• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உயிரைத் தொலைத்தேன் உனக்குள்ளே...!!! ❤ - அத்தியாயம் 2

Priyamudan Vijay

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 30, 2021
39
34
18
Madurai
~அத்தியாயம் -2~

தன் அறையைவிட்டு வெளியேறிய ராஜீவ், ஹாஸ்ட்டல் வாசலில் நிறுத்திவைத்திருந்த தனது சிவப்பு நிற யமஹா ஆர்-ஒன்-ஃபை பைக்கினை உயிர்பித்து ஹெல்மெட் மாட்டிக்கொண்டு பெண்கள் விடுதிக்குச் செலுத்தினான்.

பெண்கள் விடுதியை அடையவும் மெதுவாக மூன்று முறை ஹாரனை அழுத்த, அதற்காகவே காத்திருந்தாற்போல் உடனே ஓடிவந்தாள் கேத்ரீன். அவள் வரவும், அவளுக்கு இடம் விடும் அளவிற்கு சற்று முன்னே தள்ளி அமர்ந்த ராஜீவின் தோள்பட்டையை பிடித்துக்கொண்டு அவன் பைக்கில் அமர்ந்தாள் அவள். பைக்கை திருப்பியவன், நேராக அந்த ஐந்து நட்சத்திர ஓட்டலில் நிறுத்தினான். அந்த ஓட்டலுக்குள் நுழைந்தவர்கள், இருவர் மட்டும் அமரும் இடத்தில் எதிர் எதிரே அமர்ந்தனர். சுற்றி மெழுகுவர்த்திகளின் ஒளிவீச, அங்கே மாண்டலின் வாத்தியத்தின் மெல்லிய இசை கேட்டுக்கொண்டிருந்தது.

முதலில் சூப் ஆர்டர் செய்தவர்கள், அதன் வருகைக்காகக் காத்திருந்த பொழுதில் ராஜீவையே கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் கேத்ரீன். இது அவனுக்கு ஒன்றும் புதிதல்ல. இதுப்போலப் பல பெண்கள் தன்னை கண்ணிமைக்காமல் பார்ப்பது பழகிய ஒன்று தான். அதனால், அவளின் பார்வை அவன் மனதை தாக்கவில்லை. அவள் பார்த்துக்கொண்டே இருந்தாலும் கண்டும் காணாததைப் போல் மேசைமீது வைத்திருந்த மெனு கார்டை பார்த்துக்கொண்டிருந்தான். இதையறியாத பேதை, அவனின் கவனத்தை தன்பக்கம் திருப்ப,

“அப்பறம்…?” என்று பேச்சைத் தொடங்கிவைக்கும் எண்ணத்தில் பேசினாள்.

“அப்பறம் என்ன?” என்று மெல்லிய புன்னகை ஒன்றை சிந்தினான்.

“என் பேரு கேத்ரீன்…” எப்படி பேச்சைத் தொடங்குவது என்று தெரியாமல் அவள் பேசிவைக்க….

“அச்சோ எனக்கு இது தெரியாதே…!” என்று அவன் அதற்கும் புன்னகைத்து வைக்க… அதனைக் கேட்டவள்,

“நாட்டி பாய்…” என்று சிரித்தபடி அவன் கையில் லேசாக அடித்தாள்.

“இப்போ நான் எதுவும் சேட்டை பண்ணலையே! காமெடியும் பண்ணல. அப்பறம் ஏன் மா இப்படி சொல்லுற?” என்றவன் தன் கையிலிருந்த மெனு கார்டை மூடி வைத்துவிட்டு அவளை நிமிர்ந்துப் பார்த்தான். தன்னிடம் அவள் பேச்சுக் கொடுக்க எண்ணுகிறாள் என்று கண்டுக்கொண்ட ராஜீவ், அவளைக் கண்டு கரிசனமாகப் புன்னகைத்தான். அதற்குள் அவர்கள் மேசைக்கு சூப் வந்துவிட, தக்காளி சூப்பினை கேத்ரீன் எடுத்துக்கொண்டாள். ராஜீவ், தான் ஆர்டர் செய்த ஸ்வீட் கார்ன் சூப்பை வாங்கிக்கொண்டான். அதனைப் பார்த்த கேத்ரீன்,

“ஏன் ஸ்வீட் கார்ன் சூப் வாங்குறீங்க? தாக்காளி சூப் சாப்பிட்டு பாருங்க. அத விட வேற எந்த சூப்பும் நல்லா தெரியாது. சாப்பிட்டு பாருங்க. நான் உங்களோட ஸ்வீட் கார்ன் சூப் சாப்பிட்டுக்குறேன்.” என்று தன் சூப் கப்பினை ராஜீவின் புறம் நகர்த்தி வைத்தாள்.

