உதிராத மலராய் நானிருப்பேன் அத்தியாயம் -11
சாம்பவி சபரி அனுப்பிய மின்னஞ்சலைப் பார்த்து விட்டு அலைபேசியில் உடனே அவரை நேரில் சந்தித்து பேச அழைத்தாள்.
சாம்பவி தன் அறையில் சபரிக்காக காத்திருந்தாள்.அவர் வந்ததும் வரவேற்று உட்கார வைத்தவள் "அங்கிள் நீங்க அனுப்பிய ரெஸ்யூமை பார்த்தேன் பர்ஸ்ட் க்ளாஸ்ல பாஸ் செய்து இருக்காங்க நல்ல புத்திசாலியா இருப்பாங்க போல இருக்கே,நிறைய சர்ட்டிபிகேட்ஸ் பார்த்து புரிஞ்சுக்கிட்டேன்" என்று மெல்லியதாய் சிரித்தாள்.
"சாம்பவி உனக்கு ஓகேன்னா நாளைக்கே வேலைல ஜாயின் செய்யச் சொல்லவா?"
"நாளைக்கு சின்ன ஒரு இன்டர்வியூ வைச்சுட்டு ஓகே செய்யலாம்,எதுக்குன்னா அவங்க அட்டிட்யூட் எப்படி இருக்குன்னு பார்த்து ஒரு தடவை கன்பார்ம் பண்ணலாம் அங்கிள் ஏன்னா நம்ம கம்பெனியோட டெர்ம்ஸ் அண்டு கன்டிஷன்ஸ் கண்டிப்பா நாம பாலோ செய்யனும் அங்கிள்.இல்லைன்னா நம்மோட அவசரத்துக்காக வேலைக்கு எடுத்தோம்னு அவங்களும் நினைக்கக் கூடாது கோ-வோர்க்கர்ஸ்ம் யோசிக்கக் கூடாது" என்றாள்.
சாம்பவி சொல்வதும் சரியென்று சபரிக்கு தோன்றியதால் அவரும் அவள் சொல்வதற்கு தலையசைத்து விட்டுச் சென்றார்.எப்படியோ சிற்பிக்கு ஒரு நல்ல வேலைக் கிடைக்கும் என்ற நம்பிக்கை உண்டானது.
"அங்கிள் ரொம்ப தாங்ஸ்"
"எதுக்கும்மா?"
"சொன்ன கொஞ்ச நேரத்துல நம்ம எதிர்பார்த்த மாதிரி ரெடி செய்துட்டீங்க அதுக்கு தான் அதோட நீங்க இந்த கம்பெனியோட பங்குதாரராக இருந்தும் என்னோட பதிலையும் எதிர்பார்க்கிறது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு அங்கிள் என் வீட்ல உள்ளவங்களை விட நீங்க தான் என் மேல அதிகமா நம்பிக்கை வைச்சு இந்த கம்பெனியை நம்பிக் கொடுத்து இருக்கீங்க எல்லாத்துக்காகவும் தான் தாங்ஸ் அங்கிள்" என்றாள் மகிழ்ச்சியாய்…
சிறு புன்னகை ஒன்றை பதிலாய் தந்தவர் "நான் பார்த்து வளர்ந்த என் பொண்ணு மேல எப்பவும் ஒரு நம்பிக்கை எனக்கு இருக்கும்மா,முக்கியமான விஷயம் நானும் இந்த கம்பெனியோட பங்குதாரர்னு யாருக்கும் தெரியாதது போலவே இருக்கட்டும் அப்போத் தான் என்கிட்ட இப்பவும் போல எல்லோரும் பழகுவாங்க அதனால நான் எப்பவும் மானேஜர் சபரி தான்" என்றவர்
"சாம்பவி நான் கிளம்புறேன்மா நாளைக்கு புது பி.ஏவோடு வரேன்" என்று அவளிடம் விடைப் பெற்றுச் சென்றார்.
சபரிக்கு மனதிலோ 'என் தங்கச்சி பொண்ணு தான் சிற்பின்னு தெரிஞ்சால் சாம்பவி உடனே வேலைக் கொடுத்து விடுவாள் வேண்டாம் சிற்பிக்கு அவளுடைய திறமையால் தான் வேலை கிடைக்க வேண்டும்' என்று முடிவெடுத்தவர் உடனே தாமரையை அலைபேசியில் அழைத்தார்.
