• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உயிர் கேட்கும் அமுதம் நீயடா - 27

kkp11

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 29, 2023
78
116
33
Tamil nadu

நிதிஷாவின் திருமணம் அபய் ஸ்ரீவத்ஸன் வீட்டில் இருந்து பதினைந்து நிமிட தூரத்தில் இருக்கும் திருமண மண்டப்பத்தில் ஏற்பாடு செய்திருந்ததால் ரிசெப்ஷன் முடித்து நலங்கு வைத்த பின்னர் வீடு திரும்பிவிட்டாள்.​

தனலட்சுமி அவளை இரவு உடனிருக்க சொன்ன போதும், "மணி இப்பவே பன்னிரண்டு ஆக போகுதும்மா இன்னும் நாலு மணி நேரத்துல வந்துடுவேன்.." என்று தங்காது வீடு திரும்பிவிட்டாள்.​

"ஏன் நயனி அதுதான் அத்தை அவ்ளோ தூரம் சொன்னாங்களே மண்டபத்துல உனக்கு என்ன பிரச்சனை இருந்திட போகுது அவங்களோடு இருந்திருக்கலாமே.."​

"எல்லா நேரமும் ஒரே மாதிரி இருக்கும்னு சொல்ல முடியாது அபய். என் தங்கச்சி கல்யாணம் நல்ல படியா முடியனும் அவ்ளோதான் வேணும் எனக்கு.. மத்ததெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்.." என்றவள் அடுத்தநாள் அதிகாலையே கணவனுடன் மண்டபத்திற்கு சென்று தங்கைக்கு உதவ அவள் அறைக்கு சென்றுவிட்டாள்.​

"உட்காருங்க மாப்பிள்ளை, என்ன சாப்பிடுறீங்க?" என்று சேதுராமன் அபய் ஸ்ரீவத்ஸனை விழுந்து விழுந்து கவனிக்க அவனுக்கோ உள்ளுக்குள் பற்றி கொண்டு வந்தது. ஆனாலும் நயனி சொன்னது போல நிதிஷாவின் திருமணத்தை கருத்தில் கொண்டு அமைதி காத்தான்.​

"கெட்டிமேளம் கெட்டிமேளம்!!" என்றதில் மங்கள வாத்தியங்கள் முழங்க நிதிஷாவின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு அதை தொடர்ந்த திருமண சடங்குகள் நல்லபடியாக முடிந்திருக்க, அனைவரும் வீடு வந்து சேர்ந்தனர்.​

புதுமண தம்பதியருக்கு தனலட்சுமியின் வீட்டில் பால் பழம் கொடுக்கப்பட்டு அவர்களை மணமகனின் வீட்டிற்கு அழைத்து சென்றனர்.​

பொதுவாகவே மணப்பெண்ணின் வீட்டில் தான் அன்றைய இரவு சடங்கு இருக்கும் ஆனால் தனலட்சுமி தான் மணமகனின் வீட்டிலேயே ஏற்பாடு செய்ய சொல்லி சம்பந்தி அம்மாவிடம் கேட்டிருந்தார்.​

"தப்பா எடுத்துக்காதீங்க சம்பந்தியம்மா.."​

"அட உங்களுக்கே ஆட்சேபனை இல்லாதப்போ எங்க பையன் வாழ்க்கை எங்க வீட்ல தொடங்குறதுல எங்களுக்கு என்ன இருக்க போகுது?" என்று அவரும் பெருந்தன்மையாகவே ஒப்புக்கொண்டார்.​

பெண்ணை நல்லபடியாக புகுந்து வீட்டுக்கு அனுப்பிய தனலட்சுமி, "மறுவீட்டுக்கு எப்போ போறதுன்னு நேரம் பார்த்துட்டியா?" என்றார் அவளின் சித்தப்பா.​

