஞ்சு புடைக்கப் பேசிய தன் மகனைக் கண்டு அரண்டு தான் போனார் தர்மராஜ்.

“வீரா!”என்றவரைக் கை நீட்டித் தடுத்து,”இதுக்கப்புறம் நான் என்னப் பண்ணனும்னு எனக்கு நல்லா தெரிஞ்சிடுச்சுப்பா! என் நோக்கத்துக்கு எதிராக யாரும் குறுக்க வரக் கூடாதுன்னு வேண்டிக்கோங்க!”என அவரிடம் தீர்க்கமாக உரைத்தான் வீரபத்திரன்.

“ஏன்டா இந்த விஷயத்தில் நீ ஏன் இவ்வளவு தீவிரமாக இருக்கிற? உனக்கு என்ன தான்டா ஆச்சு?”என்று அவனை உலுக்க,

“அப்பா! நான் இந்த ஊரில் இருக்கிற பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப்பட்றேன். அடுத்த தடவை இந்த ஊருக்கு வரும் போது அவளை முறையாகப் பொண்ணுக் கேட்டு, எனக்கு மனைவியாக, நம்ம வீட்டுக்கு மருமகளாக்கிக் கூட்டிட்டுப் போகனும்! அதே மாதிரி இந்த ஊரில் நடக்கிற அநியாயத்தையும் தட்டிக் கேட்கனும். அதான்!”என்று தந்தையிடம் திட்டவட்டமாக உரைத்தவனைக் கண்டு ஆச்சரியத்தில் விழி விரித்துப் பார்த்து,

“என்னடா சொல்ற? நாம இங்கே ஒரு ரெண்டு, மூனு தரம் வந்து போயிருக்கோமா? அதுக்குள்ள எப்படி பொண்ணைப் பார்த்து, அவளைக் கட்டிக்கிற அளவுக்கு வந்திருக்கிற?”என்றார் தர்மராஜ்.

“ஆமாப்பா. அவ பேரு தங்கபுஷ்பம்”என்றவுடன் அதிர்ந்து போனவரோ,

“அவ அந்தக் காளிமுத்துவோட பொண்ணு தானே? அந்தாளும் நம்மளை மாதிரியே இந்த ஊரோட பெரிய தலைக்கட்டாச்சே! அவரு எப்படி தன்னோட பொண்ணை உனக்குக் கட்டி வைப்பாரு? உனக்குப் புத்திப் பெசகிப் போச்சா?”என்று அவனைத் திட்ட,

“அதான் சொல்லிட்டேனேப்பா! நான் அவரை விட என்ன? இந்த ஊரில் இருக்கிற மத்தப் பெரிய பணக்காரங்களை விடப் பணத்தைப் பெருக்கிட்டு இங்கே வந்து அவளைப் பொண்ணுக் கேட்பேன்! அதுவரைக்கும் எம்மனசு அமைதி ஆகாது!”என அவரிடம் உறுமினான் வீரபத்திரன்.

“இங்கே பாரு வீரா! நீ சொல்றதும், செய்யப் போறதும் ஒன்னும் சரியில்லை! நாம இந்த ஊரில் நெலம் வாங்குற வேலையாகத் தான் வந்திருக்கோம்! அதை மட்டும் முடிச்சிட்டுச் சத்தம் காட்டாமல் ஊரைக் காலி பண்ணிட்டுப் போவோம்! அது வரைக்கும் இங்கே வேற எந்த சோலியையும் வச்சிக்காதே!”

“ப்பா! நீங்க பார்த்துட்டே இருங்க! நான் சொல்றதை செஞ்சிக் காட்டுவேன்!”என்று அவரிடம் சூளுரைத்தான் வீரபத்திரன்.

‘இது எங்கே போய் முடியப் போகிறதோ?'என்று மகனை நினைத்துக் கலக்கம் அடைந்தார் தர்மராஜ்.

இதே நேரத்தில் தன்னுடைய இல்லத்தில் படுக்கையில் சுருண்டு இருந்தாள் தங்கபுஷ்பம்.

அவளால் சற்று முன்னர் பஞ்சாயத்தில் நடந்ததை ஜீரணிக்கவே முடியவில்லை.

இதில் வேறு, அவளைச் சரமாரியாக அடித்து, நொறுக்கியது மட்டுமின்றி, இனிமேல் அவள் வாயைத் திறக்கவே கூடாது என்று கட்டளையிட்டு உள்ளார்கள் அவளது பெற்றோர்.

தனது அழுகையை அடக்க முடியாமல் தலையணையில் முகத்தைப் புதைத்துக் கொண்டுக் கதறினாள் தங்கபுஷ்பம்.

