• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உயிரின் தொடக்கம் 32

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
685
512
93
Chennai
அத்தியாயம் 32

ஜெயாவும் எழுந்து கொள்ள பார்க்க, "நீ இரு ம்மா!" என்று கூறி, ஜெயா தயங்கி நிற்கும் போதே அருகே அமர வைத்துக் கொண்டார் விஜயலக்ஷ்மி.

"நந்துக்கு காலேஜ் முடிய போகுது.. நானும் நீயா எதாவது சொல்லுவனு பார்த்தா வாயே திறக்க மாட்டுற!" என்றார் விஜயா மகனிடம்.

"என்ன த்த?" என்று ஜெயா கேட்க,

"நந்து கல்யாண விஷயம் தான் ம்மா.. பொறுமையா இருக்க சொன்னான்.. இன்னும் எவ்வளவு நாள்னு கேட்குறேன்!"

"ம்மா! நீங்க நான் பேசனும் நினைக்குறிங்க.. நான் நந்து பேசணும் நினைக்குறேன் அவ்வளவு தான்!" என்றான் எளிதாய்.

"என்ன டா சொல்ற?"

"உங்ககிட்ட ஒன்னு சொல்லணும் ம்மா.. ஒன்னு சொல்லனும்.." என்றவன் மனைவியையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு,

"கொஞ்ச நாள் முன்னாடி வீரா மாமா பையன் என்கிட்ட பேசினான் ம்மா!" என்று கூற,

"யாரு? சத்யாவா?" என்றார் உடனே கண்டுகொண்டு. ஜெயா பிடிப்படாமல் யோசித்தவள் அத்தையின் வார்த்தைகளில் யார் என யோசிக்கும் போதே முன்பு ஒரு முறை அக்கம்பக்கத்தில் பேசிய நியாபகம் வந்தது.

"அவன் என்ன பேசினான் உங்ககிட்ட?" என்று ஒரு வேகத்தில் ஜெயா கேட்கவும் இருவருமாய் அவளைப் பார்க்க, அதன் அர்த்தம் புரிந்தவள்,

"எனக்கு யார்னு தெரியாது.. ஆனா பக்கத்து வீட்டுல உள்ளவங்க சொல்லி கேட்ருக்கேன் முன்னாடி.. அவன் தான் நம்ம நந்து பின்ன சுத்தி டிஸ்டர்ப் பண்ணி இருக்கான்.. அதனால தான் அவன் ஏன் உங்களை பார்க்க வந்தானு..." என்று கூற,

"உனக்கு முன்னாடியே தெரியுமா அப்போ? இந்த பக்கத்து வீட்டுக்காரங்களுக்கு எல்லாம் அடுத்த வீட்டு கதை கிடைச்சா போதும்!" என்று விஜயா ஆரம்பித்தார்.

"அதை விடுங்க ம்மா!" என்றவன் சத்யா கூறியதை சொல்ல,

"அவ்வளவு தைரியமா பேசினானா?" என அன்னை கேட்க,

"அவன் பொய் சொல்றானா இருக்கும்.. அவன் சுத்துனது என்னவோ உண்மை தான்.. நம்ம நந்து அப்படி எல்லாம் இல்லைங்க!" ஜெயா சட்டென கூற, மருமகளை கனிந்து பார்த்தார் விஜயா.

முழுதாய் மாறி இருப்பவளை நன்றாய் புரிந்து கொள்ள முடிந்தது அவருக்கு.

"உனக்கு சில விஷயங்கள் தெரியாது ஜெயா!" என ஜீவன் கூற,

"நான் உனக்கு சொல்றேன் ம்மா!" என்று கூறிவிட்டு மகன்புறம் திரும்பினார்.

"நீ என்ன நினைக்குற ஜீவா?"

"அதான் ம்மா.. நந்து பேசுவானு பார்த்தேன்.. சொல்லணும்னு தோணுது அவளுக்கு ஆனா தயங்குறா என்ன செய்வேனோனு.. அதுவும் புரியுது.. அப்புறம் எப்படி ம்மா நான் வெளில மாப்பிள்ளய தேடுறது?" என்று கேட்டவனை குழப்பமாய் பார்த்தாள் ஜெயா.

"அப்ப முடிவு பண்ணிட்டியா ப்பா?" என்றார்.

"இப்படி தான்றதை மாத்த முடியாதேம்மா.. நந்து விருப்பமும் சந்தோசமும் தானே நமக்கு முக்கியம்.. அவங்க குடும்பம் நமக்கு தெரியும்.. சத்யாவை வெளில விசாரிச்சேன்.. எல்லாம் ஓகே தான்.." என்று இழுத்தவன்,

"ஒரு விஷயம் கொஞ்சம் மனசை குழப்புது.." என்றான் நெஞ்சை நீவிக் கொண்டு.

