• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உதிராத மலராய் நானிருப்பேன் அத்தியாயம் -1

shaliha ali

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 24, 2024
68
58
18
Chennai
உதிராத மலராய் நானிருப்பேன்
அத்தியாயம் 1



நிரூபம் தன் நீல நிறத்தை அடர்கருப்பினத்திற்கு மாற்றும் பொழுது அந்த இருள்சூழ்ந்த வதனத்தில் மதி தன் வெள்ளை நிற ஒளியை எங்கும் பரவச் செய்யும் அமைதியான இரவு நேரத்தில்…


ஓரிடத்தில் நீண்ட அகன்ற அந்த பெரிய மைதானத்தில் மதியின் ஒளியை விட தன்னுடைய வெளிச்சத்தை வண்ண விளக்குகள் அந்த இடம் முழுவதும் பரவவிட்டு ஒளியமாயமாக்கிக் கொண்டிருக்க...


இருக்கும் அமைதிக்கு சம்பந்தமே இல்லாமல் அந்த இடம் முழுவதும் ஆண்கள் பெண்கள் என ஒருபக்கமும் இளம் ஆடவர்களும், அதிகமாய் இளம் யுவதிகள் என்று மானிடர்களால் நிரம்பியிருக்க…


அவர்கள் அனைவரின் கண்களும் ஆர்வம் ,மகிழ்ச்சி என சொல்லமுடியா உணர்ச்சிகளில் வண்ண விளக்குகளாலும், பூக்களாலும் அலங்காரமாய் மிளிர்ந்த அந்த பெரிய அகல மேடையை ஆரவாரத்துடன் அவர்களின் கனவுலக இல்லை இல்லை நிஜவுலக நாயகர்களைக் காணும் ஆவலில் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது…


காற்றைக் கிழிக்கும் சத்தத்துடன் கிடாரின் இசை எங்கும் பரவும் நேரம்…


கூடியிருந்த மக்கள் அனைவரும் "எம்.எல்4… எம்.எல்4" என்று கூச்சலிட்டனர்.


அவர்களின் சத்தத்திற்கு பதில் அளிக்கும் விதமாக அரங்கின் நடுவில் கீழிருந்து மேலாக தூக்கு இயந்திரத்தின் உதவியால் நால்வரும் ஒன்றாக வந்தனர்.


அவர்கள் மேலே தெரிய ஆரம்பிக்கும் பொழுது கூடியிருந்த மக்களின் ஆரவாரச் சத்தம் இன்னும் அதிகரித்தது.


எல்லோரும் ஒன்றாக "ஹே..ஹே…" என்று சந்தோஷக் கூச்சலிட்டனர்.


நால்வரும் ஒன்றாக தங்கள் கையசைத்து முன்னால் வந்து நின்றனர்.


அவர்களின் அழகில் மயங்கி நின்ற இளம் யுவதிகள் நால்வரின் கம்பீரமும் ஒன்றாய் இருக்க… அதில் சற்றே அதிகமாய் நிமிர்வும் திமிரும் அழகும் கொண்ட அவன் தன் கையில் இருந்த ஒலிபெருக்கியை தன் உதடு அருகே கொண்டுச் சென்றதும் சுற்றியிருந்த அனைவரும் "நிரஞ்சன் நிரஞ்சன்" என்று சப்தமிட்டனர்.


செவ்விதழ் திறந்து பேச வந்தவன் தன்னைச் சுற்றியுள்ள கொண்டாடிகளின் இரசிப்புத் தன்மையில் லேசாய் பற்கள் தெரியாமல் புன்னகைத்தவன் சிறு கன இடைவெளி விட்டு "வணக்கம் பெங்களூர்…"என்று ஒலிபெருக்கியில் அலறவிட…


எல்லோரும் ஒன்றாக "ஓஓ..ஹோ…"என்று பதிலுரைத்தனர்.


அதற்கு அவன் "எல்லோரும் ரொம்ப உற்சாகமாக இருக்கீங்கன்னு உங்க பதில்லேயே தெரியுது இன்னைக்கு நம்ம மியூசிக் லவ்வர்ஸ் பேண்ட்டோட புது சாங்கை இங்கே வெளியிடுறதுல நாங்க நால்வரும் ரொம்ப ரொம்ப ஹாப்பியாக இருக்கோம். நீங்களும் ஹாப்பியா?" என்று நிரஞ்சன் தன் புறம் உள்ள ஒலிபெருக்கியை எடுத்து அவர்கள் முன் காட்ட…


கூடியிருந்த கூட்டத்தில் உள்ள அனைவரும் அரங்கில் உள்ள அவர்களுக்கு தங்கள் பதில் தெரிய வேண்டும் என்று "எஸ்… ஆமாம்" என்று அந்த அரங்கமே அதிர பதிலளித்தனர்.


