• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உயிரின் தொடக்கம் 20

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
685
512
93
Chennai
அத்தியாயம் 20

"என்னம்மா சொல்றிங்க?" என்று கேட்ட சத்யாவிற்கு கேலி ஒரு புறம் என்றாலும் அன்னையை நினைத்து கொஞ்சம் பாசமும் அந்த நிமிடம் பாய்ந்து ஓடியது.

"ஆமா டா! எதோ ஒரு ஆர்வத்துல போய்ட்டேன்.. இப்ப தான் எனக்கு ஒரு மாதிரி இருக்கு.. என்னவும் நினச்சு இருப்பாங்களோ?" என்று கேட்க,

"ம்ம்க்கும்! இத போறதுக்கு முன்னாடி என்கிட்ட கேட்ருக்கணும்.. இப்ப சொல்லி.. ஆமா என்ன நினைக்க போறாங்க?" என்றான் கிண்டலாய்.

"என்னவோ போ! அங்க தான் குத்தகை ரூபாய எடுக்க பேங்க்குக்கு உன் அப்பா கூட போனேன்.. பக்கத்துல இருக்க ஆஸ்பத்திரில தான் அந்த புள்ளைய சேத்திருக்குன்னு பக்கத்து வீட்டு பரமு சொன்னா.. உன் அப்பா வேற கொண்டு விட்டுட்டு அவர் வேலைய பாக்க போய்ட்டாரா.. என் காலு எதோ நியாபகத்துல ஆஸ்பத்திரி உள்ள போயிட்டு.. ஆனா நல்லா தான் பேசினாங்க!" என்று கூற, இன்னும் சிரித்துக் கொண்டிருந்தான் அலைபேசியில் மகன்.

"நீயே கிண்டல் பண்ற பாத்தியா?" வைதேகி கேட்க,

"ம்மா! அதெல்லாம் ஒன்னும் இல்ல.. உன்ன என்ன சொல்றது.. இப்படி அநியாயத்துக்கு நல்ல அம்மாவா இருக்க கூடாது.. நான் வேணா இன்னொன்னு பண்ணட்டா?" என்று கேட்க,

"என்னது?" என்றார் அவனை அறிந்தார் போல சந்தேகமாய்.

"நந்தினியை பாக்கனும் அவ்வளவு தான? நான் வேணா வீரபாகுக்கு தெரியாம அவளை கல்யாணம் பண்ணி..." என்ன சொல்லி முடிப்பதற்குள்,

"துடைப்பகட்ட பிஞ்சிரும்.. நானே கல்யாணத்த நல்லபடியா நடத்தி வையுன்னு கடவுளுக்கு வேண்டுதல் வச்சிக்கிட்டு இருக்கேன்.. பேசுதான் கூறு இல்லாம.. நீ வை டா!" என்றவன் பட்டென வைத்துவிட,

"ம்மா ம்மா!" என்றவன் அவர் வைத்தது தெரிந்து இன்னும் சிரித்தான்.

மீண்டும் அழைத்த வைதேகியிடம்,

"என்ன திரும்பவும் போக போறிங்களா?" என கேட்க,

"ஆசை தான்.. வேற வேலை இல்ல.. அப்புறம் நான் சொன்ன எதுவும் உன் அப்பாக்கு தெரிய கூடாது பாத்துக்க" என்றார் கறாராய்.

"ஏனாம்?"

"ம்ம்ம்! என்னனு சொல்ல.. என் மருமகள பாக்க போனேன்னா? மனுசன் வெட்டி போட்ருவாரு.. தோணுச்சு போய்ட்டு வந்தாச்சு.. வாய் தவறி கூட அவர் முன்னாடி சொல்லிடாத.."

இதுக்கு தான் போன் பண்ணிங்களா? "

"இல்ல.. இன்னொன்னு கேக்கணும்.. ஆமா! அந்த பொண்ணுட்ட எதுவும் பேசினியோ?" என்று கேட்க,

"ஏன் மா?" என்றான் ஆச்சர்யமாய்.

