• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அ.. ஆ.. - 57

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,391
443
113
Tirupur
அகானா - 57

“நீ செஞ்சது சரியா மஞ்சு.?” என மஞ்சரியிடம் வருத்தமாக கேட்டுக் கொண்டிருந்தார் விஜயா.

“அக்கா.. உங்ககிட்ட கேட்காம இந்த முடிவை எடுத்ததுக்கு என்னை மன்னிச்சிடுங்க. அதே நேரம் நான் இப்படி ஒரு முடிவு எடுக்க ஏதோ ஒரு காரணம் இருக்குன்னும் புரிஞ்சிகோங்க க்கா..” என்றார் மஞ்சரியும்.

“எந்த காரணமா இருந்தாலும் நீ இதை செஞ்சிருக்கக்கூடாது மஞ்சு. அந்த குடும்பத்துல போய் எப்படி? உனக்கு எப்படி மனசு வந்தது..?” அவரால் அதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

“ஆகன் அப்படி இல்ல க்கா..” என்ற மஞ்சரியை முறைத்துப் பார்த்தார் விஜயா..

“ரவியைக் கூட இப்படித்தான் நினைச்சோம். ஆனா என்ன நடந்ததுனு நமக்குத்தான் தெரியுமே.. இந்த பேச்சே வேண்டாம் மஞ்சு..” என கோபமாக சொன்னவர், “அடுத்து எந்த முடிவா இருந்தாலும் அது அகிதான் எடுக்கனும். நீ அவளை எதுக்கும் ஃபோர்ஸ் பண்ணக்கூடாது மஞ்சு.. அவ விருப்பம் எதுவோ அப்படியே நடக்கட்டும்..” என முடிக்க,

“ஆகனும் அதைத்தான் சொல்றார் க்கா. அம்மு என்ன முடிவு எடுக்குறாளோ, அதுதான் என்னோட முடிவும். நீங்க அவளைக் கட்டாயப்படுத்தாதீங்கன்னு சொன்னார்..” என்ற மஞ்சரியை சலிப்பாக பார்த்தார் விஜி.

“மஞ்சு.. மஞ்சு.. உன்னை என்னதான் செய்றது. உனக்காகவும் இந்த வாழ்க்கையை கொஞ்சம் வாழலாம். அது தப்பு கிடையாது. இன்னும் இன்னும் அடுத்தவங்களுக்காகவே நீ யோசிக்காத. அகியையும் சேர்த்து தான் சொல்றேன். அவங்களுக்காக நீ வாழ எந்த அவசியமும் இல்ல.. அகியும் அதைத்தான் எதிர்பார்ப்பா.. இந்த கல்யாணத்துல உனக்கு விருப்பம் இல்லன்னு தெரிஞ்சிருந்தா அடுத்த நிமிசமே தாலியைக் கழட்டி எரிஞ்சிருப்பா அகி.. அது உனக்கும் தெரியும். ஆகனுக்கும் தெரியும். அதனாலத்தான் ஆகன் உங்கிட்ட வந்து பேசிருக்கார்..” என்ற விஜியிடம்,

“ம்ம் ஆமாம் க்கா.. ஆனா அம்மு எனக்காக அவ வாழ்க்கையை தொலைச்சிடக்கூடாது இல்லையா? அந்த வலி எப்படி இருக்கும்னு எனக்குத் தெரியும். அவ அதை கடந்து வந்திருந்தா கூட நான் இவ்ளோ யோசிச்சிருக்கமாட்டேன். ஆனா அம்மு காதலையும் பகையையும் நெருப்பு மாதிரி மனசுல போட்டு எரிச்சிட்டு இருக்கா.. அது அவ வாழ்க்கையையே எரிச்சிட்டா என்ன செய்யன்னு எனக்கு பயம் க்கா.. என்னோட இந்த பயம் தான் இவ்ளோ பெரிய முடிவை எடுக்க வச்சது” என்றார் மஞ்சு.

“நீ சொல்றது சரியாவே இருக்கட்டும். அவங்க கல்யாணமும் நடந்திருக்கட்டும். ஆனா அம்மு அந்த வீட்டுல போய் வாழுவான்னு நீ நினைக்கிறியா? கண்டிப்பா மாட்டா.. கடைசி வரை ரெண்டு பேரும் தனியாவே தான் இருக்கப் போறாங்க பாரு..” என்றவரின் வாக்கு உண்மையாகப் போவதை அப்போது அவர் அறிந்திருக்கவில்லை.

