• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உயிரின் தொடக்கம் 14

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
685
516
93
Chennai
அத்தியாயம் 14

"சொல்லுங்க!" சத்யா அந்த பெண்களிடம் கேட்க,

"அது.. வந்து ண்ணா! சந்தியா வீட்டுக்கு போனோம்.. நீங்க வந்து பேசினதா சொன்னாங்க.. அந்த ஸ்ரீதர்..." என்று தயங்கி தயங்கி கூறிய பெண் மற்ற பெண்களை திரும்பிப் பார்க்க,

"அதான் எல்லாம் முடிஞ்சிருச்சே! சந்தியா பாவம் தான்.. நாம எவ்வளவு பேசினாலும் திரும்ப நமக்கு கிடைக்க போறதில்ல.. உங்க பிரண்ட் உங்க கூடவே இருக்குறதா நினச்சு கடந்து வாங்க.." என்றவன்,

"அந்த ஸ்ரீதர் டெத்க்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.. வாழ தகுதி இல்லாதவங்க சாவு இப்படி தான் மர்மமா இருக்கும்.. இனி இது எதுவுமே உங்க லைஃப்க்கு தேவை இல்லாதது தான்.. வேற எதுவும் இங்க உங்களுக்கு பிரச்சனைனா நீங்க என்னை தாராளமா காண்டாக்ட் பண்ணலாம்.." என்றுவிட்டு,

"நான் சொல்றது புரியுது தானே?" என்று கூற, அனைவரும் புரிந்ததாய் தலை அசைத்தனர்.

"எங்களுக்கு எப்படி சொல்றதுன்னு தெரியல.. ஆனா எல்லாரும் சந்தியாக்கு அகைன்ஸ்ட்டா இருந்தப்ப நீங்க மட்டும் துணையா நின்னது எங்களுக்கு அந்த கடவுளைப் பார்த்த மாதிரி தான் இருந்துச்சி.. உங்க மேல தனி மரியாதையும் வந்துச்சி.. எங்க உடனே வந்து பேசி அதை யாரும் பார்த்து எதுவும் பிரச்சனை ஆகிடுமோன்னு தான் நாங்க இவ்வளவு நாள் உங்ககிட்ட வர்ல.. ஏதோ ஒரு விதத்துல நீங்க சந்தியாக்கு எங்களுக்கு சப்போர்ட்டா இருந்திருக்கீங்க.. ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்.. என்னைக்கும் நாங்க உங்களை மறக்க மாட்டோம்.. இல்ல" என்ற பெண் மற்றவர்களைப் பார்க்க, ஆமாம் என்பதாய் தலை அசைத்தனர் அனைவரும்.

"சரி ஓகே! டைம் ஆச்சு கிளம்புங்க.." என்றவன் மெல்லிய புன்னகை சிந்தி அவர்களுக்கு விடை கொடுத்தான்.

"என்னவோ இருக்கு தனு! அவங்க எதுக்கு இவ்வளவு நாள் கழிச்சு சத்யாவை பார்க்க வரணும்..?" நகத்தை கடித்தபடி நந்தினி தான்யாவிடம் விடுதி அறையில் அமர்ந்து கேட்க,

"நீ அதை ஆராய்ச்சி பண்ணிட்டு இரு.. நான் கிளம்புறேன்!" என்றவள் பெட்டியில் துணிகளை அடுக்கிக் கொண்டிருந்தாள்.

இரண்டு வாரம் விடுமுறை. அடுத்த ஒரு வருடமும் ப்ராஜெக்ட், லேப், இரண்டு வகுப்புகள் என அதிகம் நேரம் சென்றுவிடும்.

"எனக்கு பதில் சொல்லு டி.. இல்லைனா தலையே வெடிச்சுடும்" நந்தினி கூற,

"சத்யாக்கே கால் பண்ணி கேளேன்!" என்றாள் தான்யா.

"அவன் தான் முன்ன மாதிரி என்கிட்ட பேச மாட்றானே!" என்றாள் பாவமாய்.