"இல்ல என்ன பாத்ததுல இருந்து மூஞ்சே சரி இல்லாத மாதிரி தெரிஞ்சது.. அதான் கேட்டேன்.. படிச்சி முடிக்கட்டும்.. எதையும் பேசி கெடுத்து வைக்காத.. அவ அண்ணன் வேற மாப்பிள்ள பார்க்க ஆரம்பிச்சுட்டானாம்.. சரி நடக்கது தான நடக்கும்.. பாத்துக்குவோம்.. நீ ஒழுங்கா படிக்க வேலைய பாரு.." என்று வைத்துவிட சில நிமிட சிந்தனை சத்யாவிடம்.

"குடும்பமே ஒரு மார்க்கமா தான் டா இருக்கீங்க.. எனக்கு இப்படி ஒரு தெய்வத் தாய் கிடைக்கல பாரேன்!" நண்பன் கூறியதை கேட்டு சங்கர் கூற,

"வேணும்னா சொல்லு.. உன் அப்பாக்கு நானே போன் போட்டு இந்த மாதிரி இந்த மாதிரி உங்க மகன் ஒரு பொண்ண உயிரா... எப்படி! உயிரா விரும்புதா.. அவன் போலீஸ் ஆனதும் கட்டி வையுங்கன்னு சொல்லுறேன்.. அதுக்குள்ள நீ ஒரு பொண்ண தேடிக்க!" நல்லவனாய் சத்யா ஐடியா கொடுக்க,

"கல்யாண மேடைல நீ ஏத்த வேண்டாம்.. பாடைல ஏத்த வழி பாக்காத.. உன் லவ்வ மட்டும் நீ பாரு உனக்கு புண்ணியமா போகும்" என்றான்.

"ஏன் அதுக்கென்ன.. நல்லா தான போய்ட்டு இருக்கு.." என்றவன்,

"இன்னும் ரெண்டு வாரத்துல பிசிக்கல் டெஸ்ட்.. அடுத்த வாரம் கிளம்பினா தான் சின்னதா ஒரு ரூம் பார்த்து தங்கி கொஞ்சம் பில்ட் பண்ண முடியும்.. அம்மாகிட்ட சொல்லிட்டேன்.. நீயும் சொல்லிடு.. சண்டே கிளம்புவோம்" என்றான் சத்யா முடிவு செய்தவனாய்.

இரண்டு நாட்கள் தங்கிவிட்டு தான் வந்திருந்தாள் நந்தினி.. வீட்டிற்கு அனுப்ப இன்னும் மூன்று நாட்கள் ஆகும் என சொல்லி இருக்க, ஜீவன் அவளை கல்லூரிக்கு செல்ல கூறிவிட்டான்.

ஜெயா அன்னையும் மருத்துவமனையில் தங்கவே இல்லை.. மகளுக்கு என எதுவும் பார்த்து பார்த்து செய்யவும் இல்லை.. அனைத்தும் விஜயலக்ஷ்மி தான் பார்த்துக் கொண்டார்.

அதுவே ஜீவனை உறுத்திக் கொண்டிருக்க, நந்தினியும் அங்கே இருப்பது சரி இல்லை என அனுப்பிவிட்டான்.

வீட்டிற்கு அனுப்பி விட்டாலும் குழந்தையயும் மகளையும் என அவள் வீட்டில் எப்படி பார்த்துக் கொள்வார்கள் என தோன்ற, அதற்காக அன்னைக்கு வேலை கொடுக்கவும் விருப்பம் இல்லை.

அதுவும் மனைவியை புரிந்த வரையில் தன் வீட்டிற்கு இப்போதே அழைத்து செல்ல சுத்தமாய் மனம் இல்லை. என யோசித்து யோசித்து இறுதியில் மனைவிக்கும் குழந்தைக்கும் என துணையாய் அவர்கள் வீட்டிலேயே நர்ஸ் ஒன்றை ஏற்பாடு செய்தான் ஜீவன்.

"நாம வேணா பாத்துக்குவோமா பா?" என விஜயலக்ஷ்மி கேட்க, ஒற்றை முறைப்பு வர, அமைதியாகிவிட்டார்.

