• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

இராக்கதனின் கண்மணி! 12

kkp2

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
36
27
18
Tamil nadu
அத்தியாயம் 12

"விஷ்வா கூட தான் இனியா போயிருக்கா. இல்லவே இல்லைன்னு சொன்னிங்களே!" என துகிரா விக்ரமிடம் கேட்க,

'இதெப்படி சாத்தியம்?' என்று தான் கண்டான் விக்ரமும். இதோ மண்டபத்தினுள் செல்கிறான் விஷ்வா.

"உள்ள கேமரா இருக்கா?" விக்ரம் கேட்க,

"அன்னைக்கு மாப்பிள்ளை வீட்டுக்காரங்க ரொம்ப வற்புறுத்தி கேட்டதால தான் நிறைய மாத்தி இருந்தோம் உள்ள. அரசியல்வாதிங்க தெரிஞ்சவங்கனு சொல்லி ஒரே கலாட்டா மாப்பிள்ளை வீடு சைடு. கடைசி நேரத்துல தான் அங்க கேமரா ஃபிக்ஸ் பண்ணினது!" என சொல்லி அதையும் காண்பித்தார்.

விஷ்வா அங்கே இங்கே என செல்கிறானே தவிர ஒரு இடத்தில் அமரவில்லை. ஐந்து நிமிடங்களாய் அப்படி தான் நடந்து கொண்டிருந்தாள்.

"இதோ இனியா!" துகிரா அவளைக் காட்ட,

"அது அவங்க அம்மா! இவங்க ரெண்டு பேரும் பேசும் போது தான் நான் கேட்டேன். அப்ப தான் இனியா லவ் பண்றானு எனக்கு தெரியும்" துகிரா தகவல் சொல்ல, இனியாவும் அவள் அன்னையும் உள்ளே செல்வது தெரிந்தது.

மீண்டும் சில நிமிடங்களுக்கு இவர்கள் யாரும் அதில் தென்படவில்லை. பின் இதோ விஷ்வா செல்கிறானே.

"இவங்க மண்டபம் உள்ள தான் இவ்வளவு நேரம் இருந்தாங்களா? எப்படி யாரும் கவனிக்காம விட்டாங்க?" ஆச்சர்யமாய் துகிரா கேட்க,

"அங்க லைட் மேன்ல இருந்து சமையல்காரங்கனு நிறைய பேர் இருக்காங்க. யாரை சந்தேகப்பட முடியும்?" என விக்ரமும் சொல்ல, சில நிமிடங்களில் எல்லாம் மண்டபத்தின் உள்ளே ஓரமாய் விஷ்வாவோடு இனியா நடந்து வருவது தெரிந்தது.

"பாருங்க! அவங்க கூட தான் இனியா போயிருக்கா!" என்றாள் துகிரா.

"ப்ச்! வெயிட் பண்ணு!" என்றவன் வேறு வேறு கேமராக்களில் தேட இருவரையும் காணவில்லை.

"உன் அக்கா பக்கா கிரிமினல் போல. விஷ்வாவை எந்த பக்கமா கூட்டிட்டு போனான்னு கூட தெரியல!" விக்ரம் சொல்லவும் துகிரா கோபமாய்,

"ஏன் விஷ்வா தானே தேடி வந்திருக்கார். அப்ப அவர் தான் மண்டபத்தை பத்தி தெரிஞ்சு விசாரிச்சு கூட்டிட்டு போயிருக்கார்" என்றாள்.

"ஷிட்! வாயை மூடு!" என அப்போதும் அவளை எரிந்து விழுந்தான் விக்ரம்.

"எந்த பக்கம் தான் போனாங்க!" என பல நிமிட தேடலுக்கு பின், மண்டபத்தின் வெளியே வந்ததைப் போலவே மெதுவாய் உள்ளே சென்றாள் இனியா.

"அப்போ விஷ்வா?" விக்ரம் பதற, அவன் அங்கிருந்த ஆட்டோவில் விஷ்வா மட்டும் ஏறுவதும் தெரிந்தது.

"அப்போ இனியா இவங்களோட போகலையா?" மீண்டும் குழம்பிவிட்டாள் துகிரா.

