• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உதிராத மலராய் நானிருப்பேன் அத்தியாயம் -2

shaliha ali

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 24, 2024
68
58
18
Chennai

உதிராத மலராய் நானிருப்பேன் அத்தியாயம் -2

நிரஞ்சன் "யாரு உள்ளே வாங்க" என்றதும் கதவை திறந்துக் கொண்டு ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் கோர்ட் சூட் அணிந்தபடி கையில் ஒரு பைலை வைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தார்.


அவர் யாரென்று இவர்கள் யோசனையோடு பார்த்தனர்.


நிரஞ்சனைப் பார்த்து முதலில் நட்பாக கைநீட்ட… அவனும் கை நீட்டினான்.


"வாழ்த்துக்கள்" என்று எல்லோரிடமும் நட்பாக கைகளை குலுக்கி தன் வாழ்த்துக்களை தெரிவித்தார்.


நிரஞ்சனிடம் "நிரஞ்சன் உங்க பாண்டோட சாங் செம ஹிட்"


நிரஞ்சன் "நன்றி நீங்க?"

"நான் சபரி. சங்கீத மேளாவுடைய மேனஜர் உங்க சாங் எல்லாம் பெரிய ஹிட் ஆனதுனால எங்க கம்பெனி உங்களுக்கு ஸ்பான்ஷர்ஷிப் தர்றாங்க.அதோட எங்க கம்பெனி மூலமா இன்டர்நேஷனல் சாங் காம்பெடிஷனில் கலந்துக் கொள்ள வாய்ப்பும் உங்களுக்கு தருவாங்க இந்த டீல் பத்திய விவரம் இந்த பைல்ல இருக்கு உங்களுக்கு எல்லாம் ஓகேன்னா என்னுடைய நம்பருக்கு போன் பண்ணுங்க நானே வந்து உங்க இடத்துல இருந்து கம்பெனிக்கு கூடிட்டு போறேன் அங்கே என்னுடைய எம்.டி நேர்ல பேசுவாங்க" என்று தன் முகவரி சீட்டை அவனிடம் தந்தார்.


அவன் யோசனையாய் மற்ற மூவரையும் பார்க்க… அவர்கள் கண்ணசைவினால் வாங்கு என்பது போல் சொல்ல…


நிரஞ்சன் சபரியின் முகவரி சீட்டை கையில் வாங்கிக் கொண்டான்.


பின்பு தன் கையில் உள்ள பைலை நிரஞ்சனிடம் கொடுத்த விட்டு "இந்த பைல்ல நான் சொன்ன விஷயத்தைப் பற்றிய எல்லா விவரமும் இருக்கு இதை படிச்சு பாருங்க.உங்களுக்கு எல்லாம் ஒகே என்றால் நாளைக்கே எங்க எம்.டியை பார்க்கலாம்" என்று மறுபடி ஒருதடவை நினைவுபடுத்தியவர் அதன் விவரத்தையும் சொல்லி விடைபெற்றுச் சென்றார்.


சபரி கதவை தாழிட்டுச் சென்றதும் பார்த்தி துள்ளிக் குதித்தான்.

"நிரஞ்சா என்னால நம்பவே முடியலைடா எவ்வளவு பெரிய கம்பெனி அவங்களாகவே வந்து நமக்கு வாய்ப்பு கொடுக்கிறாங்க" என்றான்.


அதைக் கேட்ட காந்தன் "உண்மை தான் இது நாம சந்தோஷப்பட வேண்டிய நேரம் தான்.ஆனாலும் இதுல இருக்கிற டெர்ம்ஸ் அண்டு கண்டிஷன்ஸ் படிச்சு பார்க்கலாம் இதைப் பற்றி வக்கீல்கிட்ட பேசி முடிவெடுக்கலாம்" என்று அவன் தன் யோசனையைச் சொன்னான்.


அதை அங்குள்ள மூவரும் ஆமோதித்தனர்.நாளை இதைப் பற்றி கலந்தாலோசித்து முடிவெடுக்கலாம் என்று தங்களுக்குள் முடிவெடுத்தனர்.நால்வரும் அங்குள்ள மற்ற வேலைகளை முடித்து அவர்கள் நால்வரும் ஒன்றாக தங்கி இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றனர்.


இளம் மஞ்சள் வெயில் தன் ஒளியை செங்கதிரோன் மெதுவாக தான் செல்லும் இடமெங்கும் பரவ விட்டுக் கொண்டிருக்கும் விடியற்காலை வேளையில் இந்தியாவின் கடைக்கோடி மாவட்டமான முக்கடல் சங்கமிக்கும் இடமான கன்னியாகுமரி தோவாளை பகுதியில் பழமையின் சாயலில் கொஞ்சம் புதுமையை புகுத்தி இருந்த அழகிய மனையில் அந்த வீடேயே பரபரப்பாக்கிக் கொண்டிருந்தாள் அவள்.


