அகானா- 58
ஆரியன் மகிழினி வரவேற்பு முடிந்து இரண்டு நாட்கள் ஆகியிருந்தது. சங்கரும் ஆகனும் மட்டும் வந்து அடுத்தநாளே கிளம்பியும் இருந்தனர்.
அகானாவும் அடுத்தநாள் தலைமைச் செயலகம் செல்ல வேண்டும் என்பதால், அதற்கான உடை அடுக்குவதில் மும்முரமாக இருக்க, அப்போது அவள் அறைக்குள் வந்தான் ஆரியன்.
அவனைக் கண்டுகொள்ளாமல் தன் வேலையில் கவனமாக இருந்தாள் அகானா.
“அகி உன்னோட கோபம் நியாயமானது என்பதால் தான் நான் உன்னை டிஸ்டர்ப் பண்ணாம ஒதுங்கி இருக்கேன். அதுக்காக ஒதுங்கியே இருப்பேன்னு நீ தப்பா நினைச்சிடக்கூடாது..” என எரிச்சலாக பேசிய ஆரியனை நிதானமாக ஏறிட்டாள் அகானா.
“நான் சொல்லாமலே என்னோட ஃபீலிங்க்சை நீ அப்சர்ப் பண்ணிக்கிறன்னு நிறைய டைம் நான் பெருமையா நினைச்சிருக்கேன். ஆனா ஃபர்ஸ்ட் டைம் ஐ ஃபீல் வெரி அப்செட்.
“அகி..” என அதட்டிய ஆரியனை கண்டு கொள்ளாமல் “என்னை பாவம் பண்ண வச்சிட்ட.. நானும் என் அம்மாவுக்கு மிகப்பெரிய துரோகம் பண்ணிட்டேன். என் அம்மாவோட வலிக்கும் வேதனைக்கும் நான் சரியான மருந்தா இருக்கல, என் பங்குக்கு நானும் அவங்களை கஷ்டப்படுத்திட்டேன்..” என சாதாரணமாக ஆரம்பித்தவளின் குரலில் கரகரப்பு எட்டிப் பார்த்தது.
“அகி..” என்ற ஆரியனின் குரல் இப்போது உள்ளே போயிருந்தது.
உண்மைதானே!
“எஸ்.. நானும் என் அம்மாவை பழி வாங்கிட்டேன். என்னோட ஆசைதான் முக்கியம்னு சுயநலமா இருந்துட்டேன். என்ன இருந்தாலும் நானும் அந்த குடும்பத்து ரத்தம் தானே, அதுதான் ரொம்ப சாதாரணமா ஏத்தி விட்டவங்கள எட்டி மிதிச்சிட்டு வந்துருக்கேன்.. இதுக்கு எனக்கு தண்டனை கிடைக்கும். நானும் பாவம் பண்ணிட்டேன்..” என்றவள் இப்போது வெறிப்பிடித்தவள் போல் கத்த ஆரம்பித்திருந்தாள்.
“அகி.. அகி காம் டவுன்.. ஏன் இப்படி ரியாக்ட் பண்ற..? நீ எந்த இடத்துலயும் தப்பு இல்லடா.. உன்னோட வாழ்க்கைக்காக நானும் மஞ்சு ம்மாவும் சேர்ந்து தான் இந்த முடிவை எடுத்தோம். நீ சுயநலமா இல்லடா புரிஞ்சிக்கோ.. அகி.. நீ இந்தளவுக்கு வீக்காகுறது சரியில்ல. நீ மென்டல்லி சரியில்ல.. இப்படியே உன்னால எப்படி ஒர்க் போக முடியும்.. யூ நீட் கவுன்சிலிங்க்..” என தங்கையின் கையைப் பிடித்து சமாதானம் செய்து கொண்டிருக்க,
அவனை வெறிப் பிடித்தவள் போல் தள்ளிவிட்டு “எனக்கு பைத்தியமா?” என்ற அகானாவின் சத்தத்தைக் கேட்டு மஞ்சரியும், மகிழினியும் பதட்டமாக உள்ளே வந்தனர்.