"அவ கழட்டி விட்டிருக்கா. தெரியல உனக்கு? அதான் அடுத்த நாள் அப்படி ஒரு முடிவுக்கு வந்திருக்கான் விஷ்வா!" அப்பொழுது இருந்ததை விட இப்பொழுது இன்னும் அதிக கோபம் இனியா மேல் விக்ரமிற்கு.

"என்ன பேசுறீங்க நீங்க? அப்படினா அவ எப்படி காணாம போனா மண்டபத்துல இருந்து? ரெண்டு பேருமே எதுவோ பிளான் பண்ணிருக்காங்க. இது கூடவா புரியல!" என்றாள் துகிராவும்.

"கொஞ்சம் பதட்டப்படாம பாருங்க தம்பி!" என மண்டபம் உரிமையாளர் சொல்ல,

"அடுத்து கொஞ்சம் வேகமாய் வீடியோவை ஓட விட்டு பார்த்துக் கொண்டிருந்தனர்.

அன்று இரண்டு மணி வரையான வீடியோ வரை இனியா வெளிவரவில்லை. சரியாய் இரண்டரை மணிக்கு மண்டபத்தின் வாசலில் அவள் வேகமாய் செல்வது தெரிந்தது.

"பாரு உன் சிஸ்டர் பண்ற வேலையை. எந்த பக்கம் இருந்து வருதுன்னே தெரியல. வாசலுக்கு போயாச்சு" விக்ரம் சொல்ல, இனியா வாசலில் இறங்கி தனியே நடக்க தொடங்கி இருந்தாள்.

அவ்வளவு தான் அதன்பின் அவள் வரவில்லை என்பதை விடிய வரையான வீடியோ பார்த்து தெரிந்து கொண்டிருந்தனர்.

"ஏன் தனியா போறா? விஷ்வா கூட போகல?" என துகிரா குழம்ப, நன்றி சொல்லி அங்கிருந்து கிளம்பிவிட்டனர் இருவரும்.

'என்ன இது? எங்கே சென்றாள் ஏன் விஷ்வாவுடன் செல்லவில்லை? இனி எங்கே சென்று தேடுவது?' என தனக்குள் மீண்டும் மீண்டும் சிந்தித்து குழம்பி என காரில் துகிரா அமர்ந்திருக்க,

"நான் ஒண்ணு சொல்றேன். அப்படியும் இருக்கலாம் இல்ல?" விக்ரம் கேட்க,

"என்ன?" என்றவள் இனியாவை எப்படியும் கண்டுவிட்டால் போதும் என்று தான் நினைத்தாள்.

"அதான் அந்த பொண்ணு இருக்குல்ல. அந்த பொண்ணு விஷ்வாகிட்ட மட்டும் தான் பேசிருக்குமா?" விக்ரம் கேட்க,

"இங்க பாருங்க. ரொம்ப பேசுறீங்க. எங்களைப் பார்த்தா எப்படி தெரியுது உங்களுக்கு?" துகிரா கேட்க,

"அப்படியும் இருக்கலாம்ல? நினைச்சு பாரு. விஷ்வாவை தேடி வரணும்னா என் வீட்டுக்கு தான் வரணும். ஆனா வர்ல அவ. அப்ப எக்ஸ்ட்ரா அஃபர்..." என அவன் சொல்ல வந்தது தான் தாமதம்.

"வாயை மூடுயா! எப்ப பாரு யோசிக்காம லூசு மாதிரி எதாவது பேசிகிட்டு!" என சொல்லியே விட்டாள் துகிரா.

"ஏய் என்ன சொன்ன? நான் லூசா? தேவை தான். உன்னை கூட்டிட்டு அலைஞ்சேன்ல.." என்றவன்,

"பார்த்து பேசு.. இல்ல பொண்ணுன்னு கூட பார்க்க மாட்டேன்!" என்றான் கோபமாய்.

"வருதா கோபம் வருதா? அப்ப நீங்க சொன்ன வார்த்தைக்கு எனக்கு எவ்வளவு கோபம் வரணும்? இதையே உங்க அம்மா முன்னாடி சொல்ல முடியுமா உங்களால?" துகிராவும் விடவில்லை.