"அம்மா சீக்கிரம் நேரமாகுது வாங்கோ நான் துணி மாத்திட்டு காலேஜ்க்கு போகனும்" என்று குளியலறையில் நின்று தன் துணியை எடுத்துக் கேட்டாள்.


அதற்கு அவள் அம்மா தாமரை "ஏல கனிகா உன் தங்கச்சிக்கு துணியை எடுத்துக் கொடு குளிக்கப் போகும் போது துணி எடுத்துட்டு போகனும்னு தெரியாதா? என்ன பொண்ணு இவ? "என்று அவர் கடிந்துக் கொள்ள....


அதற்கு கனிகா "அம்மா அவளை எதுவும் சொல்லாதீவோ.இன்னைக்கு ரிசல்ட்ல அதனால சாமம் முழுக்க தூங்கவே இல்லை அதான் யோசனையிலேயே மறந்துப் போய் இருப்பா,நான் போய் கொடுக்கேன்" என்றாள்.


அதற்கு தாமரை "இன்னும் ஒரு வாரத்துல உனக்கு கல்யாணம் நடக்கப் போகுது அப்புறம் யார் இவளுக்கு செய்றாங்கன்னு பார்க்கேன்"


"ஏன் நான் இருக்கேன்ல நான் பார்த்துப்பேன்.கனிகா மாப்பிள்ளை வீட்டுக்கு போனால் என்ன அவளை பெத்தவ நீ செய்,இதுல என்ன கஷ்டம் இருக்கு" என்றார் அருள்மணி.


"ம்..க்கும்… இது தான் குறைச்சல் என்னைய வெல்லாம் எதிர் பார்க்காதீயோ நான் செய்ய மாட்டேன்ல பொம்பள பிள்ளைக்கு செல்லம் ஆவாது"


குளிக்கப் போனவள் குளித்து முடித்து விட்டு அழகான பாவாடை தாவணி அணிந்து தலைமுடியில் ஈரம் சொட்ட...சொட்ட… அழகிய வெள்ளை ரோஜா நிற அழகில் சற்றே மங்கிய அரி வதனத்தில் இருந்தவள் வந்தாள்.


"இங்கே என்ன ஒரே சண்டையா கிடக்கு?"


"எல்லாம் உன்னால தான்ல சிற்பி ஒழுங்கா பொம்பளை பிள்ளையாட்டம் இருக்கியா? பத்து மணி காலேஜ்க்கு காலங்காத்தாலேயே தொல்லை பண்ணிட்டு இருக்குவே அதான் சொன்னேன்.நீ என்னடான்னா சண்டைன்னு சொல்லிட்டே" என்று தாமரை திரும்பவும் கடிந்துக் கொள்ள…


அதற்கு அருள்மணி "ஏலே சிற்பிகா இங்கே வாலே அம்மா எதாவது சொல்லிட்டு கிடப்பா நீ அதெல்லாம் கண்டுக்கிடாதேலே நீ சந்தோஷமா போய் இன்னைக்கு உள்ள ரிசல்ட்ட பாரு.சீக்கிரம் சாப்பிட்டு கிளம்பு"


"சரி அப்பா ரொம்ப தாங்ஸ் அப்பான்னா அப்பா தான் இந்த அம்மா தான் எதுக்கும் ஆவாது" என்று அப்பாவை செல்லம் கொஞ்சினாள்.


குளித்த தலைமுடியை ஈரம் காய வைத்து விட்டு சாப்பிட்டு முடித்து விட்டு அவள் வீட்டை விட்டு கிளம்பும் போது நேரம் எட்டுமணியை தாண்டி விட்டது.


மிதிவண்டியை எடுத்துக் கொண்டு அங்கிருந்து பக்கத்தில் தெருவில் உள்ள தன் தோழி காயத்ரியையும் உடன் அழைத்துக் கொண்டு சென்றாள்.


அங்கே இவர்களுக்கு முன்னாலேயே வந்த உடன் பயிலும் இவளின் தோழிகளின் படையெடுப்போடு அங்கே காத்திருந்தனர்.


அவர்களைக் கண்டதும் மகிழ்ச்சியானவள் "ஏலே மக்கா வந்துட்டியலா" என்று சத்தமாய் கேட்டாள்.