இதைக் கண்ட நால்வரும் இன்னுமாய் புன்னகைச் சிந்த… நால்வரின் ஒருவன் "இதோ உங்களுக்காக " என்று சொன்னதும் கூட்டத்தில் உள்ள பல பெண்கள் "பார்த்திபன் பார்த்திபன்" என்று சப்தமிட்டனர்.


அவன் சொல்லி முடித்ததும் இன்னொருவன் பாடலின் முதல் வரியை தன் காந்தக் குரலால் பாடத் தொடங்கினான்.


அவனின் குரல் ஒலிபெருக்கியில் ஒலிக்க ஆரம்பித்ததும் அவனின் ரசிகைகள் "காந்தா காந்தா"என்று அழைத்தனர்.

முதல் இரண்டு அடிகளை காந்தன் பாட … அடுத்த இரண்டு அடிகளை அவனோடு சேர்ந்து சகாதேவன் பாட… மற்ற இருவரும் அதற்கு ஏற்ப மேற்கத்திய நடனம் ஆட என நால்வரும் ஒன்றாய் பாடி ஆடத் தொடங்கினர்.


அவர்களுடன் சில நடனக் கலைஞர்களும் ஆடினர்.



எந்நாளும் நன்நாள் அது

புதிதான இசை பூத்தது

ஒளி வெள்ளை வானை தாக்குது

நான் என்பது நாம் என்றானது

நாம் என்பது நாடு என்றானது

வரும் நாளும் நமதென்றே ஆனது

பூமி முழுதும் பூக்கள் பூக்க

கோடி இதயம் இணைந்து துடிக்க

காலம் புதிதாய் கதவு திறக்க

நேற்றில் வழியை உலகம் மறக்க

வாழ்த்து அலைகள் வானை கிழிக்க

ஊரும் உயிரும் இசையில் குதிக்க

வா நன்நாளே எந்நாளும் பொன்நாளே!

பேரின்பம் கொண்டே

கொண்டதும் இந்நாளில்

தந்தோமே பூ செண்டே

உழைப்பினில் உன்னை வைத்தாய்

உண்மையில் உழைப்பை வைத்தாய்

உழைப்பினில் உயர்வு தோன்றும்

உயர்வான பாதை தோன்றும்

தீய வழிகளை கண்டதனால்

நேற்று நமதல்லவா

புதிய விழிகளை கொள்வதனால்

இன்று நமதல்லவா

சிறு சிறு கண்ணில்

புது புது கனவுகள் கண்டால்

நாளை நமதல்லவா

நாளும் நமதல்லவா


மக்களின் ஆரவாரத்திற்கு இடையே அவர்கள் நால்வரும் தங்கள் குரலாலும் அவர்களின் நடனத்தாலும் அனைவரையும் கட்டி இழுத்து அவர்களின் பார்வை இவர்கள் நால்வரை விட்டு அகலாதவாறு இன்னிசையில் மிதக்க வைத்தனர்.

இடையிடையே கூட்டத்தில் உள்ள ஆண்களும் பெண்களும் அவர்களின் பாடலுக்கு ஏற்ப தங்களின் இடத்தில் நின்று நடனம் ஆடி தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.


அவர்கள் பாடிக் கொண்டே ஆடிய மேற்கத்திய நடன நிகழ்ச்சி இரண்டு மணி நேரமாக தொடர்ந்து கடைசியில் இசை நிகழ்ச்சி முடிவிற்கு வரும் பொழுது நால்வரும் தங்களுடைய நன்றியை வந்திருந்த இரசிகர்களுக்கு சொல்லும் போது அவர்களின் நான்கு பேரின் கண்களும் மகிழ்ச்சியில் ஆனந்தக் கண்ணீர் வடித்தது.


ஐந்து வருடமாக அவர்கள் உழைத்த உழைப்பிற்கும் அதற்காக அவர்கள் முயற்சித்த முயற்சிகளுக்கான மாபெரும் வெற்றி இன்று அவர்கள் காண்பது.