“நான் ஆர்டர் பண்ணது உனக்கு வேணும்கறதுக்கு இப்படியொரு பிட்டா?” என்று சிரித்தபடி தன்னோட சூப் கப்பினை கேத்ரீன் புறம் தள்ளி வைத்தான். அதனைக் கேட்டுப் பதறியவளாகக் கேத்ரீன்,

“அச்சோ. நிஜமா நான் தக்காளி சூப்போட அருமை உங்களுக்குப் புரியணுங்கறதுக்காக தான் சொன்னேன்.” என்று அவள் பதட்டத்தில் தன் இருவிழி இமைகளையும் படபடவென வேகமாக அடித்துப்பார்த்தாள்.

“ஓ…” என்று கூறியபடி கீழே குனிந்து சிரித்தவன், “தக்காளி சூப்ப விட ஸ்வீட் கார்ன் சூப் தான் நல்லா இருக்கும். இந்தத் தடவை நீ இந்த ஸ்வீட் கார்ன் சூப்ப சாப்பிட்டுப் பாரு. அப்பறம் நீயெ சொல்லுவ ஸ்வீட் கார்ன் சூப் தான் பெஸ்ட்டுனு.” என்றபடி கேத்ரீன் புறம் தள்ளிவைத்திருந்த தனது சூப் கப்பில் ஒரு ஸ்பூன் வைத்தான். “குடிச்சுப் பாரு.” என்று சொன்னவன், அவளது தக்காளி சூப்பினை அருந்த ஆரம்பித்தான்.

முதலில் ராஜீவ் தந்த சூப்பினை குடிக்கத் தயங்கியவள், அவன் தன்னிடம் கொடுத்த காரணத்திற்காக மட்டுமே அதனை அருந்த ஆரம்பித்தாள். முதல் சிப்பிலேயே அவளுக்கு அதன் சுவை பிடித்துப்போக, அடுத்தது வேகவேகமாக அருந்தினாள். இதனைக் கவனித்த ராஜீவ்,

“தக்காளி சூப்ப விட, இது நல்லா இருக்கா?” என்று கேட்க… வீம்புக்காகவே அவள்,

“ஏதோ சுமார் தான். அதுக்காகலாம் தக்காளி சூப்ப விட இது மிஞ்சிருச்சுனு சொல்ல முடியாது.” சூப் அருந்தியபடியே கூறினாள்.

டின்னருடனான வெகுநேர உரையாடலுக்குப் பின்…

“வைட்டர்…!” தன் வலது கையை லேசாக உயர்த்தி உணவு பரிமாறுபவரை அழைத்தான் ராஜீவலோச்சனன். அவன் அழைப்பைக் கேட்டு அவர்கள் மேசைக்கு வந்த வைட்டர்,

“சொல்லுங்க சார்…” என்று பணிவாய் கேட்க…

“பில் போட்டுற சொல்லவா? இல்ல, ஃபைனல் டச்சா ஏதாவது கூல் ட்ரிங்க்ஸ் குடிக்குறியா?” என்று ராஜீவ் கேத்ரீனிடம் ஒருமையில் பேசுவதைக் கவனித்தவளின் மனம் இரக்கைக் கட்டிப் பறந்தது.

“நீங்க இந்த பீர், ரெட் வைன், ஒயிட் வைன்னு ஏதாவது ஆர்டர் பண்ணிக் குடிக்குறதுனா குடிங்க. நான், ப்ளூபெர்ரி மில்க்சேக் குடிச்சிக்குறேன்.” என்று கேத்ரீன் கூற… அதனை வேகமாக மறுத்தான் ராஜீவ்.