அலைபேசியை எடுத்த தாமரை "சொல்லுங்க அண்ணே"
"தாமரையை சிற்பி,பூர்ணா எல்லோரையும் இன்னைக்கே கிளம்பிச் சொல்லு நாளைக்கு அவளுக்கு இன்டர்வியூ இருக்கு அதனால இன்னைக்கு கிளம்பினால் தான் சரியா இருக்கும் இந்த வேலை சிற்பிக்கு கிடைத்தால் எப்படியும் ஒன்னரை வருஷத்திலேயே கடனை அடைச்சிடலாம் என்கிட்ட தான் பணம் வாங்க மாட்டேன்னு பூர்ணாகிட்ட சொன்னியாமே அவள் சொன்னால் இதையாவது என்னால செய்ய முடிந்தால் சந்தோஷம் தான் அதனால கவலைப் படாமல் உடனே சிற்பியை கிளம்பச் சொல்லு" என்று சபரி சொன்னதற்கு தாமரையின் பதிலோ "சரிங்கன்னே சரிங்கன்னே" என்பதோடு முடிந்து போனது.
சபரி எப்பொழுதும் அப்படித்தான் அவர் ஒரு வேலையில் இறங்கி விட்டால் அதை முடிக்காமல் ஓயமாட்டார்.அதனால் தாமரையால் மேற்கொண்டு எதுவும் பேச முடியாமல் தலையை மட்டும் அசைத்தார்.
மகள் இன்றைக்கே கிளம்ப வேண்டுமே என்ற எண்ணமே அவரை கவலைக்கு உள்ளாக்கியது.ஆனாலும் சபரி சொன்ன விஷயங்களை சிற்பியிடமும் மற்றவர்களிடமும் சொன்னார்.
சிற்பிக்கு நம்மவே முடியவே இல்லை.நாளைக்கு செல்ல வேண்டும் என்று நினைத்ததற்கு இன்றைக்கே என்றதும் அதை விட சபரி மாமாவுடன் நாளைக்கே இருக்க வேண்டுமா? என்று ஒருவித கலக்கத்தை உண்டாக்கியது.
அவள் அமைதியாக இருப்பதைப் பார்த்த பூர்ணா "சிற்பி சீக்கிரம் எல்லாத்தையும் பேக் செய் கிளம்பனும்" என்றார்.
"அத்தை நான் ஆபிஸ்க்கு போற மாதிரி டிரெஸ் எதுவும் எடுக்கலையே நாளைக்கு போய் எடுக்கலாம்னு நினைச்சேன் இப்போ இன்னைக்கே கிளம்பச் சொல்லுறீங்க" என்று அவள் கவலையாய் கேட்டாள்.
பூர்ணா சிரித்துக் கொண்டு "துணியே கிடைக்காத ஊருக்கு வர மாதிரி பேசுற அங்கே போய் உனக்கு ஏற்றமாதிரி விதவிதமா எடுக்கலாம் அதான் அத்தை இருக்கும் போது என்னக் கவலை?நீ கிளம்பிற வேலையை மட்டும் பாரு தற்சமயத்துக்கு நாலைந்து டிரெஸ் மட்டும் எடுத்துக்கோ" என்றார்.
அவளும் தலையசைத்துக் கொண்டு கிளம்புவதற்கு தயாராகிக் கொண்டிருக்க… அருள்மணியும் தாமரையும் கவலையோடு நடப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.சிற்பியோடு இன்னும் ஒருநாள் முழுதாக இருக்கலாம் என்று நினைத்தவர்களுக்கு அதுவும் இல்லை என்றாகிப் போனது.
சிற்பிக்கோ முதன்முறையாக தனியாக அதுவும் வேலை விஷயமாக வெளியூருக்கு செல்கிறோம் என்ற எண்ணமே மனம் முழுவதும் ஏதோ பெரிய படபடப்பை நெஞ்சில் சுமந்தபடி அங்கும் இங்கும் நடந்து தேவையான எல்லாவற்றையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.
எழிலன் பெங்களூர் செல்வதற்காக பயணச்சீட்டு தேடும் வேட்டையில் இறங்கி இருந்தான்.கடைசியில் இரவு செல்வதற்கான பயணச்சீட்டு கிடைத்தது.