ஆனால் நிதிஷாவை நேரே மணமகனின் வீட்டிற்கு அனுப்பியதில் அதிருப்தி கொண்ட தனலட்சுமியின் சின்ன மாமனார், "இதெல்லாம் நம்ம குடும்ப வழக்கமே கிடையாது லட்சுமி.. இப்படி தான் எங்களை எதுவும் கேட்காம உன் இஷ்டத்துக்கு முடிவு எடுப்பியா?" என்றார்.​

"எடுக்க வேண்டிய அவசியம் வந்ததால தான் எடுக்க வேண்டியதா போச்சு மாமா.." என்றார்.​

"அப்படியென்ன அவசியம்?" என்று அவர் கேட்கும் போதே, நண்பர்களோடு தீர்த்த யாத்திரைக்கு செல்வதற்கு தயாராகி கொண்டிருந்த சேதுராமன் பணம் குறையவும் மனைவியை தேடி வந்தார்.​

அருகே யார் இருக்கிறார்கள் என்பதை கூட பாராது, "ஐந்தாயிரம் கொடுடி" என்றார் எடுத்ததுமே..​

"எதற்கு?"​

"என் பொண்ணு கல்யாணம் நல்லபடியா முடிஞ்சதுக்கு ஃபிரண்ட்ஸ்க்கு பார்ட்டி கொடுக்கணும்" என்றார்.​

"அதற்கு முன்னாடி நான் ஒன்று கொடுக்கணும்.." என்றவர் மேஜையில் வைத்திருந்த விவாகரத்து பத்திரத்தை கொண்டு வந்து அவரிடம் நீட்டினார்.​

"என்னடி இது?!"​

"விவாகரத்து பத்திரம்!!"​

"விவாகரத்தா?"​

"என்னம்மா சொல்ற... யாருக்கு?" என்றார் அவரின் சித்தப்பா புரியாமல்.​

"என்னோட விவாகரத்து பத்திரம் தான் சித்தப்பா இது! இன்னையோட இந்தாளு கூட வாழ்ந்த நரகத்துல இருந்து விடுதலையாக முடிவு பண்ணியிருக்கேன்..." என்றவரை ஓங்கி அறைந்தார் சேதுராமன்.​

"ஏப்பா சேது பேசிட்டு இருக்கிறப்பவே அடிக்கிறது என்ன பழக்கம்? நீங்க முன்னாடியே எங்க பெண்ணை அடிப்பியா?" என்றார் தனலட்சுமியின் சித்தப்பா.​

"என்ன நெஞ்சழுத்தம் இருந்தா விவாகரத்து பண்றேன்னு சொல்லுவா?" என்று சேது கேட்டுக்கொண்டிருந்த போது தான் நிதிஷாவை புகுந்த வீட்டில் விட்டுவிட்டு திரும்பியிருந்தனர் அபய் மற்றும் நயனிகா.​

அவளை கண்டதுமே, "ஏய் இத்தனை நாள் இல்லாம எங்கிருந்து கத்துகிட்டு வந்த இதையெல்லாம்? என்ன இவ சொல்லிக் கொடுத்தாளா?" என்ற நயனி புறம் சேது திரும்பவும் அவர் சட்டையை பிடித்து இழுத்த தனலட்சுமி,​

"இன்னொரு அடி என் பொண்ணு பக்கம் எடுத்து வச்ச உன்னை கொன்னுடுவேன்டா" என்றார் என்றுமில்லாத ஆவேசத்தோடு..​

அதில் நிலை தடுமாறிய சேதுராமன் பின்னால் சென்று விழ வீட்டில் குழுமி இருந்த உறவினர்கள் அனைவரும் பதறிப் போயினர்.​

"என்னம்மா தனா புருஷனை அடிக்கிறது எல்லாம் என்ன பழக்கம்? இப்ப தான் பொண்ண கட்டி கொடுத்து இருக்கீங்க இந்நேரத்துல இதெல்லாம் சம்பந்தி வீட்டாருக்கு தெரிஞ்சா எவ்ளோ அசிங்கம்?" என்று கண்டித்தார் வயதில் மூத்தவர்.​

