• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உயிரின் தொடக்கம் 21

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
683
512
93
Chennai
அத்தியாயம் 21

நந்தினியின் கண்களை நிறைத்துவிட்ட கண்ணீரில் சட்டென பொங்கிய கோபம் அமிழ்ந்துவிட, தலைகோதிக் கொண்டவன் சுற்றிலும் பார்த்தான்.

வகுப்புகள் ஆரம்பித்து இருக்க வேண்டும்.. வெகு சிலர் மட்டுமே அங்கொன்றும் இங்கொன்றுமாய்.

மிக மெல்லிதாய் ஒரு புன்னகை கூட எட்டிப் பார்த்தது சத்யாவிற்கு. காதல் இன்னும் பரிமாறிக் கொள்ளப் படவில்லையாம். ஆனால் கோபமும் சமாதானமும் என நினைத்து அவன் இதழ்கள் திறக்காமல் விரிய, நீண்ட மௌனத்தில் நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள் நந்தினி.

அவன் புன்னகை மீண்டுமாய் கோபம் கொடுக்க, ஒரு அடி எடுத்து வைக்கும் முன் கைகளை பிடித்து விட்டான். அதிர்ந்து விழித்தவளும் சட்டென கைகளை இழுத்துக் கொள்ள முயற்சிக்க, தேவை இல்லை என்பதாய் உடனே விட்டுவிட்டான்.

"என்கிட்ட அடம் பண்ணினா இப்படி தான்.." என்றவன் பேச்சில் பேச்சின்றி நின்றவளுக்கு அழுகை பின்னுக்கு சென்றிருந்தது.

"சொல்லு! என்ன பிரச்சனை? எதுக்கு என்கிட்ட இவ்வளவு கோபம்.. நான் என்ன பண்ணினேன்?" என்றான் தொடர்ந்து அடுத்தடுத்து.

"நான் சொன்னேன்னா உன் மேல தான் கோபம்னு.. எனக்கு என் மேல கோபம்.. இப்படி தான் இது தான் நான்னு என்னால நானா இருக்க முடியலனு கோபம்.. அங்கேயும் இங்கேயுமா மாறி மாறி ஸ்டாண்டர்ட்டா நிக்க முடியலைனு கோபம்... அதை ஏன் உன்கிட்ட சொல்லனும்?" என்றாள் கோபத்தோட..

"புரியல.. ஏன்?" என்றதும் இன்னும் தீயாய் அவள் பார்க்க,

"மீன்ஸ்! ஏன் நீ நீயா இருக்க முடியல கேட்டேன்? யார்கிட்ட அப்படி இருக்க முடியல? நீ நீயா இருக்க முடியாத இடத்துல எப்படி உன்னால உண்மையா இருக்க முடியும்? பொய்யா நடிக்க தான் முடியும்" அவளுக்கு விளக்குவதாய் நினைத்து இன்னுமாய் குழப்பத்தில் கோபத்திலும் ஆழ்த்தினான்.

"சொல்லு மா!"

"என்ன சொல்ல? என் வீட்டுல மாப்பிள்ளை பாக்காங்க.. கட்டிக்கிட்டு போகவா?" என்றதும் இவன் அதிராமல் அதிசயம் போல பார்க்க,

"நீ இன்னும் முன்னாடி மாதிரி தான் பேசுறியா இல்ல திருந்தி போய்ட்டியான்னு கேட்குறாங்க.. என்ன சொல்லட்டும்?" என்றாள் அதையும் கோபமாய்.

"எந்த பேச்சு எடுத்தாலும் முடிக்கும் போது அடுத்து என் கல்யாணத்துல தான் நிக்குது அந்த பேச்சு.. நான் என்ன பண்ண? நிம்மதியா இருந்தேன்.. அப்படியே தான் இருக்க ஆசையும்.. புத்தி தடுமாறுது.. பதில் பேச முடியாம தடுமாறுது.. தப்பு தான?" என்றவள்,

"ஊருக்கு போய் ரெண்டு நாள் நிம்மதியா இருக்க முடியல.. எதாவது ஒன்னு உன்னை..." என்றவள் சொல்லாமல் விட, அதை நிரப்புவதை எளிதாக்கிக் கொண்டது சத்யாவின் மனது.

