• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அ.. ஆ... - 40

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,343
557
113
Tirupur
அகானா - 40

“அந்த பொம்பள எப்படி பேசிட்டு போகுது பாருங்க மாப்பிள்ளை.. அதுக்கிட்ட நம்ம மகி எப்படி இருப்பா.? நீங்க கொஞ்சம் யோசிங்க. மகிக்கிட்ட நான் பேசுறேன்.. இன்னுமே நமக்கு நேரம் இருக்கு..” என சரஸ்வதி ஆரம்பிக்க,

“அதெல்லாம் நல்லாத்தான் இருப்பா. உங்ககிட்டயே நாங்க இருக்கும் போது அவங்ககிட்ட மகி இருக்குறதுக்கு என்ன?” என நித்யா பட்டென சொல்ல, பதில் சொல்ல முடியாமல் மகனை முறைத்தார் சரஸ்வதி.

நித்யா இப்போது யாரையும் வைத்து பார்ப்பதில்லை. பட் பட்டென பேசி விடுகிறாள். அது அங்கிருக்கிற அனைவருக்கும் புரியத்தான் செய்கிறது. வினோத் மனைவியை அதட்டவில்லை எனும் போது, இவர்கள் மட்டும் என்ன பேசிட முடியும்.

“வினோ.. என்னோட முடிவுல எந்த மாற்றமும் இல்ல. இதுக்கு மேல இதைப்பத்தி பேச வேண்டாம்..” என எல்லாருக்கும் பொதுவான ஒரு பதிலை வினோத்திடம் கூறிவிட்டு, “கண்ணா.. உன் ஃப்ரண்டோட அப்பா ஜாதகம் பார்ப்பார்னு சொன்னியே அவன்கிட்ட பேசி டைம் கேளு.. நாளைக்கு போய் நாள் பார்த்துட்டு வந்துடலாம்..” என்றார் சங்கர் மகனிடம்.

“மாப்பிள்ளை. அதுதான் நம்ம ஜோசியர் இருக்காரே..?” என மீண்டும் சரஸ்வதி ஆரம்பிக்க,

“எதுக்கு அவர்கிட்டயும் பணம் கொடுத்து பொய் சொல்ல சொல்லவா? நான் என் பொண்ணுக்கு ஜாதகம் பார்க்கல. நாள் தான் குறிக்க போறேன்..” என சற்றும் யோசிக்கமல் பதில் கொடுத்துவிட்டு சங்கர் உள்ளே சென்றுவிட,

“ம்மா.. நீங்க கொஞ்ச நேரம் சும்மா இருங்க. அவர் பொண்ணுக்கு அவர் என்னமும் செய்யட்டும். நீங்க ஒவ்வொன்னுலயும் தலையிடாதீங்க..” என ரஞ்சனி சலிப்பாக கூற,

“என்னடி நீ..?” என சரஸ்வதி அதிர்வாக கேட்க

“ம்மா.. அண்ணனும் அண்ணியும் வந்துட்டு இருக்காங்களாம். அவங்களை எப்படி சமாளிக்கிறதுன்னு மட்டும் யோசிங்க. அதைவிட்டுட்டு இந்த விசேசத்தை எப்படி தடுக்கலாம்னு மட்டும் யோசிக்காதீங்க..” என்ற வினோத் நித்யாவிடம் “கிளம்பு நித்தி.. பசங்க தேடுவாங்க..” என அழைத்துக்கொண்டு அவனும் கிளம்பிவிட்டான்.

அவர்கள் கிளம்பவும், ஆகனும் அங்கிருக்கப் பிடிக்காமல் தன் அறைக்குச் செல்ல “ரஞ்சி.. அவளை முன்னாடி வச்சு எப்படிடி இந்த கல்யாணம். அதை நினைச்சாலே எனக்கு வயிறு எரியுது..” என்றார் சரஸ்வதி.

“ம்மா.. நீங்க மறுபடியும் ஆரம்பிக்காதீங்க. இந்த மைதிலி அண்ணி வந்து என்ன பேசுவாங்கன்னு நினைச்சாலே எனக்கு உயிரெல்லாம் நடுங்குது..” என்றாள் பயத்துடன்.