“நோ… நோ… நோ. வைன், பீர் லாம் குடிக்கமாட்டேன். ஒன்லி ஜூஸ் அப்பறம் மில்க்சேக். எனக்குச் சாக்லேட் மில்க்சேக் சொல்லப்போறேன்.” என்றவன் வைட்டரிடம் திரும்பி, “ஒரு ப்ளுபெர்ரி மில்க்சேக், ஒரு சாக்லேட் மில்க்சேக்.” என்று அவர்களிருவருக்கும் சேர்த்து ஆர்டர் செய்தான்.

வைட்டர் கிளம்பவும், கேத்ரீனைப் பார்த்த ராஜீவ் அதிர்ந்தான். ஏனென்றால் அவள் ராஜீவை முழுங்கும் அளவிற்குப் பார்த்து வைத்தாள். அவள் முகத்திற்கு அருகில் கைக்கொண்டு போய் லேசாகச் சொடுக்கிட்டதில், தன்னிலை வந்தவளிடம்,

“என்ன? அப்படியே நின்னுட்ட?” என்று ராஜீவ் கேட்டதிற்கு தன் தலையை இடம்வலமாக ஆட்டிவைத்தாள் அந்த இளம்பெண். அதற்கு ராஜீவ், “அட… என்னனாலும் சும்மா சொல்லு மா.” என்க…

“சிகெரெட் பிடிப்பீங்களா? என்று கேத்ரீன் கேட்கவும், அவள் பேச்சை மாற்றுகிறாள் என்றெண்ணிய ராஜீவ், விழுந்து விழுந்து சிரித்துவைத்தான்.

“ரொம்ப கேவலமா மழுப்புற நீ…”

“இல்ல பா. காரணமா தான் கேட்குறேன். சொல்லேன். சிகெரெட் பிடிப்பியா?” இம்முறை ஒருமை கேத்ரீனிடமிருந்து வந்தது. ஆனால் ராஜீவ் அதனைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அவள் கேட்ட கேள்விக்கு மட்டும் சிரிப்பை நிறுத்திவிட்டு பதிலளிக்கலானான்.

“சிகெரெட், பீர், வைன் எதுவும் தொடக்கூடமாட்டேன்.” என்று ராஜீவ் பதில் கூறவும், அவனது கண்களை ஒரு நிமிடம் ஆழ்ந்துப் பார்த்துவிட்டு மற்றுமொரு கேள்வியைத் தொடுத்தாள்.

“ஏன்?”

“ஏன்னு கேட்டா, என்ன சொல்லுறது…? நான் அதுல ஏதாவது ஒன்ன குடிச்சாலும் என்னைய நம்பி வர்ற பொண்ணுக்கு அது நல்லது இல்ல.” என்ற ராஜீவ்வின் பதில் அவள் இதயத்தை நேரடியாகத் தாக்கியது. மன்மதனின் அம்பு நம் இதயத்தில் பாய்ந்தால், காதலுணர்வு மலருமாம். அத்தகைய உணர்வினை கேத்ரீன் உணரப்பெற்றாள். ஏனெனில், அவன் கூறிய ‘என்னை நம்பி வரும் பெண்’ என்ற வார்த்தை தன்னைக் குறிப்பிட்டதாக ஒரு மாயையை தனக்கு தானே உருவாக்கிக் கொண்டாள்.

‘அவனை நம்பி வந்த பெண்ணா? இப்போ அவனை நம்பி இந்த ராத்திரி நேரம் சாப்பிட வெளிய வந்திருக்கிறது நான் தான். அப்போ அவன் என்னைய தான் சொல்லிருக்கான்… ராஸ்கல்! நேரடியா சொன்னா தான் என்னவாம்? ம்ம்ச்ச் ஓஓ…! ஒருவேளை, அவன் மேல எனக்குண்டான காதல நான் தான் முதல்ல வெளிப்படுத்தணும்னு நினைக்குறான் போல. படவா! சரி உன்னோட ஆசைய நான் கெடுக்கமாட்டேன். இன்னைக்கு ஹாஸ்ட்டல் போறதுக்குள்ள, என்னோட காதல்ல நான் உங்கிட்ட சொல்லிருவேன்.’ என்று மனதில் தனக்கு தானே பேசியவள், கண்களில் காதலோடு ராஜீவலோச்சனனைப் பார்த்தாள். ஆனால், அவனோ அதைப் பார்க்காமல் தனக்கு வந்த போன் காலில் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தான். தன் வலது கையைக் கைப்பேசிக்குக் கொடுத்துவிட்டு, இடக்கையை மேசைமீது வைத்திருந்தான். அதைக் காதலோடுப் பார்த்தவள், மெல்ல மெல்ல தன் இடக்கையை நகர்த்தி அவனது இடக்கையைத் தொட்டாள்.

