• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உயிரின் தொடக்கம் 26

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
683
512
93
Chennai
அத்தியாயம் 26

"நான் கிளம்புறேன் ம்மா!" என்று காலை ஜீவன் தனது காக்கி உடையில் கிளம்பி இருக்க, நந்தினி தயங்கி தயங்கி பார்த்துக் கொண்டிருந்தாள்.

இப்போது என்று அல்லாமல் இரு நாட்களாய் நந்தினி அப்படி இருக்க, என்ன என்று கூட அன்னையும் அண்ணனும் கேட்காமல் இருக்க அது இன்னும் பாதித்தது பெண்ணை.

முதல் நாளே விஜயலக்ஷ்மியோடு ஜீவனும் அவள் முகம் சரி இல்லை என்பதை கண்டு கொண்டாலும் அவளாக கூற வேண்டி அமைதி காத்திருக்க, அன்று இரவே ஜீவனுக்கு அழைப்பு வந்தது சத்யாவிடம் இருந்து.

சத்யா கல்லூரியில் வைத்து ஜீவனிற்கு நந்தினியின் காதல் தெரிந்திருக்க வாய்ப்பு இருப்பதாக கூறி இருக்க, வீட்டிற்கு வந்தவளால் சாதாரணமாய் இருக்க முடியவில்லை.

அதுவே அவளை கவனிக்க வைத்தது வீட்டினரை.

முதல் நாள் போலவே அவளை கண்டும் காணாமல் செல்ல இருந்த ஜீவன் சத்யாவின் பேச்சு நியாபகம் வர,

"நந்து!" என அழைத்துவிட்டான் வாசலில் நின்று ஷூவை மாட்டியபடி.

"ண்ணா!" என்று வேகமாய் வந்து அவன் முன் நின்றவளுக்கு மூச்சு வாங்க, தங்கை மனம் தெளிவாய் புரிந்தது.

"ஈவ்னிங் ஜாஸ்ஸை பாக்க போறேன்.. நீயும் வர்றியா?" என்று கேட்க, அவள் கண்களில் வந்து போன ஆசுவாசத்தை கவனிக்க தவறவில்லை ஜீவன்.

"வர்றேன் ண்ணா!" என்றாள் புன்னகைத்து.

இன்னும் மூன்று மாதங்களில் கல்லூரி முடியவிருக்க, ஜாஸ்மின் பிறந்த பொழுது அன்னை கூறியது தான் நந்தினியின் திருமணம் பற்றிய பேச்சுக்கள்.

அடுத்த இந்த மூன்று மாதங்களில் எங்கும் அதைப் பற்றிய பேச்சின் சுவடுகளே இல்லாமல் இருக்க, நந்தினிக்கு அது தான் தேவை என்பதால் பெரிதும் கண்டு கொள்ளவில்லை.

மாலை அண்ணன் குழந்தையை பார்த்து கொஞ்சி விளையாடிவிட்டு வீடு வந்து சேர இரவு ஆகி விட, மற்ற எதுவும் மறந்து குழந்தையின் நினைவு ஆக்கிரமித்து இருந்ததால் மனம் நிறைந்த மகிழ்வாய் இருந்தது அந்த நிமிடம்.

"நந்து! இனி காலேஜ் இனி எப்ப போனும்?" என்று அன்னை கேட்க,

"நாளைக்கு லீவ் தான் ம்மா.. அடுத்த நாள் போனா போதும் என்று கூறி நிம்மதியாய் உறங்கி எழுந்தாள்.

ப்ராஜெக்ட் பற்றிய குறிப்பு மற்றும் கலந்து ஆலோசனை என மொபைலில் தான்யாவுடன் அடுத்த நாள் சென்றிருக்க மூன்றாம் நாள் கிளம்பி சென்றால் கல்லூரிக்கு.

"இவனோட!" என்று பல்லைக் கடித்தபடி சத்யாவுடன் கல்லூரிக்கு வந்திருந்தான் சங்கர்.

அடுத்த நாள் இவர்களுக்கு ப்ராஜெக்ட் செய்முறை விளக்கம் கொடுக்க வேண்டும் என கல்லூரியில் கூறி இருக்க, தேர்வில் வென்ற சந்தோஷத்தில் அதை கவனிக்காமல் விட்ட சங்கர் இன்று ஒரு நாளில் அதை முழுதாய் கவனிக்க நினைத்திருக்க, சங்கரை இழுத்துக் கொண்டு கல்லூரிக்கு வந்திருந்தான் சத்யா.

