• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உயிரின் தொடக்கம் 25

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
683
512
93
Chennai
அத்தியாயம் 25

"நாம ஜெயிச்சுட்டோம் சத்யா!" சங்கர் உற்சாகத்தில் துள்ளி குதிக்க, அமரிக்கையாய் புன்னகைத்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான் சத்யா.

"அய்யோ! எனக்கு கையும் ஓடல.. காலும் ஒடலையே! டேய் எப்புடி டா.. எப்புடி?" என கேட்டு கேட்டு சத்யாவை அந்த கல்லூரி வளாகத்தில் சுற்றி வந்து கொண்டிருக்க.. தூரமாய் தெரிந்த பெண்ணின் வடிவத்தில் சத்யாவின் கண்கள் பளிச்சிட்டது.

நந்தினி தான்யாவுடன் ஓட்டமும் நடையுமாய் வந்து கொண்டிருந்தாள் சத்யாவை காண.

"கலக்கிட்டீங்க பா.. சீரியஸ்லி என்ன சொல்றதுன்னே தெரியல.. அதுவும் சத்யா.. யூ ஆர் ரியால்லி அவ்சம் மேன்!" தான்யா கூற,

"நிஜம் தனு! சத்யாக்கு எதுக்காக தோணி இருந்தாலும் அவனோட அந்த ஒரு துணிச்சல், தைரியம்.. செஞ்சு முடிச்சிட்டு தான் உட்காருவேன்னு அவ்ளோ தீவிரம் தெரியுமா? எனக்கு கூட இதெல்லாம் ஒர்க்கவுட் ஆகுமானு சந்தேகம் இருந்துச்சு.. ஆனா சத்யா எங்கேயும் எதுக்காகவும் தேங்கல!" என்றான் பெருமையாய் சங்கர்.

"டேய்!" என்று சங்கர் தோள்களில் சத்யா தட்ட,

"சோ? ட்ரீட் எப்போ? எங்களுக்கெல்லாம் ட்ரீட் இருக்கா? இல்ல ஸ்பெஷல் ஒன்க்கு மட்டும் தானா?" தான்யா தான் நந்தினியின் முகத்தைப் பார்த்து கிண்டலாய் கூற,

"எங்க தனு? ஸ்பெஷல் ஒன் எல்லாம் ஒரு விஷ் கூட பண்ணல.. அதுக்கெல்லாம் உன்ன மாதிரி நல்ல மனசு வேணுமே!" என்றான் சத்யா வேண்டும் என்றே!

அதில் நந்தினி கோபமாய் முறைக்க, "அட! சிட்டிக்கு கோபம் எல்லாம் வருதேப்பா! இனி நான் தள்ளி நிக்குறது தான் பெட்டர்!" என்று தான்யா கூற,

"டேய் நான் ட்ரீட்க்கு தனுவை அந்த தள்ளு வண்டி கடைக்கு கூட்டிட்டு போறேன்.. நீயும் நந்தினியோட வந்து சேரு!" என்று நடக்க,

"பாத்து வச்சிருக்க வேலைக்கு ஏத்த மாதிரி ட்ரீட் வச்சு பழகுங்க டா" என்று கூறி சங்கருடன் சென்றாள் தான்யா.

"காங்கிரட்ஸ்!" என்றவள் சத்யாவின் முன் கை நீட்டி நிற்க,

"இத சொல்ல இவ்ளோ நேரம் ம்ம்?" என்றவன் புன்னகையுடன் கைகுலுக்கிக் கொண்டான்.

"ரொம்ப ரொம்ப சந்தோசம் தான்.. ஆனா எப்படி சொல்லனு தெரில.." என்றாள் கூச்சமாய் புன்னகை சிந்தி.

"இதுவே போதும்!" என்றான் சத்யா பதிலாய்.. அதில் இன்னுமே மொத்த வார்த்தைகளும் உள்ளுக்குள் சென்றது நந்தினிக்கு.

கல்லூரி முடிய இன்னும் மூன்றே மாதங்களே இருக்க, சத்யா நந்தினி கடந்த நான்கு மாதங்களில் விரல் விட்டு எண்ணும் அளவிற்கு தான் இருந்தது அவர்களின் சந்திப்பு.

சத்யா தனியாய் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை அவளை காண.. எப்போதாவது இருவருக்கும் ஒரே நேரம் ப்ராஜெக்ட் தொடர்பான வைவா முதல் பயிற்சி வகுப்பு வரை என இருக்க, அந்த நேரம் தான் சந்திப்புமே.

பெரிதாய் பேச்சுக்கள் இருக்காது. அதுவும் சத்யா தேர்வு முடிவு வரும் வரை பேச்சுக்கள் அவ்வளவாய் வைத்து கொள்ளவில்லை. வைத்துக் கொள்ளவும் அந்த நேரத்தில் முடியாத அளவுக்கு ஒரு படபடப்பு முடிவை அறிந்து கொள்ள.

நான்கு மாத முடிவில் இதோ அவன் எதிர்பார்த்த நற்செய்தி ஒன்றிற்கு இரண்டாய் அவன் கைகளில் இருக்க, ஒன்றை மட்டும் அறிந்ததற்கே அத்தனை சந்தோசம் நந்தினியின் முகத்தினில்.