மஞ்சரியின் அதிர்ந்த முகத்தைப் பார்த்துதான் தான் என்ன சொன்னோம் என்பதே புரிந்தது விஜயாவிற்கு. அவருக்குமே உள்ளம் திக்கென்று தான் ஆனது.

ஆனால் அதை பேசி மேலும் மஞ்சரியை பயம் காட்ட வேண்டாம் என்று நினைத்தவர், அடுத்து என்ன செய்யலாம் என பேச ஆரம்பித்துவிட, மஞ்சரியும் சற்று இயல்பிற்கு வந்துவிட்டார்.

இங்கு ஸ்டேஷனில் இருந்த தாமோதரனைப் பார்க்க வந்திருந்தார் துரைப்பாண்டி. அவரோடு நவீனும், குமரனும் இருந்தனர்.

“அய்யா ஏற்கனவே இவர் மேல ஏகப்பட்ட திருட்டு கேஸ் இருக்கு.. இப்போ கொலைகேஸ் வேற.. கண்டிப்பா ரிமாண்ட் தான் பண்ணுவாங்க..” என்ற இன்ஸ்பெக்டரிடம்,

“இங்க பாருங்க சார். இவன் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவன்னு ப்ரூஃப் பண்ண எல்லா எவிடென்சும் எங்கிட்ட இருக்கு. அவனை எப்படியும் வெளியே கொண்டு வந்துடுவேன், ஆனா இப்போ நான் இங்க வந்ததுக்கு வேற காரணம் இருக்கு. இவன் மேல ஒரு அடி படக்கூடாது. அப்படி மட்டும் நடந்தது, உங்க எல்லாரையும் உசுரோட கொழுத்திடுவேன்..” என எச்சரித்துவிட்டு கிளம்பினார் துரைப்பாண்டி.

நவீனும் குமரனும் அவருக்கு நன்றி சொல்லி அனுப்பிவிட்டு, அந்த ஸ்டேசனுக்கு வெளியேவே அமர்ந்துவிட்டனர்.

அந்த பெரிய வீட்டில் தனியாக அமர்ந்திருந்தார் மைதிலி. அவர் பார்வை டிவியில் ஓடிக் கொண்டிருக்கும் நியூசில் பதிந்திருந்தது.

விழிகள் அந்த நியூசையே ஒரு குரூர திருப்தியுடன் பார்த்துக் கொண்டிருந்தது.

‘சொந்தப் பகை காரணமாக டாக்டர் ரவீந்திரன் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருக்க, அவர் மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.’ என்ற செய்தி ஃப்ளாஷ் நியூஸில் போய் கொண்டிருந்தது.

‘நான் செஞ்சிருக்கனும்.. நான் தான் செஞ்சிருக்கனும்.. தப்பிச்சிட்டான். இப்போ நான் செஞ்சி முடிக்கனும்.. அவனை முடிக்கனும்..” என விழிகள் சிவக்க அந்த வீடே அதிரும்படி கத்திக் கொண்டிருந்தார் மைதிலி.

‘என்னை இப்படி அநாதையா உட்கார வச்ச உங்க யாரையும் சும்ம விடமாட்டேன். அன்னைக்கே உன்னை ஊர விட்டு மட்டும் துரத்திருக்கக் கூடாது. இந்த உலகத்தை விட்டே அனுப்பிருக்கனும்.. பாவம்னு விட்டு வச்சது என் தப்பு. அதான் திரும்பி வந்து என் வாழ்க்கையவே நாசமாக்குறீங்க.. உங்களை அப்படியே விடமாட்டேன். உங்களுக்கு குடும்பமா வாழத்தான ஆசை. உங்க ஆசையை நான் நிறைவேத்தி வைக்கிறேன். சீக்கிரமா நிறைவேத்திக்கிறேன். சொர்க்கத்துல போய் சுகமா மூனு பேரும் உங்க வாழ்க்கையை வாழுங்க..’ என ஆக்ரோசமாக கத்திக் கொண்டிருந்தார்.

இங்கு மருத்துவமனையில் மனைவியின் அருகில் அமர்ந்திருந்த அழகருக்கு மகனைப் பற்றி மனைவியிடம் கூறலாமா, வேண்டாமா என்ற யோசனைதான்.