அத்தனை ஆசை தன் பேத்தி மீது. இப்போதே தன்னுடன் அழைத்து செல்ல எண்ணம் தான்.. ஜெயாவுக்கு எவ்வளவு வேலை செய்தாள் என்ன.. குழந்தைக்காக முடியாதா என்று தான் யோசித்தார் விஜயலக்ஷ்மி.

அதிகாலை கிளம்பி இரண்டு நாள் விடுமுறை முடிந்து கல்லூரி வந்து சேர்ந்தாள் நந்தினி.

வழி முழுதும் அன்னை பேசியதே நியாபகத்தில் நின்றது. கூடவே தன் எண்ணம்.. தன் மனம்.. என தன்னை குறித்தே பயம். அன்னையிடம் மறைக்கிறோம் என்ற போதே தான் செய்வது தவறு என்றும் தோன்ற முடிவெடுக்க முடியாமல் தடுமாறினாள்.

முன்பு கல்லூரி நாளில் ஒரு நாள் அழைத்து சாதாரணமாய் அன்னையுடன் பேசிக் கொண்டிருந்த போது தான் அண்ணன் மாப்பிள்ளை பார்க்க சென்றது, அது சரி வரவில்லை என தொடர்ந்து பேசியது எல்லாம் சேர்த்து இப்போது தலையின் பாரத்தை கூட்டியது.

ஜெயாவின் தாய் மருத்துவ மனைக்கு மூன்றாம் நாள் வந்த போது விஜயலக்ஷ்மியையும் நந்தினியையும் வீட்டிற்கு அனுப்பிவிட்டான் ஜீவன்.

தொடர்ந்து ஜெயாவுடன் நர்ஸ் ஒருவரை உதவிக்கு அனுப்பி வைப்பதாக கூற, பதில் சொல்ல வந்தவரை பார்வையால் நிறுத்திவிட்டான்.

வீட்டிற்கு வந்து விடுதிக்கு நந்தினி கிளம்பிக் கொபி இருக்க,

"கேட்கணும் நினச்சேன் நந்து! ஆமா அந்த பையன் சத்யா இப்ப எப்படி நடந்துக்குறான் உன்கிட்ட?" என்று திடீரென அன்னை கேட்க, எதிர்பார்க்காத கேள்வியில் அதிர்ந்தாள்.

"என்ன ம்மா?"

"அதான் டி! நேத்து ஹாஸ்பிடல் வந்தாங்க இல்ல வைதேகி! அவங்க பையன் சத்யா இப்ப எப்படி பேசுறான் உன்கிட்ட? இன்னும் அப்படியே தான் இருக்கானா இல்ல மாறிட்டானா?" என்றார்.

என்ன சொல்வதென்றே தெரியாமல் விழி விரித்தவளுக்கு ஆம் என்று உண்மையை சொல்லவும் முடியவில்லை.. இல்லை என்று பொய் சொல்லவும் தெரியவில்லை.

"எனக்கென்னவோ அவங்க அம்மாக்கும் அப்படி ஒரு நினைப்பு இருக்கும்னு தோணுது.. இல்லைனா மேனக்கெட்டு நேத்து அவ்வளவு தூரம் பார்க்க வருவாங்களா என்ன?" என்று அவர் போக்கில் பேசியவர்,

"அவங்களா வந்தங்களா இல்ல அந்த பையன் எதாவது சொல்லி வந்தங்களா தெரியல.."

"அவங்களோட வீட்டுக்கு வந்தேன்ல.. அப்ப சும்மா பையா எப்படி இருக்கான்னு கேட்டேன்.. நல்லாருக்கான்னு மட்டும் தான் சொன்னாங்க.. அவங்க ஒன்னும் அதுக்காக தேடி வந்த மாதிரி எல்லாம் தெரியல.. என்னவோ பிரச்சனை எதுவும் வர கூடாது"

"உலகத்துல என்னென்னவோ நடக்கு.. இன்னாருக்கு இன்னார்னு கடவுள் எழுதினத்தை யாரு மாத்த முடியும்?" என்று பேசிக் கொண்டே இருக்க, வியர்த்து வந்தது நந்தினிக்கு.