"ஜஸ்ட் அப்படி இருக்கலாம்னு தான் சொன்னேன். அதுக்கு என்னை அவ்வளவு பேசுவியா நீ? ஹெல்ப் பண்ணலாம்னு வந்தேன்ல?" என விக்ரமும் பேச,

"நீங்க பண்ற ஹெல்ப் தான் தெரியுதே! என்னை சொல்லணும். உங்களோடலாம் வந்தேன்ல" என தலையில் அடித்துக் கொண்டாள்.

"இப்ப வரைக்கும் அம்மாக்காக மட்டும் தான் பாக்குறேன். இவ்வளவு பொறுமை எல்லாம் எனக்கு கிடையாது. ரொம்ப சோதிக்குற நீ!"

"எனக்குமே தான். இப்பவும் நீங்க சொன்னதை உங்க அம்மாகிட்ட சொல்ல எனக்கு ரெண்டு நிமிஷம் ஆகாது. ஆனா அம்மா பையனுக்கு இடையில சண்டை இழுத்து விடுற ஆள் நான் இல்ல" என்றாள் துகிராவும்.

"ப்ச்!" என்றவனுக்கு அத்தனை எரிச்சலும் இவளை எதுவும் செய்ய முடியவில்லையே எனும் ஆதங்கமும்.

'அவ்வளவு தான் உச்சுக் கொட்டியாச்சு!' துகிரா நினைக்க, அது சரி என்பதை போல விக்ரம் அதன்பின் பேசவில்லை அவளிடம்.

வீடு வரும் வரை அத்தனை அமைதி இருவரிடமும். துகிரா வீடு வந்ததும் இறங்கி ஓட,

"ம்மா!" என பின்னோடே வந்திருந்தான் விக்ரமும்.

"போன் பண்ணினேன் எடுக்கலையே டா நீ? போன வேலை என்னாச்சு?" என கேட்டு தான் வந்தார் மிருதுளா.

"போன்!" என தன் பாக்கெட்டில் தேடி இல்லை என மீண்டும் காருக்கு சென்று காரில் இருந்து எடுத்துப் பார்க்க சைலன்ட்டில் இருந்தது மொபைல்.

அதற்குள் துகிரா அங்கே நடந்ததை எல்லாம் சொல்ல ஆரம்பித்து இருந்தால் மிருதுளாவிடம்.

"விஷ்வா போனானா? என்னம்மா இது? அப்போ அப்படி என்ன தான் நடந்துச்சு? இனியா எப்படி எங்க போயிருக்கும்?" என்றார் மிருதுளாவும் துகிரா நினைத்ததையே!.

"அதான் ம்மா எனக்கும் தெரியல!" என்றவள் சோர்வாய் அமர, விக்ரம் வீட்டினுள் வந்தான்.

"வேற எதாவது பண்ண முடியுமா விக்ரம்?" மிருதுளா கேட்க,

"போலீஸ்ல கம்பளைண்ட் குடுங்க. வேற எதுவும் பண்ண முடியாது!" விக்ரம் சொல்லிவிட்டு தன்னறைக்கு செல்ல,

"பேசாம அப்படி பண்ணிடுவோமா துகிரா?" என்றார் மிருதுளாவும்.

"எனக்கும் பயமா இருக்கு ம்மா! அதுவும்..." என பல்லைக் கடித்து விக்ரமை கூற வந்த துகிரா பின் கூறாமல் விட்டு விட்டாள்.

"போலீஸ்ல கம்பளைண்ட் நான் குடுத்தா என் அம்மா, அப்பா, இனியா அம்மா, அப்பானு எல்லாரோட பேரும் வரும்.
அவங்க கம்பளைண்ட் குடுக்க ஏன் வரலைனு கேட்பாங்க இல்ல?" மிருதுளா உடனே யோசிக்க துவங்க,

"கேட்கட்டும் மிரும்மா. கேட்டு அந்த வீட்டுக்கு போய் பேசட்டும். அப்ப தான் அவங்களுக்கும் ஒரு பயம் வரும். பொண்ணை காணும்னு கொஞ்சம் கூட வருத்தம் இல்லைல. என்ன மனுஷங்களோ!" என அவர்கள் மேல் கோபம் பாய்ந்தது துகிராவிற்கு.

