• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உயிரின் தொடக்கம் 24

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
683
512
93
Chennai
அத்தியாயம் 24

நந்தினி தன் வீட்டிற்கு வந்து இரண்டு நாட்கள் கடந்திருந்தது. வந்ததும் அண்ணி வீட்டிற்கு அன்னையுடன் சென்று குழந்தை உடன் சிறிது நேரம் இருந்துவிட்டு தான் வந்தாள்.

"இப்ப உடம்புக்கு பரவால்லையா அண்ணி?" என ஜெயாவிடம் கேட்க,

"ம்ம்ம்!" என்ற ஒற்றை பதில் தான். அதற்கும் ஆச்சர்யம் தான் வந்தது ஜனனிக்கு.

அண்ணன் இல்லாத போதும் அவள் வீடே என்ற போதும் அண்ணி திட்டாமல் அதட்டாமல் கேட்கும் கேள்விக்கு மட்டும் பதில் கொடுத்து இருக்க சந்தேகமாய் பார்த்து வைத்தாள் நந்தினி.

வரும் வழியில் அன்னையிடம் இது பற்றி கேட்க, "எனக்கும் தெரியல நந்து! உன் அண்ணன் எதுவும் சொல்லி இருப்பானோனு தோணுது.. நானும் வாரத்துக்கு ரெண்டு நாள் பாப்பாவை பாக்க வந்துருவேன்.. என்கிட்டயும் இதுவரை எந்த சண்டையும் போடல.. உன் அண்ணன்கிட்ட கேட்கவும் சங்கடமா இருக்கு" என்று கூற,

"அப்படியே விடுங்க ம்மா.. அண்ணி பாப்பாவோட நம்ம வீட்டுக்கு வரும் போது பழைய அண்ணியா இல்லாம நல்ல அண்ணியா வந்தா நமக்கும் ஜாலி தான!" என்றாள் குழந்தையாய்.

"சரி தான்! ஆனா புருஷன் பொண்டாட்டிகுள்ள சண்டை வந்துட கூடாதே! அதான் கொஞ்சம் நெருடுது.."

"அதெல்லாம் அண்ணா பாத்துக்கும்.. அவங்களுக்கு தெரியாதா?" நந்தினி கூற,

"உனக்கு இவ்வளவு தெரியுமா நந்து? உன்னையே நான் இன்னும் குழந்தைனு நினைச்சுட்டு இருக்கேன்!" என்று சாதாரணமாய் விஜயலக்ஷ்மி.

சட்டென மாறிவிட்டது நந்தினி முகம். விஜயலக்ஷ்மி முன்பு கண்ட அதே எதையோ மறைக்கும் பாவம் மகளிடம்.

மேற்கொண்டு எதுவும் கூறாமல் பேசாமல் அமைதியாய் வீடு வந்து சேர்ந்தன.

வந்த உடனேயே வீரபாகு கேள்வியால் துளைக்க ஆரம்பித்துவிட்டார் மகனை.

"ம்மா அதான் சொன்னேன்ல.. அது முன்னெச்சரிக்கை மாதிரி தான்.. பணம் தேவை இருந்தா அந்த நேரத்துல என்ன பண்ண?" என்று சத்யா சமாதானம் செய்ய,

"பிறவு இன்னும் ஆறு மாசம் ஆகும்னு எதுக்கு சொன்ன? ஆறு மாசம் வேலைக்கு போக நாள் ஆவும்னா இப்பவே எதுக்கு பணத்தை கேட்டுவைக்கணும்.." என்று அதிலேயே நின்றார்.

"இப்ப என்ன? நான் கடன வாங்கிட்டு ஓடியா போய்ட்டேன்? எதுக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம்? வேலை கைக்கு வர தான் ஆறு மாசம்.. ரிசல்ட் அதாவது பாஸா பெயிலானு இன்னும் ரெண்டு மாசத்துல தெரிஞ்சிரும்.. அப்போ போயிட்டு பணம் இருந்தா வேலை கன்ஃபார்ம்னு சொல்லுவான்.. நான் நேர்மை நியாயம்னு பேசி எனக்கு கிடைச்சிருக்க சான்ஸ விடற அளவுக்கு நல்லவன் இல்ல.. அந்த நேரம் கைய விரிச்சிட்டு நிக்க கூடாது.. உங்களயும் இக்கட்டுல மாட்டி விட கூடாதுன்னு தான் முன்னாடியே கேட்டு வச்சேன்.. உங்ககிட்ட சொன்னது சங்கர் ல் வீட்டுக்கு எதுத்த வீட்டு ரமேஷ் தான? அவனுக்கு இருக்கு" என்று கோபமாய் பேசி முடிக்க, வீரபாகு முறைத்தபடி தான் அப்போதும் நின்றார்.

