• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உயிரின் தொடக்கம் 19

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
683
512
93
Chennai
அத்தியாயம் 19

'என்ன இவன் இன்னும் எழுந்துக்காம இருக்கான்.. குளிக்க போகும் போதே எழுப்பி விட்டுட்டு தான போனேன்' என எண்ணியபடி கிளம்பிக் கொண்டே சத்யாவை எழுப்பினான் சங்கர்.

"டேய்! மலக் குரங்கே! டைம் ஆகிட்டு டா" என பல நேர கூச்சலுக்கு பின், சாவதானமாய் எழுந்து அமர்ந்து கொட்டாவியை வெளிவிட்டான் சத்யா.

"இவ்வளவு நேரம் தூங்க மாட்டியே! உடம்பு எதுவும் சரி இல்லையா என்ன?" சங்கர் கேட்க,

"எல்லாம் நல்லா தான் இருக்கு!" என்றான் எழுந்தபடி.

"ம்ம்! சரி சீக்கிரம் கிளம்பு.. நான் டிபன் கொண்டு வர்றேன்!" என வெளியே செல்ல போக,

"அதெல்லாம் வேண்டாம்.. நீ சாப்பிட்டு கிளம்பு.. நான் இன்னைக்கு லீவ்!" என்றான்.

"லீவா? என்ன டா திடிர்னு? இப்ப எதுக்கு லீவ்?"

"சும்மா தான் டா!" என்றவனை ஆறாயும் பார்வை பார்க்க,

"என்ன?" என்றான்.

"நேத்து நந்தினிகிட்ட பேசினாலும் பேசின... ஓவரா தான் இருக்கு.. அவ உன்ன தேடணும்.. அதுக்கு தான?" என்னவோ கண்டு பிடித்ததை போல சங்கர் கேட்க,

"தேடுறதுக்கு அவ இன்னைக்கு வரணுமே!" என்றான் சத்யா.

"என்னது நந்தினியும் காலேஜ் வரல.. நீயும் காலேஜ் வரலையா? அவ்வளவு தூரம் போயாச்சா? எங்க டா கூட்டிட்டு போற அவளை.. வேணாம் டா நல்லதில்ல.. உன் அப்பாவை விடு இது என் அப்பாக்கு தெரிஞ்சுது.. என்னமோ நானே லவ் பண்ணின மாதிரி ஊரக் கூட்டிருவாரு" பயந்து பதறி அடுக்கினான் சங்கர்.

'இது கூட நல்லாருக்கே!' சட்டென சத்யாவிற்கு தோன்ற,

"நான் உன்னயே சமாளிக்குறேன்.. உன் அப்பா எல்லாம் ஒரு மேட்டரா? கிளம்பு! கிளம்பு!" என்று கெத்தாய் கூறிய சத்யா,

"ஆமா எதாவது புது ட்ரெஸ் வச்சிருக்க?" என்று வேறு கேட்க,

"எனக்கு நல்லா வருது டா சொல்ல வேண்டாம்னு பாக்குறேன்.. நீ எல்லாம் என்னனு வளந்த.." என்ற சங்கருக்கே சத்யா என்றும் புரியாத புதிர் தான்.

"ஆமா காலேஜ்ல கேட்டா என்ன சொல்லணும் டா?" சங்கர் வேறு வழி இன்றி சரணடைந்து கேட்க,

"அங்க தான்யா பார்த்துப்பா.. எனக்கு நீயே ஏதாவது அடிச்சு விடு.. லேட்டாச்சு நீ கிளம்பு" என்றவன் பாத்ரூம் உள்ளே செல்ல, சில நிமிடங்கள் தலையை சொறிந்தப்படி நின்று,

"இதுக்கு தான் பிரண்ட்டுங்களை கூட வச்சுருக்கீங்களா டா லவ் பண்றவனுங்க எல்லாம்?" என்ற புலம்பலோடு கல்லூரி சென்றான்.

குளியலறையில் இருந்து வெளியே வந்த சத்யா மீண்டும் படுத்துக் கொண்டான்.