துள்ளிக் குதிக்க தான் செய்தது அந்த மனதும் சும்மா இல்லாமல்.. என்னவோ ஏதோ என நினைத்தவன் மூளைக்கு எவ்வளவு இனிய அதிர்ச்சியை கொடுத்திருக்கிறாள்..

நினைவே தேனாய் தித்திக்க, புன்னகை அகத்துடன் முகத்தையும் நிறைத்துவிட, அவளிடம் அதை மறைக்கவெல்லாம் இல்லை அவன்.

"ம்ம் சொல்லு! என்னை?" என கேள்வியாய் முடித்தவன் கண்களில் அவளுக்கான காதலும் புன்னகையுடன் மிளிர, சில நொடிகளில் என்னவெல்லாம் உளறிவிட்டோம் என நினைத்து விழித்து மற்றவை எல்லாம் பின்னுக்கு போயிருந்தது நந்தினிக்கு.

அதிகமான பெரிய பாரம் ஒன்று அவளை அழுத்துவதை அவள் கண்கள் வெளிப்படுத்த, இலகுவாய் கனிவாய் அவளைப் பார்த்தான் சத்யா.

"நந்தினி!" என்ற ஒற்றை அழைப்பும் அவன் அழைத்த விதமும் மீண்டும் உடைய செய்தது அவளை.

"நான் என்ன பண்றேன்.. எந்த தப்பும் பண்ணாம ஏன் என்னால ஈசியா கடந்து வர முடியல.. எதயோ சுமந்துட்டு இருக்குற மாதிரி ரொம்ப கணமா இருக்கு.. என்னால முடியல!" என்றவள் விழிகளில் இருந்து இரு சொட்டு கண்ணீர் விழுந்துவிட, கைகளை இறுக்கமாய் மூடிக் கொண்டான்.

மீண்டும் ஒரு அமைதி.. புயலுக்குள் சிக்கிக் கொண்டவள் போல அவள் மனது அல்லாடுவதை புரிந்து கொள்ள முடிந்தது சத்யாவால்.

"உனக்கு என்னை தெரியுது நந்தினி.. எனக்கும் உன்ன இப்ப நல்லா தெரியுது.. நீ நீயா இருக்க முடியலனு சொல்ற.. ஆனா இந்த நிமிஷம் நீ நீயா இருந்ததனால தான என்கிட்ட இதையெல்லாம் சொல்ல முடிஞ்சது? அப்ப நான் யாரு உனக்குன்னு உனக்கு புரியுதா?" என்று கேட்க, பதில் கூறவில்லை அவள்.

"அம்மா நம்பிக்கைக்கு துரோகம் பண்றோமோன்னு ஒரு நினைப்பு, கல்யாணத்துக்கு மாப்பிள்ளை பார்த்து முடிவாகிட்டா என்ன பண்றதுன்னு ஒரு நினைப்பு கூடவே..." என நிறுத்தியவன்,

"என்னை பத்தின நினைப்பு.. அது தான் உன்னை ரிலாக்ஸ்டா இருக்க விடல.. ம்ம்ம்!" என்றான் அவள் மனம் படித்து.

பதில் என்னவோ ஆமாம் என்ற ஒன்று தான்.. ஆனால் அதை எப்படி அவனிடம் கூறிவிட முடியும்? அமைதியாய் நின்றாள்.

அதையும் கூட புரிந்து சிரித்துக் கொண்டாலும் அவள் நிலை இவனுக்கும் கவலையை தான் கொடுத்தது.

"சாரி!" என்றான் ஒற்றை வார்த்தையில். அவளும் அவனை நிமிர்ந்து என்னவென்று பார்க்க,

"உன் எல்லா கேள்விக்கும் பதில் சொல்ல முடியாது என்னால.. ஆனா காரணம் சொல்ல முடியும்.. நான் தான்.. என்னால தான் உனக்கு இவ்வளவு அவஸ்தை இல்ல?" என்றான்.