தனக்கு வந்த அழைப்பில் மும்முரமாய் இருந்த ராஜீவினால் கேத்ரீனின் அந்த மெல்லிய ஸ்பரிசத்தை உணரமுடியவில்லை. ஆனால் கேத்ரீனோ, அவன் தனது ஸ்பரீசத்தை விரும்புகிறான் என்ற எண்ணத்தில், அவனது இடக்கையுடன் தன் கையைக் கோர்த்தாள்.

இம்முறை அதனைக் கவனித்தவனின் முகத்தில் அதுவரை குடிக்கொண்டிருந்த சிரிப்பு மறைந்தது. தனது இடப்பக்க புருவத்தை மட்டும் உயர்த்தியவன், யோசனையான பார்வை ஒன்றை தன் கரத்தைப் பற்றியிருந்த கேத்ரீனின் கரத்தைப் பார்த்து வைத்தான்.

அவள் பிடியிலிருந்து வெடுக்கென்று தன் கரத்தை எடுத்தவன், கண்களைச் சுருக்கி கேத்ரீனைப் பார்த்துவிட்டு, தனது அழைப்பினைத் துண்டித்தான்.

“நீ……..” ராஜீவ், கேத்ரீனிடம் ஏதோ கூற எத்தனிக்க… அதற்குள் கையில் மில்க்சேக்குகளுடன் வைட்டர் வந்தார். கேத்ரீனிடம், ப்ளுபெர்ரி மில்க்சேக்கை தந்தவன், தனக்கு சாக்லேட் மில்க்சேக்கினை எடுத்துக்கொண்டான்.

கேத்ரீனோ, வைட்டர் வந்துவிட்ட காரணத்தினாலும், தனிமையை விரும்புவதாலும் தான் ராஜீவ் தன் கரம் பிடியிலிருந்து வெளிவந்ததாக எண்ணிக்கொண்டாள்.

மில்க்சேக்குகளை குடித்துமுடித்தப் பின்னர், கைக்கடிகாரத்தைப் பார்த்த ராஜீவ்,

“சரி. கிளம்புவோம். மணி 9.20 ஆச்சு.” என்கவும்…

“இன்னும் கொஞ்ச நேரம் இருந்து ஏதாவது பேசிட்டு போகலாமே!” என்று கெஞ்சும் தொணியில் அவள் கேட்க… அதற்கு ராஜீவ்வோ,

“பத்து மணிக்கு மேல ஒரு பொண்ணு வெளியில இருக்குறது ஆபத்து. கிளம்புற வழியப் பாரு” என்றவன் தன் இருக்கையிலிருந்து எழும்ப…

“எனக்கு என்ன ஆபத்து வரப்போகுது? எங்கூட தான் ‘தெ கிரேட் பாக்ஸிங் சாம்பியன் ராஜீவலோச்சனன்’ இருக்காரே! அப்பறம் என்ன பயம்?” என்றவள் இருக்கையிலிருந்து எழுந்துக்கொண்டாள்.

