• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அ.. ஆ.. - 04

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,173
602
113
Tirupur

நிழல் - 4



“வினோத்” என்ற மைதிலியின் அதட்டலைப் பொருட்படுத்தவில்லை அவன். ஆனால் ரஞ்சனியின் கன்னத்தில் அறைவதை நிறுத்தவே இல்லை. அங்கிருந்த அனைவரும் அதிர்ந்து தடுப்பதற்குள் மீண்டும் ஒருமுறை அறைந்திருந்தான்.



“நீயெல்லாம் என்ன மனுச ஜென்மம், உங்க பணத்தாசைக்கு தான் ஒரு அழகான குருவிக்கூடு மாதிரி இருந்த குடும்பத்தை பிரிச்சுட்டீங்கல்ல, இன்னுமா உங்களுக்கு அந்த பேராச போகல, அம்மாவையும் பொண்ணையும் பிரிச்சிடலாம்னு சொல்ற, உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா, உன் பொண்ணை யாராச்சும் இப்படி கேட்டா உடனே நீ தூக்கி கொடுத்துடுவியா, கொடுத்தாலும் கொடுப்ப, பணத்துக்காக செய்ற ஆள் தானே நீ. உனக்கு ஒரு நியாயம், மத்தவங்களுக்கு ஒரு நியாயமா.." எனக் கத்தியவன், "இந்த பணம் இப்ப வந்தது, இவங்களும்" என மைதிலியைக் காட்டி "இப்ப வந்தவங்க தான், பழசை மறந்துட்டு பேசாத," என்றவன் மீண்டும் "வினோத்" என்ற மைதிலியின் அதட்டலில் அவளிடம் வந்தவன், "சொல்லுங்க" என்றான் ஆத்திரமாக.



"பழசை மறக்கக்கூடாதுன்னு சொன்ன இல்லை, அது உனக்கும் பொருந்தும்ன்னு நினைக்கிறேன், உன்னோட இந்த லைப்.." என்று முடிக்கும் முன்பே, “நீங்க போட்ட பிச்சைன்னு சொல்றீங்களா அக்கா" என நிதானமாகக் கேட்டபடி வந்து நின்றாள் நித்யா.



“அது உண்மை இல்லைன்னு சொல்றியா..” என்றாள் மைதிலி நக்கலாக.



“இல்லை.. நிச்சயமா இல்லை. எங்க வாழ்க்கை என்ன அவ்வளவு மோசமாவா போயிடுச்சு. இல்லைதானே. அதை நீங்க யாரும் காப்பாத்தி கொடுக்கல, எப்படி வாழனும், எப்படி இருக்கனும்னு நாங்க ஏற்கனவே ப்ளான் செஞ்சி வச்சிருந்தோம், இவங்க” என மாமியாரைக் காட்டி, “சம்மதிச்சிருந்தாலும், இல்லைன்னாலும் எங்க கல்யாணம் நடந்திருக்கும், கஷ்டப்பட்டிருந்தாலும் நாங்க நல்லா வாழ்ந்திருப்போம்,” என்றவள் “பணத்துக்காக நானோ, என் புருஷனோ யாரையும் விட்டுக் கொடுத்துருக்க மாட்டோம். ஏன்னா பணம் மட்டுமே வாழ்க்கையில்லைன்னு எங்களுக்கு நல்லா புரிஞ்சிருந்தது..” என நிதானமாக வார்த்தைகளைக் கொடுத்தாள் நித்யா.



“போதும் நித்யா.. உங்களைப் பத்தி மட்டும் பேசுங்க, அடுத்தவங்களை பத்தி பேச உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது புரியுதா.?” எனக் கத்திய மைதிலியை கொஞ்சமும் பொருட்படுத்தாமல், “அதே வார்த்தைகள் உங்களுக்கும் பொருந்தும்னு நினைக்கிறேன் அக்கா.. இனி எங்களைப் பத்தி இந்த வீட்டுல யாரும் பேசக்கூடாது. அப்படி பேசினா நாங்க இங்க இருக்கமாட்டோம்.” என அறிவிப்பாக சொன்னவள், கணவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு அறைக்குள் சென்றுவிட, வினோத்தோ அங்கு அமைதியாக அமர்ந்திருந்த தாயை ‘இதெல்லாம் உங்களுக்கு பத்தாது’ எனும் விதமாக பார்த்துவிட்டு வெளியில் சென்றுவிட்டான்.