“என்ன? என்ன ஆரி.?” என மஞ்சு அதே பதட்டத்துடன் கேட்க,
சொல்லலாமா வேண்டாமா என நொடி நேரம் யோசித்து பின் நடந்த அனைத்தையும் கூற, மஞ்சரிக்கு மகளை நினைத்து முதல் முறையாக பயம் வந்தது.
இப்போது இவளை சரி செய்யவில்லை என்றால், பின் எப்போதும் முடியாது என்றும் புரிந்துவிட “அம்மு..” என்றார் அழுத்தமாக.
“ம்மா.. நீங்க என்ன சமாதானம் சொன்னாலும் நான் செஞ்சதை என்னாலயே ஏத்துக்க முடியல. உங்களை.. உங்களை நான் யோசிக்கவே இல்லை ம்மா.. சாரி.. சாரிம்மா..” என கைகளில் முகத்தைப் புதைத்துக் கொண்டு கதறியவளை தன்னோடு அனைத்துக் கொண்டார் மஞ்சரி..
அவர் கண்ணிலும் நீர் அரும்ப தொடங்கியது.
“அம்மு.. நீ இந்த வயசுல எவ்ளோ பக்குவமா நடந்துக்கிறன்னு உனக்கு தெரியுமா? உன்னைச் சுத்தி நீ போட்டிருக்குற அந்த நெருப்பு வட்டம் உன்னை எந்தளவுக்கு மத்தவங்க மத்தியில மரியாதையை கொடுக்க வைக்குதுனு தெரியுமா?” என்றார் அமைதியாக.
“ம்மா…”
“உன்னை நான் மட்டும் தான் வளர்த்தேன். உன் கூட நான் அதிகமா டைம் ஸ்பென்ட் பண்ணதில்ல.. அதுக்கு நம சூழ்நிலையும் ஒரு காரணம். எல்லாம் நீயே மேனேஜ் பண்ணிக்குவ. என்னை எப்பவும் எதுக்கும் தொந்தரவு செஞ்சது கிடையாது. என்னை இத்தனை வருசமா நிம்மதியா இருக்க வச்சிருக்க, இந்த பக்குவம் உன் வயசுல எனக்கு இருந்தது இல்ல அம்மு.. இதெல்லாம் நான் சொல்லி நீ கத்திக்கிட்டது இல்ல. உனக்கே புரிஞ்சு நீயே உன்னை கட்டமைச்சிக்கிட்டது. இதுல எனக்கு ரொம்ப பெருமை அம்மு. என் பொண்ணு ஒரு ராணி மாதிரி ஆளுமை படைச்சவன்னு எனக்கு எப்பவும் ஒரு திமிர் இருக்கும். அதை எந்த வகையிலும் நீ குறைச்சதே இல்ல.”
“ம்மா..”
“நிஜம் அம்மு.. எங்க வீட்டுல நான் ரொம்ப செல்லம். எத்தனை பேர் என்னை சுத்தி இருப்பாங்க தெரியுமா? அத்தனை பேரும் நல்லது கெட்டது சொல்லி வளர்த்த நானே, பெத்தவங்களை மீறி எவ்ளோ பெரிய தப்பை செஞ்சிட்டு வந்திருக்கேன்.”
“ஆனா நீ எந்த தப்புமே செய்யாம எல்லா தப்பும் உன்னோடதுனு சொல்ற.. ஏன் அம்மு? உன் வாழ்க்கையை தீர்மானிக்கிற உரிமை எனக்கு இல்லையா?”
“ம்மா.. உங்க உங்களுக்கு மட்டும் தான் முழு உரிமையும் இருக்கு..” என்றாள் தழுதழுப்பாக.
“ம்ம் அந்த உரிமையில தான் உன்னோட விருப்பத்தை கேட்காம இந்த கல்யாணத்துக்கு சரின்னு சொன்னேன். நான் செஞ்சது தப்பா?” என்றார் மகளை நேராக பார்த்து..
“ம்மா… உங்களுக்கு புரியுதா? நான் எப்படி அந்த வீட்டுல போய் இருக்க முடியும். என்னால இப்போ மட்டுமில்ல எப்பவுமே முடியாது. அந்த வீட்டை பார்க்கும் போதெல்லாம் நம்மளை வெளியே துரத்திவிட்டது தான் நியாபகம் வந்து என்னை கொல்லும். என்னை புரிஞ்சிக்கோங்க ம்மா..”
