• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அழி நெஞ்சம் 9

MK16

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 29, 2023
30
17
18
Tamil nadu
ஆழி நெஞ்சம் 9

கோவில் மண்டபத்தின் தூணில் சாய்ந்து, கண்கள் மூடி, கடந்த காலத்தை ஓட்டிப் பார்த்த ஆழியின் விழியோரம் நீர் இறங்கியது.

"கண்ணுல குங்குமம் பட்ருச்சா அங்கிள்." அருகில் கேட்ட மழலையின் குரலில் ஆழி கண் திறக்கும் முன், பிஞ்சு விரல் அவனின் கண்ணீரைத் துடைத்தது.

சிறுமியின் ஸ்பரிசம் நெஞ்சத்து ரணங்களை எல்லாம் துடைத்தெடுக்கும் மாயம்.

மெல்ல இமை திறந்த ஆழி...

"ஹாய் பட்டர்ஃப்ளை" என்று மூரல்கள் பளிச்சிடக் கூறினான். முகத்தில் சடுதியில் உற்சாகம்.

காலையில் ஆழி போக்குவரத்து சமிக்கையில் பார்த்த சிறுமி ஆழிதா அவன் முன் பட்டாம்பூச்சியாய் நின்றிருந்தாள்.

"உங்களுக்கு என்னை ஞாபகம் இருக்கா?" தலைசாய்த்து அவள் கேட்க,

ஆழியும் அவளைப்போலவே தலைசாய்த்து, "இவ்ளோ க்யூட்டான பட்டர்ஃப்ளை யாரும் மறப்பாங்களா?" எனக் கேட்டான்.

"நான் பட்டர்ஃப்ளையா? மார்னிங்கும் அப்படித்தான் கூப்பிட்டிங்க" என்று ஆழிதா தன் கன்னத்தில் ஒரு விரல் வைத்து தட்டினாள்.

"எஸ்" என்று ஆழியும் கண்கள் விரித்து, தன்னுடைய முன்னுச்சி கேசம் அசைந்தாடிட தலை ஆட்டினான்.

"அதான் மம்மி எனக்கு பட்டர்ஃப்ளை ஃப்ராக் போட்டுவிட்டாங்களா?" என்றாள்.

ஆழி தோள்களை உயர்த்தி இறக்கி கண்கள் சிமிட்டினான்.

குழந்தை களுக்கி சிரித்தாள்.

"யாரோட வந்தீங்க?"

"அம்மா" என்று பார்வையை சுழற்றிய ஆழிதா, "அம்மா கணேஷா முன்னாடி பிரசாதம் கொடுத்திட்டு இருப்பாங்க. நான் சுத்தி வரேன்னு ஓடி வந்தனா... உங்களை பார்த்ததும் கிட்ட வந்தேன்" என்றாள்.

"ஹோ" என்ற ஆழி, "இதுபோல வெளியில் வந்தால் அம்மாவை விட்டு தனியா எங்கும் போகக்கூடாது சரியா?" என்றான் ஆழி.

ஆழிதா தன்னுடைய இரட்டை குதிரைவால் அசைந்தாட சரியென்றாள்.

"உங்களுக்கு பிரசாதம் கொண்டுவரேன், இருங்க" என்று ஆழி மறுக்கும் முன் ஓடி மறைந்த ஆழிதா, சென்ற வேகத்தில் கையில் தொண்ணை நிரம்பிய சர்க்கரைப் பொங்கலுடன் வந்திருந்தாள்.

"இந்தாங்க" என்று ஆழிதா ஆழியின் முன் நீட்டினாள்.

"நிறைய இருக்கே" என்ற ஆழி வாங்கும் முன்பு, தானே எடுத்து அவனின் வாயில் வைத்த ஆழிதா, "டுடே இஸ் மை பர்த்டே" என்றாள்.

"வாவ்" என்ற ஆழி, "ஹேப்பி பர்த்டே லிட்டில் ஏஞ்சல்" என்று வாழ்த்தி, தானும் பொங்கலை எடுத்து அவளுக்கு ஊட்டிவிட்டான்.