சரஸ்வதியின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் போக, இதை வேறு சொல்லி மேலும் நிலமையை மோசமாக்க வேண்டாம் என நினைத்து அதை சொல்லாமல் அப்படியே விட்டார் மனிதர்.

வினோத் ரவியோடு இருக்க, நித்யா சரஸ்வதியோடு இருக்க, பிள்ளைகளை நித்யாவின் அம்மா பார்த்துக் கொண்டார்.

இங்கு சூழல் மொத்தமாகவே இப்படியிருக்க, ஆரியனின் திருமண வரவேற்பை பெண் வீட்டார் இல்லாமலே நடத்தி விடலாம் என விஜயா முடிவு செய்தார். அதை மகியிடமும் கேட்டு உறுதிப் படுத்திக்கொண்டார்.

அதனால் அவர்கள் அனைவரும் பாண்டிச்சேரி கிளம்ப, ஃபங்சனுக்கு இரண்டு நாட்களுக்கு முன் ஆரியன் வருவதாக முடிவு செய்யப்பட்டது.

நாட்கள் மிகவும் வேகமாக சென்றது போல் இருந்தது அகானாவிற்கு.

ஆம் அப்படித்தான் போனது. இதோ அவள் வீட்டிற்கு வந்து பத்து நாட்காளாகி விட்டது. நாளை பாண்டிச்சேரி சென்று ஆரியனின் வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்ட பிறகு, சென்னை தலைமை அலுவலகத்தில் தன்னுடைய வேலைக்கான ரிபோர்ட்டை கொடுத்துவிட்டு, மீண்டும் வந்து பணியில் சேர வேண்டும் என்று முடிவு செய்துவிட்டாள்.

அதற்காக மெடிக்கல் செர்டிஃபிகேட், ஃபிட்னஸ் செர்டிஃபிகேட் என அனைத்தும் கண்ணனின் மூலம் தயாரானது.

ஆகனிடம் அன்று மருத்துவமனையில் பேசியதுதான். அதன் பிறகு ஆகனிடமும் சரி, ஆரியனிடமும் சரி பேசுவதை நிறுத்தியிருந்தாள்.

ஆம் ஆரியனிடமும் பேசுவதில்லை அகானா. ஆகனின் இந்த திடீர் முடிவிற்குப் பின் நிச்சயம் ஆரியனின் வேலை இருக்கும் என்று அவளால் உடனே புரிந்து கொள்ள முடிந்தது.

தன்னை புரிந்து கொள்ளாமல் எப்படி ஆகனிடம் பேசலாம், இப்படி ஒரு முடிவிற்கு எப்படி துணை போகலாம் என்ற கோபத்தில் ஆரியனிடம் பேசுவதில்ல.

ஆரிக்கும் அகானாவின் கோபம் புரியத்தான் செய்தது. சில நாட்களோ, சில மாதங்களோ கடந்து அதை புரிந்து கொள்வாள் என்ற நம்பிக்கையில் அவளுக்கு தனிமை கொடுத்து ஒதுங்கி நின்றான் நல்ல அண்ணனாக.

ஆகனுமே அகானாவை தொந்தரவு செய்யவில்லை. இந்த அதிர்ச்சியில் இருந்து வெளியில் வர அவளுக்கு அவகாசம் தேவை என புரிந்து, ஒதுங்கி நின்றான்.

ஆகனும் சங்கரும் வீட்டிற்கு வந்து போனாலும், ரஞ்சனியிடம் பேசுவதில்லை. அதிலும் அன்று மகியிடம் பேசியதைக் கேள்விப்பட்ட பிறகு சங்கர் சற்றும் யோசிக்கவில்லை.

உடனே வக்கீலை சந்தித்து விவாகரத்து நோட்டிஸ் அனுப்ப ஏற்பாடு செய்துவிட்டார்.

கணவரின் இந்த செயலை ரஞ்சனி எதிர்பார்க்கவில்லை என்று அவரின் அதிர்ந்த முகமே கூறியது.

“ஏன் இப்படி செஞ்சீங்க?” என்ற கேள்விக்கு மட்டுமல்ல, வேறு எந்த கேள்விக்குமே சங்கர் பதில் அளிக்கவில்லை.

