• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அ.. ஆ.. - 61

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,392
445
113
Tirupur
அகானா - 61

“அத்தை..” என தயங்கி அழைத்த ஆகனிடம், இறுக்கமான முகத்துடன் மறுப்பாக தலையசைத்தார் மஞ்சரி.

“அவங்களை மறக்குற அளவுக்கு இருக்குற மனசு, மன்னிக்கிற அளவுக்கு பெரிய மனசு இல்ல தம்பி.. இதை இப்படியே விட்டுடுங்க. எனக்கு அவங்க யாரையும் பார்க்க வேண்டாம்..” என்றார் மஞ்சரி கசந்த குரலில்.

“அத்தை.. எனக்கு உங்களை நல்லா புரியுது. ஆனா தாத்தா இன்னைக்கோ, நாளைக்கோன்னு இருக்கார். உங்ககிட்ட மன்னிப்பு கேட்டா தான், அந்த உயிர் நிம்மதியா போகும்னு நினைக்கிறார். அந்த நிம்மதியை நாம கொடுக்கனும் தானே அத்தை..” என்று கூறும் போதே அவன் குரல் உள்ளே போயிருந்தது.

மஞ்சரி அவனை வெறித்துப் பார்த்ததே அதற்கு காரணம்.

“எனக்கு அந்த பரந்த மனசு இல்ல தம்பி.. நல்லா இருக்கும் போது எல்லா தப்பையும், கொஞ்சம் கூட குற்றவுணர்ச்சியே இல்லாம செஞ்சிட்டு, சாகும் போது அதை நினைச்சு வருந்தி மன்னிப்பு கேட்டா நான் மன்னிச்சிடனுமா தம்பி. அப்போ எங்களோட எல்லா கஷ்டமும், அவங்க கேட்குற ஒரு மன்னிப்புலயும், நான் மன்னிக்கிறதுலயும் சரியாகிடுமா?” என அழுத்தமாக கேட்டார் மஞ்சரி.

“அத்தை.. நான் அந்த அர்த்தத்துல கேட்கவே இல்ல. இதோட அவங்களை உங்க பக்கத்துல வர விடாம செய்யத்தான், இந்த ஒரு தடவை அவரைப் பார்க்க வாங்கன்னு கூப்பிட்டேன். இது தப்புன்னு எனக்கும் தெரியும். ஆனா அத்தை..” என நிறுத்த,

“தம்பி நான் கஷ்டப்பட்டேன்னா அதுக்கு முழுக்காரணமும் நான் மட்டும்தான். என் காதலுக்கு தகுதியில்லாத ஒருத்தரை விரும்பி வாழ்க்கையைத் தொலைச்சேன். அதுக்கு இந்த தண்டனை சரிதான். ஆனா எந்த தப்பும் செய்யாத என் பொண்ணு ஏன் இவ்ளோ கஷ்டப்படனும் தம்பி. அவ கஷ்டத்தை பார்த்து பார்த்து ஒரு தாயா நான் எந்தளவுக்கு வேதனை அடைஞ்சிருப்பேன்னு உங்களுக்கு தெரியுமா? இல்ல புரியுமா? என் பொண்ணு தான் என்னோட உலகம். அவளோட வாழ்க்கை உங்க கூடத்தான்னு நினைக்கும் போது இதை செய்யலாம்னு ஒரு மனசு சொல்லுது தான். ஆனா அவளுக்கே இதெல்லாம் பிடிக்காது. அவளுக்காக கூட நான் இதை செய்தா என் பொண்ணு வருத்தப்படுவான்னு என் இன்னொரு மனசு சொல்லும் போது, அதை செய்யவே கூடாதுனு தோணுது. இதுக்கு மேல என்னை கட்டாயப்படுத்தாதீங்க தம்பி..” என்று முடிக்க,

“சாரி அத்த..” என ஆகன் எழ,

“நம்ம சமுதாயத்துல பொண்ணுங்கன்னா இப்படித்தான்னு ஒரு வழிமுறை வச்சிருக்காங்க தம்பி. தப்பு செஞ்சவங்க மன்னிப்பு கேட்டா, உடனே மன்னிச்சிடனும்.. இல்லைன்னா திமிர் பிடிச்சவன்னு ஒரு பட்டம் கொடுப்பாங்க. அதுக்கு மேலையும் பேசுவாங்க. இதெல்லாம் எங்க வாழ்க்கைல நாங்க அனுபவிக்காததா தம்பி.. வாயில கொடுக்குற பட்டம் தானே கொடுத்துட்டு போறாங்க. நாங்களும் பெருந்தன்மையா வாங்கிட்டு போறோம்..” என்றார் மிக மிக வருத்தமாக.