"ம்மா! அந்த ஆளுக்கு எடுத்து சொல்லுதியா இல்ல நீ நந்து வீட்டுக்கு நலங்கு வைக்க போனத நான் சொல்லட்டா?" என்று அன்னையை பயமுறுத்த

"அட படுபாவி!" என்று பதறியவர், "நந்துவா? நல்லா கொஞ்சுற டா!" என்றுவிட்டு,

"அதான் இவ்வளவு சொல்லுதான்ல? அவனே சொந்தமா முயற்சி பண்ணி வேலையில சேர நினைக்கான்.. அதுக்கு ஏன் குதிச்சுகிட்டு இருக்கனும்.. போய் வேற வேல இருந்தா பாருங்க" என்று கூற,

"எனக்கு எதுவும் சரியா படல!" என்றவர்,

"ஆமா! நான் வெளில கேள்விபட்டேன்.." என்று இழுக்க, என்னவென வைதேகி பார்க்க, அசட்டையாய் நின்றான் சத்யா.

"அதான் அந்த புள்ள.. அந்த போலீஸ்காரன் தங்கச்சி பேரு என்ன டி?" என்று கேட்டதும்,

"நந்தினியா? அவளுக்கு என்ன?" என்றான் வேகமாய்.

"ஏதோ மாப்பிள்ள பாத்தானாம அவங்க அண்ணன்? அது சரி படல போல.. வேற எதுவும் பாக்கங்களா தெரியல.. உன் மவன் என்ன முடிவுல இருக்கான்னு கேளு?" என்றுவிட்டு உள்ளே சென்றுவிட்டார்.

"பாரேன்! உன் அப்பாக்கு கூட அந்த பொண்ணு தான் புடிச்சிருக்கு போல டா.. உன் மனசு படி கிடைக்கணும்னு தான் சூசகமா சொல்லிட்டு போறாரு!" என்றார் அன்னை குதூகலமாய்.

"ம்ம்க்கும்ம்.. இப்ப நான் போய் பொண்ணு கேளுங்கன்னு சொன்னா கேட்ருவாராமா?" என்று சத்யா கேட்க,

"ஆமா டா! வெட்டியா இருக்கான்.. பொண்ண தாங்கனு போறேன் தட்ட தூக்கிகிட்டு.. கல்யாணத்துக்கு இன்னும் ரெண்டு வருசமாவது போவட்டும்!" சத்யா பேசியதை கேட்டு இப்படி கூறிவிட்டு அவர் வெளியே செல்ல போக,

"ரெண்டு வருஷம் கழிச்சு அவர் பண்ணிக்கட்டும்.. இன்னும் குறைஞ்சது ரெண்டு மாசத்துல எனக்கு ரிசல்ட் வரவும் பொண்ணு கேட்டு போக தயாரா இருக்க சொல்லு ம்மா.. அதுவரை எவன் பொண்ணு கேட்டு போறான்னு நான் பாத்துக்குறேன்!" என்று சென்றுவிட்டான் சத்யா.

"பாத்தியா டி! ரெண்டு வருஷம் கழிச்சு நான் கல்யாணம் பண்ணிக்கணுமாம்.. புது மாப்பிள்ள மாதிரியா டி இருக்கேன் நான்?" என மனைவியை சண்டைக்கு இழுக்க,

"ம்ம்க்கும்! இப்ப தான் இளமை திரும்புது.. வாரங்க வரிசையில!" என்றபடி வேகமாய் உள்ளே சென்றுவிட்டார் வைதேகி.

தீவிர சிந்தனையில் அமர்ந்திருந்தான் ஜீவன். அப்போது தான் அரை மணி நேரம் முன் வீடு வந்திருக்க, காபியுடன் அவன் அறைக்கு வந்தார் விஜயலக்ஷ்மி.

"என்ன டா இன்னும் ட்ரெஸ் மாத்தலையா? இல்ல மறுபடியும் போணுமா?" அன்னை கேட்க, அது அவன் காதில் விழவே இல்லை அப்படி ஒரு ஆழ்ந்த சிந்தனை.

"ஜீவா!" என்று தோல்களை உளுக்க, "ம்மா!" என்றான் தெளிந்து.

"என்ன ஜீவா! உடம்பு எதுவும் சரி இல்லையா?" என்று கேட்க,

"அதெல்லாம் ஒன்னும் இல்லை ம்மா!" என்று புன்னகைத்தவன் காபியை எடுத்துக் கொண்டான்.

"ஜாஸ் மேடைமை பார்த்துட்டு வந்தேன்!" என்றான் தன் குழந்தையை கண்முன் கொண்டு வந்து விழிகள் மின்ன.

