• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

இராக்கதனின் கண்மணி! 6

kkp2

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
38
30
18
Tamil nadu
அத்தியாயம் 6

அடுத்தநாள் காலை ஏழு மணிக்கு கண் விழிக்கவே அவ்வளவு சோம்பலாய் இருந்தது துகிராவிற்கு.

ஏதோ நீண்ட நாட்கள் உறக்கம் இல்லாததை போன்ற மொத்த உறக்கம் இப்பொழுது தேவை என்பதாய் உடலெல்லாம் வலி.

சரியாய் சொல்ல வேண்டும் என்றால் அவள் உறக்கம் பறிபோனது என்னவோ அந்த திருமண மண்டபத்தில் இருந்த அந்த ஒரு நாளும் அடுத்து விக்ரம் வீடு வந்த அன்றும் என இரண்டே நாட்கள் தான்.

ஆனால் மொத்தமாய் சோர்ந்து போயிருந்தாள். தானுண்டு தன் வேலையுண்டு என இருந்த பெண்.

குடும்பத்துக்காகவே தன் ஆசைகளை விருப்பங்களை விட்டு அவர்கள் கனவுக்கு உருவம் கொடுக்க நினைத்திருக்க, இப்படி அவர்களே தன்னை ஒதுக்கி தள்ளி வைத்துவிட்டார்களே என்ற நினைவே அவளை வாடிப் போக செய்தது.

இது தன் வீடு அல்ல என தெரியும். ஆனாலும் இத்தனை மணி ஆன போதும் எழுந்து கொள்ள முடியவில்லை.யார் என்றே தெரியாத நல் உள்ளங்களாய் தான் மிருதுளா ஸ்ரீனிவாசனைக் கண்டாள் துகிரா.

அடுத்து என்ன என யோசிக்கவே பயமாய் இருந்தது. அடுத்து என்ன என்ற கேள்விக்கு என்ன விடை இருக்கிறது தன் வாழ்வில் என நினைக்க, உள்ளமெல்லாம் வாடி இன்னும் சோர்வுற்றது.

'இதோ! இப்பொழுது வருவான் அவன். அவளை வெளியே அனுப்புங்க என பெற்றோரிடம் தன்னை குறை சொல்லிக் கொண்டு!' என்று விக்ரமையும் நினைத்துக் கொண்டாள்.

அப்பொழுது தான் விஷ்வாவின் நியாபகமும் தன்னைப் போல தோன்றியது துகிராவிற்கு.

பாவம் தான் அந்த விஷ்வா என நினைக்கும் போதே 'விஷ்வா இந்த உலகில் இல்லை என்றால் அப்பொழுது இனியா? அவளை எங்கே?' என மனமும் பதறியது.

தன்னையே கேட்க ஆளில்லாத நிலையில் அவளை யாரிடம் சென்று என்னவென்று கேட்க என இன்னும் பதறியது அவள் மனது.

இருந்தாலும் இந்த வாழ்க்கை இவ்வளவு மோசமானதாய் இருக்க வேண்டாம். தான் யாரென்றே தெரியாத ஒருவர் வீட்டில் இப்படி நிலையில் இருக்க, இனியா எங்கே என்ன செய்து கொண்டிருப்பாள்? யார் மூலம் தேடிட? என துகிரா நினைக்கும் போது யாரோ கதவை தட்டும் சத்தத்தில் வேகமாய் எழுந்தாள் துகிரா.

வேகமாய் கதவை தட்டும் சத்தம். அவனாய் இருக்குமோ? என பயந்தவள், பின் எதாவது பேசட்டும் என கோபமாய் நினைத்து கதவை திறக்க,

"உஃப்!" என நெஞ்சில் கைவைத்து நின்றிருந்தார் மிருதுளா.

"தூங்கிட்டு இருந்தியா? டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?" என மிருதுளா கேட்க, அவர் எண்ணம் என்னவாய் இருக்கும் என அறிந்தவளுக்கு அந்த நிலையிலும் புன்னகை வர தான் செய்தது.