"ஹான்! முன்ன மாதிரின்னா? முன்னாடி மட்டும் எப்படி இருந்திங்களாம்?" என தான்யா கிண்டல் செய்ய,

"ப்ச்! போ டி.. ரொம்பத் தான்" என்றவளுக்கு இன்னும் மனம் தெளியவில்லை.

"சங்கர்கிட்ட கேட்க வேண்டியது தானே?" தான்யா பொறுக்க முடியாமல் கேட்க,

"அவன் சத்யாக்கு மேல.. அவன் அனுமதி இல்லாம வாயை திறந்திடுவானாக்கும்" என்று பேசியபடி இருவருமே ஒன்றாய் கிளம்பி இருந்தனர்.

ஜீவனிடம் விடுமுறையைப் பற்றி எதுவும் கூறி இருக்கவில்லை நந்தினி. வந்துவிட்டால் வீட்டிற்கு சென்று அண்ணியின் பேச்சைக் கேட்க முடியாதே!

அதுவும் விஜயலக்ஷ்மி வேறு அத்தனை அறிவுரை கூறி இருந்தார். மாசமாய் இருக்கும் பெண் மன நிம்மதியுடன் இருப்பது தான் முக்கியம் அதனால் எந்த பிரச்சனையும் உன்னால் வர கூடாது என்று.

அதே நேரம் சங்கர் சத்யாவிடம் சந்தியாவின் நண்பர்கள் வருகைக்கான காரணத்தை கேட்டு தெரிந்து கொண்டிருந்தான்.

"ம்ம்! என்ன சொல்லு.. பிரண்ட்ஸ் இல்லைனா இந்த வாழ்க்கையே வேஸ்ட் தான் டா.. அம்மா அப்பாக்கு அப்புறம் நம்ம மேல அவ்வளவு கேர் எடுத்துக்குறவங்க முதல்ல பிரண்ட்ஸ் தான்.." உணர்ந்து சங்கர் கூற,

"ஏன் லவ்வர், ஹஸ்பண்ட் அண்ட் வைப் எல்லாம் அந்த கேட்டகரில வர மாட்டாங்களாமா?" என சத்யா கிண்டலாய் கேட்டான்.

"செண்டிமெண்ட்டா ஒரு மேட்டர பேச விடுறியா? லவ், ஹஸ்பண்ட் அண்ட் வைப் எல்லாம் வர்றதுக்கு முன்னயே நமக்கு பிரண்ட்ஸ் வந்துடுறாங்க இல்ல? சொல்ல போனா இவங்களை விட பிரண்ட்ஸ் தான் நம்மளோட லாங் ட்ராவெல் பன்றாங்க.." என்றவனை ஒரு மாதிரியாய் பார்த்த சத்யா,

"விட்டா நாவல் எழுதிடுவ போல!" என்றவனுக்கும் நண்பன் சொல்வது புரியாமல் இல்லை

"உன்கிட்ட போய் சொல்லுவேனா! போ டா!" என்றவனுடன் கிளம்பி இருந்தான் சத்யாவும்.

"மவன் வந்தாச்சாட்டம் இருக்கு" வீரபாகு கேட்டபடி முகத்தை அலம்பி வர,

"வரும் போதே எவனாவது உங்ககிட்ட வத்தி வச்சிடுவான் போல.. அவன் தான் இப்ப எந்த வம்புக்கும் போறது இல்லயே! பிறவென்ன உங்களுக்கு? அதுவும் இப்ப எல்லாம் ரொம்ப கவனமா இருக்கான்.. நான் அடிச்சு சொல்லுதேன் அவன் போலீஸ் ஆகி காட்டுதானா இல்லையா பாருங்க" என்றார் வைதேகி மகனை விட்டு கொடுக்காமல்.