"பாப்பா எப்படி இருக்கா டா? ஜெயா எப்படி இருக்கா? நான் பாத்து ஒரு வாரமாச்சு.." என்றார் அவரும் புன்னகையுடன்.

"ம்ம் நல்லாருக்கா மா.. அங்க போய்ட்டு வர்ர வழில தான் முனிச்சாமி மாமாவை பார்த்தேன்.. அவங்க பையன் சங்கர் நம்ம நந்து கூட தானே படிக்கிறான்!" என்று கூற,

"ம்ம் ஆமா.. அந்த பையனும் சத்யாவும் தான் ரொம்ப கிளோஸ் போல!" என்றார் தனக்கு தெரிந்ததை.

"ம்ம் பேசினேன் ம்மா.. சொன்னாங்க.. சத்யாவை நல்ல விதமா சொன்னாங்க.. அவனால தான் சங்கரும் எக்ஸாம் எழுதினான் பாஸ் ஆனான் அப்படினு.."

"நீ கேட்டியா ஜீவா? அவங்க எதுவும் நினைச்சுக்க போறாங்க!"

"அதெல்லாம் இல்லை ம்மா.. சும்மா பேசிட்டு இருக்கும் போது அவங்களா போலீஸ் எக்ஸாம் எழுதி இருக்கான்னு சொன்னாங்க.. அடுத்த லெவல் வந்துட்டான்னு சொல்லவும் சும்மா கேசுவலா கேட்குற மாதிரி கேட்டேன் சொன்னாங்க" என்று கூற,

"ஓஹ்ஹ்!" என்றார்.

"அப்புறம் ம்மா.. அவங்க ஒன்னு சொன்னாங்க.. போலீஸ்ல சேர பணம் கட்டணுமான்னு கேட்டாங்க.. இந்த மாதிரி வெளியூர்ல போட்டு இங்க மாத்த தேவைபடும்.. இல்ல உள்ள போகவே சிலர் கேட்பாங்க சொன்னேன்.. அந்த சத்யா அவங்க அப்பாகிட்ட கேட்க மாட்டேன்னு வெளில கேட்டு வச்சு அவங்க அப்பாக்கும் பையனுக்கும் சண்டையாம்" என்று கூற,

"வீட்டுல எவ்வளவு தான் பணம் வாங்குறதுனு நினைக்குதோ என்னவோ? நந்து முதல்ல ஒரு நாள் சொன்னா அந்த பையன் காலேஜ்க்கு போக வீட்டுல காசு வாங்க மாட்டேன் ஈவ்னிங் வேலைக்கு போறேன்னு அடம் புடிச்சிதாம்.. ஆனா அவங்க அப்பா தான் அப்படி ஒன்னும் சின்ன சின்ன வேலை பாக்க இடத்துல இல்ல.. உருப்படியா ஒரு வேலைக்கு போற வழிய பாருன்னு பீஸ் கட்டினாராம்" என்றார்.

"ம்ம்! இன்னும் கூட கொஞ்சம் டீப்பா விசாரிச்சேன்.. யாருக்கும் தெரியாம தான்.. அவங்க காலேஜ்லையும்" என்று மட்டும் கூற,

"என்ன?" என்றார்.

"ம்ம் நல்ல மாதிரி தான்.. ஆனா இத எப்படி எடுத்துக்கனு தெரியல.. நந்துக்கு அப்படி ஒரு எண்ணம் எப்படி வந்துச்சுன்னு இன்னும் என்னால நம்ப முடியல" என்றான்.

"நீ என்ன முடிவுல இருக்க ஜீவா?"

"தெரில ம்மா.. குழப்பமா இருக்கு!" என்று ஜீவன் கூற காரணம் சந்தியாவின் இறப்பில் இருக்கும் ரகசியம்.

பொறுப்பான பையன் என்று சத்யாவை கூறிய இன்ஸ்பெக்டர் நந்தினி சத்யா படிக்கும் கல்லூரி ஏரியாவை சேர்ந்த காவலர்.

சந்தியா வழக்கு குறித்து சத்யா கோபம் கொண்டது ஆதங்கம் கொண்டது என கூறிய காவலர் ஸ்ரீதர் இறப்பும் அதே சமயம் நடந்ததாய் கூற, போலீஸ் மூளையில் என்னவோ உறுத்தியது ஜீவனிற்கு.

இப்பொழுது அன்னையிடம் கூறி அவர் நந்தினியிடம் கேட்டு என பிரச்சனை வருவதை விரும்பவில்லை ஜீவன்.. கூடவே தங்கைக்கு இதைப் பற்றி எவ்வளவு தூரம் தெரியும் என்றும் தெரிய வேண்டி இருக்க, என்ன செய்வது என்ற சிந்தனையில் இருந்தான்.

தொடரும்..