"தேங்க்யூ அங்கிள்" என்ற ஆழிதா, "மார்னிங் ஸ்கூல் போயிட்டதால, இப்போ தான் சாமி கும்பிட வந்தோம். அப்புறம் அம்மா எப்பவும் பிஸி" என்றாள். ஏனென்று தெரியாது தன்னுடைய பள்ளிக்கூட கதைகள் எல்லாம் ஆழியிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

ஆழிக்கும் அவள் சுவாரஸ்யமாக கண்கள் சுருக்கி, விரல்கள் விரித்து, குதிரைவால் அசைய பேசிட, கேட்டுக்கொண்டே இருக்க அத்தனை ஆசையாக இருந்தது. சிறுமியிடம் தன் ரணங்கள் மறந்தான் என்றும் சொல்லலாம்.

ஆழி, தன் முகத்தை கன்னம் தாங்கி சிறுமியின் பேச்சை ரசித்திருந்தான்.

"நீங்க பெரிய போலீசா, குட்டி போலீசா?" ஆழிதா சட்டென்று கேட்க, அவளின் கேள்வியில் ஆழிக்கு புன்னகை அரும்பியது.

"கொஞ்சம் பெரிய போலீஸ்" என்றான். விரலால் கொஞ்சம் என்பதை காண்பித்து.

"அப்போ என் டாடியை கண்டுபிடிச்சுத் தரீங்களா அங்கிள்?"

குழந்தை அவ்வாறு கேட்டதும் ஆழியின் கண்கள் இடுங்கியது.

"அப்பா எங்க?" எனக் கேட்டான்.

"தெரியலையே!" என்ற சிறுமி, "மம்மி சொல்லல. ஆனால் அப்பா ரொம்ப ரொம்ப நல்லவங்க. மம்மி தான் பேட். அப்பாவை அழ வச்சிட்டு வந்துட்டாங்களாம். மம்மி ஒரு நாள் நைட், என்னை கட்டிப்பிடிச்சு அழுதுட்டே சொன்னாங்க" என்றாள். உதடு துடித்தது. விட்டால் அழுது விடுவாள் போலும்.

தன் மார்போடு அணைத்துக் கொண்டான்.

ஆழிக்கு அடுத்து என்ன கேட்க வேண்டுமென்று தெரியவில்லை.

ஆனால் குழந்தையின் பேச்சில் அவனின் இதயம் ஏனென்று தெரியாது கனத்தது. வேகமாக துடித்தது.

"உங்க அப்பா நேம் என்ன?"

"நேம் தெரிஞ்சா கண்டுபிடிச்சிடலாமா?"

"ம்ம்... நான் ட்ரை பண்றேன்" என்றான். ஏனென்று தெரியாது அவனது குரல் தடுமாறி வந்தது.

"ஸ்கூல்ல ஃபேமிலி ட்ரீ பண்ணும்போது, மம்மி டாடி நேம் எழுதாம, அந்த இடத்தில் என் நேம் தான் எழுதினாங்க" என்று குழந்தை உதடு குவித்து முகம் சுருங்க சொல்லிட...

"ஆழி... தா..."

ஆழி முடிக்கும் முன்,

"ஆழி" என்ற மற்றொரு குரல் அவனின் விளிப்போடு சேர்ந்து ஒலித்தது.

"அச்சோ மம்மி" என்று ஆழியின் மடியிலிருந்து வேகமாக இறங்கிய ஆழிதா அவனின் முதுகுக்கு பின்னால் மறைய, ஆழி அழைப்பின் ஒலி வந்த திசையில் யாரென்று பார்த்தான்.

மண்டபத்தின் அந்தப்பக்கம் மீண்டும் ஆழி என்ற குரல் கேட்க, ஆறு வருடங்களுக்கு பின் செவி நுழையும் அழைப்பின் ஓசை அவனது உயிரையும் துடிக்க வைத்தது.

யாருடைய குரல் என்று அவனுக்குத் தெரியாதா?