"எலி தான் காயனும்.. எலியோட டேஷ்க்கு என்ன தேவைங்கேன்" சங்கர் கடுப்பாய் கேட்க,

"எலி பத்தின ஆராய்ச்சி இப்ப எதுக்கு.. ப்ராஜெக்ட் சாம்பிள் எதுவும் கொண்டு வரலையா? அப்படி ஓரமா உட்கார்ந்து பார்த்துருக்கலாம்ல? நந்தினிகிட்ட நான் பேசிட்டு வர்ற வரை நீ என்ன பண்ண போற?" என்று சாதாரணமாய் சத்யா கேட்டு வைக்க,

"டேய்! எனக்கு வாழ்க்கை தந்த புண்ணியவான்னு கூட பாக்க மாட்டேன்.. மனுசனா டா நீ எல்லாம்?" என்று சங்கர் கூறியவன், திரும்பி நடக்க,

"ரெண்டு அவர்ல திரும்பி வந்துடு!" என்று கேட்ட சத்யாவின் குரலில் இன்னும் கடுப்பாகி கேன்டீன் புறம் சென்றான்.

தான்யாவும் நந்தினியும் வகுப்பில் இருந்து வெளிவர, தான்யா தான் முதலில் சத்யாவை கண்டது.

அதை கூறாதவள், "ஆமா! சத்யாகிட்ட உன் மனசுல இருக்கறதை சொல்லிட்டியா இல்லையா?" என கேட்க, தன்னையும் கேளாமல் ஒரு நாணப் புன்னகை ஒட்டிக் கொண்டது நந்தினிக்கு.

"ப்பா! ரியாக்சன் எல்லாம் சரி தான்.. பதில் சொல்லு!" என்றாள்.

"என்ன சொல்லனும்? கேட்டா தானே சொல்ல முடியும்? கேட்கட்டும்!" என்று திரும்ப, சில அடி தொலைவில் அவன்.

"இன்னைக்கு சொல்லி தான் ஆகணும் டி நீ!" என்று தான்யா சிரிக்க,

"பேசாம வா!" என்று அழைத்து சென்றாள் அவன் புறமாய்.

"தனு! சங்கர் கேன்டீன்ல" என்று வந்ததும் சத்யா கூற,

"கழட்டி விட்டாச்சா? சரி சரி போறேன்!" என கிளம்பி இருந்தாள் தான்யா.

"நாளைக்கு தானே உனக்கு காலேஜ்?" நந்தினி கேட்க,

"ம்ம்! எனக்கு எப்பனு உனக்கு எப்படி தெரியும்?" என்றவன் புருவம் உயர்த்த, நாக்கை கடித்துக் கொண்டாள் தான் அகப்பட்டுவிட்டதில்.

"என்னைப் பத்தி எல்லாம் தெரிஞ்சி வச்சிருப்ப போல?" சத்யா கேட்க,

"அதெல்லாம் ஒன்னும் இல்ல.. அதான் சொல்லி இருக்காங்களே நாலு பேட்ச்சும் எப்பப்ப வரணும்னு" என்று சமாளித்தாள்.

"நீ ஒத்துக்க மாட்ட.. ஆனா நான் ஒத்துப்பேன்.. உன்னை பாக்க தான் வந்தேன்!" என்று கூற, அமைதியாகிவிட்டாள்.

"வா நடந்துட்டே பேசலாம்!" என்று வெளியே கைகாட்ட,

"தனு?" என்றவளுக்கு, அவன் முறைப்பில் உடன் சென்றாள்.

"வீட்டுல மாப்பிள்ளை பாக்குறாங்களா?" சில நிமிடம் அமைதியாய் இருவரும் நடந்திருக்க, மீண்டும் சத்யாவே பேச்சை துவக்கினான்.

"இல்லையே! ஏன்?" என்றாள் வேகமாய். தனக்கு தெரியாமல் எதுவும் பார்க்கிறார்களோ என்ற பதட்டம்.

"எதுக்கு இவ்வளவு பதட்டம்? ஜஸ்ட் கேட்டேன்.. ஆல்ரெடி பார்த்ததா கேள்விபட்டேன்.. அதான்!"

"ஓஹ்!" என்று ஆசுவாசமானவள்,

"அதெல்லாம் ஒன்னும் இல்லை.. அண்ணாவும் அம்மாவும் என்கிட்ட எதுவும் கேட்கல.."

"கேட்டா என்ன சொல்லுவ?" என்ற கேள்விக்கு தொண்டைக்குள் வார்த்தைகள் சிக்கிக் கொண்டது.

"சொல்லு நந்து! என்ன சொல்லுவ?" என்று மீண்டும் கேட்டும் அமைதி.