கடைசியில் சிற்பி தன் வீட்டிலிருந்து செல்வதற்கான நேரம் வரும் போது தாமரையும் அருள்மணியும் வெளியூரில் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று அவளுக்கு ஏகப்பட்ட யோசனைகளை வழங்கிக் கொண்டிருந்தனர்.
இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த பூர்ணா பொறுக்க முடியாமல் "தாமரை அவ தனியாக போகலை என்கூடத் தான் வர்றா சிற்பி என் பொண்ணு மாதிரி பார்த்துப்பேன் நீ கவலைப் படாமல் இரு" என்று ஆறுதல் சொன்னார்.அதற்குப் பிறகு தான் பெற்றவர்களால் கொஞ்சம் நிம்மதி அடைய முடிந்தது.
பயணம் சொல்லி விட்டுக் கிளம்பும் போது சிற்பி கட்டியணைத்து அழத் தொடங்கினார் தாமரை.அதைப் பார்த்து சிற்பிக்கும் அழுகை தான் வந்தது.ஆனால் அதை அடக்கிக் கொண்டவள் சிரித்தபடியே "அம்மா நான் கல்யாணம் முடிச்சு புருஷன் வீட்டுக்கு போகலை வேலைக்குத் தான் போறேன் அழாதேம்மா"என்றாள் கிண்டலாக…
எழிலனோ "அத்தை நீங்க கவலைப்படாதீங்க அப்போக் கூட நீங்க அழ வேண்டாம் சிற்பியை நானே கல்யாணம் செய்து நாம எல்லோரும் ஒரே வீட்ல இருக்கலாம் நீங்க சிற்பியை பிரிய வேண்டியது வராதுலே எப்படி என் ஐடியா" என்று அவன் மெச்சுதலாய் சொல்ல…
சிற்பியோ எழிலன் முதுகில் ஒரு அடி போட்டவள் "உன்னை கல்யாணம் செய்றதுக்கு நான் பிரம்மச்சாரியாகவே இருப்பேன்" என்றாள்.
அதைக்கேட்ட பூர்ணாவோ பொய்கோபமாய்… "என் பிள்ளைக்கு என்னடி குறைவு அவன் சூப்பராகத் தானே இருக்கான்" என்றதும்
சிற்பியோ அதுக்கும் அசராமல் "ஆளு பார்க்க நல்லாத் தான் இருக்காப்ல ஆனால் முக்கியமான ஒரு குறை இருக்கு அது உங்களுக்கு தெரியலை அத்தை"
பூர்ணாவோ புரியாமல் "என்னது" என்று கேட்க… சிற்பியோ "அத்தான் தலையிலே மூளையே இல்லையே அதைத் தான் குறைன்னு சொன்னேன்" என்றதும்
எழிலன் "என்னைப் பார்த்து மூளை இல்லைன்னா சொல்லுற இரு உன்னை என்னச் செய்றேன்னு பாரு" என்று அவளை அடிக்கத் துரத்த அவள் அவன் கைகளில் சிக்காமல் அங்கும் இங்கும் ஓட என அங்கே பெரிய அமர்க்களமாக்கிக் கொண்டிருந்தனர் இருவரும்.
கடைசியில் சபரி அலைபேசியில் அழைத்து இரயில்வே நிலையத்திற்குச் வந்துவிட்டார்களா? என்று விசாரிக்கவும் தான் இருவரும் சண்டையை நிறுத்திக் கொண்டு ஒழுங்காக சென்றனர்.பூர்ணாவோ வீட்டில் இருவரையும் வைத்து என்ன கதிக்கு ஆளாகப் போகிறோமோ? என்ற கலக்கத்திலேயே தாமரையிடமும் அருள்மணியிடமும் சொல்லி விட்டுச் சென்றனர்.
போகும் வழியினில் கனிகாவை அலைபேசியில் அழைத்து நடந்த விவரங்களை எல்லாம் சுருக்கமாகச் சொல்லி பெங்களூர் செல்வதையும் சேர்த்துச் சொன்னாள் இதைக் கேட்ட கனிகா மகிழ்ச்சியடைந்து அவளுக்கும் வாழ்த்தும் சொல்லி விடைப் பெற்றாள்.
இரயில் பயணத்தில் சிற்பி செழியனிடம் "அத்தான் மாமா என்ன வேலை பார்க்கிறாங்கன்னு தெரியுமா?" என்று அப்பாவியாய் கேட்டாள்.