மற்றொன்றை கூறினால் அவள் என்னவாவாள்? அதை இன்னும் அவன் தன் பெற்றோர், சங்கர் என யாரிடமும் கூறி இருக்கவில்லை.

அதைப் பற்றி நினைத்து ஒரு குறும்புன்னகையுடன் சத்யா வர,

"ட்ரைனிங் எப்போ?" என்றாள் அவன் சிந்தனையை கலைத்து.

"ம்ம் இன்னும் ரெண்டு மூணு மாசத்துல இருக்கும்.. காலேஜ் முடிச்சதும் வரட்டுமேனு நினைக்குறேன்.. என்னாக போகுதோ" என்றதும் சத்தமாய் சிரித்து விட்டாள் நந்தினி.

"ஹேய்! என்ன அவ்வளவு சிரிப்பு?" என்று அவள் புன்னகை அவனையும் தொற்றிக் கொள்ள சத்யா கேட்க, அவன் கேட்ட பின் தான் தான் சத்தமாய் சிரித்து வைத்ததே அவளுக்கு புரிந்தது.

"ஹ்ம் நாட் பேட்! நல்ல முன்னேற்றம் தான்.. பரவால்ல என்னவோ என்னை தான் நினைச்சுருக்க.. சொல்லு!" என்றான்.

ரொம்பவும் பிகு செய்யாமல் "இல்ல! ஜாப் ஜாயின் பண்ணி போலீஸ்காரர் ப்ராஜெக்ட் வைவால ஒரு ப்ரோபஸ்ஸர் கேட்குற கேள்விக்கு பதில் தெரிஞ்சும் தெரியாமலும் நிக்குற மாதிரி நினச்சு பாத்தேன்.." என்றவள் சிரித்துக் கொண்டே,

"சிரிப்பு வந்திருச்சு!" என்று கூற,

"ஆஹான்..!" என்றவன் சிந்தனை முதல் ஆரம்ப நாட்களில் தான் பார்த்த நந்தினியை நினைத்துப் பார்த்து புன்னகை சிந்தியது..

"என்ன சைலன்ட் ஆகியாச்சு? கொஞ்சம் ஓவரா அட்வான்டேஜ் எடுத்துக்கிட்டேன் இல்ல?" என்று நந்தினி கேட்க,

"ச்சே சே! இப்ப என்னை கலாய்ச்சு பேசுற நந்தினியையும், உன்னை பார்க்க உன் தெருல நிக்கும் போது என்னை கண்டுக்காத மாதிரி போன நந்தினியையும் நினச்சு பார்த்தேன்.." என்றவன்,

"ஹப்பா! இதுவும் ஒரு அச்சீவ்மென்ட் தான் இல்ல?" என்றான்.

"ஆமா ஆமா! அவார்ட் தர போறாங்க!" என்றாள் கிண்டலாய்.

"அவார்ட் எல்லாம் வேண்டாம்.." என்றவன் இழுக்க, இங்கே நந்தினி இதயம் எகிறி குதித்தது எதையும் சொல்லி வைத்து விடுவானோ என்று.

சத்யாவிற்கு இன்று ப்ராஜெக்ட் தொடர்பான வேலைகள் இருக்கவே ஊரிலிருந்து அவன் கல்லூரிக்கு வந்திருக்க, நந்தினி நேற்று தான்யா மூலம் சத்யாவின் தேர்ச்சி செய்தியை கேட்டு ஓடோடி வந்திருந்தாள் அவனை காணவே!

போஸ்ட் வந்ததும் வைதேகி தான் முதலில் அதை கையில் வாங்கிக் கொண்டு வீட்டிற்குள் கொண்டு வர, எதிரே வீரபாகு..

"வந்துட்டா? என்னைய வெளில கூப்புட வேண்டிய தான? இப்படி சத்தமே இல்லாம கொண்டு வந்து வச்சுக்கிட்டு நிக்க? எத்தன நாள் வாசல்ல இத எதிர்பார்த்து நின்னோம்னு மறந்து போச்சா உனக்கு?" என்று லெட்டரை பார்த்ததற்கே சந்தோஷத்தில் குதிக்க ஆரம்பித்து விட்டார் அவர்.

"என்ன செய்தினு தெரியாம என்ன பண்ணுதீங்க நீங்க?" என்று வைதேகி கேட்க,

"வாய வச்சுக்கிட்டு சும்மா இரு.. எதுவும் சொல்லி வச்சிராத.. முதல்ல உன் மவன கூப்பிடு" என்று பதட்டமாய் கூறினார் வீரபாகு.

அவனை அழைத்து அவன் வருவதற்குள் பெற்றோர் நிலைகொள்ளாமல் தவிக்க ஆரம்பித்துவிட்டனர்.

வந்தவன் மிக மெதுவாய் வேண்டுமென்றே நேரம் கடத்தி அதைப் பிரிக்க, பல்லைக் கடித்தார் வீரபாகு..