“ஆமா. நான் பாக்ஸிங் சாம்பியன் தான். ஆனா, கடவுள் இல்ல. பாக்ஸிங், கராத்தே இதுக்குலாம் பேரு என்ன தெரியுமா? தற்காப்புக் கலை. அதாவது, ஆபத்து வர்ற சூழ்நிலைகள்ல, தன்னைக் காப்பாற்றிக்கொள்ள உதவும் கலைனு அர்த்தம். அந்தக் கலைய வச்சு, ஒருத்தர தான் காப்பாத்த முடியும். அது மட்டுமில்லாம, ஒருத்தர் ரெண்டு பேருன்னா, நான் அடிச்சு நொறுக்குவேன். இப்போலாம் ஒருத்தன் மட்டுமா வர்றான்? கும்பலா தானே வர்றானுங்க? என்னால எத்தன பேர சமாளிக்க முடியும்னு நினைக்குற? இந்தாப் பாருமா… நான் ஒன்னும் சினிமா ஹீரோ கிடையாது. பத்து இருபது பேர ஒத்தையா நின்னு அடிக்க. நான் மனுசன். மிஞ்சிப் போன அஞ்சுப்பேர அடிப்பேன். அவ்வளவு தான். ஸோ, நான் நூறு பேரு வந்தாலும் தனியா நின்னு அடிச்சுப் போடுவேங்கறதுப்போல ஏதாவது கற்பனை வச்சிருந்தா, தயவு செஞ்சு அதை விட்டுடு. வா பைக் நிறுத்திருக்குற இடத்துக்குப் போவோம்” என்று பொய்யான பேச்சுகளைப் பேசாமல், நிதர்சனத்தைக் கூறியவனின் வார்த்தையில் மேலும் ஈர்க்கப்பட்டாள் மங்கையவள்.

பைக்கினை நேரடியாக லேடீஸ் ஹாஸ்ட்டலில் நிறுத்தியவன்,

“ம்ம்… இறங்கு மா.” என்க, மெதுவாகப் பைக்கிலிருந்து இறங்கினாள். அவள் இறங்கவும், தனது பைக்கினை திருப்பியவனை தடுத்து நிறுத்தும்படியாக அவனை அழைத்தாள்.

“ராஜீவ்…!” என்று கேத்ரீன் கூப்பிடவும், பைக்கை நிறுத்தித் தன் தோள்பட்டை வழியே பின்பக்கமாக நின்றுக்கொண்டிருந்த கேத்ரீனைப் பார்த்து ‘என்ன?’ என்பது போல் தன் இருப்புருவங்களையும் மேலும் கீழுமாய் ஏற்றி இறக்கினான்.

“ஒன்னுமில்ல… உங்கிட்ட பேசணும்……” என்று இழுத்தவளிடம், தன் பைக்கினை அமத்திவிட்டு, அதன் ஸ்டாண்டினைப் போட்டுக்கொண்டு அப்படியே பைக் இருக்கையில் அமர்ந்தபடியே,

“ம்ம்… பேசு. என்ன விசயம்?” தன் இருக்கைகளையும் மார்புக்கு நேரே கட்டிக்கொண்டு வினவினான்.

“நான் வளருற சூழ்நிலையா? என்னனு தெரியல. ஆனால், நான் பார்த்தவரைக்கும் ஆண்கள்னாலே குடிப்பழக்கமோ, இல்ல சிகெரெட் பிடிக்கும் பழக்கமோ இல்லாத எந்த ஆம்பளையவும் நான் பார்த்ததே இல்ல. ஆனால், அப்படி எந்த ஒரு கெட்டப் பழக்கமும் இல்லாதவன இப்போ தான் பார்க்குறேன். எல்லாத்துக்கும் மேல, நீ என்னோட பாதுகாப்ப பத்தி யோசிக்குற. இதெல்லாம் வச்சு பார்க்கும்போது… உன்னைய…. நான்…..” என்று அவள் பேச்சை முடிக்கும் முன்னே ராஜீவ் பேசத் தொடங்கினான்.

“நீ என்னைய விரும்புறீயா?” என்று அவன் படக்கென்று கேட்டுவைக்க… அவனை ஒரு நிமிடம் கண்கள் விரியப் பார்த்தாள் கேத்ரீன். அதனைக் கண்டவன், ‘களுக்’ என்று சிரித்தான். “நீ இந்த வார்த்தைய சொல்லுவனு நம்ம ஹோட்டல்ல இருக்கும்போதே தெரியும் எனக்கு.” என்று அவன் கீழே குனிந்து புன்னகைக்க…

“உனக்கும் என்னைய பிடிக்கும்னு தெரியும் ராஜீவ்…” என்று முகம் சிவக்க பேசியவளின் முகத்தை ஒரு நிமிடம் கூர்ந்துப் பார்த்தான்.