அதற்கு தலையில் அடித்துக் கொண்ட எழிலன் "என்னை மூளையில்லாதவன்னு சொன்னே நீதான் மூளை இல்லாதவடி அப்பா வேலைக்கு போனால் எப்படி உனக்கு வேலை வாங்கித் தர முடியும்? அவரு நாலைந்து கம்பெனில ஷேர் ஹொல்டரா இருக்காரு அதெல்லாம் என்ன கம்பெனின்னு எனக்குத் தெரியாது அதனால எந்த மாதிரியான வேலைன்னு தெரியலை சிற்பி நீ போய் பார்த்தால் தான் தெரியும்" என்று தனக்குத் தெரிந்த விஷயத்தை மட்டும் சொன்னான் எழிலன்.
இருவரும் ஓயாமல் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்த பூர்ணா மனதினுள் "போட்டால் சண்டைன்னு இல்லைன்னா ஓயாமல் பேசிகிட்டே இருக்காங்க ரெண்டுபேரையும் புரிஞ்சுக்கவே முடியலை' என்று நினைத்து தலையில் அடித்துக் கொண்டார்.
பேசிக் கொண்டிருக்கும் பொழுதே இருவரும் தூங்கியும் போனார்கள்.
மறுநாள்….
மஞ்சள் நிறக் கதிரவன் எப்போதும் போல் அவளை புது இடத்திற்கு வரவேற்க…பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது பெங்களூர் எனும் புதுநாகரீக நகரம்.இரயில்வே நிலையத்திலிருந்து மகிழுந்தின் உதவியுடன் மூவரும் வீட்டிற்குச் சென்றுக் கொண்டிருக்க… வழியில் சிற்பி தலையை வெளியே நீட்டி உயரே எழுந்த கட்டிடங்களும்,நெரிசல் மிகுந்த வாகனங்களும் அதில் முன்னேச் செல்வதற்காய் காத்திருந்த மக்களும் ஒருபுறமும் கண்களை பறிக்கும் சிறப்பு அலங்காரத்துடன் வீற்றிருந்த கடைகள் என எல்லாவற்றையும் கண்கள் விரிய பார்த்துக் கொண்டே வந்தாள் சிற்பி.
அவள் அதிசயமாகவும்,அதிர்ச்சியாகவும் காண்பதைக் கண்ட செழியன் "என்னச் சிற்பி எல்லாம் பார்க்க எப்படி இருக்கு?"
"இவ்ளோ பேருக்கு நடுவுல ஒன்னும் தெரியாமல் நான் எப்படி இங்கே இருப்பேன்னு நினைச்சா பயமா இருக்கு செழியா தொலைஞ்சு போக மாட்டேன்ல" என்றாள் கன்னத்தில் கைவைத்து கவலையாய் கேட்டவளைப் பார்த்து சிரிக்கவா?அழவா? என்றே தெரியவில்லை செழியனுக்கு.
சிறுகுழந்தைப் போல் மிரண்டு கேட்பவளைப் பார்த்து புன்னகைத்தவன் "முதல்ல அப்படித் தான் தெரியும் பழகிட்டால் எல்லாம் கஷ்டமாகவே தெரியாது சிற்பி" என்றான் பொறுமையாய்…
"ஆனால் இப்போ இதை எல்லாத்தையும் விட மாமாவை எப்படி சமாளிக்கப் போறேன்னு நினைச்சால் தான் பயமா இருக்கு" என்றவளிடம்
"இப்போ ஒன்னு சொன்ன பாரு அதுக்கு என்கிட்ட பதில் இல்லை ஏன்னா பதில் தெரியாத வினா?" என்று தந்தையைப் பற்றி கவலையாய் சொல்ல…
அதைக் கேட்ட பூர்ணாவோ "ஹேய்… ரெண்டுபேரும் என் புருஷனையா கலாய்க்கிறீங்க? இருக்கட்டும் வீட்டுக்கு போனதும் இரண்டு பேரையும் எப்படி கவனிக்கனுமோ அப்படி கவனிக்கச் சொல்லுறேன்" என்று மிரட்டியதும் இருவரும் பூர்ணாவிடம் கெஞ்சிக் கொண்டிருக்கும் போதே அவர்களின் இருப்பிடமும் வந்தது.
அங்கே வீட்டு வாசலில் சபரி காத்திருந்தார்.அவரைப் பார்த்ததும் செழியனும்,சிற்பியும் வாயை மூடிக் கொண்டனர்.