• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உயிரின் தொடக்கம் 13

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
685
516
93
Chennai
அத்தியாயம் 13

அய்யனார் கோவில் செல்லும் வழி இரண்டாய் பிரியும் பாதையில் சில நிமிடங்களாய் நின்றிருந்தான் சத்யா.

சொன்னது போல சங்கரைத் தேடி சத்யா செல்லவில்லை. ஆனால் சங்கர் இவனை தேடி வரும்படி தரமான செயலை செய்திருக்க, சங்கரும் வந்து சேர்ந்தான்.

"என்னனு தான் டா உன்னை எல்லாம் வளர்த்து விட்டாங்க உன் வீட்டுல? என் அப்பாக்கு ஏன் டா போனப் பண்ணின?" என வந்ததும் கோபமாய் சங்கர் கத்திவிட,

"ஓரமா நில்லு டா லாரி வர்ற பாதை!" என்றான் சத்யா.

"உன்கூட நிக்குறதும் ஒன்னு தான் நடுவழியில நிக்குறதும் ஒன்னு தான்.." என்றவன்,

"வந்து நிக்குறது சைட் அடிக்க.. இதுல துணைக்கு என்னை என் அப்பா வாயால போன்னு சொல்ல வச்சிருக்கான்.. என் நேரம்!" என்று முணுமுணுத்தான்.

"என்ன இருந்தாலும் உன் அப்பா ரொம்ப நல்லவர் டா.. என் அப்பா மாதிரி இல்ல.. குரூப் ஸ்டடிக்கு படிக்க கூப்பிட்டா சங்கர் போனை எடுக்கலனு தான் சொன்னேன்.. பத்தே நிமிஷத்துல நீ வந்துட்ட.." என்று கூறி சிரித்த சத்யாவை கொலைவெறியாய் பார்த்தான் சங்கர்.

"நேத்து பேசின பேச்சுக்கு நந்தினி உன்கிட்ட இருந்து தம்பிச்சுட்டான்னு நினச்சேன்.. இங்க என்ன வேலையா வந்த?" என்று சங்கர் எள்ளலாய் கேட்க,

"நீ நினைச்சதுக்கு நான் எப்படி பொறுப்பாக? லவ்வர்ஸ்குள்ள சண்ட வர தான் செய்யும்.. முட்டிக்குவோம் மோதிக்குவோம்.. அப்புறம் சேர்ந்துக்குவோம்" என்று தோள் குலுக்கி சத்யா கூற,

"அவ்வா!" என வாயில் கை வைத்துவிட்டான் சங்கர்.

நந்தினியை சத்யா பார்த்துவிட்டான்.. நந்தினி பார்க்கவில்லை மாறாக விஜயலக்ஷ்மி பார்த்துவிட்டார்.

"இவன் இங்க என்ன பன்றான்?" விஜயலக்ஷ்மி கேட்க,

"யாரும்மா?" என்று வெளியே பார்க்க, அவனைக் கடந்து சென்றிருந்தனர்.

"அதான் அந்த சத்யா!" என்று அன்னை கூறவும்,

"எங்கேம்மா?" என மீண்டுமாய் எட்டிப் பார்க்க,

"உன் அண்ணன் இருக்கான்.. மறந்துட்டியா? உன் அண்ணி வேற இங்கேயே தான் பார்த்துட்டு இருக்கிறா" என்றதில் தலையில் தன்னை தானே தட்டிக் கொண்டு அமர்ந்து கொண்டாள்.

"பிரச்சனை எதுவும் வந்திட கூடாது சாமி!" என்ற வேண்டுதல் இப்பொழுதே ஆரம்பம் ஆனது விஜயலக்ஷ்மிக்கு.

"அதான் பார்த்தாச்சு இல்ல.. கிளம்பு!" சங்கர் கூற,

"உடனே எதுக்கு கிளம்பனும்?" என்றவன் சாவகாசமாய் வண்டியில் சாய்ந்து நின்று கை கட்டிக் கொண்டான்.

"இவன் கரும்புள்ளி செம்புள்ளி குத்தாம விட மாட்டான் போல!" சங்கர் முணுமுணுக்க,

"எனக்கு ஒரு ஐடியா! இங்க சும்மா நின்னுட்டு இருக்குறதுக்கு கோவில்ல போய் சாமி கும்பிட்டா எக்ஸாம் ஆச்சும் நல்லா எழுதலாமே!" என்றான் சத்யா.