அழகருக்கும் அதே எண்ணம்தான். ஆகவே ஆகாது என துரத்தி விட்ட ஒரு பெண், அவர்களுக்கு முன் தவிர்க்க முடியாத ஒரு ஆளாக வந்து நிற்பாள் என்று அவருமே நினைக்கவில்லை. அதிலும் சாதாரண பெண் இல்லை. ஒரு மாவட்டத்தையே கட்டி ஆளும் ஆட்சியர். சபையில் அவள் வந்து நின்றால் சொந்தங்கள் எல்லாம் என்ன பேசுவார்கள் என்று நினைத்து நினைத்து அவருக்கு இரத்த அழுத்தம் கூடியது.

இதையெல்லாம் தாண்டி மைதிலிதான் அவரது பெரிய பயம். யாரைப்பற்றியும் யோசிக்க மாட்டாள். யாருக்காகவும் பார்க்க மாட்டாள். கொஞ்சமும் மரியாதை இல்லாமல் நடந்து கொள்வாள்.

விசேசத்தின் போது அத்தனை பேரின் முன்பும் அப்படி நடந்து கொண்டால், இவர்களுக்கு சொந்தங்களின் முன் மிகப்பெரிய தலை குனிவாக இருக்கும்.

அதையெல்லாம் தாண்டி அந்த இடத்தில் மஞ்சரி முன் தோற்றுப் போய் நிற்பது போல் வேறு இருக்கும்.. ஆனால் இது எதையும் இப்போது அவரால் தடுக்க முடியாது.

நடப்பது நடக்கட்டும் என அமைதியாகவே இருந்தார்.

இங்கு மஞ்சரி மூணாரிலிருந்து உடனே கிளம்பி மகளிடம் வந்துவிட்டார். அவரிடம் எதையும் அகானா கூறவில்லை.

அன்று மாலையே வீட்டிற்கு செல்லலாம் என டாக்டர் கூறிவிட, மகளை அழைத்துக்கொண்டு வீடு வந்துவிட்டார்கள்.

ஆகனின் வீட்டில் பேசி முடித்த கையோடு ஆரியனிடம் பிடிவாதம் பிடித்து அகானாவை பார்க்க வந்துவிட்டார் விஜயா.

வந்ததிலிருந்து அவளிடம் பேசவே இல்லை. அவர் கோபம் அங்கிருந்த எல்லாருக்கும் புரிய, அகானாதான் அவரை சமாதானம் செய்தாள்.

அதன்பிறகு ஆரியன் சிங்கப்பூர் செல்லாததை சொல்ல, அதற்கு அகானாவிற்கு ஓரளவிற்கு காரணம் புரிய, மஞ்சரிதான் மிகவும் வருந்தினார்.

உடனே மகளிடம் “உனக்கு ட்ரான்ஸ்ஃபர் கிடைச்சா கேளேன் அம்மு..” என்றார் பட்டென.

மஞ்சரி இப்படி கேட்பார் என்று யாருமே யோசிக்கவில்லை. எல்லோரும் திகைத்து மஞ்சரியைப் பார்க்க,

அதற்கு “ம்ம் சரிம்மா.. நான் கேட்டு பார்க்குறேன்..” என்று அகானாவிடமிருந்து வந்த பதிலில் இப்போது அவளைத் திகைத்து பார்த்தனர்.

“என்ன ரெண்டு பேரும் விளையாடுறீங்களா?” என அதட்டிய விஜயா, “உனக்கு பைத்தியமா மஞ்சு.. அவ வேலையில நீ தலையிடாத.. அப்போதான் அவளால சுதந்திரமா வேலை பார்க்க முடியும். எப்படியும் இன்னும் ஒன் யேர்ல உனக்கு ட்ரான்ஸ்ஃபர் கிடைச்சிடும். அதுக்கு பிறகு அவன் போகட்டும். அதுக்குள்ள குழந்தை அது இதுன்னா நாம அலைய வேண்டாம்ல்ல..” என்றார் இருவரிடமும்.

“அகி.. பைத்தியக்காரத்தனமா எதையும் யோசிக்காத.. நான் போகாததுக்கு ரெண்டு ரீசன் இருக்கு. ஒன்னு உன்னை இவங்ககிட்ட விட்டுட்டு என்னால அங்க நிம்மதியா இருக்க முடியாது. இன்னொன்னு மகியோட ஸ்டடிஸ். அவளுக்கு இன்னும் 3 மந்த்ஸ் இருக்கு. அதுக்குப் பிறகு நான் என்னை பார்த்துக்குவேன். நீ இதையெல்லாம் யோசிச்சு உன் கேரியரை ஸ்பாயில் பண்ணிக்காத.” என கண்டிப்பாக சொல்லிவிட்டான்.

