அபய் ஸ்ரீவத்ஸனும் சுதர்ஷனும் நடந்ததை சொல்லி முடிக்க, "இந்த விஷயம் எல்லாம் உங்களுக்கு எப்படி தெரிய வந்தது?"
"அந்த ராஜனுடைய காதலி திவ்யா மூலமாக..."
"அந்த பொண்ணு தானே அன்னைக்கு கிளாஸ்ரூம் வெளியில வேவு பார்த்து அவனுக்கு துணை போனது என்று சொன்னீங்க"
"ஆமா அந்த பொண்ணு தான்! ரீசென்ட்டா நயனியை பார்த்து எல்லா விஷயத்தையும் சொல்லி இருக்கா.."
"எப்படி திடீர்னு இந்த மாற்றம்?"
"அந்த பொண்ணு இவனை பற்றி சரியா தெரியாம காதலிச்சு தொலைச்சிருக்கா.. இவன் வலையில சிக்கி போதைக்கு அடிமையானது மட்டுமில்லாமல் அவன் மிரட்டலுக்கு பயந்து அவன் கூட இருந்து இருக்கா, அதை எல்லாம் வீடியோ எடுத்து வச்சு மிரட்டறவன் அவளை தன்னுடைய காரியத்துக்கு யூஸ் பண்ணிக்கிறான்.."
"அந்த பொண்ணு ஏன் கம்ப்ளைன்ட் கொடுக்கலை?"
"ஸார் அவன் பணக்கார வீட்டு பையன்! அந்த பொண்ணு அவனுக்கு எதிராக போனா நிச்சயமா அவளோட வீடியோஸ் போட்டோக்களை சோசியல் மீடியால போட்டுடுவான்னு பயம்"
"அதோடு அந்த பொண்ணுக்கு ரெண்டு தங்கச்சி இருக்காங்க. கொஞ்சம் ஃபுவர் ஃபேமிலி.. அதனால அவன் செய்யற அக்கிரமத்தை பொறுத்துட்டு போயிடுறா.. அவளால என்னைக்குமே அவனை தைரியமா எதிர்க்க முடியாது.."
"மச்சான் இப்ப கூட நயனி மேல இருக்குற மரியாதையாலயும் பாசத்துலயும் அவகிட்ட சொன்னவ இந்த விஷயத்தை யாருக்கும் தெரியாமல் பார்த்துக்கோங்க என்று சொல்லி இருக்கா.."
"அதுவும் இவதான் இந்த விஷயத்தை சொன்னான்னு தெரிஞ்சதுன்னா நிச்சயமா அவன் அவளை என்ன செய்யவும் தயங்க மாட்டான்னு அந்த பொண்ணு ரொம்ப பயப்படுற டா.. அதனால அந்த பொண்ணு பேரு எடுக்காம உண்மையை எல்லாம் அவன் மூலமாக வெளிக்கொண்டு வர வைக்கணும்.."
"சரி நீங்க அவன் கிட்ட பேசி பார்த்தீங்களா? இந்த விஷயம் நடந்து எவ்வளவு நாள் ஆகும்"
"ஒரு ரெண்டு வாரத்து கிட்ட இருக்கும் ஸார்" என்று சுதர்ஷன் அதற்கு பதில் அளித்தான்.
"அப்பவே ஏன் அபய் எந்த ஸ்டெப்ஸ்ஸும் எடுக்கல.. இவ்வளவு நாள் கழிச்சு வந்திருக்கீங்க?"
"நான் ஊர்ல இல்ல டா இப்பதான் வந்தேன்.."
"யாருமே உனக்கு விஷயத்தை சொல்லலையா எந்த ஊருக்கு போயிருந்தா என்னடா உடனே வந்திருக்க வேண்டியது தானே" என்றதும் சிறு குற்ற உணர்வோடு நண்பனை பார்த்த அபய்,
"இல்ல மச்சான் நான் ரெண்டு வருஷமாவே இந்தியால இல்ல" என்றான்.
"இரண்டு வருஷமா?! ஏன்டா உங்களுக்கு கல்யாணம் ஆகி எத்தனை வருஷம் ஆகுது?"
"ரெண்டு வருஷம்.."
"எத்தனை நாள் நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா இருந்தீங்க?" என்றதற்கு அவனால் பதிலளிக்க முடியாமல் போக அமைதியாக அமர்ந்திருந்தான்.