“ஏட்டி! நீ இன்னும் அழுகுறதை நிப்பாட்டலையா? உங்க ஐயனைக் கூப்பிட்டு மறுபடியும் அடி வெளுக்கச் சொல்லவா?”என்று வெளியே இருந்து கத்தினார் வள்ளி.

“ப்ச்! போம்மா! இப்படி அநியாயத்துக்குத் துணை போறதுக்கு அடி வாங்கிச் சாகலாம்! இல்லைன நீயே என்னை வெஷம் வச்சுக் கொன்னுடு! உனக்குப் புண்ணியமாகப் போகும்!”என ஆங்காரமாக கூச்சலிட்ட மகளிடம் வந்து,

“அவ்வளவு தானே? உங்கப்பா வயல்ல இருந்து வரும் போது வெஷத்தை வாங்கிட்டு வரச் சொல்றேன்! அதை நீயே சாப்பாட்டுல போட்டுத் தின்னுரு. எங்களுக்கு வேலை கம்மியா போவும்ல! என்ன நாஞ்சொல்றது?”என்று கிண்டலாக வினவவும்,

“நீ என்னை நிம்மதியாக அழுக கூட விட மாட்டியாம்மா?”என்று அவரிடம் எரிந்து விழுந்தாள் தங்கபுஷ்பம்.

“சத்தத்தைக் குறைச்சு அழுடி! எட்டூருக்குக் கேட்கிற மாதிரி தான் அழுவாளாக்கும்!”என நொடித்துக் கொண்டுப் போய் விட்டார் வள்ளி.

“ம்ஹூம்!” என்று சிலுப்பிக் கொண்டவளுக்கோ அழுகை நிற்கவில்லை.

இங்கோ,”அந்தக் கழுதைக்கு வாய்க் கொழுப்பு சாஸ்தியா போச்சு! ஏற்கனவே மாப்பிள்ளையை வேற மட்டு, மரியாதை இல்லாமல் பேசி வச்சிருக்கறான்னு எம் பொண்டாட்டி சொன்னப்போ கன்னத்துலயே போட்டு அடக்கி வச்சேன்! அப்படியும அடங்காமல் இன்னைக்குப் பஞ்சாயத்தில் சிலுப்பிக்கிட்டுப் பேசியிருக்கிறா! இவளை என்ன தான் பண்றது?”என்று தன்னுடைய தங்கை மற்றும் அவரது கணவரிடம் வருத்தத்துடன் கூறிக் கொண்டிருந்தார் காளிமுத்து.

“ஆமாம்ண்ணா. அவளுக்கு இருக்கிற வாய்க்கு எங்கேயும் அடி வாங்கிட்டுத் திரியப் போறா! அதுக்குள்ளே அவளுக்கு ஒரு மூக்கணாங்கயிறைப் போட்டு விட்டுடுவோமா?”என்று அவரிடம் நாசுக்காக கேட்டார் சற்குணம்.

“என்னம்மா சொல்ற?”என்றார் குழப்பத்துடன்,

“அவளுக்கும், எம் பையனுக்கும் கல்யாணத்தைப் பண்ணி வச்சிடுவோமாண்ணே?”என்று தயக்கமாக வினவவும்,

“கல்யாணமா? அவளுக்கு இன்னும் அதுக்கேத்த வயசு வரலையேம்மா?”என்றார் காளிமுத்து.

“அதான் புஷ்பத்துக்கு இருபது வயசு ஆயிடுச்சுல்ல? அப்பறம் என்னண்ணே? அதெல்லாம் இந்த வயசில கல்யாணம் செஞ்சி வச்சா தான் காலா காலத்துல பேரனோ, பேத்தியோ பெத்துக் கொடுப்பா!”என்று சொல்லி அவரது மனதைக் கரைத்தார் சற்குணம்.

“உடனே முடிவு சொல்ல முடியாது ஆத்தா! உன் அண்ணிக்கிட்டு கலந்து பேசிட்டுத் தான் எதுவாக இருந்தாலும் மேற்கொண்டு பேச முடியும்”என்று கூறி விடவும்,

“அதுக்கு என்ன? தாராளமாகப் பேசிட்டுச் சொல்லுங்க. நானும் சாயங்காலம் ராஜன் வந்ததும் அவங்காதுலேயும் போட்டு வைக்கிறேன்!”என்றவரோ,

“நீங்க என்ன சொல்றீங்க?”என்று தனது கணவரிடம் ஒரு ஒப்புக்கு அவரது எண்ணத்தை வினவினார் சற்குணம்.