"நீ எல்லாம் என்ன மனுஷன் டா? கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம பேசுற? நந்தினி அண்ணனும் போறான்.. மறந்துட்டியா?" சங்கர்.

"நான் சாமி கும்பிட கூப்பிட்டேன்.. உன் புத்தி ஏன் அப்படி யோசிக்குது?" என்றவன் பேச்சில், தலை சுற்ற, அதிகமாய் யோசிக்க விடாமல் இழுத்தே சென்றான் சத்யா.

"நீ அடுப்பை பத்த வை ஜெயா! பொங்கல் ரெடி ஆனதும் பூஜையை ஆரம்பிச்சுடலாம்.. நான் போய் பூசாரிக்கு வேணும்கிறதை எடுத்து கொடுக்குறேன்.. நந்து நீ ஜெயாவுக்கு தேவையானதை எடுத்து கொடு" என்று கூறிவிட்டு விஜயலக்ஷ்மி நகர்ந்துவிட, ஜீவன் தங்கையிடமும் மனைவியிடமும் பேசியபடி அவர்கள் செய்வதை பார்த்துக் கொண்டு நின்றான்.

"டேய்! சொன்னா கேளு டா.. வா டா போய்டலாம்!" சங்கர் பரபரக்க,

"தப்பு பண்ணினவன் போலிஸ்க்கு பயந்தா சரி.. உனக்கு என்ன இப்ப?" சத்யா கேட்டுவிட்டு கோவில் படிகளில் ஏற,

"போலீஸ்லாம் ரெண்டாவது மச்சி! நந்தினி அண்ணன் ஒரு கோவக்காரன்.. ரோட்லயே எத்தனை பேரை அடிச்சு, வாய் சண்டை ஆகினு பார்திருப்போம்? தப்புன்னா டப்புன்னு கை நீட்டிருவார் டா!" என்று சங்கர் கூறும் பொழுது உள்ளேயே வந்திருந்தனர்.

"நீ எல்லாம் மனுஷனே இல்லை டா.. பேசி பேசி கோவில் உள்ளேயே கூட்டிட்டு வந்துட்ட!" என்றும் கேட்க, எதற்கும் அசையவில்லை சத்யா.

"போச்சு! இவங்க வேற எதுப்புலேயே நிக்கிறாங்களே!" என்று சங்கர் கூறவும் அவன் பார்வை சென்ற திசை பார்த்து அங்கிருந்தவர்களை கண்டு கொண்டான் சத்யா.

ஜெயாவும் நந்தினியும் தீயை கூட்டியபடி இருக்க, அருகே ஏதோ பேசியபடி நின்றான் ஜீவன்.

சட்டென திரும்பிய ஜீவன் எதையோ யோசித்து நியாபகம் வந்தவனாய் இவர்களை கை நீட்டி அருகில் அழைக்க, பக்கென்று ஆனது சங்கருக்கு.

"உங்களைத் தான் இங்க வாங்க டா!" என்ற ஜீவன் சத்தத்தில் ஜெயாவும் நந்தினியும் திரும்பிப் பார்க்க, நந்தினி அதிர்ந்தவள் சட்டென திரும்பிக் கொண்டாள்.

இதயம் மட்டும் இன்னும் பலநூறு மடங்கு வேகத்தில் துடித்துக் கொண்டிருந்தது.

"நீ வீரபாகு அண்ணாச்சி மகன் தானே?" என்ற ஜீவன், சங்கரையும் தெரிந்த விதமாய் கேட்க,

"ஆமாங்க ண்ணே! சும்மா இந்த பக்கமா வந்தோம்.. அப்படியே சாமி கும்பிட்டு போகலாம்னு.." என்று முடித்தான் சங்கர்.

"உன் பேரு சங்கர் தானே?" என்ற ஜீவன், "உன்னையும் பார்த்துருக்கேன்.. சட்டுனு பேர் நியாபகம் வர்ல!" என்றான்.

"சத்யா!" அமைதியாய் சத்யா கூற, ஓரக் கண்ணால் அவ்வப்போது பார்க்க தான் செய்தாள் நந்தினி.