வந்திருந்த தோழிகளும் "என்ன சிற்பி இப்படி கேட்டியலே உனக்கு ரிசல்ட்டு வந்தா எங்க எல்லோருக்கும் வந்த மாதிரி நீ பாஸ் ஆன நாங்க பாஸ் ஆன மாதிரி " என்றாள் அவர்களுள் ஒருத்தி.


சிற்பியின் நெருங்கிய தோழியான காயத்ரி "எலே மக்கா எனக்கு தெரியும்ல உங்க அக்கறை இவ பேப்பரை பார்த்து பிட்டு எழுதிய கூட்டம்ல இந்தக் கூட்டம் அதனால கொஞ்ச பதற்றம் இருக்கும்ல"


"காயு இரகசியத்தை இப்படி பட்டுன்னு சத்தமா சொல்லக் கூடாது.அதோட அதுக்கெல்லாம் ஒரு திறமை வேணுமாக்கும் நாம எல்லோரும் ப்ரெண்ட்ஸ் அதனால இப்படி எல்லாம் பிரிச்சு பேசப் படாது" என்றாள் இன்னொருத்தி.


"சரி சரி எல்லாம் விடுங்க மக்கா காலேஜ் தொறந்துட்டாங்களா? இல்லையா?"

"எங்கே இந்த பிரின்ஸி அம்மாவைக் காணோம்.வந்தா தானே கையில் பேப்பரோட தான் உள்ளே வருவாங்க" என்று சொல்லும் பொழுது வாட்ச்மேன் வாயிற்கதவை திறந்து விட்டார்.


எல்லா மாணவிகள் கூட்டமும் கல்லூரியின் உள்ளே நுழைந்தது.இப்பொழுது என்னத் தான் கையில் உள்ள தொழில்நுட்பத்தில் மூலமாக தேர்ச்சி எல்லாம் வந்து விட்டாலும் நேரில் நண்பர்களைக் கண்டு கிண்டலோடும் பழைய நினைவுகளைப் பேசியும் படித்துக் கொடுத்த பேராசிரியர்கள் முன்னிலையில் தேர்ச்சி விகிதத்தை காண்பதில் அலாதி இன்பம் இருக்கத் தான் செய்கிறது.


அப்படித் தான் சிற்பிகாவிற்கு இது இறுதியாண்டிற்கான தேர்வு முடிவென்பதால் தோழிகளை நேரில் கண்டு தேர்ச்சி விகிதத்தைக் காண எல்லா மாணவர்களும் கல்லூரிக்கு வந்திருந்தனர்.


இனிமேல் சில பேர் வேலைகளுக்குச் செல்லவும், சில பேர் திருமண நடப்பதற்காகவும் ஒரு சிலர் மேற்படிப்பு படிக்கவும் உள்ளதால் இனிமேல் ஒன்றாக சந்திக்க முடியாது என்ற காரணத்தினால் எல்லோரும் அங்கே ஆஜராகி இருந்தனர்.


அதற்கிடையில் எல்லோரும் ஒன்றாக கல்லூரி முழுவதும் ஒரு சுற்று சுற்றி விட்டு பல கதைகள் பேசி சிரித்துக் கொண்டு வந்தனர்.

ஒவ்வொருவரும் அடுத்து தாங்கள் செய்ய இருப்பதைப் பற்றி சொல்லிக் கொண்டு வந்தனர்.


அப்பொழுது சிற்பிகாவின் முறை வர அவளோ கண்கள் முழுவதும் மகிழ்ச்சியில் "எங்க அப்பா என்னை டீச்சர் டிரெயினிங்க்கு படிக்க வைக்கிறேன்னு சொல்லி இருக்காங்க நான் அதை படிக்கப் போறேன்" என்றாள்.


"அப்படியா! ரொம்ப சந்தோஷம்ல அப்போ கூடிய சீக்கிரம் நம்ம குரூப்ல ஒருத்தி தூங்கப் போற" என்று ஒருத்தி சொல்லவும்…


மற்றவர்கள் அவள் சொன்னதை புரிந்துக் கொள்ளாமல் விழிக்க… "என்னலே ஒளர்றே"

"ஆமாம் நமக்கு வந்து பாடம் கற்பிச்சவங்களெல்லாம் செய்த வேலையைச் சொன்னேன்.அதையே நம்ம சிற்பியும் செய்யப் போறாளே, அதைத் தான் சொன்னேன் மக்கா" என்றதும்


சிற்பிக்கு கோபம் வந்து விட்டது."எலே நீ எப்பவும் நம்ம ப்ரொபசர்ஸ்ஸ தப்பா பேசக் கூடாதுன்னு சொல்லி இருக்கேன்ல" என்று அவள் கோபம் கொண்டதும்…


மற்ற தோழிகள் "ஏய் சிற்பி கிறுக்கால நீ சும்மாச் சொன்னா பெரிசாக்காதே!எல்லாம் இன்னைக்கு ஒரு நாள் தானே விடு"என்றதும் அவளும் புரிந்துக் கொண்டாள்.