"இதோ பாருமா லட்சுமி குடும்பம்னா ஆயிரம் இருக்கும் இப்படி சொந்த பந்தம் மாப்பிள்ளை எல்லாம் வச்சிட்டு இதெல்லாம் பேசுறது நல்லாவா இருக்கு" என்றார் அவரின் அத்தை.​

"இப்போ தான் அத்தை பேசணும் அதுவும் உங்க எல்லாரையும் வச்சுகிட்டு தான் எனக்கு பேசணும்.. இந்தாளு பண்ணின கொடுமையை எல்லாம் இப்போவாவது மனசு விட்டு சொல்லணும்.."​

"ஏம்மா இந்த வயசுல இந்த பேச்செல்லாம் தேவையா?! புருஷன் பொண்டாட்டிக்குள்ள அடிச்சிக்கிறதும் புடிச்சிக்கிறதும் சகஜம்.. இதுக்கெல்லாம் விவாகரத்துன்னு போனா எப்படி?"​

"நீங்க நினைக்கிற மாதிரி எதுவுமே சாதாரணம் கிடையாது மாமா.."​

"ஏம்மா காலம் போன காலத்துல இதெல்லாம் தேவையா? போம்மா போய் பொழப்பை பாரு.."​

"இந்த முடிவை நான் 25 வருஷத்துக்கு முன்னாடியே எடுத்து இருக்கனும் ஆனா என்ன செய்ய?! இத்தனை வருஷமும் ஊர் உலகத்துக்கு சொந்த பந்தத்துக்கு பயந்து வாழ்க்கையை நெட்டி தள்ளின எனக்கு இப்போ தான் இந்த தைரியம் பிறந்திருக்கு.."​

"இத்தனை வருஷமில்லாமல் இப்போ என்ன புதுசா?"​

"புதுசு தான்! உங்க முன்னாடி நிற்கிற தனலட்சுமி எனக்குமே புதுசு தான். ஆனா இந்த தைரியத்தை கொடுத்தது என் ரெண்டு பொண்ணுங்களும் அவங்களுக்கு கிடைச்சிருக்க கணவர்களும் அவங்க குடும்பமும்.."​

"என்ன சொல்ற?"​

"ஆமா த்தை இப்ப எனக்கு கிடைச்சிருக்கிற சம்பந்திங்க நான் கனவில் கூட நினைச்சு பார்க்காத அளவுக்கு நல்ல மனுஷங்க.. என் பெரிய பொண்ணுக்கு ஊரே தப்பான பேசின போதும் அவளை எங்கேயும் யார்கிட்டயும் விட்டுக் கொடுக்காத நல்லா புரிஞ்சிருக்க கூடிய கண்ணுக்கு நிறைவான புருஷன்"​

"அதே மாதிரி என்னோட சின்ன பொண்ணுக்கு கிடைச்ச மாப்பிள்ளையும் சம்மந்தி வீட்டாரும் தங்கமானவங்க.. என் நிலையை நான் சொன்ன போது அதை சரியா புரிஞ்சுகிட்டாங்க.."​

"என்னது?! எங்களுக்கே இப்போ தான் தெரியும் ஆனா முன்கூட்டியே அவங்க கிட்ட சொன்னியா?" என்ற சேதுவின் பங்காளிக்கு தங்களை முன் வைக்கவில்லையே என்று அப்படி ஒரு கோபம்.​

"ஆமா, எப்போ என் சின்ன பொண்ணு நிச்சயத்துல என் பெரிய பொண்ணுக்காக சம்பந்தி பேசினாரோ அப்பவே அவர்கிட்ட பேசிடனும்னு முடிவு பண்ணி நான் எடுத்திருக்கும் முடிவை பற்றியும் பேசிட்டேன்.. அவங்களுக்கு இதுல முழு சம்மதம்.."​

