• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அ.. ஆ.. - 39

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,343
557
113
Tirupur
அகானா - 39

“போதும் நித்யா..” என்ற ரஞ்சனியின் கத்த,

“நானும் அதுதான் சொல்றேன் அண்ணி.. இத்தோட போதும் நிறுத்திக்கோங்க.. உங்க புள்ளைங்க வாழ்க்கையை பாருங்கன்னு சொல்றேன். வாழ்ந்து முடிச்சவங்களுக்காக வாழ போறவங்க வாழ்க்கையை நாசம் பண்ணாதீங்கன்னு சொல்றேன்..” என்ற நித்யா வினோத்தைப் பார்த்து “அண்ணனுக்கு கால் பண்ணி வரச் சொல்லுங்க வினோ..” என்றாள் கோபம் குறையாமல்.

“நீ யாருக்காக இப்படி ஆடுறன்னு எங்களுக்கு தெரியாதுன்னு நினைச்சிட்டு இருக்கியா? எங்களுக்கு ஆகாதவ கூட உனக்கு என்ன பழக்க வழக்கம்.. அப்படி பார்த்தா உன் புருசனும் தான் அன்னைக்கு எங்க கூட இருந்தான். அதை மறந்துடாத..” என்றார் சரஸ்வதி.

தன்னை மீறி அனைத்தும் நடப்பதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அந்த ஆத்திரத்தை இப்படி காட்டிக் கொண்டிருந்தார்.

முக்கியமாக மைதிலி வந்து என்ன ஆட்டம் போடுவாளோ என்று நினைக்கும் போதே அவருக்கு அடி வயிறு கலங்கியது.

“என்ன பேசுறீங்க அத்த.. அவர் தப்பு செய்யலன்னு நான் எப்போ சொன்னேன்.. ஆனா செஞ்ச தப்புக்கு பிராயச்சித்தம் பண்ணலாம்ல. அதைத்தான் இப்போ பண்ணிட்டு இருக்கோம்” என்ற நித்யாவின் இந்த கோபம் அங்கு எல்லோருக்கும் புதிது.

சாது மிரண்டால் காடு கொள்ளாது என்று சொல்வதைப்போல, இத்தனை நாள் அமைதியாக இருந்த நித்யா பொங்க ஆரம்பித்து விட்டாள்.

“ஏய்.” என ஏதோ பேச வந்த சரஸ்வதியை,

“ம்மா..” என அதட்டிய வினோத் “இங்க பார் ரஞ்சி.. இன்னும் நீ வீம்பு பண்ணிட்டு இருந்தா இப்போ மாமா போன மாதிரி, மகி போன மாதிரி, அப்புறம் கண்னாவும் போய்டுவான் பார்த்துக்கோ. எல்லாரையும் அனுப்பிட்டு தனியா இருந்து இந்த வீட்ட ஆளப் போறியா? இல்ல இன்னுமே அவங்களுக்கு ஜால்ரா தட்டிட்டு உன் வாழ்க்கையை பாழாக்க போறியா? அதுதான் உனக்கு வேணுமான்னு நீயே முடிவு பண்ணிக்கோ..” என்றவன், “நீ சம்மதிச்சாலும் சம்மதிக்கலன்னாலும் மாமா மகியோட கல்யாணத்தை நடத்தி முடிப்பார். நான் மாமா கூட எப்பவும் இருப்பேன். இனி என்ன முடிவெடுக்கனுமோ எடுத்துக்கோ..” என்று முடிக்க, ரஞ்சனிக்கு இது அதிர்ச்சியாக இருந்தது.

காலையில் ஆகன் நடந்து கொண்டதை நினைத்துப் பார்த்தார். இத்தனை நாளில் எவ்வளவோ பிரச்சினைகள் வந்த போதும், மகன் இந்தளவிற்கு கோபத்தைக் காட்டியதில்லை.

அவன் காட்டிய கோபம், கணவரின் ஆத்திரம், மகளின் உதாசீனம் என எல்லாம் அவரை வேறெதுவும் யோசிக்க விடவில்லை.

இனியும் பிடிவாதம் பிடித்தால் இந்த வயதில் வாழாவெட்டியாக போய் தாய் வீட்டில்தான் உட்கார வேண்டும்.

அது எவ்வளவு பெரிய அசிங்கம்.

அதன் பின் தன் நிலை. தன்னை யார் மதிப்பார்கள். தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் மைதிலி கூட அப்போது உடன் இருப்பாரா என்று தெரியாது.