அன்னை இரவே கூறி இருந்தார் ஜீவனிற்கு குழந்தை பிறந்ததைப் பற்றி. யூகத்தின் கூடவே சத்யாவும் தான்யா மூலம் நந்தினி கிளம்புவதை உறுதி செய்திருக்க, இரு நாட்களாய் தடுமாறும் மனதை சமன் செய்ய தெரியாமல் போராடிக் கொண்டிருந்தவனுக்கு கிடைத்த துடுப்பாய் அவள் இல்லை என்றதும் தானும் விடுமுறை எடுத்துக் கொண்டான்.

அவளின் ஒவ்வொரு வார்த்தையும் இன்னும் மனதில் ஓடிக் கொண்டு தான் இருந்தது.

"என்ன செஞ்சிட்டேன் நான் உன்னை நந்து? ஜஸ்ட் பேச கூட ஆரம்பிக்கல.. சரி, தப்பு, அம்மா, அண்ணா, பேமிலினு எல்லாம் பேசி நீயே கன்ஃபார்ம் பண்ணிட்ட உனக்குள்ள நான் இருக்குறத.." தனக்கு தானே சத்யா சொல்லிக் கொண்டான்.

"ஒன் சைட் லவ் ஒரு ஃபீல்னா டபுள் சைட் இன்னொரு மாதிரி ஃபீலா இருக்கே! சத்யா! என்ன டா இப்படி ஆகிட்ட?" என்று நீண்ட நேரம் மனதோடு பேச்சு வார்த்தை நிகழ,

அங்கே தான்யா உண்மையைக் கூறி இருந்தாள் சங்கரிடம்.

"அதான பாத்தேன்! இவனுக்கு அவ்வளவு தைரியமா.. முதல்ல இந்த பொண்ணு எப்படி சம்மதிச்சி இருக்கும்னு நினச்சேன்!" சங்கர் கூற, என்னவென்று விசாரித்த தான்யாவிடம் காலையில் சத்யா கூறியதை கூற,

"எது நந்தினி கூட சத்யா அவுட்டிங்கா? இதெல்லாம் நடக்குற காரியமா? பொய்யா இருந்தாலும் சத்யாக்கு கொஞ்சம் நியாயம் வேண்டாம்?" என்று கூறி கிண்டல் செய்தாள்.

காலையில் சத்யா நீண்டதொரு கனவோடு மீண்டுமாய் உறங்கி எழுந்து நந்தினியைப் பற்றிய நினைவோடு அறைக்குள் சுற்றி வந்தவன், மதியமாய் உண்டுவிட்டு வெளியே கிளம்பினான்.

அப்போது தான் பிசிக்கல் தேர்வுக்கான தேதி வெளிவந்தது தெரிய வர, தனது மொபைலை எடுத்து மீண்டும் அந்த செய்தியைப் பற்றி அலசி எடுத்து தெரிந்து கொண்டான்.

மாலை சங்கர் வந்த பின்னும் அரை மணி நேரம் கழித்து தான் வந்தான் சத்யா.

"எங்க டா போன?" சங்கர் கேட்க,

"அதான் காலையிலேயே சொன்னேனே!" என்றான் நக்கலாய் சத்யா.

"என்னை சொல்லணும்.. நீ சொன்னதும் நம்பினேன்ல!" என்று சங்கர் முறைக்க,

"போலீஸ்னு கெத்தா சொல்லிக்க வேண்டிய இடத்துல இருந்துட்டு இந்த ஒரு சின்ன பொய்யை கூட கண்டுபிடிக்க முடியலை இல்ல உனக்கு?" என்றான் சத்யா.

"அதை கண்டுபிடிக்குறது முக்கியமான்னு எனக்கு தெரியாது.. ஆனா நான் வேற ஒன்னை கண்டுபுடிச்சிருக்கேன்.." என்றான் சங்கர்.

"எதாவது தேவை இல்லாத ஆணியா?"

"உனக்கு ரொம்ப தேவையான ஆணி தான்.."

"பிசிக்கல் டெஸ்ட் டேட் வந்ததா?" என்று சாதாரணமாய் சத்யா கேட்க,

"ஓஹ் அது வேற வந்துடுச்சா?" என்றான் சங்கர்.

"முதல்ல நீ சொல்ல வந்ததை சொல்லு!" என்று சத்யா கூற,

"அதெல்லாம் ஒன்னும் இல்ல.. சின்ன மேட்டர் தான்.. நந்தினிக்கு அவங்க அண்ணன் பையன் பாத்துருக்காங்க.. ஆனா அது செட் ஆகலையாம்.. நேத்து தான் நந்தினிக்கே தெரியும் போல!" என்று சங்கர் கூற,

"ஓஹ்!" என தகவலாய் கேட்டுக் கொண்டான் சத்யா.