"ஏய்! நான் எல்லாம் உன்னால வாழ்ந்திட முடியுமா?" என்றார் சேதுராமன் ஆணவத்தோடு.​

"கண்டிப்பா முடியும், என்னமோ இத்தனை வருஷம் நீ தான் எங்களை தூக்கி சுமந்து சோறு போட்ட மாதிரி பேசுற.. இத்தனை வருஷமா என் வீட்ல எங்க சொத்தை எல்லாத்தையும் அழிச்சவன் தான நீ!"​

"என் பொண்ணு பேருல எழுதி வச்சதையும் மாத்தி கொடுக்க சொல்லி மொத்தத்தையும் வித்தவன் தான்டா நீ! இத்தனை வருஷம் என் பொண்ணுங்களை நல்லவன் கையில புடிச்சு கொடுத்து கரை ஏத்துறதுக்காக தான் எல்லா அட்டூழியத்தையும் பொறுத்துக்கிட்டு இருந்தேன்.. இதற்கு மேல பொறுக்க முடியாது.."​

"ஏம்மா தனம் பொண்ணுங்களை கட்டி கொடுத்துட்டு பேசற பேச்சா இது?! நாளைக்கு அவங்க எங்க போய் உறவாடுவாங்க? இன்னும் ஒரு புள்ளைக்கு கல்யாணமாகலை அதுக்குள்ளே பொம்பளைக்கு ஏன் இப்படி புத்தி போகுதுன்னு தெரியலையே.." என்றார் சேதுராமனின் உறவினர் ஒருவர்.​

"மைன்ட் யுவர் டங்!! அவங்க கடந்து வந்த வலிக்கு அவங்க தான் மருந்தை முடிவு பண்ணனும் உங்களுகெல்லாம் என்ன தெரியும்னு இஷ்டத்துக்கு விமர்சிக்கறீங்க?" என்றான் அபய்.​

அதேநேரம் அவனருகே அமர்ந்து நடப்பதை அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தாள் நயனிகா.இப்போது அவள் பேசினால் தேவையில்லாமல் பேச்சு வளரும் என்பது புரிந்ததாலேயே அமைதி காத்தாள்.​

"..."​

"அன்னைக்கு நான் விலகிப் போயிருந்தா ஊர் என்ன பேசும் உறவு என்ன பேசும் அதற்கு பயந்து தான் தினம் தினம் அடி உதை எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டேன். போதும் சித்தப்பா என்னால் இனி இந்த ஆளாட இன்னமும் சகிச்சிட்டு இருக்க முடியாது"​

"என்னமா பேசுற? இந்த வயசுல போயிட்டு விவாகரத்துலாம் ஒத்து வருமா?"​

"அதுக்காக காலம் முழுக்க இவன் கிட்ட இருந்து அடிபட்டு சாக சொல்றீங்களா?" என்றார் கோபத்தோடு.​

"அப்படி நான் மட்டும் அடியும் மிதியும் படறதா இருந்தாலும் இவனை கட்டிகிட்ட பாவத்துக்கு பொறுத்து போயிருந்திருப்பேன் ஆனா இந்த கேடு கெட்ட அயோக்கியனால இத்தனை வருஷம் என் மகளை நான் பிரிஞ்சிருந்தேன்"​

"...."​

"நான் பெத்த பொண்ணு! முதல் முதல்ல எனக்கு அம்மா என்கிற அந்தஸ்த்தை கொடுத்தவ அவ வீட்டுக்கே யாரோ மாதிரி வந்து போற அளவுக்கு தான் இத்தனை வருஷமும் சூழ்நிலை இருந்திருக்கு"​

"உன் பொண்ணு வராம போனதுக்கு சேது என்னம்மா செய்ய முடியும்?"​

"அவ வராமல் போனதுக்கே இந்தாளு தான் காரணம். இத்தனை வருஷமா இவன் திருந்துவான்னு நினைச்சேன் ஆனா இவன் மனுஷனே கிடையாது.. என் பொண்ண அவன் பொண்ணு மாதிரி பார்த்துப்பான்னு நினைச்சேன்.."​