“தப்பா புரிஞ்சுகிட்ட கேத்ரீன். நான் உன்னைய லவ் பண்ணல.” என்று தீர்க்கமான குரலில் ராஜீவ் கூறவும் அதிர்ந்தாள் அவள்.

“என்ன சொல்லுற ராஜீவ்?????!!!!!”

“ஆமா கேத்ரீன். நிஜமா நான் உன்னைய லவ் பண்ணல. லவ் ங்கறது, அதுவேற ஒரு உணர்வு. வாழ்க்கை முழுக்க டிராவல் பண்ண சொல்லும் அந்தக் காதல் உணர்வு. ஆனால், உங்கிட்ட அப்படியொரு உணர்வ நான் உணரல கேத்ரீன்.” என்றவனின் குரலில் இருந்த தீர்க்கத்தன்மையை உணர்ந்த அப்பேதையின் மனம் வலிக்க… அவளது கண்ணிலிருந்து கண்ணீர் துளிகள் எட்டிப்பார்த்தது.

தான் கண்ட கனவு, தான் கட்டிவைத்த கனவுக் கோட்டை நொடிப்பொழுதில் நொறுங்குவதை அந்த இளம் பெண்ணின் மனம் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பொது இடம் என்பதால், பொங்கி வந்த அழுகையை அடக்கிக்கொண்டாலும், கண்ணீர் துளிகளோ ‘விடுவேனா?’ என்பதுப் போல அவள் விருப்பத்தையும் மீறி வெளிவர ஆரம்பித்தது.

அதனைக் கண்ட ராஜீவ்விற்கோ பதற்றம் அதிகமாகியது.

“கேத்ரீன். தயவு செஞ்சு அழாத ப்ளீஸ். எனக்கு இது மட்டும் சொல்லு. உன்னைய விரும்புறேன்னு இன்னைக்கு சொன்னேனா?” என்று அவன் கேட்கவும், பொங்கிவந்த கண்ணீரை தனது மெல்லிய விரல்களால் துடைத்துவிட்டபடி பதிலளிக்கலானாள்.

“லவ் பண்ணுறனு வெளிப்படையா சொல்லலைனாலும், மறைமுகமா உனக்கு என்மேல உள்ள விருப்பத்த தெரிவிச்சன்னு நினச்சேன்…” கேத்ரீனின் குரலில் வலி தெரிந்தது.

“ஓ மை காட்…!! எந்த இடத்துல அப்படி நினச்சீங்க?” ராஜீவ்வின் வார்த்தைகளில் ஒருமைத் தன்மை நீங்கியிருப்பதை உணர்ந்த கேத்ரீனின் மனம் அழுது கூப்பாடிட்டது.

“உங்கள நம்பி வர்ற பொண்ணுக்காகச் சிகெரெட், குடினு இல்லாம இருப்பீங்கனு அப்போ சொன்னீங்கள்ல? அந்த ‘உங்கள நம்பி வர்ற பொண்ணு’ நான் தான்னு நம்பினேன்.” தனக்கு அவன்மீதான உரிமை போய்விட்டதை உணர்ந்தவள், தன் வார்த்தைகளில், அவனை ஒருமையில் அழைப்பதைத் தவிர்த்தாள்.

“ச்சே…!! நான் என் வருங்கால மனைவியச் சொன்னேன். அவள் தானே என்னைய நம்பி வர்ற பொண்ணு?” பைக்கிலிருந்து கீழிறங்கி நின்ற ராஜீவ்வின் கால்கள் பதட்டத்தில் முன்னும் பின்னுமாய் நடந்தன.

“ஆனால் என் நிலைமைல இருந்து யோசிச்சுப் பாருங்க. நான் தானே இன்னைக்கு உங்கள் ஒருத்தர மட்டும் நம்பி இந்த இரவு நேரத்துல ஹோட்டலுக்குலாம் வந்தேன்? அதுவும் கல்யாணத்துக்கு முன்னாடி…” என்ற கேத்ரீனின் குரல் அழுகையில் நடுங்கி ஒலித்தது.