எல்லோருக்கும் பிரிவின் துயர் வாட்டியது.


தேர்ச்சி விகிதத்திற்கான காகிதத்தை அந்த கல்லூரியின் பேராசிரியர் வந்து அறிவிப்பு பலகையில் ஒட்டிச் சென்ற செய்தி அவர்களுக்கு தெரிய வந்தது.


மாணவிகள் எல்லோரும் அறிவிப்பு பலகையை முற்றுகையிட்டு நின்றனர்.எல்லோரையும் இடித்து தள்ளி முன்னேறிய சிற்பி தன் பெயரை தேர்ச்சி விகிதத்தில் தேட அங்கு அவளுடைய பெயர் இல்லை அதைக் கண்டு பதறியபடி இன்னொரு தடவை அவள் தன் பெயரை சரிபார்க்கும் பொழுது தான் கவனித்தாள்.


அவளுடைய பெயர் தனியாக இன்னொரு காகிதத்தில் ஒட்டப்பட்டிருப்பதைப் பார்த்தாள்.


அவள் படித்த பிரிவில் கல்லூரியிலேயே முதல் மாணவியாக தேர்ச்சிப் பெற்று இருந்தாள்.


அதை அவள் கண்டும் நம்ப முடியாமல் நிற்க… கூட்டத்தில் நின்ற அவளை இழுத்துப் பிடித்து நான்கு மாணவிகள் ஒன்றாய் அவளைத் தூக்கி தங்கள் தோள்மேல் தூக்கி வைத்து கொண்டாடினர்.


இதை எல்லாம் பார்த்த சிற்பிகா மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்று விட்டாள்.இனிப்பு வாங்கி அவள் வாயில் ஊட்டி விட்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.


அடுத்து பேராசிரியர்களைக் கண்டு அவர்களிடமும் ஆசிர்வாதமும் வாழ்த்தும் பெற்றாள்.


அவள் மகிழ்ச்சியாய் தன் பொன்னான நேரத்தை செலவிட்டுக் கொண்டிருக்கும் போது காயத்ரியின் அலைபேசி தொடர்ந்து அழைத்துக் கொண்டிருந்தது.


காயு யாரென்று பார்க்க… கனிகாவின் எண் தெரிய சிற்பியின் ரிசல்ட்டை கேட்கத் தான் அழைத்திருக்கிறார் என்று எண்ணி அழைப்பை எடுத்தவள் சந்தோஷமாக "அக்கா" என்றழைத்தாள்.


மறுமுனையில் கனிகா அழுதபடி "காயத்ரி சிற்பியை உடனே வீட்டுக்கு வரச் சொல்லு அப்பாவை அம்மா ஆஸ்பிட்டல் கூடிட்டு போய்ருக்கு எனக்கு பயமா இருக்கு வாலே சீக்கிரம்" என்று அலைபேசியை வைத்து விட்டாள்.


கனிகா அக்கா சொன்னதை கேட்டு அவள் பயந்தபடி சிற்பிகாவை பார்க்க… அவள் சந்தோஷமாய் புன்னகைத்து இருப்பவளின் சிரிப்பை தானே நிறுத்தப்போவதை எண்ணி தன் தோழியை நினைத்து வருந்தியபடி மெதுவாய் அவள் காதருகே கனிகா சொன்னதைச் சொன்னாள்.


அதைக் கேட்ட சிற்பிகாவின் புன்னகை அப்படியே நின்று போனது.தன்னைச் சுற்றி இதுவரை நடந்த எல்லாத்தையும் மறந்தவள் "நான் கிளம்புறேன்" என்று ஒத்த வார்த்தையை மட்டும் எல்லோரிடமும் பொதுவாக சொல்லி விட்டு வேகமாகச் சென்றாள்.


அவள் சென்றதும் காயத்ரி தனக்கு வந்த அழைப்பை பற்றி சொல்லி எல்லோரிடமும் சிற்பிகாவிற்கு பதிலாக சொல்லி விட்டு அவள் பின்னாலேயே சென்றாள்.


சிற்பிகாவிற்கு சொன்ன செய்தியைக் கேட்டதும் எதுவும் தோன்றாமல் அப்பா நன்றாக இருக்க வேண்டும் என்ற ஒரே வேண்டுதலை மட்டும் கடவுளிடம் மனதோடு வைத்துக் கொண்டு வீட்டிற்கு விரைந்தாள்.


(தொடரும்)
 
  • Like
Reactions: shasri