“பாருங்க அத்த, இந்த நித்யாவை. எவ்வளவு திமிர் பாருங்க. இன்னும் அவளைப் பத்தியே பேசிட்டு இருக்கா.. அவ என்னை மட்டும் பேசல, உங்களையும் உங்க மகனையும் தான் பேசுறா.. நீங்க அமைதியா இருக்கீங்க. அப்போ அவ பேசுறது சரின்னு சொல்ல வரீங்களா.. எனக்கு குழந்தை இல்லைன்னு குத்தி காட்டுறீங்களா.?” என மீண்டும் ஒரு பிரச்சினையை ஆரம்பிக்க, விழி பிதுங்கிப் போனது அனைவருக்கும்.



பிரச்சினை அதோடு நின்றுவிடவில்லை. ரஞ்சனியின் கணவன் சங்கர் வர அவனிடமும் பஞ்சாயத்து செல்ல, அருகில் இருந்த ரவியைப் பார்த்தவன், நேராக அவனிடம் சென்று “மச்சான்.. நீங்க கேட்டீங்கன்னு தான் இங்க வந்தோம், ஆனா அது தப்புன்னு இப்போ புரியுது. யாரும் இருக்குற இடத்துல இருந்தா தான் மரியாதைன்னு நல்லா புரிய வச்சிருக்காங்க..” என்றவர் மனைவியைப் பார்க்க, அந்தப் பார்வையில் பயம் பிடித்துக் கொண்டது ரஞ்சனிக்கு.



ரவி வந்து இங்கு அழைக்கும் போதே பலவாறு எச்சரித்து தான் சரியென்றார். அப்படியிருக்க மீண்டும் பிரச்சினையைக் கிளப்பியிருக்கிறாள் என்றால் அவரிடம் பயம் போய்விட்டது என்றுதானே அர்த்தம்.



“மாமா ப்ளீஸ்.. நான் செஞ்சது தப்புதான். அக்காவை அடிச்சிருக்ககூடாது தான், ஆனா அவங்க பேசினதை நீங்க கேட்டிருந்தா கொன்னே போட்டுருப்பீங்க. எனக்கு ரொம்ப கோவம் வந்துடுச்சு மாமா, அதுதான் கை ஓங்கிட்டேன். இனி கண்டிப்பா இப்படி நடக்காது. மன்னிச்சுக்கோங்க மாமா..” என வினோத் இறங்கி வந்து பேச,



“வினோத்.. நான் எப்போ நீ செஞ்சதை தப்புன்னு சொன்னேன். நீ அவளைக் கொன்னிருந்தா கூட நான் ஏன்னு கேட்டிருக்க மாட்டேன். ஆனா இங்க நான் உன்னை தப்பு சொல்ல வரல. வீட்டுக்கு ஒரே பொண்ணுனு எல்லாரும் செல்லம் கொடுத்தததுனாலத்தான் இன்னைக்கு அவ இஷ்டத்துக்கு எல்லாம் பண்றா.. இப்போ இவ எங்க வீட்டுல இருந்திருந்தா இந்தப் பிரச்சினை வந்துருக்குமா சொல்லு, ஏற்கனவே செஞ்ச பாவத்தை எங்க போய் தொலைக்கன்னு தெரியாம அலையும் போது மேலும், மேலும் பாவத்தை இழுத்து வச்சா என்ன செய்ய..” என வெறுமையாகப் பேசியவர் ரஞ்சனியிடம் வந்தார்.



“இப்போ நாம ஒரு முடிவுக்கு வரலாம். தலைக்கு மீறின பிள்ளைங்கள வச்சிட்டு இப்படி பேசுற நிலைமையை நீயே கொண்டுவந்துட்ட, இத்தனை வயசுக்கு அப்புறம் இதைப்பத்தி பேசுறது எனக்கே அசிங்கமாதான் இருக்கு, ஆனா இப்போ பேச வேண்டிய கட்டாயத்தை நீயே உருவாக்கிட்ட. நான் உனக்கு ரெண்டு ஆப்சன் தரேன் நீயே முடிவு பண்ணு. ஒன்னு நீ எங்கூட வந்து என் வீட்டுல இருக்கனும். இங்க வரவேக்கூடாது. அப்படி உன்னைப் பார்க்கனும்னா அவங்க அங்க வந்து பார்க்கட்டும். ரெண்டு. இல்ல நான் வரமாட்டேன், எனக்கு இப்படித்தான் வாழனும்னு உனக்குத் தோனினா ஒன்னும் பிரச்சினை இல்லை. உனக்கு விவாகரத்து கொடுத்துடுறேன், நீ உன் அம்மா, அண்ணிக்கு இன்னும் அதிகமா காவடி தூக்கு என்னனு கேட்க யாருமே இல்லை. பிள்ளைங்கள நான் கூட்டிட்டு போயிக்குறேன். எதை நீ தேர்ந்தெடுத்தாலும் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்ல. விடியறதுக்குள்ள சீக்கிரமா ஒரு முடிவு எடு. நானும் என் பொழப்ப பார்க்கனும்ல..” என்ற சங்கர் வெளியில் சென்றுவிட, வீடே நிசப்தத்தில் குளித்தது போல அமைதியாகிப் போனது.