"இதுக்கு சாரி சொல்ல தோணல.. ஆனா உனக்காக தான் சொன்னேன்.. பார்த்தேன் புடிச்சது.. பார்த்துட்டே இருக்க தோணுச்சு.. கூடவே வந்தேன்.. இப்ப வரை வந்துட்டு இருக்கேன்.. என்னவோ உன்கிட்ட இருக்கு.. அதை விட்டு போக முடியும்னு தோணல.. இன்னும் வருவேன் எப்பவும்.. இப்ப உன்னை இவ்வளவு யோசிக்க வச்சு அழ வச்சதுக்கு தான் சாரி!"

சத்யா பேச பேச கண்ணீரோடு கலக்கமும் காணாமல் போக, மனம் மீண்டுமாய் அவன் புறம் தான் சென்று நின்றது.

"சண்டே கிளம்புறேன்.. நெக்ஸ்ட் வீக் டெஸ்ட் இருக்கு.. இன்னும் கொஞ்ச நாள்.. கொஞ்ச நாள்னா ரொம்ப கொஞ்சம் தான்.. நீ காலேஜ் முடிக்கணும்னு கூட அவசியம் இல்ல!" என்று கூற, மற்றது எல்லாம் சுத்தமாய் மறந்து போக, படபடப்புடன் துடிக்க ஆரம்பித்தது அவன் பேச்சினில் இதயம்.

"இனி இந்த மாதிரி சிட்டுவேஷன் உனக்கு வராது.. அண்ட் ப்ளீஸ் இனி அழாத! அடலீஸ்ட் என் முன்னாடி அழாத!" அவன் சொல்லி முடித்த நொடி,

'ஏன் தனியா அழுதா பரவால்லயாமா?' என்று மனம் அவளையும் மீறி நினைத்து விட, அந்த நினைவு சட்டென முகத்தில் செம்மையை கொண்டு வந்திருந்தது.

சிவந்திருந்த விழிகளில் கோபம் கலைந்து மற்றொரு உணர்வு தென்பட, கூடவே சிவந்த முகமும் கதை பேச, அவள் கண்ணீரை விட இது இன்னும் அவஸ்தையை கூட்டியது சத்யாவிற்கு.

"ஷப்பா!" என திரும்பிக் கொண்டான்.

"ஓகே கிளம்பு! நான் வர்றேன்!" என்றவனை அதற்கு மேல் பேச வைக்காமல் விறுவிறுவென அவள் நடக்க, தன்னை நிதானப்படுத்திக் கொண்டவன் மீண்டுமாய் ஒரு முறை சுற்றிலும் பார்த்துவிட்டு உள்ளே சென்றான்.

ஜெயா தன் குழந்தை மற்றும் அன்னையோடு ஜீவன் கூறிய நர்ஸ் உதவியோடு வீட்டிற்கு அழைத்து செல்லப் பட்டிருந்தாள்.

நந்தினி கல்லூரி சென்ற அடுத்த நான்கு நாட்களும் பல்வேறு சிந்தனையிலேயே இருந்தார் விஜயலக்ஷ்மி.

ஜீவனும் மனைவியை மாற்றுவதைப் பற்றிய நினைவில் இருக்க, அன்னை நினைத்தது அவன் அறியவில்லை.

நான்கு நாட்கள் முடிவில் அவனிடமே அனைத்தையும் கூறி முடிவையும் அவன் கையில் கொடுக்க, முழுதாய் கேட்கும் வரை அவன் எந்த ஒரு உணர்வினையும் முகத்தில் காட்டிடவில்லை.

"முதல்லயே ஏன் மா சொல்லல?" ஜீவன் முதலில் கேட்டது என்னவோ இப்படி தான்.

தான் என்ன கவனித்தோம் தன் குடும்பத்தை என மீண்டுமாய் தன்னை நினைத்தே அவ்வளவு கோபம் வந்தது அந்த நிமிடம்.