"சரி சரி விடு! அப்படி குழப்பதுல எந்த முடிவுக்கும் வர வேண்டாம்.. எல்லாத்துக்கும் தீர்வு ஒன்னு இருக்கும் அப்ப பாத்துக்கலாம்" என்றார் தெளிவாய் யோசித்து செய்யலாம் என நினைத்து.

"ம்மா! தப்பா எதுவும் இல்ல.. எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல.. ஆனா சத்யா கேரக்டர் எனக்கு புடிச்சிருக்கு.. அதை தான் ஒத்துக்கணும்" என்று கூற,

"உன்கிட்ட நேரா வந்து பேசினதால சொல்றியா ப்பா?"

"அது மட்டும் இல்ல ம்மா.. சர்வீஸ்ல இவ்வளவு நாள் இருந்ததை வச்சு அவங்க நேரா நம்மகிட்ட பேசுறதுல இருந்து சில விஷயங்கள் என்னால கணிக்க முடியும்.. சத்யாவையும் கணிக்க முடிஞ்சது.. அப்புறம் கொஞ்சம் அதிகமா சமூக அக்கறை, எப்படி சொல்லனு தெரியல.. என்னை மாதிரி தான் அப்படினு அப்பப்போ தோணுது!" என்றான் இன்ஸ்பெக்டர் சத்யாவை கூறிய செய்தியில் கணித்து.

"என்னவோ சொல்ற.. பாக்கலாம்.. காலேஜ் முடிக்கட்டும்!" என்று கூறி,

"நீ கிளம்பு ப்பா.. பேசிக்குவோம்!" என்ற விஜயா மகன் கிளம்பியதும் மருமகளுடன் அமர்ந்து பேச ஆரம்பித்தார்.

"என்ன த்த என்னென்னவோ சொல்றாங்க?" என்று ஜெயா கேட்க,

"என்ன சொல்ல ஜெயா! எல்லாம் நீ டெலிவரிக்கு போன நேரத்துல தான் நடந்தது!" என்றவர் அனைத்தையும் மருமகளுக்கு விளக்கினார்.

"ஓஹ்! அப்போ அந்த பையன் நல்ல மாதிரி தான் போல.. இவங்களும் நல்லா விசாரிச்சு தான் சொல்லுவாங்க.. நந்து எதுவும் சொல்லலையா த்த?"

"எனக்கும் அது தான் தோணுது ம்மா.. முன்னெல்லாம் நல்லா பிரண்ட்லி பேசுவா.. அப்ப பொதுவா பேசினா அந்த சத்யாவை பத்தியும் எதாவது சொல்லுவா.. ஆனா இப்ப அப்படி எதுவும் பேசுறது இல்ல.. அவளுக்கு புடிச்சிருக்குனா நாம குறுக்க நின்னு எதுக்கு?" என்றார்.

"அதுவும் சரி தான் த்த.. எல்லாம் நல்லபடியா முடிஞ்சா போதுமே!" என்ற ஜெயா,

"நான் போய் சமையலை பாக்குறேன்!" என்றவள் விஜயா தனியே விடாமல் உதவிக்கு சென்றார்.

தன்னைப் பற்றிய பேச்சுக்கள் தான் என்று தெரிந்தும் உள்ளே சென்ற நந்தினிக்கு சாதாரணமாய் இருக்க முடியவில்லை.. குறுக்கும் நெடுக்குமாய் நடந்தவள் சிணுங்கிய குழந்தையை தட்டிக் கொடுத்து உறங்க வைத்துவிட்டு மீண்டும் நடந்தாள்.

நிமிடத்திற்கு நிமிடம் பயம் தான் அதிகமானது.. சத்யாவிற்கு அழைக்கலாமா என நினைத்தவள் பின் மாற்றி தான்யாவிற்கு அழைத்து புலம்ப,

"உன் அம்மாவும் அண்ணனும் அவ்வளவு டெரர் எல்லாம் இல்ல.. சும்மா பதறாத.. ஆனா உன்கிட்ட கேட்டா நீ சத்யாவை விட்டுக் குடுத்துடாத!" என இன்னும் பிபீயை ஏற்றிவிட்டாள்.

வெளியே வரும் போது அன்னையும் அண்ணியும் சமையலில் இருக்க, அண்ணன் வீட்டில் இல்லை என்றதும் முதலில் நிம்மதி மூச்சு விட்டவள், பின் என்னவாய் இருக்கும் என யோசித்து யோசித்து அதிலேயே நின்றாள்.