"நீ சொல்ல மாட்ட.. எதுவும் சொல்ல மாட்ட.. என்னை பிடிக்கும் சொல்ல மாட்ட.. அவங்க எது சொன்னாலும் தலை ஆட்டுவ.. ரைட்?.." என்று கேட்க, அதற்கும் அமைதி.

"ஹ்ம்! இதை கேட்டுட்டு போலாம்னு தான் வந்தேன். சரி நான் கிளம்புறேன்!" என்று கூற, நிமிர்ந்து அவனைப் பார்த்தவள் விழிகளில் அத்தனை பரிதவிப்பு.

"எனக்கும் சில ஆசை இருக்கு நந்து.. அது அதிகம்னு நீ நினைச்சாலும் உண்மை.. லவ் பண்றேன்.. எனக்கு பதில் நீ சொல்லலைனாலும் என்னால புரிஞ்சிக்க முடியும்.. உனக்கு என்னை புடிக்குமான்னு எனக்கு தெரியும்.. உன் கண்ணு சொல்லும்.. இப்பவும் உன் கண்ணு பேசுறது எனக்கு புரியுது.. ஆனா அதுக்காக பேசவே மாட்டேன்ணு சொன்னா?" என்று கேட்க, எதற்கும் பதில் இல்லை.

"நீ பேச வேண்டாம்!" என்றதும் மீண்டும் கோபம் கொண்டு கிளம்ப போகிறானோ என அவள் பார்க்க,

"நான் பேசிட்டேன்.. எங்க பேசணுமோ அங்க பேசிட்டேன்.. இனி எல்லாம் உன் விருப்பமும் அவங்க விருப்பமும் தான்" என்று கூற, புரியவில்லை அவளுக்கு.

"யார்கிட்டனு கூடவா கேட்க மாட்ட?" என்று கேட்க,

"உங்க வீட்டுலயா?" என்றாள்.

அவ்வளவு தான் அவள் எதிர்பார்த்தது.. அவன் வீட்டினரிடம் சொல்லி பெண் பார்க்க வருவானாய் இருக்கும்.. அப்போது வீட்டில் தன்னிடம் கேட்பார்களா? கேட்டால் என்ன பதில் கூறுவது என்பது வரை அவள் யோசனை சென்றிருக்க, கேட்டுக் கொண்டிருந்தவனுக்கு, அவளிடம் கூறினால் அவள் தரும் முக மாற்றத்தை பற்றிய சிந்தனை மனதில்.

"ம்ம்! அப்ப நான் பேசுறது உனக்கு புரியுது.. உனக்கும் சம்மதம்.. நான் வீட்டுல சொல்லலாம்.. ஓகே?" என்று கேட்க,

'அய்யோ!' என்றது நந்தினி மூளை.

"சரி சரி ரொம்ப குழம்பிக்காத.. என் வீட்டுல சொல்றதுக்கு எல்லாம் ஒன்னும் இல்ல" என்றதும் அவள் புரியாமல் பார்க்க,

"அவங்களுக்கு எல்லாம் எப்பவோ தெரியுமே! பத்தாதத்துக்கு போலீஸ்ல சேரனும்ணு முடிவு பண்ணுன அப்பவே எப்ப வேணா பொண்ணு கேட்க போக ரெடியா இருக்கனும்ணு சொல்லி வச்சுட்டேன்.. பூ பழம் வாங்கி குடுத்து வாங்க போலாம்ணு சொன்னா சரினு வந்துருவாங்க!" என்றவன் பேச்சில் தலை சுற்றிப் போய் அவள் நிற்க,

"என்ன வேலைல ஜாயின் பண்ணிட்டா நல்லா இருக்குமேன்னு பாக்குறேன்.. அதுக்கு தான் யோசிச்சு யோசிச்சு பண்றேன்!" என்றதும் புருவங்கள் சுருக்கியவள்,

"என்ன யோசிச்சு பண்ணீன?" என்றாள் சந்தேகமாய்.

அதான் சொன்னேனே பேச வேண்டிய இடத்துல பேசிட்டேன்னு"

"அதான் எங்க? உங்க வீட்டுல இல்லைனா?" என்று கேள்வியை முடிக்காமல் இழுக்க,

"அதே தான்! எங்க வீட்டுல இல்லைனா அடுத்து இதுல சம்பந்தப்பட்ட வீடு யாரு வீடு? அங்க தான்" என்று கண்ணடித்து கூற, அசையாது நின்றவள் விழிகள் தெறித்து விடும் அளவுக்கு விழித்தாள்.

"ப்பா! எவ்ளோ பெரிய கண்ணு!" என கிண்டல் செய்ய, அதிர்ச்சியில் மூளை வேலை செய்யாமல் நிறுத்தம் செய்திருந்தது.

தொடரும்..