"இந்த ரூம்க்கு வேற யாரும் வர மாட்டாங்க. அதனால முடிஞ்ச வரை லாக் போடாத டா" என கெஞ்சலாய் அவர் கேட்க,

"சாரி!" என்றாள் உடனேயே. அவர்கள் வீட்டில் இருந்து கொண்டு அவர்களுக்கே கஷ்டம் கொடுக்கிறோமே என்ற எண்ணத்தில்.

"காபி கொண்டு வந்தேன். நீ தூங்குறதா இருந்தா நான் பிளாஸ்க்ல போட்டு வைக்கவா?" என்று கேட்க,

"அதெல்லாம் வேண்டாம். இருக்கட்டும்!" என வாங்கிக் கொண்டாள்.

"பாத்ரூம்லேயே புது பிரஷ் இருக்கும். யூஸ் பண்ணிக்கோ. எதாவது வேணும்னா கேளு!" என்றவர் அவள் உடையையும் கவனித்தார்.

நேற்றைக்கு முந்தைய நாள் அவள் திருமணப் புடவையில் இருந்தாள். நேற்று வரும் பொழுது இதே சல்வாரில் இருந்தாள். இப்பொழுது வேறு உடைக்கு? என அவர் யோசித்துப் பார்க்க,

"நான் போய் பிரஷ் பண்ணிக்கவா?" அவர் நீண்ட நேரமாய் தன்னை ஆராயும் பார்வை பார்த்ததில் தயங்கி கேட்டாள் துகிரா.

"ஹான்! சரி டா!" என்றவர் வெளியில் சென்றார் அதே யோசனையோடு.

"என்ன பண்றா மிரு அந்த பொண்ணு?" என கணவன் கேட்க,

"அதை ஏன் கேட்குறீங்க. ஒரு நிமிஷம் கதவை திறக்கலைனதும் பதறிடுச்சு" என்றவர் நடந்ததை சொல்ல,

"பாவம்! அவளுக்கே இனி என்ன பண்ணனும்னு தெரியல. சின்ன பொண்ணு வேற!" என ஸ்ரீனிவாசன் சொல்ல, அதை கேட்டபடி தான் அமர்ந்திருந்தான் விக்ரமும்.

"எல்லாருக்குமே அவசரம். விஷ்வா அப்படி ஒரு முடிவை எடுத்ததும் தப்பு. அவன்கிட்ட சொல்லாம நீ அந்த பொண்ணை கூட்டிட்டு வந்ததும் தப்பு. எல்லாம் சரியா நடந்திருந்தா ரெண்டு பேரும் வாழ்க்கையை தொலைச்சிருக்க மாட்டாங்க!" என்றார் மிருதுளா.

"ம்மா!" என ஆயாசமாய் அழைத்தான் விக்ரம்.

உன்னால் தான் விஷ்வாவின் மரணம் என்பதை போன்ற இந்த பேச்சுக்கள் அவ்வளவு வலியை கொடுத்தது விக்ரமிற்கு.

"அவனாவது போய் சேர்ந்துட்டான். இந்த பொண்ணு வாழ்க்கை? பார்க்கவே பாவமா இருக்கு. போட்டுக்க ட்ரெஸ் கூட இல்லாம கேட்கவும் ஆளில்லாம. இதெல்லாம் கொடுமைங்க!" என அவ்வளவு வருத்தப்பட்டார் மிருதுளா.

"சும்மா இரு மிரு. கஷ்டம் தான் இல்லைனு சொல்லல. ஆனா இதையெல்லாம் நினைச்சு நீ உன் உடம்புக்கு எதையும் இழுத்து வச்சுக்காத" என்றார் ஸ்ரீனிவாசன் பொறுப்பான கணவனாய்.

"அதுக்கு தான் சொல்றேன். அவளை என்னவாது சொல்லி அனுப்பி விடுங்க. இல்லை பணம் குடுங்க. இப்படி கூட வச்சு உங்க உடம்பைக் கெடுத்துக்காதிங்க!" என்ற விக்ரம்,

"கண்டவங்களுக்கு எல்லாம் இரக்கப்பட்டு எதுவும் ஆகப் போறது இல்லை இங்க!" என்றான் முணுமுணுவென்றாலும் மற்றவர்களுக்கு கேட்கும்படிக்கு தான்.