அதற்கு வளையாபதியோ,”நீ சொன்னால் சரி தான்ம்மா”என்று அவருக்கு ஜால்ரா தட்டியவரைப் பெருமையாகப் பார்த்தார் மனைவி.

“சரி. நான் வீட்டுக்குப் போயிட்டு வர்றேன்”என அவர்களிடம் விடைபெற்றுச் சென்று விட்டார் காளிமுத்து.

“என்னம்மா நம்ம திட்டம் பலிச்சிடுமா? உன் அண்ணன் சுரத்தே இல்லாமல் போறாரு!”எனக் கேட்டார் வளையாபதி.

“பலிச்சித் தான் ஆகனும்ங்க! அதுக்காக நான் எந்த எல்லைக்கு வேணும்னாலும் போவேன்!”என்று குரூரமாகப் பதிலளித்தார் சற்குணம்.

வீட்டிற்கு வந்த காளிமுத்துவோ, தன்னுடைய மனைவியை அழைத்து,”புஷ்பா என்ன செய்றா?”என மகளைப் பற்றி விசாரித்தார்.

“அவ அழுதுக்கிட்டே தூங்கிட்டாள். ராவுச் சாப்பாட்டுக்கு எழுப்பி விடனும்”என்றார் வள்ளி.

“ம்ஹ்ம். சற்குணம் வீட்டிலிருந்து தான் வர்றேன். அவ ஒரு யோசனை சொன்னா”என்று அவரிடம் தன் தங்கை கூறிய யோசனையைச் சொல்ல,

அதைக் கேட்டவரோ,”என்ன அவளுக்குத் திடுதிடுப்புன்னு இப்படி ஒரு யோசனை தோனிருக்கு? அதுக்கு நீங்க என்ன சொன்னீங்க?”என்று ஐயத்துடன் வினவினார்.

“எனக்கும் அது தான் தோனுச்சு. ஆனால் அவ சொல்றதும் சரின்னு தான் படுது! உங்கிட்ட பேசிட்டுச் சொல்றேன்னு சொல்லிட்டு வந்திருக்கேன்”என்றதும்,

அவரைத் திருப்தியுடன் பார்த்த வள்ளியோ,”அவ வீட்டில் வேலைக்கு ஆளே வைக்கலை. எல்லாத்தையும் அவளே தான் பண்றா போலிருக்கு. இங்கே நம்மப் பொண்ணுக்கு அவ்ளோ வீட்டு வேலை எல்லாம் செய்யத் தெரியாது. இதையெல்லாம் அவளுக்கும் தெரியும் தானங்க? அப்பறமும் நம்மப் பொண்ணை எப்படி அவளுக்கு மருமகளாக வரக் கேட்கிறா?”என்று கேட்டார்.

“அதை எல்லாத்தையும் அவங்க கிட்ட தெளிவாகப் பேசிட்டுத் தான் நம்ம முடிவைச் சொல்லப் போறோம். இப்போ உன் முடிவு என்னம்மா?”

“நான் என்னச் சொல்லப் போறேன்ங்க? எனக்குச் சம்மதம் தான்”என்ற மனைவியிடம்,

“இதைப் பத்தி புஷ்பத்துக்கிட்டே எதுவும் சொல்லிடாதே! எல்லாம் முடிவானதும் அவகிட்டே பதமாகப் பேசிப் புரிய வை”என்றுரைத்தார் காளிமுத்து.

“சரிங்க. அதைக் கேட்டு அவ கண்டிப்பாகச் சாமியாடப் போறா!”என்று மகளை நினைத்துச் சலித்துக் கொண்டார் வள்ளி.

இதே சமயம், தங்கள் வயலில் இருந்து வீடு திரும்பிய மகனிடம் அவனுக்கும், தங்கபுஷ்பத்திற்கும் திருமணம் செய்து வைப்பதாக முடிவெடுத்து இருப்பதை தெரிவித்தார் சற்குணம்.

அதைக் கேட்டதும்,“அவளே ஒரு கருவாச்சி! அவளை நான் கட்டிக்கனுமா? அவளைச் சும்மா வம்புக்கு இழுக்குறதுக்கு நாந்தான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சொல்லுவேன் தான்! அதுக்காக அந்தக் கருவண்டைக் கட்டிக்க எல்லாம் முடியாதும்மா! எனக்குக் கல்யாணத்துக்கு வேற பொண்ணைப் பாருங்க”என்று பிடிவாதமாக மொழிந்தான் ராஜன்.


- தொடரும்
 
Last edited: