• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உயிரைத் தொலைத்தேன் உனக்குள்ளே...!!!, அத்தியாயம் - 4

Priyamudan Vijay

Member
Staff member
Joined
Jul 30, 2021
Messages
39
உயிரைத் தொலைத்தேன் உனக்குள்ளே...!!!, அத்தியாயம் - 4


எப்பொழுதும் ஐந்து மணிக்கே எழுந்து ஜாக்கிங் செல்லும் தனது செல்லப் புதல்வன், இன்று ஆளையே காணோம் என்ற யோசனையில் அவன் அறையை நோக்கி நடந்தார் ராஜீவின் தாய் கௌசல்யா.

முதல் மூன்று முறை ராஜீவ் அறையின் கதவைத் தட்டியவர், அவனிடமிருந்து எவ்வித பதிலும் வராமல் போகவே... கதவைத் திறந்துக்கொண்டு அறைக்குள் நுழைந்தார். அவன் அறை முழுதும் தன் பார்வையால் துழாவியவர், படுக்கையில் அவன் முகத்தையும் சேர்த்து மறைத்தபடி போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு உறங்குவதைக் கண்ட கௌசல்யா,

“இன்னும் எவ்வளவு நேரம் தான் டா தூங்குவ ராஸ்கல்?” என்று ஆவேசமாகப் பேசியவர், வேகமாய் அவன் புறம் சென்று அப்போர்வையை விலக்கவே, மிரண்டுப்போனார் அவர்.

போர்வைக்குள், ராஜீவலோச்சனின் டி-சர்ட், டிராக் பேண்டினை அணிந்தபடி ஒரு இளம்பெண் உறங்கிக்கொண்டிருந்தாள். நன்றாக உறங்கிக்கொண்டிருந்த அப்பெண், போர்வை விலகிய கடுப்பில்… தன் கண்களைத் திறக்க இயலாமல் அதனை கசக்கியபடி,

“யாரடா இது??? இங்கே நான் நல்லா தூங்குறதுக் கூட பொறுக்காதது?” என்று கண்விழிக்காமல் படுக்கையிலிருந்து எழுந்தவள், மெல்ல மெல்ல நடந்து ராஜீவின் அறையில் அவனுக்காக கட்டப்பட்டிருந்த குளியறைக்குள் நுழையவே…

“ஏய்… ஏய்!! யாரு நீ?” என்று ராஜீவின் தாய் கௌசல்யா வினவவும், அந்த இளம் பெண்…

“ஓ மாம்…?! வெயிட். நான் போய் ஃப்ரெஷ் ஆகிட்டு வர்றேன்.” என்றபடி அவள் ராஜீவின் குளியலைறைக்குள் நுழைந்து தாழிட்டாள்.

‘யாரிவள்? இவ்வளவு உரிமையாய் ராஜீவின் குளியலறையை பயன்படுத்துகிறாளே! அவனது தோழியோ? ஏதாவது பிரச்சனையில் சிக்கிவிட்டதால், இங்கே அழைத்து வந்திருப்பானா? என்ன ஏதென்று ராஜீவிடம் கேட்க வேண்டும்.’ என்று தன் மனதிற்குள் எண்ணிய அவனது தாய், ராஜீவலோச்சனின் கைப்பேசி எண்ணிற்கு அழைப்பு விடுத்தார்.
“வாலிபத்தில் மன்மதன்...

லீலைகளில் மன்னவன்...!

ராத்திரியில் சந்திரன்...

ரசிகைகளின் இந்திரன்…!

நான் ஆடும் ஆட்டம் பாருங்கள்,

நிகரேது கூறுங்கள்…?

நான் பாடும் பாட்டைக் கேளுங்கள்,

கைத்தாளம் போடுங்கள்....

ஊர் போற்றவே... பேர் வாங்குவேன்...

நான் தான் சகலகலா... வல்லவன்!!!”

என்று ராஜீவின் கைப்பேசி அவனது மெத்தையிலிருந்து ஒலிக்க…

‘அடக்கடவுளே! மொபைல இங்கேயே வச்சிட்டு போயிட்டானா? சரி அவன் வரவும் கேட்போம்.’ என்று எண்ணியவர், ராஜீவின் ரிங்டோன் ஒலித்துக்கொண்டே இருக்க… அதனை எடுத்துப்பார்த்தவர், “ரிங்டோனப் பாரு… மன்மதன், வல்லவன்னு சிம்பு படப் பேரா வச்சுட்டு…” என்று முணுமுணுத்தபடியே அதனை அணைத்துவிட்டு, மெத்தையிலேயே வைத்துவிட்டு தனது இதர வேலைகளில் கவனம் செலுத்த அவ்வறையை விட்டுச் சென்றார்.

பல் துலக்க, குளியலறைக்குச் சென்ற அந்த இளம்பெண், கண் திறக்காமலேயே பல்லைத் துலக்கினாள். வாயைக் கொப்பளித்துவிட்டு, தன் முகத்தை கழுவியவள், ஏதோ யோசனையாய் தனது முகத்தைத் தடவித் தடவிப் பார்த்தாள்.

பின்னர், தன் கண்களை நன்றாகக் கழுவிவிட்டு அங்கே மாட்டப்பட்டிருந்த முகக்கண்ணாடியை நோக்கியவள், அதிர்ந்துப் போனாள்.

“அச்சச்சோ…! என்ன நான் இப்படி தெரியுறேன்?” என்று வாய்விட்டே அப்பெண் புலம்ப… மேலும் அதிர்ந்தாள். “அட கொடுமையே!!!! என்ன என்னோட குரல், பொண்ணு குரல்ல வருது???!!!” என்று அதையும் வாய்விட்டே அவள் புலம்பினாள்.

மீண்டும் அந்த முகக்கண்ணாடியைப் பார்த்தவள், தனது முகத்தையும், தாடையும் நன்றாகத் தேய்த்துப் பார்த்தாள்.

“ஒருவேளை…. நம்ம கற்பனையா இருக்கும். நம்ம போய் குளிப்போம்.” என்று கூறியவள், அங்கிருந்த வாலியில் வெதுவெதுப்பான நீரைத் திறந்துவிட்டு விட்டு, டி-சர்ட்டைக் கழட்டியவள்,

“ஆஆஆஆஆஆ……..!!!” என்று அலறினாள்.

அதனைக் கேட்டு கீழ் தளத்திலிருந்த ராஜீவின் தாய் கௌசல்யா,

“அங்கே என்ன மா சத்தம்? ஏதாவது பிரச்சனையா? நான் வேணும்னா மாடிக்கு வரட்டுமா?” என்று அவர் கேட்கவும்…

‘என்ன இந்த அம்மா, ஒரு பொண்ணுகிட்ட பேசுறதுப் போல பேசுறாங்க? நான் யாரோனு முடிவே பண்ணிட்டாங்களா?’ என்று எண்ணிய அந்த இளம்பெண்… “பிரச்சனையெல்லாம் இல்ல ம்மா. இங்கே பல்லியப் பார்த்துட்டேன். அதான்…” என்று ஒருவழியாக சமாளித்துவிட்டாள்.

“ஓ! சரி மா. நான் ஆபீஸ் கிளம்புறேன். கதவை உள்தாழ்பாள் போட்டுக்கோ மா. சமையலுக்கு ஆட்கள் வருவாங்க. அவங்க வரவும் கதவைத் திற. ராஜீவ் வந்ததும் எனக்கு கால் பண்ண சொல்லு மா. நான் அவன் அம்மா தான். அவங்கிட்ட கொஞ்சம் பேசணும்.” என்று கௌசல்யா கூற…

‘என்னைய பத்தி கேட்க தான்னு நினைக்குறேன்.’ என்று மனதிற்குள் எண்ணிய அப்பெண், “சரிங்க மா.” என்று பதிலுரைத்தாள்.

குளிக்காமல் அப்படியே அங்கே தலைமேல் கைவைத்து அமர்ந்தவள், என்ன செய்வதென்று புரியாமலிருக்க… ஏதோ யோசனை வந்தவளாய் குளியலறையிலிருந்து அப்படியே வெளியவர முயல…

“அச்சச்சோ!!!!!” என்று தன் தலையில் அடித்துக்கொண்டு கழட்டிவைத்த டி-சர்ட்டை அணிந்துக்கொண்டு, குளியலைறையிலிருந்து வெளியே வந்தாள்.

மெத்தைமீதிருந்த ராஜீவின் கைப்பேசியை எடுத்து அதிலிருந்த சூரியாவின் எண்ணை அழுத்தி, அவனுக்கு அழைப்பு விடுத்தாள் அவள். கல்லூரி வகுப்பிலிருந்த சூரியா, வகுப்பறையை விட்டு வெளியில் வந்து, அவளது அழைப்பை இரண்டே ரிங்கில் எடுத்து...

“ஹலோ!” என்க…

“மச்சான்!!!!” என்று அழுதுக் கதறினாள் அந்த இளம்பெண்.

‘என்ன ராஜீவோட நம்பர்ல இருந்து ஒரு பொண்ணு அழுறாள்? அது சரி. இவன் எப்பப்பார்த்தாலும் பொண்ணுங்கக் கூட லூட்டி அடிச்சுட்டு கடைசில அவங்கள அழவிடுறவன் தான? இப்போ யார இப்படி அழ வச்சானோ?’ என்று எண்ணிய சூரியா, “அழாதீங்க மா. ராஜீவ் கிட்ட உன்னையப் பத்தி பேசிக்குறேன். சரியா? அவன் உன்னைய விட்டுடுப் போக வேண்டானு சொல்லிடுறேன். அழாதீங்க மா. என்னைய உன் அண்ணனா நினச்சுக்கோங்க. ஓகே வா?” என்று அந்த பெண்ணிற்கு திடீர் தமையனாய் மாறிய சூரியா, ஆறுதல் மொழிகளைக் கூற…

“ஏய் ச்சீ!! வாய மூடு டா.” என்று மறுமுணையிலிருந்த அப்பெண் மிகவும் மரியாதையாய் சூரியாவை ஏசினாள்.

“என்ன மா? அண்ணனப் போய்…… இப்படி மரியாதைக் குறைவா பேசுறியே…!” மெய்யான வருத்தத்துடன் சூரியா கேட்டான்.

"டேய்! உன்னைய கொல்லாம விடமாட்டேன். நான் ஒன்னும் உன் தங்கச்சி இல்ல டா." என்று கோபத்துடன் அந்த இளம்பெண் திட்டவும்,

"சரி மா… சரி… நீ எனக்கு தங்கச்சி இல்ல. நான் தான் உனக்கு தம்பி. இப்போ சரியா?" என்று சூரியா பதறியபடி அவளை சமாதானப் படுத்தினான்.

"டேய்!!!!!!!!!" என்று தன் பற்களை நரநரத்தப்படி கூறியவள், "நான் பொண்ணே இல்ல டா" என்று கூறியவாறு தன் தலையில் அடித்துக்கொண்டாள்.

'அச்சச்சோ! இந்தப் பொண்ணு எந்த அளவுக்கு மனசு உடஞ்சுப் போயிருந்தா, தான் ஒரு பொண்ணே இல்லனு சொல்லிருப்பா?' என்று மனதிற்குள் வருந்திய சூரியா, "விடு மா. எல்லாருக்கும் அவங்கவங்க வாழ்க்கையில துன்பங்கள் வரத் தான் செய்யும். அதை நினைச்சு துவண்டுப் போயிடக்கூடாது. எல்லாத்தையும் கடந்து தான் வரணும்." என்று அவளுக்கு சூரியா ஆறுதல் மொழிகள் வழங்க…

'இப்போ என்னத்துக்கு இந்த அட்வைஸாம்? இன்னும் இவன் புரிஞ்சுக்கல.' என்று மீண்டும் தன் தலையில் அடித்துக்கொண்டாவள், "நான் உன்னைய நேர்ல பார்த்து பேசணும். எப்போ பார்க்கலாம்?" என்று சூரியாவிடம் கேட்டாள்.

'சரி… இவளையும் சமாதானம் படுத்த நேர்ல பேசுனா தான் சரியா வரும்.' என்று எண்ணிய சூரியாவும் "இன்னைக்கு சாயங்காலம், எனக்கு கிளாஸ் முடியவும் நான் சொல்ற பார்க் க்கு வா மா." என்று சூரியா கூறவும்…

"ஏன் உன் ஹாஸ்ட்டல் என்ன ஆச்சு?" என்று அவள் கேட்கவும்…

"இது பாய்ஸ் ஹாஸ்ட்டல் மா…" என்று கெஞ்சும் தொணியில் சூரியா பதிலுறைக்கவும்… 'ஆமாம்…!' என்று நினைத்த அப்பெண்,

"சரி… அப்போ நீ சொல்லுற பார்க்குக்கே வர்றேன்." என்று கூறியவள் சூரியாவின் பதிலை எதிர்பாராமல் அழைப்பைத் துண்டித்தாள்.

‘அவளே கால் பண்ணா… நாலே வார்த்த தான் பேசுனா… அதுலையும் என்னைய திட்டி தீர்த்தா… அப்பறம் அவளே ஒரு முடிவுக்கு வந்து, கால கட் பண்ணிட்டா… இந்த ராஜீவும் சரி, அவன் கூட்டிட்டு சுத்துற பொண்ணுங்களும் சரி… எல்லாம் ஒரே டைப்பா தான் இருக்குங்க. நான் என்ன நினைக்குறேனுலாம் கேட்குறதே இல்ல. அவங்களா ஒன்னு முடிவு பண்ணிட்டு தான், எனக்கு கால் பண்ணுறதே!’ என்று எண்ணியவன் இழுத்து பெருமூச்சு விட்டபடி தன் வகுப்பறைக்குள் விரைந்தான் சூரியா.

------------------------------------------------------------------------------------------------
அதே கல்லூரியைச் சேர்ந்த பெண்கள் விடுதியில்…

“ராஜீவ்....! ராஜீவ்…! ராஆஆஆஆஜீவ்........!!!! அச்சச்சோ அந்த பேரு கூட எவ்வளவு ஸ்வீட்டா இருக்கு……” என்று அந்த விடுதி அறைக்குள் இருந்த ஸ்வாதி என்பவள், தன் மெத்தையில் படுத்தபடி, தலையணையில் முகம் புதைத்துக் கொண்டு, ராஜீவலோச்சனனை நினைத்து வெட்கத்தில் உளறிக்கொண்டிருக்க… அதே அறையில் தங்கியிருந்த அவளது நெருங்கியத் தோழி,

“அந்த பொறுக்கிய நினச்சு ஏன் டி இப்படி பைத்தியமா அலையுற?” என்று தன் தலையில் அடித்துக்கொண்டாள். அவ்வார்த்தையில் வெகுண்ட ஸ்வாதியோ,

“அடியேய்! உனக்கு அவன பிடிக்கலனா, உன்னோட வச்சுக்கோ. என்கிட்டையே வந்து அவன பொறுக்கி… பொறம்போக்குனுலாம் சொல்லாத.” முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

“ஆஹா! இதுகூட நல்லா இருக்கே! ‘பொ-ற-ம்-போ-க்-கு….. பொறம்போக்கு.’ ஐ!!! இனிமே அவன நான் அவன பொறுக்கினு மட்டுமில்ல. பொறம்போக்குனும் சேர்த்து கூப்பிடப் போறேன்.”

“அடியேய் கீர்த்தனா!!! சொன்னா கேளு டி. அவன திட்டாத. எனக்கு தலைக்கு மேல கோபம் வரும்” என்று ஸ்வாதி மீண்டும் எகிறினாள்.

“அவன சொன்னா உனக்கென்ன டி? நான் என்ன பொய்யா சொல்லிட்டேன்? உண்மைய தான சொன்னேன்? அவன் ஒரு ப்ளேபாய் டி.”

“அதெல்லாம் கிடையாது. அவன் நல்லவன். ப்ளேபாய்னு அவன மனசாட்சியில்லாம பேசாத டி கீர்த்தனா. அவன், யாருட்டையாச்சும் லவ் பண்ணுறேனு சொல்லிருக்கானா? அப்படி சொல்லி நீ தான் பார்த்துருக்கியா? பின்ன எதை வச்சு அவன ப்ளேபாய்னு சொல்லுற?” என்று ஸ்வாதி அதே கோபத்துடன் தன் தோழியுடன் சண்டையிடும் விதமாய் பேசவும்…

“நான் சொல்லல டி. அவனால் கைவிடப்பட்ட பொண்ணுங்களோட கண்ணீரே அதுக்கு சாட்சி. சரி விடு… அவன நான் ஒன்னுமே சொல்லல. ஆனால் ஒன்னு மட்டும் புரிஞ்சுக்கோ டி. அம்மா அப்பா பார்க்குற பையன் தான் டி நல்லா பார்த்துப்பான். லவ் பண்ணுறேனு சொல்லிட்டு திரியுற பசங்கலாம் இப்போ ஏமாத்துக்காரனுங்களா தான் டி இருக்கானுங்க.” என்று கீர்த்தனா ஸ்வாதிக்கு அறிவுறுத்த… அவளோ அதனைக் காதில் வாங்காமல், மெத்தையிலிருந்து எழுந்து, அவ்வறையில் தனக்கென்ரு இருந்த மேசையின் டிராயரைத் திறந்து, ஒரு க்ரீமை எடுத்து தன் முகத்தில் பூச ஆரம்பித்தாள். அது ஏதோ வினோத நிறத்திலிருப்பதைக் கவனித்த கீர்த்தனா,

“ச்சீ! என்ன கருமம் டி இது?!” என்று முகத்தை அஷ்டக் கோணலாக சுழித்தாள்.

“இது ஃபேஸ் மாஸ்க் டி” என்று கீர்த்தனாவிற்கு பதிலுரைத்தபடி தன் முகம் முழுக்க அதனைப் பூசினாள். ஸ்வாதி.

“கண்டத கழியத மூஞ்சில பூசிட்டு திரியுறியே டி!” என்று தன் தலையில் கீர்த்தனா அடித்துக்கொள்ள…

“உனக்கென்ன பா? நீ இயற்கையாவே அழகு. எனக்கு அப்படியா? இது மாதிரி க்ரீம்லாம் பூசி, பார்த்துகிட்டா தான் கொஞ்சம் பார்க்குற மாதிரி இருப்பேன். ஆனா, உனக்கு இயற்கையாவே சருமம்லாம் நீ தனிப்பட்டு கவனிக்காமலே மினுமினுப்பா இருக்கும். அதைப் பார்த்து அந்த ராஜீவே உன் பின்னாடி சுத்துனாலும் சந்தேகமில்ல. நான் இதுப்போல பல விசயங்கள் பண்ணா தான் அந்த ராஜீவ் என்னைய திரும்பியாவது பார்ப்பான் டி. அதான்…” என்று அந்த ஃபேஸ் மாஸ்க்கினை தன் முகத்தில் நன்றாக அப்பிக்கொண்டு ஒரு நாற்காலியில் தலைசாய்த்து அமர்ந்தாள் ஸ்வாதி.

“எதேய்!! அந்த ராஜீவ், என் பின்னாடி சுத்துவானா? போயும் போயும் அந்த பொறம்போக்கா டி என் பின்னால சுத்தணும்?” என்று அழுப்பாகக் கூறிய கீர்த்தனா, “சரி டி. லஞ்ச் ப்ரேக் முடிஞ்சுருச்சு. நான் கிளாஸுக்கு கிளம்புறேன். நீ வரலையா? இப்போ போய் ஃபேஸ் மாஸ்க் போட்டு உட்கார்ந்திருக்க?” என்று ஸ்வாதியிடம் கேட்ட கீர்த்தனா, அவள் கூறியதைப் போல் இயற்கையிலேயே அழகு.

நல்ல சிவப்பான பெண் என்று கூறிவிட முடியாது. மாநிறத்திற்கும் மேலாக சற்று பளிச்சென்று இருக்கும் நிறம்… நீண்ட பெரிய கண்கள்… அதில் அடர்ந்த இமை முடிகள்… வில் போன்று வளைந்திருக்கும் புருவங்கள்… கத்திப்போன்று கூர்மையான மூக்கு… சிவந்த உதடுகள்… என்று பெண்ணோவியமாய் நடமாடும் மானுடப்பெண். நம் கதாநாயகி!

கீர்த்தனா கேட்ட கேள்விக்கு ஸ்வாதி, “இல்ல டி. நான் இப்போ கிளாஸுக்கு வரல.” என்று சோகமாய் பதிலளிக்க…

“ஏன்? ஏன்? ஏன்?” என்று கிர்த்தனா அதிர்ச்சியானாள்.

“அது… எப்பவுமே லீவ் எடுக்காத ராஜீவ், இன்னைக்கு லீவ் டி. சஸ்பன்சன்னு வேற சொல்லுறாங்க. சிலர், அவனுக்கு உடல் நலமில்லனு சொல்லுறாங்க. மனசே சரியில்ல டி. அதான் வரல.”

“என்னது?! அவன் வரலனு நீ கிளாஸுக்கு வரலையா?”

“ம்ம்ம்… அவனில்லாத காலேஜ், காலேஜா இல்ல...” மூக்கை உரிஞ்சினாள் ஸ்வாதி. அவளது பதிலில் தன் தலையை அடித்துக்கொண்ட கீர்த்தனா,

“அவன் நம்ம கிளாஸ் இல்லையே டி ஸ்வாதி? கிளாஸுக்கு வர்றதுல என்ன?”

“ஆமா கீர்த்தி… ஆனா, அவன் நம்ம கிளாஸ கடந்து தான் அவன் கிளாஸுக்கு போவான். இன்னைக்கு அப்படி கூட அவன பார்க்க முடியல டி. அதான் ரொம்ப கஷ்டமா இருக்கு எனக்கு.”

“கஷ்டம் டா!” மீண்டும் மீண்டும் தலையை அடித்துக்கொண்டால் நெற்றி வீங்கிப்போகும் அபாயம் உள்ளதால், அதனைத் தவிர்த்தவளாய் சலித்துக்கொண்டாள் கீர்த்தனா.

“இங்கே பாரு டி கீர்த்தி! உனக்கு அவன பிடிக்காதுங்கறதுக்காக, என்னோட ஃபீலிங்க்ஸ நான் எக்ஸ்போஸ் பண்ணும்போது இப்படி சலிப்ப காட்டி, என்னைய கஷ்டபடுத்தாத டி. தெரியாம தான் கேட்குறேன்… நீ ராஜீவ் கூட முன்ன பின்ன பழகிருக்கியா?” என்று தன் வெகுநாள் சந்தேகத்தைப் போட்டு உடைத்தாள் ஸ்வாதி.

ஓர் நீண்ட நெடிய பெருமூச்சிற்கு பின், “இல்லவே இல்ல. பழகுறது என்ன? ஒரு நாள் கூட பேசுனது இல்ல. தூரத்துல பார்த்துருக்கேன். ஆனா அவங்கூட பேசவோ, பழகவோ இல்ல, இது நாள்வரை. இனிமேலும் பேச பழக வேண்டாம்.” என்று தீர்க்கமாய் கூறினாள் கீர்த்தனா.

“பின்னே ஏன் டி உனக்கு அவன்மேல இவ்வளவு வெறுப்பு?”

“அதான் சொன்னேனே! அவங்கூட பழகுன பெண்கள் சிந்திய கண்ணீர் வெள்ளத்த கடந்து தான் ஸ்வாதி நான் நம்ம கிளாஸுக்கே வர்றேன். அவன் தான் இந்த காலேஜ்ல உள்ள பல பெண்கள் மனசுல ‘காதல்’ ங்கற உணர்வ பதிச்சு, அவங்க மனசுல இடம்பிடிச்சு, அவங்க மனச கலச்சிருக்கானே! உன்னையும் சேர்த்து...” அடிக்கண்ணால் ஸ்வாதியைப் பார்த்தபடி கணத்தக் குரலில் கூறிய கீர்த்தனாவை, தன் கண்களை சுருக்கிக்கொண்டு பேசலானாள் ஸ்வாதி.

“முன்ன பின்ன பழகாத மனுசனப் பத்தி ‘அவன் தான் தப்பு’னு முடிவு கட்டுறது ரொம்ப தப்பு டி கீர்த்தி! நீ அவன் யாருட்டையாச்சும் காதல் சொல்லி அதை உன் கண்ணால பார்த்தியா?”

‘இல்ல தான்…’ கீர்த்தனாவின் மனம் அவளையும் மீறி உண்மையைக் கூறினாளும் அதனை மறுத்தவளாய்… “பார்க்கல. ஆனா, அவன சுத்தி பெண்கள் தானே டி ஸ்வாதி இருக்காங்க?”

“சுத்தி பெண்கள் இருந்தா, அவங்க அவனோட காதலி ஆகிடுவாங்களா? கண்ணால் காண்பதும், காதால் கேட்பதும் பொய் டி கீர்த்தி!...”

“நீ என்ன சொன்னாலும் என் மனசு ஒப்பல டி ஸ்வாதி. நான் கிளாஸுக்கு கிளம்புறேன்.” என்ற கீர்த்தனா, தன் விடுதி அறை வாசலில் வைத்திருந்த தன் காலணிகளை மாட்டிக்கொண்டிருக்க… ஸ்வாதியோ, தன் கப்போர்டில் ஒட்டியிருந்த ராஜீவின் புகைப்படத்தைக் காதலோடு பார்த்துக்கொண்டிருந்தாள். ‘இவள திருத்தவே முடியாது’ என்றெண்ணியவளாய் கீர்த்தனா தன் வகுப்பை நோக்கி விரைந்தாள்.

------------------------------------------------------------------------------------------------

கல்லூரி வேலை நேரம் முடியவும் சூரியா, தனக்கு ராஜீவலோச்சனின் கைப்பேசி மூலம் அழைத்த அந்த இளம்பெண்ணின் வருகையை எதிர்நோக்கி அவளிடம் கூறிய அதே பார்க்கில் ஒரு கல் பெஞ்சில் அமர்ந்தபடி காத்துக்கொண்டிருந்தான்.

அவன் வந்த சற்று நேரத்தில் ஒரு அழகிய இளம்பெண் சூரியாவிடம்,

“டேய்! என்ன இவ்வளவு சீக்கிரம் வந்துட்ட? பொண்ணுங்கவும் ஆர்வமோ?” என்று வெகுநாள் பழகியவளைப் போன்று அவள் பேசத் தொடங்க…

“ஹலோ ஹலோ!!! பொறுங்க… யாரு நீங்க? நீங்க பாட்டுக்கு வந்தீங்க… என்னனமோ பேசுறீங்க. யாருங்க நீங்க?” சூரியா புருவங்கள் சுருங்க அப்பெண்ணிடம் கேட்டுவைக்க… அப்போது தான் அந்த இளம்பெண், ராஜீவின் உடையை அணிந்திருப்பதை அவன் கவனித்தான். “வெயிட்…! வெயிட்…! இது ராஜீவோட டி-சர்ட், டிராக் பேண்டாச்சே!!! இது உங்ககிட்ட எப்படி…?” என்று வாய்விட்டே கேட்டவனிடம் அப்பெண்,

“என்னோட டிரஸ்ஸ நான் போடாம வேற யாருடா போடுவாங்க, மாங்கா மடையா!” என்று கூறவும்,

“என்னது!!! உங்க டிரஸ்ஸா? ஹலோ! இது என்னோட உயிர் நண்பன், ராஜீவோட டிரஸ்ஸுங்க. யாரு காதுல பூ சுத்துறீங்க?” என்றவாறு தன் உதட்டை இடப்பக்கம் மட்டும் இழுத்து கிண்டலாகச் சிரித்தான் சூரியா.

“அந்த உயிர் நண்பன் ராஜீவே நான் தான் டா. நான் தான் உன்னையப் பார்க்க போன் பண்ணி வரச் சொன்னேன் காலைல…” என்று வந்திருந்த அப்பெண் கூறிய வார்த்தைகளில் சூரியாவிற்கு அதிர்ச்சியில் கண்கள் இரண்டும் கட்டியது.
சூரியாவை சந்திக்க வந்திருக்கும் பெண் தன்னை ஏன் ராஜீவ் என்று கூறுகிறாள்? இனிவரும் அத்தியாயங்களில் பார்ப்போம்.
 

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,939
அருமை அருமை சகோ ♥️♥️♥️♥️♥️♥️
ஆத்தி ஆத்தி இனிமேல் ஒரே காமெடி சீன் தான் போல, ராஜிவ் பையா உனக்கு என்னடா ஆச்சு இப்படி writer மாயாஜாலம் பண்ணி ஸ்மார்ட் பையன ஸ்மார்ட் girl ஆ மாதிவச்சுருக்காரு, ஒண்ணுமே புரியல,
Writer சகோ கொஞ்சம் சீக்கிரம் வந்து சந்தேகத்தை தீர்த்துவைய்ங்க 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
 
Top