அதனால் இந்த கல்யாணத்திற்கு சம்மதிப்பதே சரியானது என முடிவு செய்து விட்டார்.

“நடக்குறது நடக்கட்டும் வினோ.. அண்ணாக்கிட்டயும் அண்ணிக்கிட்டயும் உங்க மாமாவையே பேச சொல்லு. இந்த ஃபங்க்சன் முடியுற வரை நான் அவங்ககிட்ட இருந்து கொஞ்சம் தள்ளியே இருந்துக்குறேன்..” என்று ஒருவழியாக மனம் இறங்கினார் ரஞ்சனி.

“ஏய் ரஞ்சி என்னடி சொல்ற.?” என சரஸ்வதி கத்த,

“ம்மா நீங்க கொஞ்சம் நேரம் சும்மா இருங்க. அவளே இப்போதான் இறங்கி வந்துருக்கா, அவளை மறுபடியும் மலை ஏத்திடாதீங்க..” என்றான் வினோ.

“விடு சரசு. இதுல நாம பேச ஒன்னும் இல்ல. மாப்பிள்ளையோட முடிவுதான் எல்லாம். அவர் புள்ளைங்களுக்கு அவர் சரியா செய்வார். நீ எதுலயும் மூக்கை நுழைக்காத..” என்று மனைவியை அடக்கினார் அழகர்.

அடுத்தடுத்து வேலைகள் வேகமாக நடந்தது. சங்கரே ரவிக்கு அழைத்து நடந்ததை சொல்ல, இவர்கள் பயந்ததைப் போல அவருக்கு வருத்தமெல்லாம் இல்லை. ஆரியனை அவருக்குப் பிடித்துவிட்டது.

“ஓ.. அப்படியா? சரி சரி நீங்க பாருங்க மாமா. நான் முடிஞ்சளவுக்கு சீக்கிரம் வர பார்க்குறேன். நான் இல்லைன்னா என்ன? வினோ இருக்கான்ல பார்த்துப்பான். இந்த சம்மந்தத்துல எனக்கு எந்த வருத்தமும் இல்ல. சொல்லப் போனா எனக்கு ரொம்ப விருப்பம். வேற எதையும் யோசிக்காதீங்க..” என சந்தோசமாகவே கூற, சங்கருக்கு இதை எந்த வகையில் சேர்க்க எனத் தெரியவில்லை.

குடும்ப ஆட்கள் அனைவருமே அங்கிருக்க, வெளி வேலைகளை வினோத்தும், சங்கரும் பார்த்துக்கொள்ள, வீட்டு வேலைகளை நித்யாவும் ரஞ்சனியும் பார்த்துக்கொண்டனர்.

இடையில் ஆகனுக்கும் அழைத்து செய்தியை கூறியிருந்தனர்.

“பொண்ணை அங்க வச்சிக்கிட்டு இங்க எந்த பொண்ணை பார்க்க வராங்க..” என சரஸ்வதிதான் முணுமுணுத்துக் கொண்டே இருந்தார். ஆனால் அவர் பேச்சை பெரிதாக எடுத்துக் கொள்ளத்தான் அங்கு ஆளில்லை.

இங்கு மருத்துவமனையில் தங்கையின் கையைப் பிடித்தவன், காலையில் வீட்டில் நடந்த எதையும் சொல்லாமல் “மகி அம்மா ஓகே ஆகிட்டாங்கன்னு சொல்ல முடியாது. ஆனா சரியாகிடுவாங்க. நீ இதையெல்லாம் யோசிக்காம மேரேஜ் பத்தி மட்டும் யோசி. உனக்கு மேரேஜ் எப்படி வைக்கனும்னு எதும் ஐடியா இருக்கா சொல்லு அது போலவே செய்யலாம்..” என கேட்டுக் கொண்டிருக்கும் போதே ஆர்யன் வந்துவிட்டான்.

“வா ஆரி..” என்ற ஆகன்.. “எல்லாம் ஓக்கே.. மென்டல் ஹெல்த் பார்த்துக்கோ. தூங்கினா போதும்.” என்றான் தங்கையைப் பற்றி..

“ஹான் ஓக்கே சீனியர்.. அப்போ நாங்க கிளம்பறோம். மகியயை விட்டுட்டு நாங்க உங்க வீட்டுக்கு கிளம்பனும். அதுக்குத்தான் டைம் கரெக்டா இருக்கும்..” என்ற ஆரியன் எழுந்துகொள்ள, மகியும் எழுந்துவிட்டாள்.