"அந்த பையன் நந்து பின்னாடி சுத்திட்டு இருந்தான்.. ஆனா பிரச்சனை வர்ற அளவுக்கு ஒன்னும் இல்ல.. நந்து கூட ஒரு நாள் புடிச்சி திட்டி விட்டா ப்பா.. உனக்கு வேற ரொம்ப கோவம் வரும்.. அதான் எதுக்கு பிரச்சனை ஆக்குதுனு சொல்லல" என்றதும் அவன் ஆயாசம் கொள்ள,

"இப்பவும் இதை சொல்லி இருக்க மாட்டேன்.. ஆனா எனக்கென்னவோ எல்லாம் எங்கேயோ முடிச்சாகுற மாதிரி தோணுது.." என்றவர் ஜீவன் பார்வையில்,

"நல்ல பையன்னாலும் எனக்கு வேற எண்ணம் எல்லாம் வந்தது இல்ல.. தப்பாவும் நினைக்க முடியல.. ஆனா அன்னைக்கு அந்த பையன் அம்மா ஜெயாவை பாக்க வந்தது கொஞ்சம் உறுத்தலா இருந்துச்சு.." என்றதும் ஜீவன் யோசித்துக் கொண்டிருக்க,

"போலீஸ்க்கு எழுதி பாஸ் ஆயிட்டான்னு அவங்க அம்மா சொன்னாங்க!" என்று விஜயா கூற, அன்னை எதயோ மென்று விழுங்குவதை பார்த்துக் கொண்டிருந்தான்.

அதுவும் அவர் வாயாலே வரட்டும் என அவன் பார்த்திருக்க, கூறுவதை தானும் சரியாய் கூற வேண்டும் மகனும் அதை புரிந்து கொள்ள வேண்டுமே என வார்த்தைகளை தேடி தேடி பேசினார் அவர்.

"நந்து கிளம்புறதுக்கு முன்னாடி சும்மா எதற்சயா பேசினேன்.. அந்த பையன் இன்னும் பின்னாடி வரனா எதுவும் தொல்லை குடுக்கானானு தெரிஞ்சுக்க பேசினேன்.. ஆனா நந்து என்னவோ மாதிரி இருந்தா.. முதல்ல சரியா கவனிக்கல.. ஆனா நான் தொடர்ந்து கல்யாணம், நீ மாப்பிள்ளை பாக்குறதுன்னு பேச பேச அவ முகமே சரி இல்லை" என்று கூற,

"இப்ப என்ன ம்மா சொல்ல வர்றிங்க?" என்றான் ஓரளவு புரிந்து கொண்ட போதும்..

"எனக்கும் சரியா தெரியல டா ஜீவா.. ஆனா நந்துவுக்கும் அந்த பையன் சத்யாவை புடிச்சிருக்குமோன்னு இப்ப ஒரு சந்தேகம்.. நானா எவ்வளவு யோசிச்சு பார்த்தாலும் அவ முகம் எனக்கு அப்படி தான் சொல்லுது.. இனியும் உன்கிட்ட சொல்லாம இருந்தா சரி இல்லைனு தோணுச்சு.." என்றார் முடித்து.

"இவ்வளவு நடந்த பின்ன தான் என் நியாபகம் வந்துச்சா?" என்றவன் கோபம், அன்னைக்கு புரிய,

"ஜீவா! கோவப்படாத! கொஞ்சம் யோசி.. நந்தினி அண்ணனா அடுத்து என்ன பண்ணனும்னு முடிவெடு.. அந்த பையனை பத்தி கேள்விபட்ருந்தாலும் என்னால முடிவெடுக்க முடியல.. இந்த வீட்டுக்கு நீ தான் எல்லாம்.. நந்தினிக்கு என்ன செய்யணுமோ அது உன் கையில!" என்று முடித்துக் கொண்டார் முடிவை மகன் கையில் கொடுத்து.

தொடரும்..