"சொல்லு அபய். கல்யாணமாகி ரெண்டு வருஷம் தான் ஆகுதுன்னு சொல்ற ஆனா ரெண்டு வருஷமா ஊர்ல இல்லைன்னு சொல்ற என்னடா நடக்குது?!"
"மச்சான் நான் சஞ்சுவை லவ் பண்ணினது உனக்கு தெரியும் இல்ல?"
"ஆமா ஆனா சஞ்சு எங்கே போனாங்கன்னு தெரியலைன்னு சொல்லி என்னையும் தேடி சொல்லியிருந்தியே டா.. நானும் என்னோட சர்க்கில்ல முயற்சி பண்ணி பார்த்துட்டு சொன்னேனே.. அதுக்கப்புறம் சென்னைக்கு ட்ரான்ஸ்பர் வந்துட்டதால பாலோ பண்ண முடியலை"
"ஆமா அதுக்கு அப்புறமா தான் என்னுடைய கல்யாணம் நடந்தது. கிட்டத்தட்ட அது ஒரு கட்டாய கல்யாணம் தான் எங்கப்பா என்னை மிரட்டி தான் கல்யானத்தை பண்ணி வச்சார்.."
"சரி இருந்துட்டு போகட்டும். அதுக்கும் நீ ரெண்டு வருஷம் இல்லாம போறதுக்கு என்ன சம்பந்தம்?"
"என்னால சஞ்சுவை மறக்க முடியல நான் கல்யாணம் பண்ணி இருக்க நயனி சஞ்சுவோட பெஸ்ட் ஃபிரெண்ட்.. ஸோ நயனி எப்படி சம்மதிக்கலாம் என்று கோபம் அதோடு எப்படியாவது சஞ்சுவை தேடி கூட்டிட்டு வந்துட முடியும் என்று தான் கிளம்பிட்டேன்"
"என்ன முட்டாள் தனம் அபய் இது?! கல்யாணத்திற்கு பிறகு ஒன்னு இதுதான் வாழ்க்கை என்று ஏத்துக்கிட்டு நயனியோடு வாழ முயற்சி பண்ணி இருக்கணும் இல்லை உன்னால நிச்சயமா சஞ்சுவ மறக்க முடியாதுன்னு தெரிஞ்ச பிறகு இந்த கல்யாணத்துக்குள்ளயே வந்திருக்க கூடாது..."
"வந்ததும் இல்லாம ரெண்டு வருஷம் வெளிய போயிருக்க அதுவும் நயனி எந்த நிலைமையில் எப்படி இருக்காங்க என்று கூட கவலையே இல்லாம.. ப்ச் ஏன்டா இப்படி? நாங்களே எத்தனையோ கேஸ் பார்க்கிறோம் அப்படி இருந்தும் என் ஃபிரெண்டான நீயே இப்படி செய்யறது சுத்தமா சரியில்லை"
"அப்போ எனக்கு நயனியை மட்டுமில்ல வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்கிற எண்ணம் சுத்தமா இல்லடா. எங்க அப்பா கல்யாணம் பண்ணிக்கலை என்றால் டிரஸ்ட்ல ப்ராப்ளம் கொண்டு வருவேன் சொன்னாரு. அதனால வேற வழி இல்லாம பண்ணிக்கிட்டேன் பட்.." என்றவனுக்கு அதற்கு மேல் என்ன சொல்வது என்று புரியவில்லை.
"நீ என்ன சொன்னாலும் சரி அபய் என்னால ஏத்துக்க முடியலை. நீ மட்டும் நயனி கூட இருந்திருந்தால் நிச்சயமா இன்னைக்கு இந்நிலை கிடையாது..."
"சரி அந்த பையன் கிட்ட யாராவது பேசினீங்களா? நீங்க?" என சுதர்சனிடம் கேட்க,
"ஆமா சார் நான் பேசினேன். அவனை தனியா சந்திச்சு எந்த காலேஜ்லயும் ஜாயின் பண்ண முடியாதளவு செய்துடுவோம் என்று மிரட்டி கூட பார்த்தேன் ஆனா அவன் எதற்குமே மசியல உங்களால முடிஞ்சதை பாருங்க" என்று தில்லா சொல்றான்.