“ஓக்கே ஆரி.. நானும் அப்படியே கிளம்பறதுதான்..” என்று ஆரியனிடம் கூறிவிட்டு, தங்கையைப் பார்த்து “டேக் கேர் பாப்பா.. ஒழுங்கா சப்பிடு… சரியா தூங்கு..” என அனுப்பி வைத்தான்.

வீடு வரும் வரைக்குமே இருவரிடமும் எந்த பேச்சும் இல்லை. மகி பேசலாம் என நினைத்தாலும், ஆரியனின் முகத்தில் இருந்த இறுக்கம் அவளைப் பேச விடவில்லை.

ஆரியனோ அவள் பக்கமே திரும்பவில்லை. மகிக்கு அவன் கோபம் புரியாமல் இல்லை. அதனால் அவன் கோபம் தீரும் வரைக்கும், தானும் அமைதியாகவே இருந்து விடவேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.

அன்றைய நாள் முடியவே முடியாதா என்பது போல் நீண்டு கொண்டே போனது.

ஆர்யன் தன் பெற்றொரோடு ஆகனின் வீட்டுக்கு வந்தான். அவர்கள் யார் முகத்திலும் அந்த விழாவிற்கான சிறு புன்னகை கூட இல்லை.

ரஞ்சனி ‘வாங்க’ என்று அழைத்ததோடு சரி, கிச்சனுக்குள் சென்று நுழைந்து கொள்ள, நித்யா தான் அனைத்தையும் எடுத்துக்கட்டி செய்தார்.

“எங்க பையன் செஞ்சதை சரின்னு சொல்லி வாதாட முடியாது. முடிஞ்சதை விட்டுடலாம். அடுத்து என்னனு பார்க்கலாம்.” என முருகானந்தம் ஆரம்பிக்க, விஜயா வாயைத் திறக்கவில்லை. அந்த வீட்டையும், அங்குள்ள ஆட்களையும் கவனித்துக் கொண்டிருந்தார்.

“ரொம்ப சாதாரணமா சொல்றீங்க.. எங்க பொண்ணு வாழ்க்கை உங்களுக்கு அவ்ளோ ஈசியா போச்சா.. ஏதோ போனா போகுதுனு அமைதியா இருக்கோம்..” என சரஸ்வதி பேச, பட்டென ஆரியன் இருக்கையில் இருந்து எழுந்துவிட,

“ம்ச்… ம்மா நீங்க இப்போ சும்மா இருக்கீங்களா இல்லையா?” என வினோத் கத்த,

“ஆரி அவங்களை பத்தி உனக்குத் தெரியும்ல.. இந்த கல்யாணத்தை நிறுத்த காரணம் தேடிட்டு இருக்காங்க. அதுக்கு நீ வாய்ப்பு கொடுக்க போறியா?” என ஆகன் சமாதானம் செய்ய, அமைதியாக அமர்ந்துவிட்டான்.

“அது அவங்க அப்படித்தான். காரணம் உங்களுக்கே தெரியும். பெருசு பண்ணாதீங்க..” என நித்யா விஜயாவை சமாதானம் செய்தாள்.

இது எதற்கும் அழகரும், ரஞ்சனியும் வாயையேத் திறக்கவில்லை.

“உங்களுக்கு என்ன ப்ளான்.. நாங்க ஆரி மேரேஜ் பத்தி யோசிக்கவே இல்ல. இனிதான் எல்லாம் ப்ளான் பண்ணனும். சடனா அடுத்தடுத்து நடக்குறதுனால நாங்களே கொஞ்சம் குழப்பத்துல தான் இருக்கோம்..” என்றார் முருகானந்தம்.

“நாங்களுமே யோசிக்கல்தான். பட் வேற வழி இல்ல. யோசிச்சு ப்ளான் பண்ணிக்கலாம். எங்கேஜ்மென்ட் ன்னு எதுவும் வேண்டாம். எல்லாரும் வர மாதீர் கோவில்ல கல்யாணம் வச்சிட்டு, ரிசப்ஷன் க்ரான்டா பண்ணிக்கலாம். உங்களுக்கு ஓக்கேவா..” என்றார் சங்கர்.