"ஆனா இந்த அய்யோக்கியன் என் பொண்ணையே தப்பா பார்த்தவன் அவகிட்ட தப்பா நடக்க முயற்சி பண்ணினவன்.. இனியும் அவனை எப்படி பொறுக்க சொல்றீங்க?" என்று கண்ணீரோடு சொல்ல,​

"என்னம்மா இது இப்படி பேசுற?" என்றார் சேதுவின் பங்காளி..​

"இதெல்லாம் என் பொண்ணுக்கு தெரிஞ்சா உன்னை தான்டி பேசுவா.. நீயெல்லாம் ஒரு தாயா?"​

"இந்த முடிவை என் பசங்க மூன்று பேரு கிட்டயும் கலந்துகிட்டு தான் எடுத்தேன். உன்னை உன்னோட யோக்கிதையை என் பொண்ணு கிட்ட முழுசா சொல்லிட்டேன். அவளுக்கு உன்னை பார்க்க கூட விருப்பமே இல்லை.. உன்னோட வாழறதுக்கு தனியா இருக்கிறது மேலன்னு சொல்லி தாராளமா விவாகரத்து வாங்குமா" என்று சொல்லிவிட்டாள் என்றதில் சேதுவின் முகத்தில் ஈயாடவில்லை.​

அப்போதுதான் சேதுராமனுக்கு கடந்த சில நாட்களாக மகள் சில நாட்களாகவே தன்னிடம் இருந்து ஒதுங்கி சென்றது நினைவில் வந்தது.​

"ஓ அப்போ விலகிப் போக நீ தான் காரணமா?" என்றதற்கு தலையசைத்து ஏற்றுக்கொண்டார்.​

"சேது ஏதோ சிகரெட், தண்ணி, சூதுன்னு முன்ன பின்ன இருக்கலாம் ஆனா இப்படி உன் பொண்ணு மேல கை வச்சான்னு சொல்றதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு" என்று வக்காலத்து வாங்கிக் கொண்டு வந்தார் சேதுராமனின் மாமா.​

"தனலட்சுமி வாய் இருக்கு என்று வார்த்தையை விடாதே! என்ன இருந்தாலும் உன் புருஷன் நீ இப்படி பேசலாமா? அதுவும் மற்றவர்கள் இருக்க" என்றதில் அவருக்கு உள்ளுக்குள் காந்தியது.​

"பொய் சொல்லணும் என்ற அவசியம் எனக்கு இல்லை சித்தி"​

"அப்போ இத்தனை வருஷமா அமைதியா இருந்துட்டு இப்போ எதுக்கு இந்த பேச்சை எடுத்துட்டு வர?"​

"இத்தனை வருஷமா இந்த அயோக்கியன் பண்ணின கொடுமைகள் எல்லாத்தையும் உள்ளுக்குள்ள போட்டு புதைச்சுகிட்டு இருந்ததுக்கு காரணமே என் இரண்டு பொண்ணுங்கள நல்லபடியா கரையேத்தனும் என்பதற்காக தான்..."​

"விவாகரத்து முன்னாடியே கொடுத்து இருந்தா அதுக்கப்புறம் என் பொண்ணுங்களுக்கு மாப்பிள்ளை தேடி இருந்திருந்தா கல்யாணம் ஆகி இருக்கும் என்று நினைக்கிறீர்களா?"​

"கண்டிப்பாக இல்லை!! இன்னும் நாம் அப்படிப்பட்ட சமூகத்தில் தான் இருக்கோம் நாளைக்கு என் பொண்ணுங்க கல்யாணத்தில் அப்பா எங்க? என்ற கேள்வி வந்துட கூடாது என்ற பயத்தில் தான் இந்த முடிவை ஒத்தி போட்டுட்டு வந்தேன்.."​

"இப்போ என் கடமையை முடிச்சுட்டேன். அப்பன் இல்லாம பொம்பளை பிள்ளைகளுக்கு கல்யாணம் பண்றது தான் கஷ்டம் ஆம்பளை புள்ளைக்கு அப்படி எதுவும் இல்லை இனி யாருக்காக நான் தயங்கணும்?!"​