"என்ன பண்றீங்க ரெண்டு பேரும்!" என்று பொதுவாய் ஜீவன் பேச ஆரம்பிக்க, அப்போது தான் கொஞ்சம் ஆசுவாசம் வந்தது நந்தினியோடு சங்கருக்கும்.

இதற்கு கூட அலட்டிக் கொள்ளாத சத்யாவை நினைத்தால் இதெல்லாம் எங்கு போய் முடியுமோ என்ற பயமும் கூட வந்தது சங்கருக்கு.

"அங்க என்ன பார்வை? தீ அணையுது பாரு!" ஜெயா கூறவும் நந்தினி திரும்பிக் கொள்ள,

"நாங்களும் நந்தினி காலேஜ்ல தாம்ண்ணே.. ஒன்னா தான் படிக்கிறோம்.. செமஸ்டர் லீவ்.. அதான்.." என்றது சங்கர்.

"அப்படியா? நந்தினி! உன் கிளாஸ்ஸா?" என தங்கையிடம் கேட்க,

"ஹான்!" என திரும்பியவள்,

"ஆமாம் ண்ணா!" என்றுவிட்டு மீண்டும் திரும்பிக் கொண்டாள்.

ஜெயாவிற்கு ஓரளவு சத்யாவைப் பற்றி தெரியும்.. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இவளிடம் சத்யா நந்தினி பின் சுற்றுவதை கூறி கேட்டதுண்டு.

நந்தினி அவனை திரும்பி பார்ப்பதில்லை என்பதால் ஜெயாவும் அதை அப்படியே விட்டிருந்தாள். இன்னொன்று ஊரார் பேச்சைக் கேட்டு இதை கணவன் காதுக்கு கொண்டு சென்றாள் அவன் மனைவி என்றும் பார்க்க மாட்டானே!

"சரி ண்ணே! நாங்க அப்படியே கிளம்புறோம்" என்று சொல்லி அவனிடம் இருந்து கிளம்ப நந்தினிக்குமே அப்பாடா என்றிருந்தது.

"மச்சான் தானே? கூட ரெண்டு வார்த்தை பேசி இருக்குறது?" என்று சத்யாவிடம் சங்கர் வம்பு வளர்க்க,

"அதுக்கெல்லாம் நேரம் இருக்கு டா!" என்றவன் கடவுள் முன் வந்து நின்றான்.

எங்கேயும் நிற்கவில்லை. வந்த வேகத்தில் சாமி கும்பிட்டு விஜயலக்ஷ்மியின் பார்வையையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு என கிளம்பிவிட்டான்.

பூஜை முடிய மதியம் ஆகிவிட, நந்தினி அன்று அதன்பின் அவனை பார்க்கவில்லை.

நாட்கள் நகர்ந்து கடந்து பரீட்சையுடன் அந்த அரை வருடம் முடிந்திருந்தது. மாதங்களும் கடக்க, நாட்கள் விரைவு ரயில் வேகத்தில் செல்ல தொடங்கியது.

கல்லூரியில் எல்லாம் நல்ல விதமாய் போய்க் கொண்டிருக்க, கூடவே சத்யாவின் காவல் துறை கனவுமே வலு பெற்றிருந்தது.

இன்னும் யாரும் எதிர்பார்க்காத ஒன்று நந்தினிக்கு சத்யாவின் மீதான ஒரு சிறு துளி அளவிலான என அவள் நினைத்திருக்கும் நேசம்.

யாரிடமும் அவள் வெளிப்படுத்தியோ காட்டிக் கொண்டதோ இல்லை. முக்கியமாக சத்யாவிடம். ஆனால் தான்யாவிடம் மறைக்க முடியவில்லை. கூடவே இருப்பவள் எளிதாய் அவள் மனதை கண்டு கொண்டிருந்தாள்.

"விடு டி! இன்னும் எவ்வளவோ நாள் இருக்கு.. எந்த அம்பிஷனும் இல்லாமல் இருந்த சத்யாக்கு இப்ப தான் ஒரு பிடிப்பு வந்திருக்கு போலீஸ் ஆகணும்னு.. எல்லாம் நல்லபடியா நடக்கட்டும்.. அப்புறமா பார்த்துக்கலாம்" என்ற நந்தினி அடுத்து அதைப் பற்றி தான்யாவையும் பேச விடவில்லை.