"விக்கி பல தடவை சொல்லிட்டேன் இப்படி பேசாதனு. அப்படி என்ன டா கோபம் அந்த பொண்ணு மேல?" என மிருதுளா குரலை உயர்த்த,

"உங்களுக்கு தெரியாதும்மா. அவன் எப்படில்லாம் இந்த பொண்ணை விரும்பினான் தெரியுமா? எப்படில்லாம் வாழ கனவு கண்டான் தெரியுமா? மனசு வலிக்குது" என்றான் விக்ரம் அத்தனை வருந்தி.

"எல்லாம் சரி தான். ஆனா விஷ்வா பக்க நியாயம் தெரிஞ்ச உனக்கு இந்த பொண்ணு பக்கமும் எதாவது நியாயம் இருக்கும்னு ஏன் தோணல?" என்றார்.

"என்ன பொல்லாத நியாயம். என்ன நியாயமும் இருக்கட்டும். இப்ப போனவன் வந்துடுவானா?" விக்ரமும் கோபமாய் சொல்ல,

"அப்போ? நீ என்ன தான் சொல்ல வர்ற? இந்த பொண்ணு இப்ப நிராதரவா நிக்குறா. அதுவும் நம்ம விஷ்வானால தான். அதுக்காக அவ யார் மேல கோவத்தைக் காட்ட?" என பதிலுக்கு கேட்டார் மிருதுளா.

"நீங்க என்ன வேணா சொல்லுங்க ம்மா. ஆனா எனக்கு தெரியும். அன்னைக்கு மண்டபத்துல நான் விஷ்வாக்காக அவளை கூப்பிட்டதும் அவ ஒன்னும் என் கூட வர்ல. இழுத்து தான் கூட்டிட்டு வந்தேன். அதுவும் கன்னை வச்சு மிரட்டி தான் கூட்டிட்டு வந்தேன். இல்லைனா மேடம் கல்யாணம் பண்ணி செட்டில் ஆகுற பிளான் தான்!" என்றான் அவனும் கோபமாய்.

"புரியாம பேசாத விக்கி! அந்த பொண்ணுக்குன்னு...." என மிருதுளா பேச வர,

"போதும் போதும்!" என இடையில் வந்துவிட்டார் ஸ்ரீனிவாசன்.

"ரெண்டு பேர் வாதமும் அவரவர் பக்கம் இருந்து பார்த்தா சரி தான். இப்ப முடிஞ்சதை பேசி பயனில்லை." என்றவர்,

"கன்னை வச்சு பொண்ணை தூக்கினேன்னு எவ்வளவு தைரியமா எங்ககிட்டயே சொல்ற?" என கோபமாய் மகனைக் கேட்டு,

"அடுத்து அந்த பொண்ணுக்கு என்ன சொல்யூஷன்னு யோசிங்க. நான் கிளம்புறேன்!" என சொல்லி கிளம்பிவிட்டார் ஸ்ரீனிவாசன்.

"ஆமா அந்த பொண்ணு பேர் என்ன?" மிருதுளா கேட்க,

"அதெல்லாம் என் வாயால சொல்ல முடியாது" என்றவன் வெறுக்கும் பெயர் இனியா.

"வாயால தான் எல்லாரும் சொல்லுவாங்க. நீ மட்டும் எப்படி?" என கடுப்பாய் கேட்ட மிருதுளா,

"எங்கருந்து டா இவ்வளவு கோபமும் பிடிவாதமும் உனக்கு?" எனவும் கேட்டார்.

"ப்ச் ம்மா! மொத்த டாபிக்கும் மாறியாச்சு" என்ற விக்ரம்,

"இப்ப அவளை என்ன தான் பண்றதா இருக்கீங்க?" என்றான்.