இதில் யார் என்ன பேசிட முடியும். அப்படியே அமர்ந்திருக்க சரஸ்வதி தான், “இதுவரைக்கும் என் பொண்ணு வாழ்க்கைல ஒரு பிரச்சினை கூட வந்தது இல்ல, ஆனா இன்னைக்கு உன்னால என் பொண்ணு வாழ்க்கை கேள்விக்குறியாகிப் போச்சு. இத்தன நாள் நீ அமைதியா இருக்கவும், ரொம்ப நல்லா மாதிரின்னு நினைச்சிட்டேன், ஆனா இப்போதானே தெரிது உன்னோட திட்டமெல்லாம், இது என் பொண்ணோட வீடு. அவ இங்க இருந்து போகமாட்டா, போகனும்னா நீங்க போங்க..” என நித்யாவைப் பார்த்து சொல்ல,



வினோத்திற்கும், நித்யாவிற்கும் பெரும் அவமானமாகிப் போய்விட, மைதிலியோ இருவரையும் இளக்காரமாகப் பார்த்தாள். அங்கு நிற்கவேப் பிடிக்காமல் இருவரும் அறைக்குள் வந்துவிட்டனர். ரவிதான் “ம்மா என்ன பேசுறீங்க, எல்லாரும் முக்கியம் தான் நமக்கு, அதுக்காக ஒருத்தரை வச்சிட்டு இன்னொருத்தரை வீட்ட விட்டு போன்னு சொல்வீங்களா.. என்ன பேச்சு இதெல்லாம். வயசான இப்படியெல்லாம் பேச வருமா..? இந்த பிரச்சினை இப்படியே இருக்கட்டும், இப்போ மாப்பிள்ளை சொல்லிட்டு போனது உங்களுக்கு புரிஞ்சதா இல்லையா.? அதுக்கு ஒரு முடிவு எடுக்கலாம்.” என்றவன், ரஞ்சனியிடம் வந்து “நீ சொல்லு ரஞ்சி. உனக்கு என்ன முடிவு எடுக்கனும்னு தோனுதோ சொல்லு பண்ணிக்கலாம், உனக்கு நான் இருக்கேன்..” என ரவி கேட்க,



அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த ரஞ்சனி “நாங்க எங்க வீட்டுக்கு போறோம் அண்ணா, அவர் என்ன சொல்றாரோ அதுதான் என் முடிவு” என்று வாயைத் திறந்தாள். மைதிலியும், சரஸ்வதியும் தாம்தூமென்று குதித்தாலும், ரஞ்சனியின் முடிவை மாற்ற முடியவில்லை, சங்கர் வரவும் மனைவியின் முடிவைத் தெரிந்து கொண்டவர் அப்போதே குடும்பத்தோடு கிளம்பிவிட்டார்.



இங்கு அறைக்குள் வந்த நித்யாவிற்கோ கோபம், கோபம், கண்மண் தெரியாத அளவிற்கு கோபம். அங்கு நின்றால் நிச்சயம் வாய்ப்பேச்சு அதிகமாகும் என்பதால்தான் அறைக்கு வந்தாள். ஆனாலும் கோபம் குறையவில்லை. கணவனிடம் “நான் கொஞ்ச நாள் எங்கம்மா வீட்டுல இருந்துட்டு வரேன். இங்கையே இருந்தா பிரச்சினை பெருசாகும். நான் சும்மா இருந்தாலும், அவங்க சும்மா இருக்க மாட்டாங்க, உங்களுக்கும் நிம்மதி இருக்காது. நான் சொல்றது உங்களுக்குப் புரியுதா.. கொஞ்ச நாள்தான்..” எனவும், வினோத்திற்கும் அதே எண்ணம் தான் என்பதால் சரியென்று விட்டான்.



“நீங்க கிளம்புங்க, நான் போய் சொல்லிட்டு வரேன். குழந்தைங்களை ரெடி பண்ணு..” என்றவன் வெளியில் வர, சரஸ்வதி மகனிடம் கத்திக் கொண்டிருந்தார்.