"என்ன போட்ருக்கு?" வைதேகி கேட்க,

"ப்ச்! எக்ஸாம் எல்லாம் நல்லா பண்ணிருக்கேனாம்.. ஆனா ஹைட்டு தான் பத்தாதுனு சொல்லி நீங்க போலிஸ் ஆக முடியாதுனு அனுப்பியிருக்காங்க.." என்றான் உதட்டைப் பிதுக்கியப்படி.

"ஹைட்டுனா உசரமா? இந்த உசரம் பத்தாதுனு எவன் சொல்லுவான்.. என்ன டா இப்படி வந்துருக்கு.. நான் தான் அடுத்த வாட்டர் வெற்றிவேல்னு சொன்ன?" என்று அன்னை பதட்டமாகிவிட, வீரபாகுவின் பதட்டம் எல்லாம் காணாமல் போய் ஆர்வம் அதிகமாகி இருந்தது.

"எது வாட்டர் வெற்றிவேலா? ம்மா அது வா.." என்று கூற வர,

"லூசு லூசு! அவன் தான் கதை அளந்துட்டு இருக்கான்னா இவ ஒருத்தி!" என்று மனைவியை வீரபாகு மிரட்ட,

"நான் என்னங்க பண்ணினேன் ம்?" என்றார் பாவமாய்.

"அய்யோ! அவன் உன் மவன் பொய் சொல்லுதாம் டி.. உசரம் பத்தலையாம்.. ஒரு அளவு இல்ல பொய்க்கு!" என்று தான் கண்டு கொண்டதை அவர் சொல்ல,

"அப்படியா?" என்று மகனைப் பார்த்தார்.

சிரித்தவன், "என்ன இருந்தாலும் அப்பா அப்பா தான் ம்மா.. எப்படி என்னை கணிச்சு வச்சிருக்கார் பாரேன்!"

"துடப்பக்கட்ட பிஞ்சிரும்.. உண்மையை சொல்லேன் டா" என கேட்க,

"ம்மா! இந்தியன் போலீஸ் சர்வீஸ்ல இருக்க ஒரு அதிகாரியை கடும் சொல்லால பேசிட்டு இருக்கீங்க.. " என்று அவன் புன்னகை முகமாய் கூற, பூரித்து போய் பார்த்தது பார்த்தபடி நின்றுவிட்டார் வீரபாகு.

கண்கள் எங்கும் அசைய மறுக்க, "இன்னொரு முறை சொல்லு!" என்றார் வைதேகி கண்களில் கண்ணீர் பொங்க.

"ம்மா! போலீஸ்காரன் அம்மா அழுவலாமா?" என்று கேட்க, கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை அவரால்.

தந்தையை பார்க்க, பேச்சச்சு தான் நின்றிருந்தார் பார்த்தது பார்த்தபடி.

"ம்மோவ்!" என்று சத்தமாய் அழைத்து இருவரின் காலிலும் சட்டென விழ,

"என்னங்க!" என்று வைதேகியும் அழைக்க, வார்த்தை வரவில்லை வீரபாகுவிற்கு.. மனம் மட்டும் அத்தனை அத்தனை ஆசீர்வாதங்களை மகனுக்கு கொடுக்க,

"இப்படியே சந்தோசமா இரு டா!" என்று எழுப்பி விட்டார் வைதேகி.

"போதும் போதும்! எவ்வளவு நேரம் வச்ச கண்ணு வாங்காம பாப்பிங்களாம்.. நான் போய் சங்கர பாத்துட்டு வரேன்!" என்று வாசலுக்கு போக,

"போன் பண்ணி தான் கேளேன் டா!" என்றார் அன்னை.

"நேர்ல பாக்கணும்!" என்று கிளம்பி இருந்தான்.

வீட்டில் நடந்ததை நந்தினியிடம் சொல்ல, புன்னகை முகமாய் கேட்டுக் கொண்டிருந்தாள் நந்தினி.

"அப்புறம்! உன் அண்ணன் என்ன சொல்றாரு?" சத்யா கேட்க,

"அண்ணா ஒன்னும் சொல்லலையே!" என்றாள் எதை கேட்கிறான் என புரியாமல்.

"ஒண்ணுமே சொல்லலையா?" மீண்டும் கேட்க,

"என்னனு தெளிவா சொல்லலாம்ல?" என்றாள் நந்தினி.

"என்ன சொல்ல? உனக்கு தெரியும் நினச்சேன்.. உன் அண்ணன் மோப்பம் புடிச்சிருக்கார்.. ஆனா அது உன்னையா என்னையானு தான் தெரில!" என்று இலகுவாய் கூறி தோள் குலுக்க, உள்ளத்தில் அதிர்வு நந்தினியிடம்.

"இவ்வளவு ஷாக் எதுக்கு? ஏற்கனவே சொல்லியிருக்கேன் தானே?" என்று அவன் கேட்டதெல்லாம் காதில் விழவே இல்லை.

அவள் நிலை புரிந்தாலும் அவளின் திடம் எந்த அளவு என்றும் தெரிய வேண்டுமே என அமைதியாய் நின்றான்.

தொடரும்..