“அத்தை ப்ளீஸ்.. அம்மா பேசினதையோ, மைதிலி அத்தை பேசினதையோ மைன்ட் பண்ணாதீங்க.” என்றான் வேகமாக.

“நான் அதை எப்பவுமே மைன்ட் பண்றது இல்ல தம்பி. என்னை மாதிரியே அம்முவை நினைக்க வேண்டாம்னு மட்டும் சொல்லுங்க. அவளுக்கு இதெல்லாம் சுத்தமா பிடிக்காது. என்னை மாதிரி அமைதியாவும் இருக்கமாட்டா. பார்த்துக்கோங்க..” என்றார் அவன் மனம் கோணாமல்.

“அத்தை.. அன்னைக்கு சொன்னது தான் இப்பவும் சொல்றேன். எனக்கு அம்முவை தெரியும். நல்லாவே புரியும். இனி அம்முவை பத்தி நீங்க கவலைப்படவே வேண்டாம். நான் அவளை நல்லாவே பார்த்துக்குவேன்.. ப்ளீஸ் இனி அதை நினைச்சு கவலைப்படாதீங்க..” என்றவன், “நான் கிளம்பறேன் த்த.. அம்மு வந்தா நான் வந்துட்டு போனேன்னு சொல்லிடுங்க..” என்றவன், மஞ்சரியின் முகம் பார்த்து “என்ன த்த?” என்றான் வேகமாக.

“தம்பி… இப்போ நான் இந்த பேச்சை ஆரம்பிக்கக்கூடாது தான். ஆனா நான் ஒரு அம்மா. என் பொண்ணோட வாழ்க்கை எனக்கு ரொம்ப முக்கியம். நீங்க என்னையும் புரிஞ்சிக்கனும்..” என்று நிறுத்த,

“என்ன அத்த..?” என்றான் புரியாமல்.

“இல்ல தம்பி.. நீங்க ஒரு பக்கம், அம்முவ ஒரு பக்கம்னு இப்படியே எவ்ளோ நாள் இருக்க முடியும்?” என்றார் வேதனையாக.

“இப்போ இருக்குற சிச்சுவேஷன் உங்களுக்கு தெரியும்ல அத்த. நாங்க ஒன்னும் சின்ன புள்ளைங்க இல்ல. அதோட அம்முவுக்கும் நான் டைம் கொடுக்கனுமே. அவளும் இந்த மேரஜை அசெப்ட் பண்ணிட்டு, என் கூட லைஃப் ஸ்டார்ட் பண்ணனும். அதுக்குதான் நான் அம்முவுக்கு டைம் கொடுத்துருக்கேன். சோ எங்களை நினைச்சு கவலைப்படாதீங்க. சீக்கிரம் எல்லாம் சரியாகிடும்.. இல்ல நான் சரி பண்ணிடுவேன்..” என நம்பிக்கையாக பேசி விடை பெற்று கிளம்ப, மஞ்சரிக்கு மனதில் பாரமேறி விட்டது.

அன்றுமே ஆகன் இதைச் சொல்லித்தான் திருமணத்திற்கு கேட்டான். அவன் மேல் பலமடங்கு நம்பிக்கை இருக்கிறது தான். ஆனால் மகள் அந்த நம்பிக்கை இல்லை. எப்போது வேண்டுமானாலும் இந்த உறவை தூக்கியெறிய தயங்கமாட்டாள். இவளை எப்படி சரிகட்டி ஆகன் தன் வாழ்க்கையை சரி செய்து கொள்ளப்போகிறான் என்று நினைத்தாலே நெஞ்சமெல்லாம் வலித்தது.

அன்று அழகர் மயங்கி விழுந்ததுமே ஆகன் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுவிட்டான்.

கடந்த சில மாதங்களாக தங்களை சுற்றி நடக்கும் நிகழ்வுகள், மைதிலியின் போக்கு, மகனின் சிறை வாசம், பேரனின் திடீர் திருமணம், மனைவியின் இழப்பு என அனைத்தும் ஏற்கனவே அவரை போட்டு பயமுறுத்தியிருக்க, திடீரென ரஞ்சனியின் மீதான மகனின் கோபமும், மகனின் பிள்ளை பாசமும் அவரை மொத்தமாக உலுக்கியிருக்க, அனைத்தும் சேர்ந்து அவர் ரத்த அழுத்தத்தை எகிற வைத்திருந்தது.

இரத்த அழுத்தம் அதிகமானதால், அவருக்கு பெராலைஸ் அட்டாக் வந்திருக்க குடும்பமே அதிர்ந்து தான் போனது.