கடந்த ஒருவருடமாகத் தான் அவர்கள் நால்வரும் ஒன்றாக இசைத்த ஆல்பம் பாடல்கள் யூ டியூப் வழியாக மக்களை வெகுவாக கவர்ந்தது.இந்த ஒரு வருடத்தில் அவர்களுக்கு இவ்வளவு பெரிய ரசிகர்களின் கூட்டம் என்பது நினைத்து பார்த்திராத ஒன்று.


அவர்கள் காணாத எதிர்பாராத வெற்றி அதனாலேயே அவர்கள் நால்வரும் அத்தனை ஆயிரம் மக்கள் முன்னிலையில் கண்ணீர் வடித்து நன்றி தெரிவித்தனர்.


நால்வரும் ஒன்றாக ஒருவரின் இன்னொருவரின் தோள்களில் கைப்போட்டு தங்கள் ஒற்றுமையை அவர்களின் கொண்டாடிகளிடம் காட்டினர்.


மியூசிக் லவ்வர்ஸ் குழுவின் மக்கள் மனதை வென்ற தங்கள் முதல் பாடலை பாடி இசை வெளியீட்டு விழாவை முடித்து வைத்தனர்.


நால்வரும் தங்களுக்கான ஒப்பனை அறையில் ஒருவரை ஒருவர் தழுவி கட்டி அணைத்துக் கொண்டு தங்களுக்குள்ளே உற்சாகப்படுத்திக் கொண்டனர்.


நிரஞ்சன் "பாய்ஸ் நாம கண்ட கனவு நினைவாயிடுச்சுல்ல" அவன் ஆவலில் கேட்க…


அதற்கு பார்த்திபன் "இல்லை நிரஞ்சா" என்றான்.

அவன் பதிலில் குழப்பமாய் நிரஞ்சன் பார்த்திபனைப் பார்க்க…


பக்கத்தில் இருந்த சகா "ஆமாம் பா...ர்த்தி சொல்றதை நானும் ஒத்துக்கிறேன்"


நிரஞ்சனுக்கு இன்னும் ரொம்ப குழப்பமாகி விட "என்ன சொல்லுறீங்கடா எனக்கு ஒன்னுமே புரியலை இதை விட பெரிய வெற்றி வேணும்னு நினைக்கிறீங்களா?" அவன் கொஞ்சம் கோபத்தோடு கேட்டான்.


அதற்கு காந்தன் நிரஞ்சனின் கையைப் பிடித்து தன் கைகளுக்குள்ளே அழுத்தமாய் அணைத்து வைத்துக் கொள்ள…


அடுத்து சகாவும், பார்த்தியும் அவர்கள் இருவரின் கையோடு தங்களின் கையையும் ஒன்றிணைத்ததும் காந்தன் "சகாவும் பார்த்தியும் என்னச் சொல்ல வர்றாங்கன்னு நான் சொல்லுறேன் நிரஞ்சன். இது நாங்க கண்ட கனவு இல்லை இது நீ எங்களுக்காக கண்ட கனவு, இந்த ஐந்து வருஷமா நாங்க துவண்டு இந்த பாட்டு பாடுறதே வேண்டாம்னு சொன்னப்போ நீ … நீ மட்டும் தான் சொன்னே நிச்சயம் நாம பெரிய இடத்துக்கு போவோம் ஒன்னா சேர்ந்து முயற்சி பண்ணலாம்னு சொல்லி எங்க மூணு பேருக்கும் லீடரா இருந்து எங்களுடைய கனவையும் சேர்த்து நீயே பார்க்க ஆரம்பிச்சே நிரஞ்சன் அதனால இது எங்களோட கனவுன்னு சொல்றதை விட உன்னுடைய கனவுடா நீ உருவாக்கினது தான் நாங்க, உன் மூலமாகத் தான் எங்க எதிர்காலத்தை நாங்க பார்த்தோம் அதனால நீ தேடுன அங்கீகாரம் வெற்றி நமக்கு கிடைச்சிடுச்சுடா" என்றதும் நிரஞ்சன் மகிழ்ச்சியில் அவர்கள் மூவரையும் தன் நெஞ்சோடு கண்கள் இரண்டிலும் கண்ணீரோடு கட்டி அணைத்துக் கொண்டான்.

பார்த்திபன் அவனின் அணைப்பிலிருந்தே "நிரஞ்சா இதை விட இன்னும் பெரிய நிலைமைக்கு நாம வரனும், அதற்கான அடுத்த முயற்சியை நாம கண்டிப்பா செய்யனும்" என்றான்.