இன்னும் ஒரு வாரத்தில் சத்யாவோடு சங்கரும் கிளம்ப வேண்டும்.. சங்கருக்கும் சென்னை என்பது தான் பெரியவர்களுக்கு இருக்கும் பெரும் ஆறுதல்..

அடுத்த பதினைந்து நாட்களில் கல்லூரி இறுதி நாள்.. கூடவே ஃபேர்வேல்.

அந்த நாட்களில் தான் அடுத்த சந்திப்பு என கல்லூரியிலும் விடைபெற்று கிளம்ப தயாராக, இறுதியாய் தனியே கல்லூரியில் நந்தினியை சந்திக்க கேட்டு அவளும் வந்திருந்தாள்.

பெரிதாய் பேச்சுக்கள் இல்லை என்றாலும் இருவருக்குள்ளுமே சிறு கவலை.. அதை பேச்சில் மறைப்பதில் இருவரும் வல்லவர்களாய் இருந்தாலும் அவர்களுக்குள் அறிந்து தான் இருந்தனர்.

"உன்னை பார்த்து, உனக்காக வந்துனு சில வருஷங்களா உனக்காகவே இருந்துட்டு இப்ப தனியா போற பீல்.." சத்யா கூற, நந்தினி அமைதி.

"ஆனா இப்ப ஒரு சின்ன நிம்மதி என்ன தெரியுமா? அப்பலாம் நானா தான் பைத்தியம் மாதிரி சுத்திட்டு இருந்தேன்.." என்று அவன் புன்னகையுடன் கூற,

"இப்ப நானும் பைத்தியமா?" என்றாள் முறைத்து.

அதில் தலையசைத்து சிரித்தவன், "இப்ப இருக்குற ஆறுதல் நீ எனக்கு சப்போர்ட்டா இருக்கன்றது.. எப்பவும் இருப்பன்றதுனு சொல்ல வந்தேன்" என்றான் நிதானமாய்.

"நமக்குள்ள எல்லாம் சரியா இல்லாம இருந்திருந்தா... நிச்சயமா எக்ஸாம் எல்லாம் எழுதி பாஸ் ஆகி கிளம்பி இருப்பேன் தான்.. ஆனா முழு மனசா போயிருக்க மாட்டேன்.." என்றான் உணர்ந்து.

"போதும் நந்தினி! ரொம்ப வெயிட் பண்ணிட்டேன்.. காலேஜ் லாஸ்ட் டேட் தான் நமக்கு முதல் நாளா இருக்கனும்.. வேண்டிக்கோ எல்லாம் நல்லபடியா நடக்கனும்னு.." என்று கூற, அவன் கூற வருவது புரிந்தது.

அதிர்ச்சி எல்லாம் இல்லை.. அவன் பேச்சில் ஒருவாறு உணர்ச்சிவசப்பட்டு நின்றிருந்தாள்.

"கிளம்பிட்டு டெக்ஸ்ட் பண்றேன்.. டேக் கேர்!" எப்படி கூற என தெரியாமல் முதல் முறையாய் ஒரு சிறு தவிப்பு எழுந்து அமிழ்ந்து வெளிவந்தது என்னவோ உண்மை நந்தினிக்கு.

அவனின் இந்த மாதிரியான பேச்சுக்கள் மனதில் பசையாய் ஒட்டிக் கொள்ள, பேச்சச்சு நிற்க்கும் நிலை.

"டேக் கேர்!" என்றாள் வார்த்தைகளை விழுங்கி. அதில் புன்னகைத்து தலை அசைத்து கிளம்பிவிட்டான் தன் வாழ்வின் மற்றொரு திசையை அறிந்து கொள்ள தன் நண்பனுடன்.

தொடரும்..
 

Apsareezbeena loganathan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
466
190
63
Coimbatore
ரொம்பத்தான் சுத்தல்ல விடுதுபா இந்த பொண்ணு....
சத்யா உனக்கு இந்த பொந்து தான் sorry நந்து தான் வேணுமா 🤩🤩🤩
 
  • Haha
Reactions: Rithi

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
685
512
93
Chennai
ரொம்பத்தான் சுத்தல்ல விடுதுபா இந்த பொண்ணு....
சத்யா உனக்கு இந்த பொந்து தான் sorry நந்து தான் வேணுமா 🤩🤩🤩
அட ஆமா பா பொந்து ச்சி நந்து தான் வேணுமாம் 🤣🤣🤣