மகளைத் தேடிக்கொண்டு மண்டபத்தைச் சுற்றி முன் வந்த ஆண்டாள், அங்கு அமர்ந்திருந்த அழியைக் கண்டு மின்சாரத்தில் கால் வைத்ததுபோல் அதிர்ந்து நின்றாள்.

"ஆழி..." என்ற ஆண்டாளின் அழைப்பு பாதியில் நின்றது.

ஆழியின் கண்கள் இரண்டும் கோவைப்பழம் போன்று அத்தனை சிவந்திருந்தது.

"அச்சோ அங்கிள் அம்மா... ஸ்ட்ரேஞ்சர்ஸ் கிட்ட பேசினா திட்டுவாங்க. சொல்லிடாதீங்க. நான் இங்க இல்லைன்னு அம்மா போயிடுவாங்க. நான் இந்தப்பக்கம் ஓடிடுறேன்" என்று அவனின் முதுகில் அட்டையாய் ஒட்டிக்கொண்டு ஆழிதா காற்றாய் பேசிட, ஆழியின் ஜீவன் உடல்விட்டு காற்றாகியிருந்தது.

குழந்தையின் ஸ்ட்ரேஞ்சர்ஸ் எனும் வார்த்தை ஆழியை உயிரோடு மரிக்கச் செய்து.

சிறுமியின் பெயர், அவள் சொல்லிய அப்பாவின் பெயர் எழுதாமல் என்னுடைய பெயர், தற்போது ஆண்டாளின் அழைப்பு, பிள்ளையின் அம்மா எனும் அச்சம், யாவும் அவனுக்கு குழந்தை தன்னுடைய உதிரம் என்று ஆழிக்கு காட்டிக் கொடுத்திருந்தது.

உடன் மனைவியின் மீது தன்னை விட்டுச் சென்றுவிட்டாள் என்ற கணம், அவளை இன்று நேரில் கண்ட கணம் இவை இரண்டிலும் வராதா கோபம் இக்கணம் வந்தது.

அவளுக்கு பிரிந்து செல்ல ஆயிரம் காரணங்கள் இருக்கட்டும். விட்டுச் சென்று வலி கொடுத்ததாகவே இருக்கட்டும். பார்த்ததும் அவள் முன் காதலால் மண்டியிடத்தான் ஏக்கம் கொண்டான். அவளின் நேசம் அளப்பரியது ஆயிற்றே!

ஆனால் எல்லாவற்றிற்கும் சிகரமாக அவனை உயிரோடு கொன்றுவிட்டாள்.

காக்கிச் சட்டையில், விழிகளில் மிகுதியாய் கோபம் கொப்பளித்த போதும், கன்னம் இறங்கிய அவனது கண்ணீர், அவனின் வலியை அவளுக்குக் காட்டியது.

"ஆ..."

வேகமாக கைக்காட்டி தடுத்திருந்தான்.

ஆழியின் வலி சுமந்த முகம், அவளின் இதயம் சுட்டது. அவளுக்கு இரு மடங்கு ரணமாய் இதயம் தைத்தது.

எழுந்து நின்றான். ஆழிதா பட்டென்று அவனது கால்களைக் கட்டிக்கொண்டு தன் முகம் மறைத்தாள்.

"அன்னைக்கு கோவிலில் நீ சொல்ல வந்த விஷயம்?" ஆழி கேள்வியாக நிறுத்த, ஆண்டாள் தலை கவிழ்ந்தாள்.

"அப்போ என்னால் குழந்தைக்கு ஆபத்துன்னு தான் நீ என்னைவிட்டு போயிருக்க... ரைட்?"

"அது... ஆழி!"

அவள் சொல்லாமலே அவன் கண்டுவிட்டானே, அவள் மனதை. அவள் மொழி அறிய அவனுக்கு வார்த்தைகள் தேவையோ!