அதைக் கேட்ட சகா "ஆமாம் நாம நாலு பேரும் ஒ...ன்றாகச் சே..ர்ந்து இன்னும் நிறைய சா...சாதிக்கனும்" என்று தன் திக்குவாய் தெரிய பேசினான்.


சகாவிற்கு கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு பேசினால் அவனின் திக்குவாய் தெரியும்.ஆனால் அவன் பாட ஆரம்பித்தால் அவனின் திக்குவாய் பேச்செல்லாம் யாருக்குமே தெரியாது.அந்தளவிற்கு அவனின் குரல் இருக்கும்.


சகாவின் பேச்சைக் கேட்டதும் நிரஞ்சன் அவனின் தலையை மெதுவாய் வருடிக் கொடுத்து "நீ சொல்றபடியே செய்யலாம் சகா.இதுபோல் எப்பவும் நாம ஒற்றுமையா இருக்கனும்டா எந்த சூழ்நிலையிலும் நாம பிரியவே கூடாது,அதை எப்பவும் நாங்க கடைப்பிடிப்போம்னு சத்தியம் செய்ங்க" என்றதும் சகா, பார்த்திபன், காந்தன் எல்லோரும் நிரஞ்சனின் கை மேல் வைத்து சத்தியம் செய்தனர்.


"எந்த சூழ்நிலையிலும் நாங்க ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் ஒற்றுமையாய் பிரியாமல் இருப்போம்" என்றனர்.


இது அவர்கள் நால்வருக்குள்ளும் அடிக்கடி செய்துக் கொள்ளும் உறுதிமொழி.அப்பொழுது தான் எந்த ஒரு வேற்றுமையும் இல்லாமல் ஒற்றுமையாய் வெளிப்படையாய் இருக்கலாம் என்பது அவர்களின் எண்ணம்.


நிரஞ்சன் தான் மற்ற மூவரை விட மூன்று வயது மூத்தவன்.காந்தன் நிரஞ்சனை விட ஒரு வயது சின்னவன் அவனுக்கு இருபத்தி ஏழு வயது.அவனை விட சிறியவன் பார்த்திபன் இருபத்தி ஆறு.சகாவிற்கு இருபத்தி ஐந்து வயது அதனால் அவர்கள் குழுவில் சிறியவன் அவன் தானே.நிரஞ்சனுக்கு சகாவைக் கண்டதும் அவனின் உடன்பிறவா சகோதரனைப் போல ஒரு உணர்வு உண்டு.அதனால் அவனிடம் மட்டும் கொஞ்சம் பொறுமையாக பேசுவான்.


நிரஞ்சன் தான் மியூசிக் லவ்வர்ஸ் குழுவின் தலைவன்.வயது அதிகமாக இருப்பதால் மட்டும் அவன் தலைமை வகிக்கவில்லை.அவன் எதையும் பொறுப்பாகவும்,கவனமாகவும் நடந்துக் கொள்வான்.அதோடு எந்த வேலையையும் சிரத்தையாக, நேர்மையாகவும் நடந்துக் கொள்வான்.அதனாலயே அவர்கள் குழுவின் தலைவன்.ஆனால் சட்டென்று எதற்கும் கோபப்பட்டு விடுவான்.


அதோடு இவர்கள் முயற்சி செய்து தோல்வி அடைந்து துவண்டு இருந்த போதெல்லாம் நிரஞ்சன் தான் அவர்களை உற்சாகப்படுத்தி அடுத்த முயற்சிகளுக்கான வேலையைச் செய்வான்.

காந்தனுக்கும் நிரஞ்சனிடம் உள்ள அத்தனை தன்மையும் உண்டு.ஆனால் கொஞ்சம் ஜாலியாக இருப்பான்.அதனால் எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டான்.நிரஞ்சனின் பாதி வேலைகளை இவன் தான் செய்வான்.எல்லோரையும் தன் புன்னகை ஒன்றாலேயே கவர்ந்து விடுவான்.


பார்த்திபனும், சகாவும் செல்லப்பிள்ளைகளாக இருப்பர்.பொறுப்பாக இரண்டு பேர் இருப்பதால் இவர்கள் இரண்டுபேரும் எப்போதும் விளையாட்டோடும் துடுக்குத்தனத்தோடும் இருப்பார்கள்.


ஒரே குடும்பமாய் வாழ்ந்தனர் நால்வரும்.அப்பொழுது அவர்கள் இருக்கும் அறையின் கதவை தட்டும் சத்தம் கேட்டது.



(தொடரும்)
 
Last edited:
  • Like
Reactions: shasri