அது ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம் ‘ஒரு பொண்ணடிக்கு துரோகம் செஞ்சா, கடவுள் பார்த்துட்டு சும்மாவா இருப்பான். இதோ ஒவ்வொன்னா நடக்குதுல்ல..’ என ஊர்க்காரர்களின் பரிகாசமும் சேர்ந்து கொள்ள, வீட்டினருக்கு பயம் தொற்றிக் கொண்டது.

முக்கியமாக ரஞ்சனிக்கும், மைதிலிக்கும். அவர்கள் பேசுவது உண்மை எனும் பட்சத்தில் அடுத்து நமக்குத்தானோ என்ற பயம் அவர்களை மீண்டும் குறுக்குத்தனமாக, கிறுக்குத்தனமாக யோசிக்க வைத்தது.

அதனால் ரஞ்சனியின் மீதிருந்த கோபத்தையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, மீண்டும் அவரிடம் இதற்கு என்ன செய்யலாம் என மைதிலி கேட்க, மைதிலி தன்னிடம் பேசிய மகிழ்வில் ரஞ்சனியும் ஒரு திட்டத்தை கூறினார்.

“அண்ணி.. வருசநாட்டுக்கு முன்னாடி இருக்குற கருப்பசாமி கோவில் பக்கத்துல ஒரு சாமியாடி இருக்கார். அவர்கிட்ட போனா, கண்டிப்பா நமக்கு ஒரு தீர்வு கிடைக்கும்.” என்று சொல்லி, அங்கு அழைத்து சென்றார் ரஞ்சனி.

இவர்களைப் பார்த்ததுமே “பாதிக்கப்பட்ட பெண்களோட மன்னிப்புதான், உங்க குடும்பத்துல நடக்கிற எல்லா பிரச்சினைக்கும் தீர்வு. ஆனா அந்த பொண்ணுங்க உங்களை மன்னிக்கமாட்டாங்க..” என கூறிவிட்டு கண்களை மூடிக் கொண்டார்.

மைதிலிக்கு அதன் நிதர்சனம் புரிந்தாலும், ரஞ்சனிக்கு இது என்ன பெரிய விசயமா? நாம இறங்கிப் போய் மன்னிப்பு கேட்டா மன்னிக்க மாட்டாங்களா என்ற திமிர் இருந்தது. அதனால் அதைபற்றி கவலைப்படாமல் தந்தையிடம் கூற, அவருக்குமே இந்த பிரச்சினை முடிந்தால் போதும் என்ற எண்ணம் தான். அதனால் அதற்கு சம்மதித்தார்.

சங்கரிடம் இதை சொல்ல, “நான் போய் இதை மஞ்சுகிட்ட கேட்கமாட்டேன். உனக்குத் தேவைன்னா நீ போ..” என முகத்தில் அடித்தார் போல் கூறிவிட,

வேறுவழியில்லாமல் வினோத்தை அழைத்துக் கொண்டு மஞ்சரியிடம் சென்றார்.

இருவரையும் பார்த்து புருவம் சுருக்கினாலும், மகிழினியைப் பார்க்க வந்திருப்பார்கள் என நினைத்து, அவராக எதுவும் பேசவில்லை.

மகிழினி தான் “வாங்க மாமா” என் வினோத்தை மட்டும் அழைத்தாள்.

“எப்படி இருக்க மகி?” என்ற வினோத், ரஞ்சனியைப் பார்க்க, அவரோ மஞ்சரியை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

“ரஞ்சிக்கா..” என வினோத் ஒரு அதட்டல் போட, அதில் சுயத்திற்கு வந்தவர், “பொண்ணைக் கொடுத்துருக்கோம், சம்மந்தங்க்காரங்க வந்துருக்காங்க என்ற பயமோ பதட்டமோ இல்லாம எப்படித்தான் சிலர் இருக்காங்களோ?” என குத்தல் பேச்சில் ஆரம்பிக்க,

“அதையே அவங்க திருப்பி கேட்டா, உன் மூஞ்சை எங்க கொண்டு போய் வச்சிப்ப ரஞ்சி..” என வினோத் மீண்டும் அதட்ட,

“மாமா தேவையில்லாம எந்த பேச்சும் என் மாமியாரை பேசக்கூடாதுனு சொல்லுங்க. எதுக்கு வந்தாங்களோ அதை மட்டும் பேச சொல்லுங்க..” என மகிழினி கோபமாக கத்த, இது எதிலும் தலையிடாமல் அமைதியாகவே இருந்தார் மஞ்சரி.

‘நீ என்ன பேசினாலும் எனக்கு ஒன்றும் இல்லை’ என்ற பாவம் தான் அவரிடம்.