“பாப்பா.. அதெல்லாம் நடந்து முடிஞ்சது. அந்த வாழ்க்கையை நான் நினைச்சிக்கூட பார்க்க விரும்பல. இப்போ என்னோட பயமெல்லாம் உன்னைப்பத்தி மட்டும் தான். உன் வாழ்க்கை நல்லா அமைஞ்சா தான் நான் ஜெயிச்சதா அர்த்தம். அதுக்காக உடனே போய் அவர் கூட வாழுன்னு நான் சொல்லமாட்டேன். நல்லா யோசிச்சு, நிறைய டைம் எடுத்து ஒரு முடிவுக்கு வா.. காலம் எல்லாத்தையும் சரி செய்யும் அம்மு.. கண்டிப்பா என் பொண்ணு அவ வாழ்க்கையை நல்லபடியா வாழுவா.. அதை நானும் கண்குளிர பார்க்கப் போறேன்..” என மகளின் தலையை வருடிக் கொடுக்க, இருவரையும் விழியெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் மகிழினி.
அவர்களை அப்படியே விட்டுவிட்டு மனைவியை அழைத்துக்கொண்டு வெளியில் வந்தான் ஆரியன்.
அவனைக் கட்டிக் கொண்டு மகிழினிக்கும் அழுகை பொங்கியது.
“நான்.. நாங்க.. எங்க வீட்டாளுங்க தானே இதுக்கெல்லாம் காரணம். இவங்க ரெண்டு பேரோட அழுகையிலதான் நாங்க எல்லாம் சந்தோசமா இருந்திருக்கோம்னு நினைக்கும் போதே உடம்பெல்லாம் ஒரு மாதிரி அருவருப்பா இருக்கு..” என அழுகையோடு கூற,
“ம்ச்.. மகி… நடந்து முடிஞ்சதை எப்பவும் பேசக்கூடாது. இனி அகி என்ன முடிவு எடுத்தாலும் அவளுக்கு சப்போர்ட்டா நாம இருக்கனும். சீனியருக்கு நான் ஒரு வாய்ப்பு கொடுத்தேன் அதை அவர் சரியா யூஸ் பண்ணிக்கிட்டார், இனி அகியையும் அவர் பார்த்துப்பார். ஆனா அதுக்காக அகியையோ, சீனியரையோ நீ கட்டாயப்படுத்தக்கூடாது. இந்த கல்யாணம் வேணும்னா சாதாரணமா நடந்திருக்கலாம். ஆனா அவங்க வாழப்போற வாழ்க்கை அப்படி இருக்காது. ரெண்டு பேரும் நிறைய நிறைய காம்ப்ரமைஸ் பண்ணனும். சோ அதை அவங்களே பேசி முடிவெடுக்கட்டும். நாம மூன்றாவது ஆளா வேடிக்கை மட்டும் பார்ப்போம்..” என்று மனைவிக்கு எடுத்துக் கூறி சமாதானம் செய்தான் ஆரியன்.
அப்போது கவிதாவோடு வெளியில் சென்ற விஜயா வர, இருவரையும் யோசனையாக பார்க்க “ம்மா.. நான் நாளைக்கு அகியோட சென்னை போய்ட்டு அங்க இருந்து தேனி கிளம்பிடுவேன். நீங்க எல்லாம் செட் பண்ணிட்டு ஒன் வீக் கழிச்சு வந்தா போதும்.” என்றான் ஆரி.
“ஓ.. நீ ஊருக்கு போறன்னு தான் மகி அழறாளா?” என கேள்வி கேட்டு, “அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன். நீ அவளை சமாதானம் செஞ்சி விட்டுட்டு போ..” என சிரிக்க,
“இப்போ எல்லாம் மகி சிரிச்சு நான் பார்க்குறதே இல்ல. அந்த வீட்டுக்கு மகி வந்தா வீடே ஜெக ஜோதியா இருக்கும். நித்யா புள்ளைங்க ரெண்டயும் சேர்த்துக்கிட்டு வீதி வீதியா சுத்திட்டு, கிழவிங்க கூட வம்பிழுத்துட்டு இருக்கும். நான் கூட இந்த பொண்ணை யாராலயும் சமாளிக்க முடியல பாருன்னு காயத்ரிக்கிட்ட சொல்லிட்டே இருப்பேன்..” என்றார் கவிதா.