“எங்க சொந்த பந்தங்களும் இந்த பக்கம்தான். அதனால பிரச்சினை இல்ல. ஆனா அங்க கண்டிப்பா ஒரு ரிசப்சன் வைக்கனும். ப்ரண்ட்ஸ், கொலிக்ஸ் இருக்காங்க. ஆரியோட ப்ரன்ட்ஸ் எல்லாரும் வருவாங்க..” என்றார் முருகானந்தமும்.

“ஹான் சரி.. அப்புறம் உங்க எதிர்பார்ப்பு.. நீங்க என்ன சொல்றீங்க?” என தயக்கமாகவே கேட்டார் சங்கர்.

“அங்கிள்.. பணத்துக்காகவும், இந்த சொத்துக்காகவும் தான் உங்க பொண்ணை கல்யாணம் செஞ்சிருக்கேனு நினைக்கிறீங்களா?” என ஆரியன் நிதானமாக கேட்க,

“இல்ல. அப்படி இல்ல மாப்பிள்ளை.. இது பெரியவங்களுக்குள்ள..” என சங்கடமாக முருகானந்தத்தைப் பார்க்க,

“என்னோட விருப்பம் தான் என் பேரன்ட்ஸோட விருப்பமும். நான் படிச்சிருக்கேன். கை நிறைய சம்பாதிக்கிறேன். என் பொண்டாட்டிக்கும், பிறக்கப் போற பிள்ளைகளுக்கும் என்னால எல்லாம் செய்ய முடியும். பொண்டாட்டி பணம் கொண்டு வந்து கொடுத்துதான் நான் வாழனும்னு எந்த அவசியமும் இல்ல.. அன்ட் பணத்துக்கு நாங்க முக்கியத்துவம் கொடுக்குற ஆளுங்களும் இல்ல..” என கண்டிப்பான குரலில் கூற,

“ஆரி.. அப்பா தப்பா ஒன்னும் பேசிடல. நடை முறையைத்தான் கேட்டார்..” என்றான் ஆகன். அவனுக்கும் ஆரி தந்தையிடம் இப்படி பேசியது கோபம் வந்துவிட்டது.

ஆனால் அந்த கோபத்தை இப்போது காட்டினால், அம்மா மீண்டும் ஒரு புது பிரச்சினையை ஆரம்பிப்பார். அதை நினைத்து பொறுமையாக பேசினான்.

“சீனியர்.. நானும் தப்பா ஒன்னும் பேசிடல.. என்னோட மனநிலையைத்தான் நான் சொன்னேன்..” என அவனும் முடிக்க,

“கண்ணா.. தம்பி தப்பா ஒன்னும் பேசல.. அமைதியா இரு..” என நித்யா தான் ஆகனை சமாதானம் செய்தார்.

“சரிங்க நாங்க கிளம்பறோம். உங்க பொண்ணை நீங்க எப்போ வேனும்னாலும் வந்து பார்க்கலாம். நீங்க டேட் பார்த்துட்டு சொல்லுங்க, அடுத்த கட்ட வேலையை ஆரம்பிப்போம். சண்டே டேட் வர மாதிரி பார்த்துக்கோங்க. அப்போதான் எங்க பொண்ணுக்கு வசதி..” என அதுவரை அமைதியாக இருந்த விஜயா சொல்ல,

“பொண்ணா.. உங்களுக்கு எந்த பொண்ணு இருக்கு.. ஒரே பையன் தான..?” என அதுவரை கிச்சனில் இருந்த ரஞ்சனி ஓடிவர,

“நான் எந்த பொண்ண சொல்றேன்னு உங்களுக்கே தெரியும். தெரிஞ்சும் தெரியாத மாதிரி பேசினா நான் என்ன சொல்லட்டும். என் பொண்ணும், மஞ்சரியும் இல்லாம எங்க வீட்டுல எந்த விசேசமும் நடக்காது. என் பொண்ணுதான் உங்க பொண்ணுக்கு நாத்தனார் முடிச்சு போடனும். அவளை ஒதுக்கி நாங்க எதுவும் பண்ண போறதில்ல. பண்ணவும் மாட்டோம். யோசிச்சு முடிவு பண்ணிட்டு சொல்லுங்க..” என்ற விஜயா, அதிர்ந்து நின்ற ரஞ்சனியைப் பார்த்து “போய்ட்டு வரோம் சம்மந்தி..” என நடக்க, மற்றவர்களும் சொல்லிக்கொண்டு விஜயாவின் நடந்தார்கள்.
 
  • Love
Reactions: Sailajaa sundhar