“ஆமா தான். நீங்க இன்னைக்கு என்னைய நம்பி வந்தீங்க தான். ஆனா, என்னைய அப்படி நம்புன பொண்ணுங்க நிறையா… என்னைய நம்புனாங்கங்கற ஒரே காரணத்துக்காகலாம் நான் அவங்க எல்லோரையும் கல்யாணம் பண்ணிக்க முடியுமா? நான் அப்போது என்னோட வருங்கால மனைவியத் தான் சொன்னேன். அவள தான் நான் விரும்பிக் கல்யாணம் பண்ணியிருப்பேன். அவள் தான் என்னைய நம்பி வர்ற பொண்ணு. அந்த நம்பிக்க வேற, நீங்கச் சொல்லுற நம்பிக்க வேற. நீங்கச் சொல்லுற அந்த நம்பிக்கைய என் ஃப்ரெண்ட் சூர்யா கூட என்மேல வைப்பான். அதுக்காக, அவன கல்யாணம் பண்ணிக்க முடியுமா? ஒரு மனைவி தன்னோட புருசன் மேல வச்சிருக்குற நம்பிக்க வேற. உங்களோட நம்பிக்க வேற.” என்று ராஜீவ் பேசப் பேசக் கேத்ரீனிற்கு அழுகையை அடக்கமுடியாமல் பொங்கி அழ ஆரம்பித்தாள். “ப்ளீஸ். அழாதீங்க. நான் இன்னைக்கு உங்கள டின்னருக்கு கூப்பிட்டிருக்கக் கூடாது போல… மினிஸ்டர் பொண்ணு. ஜாலியா எடுத்துப்பீங்க… லவ்வு கிவ்வுனு வந்து நின்னுற மாட்டீங்கனு நினச்சேன். என் கணிப்பு பொய்யாகிருச்சு.” என்றவன் தன் பைக்கில் ஏறி அமர்ந்து, அதனை உயிர்பித்தவன், ஹெல்மெட்டினை மாட்டும் முன் கேத்ரீனைப் பார்த்தான். “நீங்க மட்டும் லவ்வு அப்படி இப்படினு சொல்லாம இருந்திருந்தால், இன்னைல இருந்து நமக்குள்ள ஒரு அழகான நட்பு இருந்திருக்கும். தேவையில்லாத உணர்வுகளுக்கு இடம் கொடுத்துட்டு, ஒரு நட்ப இழந்துட்டீங்க. தயவு செஞ்சு இந்தக் காதல் வச்சிருக்கேன் மண்ணாங்கட்டி வச்சிருக்கேன்னுலாம் சொல்லிகிட்டு எங்கிட்ட வந்திராதீங்க. உங்களுக்குப் புண்ணியமா போகும்.” என்றபடி தன் தலைக்கு மேல் கைக்கூப்பி வணங்கிவிட்டு தன் யமஹா ஆர்-ஒன்-ஃபை ஐ உயிர்பித்துவிட்டு, காற்றாகப் பறந்தான்.

அவன் செல்வதையே கண்களில் நீர் வழியப் பார்த்த கேத்ரீனின் மனம் வலித்தது. அவளையரியாமல், அவள் இதயத்திலிருந்து ஒரு ஒளி வடிவானது மேலே பறந்துச் சென்று மறைந்தது.

அந்த ஒளி என்ன? அவ்வொளி எங்குச் சென்று மறைந்தது? இதனால் ராஜீவலோச்சனின் வாழ்வில் ஏதேனும் மாற்றங்கள் நிகழுமா?

அடுத்தடுத்த அத்தியாயங்களில் பார்ப்போம்...


**********************​
preview (6).jpg
 

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,612
668
113
44
Ariyalur
அருமை அருமை சகோ ♥️♥️♥️♥️♥️♥️♥️
ராஜிவ் கொள்கைகள் எல்லாம் சரிதான் ஆனால் எல்லா பெண்களும் ஒரே மாதிரி எஞ்சாயிங் type ன்னு நினைச்சு friendship வச்சுக்கிடுறது யோசிக்க வேண்டிய விஷயம். ராஜிவ் உணர்வானா 🙄🙄🙄🙄🙄🙄🙄