“வர வர என் பேச்சுக்கு கொஞ்சமும் மரியாதை இல்லாம போச்சு, பிறந்ததுல இருந்து ஒரு வார்த்தை என் பொண்ணை நான் பேசினது இல்ல, இன்னைக்கு அவன் அடிக்கிறான், அவ புருஷன் விட்டுட்டு போறேன்னு சொள்றான். இதெல்லாம் பார்த்துட்டு நீ சும்மா இருக்க..” எனவும்,



“கொஞ்ச நேரம் நீங்க சும்மா இருங்கம்மா.. ரஞ்சி அங்க இருக்கட்டும், கொஞ்ச நாள் கழிச்சு, மாமா கோபம் குறையவும் கூப்பிட்டுக்கலாம்..” என்ற இருவருக்கும் முன்னே வந்து நின்றான் வினோத்.



இருவரும் அவனை கேள்வியாகப் பார்க்க, “நித்யா கொஞ்ச நாள் அவங்க வீட்டுல போய் இருந்துட்டு வரட்டும், நான் கொண்டு போய் விட்டுட்டு வரேன்..” என சொல்லிவிட்டு நகர,



“டேய் வினோத்… என்ன நினைச்சிட்டு இதெல்லாம் பண்ணிட்டு இருக்கீங்க, அவங்கவங்க இஷ்டத்துக்கு பண்ண இதென்ன வீடா இல்ல சத்திரமா,” எனக் கத்த,



“நான் போகல.. அவங்க மட்டும் தான்.. போகட்டும். இங்க இருந்தா இன்னும் பிரச்சினை..” எனவும், “ஸ்கூல் இருக்கேடா, இப்போ போய் ஏன்..” என ரவியும் கேட்க,



“அங்க இருந்து வரட்டும், அதுவும் பக்கம் தானே..” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே இரு பிள்ளைகளோடு நித்யா வெளியில் வர,



“வீட்டுல ஆளாளுக்கு ஒரு நாட்டாமை பண்றாங்க, என்னமோ நடக்கட்டும்..” என்ற சரஸ்வதியிடம் “அத்தை இவ போய்ட்டா வேலையெல்லாம் யார் செய்வா..? டாக்டர் என்ன ஒரு வேலையும் செய்யக்கூடாதுன்னு சொல்லிருக்காங்க..” எனக் காதைக் கடிக்க, அது அங்கிருந்த அனைவருக்கும் நன்றாகக் கேட்டது.



அதைக் கேட்ட நித்யாவிற்கு கோபம் பலமடங்கு பெருக, வினோத் கண்ணைக் காட்டியதும் அமைதியாகிவிட்டாள். சூழ்நிலையை சரிசெய்ய ரவிதான் “அதெல்லாம் ஆள் வச்சுக்கலாம், நீ கொஞ்சம் சும்மா இரு..” என மனைவியை அடக்கி தம்பி குடும்பத்தை அனுப்பி வைத்தான்.



நாட்கள் அப்படியே கழிய, யாரும் இல்லா வீடு மைதிலியை மெல்ல மெல்ல பயம் காட்ட ஆரம்பித்தது. அதன் பொருட்டு அவளேத் தன்னை ஒரு சுய அலசலுக்குள் சுருட்டிக் கொண்டாள். அதன் விளைவாக தன்னால் நடந்த அனைத்தும் மாற வேண்டும் என நினைத்து ரஞ்சனியிடமும், நித்யாவிடமும் பேசி மீண்டும் வீட்டுக்கு அழைத்து வந்தாள்.



குழந்தைகளின் வரவே அவளைச் சற்று மாற்றியிருந்தது. சரஸ்வதியும், ரஞ்சனியும் நேரத்திற்கு ஏற்றாற்போல் மைதிலியிடம் நடந்து கொண்டாலும், நித்யா உண்மையாகவே நடந்து கொண்டாள். அதுவே மைதிலிக்கு பெரும் குற்ற உணர்ச்சியைக் கொடுத்தது.



கடந்து போனவற்றை இருவரும் யோசித்துக் கொண்டிருக்க, இங்கு விஜயாவின் வீட்டிற்கு வந்திருந்தாள் அகானா. வந்ததில் இருந்தே பெரும் யோசனையில் இருந்தாள் அகனா. அவளாகச் சொல்வாள் என எதிர்பார்க்க, வாயையேத் திறக்கவில்லை.



பொறுத்துப் பார்த்த விஜயா “அம்மு என்ன யோசனை உனக்கு…” என்று ஆரம்பித்தார்.