"தெரியல. அந்த பொண்ணுக்கு முதல்ல சேஃபா ஒரு இடம் வேணும்"

"இவகிட்ட இருந்து தான் நாலு பேரை காப்பாத்தணும். இன்னும் யார் யாரெல்லாம் இவளால..." என விக்ரம் சொல்லி முடிக்கும் முன்,

"மிரும்மா!" என சத்தமாய் கோபத்தோடு அழைத்து கவனத்தை திருப்பி இருந்தாள் துகிரா.

"வாம்மா! சாப்பிடுறியா?" மிருதுளா அவள் அழைத்த விதத்தில் மகிழ்ந்து அது முகத்திலும் தெரிய புன்னகையுடன் கேட்டார்.

இவன் இப்படி பேச பேச தான் வேண்டுமென்றே இவனிடம் சொல்ல கூடாது என தோன்ற ஆரம்பித்திருந்தது துகிராவிற்கு.

என்னென்ன வார்த்தைகளை எல்லாம் எப்படி சாதாரணமாய் ஒருவரை நோக்கி வீசுகிறான்! என விக்ரமைக் கண்டவள்,

இப்பொழுது தான் உண்மையை கூறினால் மட்டும் உடனே ஏற்று கொள்வானாக்கும் என்றுமே தோன்றியது. நிச்சயம் தன்னை நம்ப போவதில்லை என்ற முடிவிற்கும் வந்திருந்தாள்.

"நிஜமாவே இவர் உங்க மகன் தானா?" துகிரா கேட்க,

"ஏய்!" என்றான் குரலை உயர்த்தி அவளை முறைத்து.

"அவனுக்கு வாய் கொஞ்சம் ஜாஸ்தி என் மாமியார் மாதிரி. நீ சாப்பிட வா!" என மீண்டும் அழைத்தார் மிருதுளா.

"ம்மா! நான் சொன்னது உங்க காதுல விழுந்துச்சா இல்லயா?" என மீண்டுமே கத்தினான்.

"நான் சொன்னது உன் காதுல விழுந்துச்சா இல்லையா டா?" என கேட்டவர்,

"இத்தனை வருஷமா இந்த தொழிலை விட்டுடுன்னு உன் அப்பா சொல்றாரே அது கேட்டுச்சா?" என்றும் கேட்க,

"ம்மா! அது நம்ம பேமிலி பிரச்சனை. இப்ப இவளை வெளில அனுப்புங்கனு சொன்னேன். ஏன் உங்களுக்கு புரியல?" என்றான்.

"விக்கி! அதிகமா பேசுற! அப்பா என்ன சொல்லிட்டு போறாங்கனு கேட்டல்ல? பேசி தான் முடிவுக்கு வரணும்" என்ற மிருதுளா நியாபகம் வந்தவராய்,

"இப்ப தானே சொன்ன கன்னை காட்டி கூட்டிட்டு வந்தேன்னு? இப்பவும் அதே கன்னை காட்டி போய் அவ வீட்டோட சேர்த்து வச்சுட்டு வா. அனுப்பிடலாம்!" என்றார்.

"எனக்கென்ன தலையெழுத்தா? அவ பண்ணின பாவத்துக்கு அவ அனுபவிக்குறா." விக்ரம் சட்டென சொல்லிவிட,

"விக்கி!" என கத்தி அவனை அதட்டினார் மிருதுளா.

'என்ன மனிதன் இவன்?' என தான் கண்டாள் துகிரா.

"அந்த பொண்ணு எவ்வளவு அன்பா மிரும்மான்னு கூப்பிடுறா. கொஞ்சமாவது பேச்சுல கண்ணியம் வேணும் டா. ஒரு பொண்ணை பேசுறோம்னு நினைப்புல வச்சுக்கோ!" என எவ்வளவு தான் மிருதுளா கூறினாலும் அவன் எண்ணம் என்னவோ ஒன்று தான்.

இந்த வீட்டில் இவள் இருக்க கூடாது என்பது தான். அது தான் அவனை பேச வைத்துக் கொண்டிருந்தது.

"நீங்க கேட்க மாட்டிங்க. இனி நான் பாத்துக்குறேன்!" என்று சொல்லி வெளியேறிவிட்டான் விக்ரம்.

தொடரும்..
 
  • Love
Reactions: Rampriya and shasri