"அவ்வளவு தானாடா உன் ரியாக்சஷன்?" சங்கர் நம்பாமல் கேட்க,

"வேற என்ன பண்ணனும்? அதான் செட் ஆகலை இல்ல?" என்றான்.

"ஒருவேளை வேற பார்த்து செட் ஆச்சுன்னா?"

"அதுவரை நான் என்ன புளியங்கா பறிக்க போறேனா?"

"அதான பாத்தேன்! சரி தான்.. நீ எதாவது முடிவுல இருப்ப.. இல்ல முடிவெடுத்துருப்ப.. எனக்கெதுக்கு.. விஷயத்தை சொல்லிட்டேன்.. அவ்வளவு தான்!" என்றான்.

மருத்துவ மனையில் குழந்தையை கையில் வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் நந்தினி.

"அப்படியே உன்ன மாதிரியே இருக்கா.. இந்த மச்சம் கூட பாரேன்!" என விஜயலக்ஷ்மி கூற,

"ரொம்ப க்யூட்டா இருக்கு மா.. ஆனா கையில வச்சுக்க பயமா இருக்கு.."

"என்ன சொல்றா உன் மருமக!" என ஜீவன் வர,

"ண்ணா! என்னண்ணா உன் பொண்ணு இவ்ளோ க்யூட்டா இருக்கா? பார்த்துட்டே இருக்கனும் போல இருக்கு.." என்று அதன் கன்னத்தை மெலிதாய் தொட்டுப் பார்த்தாள்..

ஜெயாவிற்கு இன்னும் முழுதாய் மயக்கம் தெளியவில்லை. பனிக்குடம் உடைந்து குழந்தையும் திரும்பி இருக்க அறுவை சிகிச்சை தான் என்று கூறிவிட்டனர்.

மயக்கத்திலும் முகத்தை சுருக்கி அவள் வலியை அவ்வபோது வெளிப்படுத்த, ஜீவனும் அவளருகில் அமர்ந்து தலை கோதி கொடுத்தான்.

"நீ ஸ்டேஷன் போணுமா ஜீவா?" அன்னை கேட்க,

"ரெண்டு நாள் லீவ் போட்ருக்கேன்.. அர்ஜென்ட்னா போனும் ம்மா!" என்றான்..

"சரி டா! ஜெயா அம்மா காலையில தான் வீட்டுக்கு போனாங்க.. நானும் போய் குளிச்சுட்டு ட்ரெஸ் எல்லாம் எடுத்துட்டு வர்றேன்.. நந்துவும் நீயும் பார்த்துக்கோங்க" என்றார்.

"நந்து எதுக்கு இங்க? அவளை கூட்டிட்டு போங்க.. நான் பார்த்துக்குறேன்" என்றான்.

"உதவிக்கு வேனும் டா.. ஜெயாக்கு ட்ரெஸ்ஸிங் எல்லாம் பண்ணனும்" அன்னை கூற,

"அப்ப ஏன் மா ஜெயா அம்மா போனாங்க? இருக்க சொல்லிருக்கலாம் இல்ல? நந்து எப்படி?"

"இதுல என்ன ண்ணா இருக்கு.. நம்ம அண்ணி தான?" என்று நந்தினியும் கூற,

"ம்ம்ம்!" என்று ஜெயாவைப் பார்த்தபடி கூறியவனுக்கு இன்னும் ஜெயாவின் செயல்கள் மனதை அழுத்தியது.

விஜயலக்ஷ்மி வெளியில் செல்ல தயாராய் இருக்க, தயங்கி தயங்கி வாசலில் வந்து நின்றார் வைதேகி.

அவரை முதலில் பார்த்ததும் விஜயலக்ஷ்மி தான்.

"வாங்க வாங்க!" என்று அவர் அழைக்க,
குழந்தையை கண் அகற்றாமல் பார்த்துக் கொண்டிருந்த நந்தினியும் அன்னையின் குரலில் யார் என திரும்பிப் பார்க்க, பக்கென்று ஒரு சத்தம் நெஞ்சினில்.