"இதோ இப்போ சொல்லி கூட நீங்க யாரும் நம்ப தயாரா இல்லையே அன்னைக்கு சொல்லி இருந்தா மட்டும் நம்பியிருக்கவா போறீங்க?​

"இவன் குடிச்சுட்டு என்னை போட்டு அடிக்கிறது மட்டுமில்லாம வீட்டுலையே வாந்தி எடுத்து வச்சு இல்லாத அசிங்கம் பண்ணுவான் அதையெல்லாம் இனி என் மாப்பிள்ளைகள் பேரன் பேத்தி அனுபவிக்கனும் என்று என்ன இருக்க?!. என் கஷ்டம் என்னோடு போகட்டும் இனியும் இவனுக்கு சேவகம் செய்யற எண்ணமில்லை..."​

"இந்தாளுக்கு ஒருமுறை சுடு தண்ணி ஊத்திடுச்சுன்னு ஹாஸ்பிட்டல்ல சேர்த்தது உங்களுக்கெல்லாம் நியாபகம் இருக்கு தானே!"​

"அதுக்கு காரணம் என் பொண்ணு. அவ தனியா இருந்தப்போ இவன் தப்பா நடக்க பார்த்ததை பொறுக்க முடியாம தான் கொதிக்கிற தண்ணியை அவன் மேல ஊத்தினா எங்கே இவனை இல்லைன்னு சொல்ல சொல்லுங்க பார்க்கலாம்.." என்றதில் சேதுராமனால் முகத்தை நிமிர்த்த முடியவில்லை.​

"இத்தனை வருஷம் என் பொண்ணு பட்டதெல்லாம் போதும் என்னை விட்டு விலகி இருந்ததெல்லாம் போதும். இனியும் மற்ற ரெண்டு பேருக்காக அவளை நான் கஷ்டபடுத்தினா மத்த பசங்களே என்னை மன்னிக்க மாட்டாங்க.."​

"நான் இந்த வீட்ல இருக்கிற வரை என் பொண்ணு உரிமையோடு இங்கு வந்து போக மாட்டா.. எனக்கு அம்மாங்கிற அந்தஸ்த்தை கொடுத்தவளுக்கு நான் நல்ல அம்மாவா நடந்துக்கல இனியாவது நடந்துக்க நினைக்கிறேன் புரிஞ்சுக்கோங்க.."​

"ஏய் என்னடி சீன் போடுறியா?" என்று தனலக்ஷ்மியின் தலையை முடியை பிடித்த சேதுராமன் அவரை அடிக்கும் முன் அபய் அடித்த அடியில் சுவரில் இடித்துக்கொண்டு தள்ளாடி விழுந்தான்.​

"இனியும் உன்னை மாதிரி ஆளை எல்லாம் வெளியே விட்டு வைக்கிறது ஆபத்து.." என்று எச்சரித்தவனின் முன்னே சென்று நின்ற தனலட்சுமி,​

"மாப்பிள்ளை உங்களுக்கு இதுல ஏதாவது கஷ்டமா?"என்றார்.​

"அத்தை இதுக்கு மேலயும் நீங்க யாருக்கும் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை கிளம்புங்க நம்ம வீட்டுக்கு போகலாம்.." என்றான்.​

அதேநேரம் வீட்டு வாசலில் போலீஸ் ஜீப் வந்து நின்றது.​

'என்ன நடக்கிறது?' என்று புரியாமல் சேதுராமன் பார்த்துக்கொண்டிருக்கும் போதே உள்ளே வந்த போலீசார் அபய் கொடுத்த புகாரின் பேரில் சேதுராமனை கைது செய்து அழைத்து சென்றனர்.​

 
Last edited:

Indhumathy

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 8, 2021
102
39
43
Madurai
சூப்பர்.... தனலட்சுமி நல்ல முடிவு 👌