"உன்னை காலையில் பார்க்கும்போது கூட, எனக்கு உன்மேல கோபம் வரலடி. நீ என்கிட்ட வந்தா போதும்ன்னு தான் நினைச்சேன்" என்ற ஆழி, "என் சந்தோஷத்துக்கும் நீதான் காரணம். என் வலிக்கும் நீதான் காரணம்" என்றதோடு, தன் மனதின் குமுறல்களை எல்லாம் அவளிடம் கலங்கும் இதயத்தின் மொழியாக வெளிப்படுத்தினான்.

"காரணம் எதுவா இருந்தாலும் உனக்காக மாத்திக்கணும் நினைச்சேன். எப்படி உன்னால முடிஞ்சுது. உன்மேல எனக்கு கோபம் வருது ஆண்டாள். உன்னால வருதுடி. ஏன் இப்படி பண்ண ஆண்டாள். ஒரு நொடி, என்னை மீறி எதுவும் நடக்காதுன்னு உனக்கு என்மேல நம்பிக்கை வரலையா?"

"ஆழி பிளீஸ்..." தரையில் மண்டியிட்டு கையால் முகம் மூடி விசும்பினாள்.

அவளால் அவனது கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை. எப்படி சொல்வாள். பயம் எனும் அரக்கனால் உயிரானவனை விட்டு வந்துவிட்டாள். ஆனால் ஒவ்வொரு நொடியும் அவனைவிட அதிகம் வலி சுமந்தாளே! அவனின்றி ஊண், உறக்கம் அண்டாது அவள் வாழ்ந்த வாழ்வு அவனின் வேதனைக்கு கொஞ்சமும் குறைவில்லாதது. பலமுறை அவனுடன் சென்றுவிடலாம் என்று நினைத்திருக்கிறாள். அத்தனையும் குழந்தையின் நலன் எனும் வரும் போது பின் சென்றிடும்.

இந்த நொடி, அவனின் மார்பில் சாய்ந்து அழுதிட ஏக்கம் கொள்கிறாள். அவளுக்கு இல்லாத உரிமையா? ஆனாலும் அவனுக்கு அவள் கொடுத்த வலி அவளை தடுக்கிறது.

காலையில் தன்னை கண்டதும் ஆழி திட்டியிருந்தால் கூட, ஏனென்று காரணம் கேட்டிருந்தால் கூட ஆண்டாளின் மனம் ஆறுதல் கொண்டிருக்குமோ? தான் செய்த பிழைக்கு அவன் பக்கமிருந்து தண்டனை கிடைத்துவிட்டதென நிம்மதி கொண்டிருப்பாள்.

ஆனால், அவனோ... அப்போதும் நீ வேண்டுமென்றானே! நீ மட்டுமே போதுமென்று வரம் வேண்டுபவனாக கேட்டானே! அப்போதே அவனிடம் தஞ்சம் கொள்ள தவித்தவளின் தவிப்புகளை, இனி அவளால் எப்படி அவனிடம் சொல்லிட முடியும்.

அவள் செய்திருப்பது சிறிய செயலா? எத்தனை பாரதூரமானது. தந்தைக்கு தன் உயிர் உதித்ததை மறைத்திருக்கிறாள். இப்புவியில் சுவாசம் கொண்டு ஜனித்ததை மறைத்திருக்கிறாள்.

உச்சமாய், தன்னையே குழந்தைக்கு ஆபத்தாக நினைத்திருக்கிறாள். தந்தையானவனால் எப்படி தாங்கிக்கொள்ள முடியும். ஏற்கத்தான் முடியுமா?

"கத்தி அழணும் போல இருக்கு ஆண்டாள்."

ஆழியின் உடைந்த குரலில், ஆண்டாள் நொறுங்கிப் போனாள்.

தன்னுடைய அம்மா அழுகிறாள் என்றதும், ஆழிதா ஆழியை விடுத்து ஆண்டாளிடம் வந்து கட்டிக்கொண்டாள்.

சொல்ல வேண்டியவள் சொல்லாமலே தன் மகளை கண்டு கொண்டிருக்கிறான். காலையில் பார்த்த பின்பும் கூட அவள் தன்னிடம் சொல்லவில்லையே எனும் கோபம் நெருப்பாய் அவனைத் தகித்தது.