"இன்பாக்ட் அவன் காலேஜ் வருவதே படிக்க கிடையாதாம். ட்ரக்ஸ் அதிகளவிலான மாணவர்களுக்கு கொண்டு சேர்க்க தானாம்.."
"காட்!!" என்று பெருமூச்செறிந்தவன், "சரி நயனிக்கு காலேஜ்ல ஆதரவு எப்படி இருக்கு?"
"பாதி ஸ்டுடன்ஸ்க்கு மேல அவனோட ஆட்கள் ஸார்..."
"அதாவது அவன் கூட சேர்ந்து இல்ல அவன் மூலமா டிரக்ஸ் எடுக்கிறவங்க அப்படித்தானே!!"
"ஆமா சார் அவனோட தயவு தேவைங்கிறதால அவன் சொல்றபடி நடக்குறாங்க.. கிட்டத்தட்ட மேனேஜ்மென்ட் ஸ்தம்பித்து போகுமளவுக்கு போராட்டம் நடத்தி இருக்காங்க.. இவனோட அப்பாவும் காலேஜ் ரெப்புடேஷன் கெட்டுப்போக கூடாதுன்னு ஸ்டூடண்ட்ஸ் பக்கம் தான் நிக்கிறார்"
"சரி இப்போ என்கிட்ட இருந்து என்ன எதிர்பார்க்கிறிங்க?"
"நான் தான் சொன்னேன் மச்சான் அவனை தனியா விசாரிக்கணும்.. ரெண்டு தட்டு தட்டி உண்மையை வாங்கணும் அதுவும் போலீஸ் ஸ்டைல்ல"
"அதுக்கு எல்லாம் வாய்ப்பு கிடையாதுடா நான் அப்படி செஞ்சா எனக்கு தான் மண்டை கொடைச்சல்.."
"இல்லடா திவ்யா சொன்னதை வச்சு பார்க்கும் போது அவன் நிறைய பொண்ணுங்களோட வீடியோஸ் வெச்சிருப்பான் போல அதனால அவனை மடக்கி ஃபோனை எடுத்துட்டாலே போதும் ஓரளவுக்கு அவன் நம்ம கண்ட்ரோலுக்கு வருவான் என்று தான் நினைக்கிறேன்..."
"அது மட்டுமில்ல அவன் மூலமா போதை மருந்து சப்ளை பண்ணக்கூடிய கும்பலையும் பிடிக்க முடியும். எனக்கு நயனியை பழிவாங்கத்தான் இப்படி செஞ்சாங்கிறது அவர் வாயாலயே வாக்குமூலம் கொடுக்கணும்.."
"கேஸ் ஏதாவது ஃபைல் பண்ணி இருக்கீங்களா?"
"இல்லடா இனிமேல் தான் பண்ணனும். ஆனாஆதாரம் கிடைத்த பிறகு ப்ரோசீட் பண்ணினா நமக்கு சாதகமா இருக்கும் இல்லன்னா கஷ்டம்..."
"புரியுது. சரி அந்த பையனோட ரொட்டீன் என்னன்னு எனக்கு சொல்ல முடியுமா?"
"இல்லடா தெரியாது. பட் திவ்யா மூலமா அவனோட டெய்லி ரொட்டீன் என்னன்னு கேட்டு உனக்கு அப்டேட் பண்றோம்.."
"சரி அவசரப்பட வேண்டாம். சரியான சந்தர்ப்பத்துல நம்ம பிளானை எக்ஸிக்யூட் பண்ணிடலாம்"
"தேங்க்ஸ் மச்சான்..." என்று கிளம்பியவன் மீண்டும் நயனி முன் தான் சென்று நின்றான்.
தன் அறையில் இருந்தவள் அவனை கண்டதும் வெளியில் வர எடுத்ததுமே, "இனியும் நீ இங்கிருக்க வேண்டாம் என் கூட வா.. நம்ம வீட்டுக்கு போகலாம்" என்றவனுக்கு தன் மீது அத்தனை கோபம்!!
'என்ன இருந்தாலும் அன்று அப்படி ஒரு வார்த்தையை இவன் சொல்லி இருக்க கூடாது. வார்த்தைகளுக்கு தான் எத்தனை சக்தி?' என்று வருந்தி கொண்டிருப்பவனால் நயனியை தனியாக விட முடியவில்லை.