“ஒன்னும் இல்ல ஆன்டி.. அம்மாவுக்கு டாக்டரேப் பிடிக்காது, அதையே என்னைப் படிக்கச் சொல்வீங்களா? பிடிக்காதுன்னு தெரிஞ்சும் கேட்க சொல்றீங்களா.? அப்புறம் ரொம்ப வருத்தப்படுவாங்க ஆன்டி.. அவங்களை கஷ்டப்படுத்த என்னால எப்பவும் முடியாது..” என்றாள் சின்னவள் வருத்தமாக.



“அம்மு நீ சொல்றது சரிதான். அதுக்காக எல்லா வகையிலயும் காம்ப்ரமைஸ் ஆகனும்னு இல்லடா.. உனக்குப் பிடிச்சதை சொன்னா அம்மா கேட்டுப்பா.. பிடிக்காம எதையும் செய்ய முடியாது. அதுல கடமை தான் இருக்கும். ஒரு நிறைவு இருக்காது. ஆனா புடிச்சதை செய்யும் போது இதெல்லாமே இருக்கும்.” என விஜயா சொல்ல,



“ம்ம் புரியுது ஆன்டி.. ஆனா..” என இழுக்க



“என்ன ஆனா.. ஆவன்னான்னு சொல்லிட்டு, உனக்காக அம்மாக்கிட்ட நான் பேசுறேன். என்ன நீ ஒரு கலெக்டர் ஆகனும்னு தானே அவளோட லட்சியம். நிச்சயம் ஆகிடலாம். நீ ஆகிடுவ.. அதுக்காக உனக்குப் பிடிச்ச மெடிசினை வேண்டாம்னு சொல்றது எப்படி சரியா வரும். எப்படியும் ஒரு டிகிரி வேனும். அந்த டிகிரி MBBS ஆ இருந்துட்டுப் போகுது. என்ன ரெண்டு வருஷம் லேட்டாகும். அது பிரச்சினை இல்லை பார்த்துக்கலாம். நீ படிக்கிற வழியைப்பாரு, நான் பேசுறேன் அம்மாக்கிட்ட..” என்ற விஜயாவிடம் தலையசைத்தாலும், அம்மா என்ன சொல்லுவார் என்பதிலேயே எண்ணம் ஓடியது அகானாவிற்கு.



மஞ்சரியிடம் விஜயா என்ன பேசினாரோ, யோசிக்காமலே சரியென்று விட்டாள். அடுத்து எங்கேயும் சுணக்கம் இல்லை, கொஞ்சம் தாமதித்தாலும் மஞ்சரி மனசு மாறிவிட வாய்ப்பிருக்கிறது எனத் தெரிந்த விஜயா, தன் கணவரின் மூலம் பாண்டிச்சேரி மெடிக்கல் காலேஜில் அகானாவிற்கு இடம் வாங்கிக் கொடுத்தார். அடுத்து அனைத்தும் ஏறுமுகம் தான், அகானாவிற்குப் படிக்க வேண்டும் எனச் சொல்லத் தேவையே இருக்கவில்லை. ஒவ்வொரு செமஸ்டரிலும் டாப்பராக வந்து கொண்டிருந்தாள்.



அன்றும் அவளது ரிசல்டைப் பார்த்துவிட்டு தோழிகள் அனைவரும் ட்ரீட் கேட்க, மஞ்சரியும் சரியென்றிருக்க, பாண்டிச்சேரியின் மிகப் பிரபலமான பிராவிடன்ஸ் மால்க்கு அழைத்து வந்திருந்தாள். இவர்களது சேட்டைகளைப் பார்த்து எல்லோரும் தலையில் அடித்துக் கொண்டு நகர, ஒருவன் மட்டும் இவளையே முறைத்தபடி நின்றிருந்தான். அவன் ஆகன்.!
 

CRVS2797

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 11, 2023
117
19
18
Ullagaram
அ.. ஆ...
எழுத்தாளர்: வதனி .S
(அத்தியாயம் - 4)


ஆக மொத்தம், குடும்பம் மொத்தமே செல்பீஷா இருக்கிறாங்க. அது சரி, எதுக்கு டாக்டருக்கும் படிக்கணும், கலெக்டருக்கும் படிக்கணும்..?
ஏதாவது ஒண்ணு ஸ்டெடியா செய்யணும் இல்லையா..?


அட .. அதுக்குள்ள ஆகன் வந்துட்டானா...? வந்தவன் எதுக்கு மஞ்சரியை முறைக்கணும்..? அயித்தை மகன், முறை மாப்பிள்ளை அகானாவை முறைச்சலாவது இலாபம் இருக்குது. அத்தையை எதுக்காக முநைக்கணும்..?


😀😀😀
CRVS (or) CRVS 2797