குழந்தை, கண்ணீர் சுமந்து தவிக்கும் இருவரையும் மாற்றி மாற்றி பார்த்து வைத்தாள்.

தன் மகவு என்று தெரிவதற்கு முன்பே, சிறுமியை அள்ளி அணைக்கத் துடித்தவன். உண்மை அறிந்தும், ஒன்றும் செய்ய முடியாது நிற்கின்றான்.

அவனே இரும்பாகி நின்றான்.

"அங்கிள் பிளீஸ் அம்மாவை திட்டாதீங்க." தன் தாய் அழுவது பிடிக்காது, இருவருக்குமிடையில் என்ன பேச்சென்று புரியாது குழந்தை ஆழியிடம் சொல்ல, அவளது அங்கிள் எனும் அழைப்பு அவனை ஆவியாக்கியது.

ஆழிதாவின், அங்கிள் எனும் விளிப்பில், விலுக்கென கண்ணீரோடு ஆண்டாள் ஆழியை ஏறிட்டுப் பார்க்க, அவன் முகம் காட்டியதெல்லாம் அப்பட்டமான வலி. வெளிப்படையான கோபம். அவளிடம் காட்டிட முடியாத வெறுப்பு.

"இப்போ உனக்கு சந்தோஷமா ஆண்டாள்?"

சில்லு சில்லுயாய் இதயம் நொறுங்கியிருக்க, ஒன்று கூட்டி ஒட்டிட முடியுமா? அது எளிதானதா?

காயம் கொடுத்தவள் அவனின் கேள்வியில் மருந்தாக முடியாது மருகினாள்.

அந்நிலையிலும் அவளது கண்ணீர் அவனை வதைத்தது.

"அழாதடி... தாங்க முடியல." அதட்டியிருந்தான்.

எப்போதும் போல் அவனின் காதல் இன்றும் சிகரமாய்.

"அப்போ இருந்த மனநிலை... பயம்..." ஆண்டாள் திக்கித் திணற,

"இங்க எல்லாமே வெறும் காரணம் மட்டும் தான். நீ விளக்கம் சொல்லி புரிஞ்சிக்கிற அளவுக்கு என் காதல் வீக்காகிடல" என்றான்.

அவனுடைய அன்பின் ஆழம் பெரியதாயிற்றே. இந்த அன்பு பல ஆபத்துகளுக்கு அரணாக இருந்திடுமே!

அன்று புரியாத ஒன்று அவனின் வலியில் இன்று புரிந்ததோ பேதைக்கு.

"இப்பவும் என்னால் உன்னை விட முடியலடி" என்றான்.

"ஆனால் நீ பண்ணதுக்கு உன்னை மன்னிக்கவே கூடாதுன்னு மூளை சொல்வதை, இந்த மனசு ஒத்துக்க மாட்டேங்குது. என்னை உனக்கு அடிமையாக்கிட்டன்னு, நீ என்ன பண்ணாலும் நான் ஏத்துப்பேன் நினைச்சிட்டல?" என்று கோபமாக சீறிய ஆழி,

"என் குழந்தையை என்னை அங்கிள் சொல்ல வச்சிட்டல... உன்னை மன்னிக்கவே மாட்டேன் ஆண்டாள். ஒருமுறை காதலை தள்ளி வச்சிட்டு உன்மேல கோபமா இருந்துக்கிறேன்" என்றான்.

"ஆழி..."

"உன் அப்பா அப்படி இருந்தார்ன்னா... எல்லா போலீசும் குடும்பம் வேண்டாம்னு இருப்பாங்களா? என்னோட லவ்வுல, என்னோட வாழ்ந்த வாழக்கையில நான் அப்படியில்லைன்னு உனக்கு தோணவே இல்லையா?" என்ற ஆழி, "காலையில நீ வேணும் கேட்டேன் தானே?" என்று ஆழி தன் நாடியை நீவிட,

வேண்டாம் சொல்லி விடுவானோ எனும் பதைப்போடு அவனை ஏறிட்டாள்.