"எந்த உரிமையில் என்னை வர சொல்றீங்க? என்றவளின் கேள்வியை எதிர்பாராதவன்,
"சரி என்கூட வரலை என்றாலும் பரவால்ல உன் வீட்லயாவது கொண்டு விடறேன்.. இப்படி யாருமில்லாத அநாதை மாதிரி தனியா இருக்க வேண்டாம்"
"அதை பற்றி உங்களுக்கு என்ன கவலை மிஸ்டர் ஸ்ரீவத்ஸன். சின்ன வயசுல இருந்தே எனக்கு தனியா இருந்து பழக்கம் தான். என் வீட்டுக்கு வருவதற்கு பதிலா நான் செத்துடலாம்.."
"நயனி.." என்று அபய் சத்தம் போட்டுவிட்டான்.
"உண்மையை தான் சொல்றேன் அபய். அங்கே போனா என்னை மட்டுமில்லை என் அம்மாவையும் தான் அந்த ஆள் அசிங்கமா பேசுவான். இங்க நான் நிம்மதியா இருக்கேன் ப்ளீஸ் டிஸ்டர்ப் பண்ணாதீங்க"
"சரி நம்ம வீட்டுக்கு கிளம்பு நயனி.."
"நம்ம வீடா?! இது எப்போ இருந்து? என்னை உங்க ரூமை விட்டே துரத்த நினைச்சவர் நீங்க இப்போ மட்டும் என்ன வீட்டுக்கு கூப்பிடறீங்க. ஒருவேளை நான் வரேன்னு வச்சுகிட்டாலும் அங்கிருக்கிறவங்க தினமும் பேசுற பேச்சும் பார்க்கிற பார்வையையும் உங்களால தடுத்திட முடியுமா?" என்று அவனை கேள்விகளால் துளைத்தெடுக்க அபய் திணறிப்போனான்.
"ஓகே ஃபைன் நான் உன்னை வைஃபா நினைக்காம இருக்கலாம் ஆனா நீ என்னை புருஷன் நினைக்கிற தானே. அப்போ உன் புருஷன் வீட்டுக்கு வரலாம் தானே?!"
"எனக்கு உன்னை பிடிக்காம இருக்கலாம். நான் உன்னை காதலிக்காமல் போகலாம் ஆனால் எனக்கு மனசாட்சி இருக்கு.. கண்ணெதிரே இப்படி ஒரு தப்பை பார்த்துட்டு என்னால் அமைதியாக போக முடியாது தயவு செய்து புரிந்து கொள்.."
"நீங்க முடிவெடுத்தா போதுமா? உங்க அப்பா ஒத்துக்க வேண்டாமா?!"
"அவர் என்ன சொல்றது? நான் சொல்றேன் என்னோடு வா.."
"அவர் சொன்னதால தான் நீங்க தாலி கட்டினீங்க இப்போ ஒரு வேகத்துல இங்கிருந்து கூட்டிட்டு போயிட்டு உங்க அப்பா சொன்னதும் என்னை அனுப்ப மாட்டீங்கன்னு என்ன நிச்சயம்..."
"போதும் நயனி. ஒரு சின்ன விஷயத்துக்கு ஏன் இவ்ளோ ஆர்க்யூமென்ட்? ப்ளீஸ் கிளம்பு"
"ஓகே நீங்க இவ்ளோ தூரம் சொல்றதால சம்மதிக்கிறேன் ஆனா உங்க அப்பாகிட்ட பர்மிஷன் வாங்கிட்டு வந்து கூப்பிடுங்க அப்போ வரேன்" என்றாள் உறுதியான குரலில்.
அன்று இரவு அனைவரும் டைனிங் ஹாலில் குழுமியிருக்க, "நாளைக்கு நயனி இங்க வரப்போறா" என்றான் அபய்.
"அபய்.." என்று சக்கரவர்த்தி குரலை உயர்த்த,
"அவ மேல எந்த தப்பும் இல்லை. இனியும் அவளை வெளியே விட்டு வைக்க நான் தயாரா இல்லை. நாளைக்கு கண்டிப்பா கூட்டிட்டு வரப்போறேன்"
"இது என்ன பேச்சு அபய்! இனி நயனி இங்க வரக்கூடாது என்றால் வரக்கூடாது இது நான் கட்டின வீடு எங்க எனக்கு விருப்பம் இல்லாதவங்க யாரும் தங்கத்துக்கு அனுமதி கிடையாது"
"அப்போ இனி நானும் இங்கே வரமாட்டேன்" என்றான் உறுதியாக.