"சரி பிரண்ட் வீட்டுக்கு கிளம்புற இல்ல.. கிளம்புற நேரத்தில நான் ஒருத்தி!" என்றவர் மகளுக்கு நாளைக்கு ஊருக்கு செல்ல தேவையானதை எடுத்து வைத்தார்.

இப்படி வழி முழுதும் அன்னை பேசியது, அண்ணன் கேட்டது, முதல் ஸ்டேஜ் இப்படி தான் இருக்கும் என்ற சத்யாவின் குரல் எல்லாம் காதில் கேட்க, கல்லூரி விடுதிக்குள் வருவதற்குள் தலைவலியும் சேர்ந்தே வந்தது.

தான்யா கிளம்பி அழைக்க, "நீ போ! நான் வரேன்!" என்றவள் மெதுவாய் கிளம்பி வெளியே வர, கொஞ்சம் தூரத்திலேயே கண்டு கொண்டாள் அவன் நின்றதை.

பயம் தலைவலியை கொடுத்திருக்க, அந்த தலைவலி கோபத்தைக் கொடுத்தது சத்யாவைப் பார்த்ததும்.

'இவனால் தான் எல்லாம்!' என்ற உணர்வு தன்னால் எழ, அவனை நோக்கி வேகமாய் சென்றாள் என்றால் அவள் வரவை விழி அகற்றாமல் பார்த்து நின்றான் சத்யா.

"என்னாச்சு தலைவலினு சொன்னா?" என்று அமைதியாய் தான் கேட்டான் சத்யா.

"உன்கிட்ட எதுக்கு சொன்னா?" என்று கோபமாய் நந்தினி கேட்க, விழிகளை சுருக்கி அவளைப் பார்த்தான் சத்யா.

"கோவமா இருக்கியா?" நேராய் கேட்க,

"தெரியுது இல்ல.. ஆமா! தயவு செஞ்சு போ.. எதாவது சொல்லிற போறேன்!" என்றவள் முன்னே வேகமாய் நடக்க, ஒன்றும் புரியாமல் நின்றவன் பின் சென்றான்.

நந்தினி வந்திருப்பதை தான்யா கூறவும் ஒரு ஆர்வத்தில் விடுதியின் வழியில் இவன் காத்திருக்க, அதுவும் இரு நாட்களுக்கு முன் தன் முன் குழந்தையாய் பேச தவித்து நின்றவள் முகத்தை நினைவில் ஏந்தி காத்திருக்க, இந்த கோபம் சுத்தமாய் எதிர்பாராதது.

"நந்து நில்லு!" என்ற சொல்லுக்கு சட்டென நின்றவள், பின்

'நான் ஏன் நிக்கணும்?' என நினைத்து மீண்டும் வேகமாய் நடக்க, அவள் முன் வந்து வழி மறித்து நின்றான் சத்யா.

"நீ பேசுறதை பார்த்தா என் மேல தான் கோவமா இருக்க மாதிரி இருக்கு.. ஆனா ஏன் லன்னு புரியல..." என கூறியவன், நினைவு வந்தவனாய்,

"என் அம்மா ஹாஸ்பிடல் வந்தாங்களே அதுனால எதுவும் கோவமா? அம்மா எதுவும் பேசினாங்களா என்ன?" இதுவாய் தான் இருக்குமோ? என நினைத்து அவன் கேட்க,

"ப்ச்! வழியை விடு!" என முன் சென்றவளை மீண்டும் மறித்தவன்,

"என்னனு சொல்லு நந்தினி.. எனக்கு தெரியல.. தப்பு பண்ணி இருந்தாலும் என்னன்னு சொல்லாம கோவப்பட்டா நான் என்ன செய்ய?" என்றவனும் சிறிதாய் குரல் உயர்த்தி இருக்க, கண்ணைக் கரித்துக் கொண்டு வந்தது நந்தினிக்கு.

தொடரும்..