"போலீஸ் வேலைய என்ன இந்தா வச்சுக்கனு சும்மா தூக்கி குடுக்காங்களாக்கும்? அவன் பாஸ் ஆனாலும் கான்ஸ்டபிள் தான்.. நியாவம் இருக்கட்டும்.. பொறவு வீட்டுல வார கறி குழம்பு வாசம் தான் உன் மவன் வந்தத சொன்னது.. ஊர்ல அடுத்தவனுக்கு வேலை இல்லையாக்கும்.. பொல்லாத புள்ளைய பெத்ததுக்கு பெரும தேவை தான்" மகனின் எண்ணம் நன்றாய் புரிந்தும் கணவன் மனைவிக்குள் அடிக்கடி வரும் பேச்சுக்கள் தான் இது.

"இவகிட்ட கொஞ்சம் நல்லா பேசிட்டா அவன் கூட சேர்ந்து என்னையே சிரிச்சு பேசிருவா" என நினைத்தே மனைவியிடம் எதுவும் சொல்வது இல்லை.

அதை புரிந்தது போலவே வைதேகியும் எதுவும் கேட்பது இல்லை.

"என் புள்ளைய எதாவது சொல்லிட்டே திரியனும் உங்களுக்கு.. என்னமோ நான் அவனுக்கு மட்டும் தான் கறி எடுத்து சமைக்க மாதிரி தான்.." என்றவர் சமைத்ததை கொண்டு வந்து வைக்க, வீரபாகு அமரும் நேரம் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தான் சத்யா.

வந்தவன் தந்தை சாப்பிட அமருவதை பார்த்ததும் சத்தம் இல்லாமல் உள்ளே செல்ல பார்க்க,

"இதுக்கு தான வந்த? வந்து உட்காரு!" என்றார் தந்தை முதல் முறையாய்.

"பரவால்ல!" என்றவன் உள்ளே செல்ல,

"இந்தா! அதான் அப்பா கூப்பிடுதாங்க இல்ல.. என்ன உனக்கு? வந்து உட்கார்ந்து சாப்பிடுவியா!" என்று குரல் கொடுத்தார் வைதேகியும்.

தந்தையும் மகனும் அமர்ந்து சாப்பிடுவதெல்லாம் ஒரு வயதிற்கு பிறகு நடப்பதா? வாய்ப்பு கிடைக்கும் பொழுது பார்த்து மகிழ்ந்து கொள்ள வேண்டியது தான் என அழைத்துவிட்டார் வைதேகி.

நொடிகளில் யோசித்தவன் பின் வந்து அன்னை அருகே அமர, முகமெல்லாம் புன்னகை மலர பரிமாறினார் வைதேகி.

"பொண்ணு பின்னாடி போகலனாலே அவன் உருப்பட ஆரம்பிச்சுட்டான்னு அர்த்தம்!" வீரபாகு கூற, கவனியாததை போல இருந்தான் சத்யா.

"அவன் வந்ததே சந்தோசம்னு இருக்கேன்.. கெடுக்க பாக்குறாரு மனுஷன்" என நினைத்த வைதேகி,

"முதல்ல சாப்பிட்டு முடிங்க.. சாப்பிடும் போது என்ன பேச்சுன்னு நீங்க தான சொல்லுவீங்க?" என வைதேகி கேட்க,

"மகனை பத்தி இவ்வளவு நேரமும் பெருமையா பேசினியே! அதுக்கு காரணம் பொண்ணு பின்னாடி சுத்தி நேரத்தை போக்கிறதை விட்டுட்டு அவன் ஒழுங்கா படிக்க ஆரம்பிச்சது தான்னு சொல்லுதேன்.. கேள்விபட்டேன்! புத்தி வந்தா சரி தான்" என்றவர் கைகளை கழுவிக் கொண்டு எழ, அதுவரை சாப்பிட்டுக் கொண்டிருந்தவன்,

"அவ தான்னு முடிவாகி போச்சு! சும்மா சுத்துனா கட்டி வச்சுருவாங்களா இல்ல நீங்க தான் எனக்குன்னு போய் பொண்ணு கேட்பிங்களா? அதுக்கு தயாராகணுமே!" என்றவனும் சாப்பிட்டு முடித்து எழுந்து உள்ளே சென்று விட்டான்.

வாயில் கைவைக்காத குறையாய் ஆ என பார்த்திருந்தார் வைதேகி.