"இப்போ எனக்கு என் குழந்தையும் வேணும்" என்றான்.

"உன்னை மாதிரி என்னால் நீ வேணாம் சொல்ல முடியாதுடி" என்ற ஆழி, "வேலையை விடுங்க வரேன்னு கேட்கத் தோணுதா?" எனக் கேட்டான்.

மனைவியை கண்டு கொண்டவனாக.

ஆழியை பார்த்ததும், அவன் நீ வேண்டுமெனக் கேட்டதும், இத்தனை நாள் அவனில்லாமல் இருந்த திடம் நொடியில் காணாமல் போயிருந்தது. அவன் கைச்சிறையில் அடைபட்டுக் கிடக்கும் ஆசை கிளர்ந்தது. ஆனாலும் பயம். அவனது வேலை மீதான பயம் இன்றும் இருக்கத்தான் செய்கிறது. அந்த பயத்தால், அன்று கேட்க முடியாதென நினைத்த, அவனது வேலையை விட சொல்வதை, இப்போது கேட்டுப் பார்க்கலாமென ஆண்டாள் நினைத்தது உண்மை.

அதனை சரியாக ஆழி சொல்லிவிட்டானே!

எல்லா இடத்திலும் பயம் உள்ளது. அதனை நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்பதில் அடங்கி இருக்கிறது வாழ்வின் நிம்மதி. இதனை அவளுக்கு யார் சொல்லிப் புரிய வைப்பது.

அவளுள் ஆழியை விட்டு பிரிந்து வந்ததைவிட, ஆழியிடம் குழந்தை விஷயத்தை மறைக்கின்றோம் எனும் குற்றவுணர்வு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருந்தது.

ஆழியை இன்று நேரில் கண்டதும், இனியும் மறைப்பது தவறென்று, கோவிலுக்கு வந்த கையோடு, அவனது இருப்பிடம் சென்று பிள்ளையை காட்டிட வேண்டுமென்றே எண்ணம் கொண்டிருந்தாள்.

அதற்குள் சூழல் தன்னை இப்படியொரு நிலையில் நிற்க வைத்து வேடிக்கைப் பார்க்குமென்று ஆண்டாள் எதிர்பார்க்கவில்லை.

"அன்னைக்கு கேட்டிருந்தால், உன் காதலுக்காக இந்த வேலையை விட்டாலும் விட்டிருப்பேன். அன்னைக்கு நீ கேட்காததுக்கு காரணமும் எனக்கு புரியுது. இன்னைக்கு நீ கேட்க நினைக்கிறதுக்கான காரணமும் புரியுது. ஆனால் அன்னைக்கு செய்ய முடிந்திருக்கும் ஒன்றை இன்னைக்கு என்னால் செய்ய முடியாது. அப்படி செய்தால், நான் அனுபவிச்ச வலிக்கு அர்த்தமில்லாமல் போயிடும். உன் பயம், என்னால் உனக்கும் குழந்தைக்கும் பாதுகாப்பா இருக்க முடியாதுங்கிற உன்னோட பயம் உண்மையாகிடும். நம்ம காதல் தோத்துப் போயிடும்" என்றான். அத்தனை நேரம் வேதனையில் கசங்கி நின்றவன், நிமிர்ந்து விறைத்து நின்றான்.

ஆழி சொல்வது நியாயம் தானே? விட்டு வந்து இழைத்த பெரும் தவறின் வீரியம் இப்போது புரிகிறதே! என்ன பயன்?

கண்ணீர் மட்டுமே வடிக்க முடிகிறது.

தன்னுடைய ஒற்றை அணைப்பில் அவனது ரணங்கள் யாவையும் போக்கிட முடியுமென்பது உணராது அழுகையில் கரைந்தாள். வலிக்குமென்று தெரிந்தும் வலி கொடுத்த மடத்தனம் எண்ணி அழுகிறாள்.

"மம்மி அழாதீங்க. இனி நான் ஸ்ட்ரேஞ்சர்ஸ் கிட்ட பேச மாட்டேன்..."