அவரிடம் அழுது, சண்டையிட்டு போராடிப் பார்த்தும் எந்த பதிலும் கிடைக்காமல் போக மகனிடம் வந்து நின்றார்.

அவனோ “அது அப்பாவோட விருப்பம். இதுல நான் என்ன சொல்ல முடியும்? அவரைக் கட்டாயப்படுத்தவோ, சமாதானம் செய்யவோ எனக்கு விருப்பமில்ல..” என்று முடித்துவிட, ஒடுங்கித்தான் போனார் ரஞ்சனி.

அன்று தாயும் மகளும் பாண்டிச்சேரி கிளம்ப இருந்தனர். கவிதாவையும் காயத்ரியையும் உடன் அழைத்திருந்தார் மஞ்சரி. அதனால் அவர்களும் இருக்க, அகானாவின் முகம் மிகவும் யோசனையில் இருந்தது.

அதை கவனித்த மஞ்சு “என்ன அம்மு?” என்றதும்,

“ம்மா.. நீங்க வருத்தப்படுற மாதிரி நான் எதுவும் உங்ககிட்ட கேட்கக்கூடாதுனு தான் நினைக்கிறேன். ஆனா கேட்காம இருக்க முடியல. இதுக்கு பதில் தெரியலனா எனக்கு பைத்தியமே பிடிச்சிடும் போல இருக்கு.. என்னை எவ்வளவோ கன்ட்ரோல் செய்து பார்க்கிறேன். முடில..” என மிகவும் சோர்வாகவே பேச, மஞ்சரிக்கு மகளின் வலியும் வேதனையும் புரியாமல் இல்லை.

தன்னை நினைத்து தான் கவலைப்படுகிறாள் என்று மஞ்சரிக்கு புரிய “அம்மு..” என்றார் பொறுமையாக..

“ம்மா.. சாரி ப்ளீஸ்.. நீங்க எப்படி அவர் முன்னாடி ஒன்னுமே நடக்காத மாதிரி இருக்கீங்க. அவர் நமக்கு செஞ்சதை எல்லாம் மறந்துட்டீங்களா? எனக்கு அவரை கொல்லனும் போல வெறி வருது… ஆனா அவருக்கு அப்படி கூட நான் முக்கியத்துவம் கொடுக்கக்கூடாதுனு நினைக்கிறேன். ஆனா நீங்க? எப்படி ம்மா?” என ஆத்திரம் மிகுந்த குரலில் கேட்க,

“அம்மு.. ஒருத்தவங்க இந்த உலகத்துல இல்லாம போறது வேற, இருந்தும் நம்மகிட்ட இல்லாம போறது வேற.. நீ நினைக்கலாம் ரெண்டுக்கும் என்ன பெரிய வித்தியாசம்னு. கண்டிப்பா ரெண்டுக்கும் ரொம்ப பெரிய வித்தியாசம் இருக்கு.. இந்த உலகத்துல இல்லாம போனவங்களை, இனி திரும்பி வரமாட்டாங்கன்னு நம்புவோம். அந்த நம்பிக்கையில வாழ்க்கையை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்துவோம். ஆனா இருந்தும் இல்லாம போறாங்க பார்த்தியா, அவங்க எப்படியாவது நம்ம வாழ்க்கைக்குள்ள மறுபடியும் வருவாங்கன்னு நாம சாகுற வரைக்கும் ஒரு நம்பிக்கை இருக்கும். அந்த நம்பிக்கையோட வாழ்ந்து, அந்த நம்பிக்கை பொய்யா போகும் போதுதான் வாழ்க்கையோட நிதர்சனம் புரியும். இனி அவங்க நம்ம வாழ்க்கையில எங்கேயுமே இல்லன்ற உண்மையும் புரியும். அந்த உண்மை எனக்கு புரிஞ்சதுனாலத்தான் இன்னைக்கு அவங்க எல்லாரையும் என்னால சாதாரணமா கடந்து வர முடியுது. உனக்கு இன்னும் அந்த பக்குவம் வரல. அப்படி வந்துட்டா நீ இந்தளவுக்கு மனசைப் போட்டு குழப்பிக்க மாட்ட..” என நிர்மலமான முகத்தோடு கூற, தாயின் கூற்றில் இருந்த உண்மைகள் அகானாவுக்குள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.