"பாத்தியா என்ன சொல்லிட்டு போறான்னு?" என்றவர் முகமும் பெருமையில் தான் மின்னியதோ?.

"ஆமாங்க! அவன் பேசினதை கேட்டதும் வளந்ததை மறந்து தூக்கி வச்சு கொஞ்சனும் போல இருந்தது.. எவ்வளவு பக்குவமா பேசுதான்?" என வாய் திறந்து வைதேகி கூறியவர் இன்னும் சத்யா சென்ற வாசலையே பார்த்து நிற்க,

"முதல்ல செஞ்சு காமிக்கட்டும்!" என்று கூறி சென்றுவிட்டார் வீரபாகு.

அன்னை தந்தை நினைத்ததற்கும் மேலாய் கொஞ்சம் அதி முயற்சியில் தான் இருந்தான் சத்யா. சங்கரையும் விட்டுவிடவில்லை. கூடவே இழுத்து தான் சென்றான்.

அடுத்த நாள் லேப் செய்முறை.. மீண்டும் நான்கு நாள் விடுமுறை.. ஒரு நாள் பயணமாய் கல்லூரிக்கு இவர்கள் கிளம்ப, நந்தினியை ஜீவன் தான் அழைத்துக் கொண்டு வந்தான்.

கிளம்பும் முன் அண்ணியின் முன்னால் நின்றுவிட கூடாது என கவனமாய் தான் இருந்தாள் நந்தினி.

ஜீவனிடம் சொல்லிவிட்டு பேருந்தில் செல்வது தான் அவளின் எண்ணம். ஆனால் அண்ணன் தான் தான் வருவேன் என்றுவிட ஒரு அளவுக்கு மேல் மீறிட முடியவில்லை.

அன்னையிடமும் பாவம் போல கூற, ஜெயா என்னவெல்லாம் பேச போகிறாளோ மகள் சென்ற பின் என்று தோன்றினாலும் மகளை தேற்றி அனுப்பி வைத்தார்.

ஜெயாவிற்கு இது நான்காம் மாதம்.. இப்பொழுது விஜயலக்ஷ்மி தானே எல்லா வேலைகளையும் செய்துவிடுவார். மகன் இருக்கும் பொழுது இல்லாத பொழுது என ஜெயா நடிக்க தேவை இல்லாதபடி அவளுக்கு கர்ப்ப கால உபாதைகள் அதிகமாய் இருக்க, கவனமாய் தான் பார்த்துக் கொண்டார் விஜயலக்ஷ்மி.

பயந்தது போல எதுவும் இல்லை.. பார்வையால் மட்டும் முறைத்துவிட்டு அறைக்கு சென்றுவிட்டாள் ஜெயா.

கல்லூரி வாசலில் நந்தினி இறங்கவும் தான்யா தன் தந்தையுடன் வந்து சேர, வகுப்பறை வரும் நேரம் அங்கே சத்யா சங்கர் அமர்ந்திருந்தனர்.

"நாளைக்கு உங்களுக்கு எக்ஸாம் இருக்குதா?" தான்யா சங்கர், சத்யாவிடம் கேட்க,

"உனக்கெப்படி தெரியும்?" என்றான் சங்கர்.

"ஜீவன் அண்ணா சொன்னதா இப்ப தான் நந்தினி சொன்னா" தான்யா கூற, சத்யா நந்தினியை ஒரு பார்வை பார்த்தவன் மீண்டும் தன் வேலையை தொடர,

"ரொம்பத்தான்!" நினைத்துக் கொண்டாள் மனதில் நந்தினி.

நாளை காவல்துறையில் சேர்வதற்கான தகுதித் தேர்வு. வண்டியில் வரும் பொழுது யாருக்கோ ஜீவன் அலைபேசியில் அதைப் பற்றி பேசி இருக்க, வாய் கொள்ளாமல் தான்யாவிடம் அதை கூறி, இப்பொழுது அவன் முன்னே கொட்டிய தோழி தலையில் கொட்டினால் என்ன என்று தான் கடுப்பானாள் நந்தினி.


தொடரும்..