“அத்த..” என அவரிடம் வந்த மகி “நீங்க எல்லாம் ஏன் இவ்ளோ நல்லவங்களா இருந்தீங்க? இருக்கீங்க? நீங்க ஏன் அப்பவே அவங்களை விட்டீங்க. அதனாலத்தான இப்போ மஞ்சு அத்தை இவ்ளோ கஷ்டப்படுறாங்க.” என்றாள் கோபமாக.
“ம்ச் மகி..” என ஆரியன் அதட்ட
“எந்த சூழ்நிலையிலும் அறம் தவறி ஒரு வாழ்க்கை வாழக்கூடாதுனு என் அம்மா எங்களுக்கு சொல்லி கொடுத்திருக்காங்க. அந்த வார்த்தைகள் தான் எத்தனையோ கஷ்டத்திலும் இன்னைக்கு மஞ்சுவை நேர்மையா வாழ வச்சிருக்கு. அம்முவையும் மன உறுதியோடையும், நம்பிக்கையோடையும் முன்னேற வச்சிருக்கு. பொய்யும் கோபமும் எத்தனை நாளைக்கு நம்ம கூட வரும் சொல்லு. உண்மையும் நேர்மையும் நம்ம செத்தாலும், நமக்காக நின்னு பேசும்..” என்றார் ஞானியாக.
அந்த வார்த்தைகள் அறைக்குள் இருந்த அகானாவிற்கும் கேட்கத்தான் செய்தது. அது அவளுக்கு ஒரு புது வேகத்தையும், நம்பிக்கையையும் கொடுத்தது.
அந்த வேகமும் நம்பிக்கையும் அகானாவை பழையபடி நிமிர்வாக ஓட வைத்ததது.
இங்கு ரவியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம். வினோத் அவருடனே இருந்தாலும் இருவருக்குள்ளும் பெரிதாக எந்த பேச்சு வார்த்தையும் இல்லை.
அவருக்கு அகானாவை பற்றி தெரிய வேண்டும். ஆனால் யாரிடம் கேட்பது என்று குழம்பியிருந்தார். காரணம் அகானாவைப்பற்றி யாருமே அவரிடம் பேசவில்லை. ஆகனிடம் சில முறைக் கேட்டுப் பார்த்தார். அதற்கு அவன் சரியான பதில் கொடுக்கவில்லை.
இப்போது வினோத்திடம் கேட்டாலும் பதில் கிடைக்குமா தெரியவில்லை. இந்த யோசனையிலேயே இருந்தவரை அறைக்கதவு திறக்கும் சத்தம் நிகழ்வுக்கு கொண்டு வந்தது.
உள்ளே வந்தவரை ரவி என்ன என்பது போல் பார்க்க, “உங்களை அரெஸ்ட் பண்ண வந்திருக்கோம் சார்..” என்ற அந்த காவல் அதிகாரியின் பதிலில் வினோத் ஆடிப் போய் விட, ரவியோ கண்ணை மூடி அந்த நொடியை கடக்க முயன்றார்.
முடியவில்லை..!
“ஏன்.. ஏன் சார்?” என வினோத் பதட்டமாகவே கேட்க,
“டாக்டர் ரவி டீனா இருக்குற யுனிவர்சிடில இருந்து எங்களுக்கு கம்ப்ளைன்ட் வந்துருக்கு. அதை உங்களுக்கு இப்போ சொல்ல முடியாது. உங்க லாயரோட நீங்க ஸ்டேசனுக்கு வந்துடுங்க. அவர்கிட்ட மத்த டீடைல்ஸ் ஷேர் பண்றோம்..” என்று ரவியைப் பார்க்க, அவரோ ‘போகலாம்’ என்பது போல் பார்த்தார்.