ஆழியின் கோபமான வார்த்தைகள் குழந்தைக்கு அவன் தன் அன்னையை திட்டுவது போலிருக்க, தான் அவனிடம் பேசியதால் தானோ என நினைத்து ஆழிதா அவ்வாறு கூறிட,

"நான் ஸ்ட்ரேஞ்சரா ஆண்டாள்?" பற்களுக்கு இடையில் வார்த்தையை கடித்துத் துப்பினான். குழந்தையின் மிரட்சியில், தன்னை நிலைப்படுத்திய ஆழி,

"இதுக்கு நீ என்னை அன்னைக்கே கொன்னுப்போட்டு போயிருக்கலாம்டி" என்று ஆயிரமாயிர வலியோடு சொல்லி அங்கிருந்து விடுவிடுவென சென்றிருந்தான்.

அதற்கு மேல் அவள் பாவம் செய்தவளாக குமுறி நிற்பதை காணும் திடம் அவனிடமில்லை. மீண்டும் மீண்டும் அவனது ரத்தமே அவனை மிரண்டு பார்க்கும் கொடுமையை சகித்துக்கொள்ளும் பொறுமை அவனிடமில்லை.

ஒரு நொடி போதும். நான் தான் உன் அப்பா என்று சொல்லிட. ஆனால் அது சரியாக இருக்காதே.

சொல்ல வேண்டியவள் சொல்ல வேண்டும்.

தாய் காட்டும் தந்தையின் அறிமுகத்திற்கு ஈடுண்டோ?

அழைத்து விட்டான். இந்நிலையிலும் தனக்கு நீங்கள் இருவரும் வேண்டுமென்று மறைவின்றி நேரடியாக சொல்லிவிட்டான். இருக்கும் கோபத்தையும் அவன் மறைக்கவில்லை. அவளிடம் ஒளிக்க அவனிடம் எதுவுமில்லை. அவளிடம் அவன் எப்போதும் திறந்த புத்தகம் தான். கோபத்திலும் தன் வாழ்வில் அவளின் முக்கியத்தை, அவளின் இருப்பை காட்டிவிட்டான்.

இனி அவள் தான் முடிவெடுக்க வேண்டும்.


அவள் காரணமாக்கிச் சென்ற பயம் நீங்கி, அவன் தான் பாதுகாப்பு எனும் நம்பிக்கை சுமந்து அவளாக வர வேண்டும்.

1000037451.jpg


அத்தியாயம் 9
 
Last edited:

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
ஆழி பேசுன ஒவ்வொன்னும் சரியான பாயின்ட்ஸ் ❤️

பாவம் ஆழி அனுபவிச்ச அனுபவிக்கிற இந்த வலிகளும் வேதனைகளும் எத்தனை வருஷங்கள் போனாலும் கடக்க முடியாது 😢

இன்னைக்கு யோசிக்கிற ஆண்டாள் அன்னைக்கே அவன்கிட்ட மனசுவிட்டு பேசி தன்னோட பயத்தை புரிய வெச்சிருந்தா ஆழி அவளுக்காக அவ கேக்காமயே நேசிச்ச வேலையை விட்டுருப்பான். ஆனா காலம் கடந்திடுச்சே 😢
 
  • Love
Reactions: MK16

MK16

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 29, 2023
30
17
18
Tamil nadu
ஆழி பேசுன ஒவ்வொன்னும் சரியான பாயின்ட்ஸ் ❤️

பாவம் ஆழி அனுபவிச்ச அனுபவிக்கிற இந்த வலிகளும் வேதனைகளும் எத்தனை வருஷங்கள் போனாலும் கடக்க முடியாது 😢

இன்னைக்கு யோசிக்கிற ஆண்டாள் அன்னைக்கே அவன்கிட்ட மனசுவிட்டு பேசி தன்னோட பயத்தை புரிய வெச்சிருந்தா ஆழி அவளுக்காக அவ கேக்காமயே நேசிச்ச வேலையை விட்டுருப்பான். ஆனா காலம் கடந்திடுச்சே 😢
Thank you kaa 🩷 🩷