சத்யா நந்தினியிடம் காதல், திருமணம் என எந்த வார்த்தைகளையும் இந்த இடைப்பட்ட நாட்களில் பேசியிருக்கவில்லை நந்தினியிடம். அதுவும் ஒரு காரணம் நந்தினிக்கு தன் மனதை மறைக்க. அவன் தன்னிடம் ஏதோ ஒரு கோபத்திலோ அல்லது சிறு சங்கடத்திலோ இருப்பது புரிந்தாலும் அது சந்தியா விஷயத்தில் வந்தது தான் என்பதை அவள் மறந்தே போயிருந்தாள்.

அதற்காக இருவரும் பேசாமல் எல்லாம் இல்லை. நால்வரும் கல்லூரியில் எந்நேரமும் என ஒன்றாய் தான் இருந்தனர். அவ்வப்போது என இருவருக்குள்ளும் பேச்சு வார்த்தைகள் இருக்க தான் செய்தது.

முதல் வருடம் முடியும் நேரம் ஜீவன் மூலமாய் ஜெயா கருவுற்றிருக்கும் செய்தி நந்தினிக்கு வந்து சேர, அவ்வளவு மகிழ்ச்சி அவளுக்கு.

நண்பர்களிடமும் கூறி மகிழ, "சீக்கிரமே அத்தையாக போற வாழ்த்துக்கள் டி!" என்றாள் தான்யா.

"அப்ப நீ மாமா ஆக போறியா டா?" என சத்யா காதில் சங்கர் கேட்க,

"இல்லைனு சொல்லுவேன் நினைக்காத!" என்றான் முகத்தில் எதையும் காட்டாமல்.

"எங்கருந்து தான் டா இந்த மூஞ்சிய வாங்கின?" என சங்கர் நொந்து கொள்ள தான் முடிந்தது.

முதல் வருடத்தின் இறுதி தேர்வை முடித்து சத்யா வெளியே வர, அவனுக்காய் வெளியே காத்திருந்தனர் சந்தியாவின் தோழிகள் என சத்யா அன்று சந்தித்த நால்வர்.

சத்யாவைப் பார்த்ததும் அவன் எதிராய் இவர்கள் வர, சங்கர், நந்தினி, தான்யா என மூவருமே அவனுடன் தான் வந்து கொண்டிருந்தனர்.

"நந்துவை கூட்டிட்டு கிளம்பு! நான் வர்றேன்!" என சங்கரிடம் சத்யா மெதுவாய் கூற,

"இப்ப எதுக்கு டா இவங்க உன்னை தேடி வர்ராங்க?" என்றான் சங்கர்.

எந்த பிரச்சனையும் இல்லாமல் சென்று கொண்டிருக்கும் பொழுது இது எதற்கு தேவை இல்லாமல் என்ற எண்ணம் சங்கருக்கு.

"சொன்னதை செய் டா!" என்று கூறவும் அந்த பெண்கள் அருகே வரவும் சரியாய் இருந்தது.

"அவன் பேசிட்டு வரட்டும்.. வாங்க போகலாம்!" என்று சங்கர் கூற, அவர்களை திரும்பிப் பார்த்தவாறே சென்றாள் நந்தினி.

சத்யாவும் அதை கவனித்தவன் பின் பெண்கள் புறம் திரும்பினான்.

"அவங்க எல்லாம் அந்த பொண்ணு சந்தியா பிரண்ட்ஸ் தானே?" நந்தினி சங்கரிடம் கேட்க,

"ம்ம் ஆமா" என்றவனுக்கு அடுத்து என்ன கேட்பாளோ என்றிருந்தது.

"ஆனா இப்ப ஏன் அவங்க சத்யாவை பார்க்க வரணும்?" என்ற நந்தினி குழப்பமாய் பார்க்க,

"ரொம்ப யோசிக்காத நந்தினி.. அன்னைக்கு அந்த பொண்ணை பத்சாரிச்சோம்ல? அதனால எதாவது கேட்க வந்திருப்பாங்க! அதை விடு எக்ஸாம் எல்லாம் எப்படி பண்ணின? ஊருக்கு எப்ப போற?" என பேச்சை மாற்றி இருந்தான் சங்கர்.

தொடரும்..