வளைகாப்பிற்கு வந்த பொழுதே அந்த பார்வை பார்த்தாரே மறக்க முடியுமா? ஏற்கனவே தெரியும் தான் சத்யாவின் அன்னை என்று. இன்று தான் என்னவோ செய்தது உள்ளுக்குள்.

"வாங்க அத்தை!" என்றான் ஜீவனும். அடிக்கடி காணும் மிக நெருங்கிய உறவு இல்லை என்றாலும் உறவுக்காரர்கள் அனைவரையும் அறிவான் ஜீவனும்.

"இந்த பக்கம் ஒரு வேலையா வந்தேன்.. குழந்தை பிறந்திருக்குன்னு கேள்விபட்டேன்.. அதான் பாத்துட்டு போலாம்னு.." என்று கூற,

"ரொம்ப சந்தோசம்!" என்ற விஜயலக்ஷ்மி,

"நந்து பாப்பாவை அத்தைகிட்ட குடு!" என்று கூற,

"இல்ல இல்ல! எல்லார் கையும் பட்டா குழந்தைக்கு உரம் விழ போகுது.. நான் அப்படியே பார்த்துக்குறேன்.." என்றவர்,

"நீ எப்ப வந்தம்மா?" நந்தினியிடம் கேட்டவர் குழந்தையை பார்க்க மட்டும் செய்தார்.

வைதேகியின் இந்த வெளிப்படை பேச்சும் அந்த வெகுளி முகமும் என பார்த்து ஜீவன் புன்னகைக்க,

"ஜெயா எப்படி இருக்கு.. ஆபரேஷன் தானாமே?" என்று கேட்க,

"வேற வழி இல்லைனு சொல்லிட்டாங்க.. ரொம்ப வலினு அழுதா நைட்டு.. அதான் மயக்க ஊசி போட்ருக்காங்க.. அப்பவும் வழில சுணங்க தான் செய்யுறா!" என்று கூற,

"இப்பலாம் சுகப்பிரசவம் எங்கேயோ ஒன்னு ரெண்டுனு தான் கேள்விப்பட வேண்டி இருக்கு.." என்றபடி பேச்சு தொடர்ந்தது.

"ம்மா! நான் குடிக்க ஏதாவது வாங்கிட்டு வர்றேன்" என்ன ஜீவன் எழுந்து கொள்ள,

"இல்ல ப்பா.. அதெல்லாம் நான் குடிக்குறது இல்ல.. சும்மா ஒரு எட்டு பாத்துட்டு போலாம்னு தான் வந்தேன்.. நான் கிளம்புறேன்.." என்று கூற, ஜீவன் மீண்டும் கூற, வைதேகி மறுத்துவிட்டார்.

"நீ இவங்களை பார்த்துக்கோ.. இன்னொரு நாள் பார்த்துக்கலாம்" என்று எழுந்து விட,

"அப்ப நானும் இவங்களோடவே கிளம்புறேன் ஜீவா!" என்று கூறி இருவருமாய் கிளம்பிவிட்டனர்.

பிடித்து வைத்த மூச்சை அதன்பின் தான் வெளிவிட்டாள் நந்தினி.

'ஹப்பா! என்ன பார்வை.. அப்படியே மகனை மாதிரி.. இல்ல இல்ல அம்மா மாதிரி தான் மகனும் போல!' என நினைத்து சிறிதாய் புன்னகைத்துக் கொண்டாள்.

"நந்து! இவங்க பையனை தான அன்னைக்கு நம்ம கோவில்ல பார்த்தது? உன் கிளாஸ்னு கூட சொன்னானே" என்று அண்ணன் கேட்க, என்ன கூறுவது என விழித்தவள், உதடுகள் "ம்ம் ஆமா ண்ணா!" என்று உச்சரித்தது.

மகனைப் பற்றியோ அவன் காவல் துறைக்கு சேர்வதைப் பற்றியோ என துளியும் பேசவில்லை வைதேகி.

மகனின் ஆசை அது நிறைவேற வேண்டும் என அன்னையாய் அவருக்கும் ஒரு ஆசை.. கூடவே நந்தினி மேல் ஒரு பிடித்தம். அதுவே அவரை வர வைத்திருந்தது.

தொடரும்..