அதன்பிறகு முருகானந்தம் அகியிடம் வேலை பற்றி பேச, மஞ்சுவும் விஜயாவும் ஃபங்க்சன் பற்றி பேச, ஆரியனால் அங்கு தனியாக உட்கார முடியவில்லை.

அவனுக்கு வீட்டில் தனியாக இருக்கும் மகியின் எண்ணம்தான். இப்போது வரைக்குமே அவளின் செயலை அவனால் மன்னிக்க முடியவில்லை.

அவனுக்கு அவளைப் பிடிக்கும். காதலிக்கிறான்தான். ஆனால் அவளுக்குப் பிடிக்குமா? காதலிக்கிறாளா? என்று எதுவும் தெரியாது.

ஆனால் அதற்குள் தாலியைக் கட்டிக்கொண்டு வந்து நிற்கிறாள். இதை அவன் எப்படி எடுத்துக்கொள்ள?

அந்த நேரம் அவன் ஒரு வார்த்தை மாற்றி பேசியிருந்தாலும், மகி அவனுக்கு எப்போதுமே கிடைக்காமல் போய்விடுவாள் என்று தெரியவும் தான் அவளைக் காட்டிக்கொடுக்காமல் பழியை மொத்தமும் தன்மேல் ஏற்றுக் கொண்டான்.

ஆனாலும் அவளுக்கு எப்படி இவ்வளவு தைரியம் வந்தது என்று அவனால் யோசிக்காமல் இருக்க முடியவில்லை.

வந்த நாளிலிருந்து அவளது குறும்பான பேச்சையும், சேட்டையையும் பார்த்தவன், இந்த இரண்டு நாட்களாக அழுது கொண்டே இருப்பவளைப் பார்க்க பாவமாகத்தான் இருந்தது.

அவளை உடனே சமாதானம் செய்ய சொல்லி மனம் அடித்துக்கொள்ளத்தான் செய்கிறது, ஆனால் உடனே இறங்கி சென்றுவிட்டால் அவளுக்கு தன் மேல் பயமில்லாமல் போகும், அதோடு மீண்டும் இப்படி யோசிக்கமல் எந்த செயலையும் செய்து விடுவாள். அது நடக்கக்கூடாது என்றுதான் கடினப்பட்டு மகிழினியிடமிருந்து தள்ளி நிற்கிறான்.

மேலும் இவன் இப்படி கோபமாக இருந்தால் தான், அகானாவும் அவன் பேச்சைக் கேட்டு திருமணத்திற்கு வருவாள். இல்லையென்றால் ஏதாவதொரு காரணத்தைச் சொல்லி தட்டிக் கழிப்பாள்.

இவர்கள் இருவரையும் தன் வழிக்கு கொண்டு வரும் பொருட்டுதான் ஆரியன் கோபமாக இருக்கிறான்.

இப்படி யோசனையில் இருக்க அவன் அருகில் வந்து அமர்ந்தாள் அகானா.

“ஸாரி ஆரி..” என்றாள் அகானா.

‘ஏன்.?’ என்பது போல் ஆரியன் புருவத்தை உயர்த்த,

“மகி கைல தாலி எப்படி வந்ததுன்னு எப்பவாவது யோசிச்சியா?” என்றாள் பாவமாக.

‘எத.?’ என அவன் அரண்டு போய் தங்கையை பார்க்க,

“நான் தான் அவக்கிட்ட கொடுத்துட்டு வந்தேன். என்னைக்காவது உனக்கு தேவைப்பட்டா இது யூஸ் பண்ணிக்கோன்னு சொன்னேன். இப்படி ஒரே நாள்ல யூஸ் பண்ணுவான்னு நினைக்கல..” என்றாள் சோகமாக.