"என்னவோ போடா.. உன் குடும்பதுக்கே நேரம் சரி இல்லை போல. எல்லாம் தப்பு தப்பா நடக்குது. எல்லாம் சரியானதும் உங்க குலதெய்வ கோவிலுக்கு வர்றதா வேண்டிக்கோ!" என்றார் மிருதுளா.

"அட போங்க மிரும்மா! மூனே நாள் தான். ஏன் டா பொறந்தோம்ன்ற அளவுக்கு நொந்து போயிருக்கேன்." என்றவள்,

"ஆனா ஒண்ணு! இவ்வளவு கஷ்டத்துலயும் உங்களை மாதிரி நல்லவரை எனக்குன்னு அனுப்பிருக்காரே அந்த கடவுள். கண்டிப்பா மெச்சிக்கணும் தான் நான்" என்று சொல்ல,

"கிண்டல் பண்றியா துகி?" என்று நிஜமாய் புரியாமல் கேட்டார் மிருதுளா.

"சாமி சத்தியம் மிரும்மா. என்ன டா வாழ்க்கைனு நினைக்குற அளவுக்கு கஷ்டத்தை குடுக்குற ஆண்டவன் தான் கொஞ்சமா பொழைச்சுக்கோன்னு ஹெல்ப்க்கு யாரையாவது அனுப்புவாரு. அந்த கல்யாணத்துல இஷ்டமில்லாம சம்மதிச்ச எனக்கு கூட தப்பிக்க விக்ரம் சாரை அனுப்பினார் இல்லையா அது மாதிரி. இதோ யாருமில்லாம என்ன பண்ண போறோம்னு தவிச்ச எனக்கு நீங்க இப்ப துணையா கூட இருக்கீங்களே. இந்த மாதிரி!" என உணர்ந்து துகிரா கூற,

"அய்யோ துகி! அடுத்து என்ன பண்ணனு கேட்டா நீ என்னென்னவோ பேசுறியே! என்னம்மா?" என்றார் மிருதுளா கவலையாய்.

அதே நேரம் விக்ரம் மேலிருந்து சட்டையை மாற்றிவிட்டு சட்டையின் முழுக்கையை மடித்து ஏற்றி க் கொண்டு வர,

'புடுங்குறது பூராம் தேவையில்லாத ஆணி தான். ஆனா இந்த சீன் காட்டுற வேலைக்கு மட்டும் குறைச்சல் இல்லை' இப்படி தான் விக்ரமைக் கண்ட துகிரா மனம் நினைத்துக் கொண்டது.

"விக்ரம்!" மிருதுளா அழைக்க,

"முக்கியமான வேலை இருக்கு ம்மா. நான் வர லேட்டாகிடும்!" என்று சொல்லி நிற்காமல் சென்றுவிட்டான் விக்ரம்.

"இவங்க என்ன வேலை பாக்குறாங்க மிரும்மா?" துகிரா கேட்க,

"ம்ம்ம்! வேண்டாத வேலை!" என கடுப்பாய் சொல்லிவிட்டவர் சொல்லிலும் வார்த்தைகளும் என துகிராவும் சிரித்தாள்.

"உன்னை மாதிரியே ஆகிட்டு வர்றேன் நான்!" ஏன் தலையில் தட்டிக் கொண்டவர்,

"சாப்பிட வா!" என்று சொல்லி அழைத்து சென்று அமர வைத்து,

"பைனான்ஸ் பிசினஸ் தான் விக்ரம் பாக்குறது. அதுவும் மெயினா படம் தயாரிப்பாங்க இல்லையா அவங்களுக்கு" என்றவர்,

"இதை தொழிலா ஆரம்பிச்ச பின்ன இப்படி ஆனானா இல்ல முன்னவே நான் தான் கவனிக்கலையானு தெரியல.. இப்பலாம் எனக்கு ஆயிரத்தெட்டு கவலைனா அதுல ஆயிரத்து ஏழு இவனை பத்தினதா தான் இருக்கும்" என சொல்லி விவரமாய் அதை விவரித்தார்.


தொடரும்..