பதிலுக்கு மஞ்சரி ஏதேனும் பேசியிருந்தால் கூட கோபம் வந்திருக்காதோ என்னமோ? அவரின் அமைதி ரஞ்சனியை மேலும் பேச வைத்தது.

“நல்லா இருந்த குடும்பத்துக்குள்ள சனியன் மாதிரி நுழைஞ்சி, எங்க குடும்பத்தையே நாசம் பண்ணினது நீ.. என் அண்ணனையும் அவன் வாழ்க்கையையும் சரி பண்ணிண நாங்க கெட்டவங்களா? ஹ்ம்ம் இது எந்த ஊர் நியாயம். நாங்க செஞ்சதை தப்புன்னு இப்போ வரைக்கும் எங்களால ஒத்துக்க முடியாது. ஆனா எங்களுக்கும் இப்போ வேற வழி இல்ல. நீ மன்னிச்சாத்தான் எங்க அப்பாவுக்கும், எங்க குடும்பத்துக்கும் நல்லதாம். சீக்கிரம் வந்து என் அப்பாவை மன்னிச்சி விடு..” என ஆத்திரமாகவும், திமிறாகவும் பேச, சட்டென எழுந்த வினோத் “மன்னிச்சிடுங்க..” என மஞ்சரியைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டுவிட்டு வெளியேறிவிட, மஞ்சரியின் பார்வையோ மகிழினியைத் தொட்டு நின்றது.

“அத்தை.. நீங்க உள்ள போங்க.. இவங்ககிட்ட நான் பேசிக்கிறேன்..” என்ற மகி, மஞ்சரியை உள்ளே அனுப்பிவிட்டு, ரஞ்சனியின் முன்னே வந்து நின்றார்.
“நீ என்னோட அம்மா.. பெத்தவங்களை மரியாதை இல்லாம பேசவோ, அவங்ககிட்ட மரியாதை இல்லாம நடந்துக்கவோ என் அப்பா சொல்லிக் கொடுக்கல. அந்த ஒரு காரணத்துக்காக மட்டும் தான் உன்கிட்ட நான் ரொம்ப பொறுமையா பேசிட்டு இருக்கேன். இனி ஒரு முறை இப்படி எங்க வீட்டுல வந்து நின்னு பேசினா, நான் அமைதியா போகமாட்டேன். வெளியே போங்கன்னு நான் சொல்ற அளவுக்கு வச்சிக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன்..” என ஆத்திரமாகவும், அழுத்தமாகவும் கூற,

“ஏய்..?” என கை ஓங்க வந்த ரஞ்சனியைப் பார்த்து முறைத்தபடியே நின்றாள் மகிழினி.

அதே நேரம் மகளைப் பார்க்க உள்ளே வந்த சங்கர், மனைவியின் இந்த செய்கையில் என்ன நடந்திருக்கும் என யூகித்து, மனைவியின் ஓங்கிய கையைப் பிடித்து முறுக்கியவர், அவரை சட்டென அவரை இழுத்துக்கொண்டு வெளியில் சென்றுவிட்டார்.

அன்று நடந்த நிகழ்வில் பெரிதளவில் காயப்பட்டது மகிழினிதான். தன் தாயின் குரூர முகம் ஒவ்வொன்றாக வெளியில் வருவதைப் பார்க்க, பார்க்க அவளுக்கு மனம் முழுவதும் வலி பெருகியது.

அதை கவனித்த மஞ்சரி “மகி.. இதெல்லாம் எங்களுக்கு பழக்கம்தான். நீ மனசை போட்டு குழப்பிக்காத. ஆரிக்கிட்டயும், அம்முக்கிட்டயும் இதைப்பத்தி சொல்லாத. தெரிஞ்சா மறுபடியும் பிரச்சினை செய்வாங்க. அது ரெண்டு பேர் வாழ்க்கைக்கும் நல்லது இல்ல..” என பொறுமையாக எடுத்துச் சொல்ல,

அப்போது சரியென்றாலும், அவர்களிடம் கூறவில்லையென்றாலும் ஆகனிடம் கூறியிருந்தாள்.

அதையெல்லாம் இப்போது யோசித்த மஞ்சரிக்கு மகளின் வாழ்க்கை நினைத்து மிகவும் பயமாக இருந்தது.

என்னதான் ஆகன் பார்த்துக் கொள்வான் என்றாலும், மகளின் பிடிவாத குணத்தை நினைத்து பயம் கொள்ளாமல் இருக்க முடியவில்லை மஞ்சரியால்.

இங்கு சிறையில் இருந்த ரவியின் எதிரில் நின்றிருந்தார் துரைப்பாண்டி. அவர் கூறிய செய்தியில் ரவியின் முகத்தில் கோபம் கொழுந்து விட்டெரிந்தது.