"அபய் என்னப்பா பேசற?"
"நிஜத்தை பேசறேன் ம்மா. என்னால ஒரு பெண்ணோட வாழ்க்கை கேள்வி குறியாகி இருக்கு எனக்கு ரொம்ப உறுத்துது.."
"மாப்பிள்ளை அவசரப்பட்டு முடிவெடுக்காத.."
"அவசர பட்டது நீங்க.. நான் அதை சரி செய்ய பார்க்கிறேன்" என்றவன் பேச்சு முடிந்தது போல தன்னறைக்கு கிளம்பினான்.
அடுத்த நாள் கல்லூரிக்கு வந்த அபய் ஸ்ரீவத்ஸன் ராஜன் அங்கு இருப்பதை கண்டு உடனே தந்தைக்கு அழைத்து "நயனி மேல ஆக்ஷன் எடுத்த நீங்க அவன் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?" என்றான்.
"அவன் மேல எதுக்கு ஆக்ஷ்ன் எடுக்கணும்?"
"டாடி தப்பு பண்ணினது அவன்!"
"நீ கண்ணால பார்த்தியா அபய்?"
"ப்ச் டாடி குதர்க்கமாக கேள்வி கேட்டு ப்ரச்சனையின் வீரியத்தை குறைக்க பார்க்கறீங்க. இது சரி கிடையாது.. அன்னைக்கு நயனி தன்னோட சுயநினைவிலேயே இல்லை அவளுக்கு மயக்க மருந்து கொடுத்த பிறகு தான் அந்த நாய் ஃபோட்டோஸ் எடுத்து இருக்கான்"
"இதோபாரு அபய் நீ எவ்ளோ பேசினாலும் இது எதுக்குமே ஆதாரமோ சாட்சியோ கிடையாது முதலில் எல்லாமே ஃபேக் பிக்சர்ஸ் என்று சொல்லி தன் தப்பை மறைக்க பார்த்தா இப்போ மயக்கம் மருந்து கொடுத்ததா சொல்றதுலாம் நம்புற மாதிரி இல்ல.."
"அப்பா வார்த்தையை அளந்து பேசுங்க,,,:
"நீ என்ன அவளுக்காக இவ்வளவு வக்காலத்து வாங்குற? உனக்கு பிடிக்காத பொண்ணு தானே!"
"டாடி..."
"அபய் நானும் உன் கல்யாண விஷயத்துல அவ்ளோ அவசரப்பட்டு இருக்க கூடாது ஏதோ தெரியாம அந்த பொண்ணை உனக்கு கட்டி வச்சிட்டேன் இப்போ ஒன்னும் கெட்டுப் போகல இதே காரணத்தை வைத்து அப்ளை பண்ணிக்கலாம் நீ இந்த விஷயத்தை இதோட விட்டுடு.."
"நான் என்ன கேட்டுட்டு இருக்கேன் நீங்க என்ன பேசுறீங்க? ராஜன் மேல ஏன் நடவடிக்கை எடுக்கல?"
"அவங்க அப்பா யாருன்னு தெரியும்ல.. நம்மளை விட மிகப்பெரிய இண்டஸ்ட்ரியலிஸ்ட்! அவரால வருஷா வருஷம் நம்ம காலேஜ் க்கு எவ்வளவு டொனேஷன் வருதுன்னு உனக்கு நல்லா தெரியும் இந்த சின்ன விஷயத்தை எல்லாம் பெருசு படுத்தினா நாளைக்கு நாம தான் பாதிக்கப்படுவோம்.."
"அதுக்காக ஒரு பெண் மீதான கலங்கத்தை மறைக்க சொல்றீங்களா?"
"நீ என்ன பேசினாலும் இது பிசினஸ்! நம்ம ஒன்னும் தர்மஸ்தாபனம் நடத்தல என்னால ராஜனை காலேஜ் விட்டு அனுப்ப முடியாது நீயும் அனுப்பக்கூடாது" என்றார் கரராண குரலில்
கட்டுப்படுத்த முடியாத கோபத்தோடு அழைப்பை துண்டித்தான்.