“அடிப்பாவி.. இது தெரியாம ரெண்டு நாளா அவளைப் போட்டு திட்டிட்டு இருக்கேன். ஏண்டி உனக்கு இந்த வேலை..?” என பல்லைக் கடிக்க,

“பின்ன.. அவளை அனுப்பிட்டு நீ தேவதாஸ் ஆகலாம்னு இருந்தா, அதை பார்த்துட்டு நான் சும்மா இருப்பேனா?” என புருவத்தை ஏற்றி இறக்கியவள் “எனக்கு எல்லாம் தெரியும் ஆரி. அவளை நீ லவ் பண்ண.. ஆனா அதை நீ அவக்கிட்ட சொல்லல. மகி அப்படி வந்து நின்னிருக்கலன்னா நீ எப்பவும் அவக்கிட்ட சொல்லிருக்க மாட்ட.. அவளை திரும்பியும் பார்த்திருக்க மாட்ட. அதே நேரம் அவளை மறந்து நீ வேற லைஃப்குள்ளயும் போக மாட்டன்னு புரிஞ்சிடுச்சு. அதுதான் மகிகிட்ட அதை கொடுத்துட்டு வந்தேன்.. சாரி ஆரி..” என்றாள் அகானா.

“ம்ச்.. நீ சொல்றதும் சரிதான். மகிக்காக கூட அந்த வீட்டுல போய் நிற்கக்கூடாதுன்னு நினைச்சேன். அதோட உன்னோட லைஃப் செட்டில் ஆகாம, நான் இப்படி வந்து நிக்கிறதுதான் எனக்கு ரொம்ப கில்டியா இருக்கு..” என்றான் மிகவும் வருத்தமாக.

“ஆரி ப்ளீஸ்.. இந்த பேச்சே வேண்டாம். நான் ஒன்னும் இப்படியே இருக்கப் போறதில்ல. அம்மாவும் அப்படியே விடவும் மாட்டாங்க. நானும் மூவ் ஆன் பண்ணனும்னுதான் நினைக்கிறேன். சீக்கிரம் சரி பண்ணிடுறேன். நீ என்னை யோசிக்காத. மகியை கொஞ்சம் யோசி. அவ இப்படி இருக்குற பொண்ணே இல்ல. இப்போ ஒரே இடத்துல அதுவும் கவலையா இருக்குறது என்னாலன்னு எனக்கு கஷ்டமா இருக்கு. நீ அவளை சமாதானம் செய்..” என்றாள் அகானாவும்.

அகானா இப்படி பேசியது தன் மனதை மாற்ற என்று ஆரியனுக்கு தெரியாதா? அவளால் ஆகனை கடந்து வரவே முடியாது என்று ஆரியன் தவிர யாருக்கும் தெரியாது. ஏன் இது ஆகனுக்கே தெரியாது.

சில நாட்கள் தான் என்றாலும் அவள் காதலை ஆரி கவனித்திருக்கிறான். அதில் இருந்த உண்மையும் நேசமும் அவனை வியப்படைய வைத்திருக்கிறது. என்ன அந்த அன்பிற்கும் காதலுக்கும் தகுதியில்லாத ஒருவன் தான் ஆகன்..

தன் கோபத்தைக் காட்டாமல் “ரொம்ப நல்லது மேடம்.. நீங்க போய் ரெஸ்ட் எடுங்க.. நாளைக்கு சீனியர் ஹாஸ்பிடல்ல ஜாய்ன் பண்ண சொல்லிருக்கார். நானும் போய் அந்த வேலையை பார்க்கிறேன்..” என ஆரி எழ,

அகானாவும் “பார்ர..?” என அவன் தலையைத் தட்டிவிட்டு தன் அறைக்குள் நுழைந்து விட்டாள்.

அவள் வெளியே காட்டும் இந்த முகம் வேறு. ஒவ்வொன்றிற்கும் ஏங்கி தவித்து அழும் முகமும் வேறு.

இந்த முகத்தை அவளைத் தவிர யாரும் பார்த்ததில்லை. பார்க்க விட்டதுமில்லை.

அழுத்தங்களால் நிறைந்து கிடத்த இதயத்தை மெதுவாக தடவிக் கொண்டாள்.

கத்தி அழுதுவிட்டால் கூட சரியாகி விடுமா என்று தெரியவில்லை. அத்தனை அழுத்தங்கள் ரணங்களாக அடி மனதினுள் அடைந்து கிடக்கின்றது. அதை அவ்வளவு எளிதாக யாரிடமும் சொல்லவும் முடியவில்லை. சொல்லவும் தெரியவில்லை.!

அவளின் ரணங்களை ஆற்ற அவளைத் தவிர வேறு யாருமில்லை.

ரணங்கள் இன்னுமே மிச்சமிருக்கின்றன ஆறாத வடுக்களாக அவளுக்குள்..